புதன், 10 ஆகஸ்ட், 2022

வேலையும் சுயமரியாதை மீதான தாக்குதலும்!!!

 

வேலையும் சுயமரியாதை மீதான தாக்குதலும்!!!

எஸ். கண்ணன்

 

நம்மூரில் எங்கு சென்றாலும் டிப்ஸ் வைக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. நாம் டிப்ஸ் வைக்க வில்லை எனில், நம்மை கீழானவராக கருதுவரோ, என தாழ்வு மனப்பான்மைக்கு தள்ளப்படும் வாடிக்கையாளர்கள் அதிகரித்து வருகின்றனர். அதே நேரம் வேலையில் இருப்போர், முதலாளியிடம் பெற வேண்டிய ஊதியத்தின் பகுதியை வாடிக்கையாளரிடம் பெறுகிறோம். முதலாளி வாடிக்கையாளருக்கு செய்யும் சேவையை விட தொழிலாளி, தனது முதலாளியின் வாடிக்கையாளருக்கு செய்யும் சேவை அதிகம் என்ற உண்மையில் இருந்து இந்த நியாயப் படுத்தும் வேலை அரங்கேறுகிறது.

டிப்ஸ் குறித்த வரலாறு:

ஐரோப்பா கண்டத்தில் இருந்து அமெரிக்காவிற்கு சென்ற ஒரு வழக்கமாக இருந்துள்ளது. ஐரோப்பா கண்டத்தில் 17வது நூற்றாண்டு காலத்தில் டிப்ஸ் வழங்கும் பழக்கம் உருவாகியுள்ளது. ஒரு சேவைக்கு உரிய பணத்துடன் கூடுதலாக வழங்கும் தொகையை டிப்ஸ் என்கிறோம். இது முதலில் ஊக்கப் படுத்துவதாக இருந்தாலும், படிப்படியாக சம்மந்தப் பட்ட ஊழியரின் சுயமரியாதையை பாதித்த காரணத்தால், அதற்கு எதிரான கருத்துகள் உருவாகியுள்ளன. கோரிக்கைகள் வலுத்து, சில நாடுகளில் தடை செய்யப் படும் நிலை உருவாகியுள்ளது.

நிலப்பிரபுத்துவ பண்பாட்டு நடவடிக்கையாக கருதப்பட்ட இந்த வழக்கம், பின் முதலாளித்துவ சமூக வளர்ச்சியில் தடைகளை சந்தித்து, மீண்டும் தவறில்லை, என்ற கண்ணோட்டத்தை நோக்கி மக்கள் தள்ளப் பட்டுள்ளதாக வரலாற்று நிகழ்வுகளில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது. குறிப்பாக இந்த நூற்றாண்டில் அமெரிக்காவின் 11 மாகாணங்களில் டிப்ஸ் தடை செய்யப் பட்டு, பின் மீண்டும் அமலுக்கு வந்துள்ளது.

இன்றைய நிலையில் அது எத்தனை சதவீதம் டிப்ஸ் வைப்பீர்கள் என்று வாடிக்கையாளருக்கு டிப்ஸ் வழங்கும் கட்டாயத்தை திணிக்கும் அளவிற்கு அமெரிக்காவின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. 1994ல் எனது நண்பர் அமெரிக்காவின் போஸ்டன் நகரில் வேலை கிடைத்து சென்றபோது, தெரிவித்த அனுபவம் சுவராசியமானது. அமெரிக்காவின் அன்றைய பிரபலமான ஒரு நிறுவனத்தில் வேலைக்கான நேர்முக தேர்வு தொலைபேசி மூலமும், மெயில் மூலமாகவும் நடத்தப் பட்டுள்ளது. மிகுந்த ஆர்வத்துடன் எதிர் கொண்ட நண்பருக்கு கேட்கப் பட்ட கேள்விகள் அதிர்ச்சியாக இருந்துள்ளது. நீங்கள் ஓட்டலில் உணவு சாப்பிட்டால், சர்வருக்கு எவ்வளவு டிப்ஸ் அளிப்பீர்கள் என்பது மிக முக்கியமான கேள்வியாக இடம் பெற்று உள்ளது. அவரும் 28 ஆண்டுகளுக்கு முந்தைய தேர்வின் போது, 10 சதம் என வாயடைத்து போகிற அளவிற்கு பதிலளித்துள்ளார்.

அதாவது அரசு அங்கீகரித்த ஒரு வேலைவாய்ப்பின் நேர்முகத் தேர்வில், அந்த நாட்டு சேவையாளரின்  ஊதியம் இவ்வாறு தான் உறுதி செய்யப் பட்டுள்ளது, என்ற விவரம் மிகவும் கண்ணியமற்ற வேலைவாய்ப்பு என்பதை புரிந்து கொள்ள முடியும்.

டிப்ஸ் ஏன் வழங்க வேண்டும்?

கடந்த கால நிலப்பிரபுத்துவ சமூகத்தில், வாடிக்கையாளர் ஒருவர், செல்வ சீமானாகவும் சீமாட்டியாகவோ இருக்கும் பட்சத்தில், தனக்கு சேவை செய்யும் ஒருவரின் பணியைப் பாராட்ட விரும்பும் போது டிப்ஸ் வழங்குவது வழக்கம். நம் சமூகம் எப்போதும், எல்லா வகையிலும் மேல் நிலையில் உள்ள மனிதர்களின் செயல்களையும், பண்பாட்டையும் பின்பற்றும் மனநிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். இதை சமூகவியல் அறிஞர்கள், மேல்நிலை ஆக்கம் (Sanskiritisation) என கூறுகின்றனர். இது டிப்ஸ் வழங்குவதிலும் பின்பற்றப் படுவதை காண முடிகிறது.

இரண்டாவது முதலாளித்துவ வளர்ச்சி போக்கில், சிறிய அளவில் தலை தூக்கிய சுயமரியாதை உணர்வு, வேலை இல்லா திண்டாட்டம் மற்றும் முதலாளித்துவ சமூக பிரச்சனைகள் காரணமாக, அந்த சுயமரியாதை உணர்வை இழக்க செய்கின்றன. குறிப்பாக முதலாளித்துவ பிரதிநிதிகள் மிகப் பெரிய அளவில் சுயமரியாதை அற்ற, லாபத்தை மட்டும் மனதில் கொண்டு செயல்படுவதைப் போல், தொழிலாளர்களும் பிழைப்பிற்கான வருவாயை நோக்கி தள்ளப்படும் அவலத்தை காண முடிகிறது.

அளிப்பவர் தர்ம பிரபுவாகவும், பெறுபவர் பரிதாபத்திற்கு உரியவராகவும் இருந்த நிலையை முதலாளித்துவம், டிப்ஸ் வழங்குவதை சேவைக் கட்டணமாக மாற்றுகிறது. இது உரிமை சார்ந்த பிரச்சனையாக ஒரு சில இடங்களில் மாற்றப் படுவது வேதனை அளிக்கும் வளர்ச்சி என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.  

சேவை – அனுபவிக்கும் முதலாளியும், பரிதவிக்கும் தொழிலாளியும்:

நம்நாட்டில், உணவகம், வாகன நிறுத்தம், டோர் டெலிவரி செய்யும் சமைய எரிவாயு விநியோகிப்பவர், குடியிருப்பு காவலர்கள், பெட்ரோல் பங்க் ல் காற்று பிடிப்பவர் உள்ளிட்ட வேலைகள் என பட்டியல் செல்வதை காண முடியும். இங்கெல்லாம் டிப்ஸ் என்பதை எதிபார்த்து, வேலையில் ஈடுபடும் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். வேலைக்கு அமர்த்தும் போது சம்மந்த பட்ட முதலாளி, சம்பளம் குறித்து பேசுவதில் இந்த டிப்ஸையும் சேர்த்தே தீர்மானிக்கிறார்.

தனது லாபத்தில் இருந்து தன்னிடம் வேலை செய்யும் தொழிலாளியின் ஊதியத்தை தீர்மானிப்பதற்கு பதிலாக, வாடிக்கையாளருக்கு செய்யும் சேவையில் இருந்து ஒரு பகுதி ஊதியத்தை தீர்மானிக்கும் போக்கின் காரணமாக, தொழிலாளி மீது அவருடைய சேவையில் ஒரு பணிவையும், கீழ்படிதலையும், சேவைத் தரத்தையும், முதலாளித்துவ நிர்வாக முறை கட்டமைக்கிறது. இதை ஊக்கத் தொகை என தொழிலாளி மீது வருமானம் சார்ந்த உணர்வாக மாற்றி, முதலாளித்துவம் தனது லாப குவிப்பில் வெற்றி காண்கிறது.

இது உற்பத்தி துறையில் இருந்து சேவைத்துறை காப்பி அடித்து கொண்ட ஊக்கத் தொகை கொள்கை ஆகும். உற்பத்தி துறையில் நவீன முதலாளித்துவம், தொழிலாளர்களுக்கு வழங்கும் ஊதியத்தை உயர்த்தினாலும், தனது லாபத்தை உத்திரவாதம் செய்து கொள்வதை காண முடியும். ஊதிய உயர்வின் ஒரு கணிசமான பகுதியை உற்பத்திக்கு ஏற்ற உயர்வாக தீர்மானிக்கிறது. தோற்றத்தில் உயர்வு இருந்தாலும், வேலை கசக்கி பிழிவதாக அமைந்து உற்பத்தியின் எண்ணிக்கைக்கு பின்னால் தொழிலாளி ஓடிக் கொண்டிருக்கும் காட்சிகளை உற்பத்தி துறையில் முதலாளித்துவம் கட்டமைத்து சாதுரியமாக செயல்பட்டு வருகிறது.

இதை சேவைத் துறையில், பணியாற்றும் நல்ல வருவாய் அல்லாத தொழிலாளர்களிடம் எத்தனை பேருக்கு சேவை செய்தோம் என்பதை கணக்கிட்டு கொண்டே வேலை செய்வதில் இருந்து காண முடியும். குறைந்த பட்சம் இருவதில் இருந்து முப்பது நபர்களுக்கு சேவை செய்தால் மட்டுமே அன்றைய கூலியுடன் தனக்கு தேவையாக மேலும் ஒரு 200 ரூ முதல் 300 ரூபாயை சம்மந்தப்பட்ட தொழிலாளி பெறும் நிலையில் உள்ளார். அதை பெறுவதற்காக, ஒவ்வொரு சேவைதுறை சார்ந்த அடிமட்ட ஊழியரும், தனது பணியின் மூலம், முதலாளியின் வாடிக்கையாளரை திருப்தி செய்ய வேண்டிய கட்டாயத்தை கொண்டிருக்கிறார்.   

இதன் காரணமாகவே பார்க்கிங் பகுதியில் உள்ள செக்யூரிட்டி வேலை செய்வோர், வாயில் விசிலை வைத்து ஒழுங்கு செய்வதில் அக்கறை கொண்ட ஊழியராக முதலாளித்துவம் சிந்தனையைக் கட்டமைக்கிறது. உணவகத்தில் வாடிக்கையாளருக்கு சேவை செய்வதில் பணிவையும், நேரத்தையும் பின்பற்றுகிறார். இதற்காக தண்ணீர் விநியோகிப்பவர், டேபிளை சுத்தம் செய்பவர், உள்ளே சமையலறையில் பணிபுரியும் சமையலர் என எல்லோரையும் இணைத்து வேலை வாங்கும் பொறுப்பையும் திறம்பட நிர்வகிக்கிறார். இவ்வாறு தனக்கான லாபத்திற்கான பொறுப்பை மிக சாதுர்யமாக, முதலாளி தொழிலாளியின் சேவை மீது கட்டமைத்து,  தனது லாபத்தை உறுதி செய்கிறது.

வாடிக்கையாளரின் திருப்தி எங்கள் நோக்கம்:

இப்படி ஒரு விளம்பரம் இப்போது அதிகரித்து வருகிறது. துணிக்கடையில் இருந்து வெளியில் வருவோர் கையில் ஒரு படிவம் அளித்து, எப்படி பணியாளர் வேலை செய்தார்? என்ற கேள்வியை வாடிக்கையாளர்கள் பலரும் எதிர் கொள்கிறோம். இதேபோல் உணவகம், செல்போனில் உள்ள ஆப் ஒன்றை பயன்படுத்தி டிக்கட் முன்பதிவு, ஓலா, உபேர் போன்ற வாடகை வாகனம், ஸ்விகி, சொமேட்டா போன்றவைகளில், வரும் ஸ்டார் ரேங்க் உள்பட எல்லாம் வாடிக்கையாளர் திருப்தி அடைந்தாரா? என்பது, இது அந்த நிறுவனத்தின் மீது வாடிக்கையாளரின் ஈர்ப்பை தக்கவைத்து கொள்வதற்கான கண்காணிப்பு நடவடிக்கை.

இவை எல்லாம் செய்யாமல் எப்படி அந்தநிறுவனம் முன்னேற முடியும் என கேட்கலாம். அல்லது வாடிக்கையாளரின் திருப்தியும் முக்கியமானது தானே என வாதிடலாம் மறுக்கவில்லை. இந்த வாடிக்கையாளரின் திருப்தியை, வாடிக்கையாளர் மீதே திணிக்கும் சாமர்த்தியத்தை தான் நாம் கேள்விக்கு உள்படுத்துகிறோம். மேற்படி, ஆப் அல்லது வாசலில் நின்று கேள்வி கேட்டு, வாடிக்கையாளரின் திருப்தியை கண்காணிக்கும் முதலாளி, வாடிக்கையாளர் கூடுதலாக தான் உட்கொண்ட நுகர்வில் ஒரு குறிப்பிட்ட சதத்தை டிப்ஸாக தருவதுடன் இணைத்தது தான், முதலாளித்துவ நிர்வாகத்தின் வெற்றி.

மொத்தத்தில் முதலாளிக்கு லாபம், பணியாளரின் சேவைக்கு வெகுமதி, வாடிக்கையாளருக்கு திருப்தி அதேநேரம் பணியாளர் தன் சுயமரியாதையை குறைத்து கொள்வது என்பது முதலாளிக்கான மூலதனத்தின் ஒரு பகுதியாக மாறுகிறது.

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக