வியாழன், 12 நவம்பர், 2015

தாராளமய தயாரிப்பில்…..

சாஃப்ட்வேர்..  ஹார்டுவேர்.. எதுவானாலும்
ஓய்வின் வயது முப்பதே!
குழந்தைக்கான கல்வியும்..
அடுக்குமாடி வீட்டுக்கான கடனும்..
இனி எந்தப் பெயரில்…
நொடியில் தொலைகிறது
முகவரி..

மூலதனப் பெருக்கத்திற்கான சுவாசம்…
முப்பதை வெளியேற்றி..
இருபதை உள்ளிழுப்பதே!!
மோடியின் யோகாதின வேண்டுகோளில்…
சேருமா? இதுவும்…

வேலைக்கான காலம்
பத்து ஆண்டுகள் என்றால்..
ஆயுள் காலம் எவ்வளவு?
சொல்வாரா? சித்திரகுப்தன்…

சுவரொட்டிகள் சிரிக்கிறது
முதுமையைச் சொல்லி..
22 வயதுக்குட்பட்டோர் மட்டும் விண்ணப்பிக்கவும்
விளம்பரங்கள்….

மை தீர்ந்ததால் குப்பைக்குப் போன லெட் பேனா..
டன் கணக்கில் குவிக்கப்படும்
பிளாஸ்டிக் குவளைகள்…
விதை நெல்லுக்கு கையேந்தவைக்கும்
மான்சாட்டோக்கள்…
நிலத்தை மலடாக்கும் பூச்சிக் கொள்ளிகள்..

நீளும் பட்டியலில்
இளமையும் இப்போது…
மேக் இன் இந்தியாவிற்கான அழைப்பில்
விருந்தாகிப் போனார்கள்
ஒன் யூஸ் இளைஞர்கள்…

பார்ட்டிகளில் கைமாறும் ஒப்பந்தங்கள்..
வாக்குறுதியாய்… இனி…
வேலை நிரந்தரம் இல்லை!!!

தாராளமயத் தயாரிப்பில்
எல்லாமே ஒன் யூஸ்???
ஆனாலும்…
மிஞ்சி நிற்கிறது போராட்டம்……….

எஸ்.கண்ணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக