சனி, 5 நவம்பர், 2016

உலக வங்கி அறிக்கையும்! இந்தியாவின் மார்தட்டும் அரசியலும்!!!
எஸ். கண்ணன்

உலகவங்கி இந்தியாவை, தொழில் புரிய ஏற்ற நாடுகள் வரிசையில் 130 வது இடத்தில் வைத்து வெறுப்பேற்றியுள்ளது. வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் உலகவங்கியின் செயலை விமர்சனம் செய்துள்ளார். இதேபோல் சில ஆண்டுகளுக்கு முன் டைம் இதழ் அதன் முகப்பு அட்டையில், அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் படத்தை அச்சிட்டு கையாளாகதவர் ( Impotent) என அச்சிட்டு இருந்தது. அன்றைய பிரதமரோ, காங்கிரஸ் கட்சியோ அந்த வாசகத்தையும், டைம் இதழையும் விமர்சிக்கவோ, அவதூறு வழக்குப் பதிவு செய்யவோ முயற்சிக்கவில்லை. மாறாக டைம் இதழ் மற்றும் அமெரிக்காவின் நோக்கமான, தொழில் துறை சீர்திருத்தங்களை விரைவுபடுத்தி, தனது தீவிரமான முதலாளித்துவ தாராளமயமாக்கல் கொள்கை கொண்டு மக்களைக் தாக்கியது.

இன்று மோடி தலைமையிலான மத்திய அரசை உலக வங்கி தனது பட்டியல் மூலம் அம்பலப்படுத்தி இருக்கிறது. அதாவது  தொழில் புரிய ஏற்ற நாடுகளில் இந்தியா மிகவும் பின் தங்கி இருப்பதாகக் கூறியுள்ளது. இது தற்போது மோடி அரசு செய்து வரும், வளர்ச்சி குறித்த பிரச்சாரத்திற்கு எதிரானது என்பதால், மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், உலகவங்கி மீது தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். "உலக வங்கி அறிக்கையை நான் விமர்சிக்கவில்லை. இந்தியாவின் தரவரிசையை உயர்த்துவதற்கு ஏற்ப புதிய வழிகளில் முனைப்புக் காட்டுவதும், அதை வேகப்படுத்துவதும் வேண்டும்", என நிர்மலா சீத்தாராமன் தனது அறிக்கையில் கூறியுள்ளார். இதை எதிர்பார்த்து தான் உலக வங்கி தொழில் துவங்குவதற்கான நாடுகளின் பட்டியலை வெளியிட்டதோ என்ற ஐயம் தானாகவே முடிவுக்கு வந்து விடுகிற அளவிற்கு மோடி அரசு செயல்பட்டு வருகிறது.

முரண்பாடுகளின் உருவமான உலக வங்கி அறிக்கை:

ஜூன் 2016 ல் உலக வங்கி, தொழில்புரிய ஏற்ற சூழல் கொண்டநாடுகள் 2017 எனும் பெயரில் , சில அடிப்படைகளை மையமாகக் கொண்டு ஒரு அறிக்கை தயாரித்துள்ளது. இது 56 பக்கங்களைக் கொண்டதாக இருக்கிறது. 1. மின்சாரம், 2. கடன் 3. சிறுபான்மை நிறுவனங்களுக்கான பாதுகாப்பு, 4. வரிகள், 5. எல்லை கடந்த வர்த்தகம் ஆகிய ஐந்து விதமான செயல்பாடுகளில் இருந்து, நாட்டின் தன்மையை ஆய்வு செய்ததாகவும், அதில் இருந்து பட்டியல் தயாரித்து வெளியிட்டதாகவும் உலக வங்கி சொல்கிறது.

190 நாடுகளைக் கொண்ட பட்டியலில் இந்தியா 130 வது இடத்தில் இருக்கிறது.  அனைத்து நாடுகளுமே கடந்த 2015 ம் ஆண்டு நிலையில் இருந்து முன்னேறியுள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இந்த எண்ணிக்கைப் பட்டியலில் 150க்கு மேலான எண்ணிக்கையில் இருந்து 144 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. நேபாள் 107 வது இடத்திலும், இலங்கை 110 வது இடத்திலுமிருப்பதாக சொல்லியிருப்பது நம்பும் படியாக இல்லை.

மிக முக்கியமாக இது ஒரு ஏமாற்று கணக்கு என்பதற்கு வேலையின்மையை உதாரணமாகக் கொள்ள வேண்டும். உலகவங்கி தொழில் துவங்க ஏற்ற நாடு என்பதைப் பட்டியலிடும்போது, அந்த நாட்டின் வாங்கும் சக்தியைக் கணக்கில் கொள்ள வேண்டும். வாங்கும் சக்தியின் உயர்வு வேலைவாய்ப்பைப் பொருத்தே அதிகரிக்க முடியும். உள்நாட்டுச்சந்தை,  நெருக்கடியில் சிக்கி இருக்கும் போது, தொழில் புரிய ஏற்ற நாடுகள் பட்டியலில் போர்ச்சுக்கல், ஸ்பெய்ன், இத்தாலி மற்றும் கிரிஸ் ஆகியவை முறையே 25, 32, 50 மற்றும் 61 வது இடத்தில் இருப்பதாக கூறியிருப்பது முழு பூசனிக்காயை சோற்றில் மறைக்கிற கதை.

ஸ்பெயின் நாட்டின் தேசீயக் கடன் அதன் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட பல மடங்கு அதிகம். அதேபோல், ஐரோப்பிய யூனியனின் உதவி என்ற பெயரில் கிரிஸ் நாட்டைப் பாடாய்ப் படுத்தும் நிலை உள்ளது. 2016 ம் ஆண்டில் கிரிஸ் நாட்டின் வேலையின்மை 24 சதம். இளைஞர்களிடையேயான வேலையின்மை 50 சதத்திற்கும் மேல், என மார்க்ஸிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அறிக்கை குறிப்பிடுகிறது.  எனவே இந்த உலகவங்கி அறிக்கை மீது நம்பகத்தன்மை ஏற்படவில்லை.

 வளர்ச்சி என்ற பெயரில் திணிக்கப்படும் நெருக்கடி:

உலகப் பொருளாதார செயல்பாடு மிக மெதுவாகவே நகர்ந்து வருகிறது என ஐ.எம்.எஃப் குறிப்பிடுகிறது. ஜனவரி 2016 ல் 2.9 சத உலகளாவிய வளர்ச்சி, ஜூன் 2016 ல் 2.4 ஆக குறைந்துள்ளது. என உலக வங்கி சொல்லியதை உலக வங்கிக்கே நினைவூட்ட வேண்டியுள்ளது. உலக வங்கி போன்ற அமைப்புகள், முதலாளித்துவம் சந்தித்து வரும் பொருளாதார நெருக்கடிக்கான காரணங்களைக் களைய நடவடிக்கை எடுக்காமல், அதன் தவறான செய்கைகளைப் பாதுகாக்கும் அறிக்கைகளையே அதிகமாக வெளியிடுகிறது. அதன் ஒரு பகுதி தான், இந்தியா குறித்த மதிப்பீடு ஆகும்.

அமெரிக்காவின் 81 சத மக்களின் வருவாய் உயராமல் தேங்கி நிற்கிறது.  இத்தாலி, பிரான்ஸ், பிரிட்டன் ஆகியவையும் இந்த முடக்கத்தில் இருந்து மீள முடியவில்லை. இந்நிலையில் உலக வங்கி பிந்தங்கியதாக குறிப்பிட்ட நாடுகளின் வருவாய் உயர்ந்துள்ளது. சீனா அதில் முதல் இடத்தில் உள்ளது. ஆனால் தொழில் புரிய உகந்த நாடுகள் பட்டியலில் சீனாவிற்கு உலக வங்கி 78 வது இடத்தை வழங்கியுள்ளது. இதைத் தான் மொத்தத்தில் ஏமாற்று வித்தை என சொல்ல வேண்டியுள்ளது. உலக எண்ணெய் வளத்தில் 5 வது இடத்தில் உள்ள வெனிசுவேலா 187 வது இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இது அப்பட்டமாக நாடுகளை திட்டமிட்டு தரம் தாழ்த்துகிற நோக்கம் கொண்டது. அதன் மூலம் அந்த நாட்டு அரசை நிபந்தனைகளுக்கு அடிபணியச் செய்யும் ஏற்பாடு ஆகும்.

மற்றும் ஒரு உதாரணத்தை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையில் இருந்து தெரிந்து கொள்ளலாம். அந்நிய நேரடி முதலீட்டை நாடுகள் பெற்ற விவரத்தை ஐ.நா வெளியிட்டுள்ளது. உலகமயமாக்கல் பொருளாதாரக் கொள்கை அமலாகத் துவங்கிய 25 ஆண்டுகளில் உள்ள வேறுபாடைக் புரிந்து கொள்வதற்காக இந்த அறிக்கையை ஐ.நா வெளியிட்டுள்ளது.

1990 ல் இந்தியா 236. 69 பில்லியன் டாலர் அந்நிய முதலீட்டையும், 2015 ல் 44208.019 பில்லியன் டாலர் முதலீட்டையும் ஈர்த்துள்ளது. சீனா 3487 பில்லியன் டாலரில் இருந்து, 2015 ல் 1,35,610 பில்லியன் டாலராக உயர்த்தியுள்ளது. ஆனால் இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுகல், ஸ்வீடன் ஆகிய நாடுகள் தேங்கியுள்ளதை ஐ.நா அறிக்கை சுட்டுகிறது. கிரிஸ் 1005 பில்லியன் டாலரில் இருந்து - 289 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. ஆனால் உலக வங்கி தொழில் புரிவதற்கு ஏற்ற நாடுகள் பட்டியலில், சீனாவை 78 வது இடத்திலும், இத்தாலியை 50 வது இடத்திலும் வைத்துள்ளது.

ஐ.நா வின் அறிக்கையை உலக வங்கி மறுத்துள்ளது சாதாரண நிகழ்வு அல்ல. உலக வங்கியின் அறிக்கை திட்டமிட்டு இந்தியாபோன்ற நாடுகளுக்குத் தரப்படுகின்ற நெருக்கடியாகவே புரிந்து கொள்ள முடியும். ஒட்டு மொத்தமாக அன்றைய மன்மோகன் சிங்கிற்கு தந்த நெருக்கடியை வேறு வகையில் இந்தியாவிற்கு உலக வங்கி தருகிறது. இதன் மூலம் பன்னாட்டு நிறுவனங்களின் நலன் காக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக முடியும். குறிப்பாக சலுகைகளை கூடுதலாகப் பெறமுடியும்.

மோடி அரசின் தகிடு தத்தம்:

இப்போது இந்தியா சீனாவை விட தொழிலாளர் உரிமைகளில், பன்னாட்டு நிறுவனங்களுக்காக சமரசம் செய்து கொண்டுள்ளது. கூடுதலாக சட்டங்களைத் திருத்த தொடர் முயற்சி மேற்கொள்கிறது. உள்நாட்டு சந்தை விரிவாக்கத்தில் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு முக்கியப் பங்கு ஆற்றுகிறது. இந்தியத் தொழிலாளர்களின் ஊதியம், நிறுவனங்களின் லாபத்துடன் ஒப்பிட்டால் குறைந்து வருகிறது.

இந்தியாவில் கூட்டுபேர உரிமை சட்டமாக்கப்படவில்லை. தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வை உறுதி செய்யும் கூட்டு பேர உரிமை சட்டம், சர்வ தேசத் தொழிலாளர் அமைப்பினால் 1948 ம் ஆண்டு நிறைவேற்றப் பட்டது. இந்தியா உள்ளிட்டு 24 நாடுகள் மட்டுமே ஒப்புதல் தரவில்லை. பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை போன்ற பின்தங்கிய  நாடுகள் கூட ஒப்புதல் தந்துள்ளன. ஆனால் இந்தியா அத்தகைய ஜனநாயக உரிமையை தொழிலாளர்களுக்காக சட்டமாக்க மறுத்து வருகிறது. மாறாக இருக்கிற சட்ட உரிமைகளைப் பறித்து வருகிறது, மோடி அரசு.

வரிவருவாய் இழப்பு உலகில் இந்தியாவிற்கே அதிகமாகும். காரணம் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு பெரு முதலாளிகளுக்கான சலுகை ஆண்டுக்கு சுமார் 5 லட்சம் கோடியாகும். இது ஆண்டு வரவு செலவில் சுமார் 20 சதம் ஆகும். இவ்வளவு பெரிய தொகையை விட்டுக் கொடுக்காது இருந்தால், இந்தியாவிற்கான உள்கட்டமைப்பு வளர்ச்சி மிக வேகமாக இருக்கும். அதே போல் இந்தியத் தொழிலாளர்களின் உழைப்பில் உள்ள நேர்மை மற்ற நாடுகளை விட அதிகம் இதை அனைத்து வளர்ந்த நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. உழைப்புக் திறன் கடந்த ஆண்டுகளை விட அதிகரித்துள்ளது. உலகில் அதிகமான தொழில் நுட்ப கல்வி பெற்ற இளைஞர்களைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளது.

தொழில் துவங்குவதற்கு இதை விட சிறந்த கட்டமைப்பு வேறு இருக்க முடியாது. ஆனால் உலக வங்கி மேலும் இந்திய சட்டங்களை சிதைப்பதற்காக இந்த அறிக்கையை வெளியிட்டதாகக் கருத முடியும். வழக்கமாக மார்தட்டி அரசியல் செய்யும் பாஜக இதிலும் மார்தட்டி, பின்னர் பணிந்து செல்லும் வார்த்தை விளையாட்டுக்களில் ஈடுபட்டு வருகிறது. கியூபா 1990 ல் இருந்து அந்நிய முதலீடு பெறவில்லை, என ஐ.நா அறிக்கை குறிப்பிடுகிறது. காரணம் அமெரிக்கா விதித்த பொருளாதார தடை. ஆனாலும் அந்த நாடு தனது பொருளாதார வளர்ச்சியைத் தக்க வைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. சீனா அதிகமான அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்துள்ளது. காரணம் அங்குள்ள மக்கள் தொகை உள்நாட்டு சந்தையின் விரிவாக்கம். அதற்காக தொழிலாளர், உரிமை பாதுகாக்கப் பட்டுள்ளது. இந்தியா பாடம் கற்காமல் மார்தட்டுவது பலனளிக்காது.


திங்கள், 7 மார்ச், 2016

ஆணுக்கு கடவுள் கொடுத்த பரிசுப் பொருளா பெண்?
எஸ். பிரேமலதா

“WOMAN means
W – WONDERFUL MOTHER
O – OUTSTANDING FRIEND
M – MARVELLOUS DAUGHTER
A – ADORABLE SISTER
N – NICEST GIFT TO MEN FROM GOD”

பல வாட்ஸ்-அப் குழுக்களிலும், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதள ஊடகங்களிலும் இதுபோன்ற பல பதிவுகளைப் பார்க்கிறோம். பெண்ணினத்தைப் பெருமைப்படுத்துவதாகப் பறைசாற்றிக் கொண்டு, பதியப்படும் இது போன்ற பதிவுகள், எதார்த்தத்தில் எரிச்சலூட்டவே செய்கின்றன. சற்றே ஆழமாகப் பார்த்தால், ‘இப்படித்தான் இருக்க வேணும் பொம்பள’ போன்ற பிற்போக்குத் தனமான திரைப்படப் பாடல்களின் நவீன வடிவம் தான் இது போன்ற பதிவுகள் என்பது புலப்படும்.

இப்பதிவுகளுக்கு எதிராக யாராவது மறுத்துப் பேசினால், “பெண்களைப் பற்றி பெருமையாகத் தானே பேசுகிறோம். எல்லாவற்றையும் எதிர்த்துப் பேசுவதே இந்தப் பெண்ணீயவாதிகளின் வேலையாகி விட்டது” என கங்கணம் கட்டிக் கொண்டு சச்சரவுக் களத்தில் இறங்கி விடுகிறது ஆணாதிக்கக் கும்பல். ’பெண்கள் ஆண்களுக்கு கடவுளால் அருளப்பட்ட பரிசுப் பொருள்’ என பெண்ணை ஒரு பொருளாக, அதுவும் ஆண்களுக்கு சேவகம் செய்வதற்கென்றே படைக்கப்பட்ட கருவியாக வரையறுக்கும் இந்த பழமைவாதப் பிம்பத்தை எள்ளளவும் ஏற்றுக் கொள்ள முடியாதெனும் மறுப்பை ஆணித்தரமாக பதிய வேண்டியுள்ளது.
’கடவுள் முதலில் படைத்தது ஆணைத்தான். ஆணின் விலா எலும்பிலிருந்து, ஆணின் தேவைகளை நிறைவேற்ற படைக்கப்பட்டவள் தான் பெண்’ என  அறிவியலுக்குப் புறம்பாக, மதவாதிகளின் பழங்கதைகளைப் பேசி பெண்களை தொடர்ந்து அடிமைப்படுத்துவது இயலாத காரியம். எனவே தான் பெண்கள் மீதான பிற்போக்குத் தனமான தாக்குதல்கள், முற்போக்கு முகமூடிகளைத் தரித்துக் கொண்டு இவ்வாறு வலம் வருகின்றன.

பெண்களைத் தாயாகவும், தமக்கையாகவும், மனைவியாகவும், மகளாகவும் எல்லாக் கட்டங்களிலும் ஆணைச் சார்ந்தவளாகவே முன்வைக்கும் ஆணாதிக்கக் கருத்தோட்டத்தின் அப்பட்டமான நீட்சியே இவை போன்ற பதிவுகள். இந்த சார்புநிலைச் சித்தரிப்புகளில் புளகாங்கிதம் அடைந்து போகும் மடமையைத் தாண்டி, வெகுதூரம் பயணித்து வந்து விட்டனர் தற்கால நவீனயுகப் பெண்கள். பல யுகங்களாக ’நோ எண்ட்ரீ’ போர்டு போட்டு பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட பல துறைகளில் கால் பதித்து, வாய்ப்பு கிடைத்தால் வானமும் தொட்டு விடும் தூரம்தான் என நிரூபித்து வருகின்றனர் இன்றைய பெண்கள். இதை வைத்து ஒட்டு மொத்த பெண்குலமும் முன்னேறி விட்டது என ஆனந்தக் கூத்தாட முடியாதெனினும், பெண்குலம் ஓரளவு முன்னேற்றப் பாதையில் தடம் பதித்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால், இந்த  முன்னேற்றத்தை அடைவதற்கு பெண்குலம் கடந்து வந்த கரடுமுரடான பாதை எத்தகைய கொடியது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டியதாகிறது. ஆதியில் தாய் வழிச் சமூகத்தில் ஓங்கியிருந்த பெண்களின் நிலை, பிறகு உடைமைச் சமுதாயத்தில் இரண்டாம் தர நிலைக்குத் தள்ளப்பட்டு, ஒட்டுமொத்த பெண்குலமும் அடிமைப்படுத்தப் பட்டது. பெண்வழிச் சமூகமாக இயங்கி வந்த நம் சமூகம், ஆணாதிக்கச் சமூகமாக மாற முக்கியக் காரணியாக அமைந்தது அறிவு எனும் ஆயுதத்தை பெண்ணிடமிருந்து முற்றிலுமாக அபகரித்துக் கொண்ட ஆணாதிக்க சூழ்ச்சி தான்.  சுய புத்தியே இல்லாத பேதைகளாக பெண்களை மாற்றியது தான்.

’காரிருளால் சூரியன் தான் மறைவதுண்டோ, கறைச் சேற்றால் தாமரை தான் வாசம் போமோ’ என பல்வேறு தடைகளைத் தாண்டி, தன் அறிவை வென்றெடுத்து மீண்டும் வசப்படுத்தியது பெண்குலம். ஆண்களுக்கென்றே பிரத்யேகமாக உருவாக்கப் பட்டது தான் கல்வி என்பது அனைவரும் அறிந்ததே. சர்வதேச அளவில் கூட, இன்று வரையிலும் வழக்கத்தில் இருக்கும் பேச்சிலர்ஸ் டிகிரி (இளங்கலை), மாஸ்டர்ஸ் டிகிரி (முதுகலை), பெல்லோஷிப் போன்றவை இதற்குச் சான்று. ஆண்களுக்கென்றே உருவாக்கப்பட்ட அறிவுத்துறையில் பெண்கள் நுழைவது அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. உதாரணத்துக்கு, 1907ல் சென்னை மருத்துவக் கல்லூரியில் முதல் பெண் மாணவியாக முத்துலட்சுமி ரெட்டி சேர்ந்தபோது, அந்தக் கல்லூரியில் அவரைத் தவிர வேறு பெண்களே பயிலவில்லை. அவருடன் படித்த சக ஆண் மாணவர்களும், அவர்களது குடும்பத்தினரும் தெரிவித்த கடும் எதிர்ப்புகளுக்கிடையேயும்,  பின்வாங்காது நின்ற முத்துலட்சுமி ரெட்டியின் மனவுறுதிதான் இறுதியில் வென்றது. பெண்ணினம் விடாது பற்றிக் கொண்ட இந்த மனவுறுதிதான், பெண்களின் இன்றைய முன்னேற்றத்திற்கு அடித்தளமாய் அமைந்தது என்றால் அது மிகையல்ல.

மறுபுறம், பெண்ணினத்தின் மீது தொடுக்கப்பட்ட சமூக ரீதியான தாக்குதல்களை திரும்பிப் பார்க்கும் போது குலை நடுங்குகிறது. இச்சமூகம் நிகழ்த்திப் பார்த்த பெண் சிசுக் கொலைகள் மனிதத்திற்குப் புறம்பானவை. அரேபிய நாடுகளில், பெண் குழந்தைகளைப் பிறந்தவுடன் கொதிக்கும் பாலைவனத்தில் புதைத்துக் கொன்று விடும் பழக்கம் இருந்ததை  படித்த போது ஏற்பட்ட அதிர்வு விவரிக்க இயலாதது. பெண்ணுடல் மீதான தனது ஆளுமையை நிலைநிறுத்த இரும்பாலான, கற்புப் பட்டிகளை (chastity belt) பெண்ணின் இடுப்பில் மாட்டி, பிறப்புறுப்பில் நுழைத்துப் பூட்டி வைத்தது, பெண்களை தமக்கு மட்டுமே சொந்தமாக்க பெண்ணின் பிறப்புறுப்பை சிதைப்பது என காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை இந்த ஆணாதிக்கச் சமூகம் பெண்களின் உடல் மீது நிகழ்த்திப் பார்த்தது.

பெண்கள் இன்று தடைகளைத் தாண்டி முன்னேறிக் கொண்டே இருந்தாலும், பெண்ணுடல் மீது திட்டமிட்டு தொடுக்கப்படும் வன்முறை பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. வன்முறையற்ற வாழ்க்கை எனும் அடிப்படை உரிமை இன்று வரையிலும் குடும்பத்திற்கு உள்ளேயும், பொது வெளியிலும் பெண்களுக்கு மறுக்கப்பட்டே வருகிறது. இந்த வன்முறை நியதிகளைச் செயல்படுத்துகிற கருவிகளாக குடும்ப அமைப்புகள், சாதி-மதங்கள், கல்விக்கூடங்கள்,  கலாச்சார விழுமியங்கள், அரசியல், ஊடகம் என போட்டி போட்டுக் கொண்டு பல காரணிகள் துணை போகின்றன.
மதத்தின் பெயரால், நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணின் பிறப்புறுப்பு வழியே கையை நுழைத்து, சிசுவை வெளியில் எடுத்து மிருகத்தனமாகக் கொல்வதும்,
சாதியின் பெயரால், தன் சொந்தப் பேத்தியின் தலையை ஆட்டை அறுப்பது போல் அறுத்து வீசுவதும்,
காதலின் பெயரால், முகத்தில் ஆசிட் ஊற்றி துடிதுடிக்கக் கொல்வதும்,
பணியிடங்களில் பாலியல் வன்முறைக்கு உட்படுத்திக் கொன்று, புதர்களில் வீசிவிட்டுச் செல்வதும்,
கல்வி கற்க வந்த அந்நிய தேசத்துப் பெண்ணை நிர்வாணமாக்கி, நையப்புடைத்து தெருவில் துரத்தியடிப்பதும்
என பெண்கள் மீதான வன்முறையின் வடிவங்கள் கட்டுக்கடங்காது நீள்கின்றன. பெண்கள் மீதான இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக, முன்னெப்போதையும் விட வலுவாக எதிர்ப்புக் குரலை உயர்த்த வேண்டிய சூழலில் காலம் நம்மை நிறுத்தியுள்ளது. அதிலும், படித்துப் பட்டம் பெற்று, வேலைக்குச் செல்லும் பெண்கள், பொதுவெளியில் இயங்கும் பெண்கள் இந்த எதிர்ப்புப் போராட்டங்களில் அதிகமாக பங்கேற்பதன் மூலம்  பெண்களின் மீதான வன்முறைக்கு முற்றுப் புள்ளி வைக்க முன்வர வேண்டும். வருகிற மார்ச் 8 – சர்வதேச பெண்கள் தினம் இதற்கான சூளுரையை ஏற்கும் தினமாக அமையட்டும்.

அப்போது தான், ஆண்-பெண் சமத்துவம் எனும் பாதையில் இச்சமூகம் பயணிக்க இயலும். இல்லையெனில், “கடவுளால் படைக்கப்பட ஆகச் சிறந்த பரிசுப் பொருள்” எனும் அடையாளம் பெண்களுக்கு நிரந்தரமானதாகி விடும்.

நன்றி. வண்ணக்கதிர்