செவ்வாய், 23 ஜூன், 2020

தமிழக அரசு தாமதிக்காமல் செய்ய வேண்டியவை..

தமிழக அரசு தாமதிக்காமல் செய்ய வேண்டியவை..

இந்திய பிரதமர் மோடி, கொரானா குறித்து மக்கள் ஊரடங்கு அறிவித்து 90 நாள்கள் நிறைவு பெற்றுள்ளது. பொதுமுடக்கம் 1 துவங்கி பல கட்ட அறிவிப்பு வெளிவந்த போதும், இந்தியாவில், கொரானா பாதிப்பின் தாக்கம், குறைவதற்கு பதிலாக, அதிகரித்து வருகிறது. மோடி குறிப்பிட்ட வளர்ச்சியின் அடையாளம், குஜராத், பொருளாதார தலைநகரம் மும்பை, தலைநகர் டில்லி, இந்தியாவின் டெட்ராய்ட் சென்னை ஆகியவை, கொரான பாதிப்பில் மூச்சு திணறிக்கொண்டு இருக்கின்றன. உயிரிழப்பும் 15 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. உலகில் இந்தியபாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 4 வது இடத்தை தொட்டிருக்கிறது. 

வளர்ந்த முதலாளித்துவ நாடுகளும், வளரும் நாடுகளின் முக்கிய பெரு நகரங்களும் இவ்வாறு மூச்சுத் திணறுவது, இரண்டு அடிப்படை விசயங்களை சுட்டுகிறது. ஒன்று, முதலாளித்துவ வளர்ச்சியில், பொது சுகாதாரப் பராமரிப்பில்  உள்ள ஓட்டைகளை அம்பலப்படுத்துவதாக உள்ளது. இரண்டு நகரத்தில் உள்ள வசதியானவர்கள் மற்றும் வசதியற்ற அன்றாடம் உழைத்து வாழ்பவர்கள் ஆகியோர் மீது அரசு வெளிப்படுத்தும் பாரபட்சமான அணுகுமுறை. இந்தியாவின் பெரும்பான்மை மக்கள் சிகிச்சை பெறும் அரசு மருத்துவமனைகள் மற்றொன்று தனியார் மருத்துவமனைகள். அதேபோல் தனிமைப்படுத்தப்படும் வளாகங்கள், ஒன்று கல்லூரி வளாகங்கள் மற்றொன்று சற்று வசதியான மையங்கள். இடைவெளி மிக அதிகமாக இருப்பதை, அரசிடம் சுட்டிக்காட்டுவதும், ஓட்டைகளை அடைக்கும் நிர்பந்தத்தை தருவதும் அவசியமாகிறது.

கேட்பாரற்ற நிலையும் மார்க்சிஸ்ட் கட்சியின் தலையீடும்:


சென்னை நகரில்  உள்ள சில அரசு மருத்துவமனையின் வார்டுகள் பிரச்சனைகள் இருந்த போதும், அரைகுறையாக  பராமரிக்கப்படுவதாக தெரிகிறது. ஆனால் புறநகர் பகுதிகளாக இருக்கும், செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ஆகியவை செயலிழந்து வருகிறது. அன்மையில் திருவள்ளூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள கொரானா வார்டில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் அதிகாலை 4 மணிக்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட செய்தி, பெரும் அதிர்ச்சி தரதக்கதாக இருந்தது. 

மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட தலைமை இது குறித்து, விசாரித்து, மாவட்ட ஆட்சியரிடம் இதர நோயாளிகளுக்கு தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை வலியுறுத்தியது. அவரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். ஆனால் விசாரித்து அறிந்த உண்மை நிலை, மேலும் மேலும் அதிர்ச்சியை அதிகரிப்பதாக உள்ளது. மேற்குறிப்பிட்ட நோயாளிகளின் வார்டுக்கு உணவு முறையாக தரப்படுவதில்லை. கபசுர குடிநீர் வைத்து விட்டு செல்லப்படுவதாக சொல்லப்படுகிறது. மருத்துவர்கள் முறையாக வருகை தந்து, பரிசோதிப்பதில் குறைபாடுகள் உள்ளது. இதனால் நோயாளிகள், இருக்கும் நோயை மேலும் அதிகப்படுத்தி கொள்ளும், மன உலைச்சலுக்கு ஆளாவதாகத் தெரிகிறது. 

செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். வளாகத்தின் மூன்றில் ஒரு பகுதி மறைப்புகள் கொண்டு மறைக்கப்பட்டு இருக்கிறது. விசாரித்த போது கொரானா நோயாளிகள் சிகிச்சை பெறும் பகுதி என குறிப்பிட்டனர். மாவட்டம் காஞ்சிபுரம், செங்கல்பட்டு என பிரிந்தாலும், காஞ்சிபுரத்தின் பெரும்பான்மையான நோயாளிகளும் இங்கு சிகிச்சை பெற அனுப்பப் படுகின்றனர். இங்கும் உணவும், கபசுர குடிநீர், ஆகியவை வழங்கப்படுதலும், சுகாதாரப் பராமரிப்பும் மிக மிக தாமதமாக நடந்து வருகிறது. ஒரு நோயாளி, காலை உணவு வழங்கவில்லை என்பதனால், தானே வெளியில் வந்து, அதாவது சுமார் அரை கி.மீ தொலைவு நடந்து, ஓட்டலில் உணவு பார்சல் பெற்று சென்றிருக்கிறார். சிலர், ஓட்டல் ஊழியர்கள் மூலம் வார்டு வாசலுக்கு தருவித்து, உணவு உட்கொள்வதாக கூறினர். 

அதேபோல் மருத்துவமனையில் நோயாளியின் உடல் நிலை மற்றும் அறிகுறிகளை பொருத்து, அவர்கள் 5 முதல் 7 நாள்களில் தனிமைப் படுத்திக் கொள்ளும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இவை பெரும்பாலும் கல்லூரியாக உள்ளது. தாம்பரம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் தொழிலாளி ஒருவர், “தான் சர்க்கரை, மற்றும் பிரசர் பாதிப்புகளும் கொண்டவர். என்னை போல் வேறு சிலரும் உள்ளனர். இங்கு நூறு பேர் அளவில் இருக்கிறோம். இங்கு ஆம்புலன்ஸ் இல்லை, பரவாயில்லை, 108 க்கு தொடர்பு கொண்டு உயிர் போவதற்குள் வரவைத்து விடலாம். ஆனால் மருத்துவர் வருகை முறையாக இல்லை. மருந்துகள் வழங்கப்படுவதும் முறையாக இல்லை, என ஆதங்கப்பட்டார். இவரின் முறையீட்டை, மாவட்ட ஆட்சியர் மற்றும் கூடுதல் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆகிய இருவருக்கும் முறையிட்டு, சிலவற்றை ஒழுங்கு படுத்த முடிந்தது. ஆனால் இதுபோல் தகவல் பெற முடியாத நோயாளிகளும், பகுதிகளும் சென்னையை சுற்றி அதிகம் உள்ளதை, மாநில அரசும், அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை. 

அரசும், முன்கள பணியாளர்களும்: 

மார்ச் 22 அன்று மக்கள் ஊரடங்கை அறிவித்த பிரதமர் மோடி, மாலை 5 மணிக்கு மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், காவலர்கள் மற்றும் பல ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதத்தில், மாலை 5 மணிக்கு கைதட்ட கேட்டு கொண்டார். தமிழக முதல்வரும் கூட்டமாக தனது வீட்டு வாயிலில் நின்று கைதட்டினார். இதைத் தொடர்ந்து இது போன்ற முன்கள பணியாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதத்தில், நடவடிக்கைகள் குறித்து அறிவித்தார். மரணம் நிகழ்ந்தால், 50 லட்சம் ரூபாய், நிவாரணம் உள்ளிட்டு பல அறிவிப்புகள் அதில் இருந்தது. கைதட்டியது போல் அறிவிப்பும் பலன் தரவில்லை.

அன்மையில் வருவாய் துறை ஊழியர்கள் தங்கள் துறையை சார்ந்த ஊழியர் ஒருவர் மரணத்தை தழுவிய போதும் அரசு குறிப்பிட்ட 50 லட்சம் ரூபாய் வழங்கப்படவில்லை, என அடையாளப் போராட்டத்தை நடத்தினர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தூய்மை பணியாளர்கள் பலர் மரணம் அடைந்துள்ளனர். இவர்கள் சமூகத்தின் இதர பகுதி மக்கள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக போராடுபவர்கள். பொது விநியோக கடை ஊழியர்கள், மின் ஊழியர்கள், காவலர்,மருத்துவர்கள் இப்படி பலர் இறந்த போதும், இந்த அரசு நிவாரண அறிவிப்புகளை அமலாக்குவதில் தாமதம் செய்கிறது. இது தன்னை இழந்து மக்களின் உயிர் காக்கும் கவசமாக உள்ள முன்கள பணியாளர்களை, அவநம்பிக்கை கொள்ள செய்யும், என்பதை அரசு உணர்ந்து செயல்பட வேண்டும். 

மருத்துவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் கவச உடைகள் (Personal protective equipment) வாங்குவதிலும், விநியோகிப்பதிலும் போதாமை உள்ளது. செவிலியர், சுகாதாரப் பணியாளர் ஆகியோருக்கும் இதே நிலைதான். சென்னை மாநகராட்சியின், சுகாதாரப் பணியாளர்கள் சிலர் இறந்த நிலையில், பலர் நோய் தொற்று காரணமாக தனிமைப் படுத்த பட்ட பின்னரும், எடுக்கப்பட்ட நடவடிக்கை பூஜ்ஜியம் என்பதே உண்மை. சி.ஐ.டி.யு வின் செங்கொடி சங்ம் கையுறை, சோப்பு, மற்றும் இதர தளவாட பொருள்கள் கேட்டு மாநகராட்சி நிர்வாகத்தை முற்றுகை யிட்டனர். ஆனாலும், ஆணையர் பிரகாஷ், பிரகாஷமாக உள்ளாரே தவிர, பிரச்சனைகள் தீரவில்லை. 

இதேபோல் செங்கல்பட்டு நகராட்சியில், உள்ள தூய்மை பணியாளர்கள் மூன்று ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர். இரண்டு முறை மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட்டு உள்ளனர். அவ்வப்போது நடவடிக்கை எடுப்பதுடன் சரி. முழுமையாக எந்த நடவடிக்கையும் இல்லை. செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமயில், குறிப்பாக கொரானா வார்டில் பணிபுரிய சுகாதார பணியாளர்கள் இல்லை என்ற நிலையில், நகராட்சி ஆணையர், ஆர்ப்பாட்டம் நடத்தினர், மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனர், என்ற காரணத்திற்காக சி.ஐ.டி.யு ஊழியர்களை, கொரானா வார்டில் பணிபுரிய கட்டாயப்படுத்தி ழிவாங்கியுள்ளார். வேலை செய்ய தயார் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை, உபகரணங்களை, தரவேண்டும் என தொடர்ந்து போராடி வருகின்றனர். தற்போது நகராட்சி ஆணையருக்கும் சில ஊழியர்களுக்கும் கொரானா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்கள பணியாளர்களைப் பாதுகாப்பதில் அதிகாரிகளும் அரசும் தீவிர கண்காணிப்பை உறுதி செய்ய வேண்டும்.

தடுப்பு நடவடிக்கைகளும், சமூக இயக்கங்களும்:

கொரானா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு உள்ளாட்சி நிர்வாகங்களை எந்த அளவிற்கு பயன்படுத்தியுள்ளது, என்பதும் கேள்விக்குறியே. நோய் தொற்று அதிகம் உள்ள, திருவள்ளூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சிகள் உள்ளன. தேர்ந்தெடுக்க பட்ட நிர்வாகம் உள்ளது. இவர்களை பயன்படுத்துவதில் மாவட்ட ஆட்சியர் சிறப்பு நடவடிக்கை எதுவும் எடுத்ததாக தெரியவில்லை. மாவட்ட ஊராட்சி நிர்வாகம், சென்னை புறநகர் பகுதிகளில் பயன்படுத்த பட்டு இருக்க வேண்டும். பொறுப்பான அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னை மாநகராட்சியில் அவ்வப்போது தலையீடு செய்தும், உரிய வகையில், கண்காணிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் மாவட்ட ஆட்சியர்களிடம் மார்க்சிஸ்ட் கட்சி, மற்றும் சி.ஐ.டி.யு, சார்பில், தடுப்பு  நடவடிக்கைகளில் மக்கள் அமைப்புகளை பயன்படுத்துவது குறித்து ஆலோசனைகளை நேரடியாக வழங்கியுள்ளது. 

மேற்குறிப்பிட்ட மூன்று மாவட்டங்களிலும் தொழிற்சாலைகள் நிரம்பியுள்ளன. நோய் தொற்று கண்டறியப்பட்ட நிலை, நோக்கியா சொல்யூசன்ஸ், ஹூண்டாய், காம்ஸ்டார், பி.எம்.டபுள்யு, யமஹா, பெர்பட்டி  நிர்வாகங்களிடம் தொழிற்சங்கம் தொடர்ந்து நிர்பந்தம் அளித்து சில கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன.  மேலும் பல ஆலைகளில் இது வெளிவராமல் ரகசியம் காக்கப்படுகிறது. நோய் தடுப்பு சட்டம் 2005, படியோ, அல்லது பேரிடர் மேலாண்மை நடவடிக்கை படியோ, மாவட்ட நிர்வாகங்கள் போதுமான நடவடிக்கைகளை, எடுக்கவில்லை. மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் சி.ஐ.டி.யு அமைப்புகள் மாவட்ட ஆட்சியரிடம், மாவட்ட நிர்வாகம் ஆலை நிர்வாகங்கள், தொழிற்சங்கம் தொழிற்சங்கம் இல்லாத ஆலைகளில் தொழிலாளர் பிரதிநிதி ஆகியோரைக் கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும். தொழிலாளர் மற்றும் ஆலை நிர்வாகம் கொண்ட, நோய் தடுப்பிற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்யும் கண்காணிப்பு குழுக்களை அமைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், செய்யவில்லை. ஆனால் எந்த நேரமும் அதிகாரிகளும் ஓடிக் கொண்டே உள்ளனர். இதனால் பயனில்லை, என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

செங்கல்பட்டு நகரில் திருமணி பகுதியில் 600 கோடி செலவில் கட்டமைக்கப்பட்ட மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான, ஹிந்துஸ்தான் பயோடெக் லிட்., என்ற நோய் தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனம் உள்ளது. இதை செயல்படுத்த வேண்டும். 100 க்கும் மேற்பட்ட நுண்ணுயிர் அறிவியல் அறிஞர்கள் மற்றும் ஊழியர்களின் செயல்பாட்டை பயன்படுத்துவது, கொரானா நோய் தொற்று பரிசோதனை செய்வது, சானிட்டைசர் தயாரிப்பது ஆகியவற்றிற்கு, இந்த ரெடிமேட்கட்டமைப்பு பயன்படும், என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், டி.கே. ரங்கராஜன் பிரதமரையும், சுகாதார துறை அமைச்சரையும் சந்தித்துள்ளார். மாநில அரசையும் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. கிண்டி கிங்ஸ் இண்ஸ்டிடியூட் தற்போது பயன்பட துவங்கியுள்ளது. இந்நிலையில் HBL நிறுவனத்தையும் பயன்படுத்தினால், சென்னை புறநகர் பகுதியில், ஏற்பட்டுள்ள நெருககடிகளை சரி செய்ய முடியும். 

பிரதமர் மற்றும் பாஜக அரசு போல், தமிழக அரசும் பேசிக் கொண்டே இல்லாமல், இது போன்ற ஆலோசனைகளை செவி கொடுப்பதும் செயல்படுவதும் நல்லது..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக