வியாழன், 12 நவம்பர், 2015



எங்கே ஆறாம் அறிவு?

சண்டையில் வென்றவனிடம்
என்னமா சண்டை போடுகிறார், பாராட்டிய
பெண்ணை பார்த்து “ஜிப்பை”ப் போடும்மா
சொல்கிறான் சண்டையில் வென்றவன்.


பத்துப் பைசா மிட்டாயின்
வாசத்திற்கு வசப்பட்டு,
காதலனைக் கைவிடவும், மிட்டாய் தின்பவனுடன்
ஓடவும் துணிகிறாள் கிணற்றடியில்
தண்ணீர் இறைக்கும் பெண்
தொலைக் காட்சி விளம்பரங்கள்..... சொல்லும் செய்தி

சாலையா? மறைவா? பிரித்துப் பார்க்கும்
பகுத்தறிவற்ற மிருகங்கள் கூட
பாலின்பத்திற்காக பலாத்காரம் செய்வதில்லையாம்.
ஆறாம் அறிவாக பகுத்தறிவைப் பெற்ற மனிதன்
தொலைக் காட்சி விளம்பரத்தின்
உண்மையைப் பிரித்துப் பார்க்கவில்லை.

இரவு 11 மணிக்கு பஸ் ஏறும் பெண்
ஏளனமாகி விட்டாளோ!!
ஓடும் பேருந்தில் வல்லுறவு – செய்தி.
அதிர்ச்சியில் மக்கள் – ஆனால்
உறைந்திருக்கவில்லை கிளர்ந்தெழுந்திருக்கிறார்கள்.

எதிர்ப்பைக் கூர்மைப் படுத்தும் ஆவேசம்
கண்ணீர் வடிக்கும் கண்ணீர் புகைக் குண்டு
கோபாவேசத்தில் திருப்பித் தாக்குகிறது.
பீய்ச்சி அடித்த தண்ணீர்
தடியடிக்குப் பின் இறங்கி வந்து
பேச்சு வார்த்தை நடத்துகின்றார் ஆட்சியாளர்.

கொத்தாக அள்ளிச் சென்று
கலைத்து விடப்பட்ட கூட்டம்
திரும்பவும் ஒன்று சேர்வதால்
அணிவகுப்புகளில் அதிருப்தியுற்ற ராஜபாதைகளுக்கு பெருமிதம்.
ஆண் பெண் பேதமற்ற போர்க் குணத்தின் வெற்றி.
எஸ். கண்ணன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக