வியாழன், 12 நவம்பர், 2015

என்ன செய்ய உன்னை வைத்து?

நான் படைத்த சுண்டலை…
உண்டதில்லை.. நீ..
எங்கள் வீட்டுக் கொழுக்கட்டையில்..
இனிப்பு… காரம்… என பல சுவைகள்…
பால் கொழுக்கட்டை… உப்பு உருண்டை…
என பல விதங்கள்…

ஒருபோதும் கேட்டதில்லை நீ…
இன்னும் ஒன்று தா என்று….
எனக்குப் பிடித்ததே… உனக்கும் பிடிக்கும்..
உரக்கச் சொல்வேன்..
இது உனக்கான படையல் என்று…
நான் மனிதன்… நீ…. கடவுள்….

விளம்பர யுகத்தில்…
இப்போது உனக்கும் கட் அவுட்டுகள்…
கீழே எனது படம்….
தெரிய வேண்டும் இல்லையா?
கடவுளுக்கு விளம்பரம் செய்தது யார் என்று?

யானை முகத்தானே!!
குளத்தங்கரையில் உட்கார்ந்திருந்த
உனக்கு இப்போது ஊர்வலங்கள்…
குளத்தில் தண்ணீர் இல்லை என்பதால் இல்லை..
குருதி மீது எங்களுக்கு ஆசை வந்ததால்..

எத்தனை பிடித்தாலும்
நீ எதுவும் உண்பதில்லை…
உன்னை வைத்து என்ன செய்ய?
கலவரங்கள் முடியும் போது
கரைத்து விடுவோம் கடலில்!!!

எஸ். கண்ணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக