திங்கள், 29 ஜூன், 2020

Book review


புத்தக அறிமுகம்: “காங்கிரீட் காடு” கார் தொழிற்சாலைகளின் தொழிலாளர்களுக்கு தரும் வெளிச்சம்… – எஸ். கண்ணன்

Spread the love

உலகில் சொர்க்கபுரியாக அமெரிக்கா சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் அதன் கட்டமைப்பு அனைத்தும், வேறு நாடுகளில் இருந்து அழைத்து வரப்பட்ட.  உழைப்பாளிகளால் செய்யப்பட்டது ஆகும். இன்றும் தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்டு பல்வேறு தொழில்நுட்ப பணிகளில், அமெரிக்கா ஆதிக்கம் செலுத்த முடிகிறது என்றால் அதற்கு காரணம் உலகின் பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட, வல்லுநர்களின் செயல்பாடுகளால் ஆகும். உண்ணும் உணவில் இருந்து ஆதிக்கம் செலுத்தும் தொழில்நுட்பம் வரை அமெரிக்காவிற்கு, உலக நாடுகளின் தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். அவ்வாறு தேவையாக உள்ள தொழிலாளர்களை, நாகரீகமாக நடத்துவதோ, உரிய சமூக பாதுகாப்பு மற்றும் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுப்பதோ இல்லை. மாறாக முழுமையாக அட்டை பூச்சியை போல், உறிஞ்சி எடுக்கப்படும் அனுமதியை அமெரிக்க அரசு, தங்கள் நாட்டு முதலாளிகளுக்கு வழங்கியுள்ளது. இந்த மிகக் கொடிய சுரண்டலை அம்பலப்படுத்தும் நாவல் காங்கிரீட் காடு (The Jungle). 1900 ஆண்டுகளின் துவக்கத்தில் நிகழ்ந்த உண்மைகளை தொகுத்து, காவியமாக்கியுள்ளார்.
தமிழில், செல்வராஜ் எழுதிய, தோல், கு. சின்னப்ப பாரதி எழுதிய சுரங்கம், தொ.மு.சி எழுதிய பஞ்சும் பசியும், டேனியல் எழுதிய எரியும் பனிக்காடு ( Red Tea) உள்ளிட்ட பல்வேறு நாவல்களை வாசித்திருப்போம். அது குறிப்பிட்ட தொழிலில் நடைபெறும் சுரண்டலை அம்பலப்படுத்தி இருக்கும். துன்பங்களையும் துயரங்களையும், பட்டியலிட்டு, வாழ்க்கை போராட்டங்களுடன், சமூக போராட்டங்களையும் விளக்கும் வகையில், மேற்படி நூல்கள் அமைந்திருக்கும். உலக அளவில் புகழ் பெற்ற விக்டர் ஹுயூகோ எழுதிய ஏழைபடும்பாடு வித்தியாசமான கதைக் கரு மட்டுமல்ல. ஒருவரின் துன்பத்தை வாழ்வின் எல்லா அம்சங்களின் மூலமாக விவரிப்பது சிறப்பம்சம். அப்படித்தான், காங்கிரீட் காடு. இதை அப்டன் சிங்ளர் மிகச் சிறப்பாக எழுதியுள்ளார். இதை தமிழில் வாசிக்க ச. சுப்பாராவ் மிக சிறப்பாக மொழி பெயர்த்துள்ளார்.
The Jungle by Upton Sinclair Review - Minute Book Report - YouTube
இன்று நாம் ஏன் வாசிக்க வேண்டும் என்பது, முதல் பத்து பக்கங்களிலேயே, புரிந்து விடுகிறது. அமெரிக்க தொழிலாளி படும் துயரம் விவரிக்கப்பட்டு இருந்தாலும், நம் ஊரில் நாம் அனுபவிக்கும் துயரத்தின் வடிவமாகவே தோற்றமளிக்கிறது. புலம்பெயர்ந்து வாழ்தல், தான் பிறந்த ஊரில் இருந்து, ஏற்கனவே வந்து வாழ்ந்து வரும் ஒருவரை சந்திக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி துவங்கி, வாழ்க்கையை துவங்கும் ஒவ்வொரு நிகழ்வும், வலி மிகுந்த அதிர்வுகளை ஏற்படுத்துகிறது.
லித்துவேனியாவில் இருந்து இடம் பெயர்ந்த ஒரு குடும்பத்தின் கதை. அமெரிக்காவின் சிக்காகோ நகருக்கு வெளியில், டுர்ஹாம் மற்றும் பேக்கிங் டவுன் பகுதியில் வேலை தேடி, பிழைப்பை உருவாக்கிக் கொள்ள முயற்சிக்கிறது அந்த குடும்பம். ஆலை வாயில்களில் மேற்பார்வையாளர்களே தங்களுக்கான புதிய வேலை ஆள்களைத் தேடிக் கொள்கின்றனர். அப்படித்தான், கதையின் நாயகன் யூர்கிஸ் தனது வேலையை தேடிக்கொள்கிறார். ஒரு பெரிய குடும்பம் கூட்டாக தங்களுக்கு தேவையான வீடு, உணவு, தட்ப வெட்பத்திற்கு ஏற்ற அடிப்படை தேவைகள் அனைத்தையும், பட்டியலிட்டுக் கொள்வதும், அதை பெறுவதற்கு நியாயமான உழைப்பை செலுத்த முயற்சிப்பதையும், நாவல் முழுக்க உடனிருந்து அனுபவிக்க முடிகிறது.
வேலைத்தளம் கொடிதிலும் கொடிதாக இருக்கிறது. கில்லிங் பெட்டில் யூர்கிஸ் க்கு வேலை. அதாவது, மாட்டிறைச்சி தொழிற்சாலையில், தோல் உரிக்கப்பட்டு வரும்  மாடுகளை வெட்டி துண்டங்களாக ஆக்குவது. மிக வலுவான உடல் அமைப்பும், சோர்வுறாமல் உழைக்கும் தன்மையும் கொண்டிருப்பதே அடிப்படை தகுதி. யூர்கிஸ் உடல் தகுதி வேலையை பெற்றுத் தருகிறது. முழு மாடாக உள்நுழைந்து, டப்பாக்களில் பதப்படுத்தப்பட்ட இறைச்சியாக வெளியேற்றுவது அந்த தொழிற்சாலையில் நடைபெறும் வேலை. அந்த டப்பாக்களுக்கு வர்ணம் பூசும் வேலையில் பெண்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். அங்கு யூர்கிஸ் குடும்பத்தின் பெண்கள் அவர் மணைவி ஓனா, உள்பட வேலை செய்கின்றனர்.
அந்த தொழிற்சாலையில், மாட்டினுடைய எந்த ஒரு பாகமும் வீணாக்கப்படுவதில்லை. மாட்டின் கொம்பில் இருந்து சீப்பு, பட்டன், போலி தந்தம், பெரிய எலும்புகளில் இருந்து, பல்துலக்கும் பிரஷ் கைப்பிடி, எலும்பு எண்ணெய், பசை,தசை நார்களில் இருந்து, ஜெலட்டின், ஷூ பாலிஷ், உள்ளிட்டவை தயாரிக்கும் ஏற்பாடுகளும் இருந்தது. மாடு மட்டுமல்ல பன்றி கறியும் அந்த தொழிற்சாலைகளில் இருந்து டப்பாக்களில் அனுப்பட்டது. அதன் உதிரி பொருள்களும் வீணாவதில்லை. அனைத்தும் டாலர்களாக்கப்படுவதற்கு தொழிலாளர்களே பங்களிப்பு செய்தனர். சவுரி முடி, அல்புமின், வயலின் தந்திகள் ரோமத்திலிருந்து கதகதப்பு தரும் துணிகள், என எல்லாவற்றையும் தயாரித்து, கஜானா நிரப்பப் பட்டு வருகிறது.
100th anniversary of Upton Sinclair's The Jungle — A searing ...
தங்கள் குடும்பம் ஊரிலிருந்து எடுத்து வந்த பணத்தை பயன்படுத்தியும், கடன் மூலம் மாத தவணை செலுத்தி வீடு ஒன்றை சொந்தமாக்கிக் கொள்ளும் அற்ப ஆசையுடன் தேடி கண்டறிகின்றனர். போலிஷ், லித்துவேனியன், ஜெர்மன் ஆகிய மொழிகளில், ஏன் வாடகை வீடு, சொந்த வீடு வாங்கலாமே, ஏன் உங்களுக்கு சொந்த வீடு இருக்கக் கூடாது போன்ற கேள்விகளுடனான, துண்டு பிரசுரத்தை படித்து, உற்சாகம் பொங்க ஏஜெண்ட் ஒருவரை சந்திக்கின்றனர். அவர் இந்த வீடு தான் கடைசி, எல்லாம் விற்றுத் தீர்ந்து விட்டது. எல்லா வசதியும் இருக்கிறது. படம் அதன் விளக்கம் எல்லாம், பெரும் உற்சாகம் தர, ஒரு ஞாயிற்று கிழமை வீட்டை பார்க்க செல்கின்றனர். அந்த வீடு படத்தில் பார்த்தது போல் இல்லை என்றவுடன் ஏமாற்றம். இருந்தாலும், ஏஜெண்டின் வார்த்தைகளில் அவ்வளவு தேன் கலந்த இனிமை இருந்தது. சிக்காகோவிற்கு ஏற்கனவே வந்து விட்ட ஜெட்விலாஸ் இதன் மோசடி வித்தைகள் குறித்து சொன்ன போதும், ஏஜெண்டு வார்த்தைகளே இனித்தன. எனவே வீடும் வாங்கி, வாரம் 12 டாலர் தவணை, என மொத்தமாக கையில் இருந்த 300 டாலர் கொடுத்து பத்திரம் பதிவாகிறது. பத்திரத்தில் இருக்கும் சூட்சும வார்த்தைகள் தவணை கட்ட தவறினால், வீடு மீண்டும் நிறுவனம் எழுத்துக் கொள்ளும், பணம் எதுவும் திரும்ப தரப்படாது, என்பனவற்றை பின்னர் தெரிந்து, எதுவும் செய்ய முடியாமல் கையை பிசைவது, நம் ஊரின் இன்றைய நடைமுறையைப் போல் இருக்கிறது. வீட்டு தவணைக்காக ஓய்வில்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றனர், தொழிலாளர்கள்.
தங்கள் சொந்த நாட்டிலேயே காதல் வயப்பட்டு, யூர்கிஸ் மற்றும் ஓனா சிக்காகோவிற்கு வருகின்றனர். இரண்டு குடும்பமும் இதை ஒத்துக் கொண்டு, வந்த சில மாதங்களில் திருமணமும் செய்து வைக்கின்றனர். திருமணம், விருந்து, இசைக் கச்சேரி, இவைகளுக்கான செலவு, மொய் எதுவும் தேறாத நிலையில், அதை ஒட்டி ஒரு கடன் என நம் வீட்டுக் கல்யாணக் கதை போல் விரிந்து செல்கிறது, நாவலின் கதை. ஞாயிற்று கிழமை இரவு கல்யாணம், திங்கள் அதாவது மறுநாள் காலை, மணமகளும், மணமகனும் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற நிலை, இல்லையென்றால், வேலை போய்விடும். இல்லாது போகும் வேலையை ஆக்கிரமிக்க, கடும்போட்டி. எனவே அதிகாலையில் மணமகள் வேலைக்கு செல்ல வேண்டிய நிலை. இளம் வயது பெண்கள் திருமணம் செய்வது, வேலைவாங்கும் ஃபேர்லேடி, என்ற கண்காணிப்பாளருக்கு பிடிக்கவில்லை.
நமது ஊரில், திருமணம் செய்து கொண்டால், விடுப்பு, பிரசவ விடுப்பு போன்றவை பிரச்சனை எனவே திருமணம் கூடாது, என பெண் ஊழியர்களை எச்சரிக்கும் அதிகாரிகள் உண்டு. ஆனால் அமெரிக்காவில், அது வேறு ஒரு பொருளில் பிரதிபலிக்கிறது. ஆண்மேற்பார்வையாளர் ஆசைப் பட்டால் அனுப்ப இயலாதே, என்பது தான் அது. ஓனா இவை அனைத்திற்கும் மசிந்து கொடுக்காமல் பணியாற்றிய போது, கடும் துன்பத்தை சந்திக்கிறாள். அதை விடக் கொடுமை, ஓனா திருமணத்திற்கு பின் குழந்தை பெற்றுக் கொண்ட நிலையிலும், ஓரிரு நாள்களில் வேலைக்கு போக வேண்டிய நிலை. இல்லையென்றால் வேலை பறி போகும். சம்பளமில்லா விடுப்பிற்கும் வழியில்லை. இது நாவல் என்ற போதும், அமெரிக்க மக்களின் துயரத்தின் உண்மையை வெளிப்படுத்துவதாகவே இருந்தது.
The more things change … : Looking back at Upton Sinclair's The ...
கில்லிங் பெட்டில் மாடுகள் மயக்கமடைவதற்கு முன்பே தள்ளிவிடுவார்கள், அது எழுந்து ஓடும். அன்று உறை பனிக்காலம், மிகக் கொடிய நிலை. நீராவி ஒருபுறம் பனி சூழல் ஒரு புறம் இரண்டுக்கும் இடையில் வெளிச்ச போதாமையில், மாடு நடத்திய உயிர் பிழைக்கும் போராட்டத்தில், யூர்கிஸ் குழியில் விழுந்து காலை உடைத்துக் கொள்கிறான். மருத்துவம், சிகிச்சை, விடுப்பு எதுவும் நினைத்துப்பார்க்க முடியாத கொடுமை. மாதக்கணக்கில் படுக்கை என்றான நிலையில், வீடு கொடிய வறுமைக்கு தள்ளப்பட்டது. ஓனாவை துரத்திய மேற்பார்வையாளர், கோனரின் காமவெறிக்கு ஆளாவதும், அதுவே அவ்வப்போது கூடுதல் வருமானத்திற்காக மாறுவதும், வாழ்விற்கும் மரணத்திற்குமான போராட்டமாக, வேலைக்கு செல்லும் ஒவ்வொரு பெண்ணும் அனுபவிக்கிறாள். அண்மையில் புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த வாழ்க்கையை படிக்கிறபோது, ராய்க்காட் நகரில் கட்டுமான வேலை செய்யும் பெண்களில் ஒருபகுதியினர், வாழ்க்கைப் போராட்டத்தில், பாலியல் தொழிலுக்கு தள்ளப்படும் கொடுமையை பார்க்க முடிந்தது. நிலப்பிரபுத்துவ சிந்தனை, இந்த பிழைப்பிற்கு தூக்கில் தொங்கலாம் என்கிறது. ஆனால் நிலப்பிரபுவும், அவர் அடிவருடிகளும் தொங்குவதில்லை. முதலாளித்துவம், எல்லோரும் தவறிழைக்கிறார்கள், எனவே ஜீவ மரணப் போராட்டம் நடத்தும் ஒவ்வொருவரும், சமூகம் நிர்பந்திக்கும் கொடுமைக்கு ஆளாக கட்டாயப்படுத்துகிறது, என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
மூன்று மாத சிகிச்சைக்கு பின் வேலையின்றி தவிக்கும் யூர்கிஸ் நியாயமான பிழைப்பிற்காக, உரத்தொழிற்சாலையில் பணிபுரிகிறான். மாட்டு எழும்ப்புகளில் எலும்புகளில் இருந்து உரம் தயாரிக்கும் தொழிற்சாலை. டிராம்களில் இவன் வரும் போது எழும் துர்நாற்றம், பிறரை இருக்கைகளில் இருந்து விரட்டி விடும். எவ்வளவு சலவை செய்தாலும், குறையாத துர்நாற்றம், மற்றொரு புறம் வீட்டின் வறுமை, ஓனாவை கோனர் மற்றும் ஃபேர்லேடி படுத்தும்பாடு, காரணமாக, கோனரை அடித்து கொல்ல முயற்சிக்கிறான். இதனால் சிறை, காவல்துறை, நீதிமன்றம் அப்படியே இன்று நாம் சந்திப்பது போல் உள்ளது. முதலாளித்துவ வளர்ச்சியில் இந்த நிறுவனங்கள் அப்பட்டமாக, அநீதிக்கு ஆதரவாகி அவிழ்ந்து அம்மணமாவதை படம் பிடித்துள்ளார் ஆசிரியர்.
தந்தை அண்டனாஸ் மரணம், எலிசபெத்தின் நோயுற்ற குழந்தை மரணம், இரண்டாவது பிரசவத்தின் போது ஓனாவின் மரணம், முதல் குழந்தை அண்டனாஸின் மரணம், அனைத்தும் யூர்கிஸ் மற்றும் அவன் குடும்பத்தினரை தலைவிதி என கருதி கொண்டு, நியாயமான வேலைகளின் மூலமே வருவாய் தேட முற்படுகின்றனர். அதுவே உலகம் முழுவதும் தொழிலாளி வர்க்கத்தின் குணமாக உள்ளது. ஆனால் முதலாளித்துவ சமூகம், வாழ்க்கை போராட்டத்தில் தத்தளிக்கும் தொழிலாளர்களை, கருங்காலிகளாக, வேலை நிறுத்தத்திற்கு எதிரானவர்களாக, தேர்தலில் அடியாள்களாக, சில நேரங்களில் திருடர்களாக மாற்றுவதை, பெண்கள் பாலியல் தொழிலாளர்களாக மாற்றப்படுவதை அரசு நிறுவனங்களை விளக்குகிறபோது, மிக அருமையாக பதிவு செய்துள்ளார்.
The Jungle of Packington | Prete moi tes yeux
தொழிலாளர் குடும்பத்தில் எத்தனை பேர் வேலை செய்தாலும் போதாத நிலை எப்படி உருவாக்கப்படுகிறது. குழந்தைகளும் வேலைக்கு அனுப்பபடும் அவலம் ஏன் உருவாகிறது. குழந்தைகள் நகர வளர்ச்சியில் கற்றுக் கொள்ளும் கெட்ட விஷயங்கள், குடும்பத்திற்காக பாலியல் தொழிலுக்கு தள்ளப்படும் இளம் பெண் யூர்கிஸ் உடன் நடத்தும் வாதம், குடும்பத்திற்குள் எழுப்பும் விவாதங்கள், எழுதப்பட்ட காலம் நூறாண்டுகளுக்கு முன் என்பதை நம்பமுடியவில்லை. இந்த கொடுமைக்கு, லித்துவேனியர்கள், ஸ்லோவியர்கள், ஐரிஷ்காரர்கள், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மன், ஆப்பிரிக்கர்கள் என எல்லா நாட்டு அமெரிக்க தொழிலாளர்களும் இரையாகின்றனர். அது தான் அமெரிக்கா.
பல அரசியல் கூட்டங்களை பார்த்தாலும், உறைபனி இரவில் தூங்க இடமற்ற நிலையில், ஒரு அரங்கத்திற்குள் ஒதுங்கிய போது தான் யூர்கிஸ் தனது அடிப்படை அறிவை பெறும் வாய்ப்பு பெறுகிறான். தொழிலாளர் ஒற்றுமை, சுரண்டலுக்கு எதிரான போராட்டம், சோசலிசம் போன்ற வார்த்தைகள், தேர்தலில் போட்டித்யிட்டு தோற்றாலும் பெற்ற வாக்குகள் தரும் நம்பிக்கை, மேலும் போராட்டம் என நீடிக்கிறது. காங்கிரீட் காடு.
சென்னையும் அதன் புறநகர் பகுதிகளும் இன்று காங்கீரீட் காடாகவே காட்சியளிக்கிறது.
நூல்: The Jungle (கான்கிரீட் காடு)
ஆசிரியர்: அப்டன் சிங்க்ளர் (தமிழில் ச.சுப்பாராவ்)
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: ரூ.280

செவ்வாய், 23 ஜூன், 2020

தமிழக அரசு தாமதிக்காமல் செய்ய வேண்டியவை..

தமிழக அரசு தாமதிக்காமல் செய்ய வேண்டியவை..

இந்திய பிரதமர் மோடி, கொரானா குறித்து மக்கள் ஊரடங்கு அறிவித்து 90 நாள்கள் நிறைவு பெற்றுள்ளது. பொதுமுடக்கம் 1 துவங்கி பல கட்ட அறிவிப்பு வெளிவந்த போதும், இந்தியாவில், கொரானா பாதிப்பின் தாக்கம், குறைவதற்கு பதிலாக, அதிகரித்து வருகிறது. மோடி குறிப்பிட்ட வளர்ச்சியின் அடையாளம், குஜராத், பொருளாதார தலைநகரம் மும்பை, தலைநகர் டில்லி, இந்தியாவின் டெட்ராய்ட் சென்னை ஆகியவை, கொரான பாதிப்பில் மூச்சு திணறிக்கொண்டு இருக்கின்றன. உயிரிழப்பும் 15 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. உலகில் இந்தியபாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 4 வது இடத்தை தொட்டிருக்கிறது. 

வளர்ந்த முதலாளித்துவ நாடுகளும், வளரும் நாடுகளின் முக்கிய பெரு நகரங்களும் இவ்வாறு மூச்சுத் திணறுவது, இரண்டு அடிப்படை விசயங்களை சுட்டுகிறது. ஒன்று, முதலாளித்துவ வளர்ச்சியில், பொது சுகாதாரப் பராமரிப்பில்  உள்ள ஓட்டைகளை அம்பலப்படுத்துவதாக உள்ளது. இரண்டு நகரத்தில் உள்ள வசதியானவர்கள் மற்றும் வசதியற்ற அன்றாடம் உழைத்து வாழ்பவர்கள் ஆகியோர் மீது அரசு வெளிப்படுத்தும் பாரபட்சமான அணுகுமுறை. இந்தியாவின் பெரும்பான்மை மக்கள் சிகிச்சை பெறும் அரசு மருத்துவமனைகள் மற்றொன்று தனியார் மருத்துவமனைகள். அதேபோல் தனிமைப்படுத்தப்படும் வளாகங்கள், ஒன்று கல்லூரி வளாகங்கள் மற்றொன்று சற்று வசதியான மையங்கள். இடைவெளி மிக அதிகமாக இருப்பதை, அரசிடம் சுட்டிக்காட்டுவதும், ஓட்டைகளை அடைக்கும் நிர்பந்தத்தை தருவதும் அவசியமாகிறது.

கேட்பாரற்ற நிலையும் மார்க்சிஸ்ட் கட்சியின் தலையீடும்:


புதன், 17 ஜூன், 2020

புலம் பெயர் தொழிலாளர், துயரமும் - தீர்வும்...

புலம் பெயர் தொழிலாளர், துயரமும் - தீர்வும்...


கொரானா நோய்த் தொற்று புலம் பெயர் தொழிலாளர்களை, பிறப்பிடம் நோக்கி விரட்டுகிறது. நடப்பது உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் பயன்படுத்தி தனது பிறந்த ஊர்களை நோக்கிய பயணம் குவியல் குவியலாக அரங்கேறி இருக்கிறது. முதலாளித்துவத்தை ஆதரிப்போரும் கூட இந்த பயணங்களை கண்டு பரிதாபப்பட்டுள்ளனர். உணவு போன்ற ஏதாவது சிறு உதவிகள் தந்து, தனக்குரிய உயிர் காக்கும் குணத்தை வெளிப்படுத்தியுள்ளனர். தன்னார்வ குழுக்கள் ஒருபகுதியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மற்றும் அமைப்புகளும் பல்வேறு வகையில், அரசுகளை நிர்பந்தித்து, உணவு, இருப்பிடம், வாடகை வசூலித்தலில் இருந்து காப்பது, வேலை செய்த நிறுவனங்களிடம் இருந்து தர வேண்டிய கூலியை பெற்று தருவது போன்ற பணிகளை, தனது வர்க்க உணர்வில் இருந்து, செய்துள்ளன. ஆனாலும் அரசின் பொறுப்பின்மை, வேலைக்கு அழைத்து வந்த நிர்வாத்தினரின் அலட்சியம் காரணமாக, பலகோடி தொழிலாளர்கள் இன்னும் வெளியேற வழியில்லாமல் தவித்து வருகின்றனர். தமிழகத்திற்கு வந்து சேர வேண்டிய தொழிலாளர்களும், துயரத்தை அனுபவித்து வருகின்றனர்.

இந்தியாவில் இது, மாநிலம் விட்டு மாநிலம், ஒரு மாநிலத்திற்குள் என நடந்துள்ளது.  உலகில் நாடு விட்டு நாடு என்ற தன்மையில் உழைப்பாளர்களுக்கு உள்ள புரிதல், வருமானம், வசிப்பிடத்தில் உள்ள சமூகபாதுகாப்பு ஆகிய தன்மைக்கு ஏற்ப, தங்கள் ஊர்களுக்கு திரும்பியுள்ளனர். இது குறித்து அரசு தனது நிலைப்பாட்டை, பொதுமுடக்கத்தின் முதல் 45 நாள்கள், வெளியிடவில்லை. அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளை பாஜக அரசு மதிக்கவில்லை. நடக்க துவங்கியவர்களை, பார்த்து ஆறுதல் சொன்ன நடவடிக்கை, அரசால், பரிகாசம் செய்யப்பட்டது. நீதிமன்றம் தொடர்ந்து அரசின் கொள்கைகளில் தலையிட முடியாது என மறுத்து, பின் 65 ம் நாளில் தனது ஞானக்கண்ணைத் திறந்து, சமூக அவலம் எனக் கூறியதுடன், அரசின் நடவடிக்கைகள் குறித்து 5 விதமான வழிகாட்டுதல்களை அளித்தது. 

ஏன் இவ்வளவு அலைக்கழிப்பு, கண்டுகொள்ளாமை, உதாசீனம், என்றால் முதலாளித்துவ வளர்ச்சிக்கு, மூலதனத்தின் விரிவாக்கத்திற்கு, என பல்வேறு பங்களிப்புகளை செய்வதில், இன்றைய இந்திய சூழலில் பெரும் பங்கு செலுத்துபவர்கள் புலம்பெயர் தொழிலாளர்கள். ஆனாலும் முதலாளித்துவம் அலைக்கழிக்கிறது. உபரி மதிப்பை தரும் உற்பத்தி இல்லாத போது,  சமூக பாதுகாப்பு நடவடிக்கை உதாசீனம் செய்யப்பட்டுள்ளது. 

புலம் பெயர்தல் புதிதல்ல:

நிறைய பஞ்சங்களின் வரலாறும், போர்களின் வரலாறும், புலம் பெயர் வாழ்க்கை உலகமுழுவதும் இருந்ததைக் தெளிவு படுத்தியுள்ளது. இது பல ஆயிரம் ஆண்டுகளாக நடந்துள்ளது. ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியா கண்டங்கள் இந்த நிகழ்வுகளில் பெரும் பங்களிப்பை செய்துள்ளன. காலனியாதிக்கம், குடியேற்றம், இப்போது நடைபெறும் மறுகுடியேற்றம் ஆகியவையும் புலம் பெயர் நடவடிக்கைக்கு காரணமாக இருந்துள்ளது. உள்நாட்டு போர் 20 ம் நூற்றாண்டு காலத்தில் பங்களிப்பு செய்துள்ளது. அதாவது யூதர்கள், இலங்கை தமிழர்கள் உலகம் முழுவதும் புலம் பெயர்ந்த வாழ்க்கைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அகதிகள் ( டயஸ்போரா) என்ற பெயரில் தற்காலிக இடம் பெயர்ந்த வாழ்க்கை என அழைக்கப்பட்டலும், நீடித்த வாழ்க்கை முறை, அடுத்த தலைமுறையினரின் கல்வி, வேலைவாய்ப்பு காரணமாக, தஞ்சம் புகுந்த நாட்டில் குடியுரிமை பெற்று மறுமலர்ச்சியடையும் சூழலும் உருவாகியுள்ளது. 

சீனர்கள், ரோம் நகரின் மக்கள், இந்தியர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் 1000 ஆண்டுகளாக புலம்பெயர்ந்து வாழும் வாழ்க்கை நிலையைக் கொண்டுள்ளனர். இரண்டாம் உலக போருக்கு முன்னர் மற்றும் அதனைத் தொடர்ந்து  யூதர்களும், போர் முடிவு பெற்றதற்கு பின் கணிசமான ஜெர்மானியர்களும், கம்யூனிஸ்ட் ஆட்சியை ஏற்காத பணக்காரர்கள் ஒருபகுதியும், அமெரிக்காவில் குடியுரிமை பெற்று வாழ்வதை பார்க்க முடியும். இந்தியாவில் இருந்து 3 கோடி மக்கள் உலகின் பல நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த எண்ணிக்கை இந்திய மக்கள் தொகையில், 0.23 சதம். ஆனால் தேசிய உள்நாட்டு உற்பத்தியில் 2015 கணக்கு படி, 6900 கோடி டாலர். இது ஜி.டி.பி. யில் 3.4 சதம் என்கின்றனர். அமெரிக்காவின் 25 சதம் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் உரிமையாளர்கள் இந்தியர்கள் என்பதை டியூக் மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வுகள் தெரிவித்துள்ளன, (இந்த விவரம் காரணமாக,  மத்திய அரசு வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் சிறிய கரிசனத்தை வெளிப்படுத்துகிறதோ, என்ற எண்ணம் உருவாகிறது). 

அட்லாண்டிக் கடல் பகுதியில் நடந்த அடிமை வர்த்தகம் முக்கியமானது. 16 ம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஆப்பிரிக்க மக்கள் ஏராளமாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அடிமைகளாக விற்பனை செய்யப்பட்டது. பின்னர் 1910 முதல் 1970 வரை அமெரிக்காவில் ஏற்பட்ட அடுத்த கட்ட நகர்மயமாதலுக்காக புலம்பெயர்ந்த ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் ஆகியோர், உழைப்பு சுரண்டலைத் தொடர்ந்து அல்லது தரம் குறைவான வேலையைச் செய்வதற்காக புலம்பெயர்ந்தவர்கள் ஆவர். இதேபோல் உலகின் பல நாடுகளின் உழைப்பாளர்களும் அமெரிக்காவில் மிக கொடிய உழைப்பு சுரண்டலை சந்திக்கும் அவலத்தை ஏராளமான எழுத்தாளர்களின் எழுத்துக்கள் வெளிப்படுத்தி வருகின்றன. வளர்ந்த பல நாடுகள்,ஏற்கனவே இந்த அவலத்திற்கு வழிகாட்டுதல்கள் செய்துள்ளது. 

ஏன் புலம் பெயர்தல்:

நாம் சந்திக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் அவலம், தாராளமய பொருளாதார கொள்கை கிராமங்களை அழித்து வருவதில் இருந்து உருவாவதாகும். நிலமற்ற கூலி தொழிலாளர்கள் சந்திக்கும் பல்வேறு அவமானங்கள், அவர்களை கூலி உழைப்புக்காக கிராமங்கள் விரட்டுகிறது. புலம் பெயர்ந்தவர்கள் குறித்த விவரங்களை பல ஆய்வாளர்கள் வெளியிட்டு வருகின்றனர். கூலி அடிமைகளாக நிலத்தில் உழைப்பதை விட, தொலை தூரத்தில், தன்மானத்தை தொலைத்து வாழ்வது மரியாதை என உணர்கின்றனர். சாதி ஒடுக்குமுறையும், நிலமற்ற அவமானமும், கங்கை, பிரம்மபுத்ரா, யமுனை, மகாநதி, ஹூப்ளி, காவிரி, தாமிரபரணி, தென்பெண்ணை என ஆறுகள் பாய்ந்து வளம் கொழித்தாலும், “எங்களுக்கு இடமளிக்கவில்லை. இந்த பிழைப்பு எனது பெற்றோர்களுடன் போகட்டும், என புறப்பட்டவர்கள்”, என்கிறது சில ஆய்வுகள். சிறு, குறு நிலவுடைமையாளர்களும் உணவு தேவைவைக்காக, நிலத்தில் உழைக்கின்றனர். பகுதியளவில் புலம் பெயர்ந்து பணத் தேவையையை ஈடுகட்டுகின்றனர். 

நிலமற்ற மக்களின் உழைப்பு சாதனம், உழைப்பை தவிர வேறு எதுவும் இல்லை. அந்த உழைப்பை எங்கு செலுத்தினால் என்ன? என்ற சிந்தனைக்கு நிலமற்ற மக்கள் தள்ளப்படுவது, அதிகரித்த காலமாக தாராளமய காலகட்டம் அமைந்தது. குறிப்பாக பழங்குடி மக்கள் இக்காலத்தில் அதிக அளவில் தங்களுக்கு உழைப்பையும், வாழ்வையும் தந்த காடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். தெற்கு குஜராத் வனங்களில் வசித்த, பில்ஸ் எனும் பழங்குடி மக்கள் 85 சதம் புலம் பெயர்வதன் மூலம் வாழ்வாதரம்  பெறுபவர்கள், என்கின்றனர். இது போல் தான், மத்தியப்பிரதேசம், சட்டிஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா, மேற்கு வங்கத்தின் ஒரு பகுதி பழங்குடி மக்கள் மிகப்பெரிய புலம் பெயர் வாழ்க்கையை சந்திக்கும் நிர்பந்தத்திற்கு ஆளாகினர். பில்ஸ் மற்றும் தாணே (மகராஷ்ட்ரா) பழங்குடி மக்கள் குடும்பத்துடன் புலம்பெயர்ந்து செல்கின்றனர். இவர்களை பொருத்தளவில் பெண்கள் வேலைக்கு செல்வது பண்பாட்டு ரீதியில் இழுக்கானது. ஆனால் புலம்பெயர்ந்த இடத்தில், பெண்களும் வேலை செய்யாமல், குடும்ப பாரத்தை இழுக்க முடியாது. இதனால் மிகப்பெரிய மனப்போராட்டத்தையும் சேர்த்தே இந்த மக்கள் பிரிவினர் நடத்துகின்றனர். வழியில்லாமல், வாழ்க்கையை உழைப்பதன் மூலம் மாற்றுகின்றனர். கருத்தும் மாறுகிறது.

அடுத்ததாக புலம் பெயர்தலுக்கு சாதியும், காரணமாக இருக்கிறது. நிலமற்ற கூலி உழைப்பாளர்கள், எனும் போது தலித் பெரும் எண்ணிக்கையில் உள்ளனர். இந்தியாவை பொருத்தளவில் கடந்த காலத்தில் சாதிய ரீதியிலான சுரண்டலை தக்கவைக்கும் எஜமானிய முறை ( Jajmani System) இருந்தது. இது 1980  கள் வரையிலும் சில கிராமங்களில் நீடித்ததாக சமூகவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இப்போதும் ஒருசில கிராமங்களில் இந்த கொடுமைக்கான சூழல் இருக்கிறது. அனைத்து வகை உழைப்பும், உணவுக்காக செய்யும், கொடுமையை எஜமானிய முறை என்கின்றனர். பெரும்பகுதி தலித், உழுபடைகருவிகள் உற்பத்தி செய்கிற அல்லது பராமரிக்கிற சாதியினர், சலவை தொழிலாளர், மருத்துவர்கள் என்று அழைக்கப்படுவோர், இதில் அடங்குவர். இந்தபிரிவினர் கிராமங்களில் நடைபெறும் சமூக கொடுமைகள் பொருக்க முடியாமல் இடம் பெயரும் நிலை உருவாகிறது. அதேபோல் கணிசமான பகுதி இஸ்லாமியர்கள் மேற்குவங்கத்தின் முர்ஷிதாபாத், மால்டா மாவட்டங்களில் இருந்தும், புலம் பெயரும் நிலை உள்ளது. இந்த மாவட்டங்களில் இஸ்லாமியர்களே அதிகம், மதக்கலவரம் காரணமாக தெரியவில்லை. ஆனால் வேலை வாய்ப்புக்கான வளர்ச்சி பெருமளவில் உயரவில்லை. ஜார்கண்ட், உ.பி, பீகார் ஆகிய மாநிலங்களில் இருந்தும் இஸ்லாமியர்கள் புலம்பெயர்ந்து தொழில் வளர்ச்சி உள்ள பகுதிகளில் வேலை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தொழிலாளர்கள் புலம் பெயர்தலுக்கு, மத அடையாளம் அதன் காரணமான மோதல் அடித்தளமாக இருக்கிறது.

மொத்தத்தில், நிலமின்மை, சமூக சுரண்டல் அல்லது ஒடுக்கு முறை, வனங்களில் இருந்து வெளியேற்றப்படல் ஆகிய காரணங்களே, புலம்பெயர்தலுக்கு பிரதான காரணங்களாக அமைந்துள்ளது. மேலே குறிப்பிட்ட மக்களில் இஸ்லாமியர்களைத் தவிர்த்து இதர பகுதி மக்கள் ஒருபகுதி குடும்பத்துடன் புலம் பெயர்கின்றனர். பழங்குடி மக்கள் தவிர்க்க முடியாத படி குடும்பத்துடன் புலம் பெயர்கின்றனர். 

இவைகளுடன் தாராளமய பொருளாதாரக் கொள்கை, அது உருவாக்கும் நகரமயமாக்கல் முக்கிய காரணம். அமைப்பு சார்ந்த உழைப்பாளர் எண்ணிக்கை குறைந்து, அமைப்பு சாரா தொழிலாளர் எண்ணிக்கை உயரவும், தாராளமயமாக்கல் சலுகைகளை பயன் படுத்தி, மூலதனம் தூண்டுகிறது. அமைப்பு சாரா, சமூக பாதுகாப்பு  குறைந்த வேலைகளை செய்ய புலம். பெயர் தொழிலாளர் மூலதனத்திற்கு தேவையாக உள்ளனர்.

எங்கு செல்கின்றனர்?

பீகார், உ.பி, ம.பி, பஞ்சாப்  மாநிலங்களில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள், டில்லி, மும்பை காஜியாபாத், குர்காவ்ன், அகமதாபாத், சூரத் ஆகிய பகுதிகளுக்கு செல்கின்றனர். வடகிழக்கு மாநிலங்கள், அஸ்ஸாம், மே. வங்கம், ஒடிசா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள் தமிழகம், கர்நாடகம், கேரளா ஆகிய மாநிலங்களில் தஞ்சம் புகும் நிலை உள்ளது. சுமார் 30 சதம் இந்தியர்கள் இவ்வாறு இடம்பெயர்ந்து வாழ்க்கை நடத்துவதாக கூறப்படுகிறது. சூரத் இந்தியாவிலேயே அதிக அளவு, 59 சதம் புலம்பெயர் தொழிலாளர்களை கொண்ட நகரம், என்கின்றனர். தமிழகத்தில் இருந்து, கர்நாடகம், கேரளா, மகராஷ்டரா, டில்லி ஆகிய பகுதிகளுக்கு புலம் பெயர்ந்துள்ளனர். 

இந்தியாவின் வளர்ச்சியில், மும்பை, கொல்கத்தா, சென்னை, சூரத் என்பது காலனியாதிக்க காலத்திலும், பின்னர் டில்லி, பெங்களூர், புணே, ஹைதராபாத், விசாகபட்டினம், கோயம்புத்தூர், ஓசூர், திருச்சி, திருப்பூர், சேலம், ராணிபேட்டை, கொச்சின், வடக்கு மத்திய பகுதி ( North Central Region), அதாவது டில்லியின் புறநகராக உள்ள அரியானா, ராஜஸ்தான், உ.பி ஆகிய மாநிலங்களின் பகுதி தொழில் வளர்ச்சி பெற்ற பகுதிகளாக உருவெடுக்கிறது. 1980 களில் இந்த வளர்ச்சி உருவாகிறது. இந்த காலத்தில் தான் கிராமங்களில் இருந்து, கணிசமான வெளியேற்றமும் நடைபெறுகிறது. பின்னர் அடுத்த கட்டமாக சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலை, பெங்களூர்-மும்பை நெடுஞ்சாலை, மும்பை-அகமதாபாத் நெடுஞ்சாலை, மும்பை-டில்லி நெடுஞ்சாலை ஆகியவை கிராமத்து உழைப்பாளர்களை, ஓரளவு பள்ளிக் கல்வி முடித்தோரை பெருமளவில் வெளியேற்றி, தன்னகத்தே ஈர்த்தது. இந்த பகுதிகளில் 2000 ஆண்டுக்குபின், மிகப்பெரிய அளவில் தொழில் மூலதனத்தின் வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. 

ஒரு பகுதி ஆலை உற்பத்தியில் ஒப்பந்த தொழிலாளர்களாக, காவல் பணி செய்வோராக, அதற்கு முன் கட்டுமான பணிகளில் ஈடுபடுவோராக, சாலை கட்டமைப்பு பணிகள் செய்வோராக பணி செய்கின்றனர். ஆலை உற்பத்தி துவங்கிய பின்னர், ஒப்பந்த தொழிலாளர்களாக தொடர்வதும், ஆலைகளை ஒட்டி வளரும் சேவைத் துறைகளான உணவகங்கள், தேநீர் கடைகள், சிற்றுண்டி சாலைகள், வாகன ஓட்டிகள், வீட்டு வேலை செய்வோர், அழகு நிலையங்களில் ஆண், பெண் உழைப்பாளர்கள், பிளம்பிங்க், எலெக்டிரீசியன், மதுக்கடைகளில் மற்றும் ஆயத்த ஆடை தயாரிப்பு பணிகளில் என பல்வேறு வேலைகளை செய்யக் கூடியவர்களாக தொடர்கின்றனர். சில ஆய்வாளர்கள் மற்றும் கட்டுரையாளர்கள் பெண் தொழிலாளர்கள் கணிசமாக பாலியல் தொழிலாளர்களாக மாற்றபடும் சமூகக் கொடுமைகளை பதிவு செய்துள்ளனர். மகராஷ்ட்ரா மாநிலம் ராய்காட் நகரின் கட்டுமானப் பணியில் ஈடுபட்ட பெண்களில் சுமார் 30 சதமானோர், குறைவான வருவாயை, சரிசெய்ய பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதாக, ஆக்கார் பதிப்பகம் வெளியிட்ட, புலம்பெயர் தொழிலாளர்களின் அரசியல் பொருளாதாரம், என்னும் புத்தகம் தெரிவிக்கிறது. குடிநீரும் வணிகமாகியுள்ள நிலையில், குடிநீர் உற்பத்தி, விநியோகம் போன்ற பணிகளிலும் புலம்பெயர் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். 

1980 களுக்கு முன், உப்பளங்கள், செங்கல் சூளைகள், கல் குவாரிகள், சுரங்கம் போன்றப்பணிகளில் புலம்பெயர் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இவை மிக அதிக தொலைவு கொண்டதாக இல்லை. பெரும்பாலும் ஒரு மாநிலத்திற்குள்ளேயே இடம்பெயர்ந்து வேலை தேடும் கட்டமாக அது இருந்தது.  குறிப்பிட்ட பணிக்காக மட்டும் இடம்பெயர்ந்து அந்த சீசன் வேலைகளை முடித்து திரும்புதலும் உள்ளது. குறிப்பாக கரும்பு வெட்டும் பணியில் குஜராத் மாநில பில்ஸ் பழங்குடியினர் ஈடுபடுத்தப்பட்டனர். தமிழகத்திலும் இத்தகைய விவசாய பணி செய்யும் தொழிலாளர்கள் விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் உண்டு. இந்த மாவட்டங்களில் இருந்து கேரளத்திற்கு அறுவடைக்காலங்களில் செல்லும் தொழிலாளர்களும் உள்ளனர். குறைவான கூலியில் விரைவான வேலை என்கிற முறையில் தான், இத்தகைய தொழிலாளர்களை, பெரும் விவசாயிகள் பயன்படுத்தினர். இந்த பணி இப்போது குறைந்து வருகிறது. 

புலம் பெயர்தலின் வழித்தடம்:

ஊரில் சூழல் சரியில்லை, எனவே வெளியேறலாம் என தனி நபர் முடிவு செய்து வெளியேறுவது, மிகக் குறைவு. ஆனால் இதற்கான வழிமுறைகள் நெடுநாள்களாக ஆறுகளின் வழித்தடத்தை போல் செயல்பட்டு வருகிறது. மூன்று வழிகளில் புலம் பெயர்தல் நடைபெறுகிறது. 1. ஒப்பந்தம் செய்பவர், தெகடெர், சர்தார், முக்கடம் போன்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார். இவர் சம்மந்த பட்ட தொழிலாளர்களை அழைத்து செல்வதுடன், கண்காணிப்பாளராகவும் பணியாற்றி முதலாளியிடமும், அழைத்து சென்ற தொழிலாளர் மூலமாக ஒரு தொகை, என இரண்டு கூலி பெறுபவராக இருக்கிறார். 2. ஏற்கனவே வெளியூரில் வேலை செய்யும் குடும்பத்தார் மூலம் இடம் பெயர்தல். இவர் சகோதர உறவு வழி என குறிக்கப்படுகிறார். வேலை பெற்று தருவது, உடன் தங்க வைத்து கொள்வது. அனைத்து விதமான பாராமரிப்பு பணிகளையும் செய்து தருவது என்ற முறையில் செயல்படுகின்றனர். 3. நாகாஸ் என்ற முறையில், பல்வேறு உதிரிகளாய் வந்து சேர்ந்தவர்களுக்கான ஏற்பாடு. அநேகமாக இந்த முறையில், தனித்தனி நபர்களாக வந்து சேர்ந்தோரை பயன்படுத்துவது. சிறு குறு தொழிற்சாலைகள், ஓட்டல் பணி ஆகியவற்றில் இத்தகைய தொழிலாளர்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.  இவ்வாறு அழைத்து செல்லும் முறை புலம்பெயர் தொழிலாளர் சட்டத்தை செயலிழக்கச் செய்கிறது. 

புலம் பெயர் தொழிலாளர்கள் ஏற்படுத்தும் தாக்கம்:

அடிப்படையில் குறைவான கூலிக்கு, அதிகநேரம் வேலை செய்கின்றனர் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. இது உள்ளூர் தொழிலாளர்களின் வேலை வாய்ப்பை பறிக்கிறது. சங்கம் வைத்து போராடும் நிலையில் புலம் பெயர் தொழிலாளர்கள் இல்லை. ஏனென்றால், மேலே குறிப்பிட்ட மூன்றுவகையான முறைகளில் அழைத்து வரப்படுவதால், சங்கம் வைப்பது போன்ற முயற்சியில் ஈடுபட்டால் உடனே, அழைத்து வந்த நபர்களால் வெளியேற்றப்படுவர். அழைத்து வந்தவர்களை எதிர்த்து எதுவும் செய்ததில்லை, என்பது இந்தியாவில் உள்ள இதுவரையிலான நிலை. மற்றொரு புறம், நிரந்தர தொழிலாளர்களின் கூட்டு பேரம், வேலைநிறுத்தம் ஆகியவற்றை பலவீனப்படுத்தும் சக்தியாக, புலம்பெயர் தொழிலாளர்கள் முதலாளிகளால் நிறுத்தப்படுகின்றனர். அதாவது காரல் மார்க்ஸ் சொன்னதைப் போல் சேமநலப்படையாக ( Reserve Army) பயன்படுத்தப்படுகின்றனர். மேலும் மேலும் மூலதனம் குவிவதற்கு தங்களை அறியாமலேயே உதவுகின்றனர். 

செய்யவேண்டியவை:

மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் குறிப்பிடுவது போல், முதலில் நிலச்சீர்திருத்தம் செய்யப்பட்டு, நிலமற்ற தொழிலாளர் குடும்பங்களுக்கு வழங்கப்பட வேண்டும். இரண்டு, புலம் பெயரும் இடத்திலும், சேர்ந்த இடத்திலும் இந்த சமூகம் பின்பற்றும் சாதிய அல்லது சமூக ஒடுக்குமுறை ஒழிக்கப்பட வேண்டும். மூன்றாவதாக சமவேலைக்கு சம ஊதியம் என்ற சட்டத்தை, வலுவாக இந்தியா முழுவதும் அரசுகள் அமலாக்க வேண்டும். இது இரண்டு வகைகளில் பயன்படும். அதாவது உள்ளூர் தொழிலாளருக்கும், புலம் பெயர் தொழிலாளருக்கும் ஒரே சம்பளம் வழங்க வேண்டும் என்ற நிலையில், உள்ளூர் தொழிலாளிக்கான வாய்ப்பு அதிகரிக்கும். அதேபோல் புலம்பெயர் தொழிலாளி மீதான சுரண்டல் அளவு குறையும். இவை நிரந்தரமாக செய்யப்பட வேண்டியவை. புலம் பெயர் தொழிலாளர் சட்ட படி, பதிவு செய்யும் அனைத்து ஏற்பாடுகளையும் உறுதி செய்வது.

மற்றொரு புறம் புலம் பெயர்தல் தவிர்க்க கூடியதா? தவிர்க்க முடியாததா.? என்ற விவாதங்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது. மூலதனம் கூலி உழைப்பு மலிவான சந்தையை நோக்கி பாய கூடியது. அதற்காக தொழிலாளர்களை ஒரு கோடியில் இருந்து மற்றொரு கோடியை நோக்கி விரட்டி கொண்டே இருக்கும் என்பதை புறக்கணிக்க முடியாது. வேலையின்மை, புலம்பெயர்தல் ஆகியவை முதலாளித்துவத்துடன் ஒட்டி பிறந்தவை என்பதை புரிந்து கொள்வது அவசியம். தற்போது புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், ஊர் திரும்பியதை அங்கேயே பயன்படுத்துவது குறித்து ஆலோசிப்பதும், செயல்படுவதும் வேண்டும். அதற்காக விவசாயம் மட்டுமல்லாது, உற்பத்தி சார்ந்த ஆலைகளின் வளர்ச்சிக்கு, வழி வகை செய்ய வேண்டும். மேக் இன் இந்தியா முழக்கம் மட்டும் போதாது.

கடந்த காலத்தில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு இடதுசாரிகள் ஆதரவு அளித்த போது முன் மொழிந்து செயல்படுத்த பட்ட இரண்டு சட்டங்களை தீவிரமாக அமலாக்க வேண்டும். ஒன்று மகாத்மா காந்தி தேசிய கிராமப் புற வேலை உறுதி சட்டம். இதை நகர்புறத்திற்கும் விரிவாக்கம் செய்வதன் மூலம் வேலை வாய்ப்பு உறுதியாகும். வேலைநாள்களை 200 ஆகவும், கூலியையும், உயர்த்துவது, இளம் தொழிலாளர்களும் பங்கெடுக்கும் வாய்ப்பை அதிகரிக்கும். உள்கட்டமைப்பு மேம்படும். அடுத்தது, வன உரிமை  சட்டம் 2005. தற்போது இந்த சட்டம் பெயரளவில் இருக்கிறது. முறையாக செயல்படுத்தப்பட்டால், மிகப் பெரிய அளவில், பழங்குடி மக்களின் புலம்பெயர்தலைத் தடுத்து நிறுத்தக் கூடியதாக இருக்கும். இது இந்தியாவின் காடுகளைப் பாதுகாக்கவும், இயற்கை வளத்தை பாதுகாக்கவும் உதவிடும். இந்த சமூக புரிதலுடன் புலம் பெயர் தொழிலாளர்களை திரட்டுவதும், தீர்வு காண முயலுவதும் நாகரீக சமூகத்தின் கடமையாகும்.

நன்றி. மார்க்சிஸ்ட் ஜூன் 2020

செவ்வாய், 2 ஜூன், 2020

புலம் பெயர் தொழிலாளர்



புலம் பெயர் தொழிலாளர்கள் சமூகத்தின் உருவாக்கம்...


ஆளுகிற வர்க்கம், ஆளப்படும் வர்க்கத்திற்கு, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், பாடம் கற்று தருகிறது. அழைத்து வந்தவர்கள் எட்டிப் பார்க்கவில்லை, என்ற நிலையில் விட்டு சென்ற இடத்தில் ஆள்களை காணவில்லை, என்று புலம்பும் சிறு, குறு உற்பத்தியாளர்களைப் பார்க்க முடிகிறது. ஆம் கொரானா வந்தாலும், அங்கேயே உட்கார்ந்திருக்க புலம் பெயர் தொழிலாளர்கள் என்ன சிலையா? அவர்களின் உணர்வு வேலைதளத்தில், ஒரு வேளை மரத்துப் போயிருக்கலாம், பசியும், அச்சமும் மரத்துப் போகும் மருந்தை, இந்த சமூகம் தரவில்லையே. புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கட்டமைத்த சாலை, அவர்களின் பூர்வீக கிராமங்களுக்கு, நடந்து செல்லும் பாதை காட்டும் கொடுமையாக அரங்கேறியிருக்கிறது.

தன்னார்வலர்களும் மனிதாபிமானிகளும் ஐயோ நடந்தே செல்கின்றனரே, என இரக்கம் கொள்கின்றனர். வழியில் சோறு கொடுத்து ஆறுதல் தருகின்றனர். ஆனால் நடப்பவர்களுக்கு தனது கிராமத்திற்கு செல்லும் ஈர்ப்பு விசை குறையவில்லை. குறைந்தது 1000 கி.மீ நடந்து செல்லும் குடும்பத்தினர், ஆட்சியாளர்கள் அல்லது பாஜக வினரைத் தவிர்த்து மற்ற அனைவரின் மனசாட்சியையும் உலுக்கி உள்ளனர். குழந்தைகளும், பெண்களும், வயோதிகர்களும் தங்கள் கால்களில் வெறுப்பை உரமேற்றி கொண்டு இருப்பதாகத் தெரிகிறது. அது தங்களை சுரண்டியவர்களுக்கு அல்லது கண்டு கொள்ளாத ஆட்சியாளர்களுக்கு எதிராக மட்டுமே பிரதிபலிக்க வேண்டும். அதை சமூக இயக்கங்கள் கற்று தரும் பொறுப்பு கொண்டிருக்கின்றன.

எங்கிருந்து வந்தார்கள்?

வந்தவர்கள் குறித்த விவரங்களை பல ஆய்வாளர்கள் வெளியிட்டு வருகின்றனர். விவசாயம் பலன் தரவில்லை. கூலி அடிமைகளாக நிலத்தில் உழைப்பதை விட, தொலை தூரத்தில், தன்மானத்தை தொலைத்து வாழ்வது மரியாதை என உணர்கின்றனர். சாதி ஒடுக்குமுறையும், நிலமற்ற அவமானமும், கங்கை, பிரம்மபுத்ரா, யமுனை, மகாநதி, ஹூப்ளி காவிரி, தாமிரபரணி, தென்பெண்ணை என எந்த ஆறு பாய்ந்து வளம் கொழித்தாலும், எங்களுக்கு இடமளிக்கவில்லை. இந்த பிழைப்பு எனது பெற்றோர்களுடன் போகட்டும், என புறப்பட்டவர்கள் என்கிறது சில ஆய்வு. வனம் எங்களது. இப்போது அதுவும் கார்ப்பரேட் வசம், கணிமங்களுக்காக, உயர்ந்த நீர்தேக்கங்களுக்காக, பல பத்தாண்டுகளாக விரட்டப்பட்ட பழங்குடிகள் மொழி தெரியாமல், ஆலைகளுக்கு ஆள் பிடிப்போருடன் சேர்ந்து ரயில் ஏறி வருகின்றனர். மற்றொரு பகுதியினராக சிறுபான்மை இஸ்லாம் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சார்ந்த நிலமற்றவர்கள். இவர்களின் வயது 15 முதல் 30 என்பது பெரும்பான்மை.

பீகார், உ.பி, ம.பி, பஞ்சாப்  மாநிலங்களில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள், டில்லி, மும்பை காஜியாபாத், குர்காவ்ன், அகமதாபாத், சூரத் ஆகிய பகுதிகளுக்கு செல்கின்றனர். வடகிழக்கு மாநிலங்கள், அஸ்ஸாம், மே. வங்கம், ஒடிசா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள் தமிழகம், கர்நாடகம், கேரளா ஆகிய மாநிலங்களில் தஞ்சம் புகும் நிலை உள்ளது. சுமார் 30 சதம் மக்கள் இவ்வாறு இடம்பெயர்ந்து வாழ்க்கை நடத்துவதாக கூறப்படுகிறது. சூரத் இந்தியாவிலேயே அதிக அளவு, 59 சதம் புலம்பெயர் தொழிலாளர்களை கொண்ட நகரம், என்கின்றனர். தமிழகத்தில் இருந்து, கர்நாடகம், கேரளா, மகராஷ்டரா, டில்லி ஆகிய பகுதிகளுக்கு புலம் பெயர்ந்துள்ளனர். நேபாளிகளும் இந்த புலம்பெயர் வாழ்க்கைக்கு மிக அதிக பங்களிப்பு செய்கின்றனர். இது தவிர மேற்குறிப்பிட்ட மாநிலங்களில் இருந்தும், ஹரியானா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்தும் அதிகமாகவும் பிறநாடுகளுக்கு தொழில்நுட்ப அறிவுடன் புலம்பெயர்ந்துள்ளனர். இவர்களுக்கு மிகப்பெரிய வாழ்க்கை நெருக்கடி இருப்பதில்லை.

இவையன்றி ஒரு மாநிலத்திற்குள்ளேயே இடம்பெயர்ந்து வேலை தேடும் நிலை, குறிப்பிட்ட பணிக்காக மட்டும் இடம்பெயர்ந்து அந்த சீசன் வேலைகளை முடித்து திரும்புதல் உள்ளது. இவர்கள் இந்த கொரானா முடக்க காலத்தில் பெரும் பாதிப்பிற்கு ஆளாகவில்லை என்றாலும், விவாதிக்கப்பட வேண்டியவர்களே.

என்ன வேலை செய்கின்றனர்?

கல்விக் தகுதி அடிப்படையில், நல்ல வருவாயுடன் வேலையில் உள்ளோர் பிரச்சனைக்குரியவர்களோ அல்லது இந்த விவாதத்தில் இடம்பெற வேண்டியவர்களோ அல்ல. ஆனால் வெளிநாடுகளில் இருந்தாலும், இந்தியாவில் மாநிலம் விட்டு மாநிலம், மாவட்டம் விட்டு மாவட்டம் என புலம் பெயர்ந்திருந்து, இந்த கொரானா காலத்தில் துன்பங்களை அனுபவித்தவர்களே, முக்கியமாக விவாதிக்கப்பட வேண்டியவர்கள். தங்கள் ஊரில் செய்ய தயங்கிய வேலை, புலம்பெயர்ந்த இடங்களில் தயக்கம் இன்றி செய்யப்படுகிறது. ஆட்டோ ஓட்டுநர், ரிக்‌ஷா ஓட்டுநர், சுமை தூக்குவோர், உணவகங்களில் பரிமாறுதல், சுத்தம் செய்தல், அழகு நிலையங்களில் ஆண், பெண் இருபாலரும் பணி புரிகின்றனர் ( சாதி ரீதியான இந்த தொழில் இப்போது அனைவராலும் செய்யப்படுகிறது), கட்டுமான பணி, செங்கல் சூளைகளில், வீட்டு வேலை செய்வதில் அதிகமான பெண்கள், சாலை கட்டுமானம், கிணறு வெட்டுதல், தூய்மை பணி போன்றவை, அண்மைக்காலங்களில் பொறியியல், உற்பத்தி, பஞ்சாலை, கார்மெண்ட் ஆகியவற்றில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

முதலாளித்துவ வளர்ச்சியில் தொழில்நுட்பம் வளர்கிறபோது, சமூகம் தரம் குறைந்ததாக மேற்குறிப்பிட்ட வேலைகளை கருத்தாக்கம் செய்துள்ளது. இரண்டு குறிப்பிட்ட வேலையை, நேரம் பார்க்காமல், சந்தைக்கு அனுப்ப, இத்தகைய தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். ஓய்வின்றி, கேள்வியற்று உழைக்கும் மனிதர்களாக இவர்களை தயார் செய்கிறது. எனவே தான் நிலப்பிரபுத்துவம் வெளியில் தள்ளிய, தொழிலாளர்களை, முதலாளித்துவத்தால் ஈர்க்க முடிகிறது. இதன் காரணமாக மிகப் பெரிய உழைப்பு சுரண்டலும், மூலதனக் குவிப்பும் ஒருசேர அரங்கேறுகிறது. இன்றைக்கு இடதுசாரிகள் குற்றம் சுமத்துகிற செல்வக்குவிப்பு ஒருபுறமும், வறுமை அதிகரிப்பு மறுபுறமும் இந்த பின்னணியில் தான் நிகழ்கிறது.

என்ன செய்வது?

முதலில் தரம் குறைவான வேலை என்ற கருத்தாக்கம், முதலாளித்துவ சமூகத்தில் நீண்ட நாள் நீடிக்காது. நல்ல ஊதியம் கிடைக்கும் என்றால், சமூக பாதுகாப்புடன் அந்த வேலை இருக்கும் என்றால், அவரவர் ஊரிலேயே வேலை வாய்ப்பை உருவாக்க முடியும். கண்ணியமான வேலை என்ற முழக்கம் இந்த பின்னணியில் முக்கியத்துவம் பெறுகிறது. இரண்டாவது நிலக்குவியலும், வனமும் தனியார் வசம் அதிகரித்து வருவதை, தடுக்கும் வலுவான போராட்டம். புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சோறு தந்த மக்கள் உள்ளிட்டு, இந்த பணியில் ஈடுபடுப்பட திட்டமிட்டு செயலாற்றுவது. நிலக்குவியல் தகர்க்கப்பட்டு, ஆறுகளின் நீர்பாசன வசதியை மேம்படுத்தினால், விவசாயம் பெருகும். மூன்றாவது விவசாய பகுதிகளில் தொழில் வளர்ச்சிக்கான கோரிக்கைகளை முன்னெடுப்பது. உதாரணத்திற்கு கோவை, திருச்சி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஒரு பகுதி விவசாயமும், மற்றொரு பகுதி தொழில் வளமும் கொண்டதாக உள்ளதை ஆய்வு செய்து மாற்று அணுகுமுறையை முன் வைப்பது.

இரக்கமும், பரிவுணர்ச்சியும் கடந்த மாற்று திட்டங்களுடன் கூடிய செயல் திட்டமும், செயலாக்கமும் நிச்சயம் பயன்படும். இந்திய ஜனநாயகத்தில் முக்கிய இடம் பெற்றுள்ள உள்ளாட்சி அமைப்புகள் இயற்கை வளத்தை, நீர் ஆதாரத்தை, தனியாரிடம் அளித்து, சொத்து குவிப்பு செய்வதை தடுக்கவும், உண்மையான வளர்ச்சிக்கு வழி செய்யவும், முன்வைக்கப் படும் மாற்றுத்திட்டம் பலன் அளிக்கும்.

கொரானா கால தொழிலாளர் சட்ட திருத்தங்கள்

தொழிலாளர் சட்டத்திருத்தம்... ஜனநாயக வளர்ச்சிக்கு ஆபத்து...


கால சக்கரத்தை பின்னோக்கி நகர்த்த, உழைக்கும் வர்க்கம் போராடி பெற்ற அனைத்து உரிமைகளையும் பறித்து கொள்ள, கொரானா பொது முடக்க காலத்தை, மத்திய பாஜக ஆட்சி மற்றும் நவ தாராளமய ஆதரவு கட்சிகள் கூட்டாக செய்து வருகின்றன. தொழிலாளர்கள் மீதான இந்த உரிமைப் பறிப்பு, அனைத்து பகுதி மக்களின் வாழ்வாதாரத்தையும் மிகக் கடுமையாக பாதிக்கும். ஒன்று அரசியல் ரீதியில் ஏற்பட்டு இருக்கும் ஜனநாயக பின்னடைவை மேலும் அதிகப்படுத்தும். இது நவதாராளமய ஆதரவு அரசியல் இயக்கங்களுக்கு தெரியாமல் இல்லை. அவர்கள் வெறுமனே பாஜக எதிர்ப்பு மட்டுமே, மாற்று அரசியல் கட்சியை ஆட்சியில் அமர்த்தும் என்ற கனவில் உள்ளதாக தெரிகிறது. மக்கள் அனுபவிக்கும் துயரங்கள் அனைத்தும் பொருளாதார மற்றும் வாழ்வாதார பதிப்புகளுடன், வகுப்புவாத அரசியலையும் இணைத்து கொண்டதால் உருவானது என்பதை தெரியாதது போல் இருப்பது அழகல்ல. இந்த அரசியல் உணர்வை கூட்டுபேர ஜனநாயகம் வலிமை அடைந்த நாடுகளில், இடதுசாரி அரசியல் வலுப்பெறுகிற போது மாற்றி அமைக்க முடியும்.

ஜனநாயக வளர்ச்சியின் முதல் படி, அம்பேத்கர் அவர்கள் கூறியவாறு, “ஒரு வாக்கு ஒருமதிப்பு” என்ற தன்மையில் அமைய வேண்டும். மூலதனம் மற்றும் கட்டுபாடற்ற முதலாளித்துவத்தின் ஆதிக்கத்தை, கட்டுக்குள் வைக்க இந்த கூட்டு பேரம் மற்றும் வலிமையான தொழிலாளர் சட்டங்கள் ஓரளவு பயந்தரும். அடுத்ததாக இதைப் பயன்படுத்தி, அமைப்பு சாரா மற்றும் கிராமப்புற உழைப்பாளர்கள் தங்கள் தரப்பு நியாயத்தை வென்றடைய முடியும். இதை இந்திய ஆளும் வர்க்கம் நன்கு அறிந்த காரணத்தால் தான், இந்திய தொழிலாளி வர்க்கத்தின் மீது முன் எப்போதும் இல்லாத வகையில் தாக்குதல் நடத்துகிறது.

இரண்டு இந்திய அரசின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய, அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் தனியார் வசம் ஒப்படைப்பது. இது கம்யூனிஸ்ட் அறிக்கை குறிப்பிட்டதை போல் ஏகபோக முதலாளிகளின் வளர்ச்சிக்கு தேவைப்படும் வகையில் நடைபெறுகிறது. சுமார் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தனியார் மயமாக்கல் அமலாகி வந்தாலும், இந்த கொரானா பொது முடக்க காலத்தில், மின்சாரம், பாதுகாப்பு தளவாடங்கள், விண்வெளி ஆராய்ச்சி, அணுசக்தி துறை,  கல்வி நிறுவனங்கள் ஆகியவையும், தனியார் பெரு முதலாளிகளிடம் ஒப்படைக்கப்படும், என்ற அறிவிப்பு மிக மோசமானது. அதேபோல் வனங்களும் தனியாரிடம் ஒப்பட்டைக்கப்படுக்கிறது. இதெல்லாம் கடந்த காலங்களில் தயங்கி நின்ற நடவடிக்கைகள் ஆகும். இது தொழிலாளி வர்க்கத்திற்கு உள்ள உரிமைகள் பறி போவது மட்டுமல்ல. இங்கு வேலைவாய்ப்பு பறிபோவதன் மூலம், சமூக நீதியின் அடித்தளமான இடஒதுக்கீடு, படிப்படியாக அழிக்கப்படும். ஒட்டு மொத்த அரசு சொத்துக்களும், அரசு நிறுவனங்களும் தனியார் பெருமுதலாளிகளுக்கு மாற்றப்படுவதன் அறிகுறி.

மூன்று இந்திய ஆட்சியாளர்கள் எப்போதெல்லாம் மக்களை வாட்டும் துயரத்தை கண்டு கொள்ளாமல், நிர்வாணமாகி, அம்பலப்பட்டு உள்ளனரோ. அப்போதெல்லாம், தேசிய வெறியை கிளறி விட்டு குளிர் காய்ந்திருக்கின்றனர். இப்போது இருக்கும் ஆட்சியாளர்கள் வகுப்புவாத வெறியுடன், இந்துத்துவா அரசியலை திணிப்பவர்கள். இவர்களுக்கே, மேற்குறிப்பிட்ட இரண்டு கொள்கைகளையும் அமலாக்க, பொதுமுடக்கம் தேவையாக இருக்கிறது. காரணம் அந்த அளவிற்கு வலுவான தொழிற்சங்க மற்றும் இதர வெகுமக்கள் அமைப்புகள் வலுவாக இருந்துள்ளன. அதன் அடிக்கட்டுமானத்தை நாசமாக்கும் வழியில்தான் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சட்டதிருத்தங்கள்:

சட்ட திருத்தங்கள் திடீரென அமலுக்கு வரவில்லை. பொதுத்துறை விற்பனை, தனியார் மேலாதிக்கம், மூலதன விரிவாக்கம் ஆகியவற்றிற்கு, இந்திய தொழிற்சங்கம் ஒரு தடை என்பது மிகையல்ல. ஆனாலும் தொழிலாளர் சட்டங்கள் 44வகைகளும், 4 கோடு என்ற பெயரில் திருத்தம் செய்யப்பட்டது. தொழிலாளர் துறையின் அதிகாரிகளுக்கான அதிகாரம் மற்றும் தொழிற்சங்கங்களுக்கான உரிமைகளை குறைப்பது என்ற நோக்கத்தில், நவதாராளமய மூலதனம் மற்றும் ஆட்சியாளர்களின் நோக்கம். அந்த வகையில் இந்த திருத்தம் முன்மொழியப்பட்டது. பாஜக ஆட்சிக்கு வந்த பின், நான்கு வேலை நிறுத்தங்கள் இந்த பின்னணியில் தான், தொழிலாளி வர்க்கத்தால் நடத்தப்பட்டுள்ளது. சுமார் 20 கோடி தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தங்களில் பங்கெடுத்துள்ளனர் ( அனைத்து வெகுமக்கள் அமைப்புகளின் பங்கெடுப்பு சேர்த்து). தொழிலாளர்களின் எதிர்ப்பு வீரியம் பெறுவதை புரிந்து கொண்ட காரணத்தால் தான், பாஜக ஆட்சி, இந்த பொது முடக்க காலத்தை பயன்படுத்துகிறது. சமூகபாதுகாப்பு கோடு, சம்பளம் கோடு, ஆகியவை ஏற்கனவே சட்டமாகி உள்ளது.

தற்போது பொது முடக்க காலத்தில், வேலைத்தள பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், தொழிலுறவு சட்டம் ஆகியவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டு, அந்த நிலைக்குழு கூடாமலேயே இருந்தது. இந்த பொது முடக்க காலத்தில், அந்தகுழு இணையம் மூலம் கருத்து கேட்பு நடத்தி விரைவாக அறிக்கையை தாக்கல் செய்திருப்பது, கார்ப்ப்ரேட் பெரு முதலாளிகளின் நோக்கத்தை நிறைவேற்றுவதாகும். இந்த குழுவில் 21 பேர் உள்ளனர். பல கட்சிகளும் உள்ளன. ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தி.மு.க ஆகிய உறுப்பினர்களான, எளமரம் கரீம், க. சுப்பராயன், மு. சண்முகம் ஆகியோர் மட்டுமே எதிர்த்து கருத்து தெரிவித்துள்ளனர். மற்ற அனைவரும் முதலாளிகளுக்கு சாதகமான திருத்தத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இதன் விளைவு தான், பாஜக ஆட்சியில் உள்ள, குஜராத், உ.பி, ம.பி, ஹரியானா, இ.பி, கர்நாடகா ஆகியவையும், காங்கிரஸ் ஆட்சியில் உள்ள ராஜஸ்தான், பஞ்சாப், சிவசேனை மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆட்சியில் உள்ள மகராஷ்ட்ரா, பிஜு ஜனதா தளம் ஆட்சியில் உள்ள ஒடிசா, மற்றும் தெலுங்கானா மாநிலம் ஆகிய 11 மாநிலங்கள் தற்போது துவக்க கட்டமாக சட்டங்களை நிறுத்தி வைப்பதாக அல்லது சிலவற்றை திருத்துவதாக நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.  தமிழக முதலாளிகள் பரவலாக தமிழக அரசும் இதர மாநிலங்களை போல், தொழிலாளர் சட்ட அமலாக்கத்தை நிறுத்தி வைக்க கோரிக்கைகள் வைத்து வருகின்றன.

இந்த திருத்தங்கள் மேலும் மூலதனக் குவிப்பை அதிகப்படுத்தும். குறிப்பாக இந்தியாவில் உள்ள பெரும் பான்மை மக்களின் மொத்த சொத்து மதிப்பும், ஒரு சதம் முதலாளிகளின் சொத்து மதிப்பிற்கு சமம், என்பது மேலும், ஒரு சத முதலாளிகளுக்கு சாதகமாக அமையும். ஒரு காலத்தில் நிலம் குவிந்திருந்ததைப் போல், இப்போது மூலதனம். உழைப்பு சுரண்டல் மிக மோசமாக அதிகரிக்கும். வேலையின்மை அதிகரிப்பால் வேலையில் இருப்போரின் வேலைக்கு உத்தரவாதம் இருக்காது. போட்டியும், வாழ்க்கை நெருக்கடியும் போராட்டங்களை கூட, வலுவற்றதாக மாற்றலாம். எனவே தான் இந்த சட்ட திருத்தங்கள் ஆபத்தானது. தொழிலுறவு சட்டம் மூலம், தீர்வு காண்பதும், எளிதல்ல. எல்லாவற்றிற்கும் மேல், உலகில் உள்ள மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்திய, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தீர்மானங்களான, ஒன்று கூடும் உரிமை (87), கூட்டு பேர உரிமை (98) ஆகிய தீர்மானங்களுக்கு இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. மேற்படி தீர்மானங்கள் 1947,1948 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டது. இந்த பின்னணியில் உழைப்பு சுரண்டல் மேலும் இந்திய தொழிலாளி வர்க்கத்தை பாதிக்கும்.

வேலை நேர அதிகரிப்பிற்கான முயற்சியே பிரதானம்:

சுமார் இருநூறாண்டு கால போராட்டத்தின் வெற்றியே, எட்டு மணிநேர வேலை, எட்டு மணி நேர ஓய்வு, எட்டு மணி நேரம் இதர பணிகள் என்பதாகும். நவீன இயந்திரங்கள், ஆர்ட்டிபிசியல் இண்டெலிஜெண்ட் (செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள்) ஆகியவை கண்டறியப்பட்ட பின்னணியில், வேலைநேரத்தை குறைப்பதும், புதிய வேலை வாய்ப்பை உருவாக்குவதுமே, பொருளாதாரம் சரியான திசையில் சுழலுவதற்கு உதவி செய்யும். ஆனால் முதலாளித்துவத்தின் லாபவெறி அல்லது மூலதனத்தின் தன்னைத்தானே விரிவாக்கிகொள்ளும் வெறி, வேலை நேரத்தை அதிகப்படுத்த கோருகிறது. இந்திய ஆட்சியாளர்கள் இதற்கான சட்டத்தை திருத்துகின்றனர்.

தொழிற்சாலைகள் பாதுகாப்பு மற்றும் சுகாதார சட்டத்தில், இருந்த வேலைநேர குறித்த பிரிவுகள் 51,52 ஆகியவை தற்போது திருத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே ஒருநாளின் வேலைநேர எட்டு மணிநேரமாக இருந்தது. ஒருவாரத்திற்கு மிகைப்பணி சேர்த்து 54 மணி நேரம் என வரையறை செய்யப்பட்டு இருந்தது. இப்போது, ஒருநாளின் வேலைநேரம் 12 எனவும், வாரத்திற்கு மிகைப்பணி சேர்த்து 72 மணி நேரம் எனவும் திருத்தப்பட்டுள்ளது. மிக கொடிய சட்ட திருத்தம் ஆகும். உலகின் வேறு எந்த ஒரு நாடும் இவ்வாறு பகிரங்க உரிமைப் பறிப்பு செயலில் ஈடுபட்டதாக தெரியவில்லை. சீனாவில் இருந்து தொழில் மூலதனம் வெளியேறுவதாகவும், அதை ஈர்க்க இப்படி ஒரு தேவை இருப்பதாகவும் கூறப்படுவது, தவறான ஒன்று. அங்கு சந்தை விரிவாக்கம் அதிகம். இந்தியா குறைவான தொழிலாளர் சட்டம் மற்றும் ஊதிய விகிதாச்சாரம் கொண்டுள்ள நாடு, இங்கு மக்கள் தொகை எண்ணிக்கை, உள்நாட்டு சந்தை விரிவாக்கம் ஆகியவற்றை கொண்டு, தாராளமாக பன்னாட்டு மூலதனத்தை ஈர்க்க முடியும். ஆனால் பாஜக ஆட்சியாளர்கள் நாம் போராடி பெற்ற உரிமையை அடமானம் வைத்து, பன்னாட்டு மூலதனத்திற்கு பட்டு கம்பளம் விரிக்கிறது.

வேலை நேரம் உயர்வு, தொழிலாளர்களின் சராசரி ஆயுள் காலம் தற்போது 66 என்பதை மேலும் குறைக்கும் நடவடிக்கையாக இருக்கும். அடுத்து வேலையின்மையை பலமடங்கு உயர்த்தும், ஏனென்றால் தற்போது இந்தியாவில் வேலையின்மையும், தனிநபர் வருமானமும் சந்தையில் நுகரும் தன்மையை குறைவாக வைத்துள்ளது. இந்நிலையில் வேலை நேரம் அதிகரிக்கப்படுவது, மேலும் வேலையின்மையை அதிகப்படுத்துவதுடன், சந்தையையும் கடுமையாக பாதிக்கும். எனவே ஜனநாயக செயல்பாட்டிற்கும், சந்தை இருத்தலுக்கும், மத்திய பாஜகவின் பெரு நிறுவன ஆதரவு சட்ட திருத்தங்கள் பாதகமாக இருக்கும் என்பதை வலுவாக எடுத்து செல்ல வேண்டும்.

இந்திய வரலாறு:

இந்தியா சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றாலும், போராட்டங்கள் மூலம்,  இந்திய தொழிலாளி வர்க்கம் தனக்கான, கூட்டு பேரத்தை உறுதி செய்து கொண்டது. இதை ஜனநாயக அரசியல் இயக்கங்களும் ஆதரித்தன. இந்தியாவின் பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் 1990 நவதாராளமய பொருளாதார கொள்கை அமலாக்கத்துடன், அவதாரம் எடுத்த காரணத்தால் இந்த வரலாற்றை அங்கீகரிப்பதில்லை. வேலைநேர எட்டு மணி நேரம் என்பதை, சிங்காரவேலர் சென்னையில் 1923 மே, 1 கொடியேற்றி கோரிக்கை வைத்த நாளில் இருந்து, தொழிலாளி வர்க்கம் விழிப்புணர்வு பெற்று இருக்கிறது. அந்த விழிப்புணர்வு தாராளமய பொருளாதார கொள்கை அமலாக்க காலத்தில், பின்னடைவை சந்தித்திருந்தாலும், தற்போது அடக்கு முறையும், ஒடுக்குமுறையும் அதிகரித்த நிலையில், வீரியம் பெறவே செய்துள்ளது.

இந்த வீரியத்திற்கு அமைப்புகளே, மேலும் முன்னேறிசெல்லும் வடிவம் கொடுக்க முடியும். இடதுசாரி சிந்தனையும், அரசியலும் நெருக்கடிகளை எதிர் கொள்வதற்கு சரியான கருத்தாயுதம், என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. கொரான தடுப்பு, நடவடிக்கைகளில் சீனா, வியட்நாம், வடகொரியா, கியூபா, கேரளா ஆகிய ஆட்சிகளே சரியாக செயல்பட்டுள்ளன. முதலாளித்துவம் அடுத்தவர் மீது குற்றம் சுமத்தி தப்பித்து கொள்ள முயற்சிக்கிறது. எனவே ஆள்விஒரின் தாக்குதல் அரசியலை எதிர்ப்பது என்பதுடன் மாற்றத்தை முனவைத்து வலுவான போராட்டத்தை நடத்துவதே தீர்வு...