செவ்வாய், 5 அக்டோபர், 2010

ஓய்வு பெறும் வயது உயர்வும் - தேன் தடவிய விஷமும்!



தமிழகத்தின் முன்னாள் முதல்வர் சி.என். அண்ணாதுரை அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இளைஞர்களுக்கு விளையாட்டுப் போட்டிகளும், மாணவர்களுக்கு இலக்கியப் போட்டிகளும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் வேலையற்ற இளைஞர்களின் மன உணர்வை வெளிப்படுத்திய அவரின் பேச்சு நினைவுபடுத்தப் படுவதில்லை.

சாலையோரத்திலே வேலையற்றதுகள், வேலையற்றவர்களின் மூளையில் விபரீத எண்ணங்கள் என்ற வரிகள் 1967-இல் காங்கிரஸ் கட்சியை வீழ்த்துவதற்காக மட்டும் பயன்படுத்தப்பட்டதாகக் கொள்ள முடியாது. வேலையின்மையைக் களையாத மத்திய, மாநில காங்கிரஸ் அரசுகளின் மீதான விமர்சனமாகத் தான், அன்றைய தமிழக மக்களும், இளைஞர்களும் கருதியிருப்பார்கள்.

அதே விமர்சனத்தை கடுமையாக முன்வைக்க வேண்டிய சமூகச் சூழலை, அதே காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசும், அதில் அங்கம் வகிக்கும் திமுக-வின் மாநில அரசும் உருவாக்கியிருக்கிறது. அகில இந்திய அளவில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போர் எண்ணிக்கை 5.52 கோடி ஆகும். மாநிலத்தில் 50 லட்சம் ஆவர். இவர்களின் எதிர்பார்ப்பை அழிக்கும் நோக்கத்தில், மத்திய அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெறுவோரின் வயது வரம்பை 60இல் இருந்து 62 ஆக உயர்த்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் சுமார் 4லட்சம் ஓய்வு பெறும் பணியாளர்களுக்கான, வருங்கால வைப்பு நிதி, கிராஜூடி ஆகியவற்றை, பட்டுவாடா செய்வதை ஒத்தி வைக்கவும், அதன் மூலம் சிக்கன சீரமைப்பை உருவாக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த அணுகுமுறை புதிதல்ல 1962இல் இந்திய - சீன போரைக் கணக்கில் காட்டி, புதிய வேலை நியமனத்தை தடுத்து, ஒய்வு பெற வேண்டிய ஊழியருக்கு வயது வரம்பை 55இல் இருந்து 58 ஆக, அன்றைய ஜவஹர்லால் நேரு தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் உயர்த்தியது. இரண்டாவது முறையாக 1998இல் வாஜ்பாய் பிரதமராக இருந்த பா.ஜ.க தலைமையிலான, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 58இல் இருந்து 60 ஆக வயது வரம்பை உயர்த்தியது. வாஜ்பாய் அரசாங்கத்தின் அணுகுமுறை காரணமாக சுமார் 1.40 லட்சம் ஊழியர்கள் ஓய்வு பெறுவதில் இருந்து கால நீட்டிப்புக்கான வாய்ப்பினைப் பெற்றார்கள், இதன் மூலம் சுமார் 5300 கோடி ரூபாய் நிதியை உருவாக்க முடிந்ததாகக் கூறுகிறார்கள்.

தற்போது மூன்றாவது முறையாக ஓய்வு பெறும் வயதை 60இல் இருந்து 62 ஆக உயர்த்த காங்கிரஸ் ,திமுக கூட்டணி அரசு ஆலோசித்து வருகிறது. இதற்கு துணையாக உலகின் பல நாடுகளின் கொள்கையை அழைத்துக் கொள்கிறது. ஜப்பான், தென்கொரியா, ஆகிய ஆசிய நாடுகளும், பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் இந்திய அரசு சுட்டிக்காட்டும் நாடுகளின் பட்டியலாகும். இப்படி சுட்டிக்காட்டப்படும் பிற நாடுகளின் கொள்கைகள் அனைத்தும், ஏகாதிபத்திய, உலகமயமாக்கல் சார்ந்தது, என்பதை அனைவரும் அறிவர். இந்த சீரழிந்த சிந்தனையை, இந்தியாவும் பின்பற்றத் துவங்கியதில் இருந்து, கல்வியை விற்பனைப் பொருளாக்கி விட்டார்கள். வேலை வாய்ப்பை மறைமுகமாக அழித்து வருகிறார்கள்.

1998 முதல் 2004 வரை ஆட்சியில் இருந்த பாரதிய ஜனதா கட்சி, 2002 பட்ஜெட்டின் போது, பகிரங்கமாக, மத்திய அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை, ஆண்டுக்கு 2 சதவீதம் குறைப்போம் என அறிவித்தது. இது கண்கூடாக நடைபெற்றும் வருகிறது. ஓய்வு பெற்றாலோ, பணியின் போது மரணம் சம்பவித்தாலோ விருப்ப ஓய்வில் வெளியேறினாலோ அந்த இடங்கள் பெரும்பாலும் பூர்த்தி ஆகாமல், பின்னர் அழித்து விடும் போக்கு மத்திய அரசில் இருக்கிறது. இன்றைய ஐமுகூ அரசு, பா.ஜ.க வின் கொள்கை மீது எந்த கருத்தும் சொல்லாமல், அப்படியே பின்பற்றுவதன் வெளிப்பாடே வேலை வாய்ப்பு உருவாக்கம் குறித்த கொள்கையில் பிரதிபலிக்கிறது.

உலகின் எல்லா நாடுகளிலும் காணக் கிடைக்கிற பண்பாட்டு கூறு ஒன்று உண்டு. பெற்ற தாய் தனது குடும்பம் வறுமை அல்லது சிரமத்தில் தவிக்கிற போது தான் பட்டினி கிடந்தாலும் குழந்தைக்கு உணவு புகட்ட முயற்சிப்பாள். தன் தலைமுறையை எப்படியாவது காப்பதற்கு முயலுவாள் ஆனால், ஆட்சியாளர்கள் நாட்டில் பொருளாதார சிரமம் ஏற்படுகிற போதெல்லாம், முதலில் கை வைப்பது அடுத்த தலைமுறையினர் மீதுதான், அடுத்த தலைமுறையை அழிக்கும் கொடிய கொள்கைகளை, பிற நாடுகள் பின்பற்றுகிறது, என்ற பெயரில் இந்தியாவிலும் பின்பற்றத் துடிப்பது, இளைஞர்களை அழிக்கும் கொள்கை.

இந்த கேடுகெட்ட இளைஞர் விரோத கொள்கைகளைக் கொண்ட காங்கிரஸ் கட்சி அதில் பொதுச் செயலாளர் பொறுப்பு வகிக்கும் ராகுல் காந்தி, கொள்கை உருவாக்கத்தில் பங்களிப்பு செய்யாமல் இருக்கப் போவதில்லை. வெட்கமற்ற முறையில் வாரிசு அரசியலைப் பின்பற்றி வரும் முதலாளித்துவ கட்சியின் தலைமை, ராகுல் காந்தியின் பேச்சிற்கு மதிப்பளிக்காமல் இருக்க முடியாது. ஆனாலும், இளைஞர்கள் கையில் எதிர்காலம் என்ற வார்த்தைகளை ராகுல் காந்தியால் முன் வைக்க முடிகிறது. இளைஞர்களே வாருங்கள் காங்கிரஸில் சேருங்கள் என அழைக்க முடிகிறது. மேற்படி வார்த்தைகள் தேன் தடவிய விஷம் என்பதைத் தவிர வேறில்லை.

வரலாற்றை நாம் மறக்க முடியாது. நேரு, இந்தியாவின் பிரதமரான போது இளைஞர்கள் கையில் எதிர்காலம் என வருணித்தார். அதே, போல் இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது, வறுமையே வெளியேறு (கரிபீ ஹட்டாவோ) என முழங்கினார். ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது, வேலையின்மையே வெளியேறு (பேக்காரி ஹட்டாவோ) என நீலிக் கண்ணீர் வடித்தார். இப்போது, மத்திய மந்திரி பதவி வேண்டாம் என்ற தியாகி ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பொறுப்பினை கொண்டிருக்கும் சூழலில், 60 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும், இளைஞர்கள் கையில் எதிர்காலம் என அருள் வார்த்தை கூறி வலம் வருகிறார். மேற்படித் தலைவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சார்ந்ததுடன், ஒரே வார்த்தையை கிளிப்பிள்ளை போல் திரும்ப திரும்பத் பேசி வருகின்றனர். ஆனால் எதுவும் நடைபெறவில்லை. மாறாக நேற்றில் இருந்த எண்ணிக்கையை விட, இன்று அதிகரித்துள்ளது.

இந்த குற்றச்சாட்டினை நாம் முன் வைக்கக் காரணம், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அங்கம் வகித்துள்ள அமைச்சர்களின் அதிரடித் தகவல்கள் தான். மத்திய ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி, ரயில்வேயில் 2 லட்சம் பணியிடங்கள் காலியாக இருக்கும் தகவலைக் குறிப்பிடடார். வங்கித்துறையில், லட்சத்திற்கும் அதிகமான பணியிடங்கள் நிரப்பப் படவில்லை. என்பதை மத்திய அரசு ஓப்புக் கொண்டிருக்கிறது. தற்போது ஓய்வு பெறும் வயது 60 இல் இருந்து 62 ஆக உயர்த்தப்படுவதன் மூலம் 4 லட்சம் பணியிடங்களுக்கான, வாய்ப்பு பறிக்கப்பட இருப்பது, மத்திய அரசின் நடவடிக்கையில் வெளிப்பட்டுள்ளது. கடந்த 2005, நவம்பரில் ப. சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது, மறைமுக வேலை நியமன தடைச்சட்டத்தை அறிமுகம் செய்தார். மாநில அரசுகளுக்கு அவர் அனுப்பிய சுற்றறிக்கை, மாநில அரசு வேலை நியமனங்களை நிறுத்தி வைக்க வேண்டும். என்பதாகும். காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசின் செயல்கள் ஒவ்வொரு முறையும் வேலைவாய்ப்பிற்கு எதிராக இருப்பதை உணர முடியும். இந்திய மக்கள் தொகையில் 54 கோடிப்பேர் 15 முதல் 25 வயதுக்குள்ளாக இளைஞர்கள், வேலைக்காக, வாழ்க்கைக்காக காத்திருப்பவர்கள் என்பதை, தொடர்ந்து மத்திய அரசு நிராகரித்து வருகிறது.

மாநில ஆட்சிப் பொறுப்பில் உள்ள திமுகவும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை, வெட்டிச் சுருக்குகிறது. என்பது ஊரறிந்த தகவல். கடந்த 2007இல் உள்ளாட்சித் துறை செயலாளர் அசோக் வர்தன் ஷெட்டி கையொப்பமிட்ட அரசு ஆணை எண் 177 கிராம ஊராட்சிகளில் அமைக்கப்படும் நூலகங்களில், ஓய்வு பெற்ற வர்களை, நூலகர்களாக நியமிக்க வழிகோலச் செய்தது, அதன் பின் 2008,இல் உயர்கல்வித்துறை செயலாளர் வெளியிட்ட அரசானை எண் 274/08 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 1700 க்கும் அதிகமான பணியிட நியமனங்களை ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் மூலம் மேற்கொண்டது. 2009 மே மாதம் வெளியிட்ட வேலை வாய்ப்புத் துறை அரசானை எண் 53/2009 யில், தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அலுவலகத்தில் இருந்த காலிப் பணியிடங்களை, ஓய்வு பெற்றவர்களை கொண்டு நியமித்தது. இந்த செயல்கள் மூலம் இளைஞர்களின் வேலை வாய்ப்பு பறிக்கப் பட்டு இருப்பது உண்மை.

மேற்படி மத்திய, மாநில அரசுகளின் செயல்கள் இளைஞர்களின் எதிர்காலத்தை ஒரு புறம் சூறையாடுகிறது. மறுபுறம் ஓய்வு பெறுபவர்களுக்கு போய்ச் சேர வேண்டிய பென்சன், வருங்கால வைப்பு நிதி, கிராஜூடி ஆகியவற்றை அரசு செலவிடுகிறது. அல்லது பங்கு சந்தையில் முதலீடு செய்து, பங்கு சந்தை வர்த்தகத்தை வளர்க்காலம் என நப்பாசை கொள்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக இன்றைய அரசு ஊழியர்கள் நடத்தும் போராட்டத்தின் ஒரு கோரிக்கை ஓய்வூதியத்தை, புதிய ஓய்வூதிய முறை எனும் பெயரில் மறுக்காதே என்பதாகும். ஓய்வூதிய முறையை மறுக்கும் வகையில், ஓய்வு பெறும் வயதை உயர்த்திக் கொண்டே செல்வது, மறைமுகமாக நடைபெறுகிறது. இதன் மூலம் சமூக பாதுகாபப்பு எனும் தேவையை, அரசுத்துறையில் பணியாற்றுபவர்களுக்கும், இல்லாமல் செய்ய மத்திய மாநில அரசுகள் முயற்சிக்கின்றன.

this article was written in sep. 2009

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக