செவ்வாய், 5 அக்டோபர், 2010

சிங்காரவேலர்: இளம் தொழிலாளரைப் பாதுகாக்கும் வரலாறு



இரவு - 11 மணி, கூட்டமாக 70க்கும் அதிகமான இளைஞர்கள், சென்னையில் உள்ள உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமான நிலையங்களுக்கு அருகில், திறந்த வெளியில் குளித்துக் கொண்டிருக்கும் காட்சியை சமீபத்தில் காண முடிந்தது. அன்று ஞாயிற்றுக் கிழமையும் கூட, விசாரித்த போது, அவர்கள் அனைவரும் பீகாரில் இருந்து வந்தவர்கள், என்று சொன்னார்கள் காலை 8 மணிக்கு வீட்டை விட்டு பணிக்குப் புறப்பட்டால், திரும்பவும் வீட்டிற்கு வர இரவு 11 மணி ஆகும். என்பது அவர்களிடம் இருந்து பெற முடிந்த சிறப்புத் தகவல்.
சென்னை மாநகரம் 1918,ஏப் - 27 சென்னை தொழிலாளர் சங்கம் அமைக்கப்பட்டதில் இருந்து 90 ஆண்டுகளைக் கடந்து, எண்ணற்ற பிரம்மாண்டங்களைக் கொண்டதாக வளர்ந்து இருக்கிறது. ஆனால், தொழிலாளர் கொள்கையில் ஆட்சியாளர்கள் மாறுதலை ஏற்படுத்தவில்லை. 90 ஆண்டுகளுக்கு முன்பு ஆலைகளுக்குள் பெரும் எண்ணிக்கையில் தொழிலாளர்கள் இருந்தனர். இன்றோ குவியல் குவியலான இளம் தொழிலாளர்கள், ஆலைகளுக்கு வெளியில், பல்வேறு சிறு மற்றும் நடுத்தர தொழில்களில் குவிந்து கிடக்கிறார்கள். அன்று பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் நிறுவனங்கள், இளம் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டி, கொள்ளை லாபம் ஈட்டின. இன்று உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளின் ஏகபோக நிறுவனங்கள், நமது இளம் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டுகின்றன.
மாற்றம் இல்லாத இந்த சுரண்டல் முறை ஏன் நீடிக்கிறது? அறிவியலும், தொழில் நுட்பமும் வளர்ந்தாலும், அதன் வளர்ச்சி ஏழைகளுக்கு சென்றடையவில்லையே என்ன காரணம்? குறிப்பாக படித்தவர்கள் அதிகரித்துள்ள சென்னை மாநகர் மற்றும் தமிழகத்தில், 90 ஆண்டுகளுக்கும் மேலாக சுரண்டல் என்கிற உழைப்புக் கொள்ளை வேறு, வேறு வடிவங்களில் தொடருவதற்கு என்ன காரணம்?
மேற்படி கேள்விகளுக்கு ஒரே பதில் தான் வரலாறு என்கிற வார்த்தை நமது சமூகத்தில் மழுங்கடிக்கப் பட்டதாகமாறி வருவது ஆகும். அலெக்ஸ் ஹேலி, எனும் நாவலாசிரியர் அமெரிக்க கருப்பின மக்களின் வரலாற்றை ஆதியில் இருந்து தலைமுறை தலைமுறையாக புரிந்து கொள்ள வேண்டும், எனும் தேவைக்காக ஏழு தலைமுறைகள் எனும் நாவலை படைத்திருக்கிறார். அதுபோன்ற படைப்போ, கற்பித்தல் முறையோ நமது சமூகத்தில் இல்லை. சமூகம் பின்பற்ற வில்லை, என்றாலும் பரவாயில்லை. இயக்கங்களும் பெரும் முயற்சி எடுத்து வரலாறு கற்பிக்க வில்லை, என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.
ஆம், சென்னை மாநகரின் வரலாறும், தொழிலாளர்களின் இயக்க வரலாறும் இன்றைய சென்னை மாநகரின் இளம் தொழிலாளிக்கு கற்பிக்கப்படவில்லை. விளைவு நூற்றாண்டு காலமாக சுரண்டல் நீடிக்கிறது. சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தில், வரலாறு கற்பதும், கற்பிப்பதும் முக்கியப் பங்காற்றுகிறது. குறிப்பாக எம். சிங்காரவேலரின் வரலாறு, அவர் சென்னை மாநகரிலும், தமிழகத்திலும் அன்றைய இளம் தொழிலாளர்களை அணிதிரட்டிய வரலாறு, நமக்கான படிப்பினையாக அமையும் என்பதில் ஐயமில்லை.
பல்லாவரத்தில் கண்டது போல், ஒரு இரவு நேரப் பேரூந்துப் பயணத்தில் மாமல்லபுரம் அருகே உள்ள மீனவர் கிராமத்தைச் சார்ந்த இளைஞனுடன் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. உரையாடலின் போது அவர் குறிப்பிட்ட விஷயங்கள் நம்மை அதிர்வுறச் செய்கிறது. காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து புறப்படும் அந்த இளைஞன் சென்னை திருவான்மியூர் அடுத்துள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறார். இரவு 12 மணி சுமாருக்கு தான் தினமும் வீட்டை அடைய முடியும் வீட்டில் உணவு உட்கொள்ளும் போது கீகீதி . ஜிக்ஷி சேனலை வைத்துப் பார்க்கத் துவங்கினால், குறைந்த பட்சம் ஒரு மணி நேரம் பார்க்கும் பழக்கத்தைக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார். அதில் ஒருவர் மற்றொருவரை அடிக்கும் காட்சி, நம் தொழிலாளியின் மனதை வருடிக் கொடுப்பதாக உணர்கிறாராம். தொலைக்காட்சியில் சித்தரிக்கப் படும் வன்முறைக் காட்சிகளைப் பார்த்தபடியே உறங்கிப்போகும் தொழிலாளி, தன் மீது திணிக்கப்படும் சுரண்டலை, எங்ஙனம் எதிர்க்கத் துணிவார். அவருக்கான தொழிற்சங்க அணுகுமுறை என்ன? என்பதை சிங்கார வேலர் போன்ற முன்னோடிகளைப் படிக்காமல் கண்டறிய இயலாது.
இந்தியாவில் மே தினத்தை முதன் முதலில் கொண்டாடியத் தொழிற்சங்க வாதி சிங்கார வேலர். 1923ஆம் ஆண்டு சென்னையில் மிகச் சிறந்த தொழிலாளர் விழா கொண்டாடப்பட்டுள்ளது. 1886ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் வெற்றி, இந்திய மண்ணில், தொழிலாளர் மத்தியில் பேசப்பட 33 ஆண்டுகள் தேவைப்பட்டு 86 ஆண்டுகள் கடந்தோடிய பின்னரும், சென்னை மாநகரில் 14 மணி நேரம், 12 மணி நேரம் உழைப்பதை வெறுக்காத, இளம் தொழிலாளி சிங்கார வேலரைப் படிக்காமல் தன் உழைப்பின் மீது வினா தொடுக்கும் வாய்ப்பில்லை.
1923, மே - 20 அன்று சென்னை கடற்கரையில் நடைபெற்ற தொழிலாளர் கூட்டம் ஒன்றில் சிங்கார வேலர் சட்டமன்ற உறுப்பினர்களாலும், ஜனநாயகக் கட்சிகளாலும் தொழிலாளர்கள் எந்த நன்மையையும் பெறவில்லை. தொழிலாளர் தங்களைத் தாங்களே சார்ந்து இருக்க வேண்டியிருக்கிறது. போராட்டங்களில் வெற்றி பெறுவதற்குரிய நிலைமைகளை உருவாக்க என்ன செய்ய வேண்டும். மாறுபட்ட அணுகுமுறை கொண்ட தொழிலாளர் - விவசாயி கட்சியில் சேர வேண்டியதன் அவசியம், ஆகியவற்றை விளக்கிக் கூறியுள்ளார். 1923,மே - 2 அன்று வெளியான ஹிந்து நாளிதழ், அரசானது முதலாளியின் பக்கம் சார்ந்து , சுயநலக் கும்பலைக் காத்து நிற்கும் வரையில், உழைக்கும் வர்க்கத்தின் ஒருமைப்பாடு இல்லாமல் , எந்த சங்கமும் நீடித்து நிற்க முடியாது, என சிங்கார வேலரின் மே தின உரையைக் குறிப்பிடுகிறது. சிங்கார வேலரின் மேற்படி வரிகள், தீர்க்க தரிசனம் கொண்டதாக இருந்திருக்கிறது. விடுதலைக்கு முன்னர் மாகாணத் தேர்தல்களில் கிடைத்த வெற்றியை பயன்படுத்தாத ஜஸ்டிஸ் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறையில் இருந்தே, சிங்கார வேலரின் தீர்க்க தரிசன வரிகள் பிறந்திருக்க வேண்டும்.
தீர்க்க தரிசன வரிகளைக் கொண்ட உரையை நிகழ்த்துவதற்கு, சிங்காரவேலரின் தொடர்ந்த படிப்பும், வரலாற்றைக் கற்ற அனுபவமும் காரணமாக இருந்திருக்கிறது. 1925, டிசம்பரில் கான்பூரில் நடைற்ற முதல் கம்யூனிஸ்ட் மாநாட்டில் தலைமையுரை நிகழ்த்திய சிங்கார வேலர், காங்கிரஸ் கட்சி, சுயராஜ்ஜியக் கட்சி ஆகியவற்றில் தலைவர்களுடைய நலனும், தொழிலாளர்களின் நலனும் ஒன்றுக்கொன்று எதிரானவையாக இருக்கின்றன. அதனால் தான் அந்தக் கட்சிகளின் தலைவர்கள், தொழிலாளர் - விவசாயி ஆகியோரின் நலன் பற்றிப் பேசுவதுடன் நிறுத்திக் கொள்கின்றனர். வேறு எதுவும் செய்வதில்லை எனக் குறிப்பிட்டார். இந்த வரிகள் இன்றைய ஆட்சியாளர்களுக்கும் அப்படியே பொருந்தும். எனவே, சிங்கார வேலர் காலத்திய வரலாறு கற்பிக்கப்படாமல், இன்றைய முதலாளித்துவ கட்சிகளின், தேன் தடவிய வார்த்தைகளை, இளம் தொழிலாளிகளிடம் அம்பலப்படுத்த முடியாது.
கடந்த ஓராண்டாக ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தம், தமிழகத்திலும், இந்தியாவிலும், உலக அளவிலும் வேலை இழப்பு, சம்பளக்குறைப்பு ஆகியவற்றிற்கு கொண்டு சென்றுள்ளது. படித்த நமது இளம் தொழிலாளி, சிறிதும் எதிர்ப்பு காட்டாமல், முதலாளிகளுக்கு தலையாட்டும் வித்தையைக் கற்றிருக்கிறார்கள். இந்த குணக்கேடு இரண்டு காரணங்காளல் உருவாகி இருக்க வேண்டும். ஒன்று, நாம் முன்னரே குறிப்பிட்ட தொழிலாளர் இயக்கம் குறித்தோ, சிங்காரவேலர் போன்ற தொழிற்சங்க வாதிகளின் வரலாறையோ அறிந்து கொள்ளாதது. இரண்டு, மேற்படி இளம் தொழிலாளியின் வேலை வாய்ப்புக்கு காரணம் என அவர்களாகவே நம்பிக் கொண்டிருக்கும், தனியார் கல்வி நிலையங்களின் கற்பித்தல் முறை 50 சதமானோர், பணம் கொடுத்துப் படிக்கும் தனியார் கல்வி நிலையங்களில் கல்வி கற்றோர் ஆவர். இந்நிறுவனங்களில் வரலாறு, சமூகவியல், பொருளியல் போன்றவை நகைப்புக்குரிய துறைகள். இங்கு கல்வி பயிலும் தலைமுறைக்கு வரலாறே கசப்பான வார்த்தையாக இருக்கும் போது, சென்னைத் தொழிலாளர் இயக்க வரலாறு சுவையானதாக இருக்கும், என எதிர்பார்க்க முடியாது.
ஆனாலும் வரலாறு கற்பித்தல் மிக மிக அவசியமானது. வரலாற்றை அறிந்து கொள்ளும் போது, படித்த இளம் தலைமுறை நம்பிக்கையோடு, தனது சக ஊழியர்களையும், நிர்வாகத்தையும் எதிர்கொள்ள பழக்கப் படுத்தப்படுவர், என்பதும் வரலாறு தான். குறிப்பாக 1927 களில் செலவைக் குறைப்பது என்ற காரணத்திற்காக ரயில்வேயில், ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக, சிங்கார வேலர் தலைமையில் நடைபெற்ற ரயில்வே தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம், குறிப்பிடத் தகுந்த ஒன்று. 1927 செப்டம்பரில் கரக்பூர் பணிமனையில் மட்டும் 1700 பேர் வேலை நீக்கம் செய்யப்பட்டதாவும், சிங்காரவேலர் கரக்பூர் சென்றிருந்ததாகவும் தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
1936-க்கும் - 37க்கும் இடையில், சென்னை நகரில் இளம் தொழிலாளர் கழகமும், தொழிலாளர் பாதுகாப்புக் கழகமும் இயங்கிய நாள்களில், பல நூற்றுக்கணக்கான தொழிலாளர் பிரச்சனையை முன்வைத்து நடைபெற்ற வேலை நிறுத்தங்கள் இந்தியன் லேபர் கெஜட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொழிலாளர் கழகம் மீதான நம்பிக்கை காரணமாக ஆண்டு தோறும் பிரச்சனைகளும், வெற்றிகளும் அதிகரித்துள்ளன. இவற்றில் சிங்கார வேலருக்கும் பங்குண்டு என்பதை அறியமுடியும்.
நமது சமகாலத்தில் வளர்ந்து வரும், பெரும் பிரச்சனை மூடநம்பிக்கை. பிரச்சனைகளில் அவதியுறும் மிகச் சாதாரண மனிதர்கள் கடவுளின் துணையை நாடுகின்றனர். இதில் ஊடகங்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் பங்குண்டு. இந்த வலை வீச்சில் அறிவியல் தொழில் நுட்பம் படித்த இளம் தொழிலாளர்களும் இரையாகின்றனர். அறிவியலை அறியும் போது மூடநம்பிக்கை களைய வேண்டும். ஆனால் நமது கல்வி நிலையங்களின் அறிவியல் போதனை மூடநம்பிக்கைகளை வளர்க்கிறது. சிங்கார வேலர் இந்த ஆபத்தை உணர்ந்ததாலோ என்னவோ தொழிலாளர் உரிமைகளை பேசும் போது அறிவியல் குறித்த உணர்வினையும் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். கடவுளும் பிரபஞ்சமும், மதமும், அரசியலும், ஜாதி ஒழிப்பு, போன்ற தலைப்புகளில் சிங்கார வேலரின் எழுத்துக்கள் மிகச் சிறந்த அறிவியல் உண்மைகளைப் பேசுகின்றன. கிரிவலம் வருவோரும், சபரிமலை செல்வோரும் இத்தகைய அறிவியல் பூர்வ (பொருள் முதல் வாத) சிந்தனைகளை அறியாமல் தங்களின் துயரத்திற்கு விடையறியும் வாய்ப்பில்லை. இத்தகைய வரலாற்றை மாறிய சூழலுடன் இணைத்துப் புரிந்து கொள்கிற போதும், சுரண்டலுக்கு எதிரான சமூக மாற்றத்திற்கான அரசியல் போராட்டத்தினை வலியுறுத்துகிற போதும் தான் வெற்றி பெற முடியும். வரலாற்றைக் கற்கவும், கற்பிதம் செய்யவும் இயலாத நிலையில் மாறிய சூழலை பொருத்திப் பார்க்க முடியாது. எனவே, சிங்காரவேலரின் வரலாறை கற்று, கற்பிதம் செய்வோம். இளம் தொழிலாளரை ஒருங்கிணைப்போம்!

This article was written for Singaravelars' trust souvenir on SEP. 2009

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக