சனி, 14 மே, 2011

இன்னும் முடியாத முடியாட்சி !!

திருமணம் பெரும்பான்மையோரின் வாழ்வில் வந்து செல்லும் மிகவும் இனிமையான நிகழ்வு. சாதாரண குடிமகனுக்கு அது ஒரு நிகழ்வு மட்டுமே. பிரமுகர் குடும்பத்திற்கோ தனது செல்வாக்கை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு. எனவே, பிரமாண்ட ஏற்பாடுகள் கூடுதலாகவும், பிரமுகர் மட்டுமே கலந்து கொள்ள முடியும், என்ற நிலையும் இருக்கும். அதுவும் உலகின் சொற்ப எண்ணிக்கையிலான பிரமுகர்களுக்கு தான் அழைப்பு என்றால் கேட்கவும் வேண்டுமா? அப்படி ஒரு திருமணமாக வில்லியம் மற்றும் கேத் மிடில்டன் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இளவரசர் வில்லியமின் திருமணத்தைக் கண்டுகளிக்க பல லட்சம் மக்கள் குவிந்தனர் என்பது உலகம் முழுவதும் பிரதான செய்தி. குளிரையும் பொருட்படுத்தாது, வெஸ்ட் மினிஸ்டர் அபே தேவாலயம் முன் மக்கள் காத்துக் கிடந்தனர். இவை உலகின் பெரும் ஊடகங்கள் என அழைக்கப் படும் பி.பி.சி உள்ளிட்ட நிறுவனங்களால் ஒளி மற்றும் ஒலி பரப்பப் பட்டவை. பி.பி.சி எடுத்த வீடியோ காட்சிகள் மூன்று மணி நேரத்திற்கு தொகுக்கப் பட்டு, சந்தை வர்த்தகத்தில், இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் சுடச்சுட ஓடிக்கொண்டிருக்கிறதாம். 15 முதல் 25 பவுண்டுகள் ( 1305 ரூ முதல் 2175 ரூ வரை ) விலை தீர்மாணிக்கப் பட்டு இருப்பதையும், இதன் மூலம் கிடக்கும் தொகை, வில்லியம் மற்றும் அவர் சகோதரர் ஹாரி பெயரில் அமைந்துள்ள ஃபவுண்டேசனுக்கு போய்ச் சேரும் என்றும் ஊடகங்கள் செய்திகளாகச் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? நீண்ட இடைவெளிக்குப் பின் மகாராணியின் குடும்பத்தில் நடைபெறும் திருமணம் என்பதனாலா? மன்னர் வீட்டு வைபவம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற காரணமா? போன்ற கேள்விகள் முன்னெழுந்துள்ளன. இக் கேள்விகள் நியாயமானவையே. ஏனென்றால், வில்லியம் அல்லது கேத் மிடில்டன் ஆகியோர், இதுவரை தனிப்பட்ட முறையில் எந்த ஒரு சாதனையையும் நிகழ்த்தியதாக அறிய முடியவில்லை. எனவே அவர்களின் திருமணம் உலக செய்தியானது, அவர்களின் குடும்ப பின்னனி காரணமாகத் தான் என்ற முடிவுக்கு எளிதில் வரமுடியும். பொதுவாக ஒரு குடும்பத்தின் செல்வாக்கு இரண்டு வகைகளில் இருக்கலாம். ஒன்று பெற்றோர் அல்லது அவர்களுக்கும் முன்னோடிகள், அந்த தேசத்திற்காக ஏதாவது பெரும் தியாகத்தை செய்திருக்க வேண்டும். இரண்டு, அவர் தம் பெற்றோரின் அதிகாரம் கோலோச்சுவதாக இருக்க வேண்டும். இங்கு நாம் விவாதிக்கும் வில்லியமின் திருமணத்திற்கான படாடோபங்கள், இரண்டாவது வகைப்பட்டது. முன்னோர்களின் பெருமை, இன்றைய தலைமுறைக்கு முக்கியத்துவம் அளிக்குமானால், முன்னோர்கள் செய்திட்ட தீயவைகளைச் சுட்டிக்காட்டி, அக்குடும்பத்தின் இன்றைய நிகழ்வுகளை விமர்சிப்பதற்கும் இடமிருக்கிறது, என்ற தர்க்கத்தின் அடிப்படையிலேயே, மேற்படித் திருமணத்தின் மீது சில கேள்விகளை முன் வைக்கிறோம்.

முதலில், பெரும் தியாகத்தை ராணி எலிசபெத் குடும்பம் செய்திருக்க வாய்ப்பு இருந்திருக்காது. அவர்களின் ஆட்சி நிலைத்து இருக்க வேண்டும் என்பதற்காக படை வீரர்களும், மக்களும் தியாகம் செய்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதை, நிச்சயம் புரிந்து கொள்ள முடியும். ஏனென்றால் கி.பி 400ம் ஆண்டு முதல் 1900ன் துவக்கம் வரை 1500 ஆண்டுகள், எலிசபெத் அம்மையாரின் குடும்பத்தினர் தான், இங்கிலாந்து தேசத்தின் ஆட்சிப் பொறுப்பை முழுமையாக கவணித்து வந்துள்ளனர். மன்னராட்சி நிலை நிறுத்தப் பட, மக்கள் தான் அர்ப்பணிப்பு செய்திருக்கிறார்களே ஒழிய, மன்னர்களின் வாரிசுகளோ உடமைகளோ, எந்த இடத்திலும் பறிபோனதாக அறிய முடியவில்லை. இரண்டாவதாக விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டியது, இன்றைக்கும், பக்கிங்காம் அரண்மனையின் அதிகாரம் கோலோச்சுவதை பல்வேறு இடங்களில், இங்கிலாந்து அரசு நடவடிக்கைகளின் மூலமாக, நேரடியாகப் பார்க்க முடியும். உதாரணத்திற்கு, பக்கிங்காம் அரண்மனைக்கு என தனிக் கொடி இன்றும் பறந்து கொண்டிருக்கிறது. இந்த கொடிக்கு கீழ் தான் பிரிட்டிஷ் குடியாட்சியின் ஜாக் கொடி பறந்து கொண்டிருக்கிறது. இதன் பொருள், அரண்மனைக்கு கீழ் தான், குடியாட்சி இருந்து கொண்டிருக்கிறது, என்ற அதிகார வெளிப்பாட்டின் வடிவம் என்பதாகும்.

மூன்றாவதாக, காமன் வெல்த் நாடுகள் என்ற அமைப்பை உருவாக்கி, அதற்கு தலைவராக, பிரிட்டிஷ் மன்னர்களின் வாரிசு இருந்து வருகிறார். 53 நாடுகள் இந்த அமைப்பில் உறுப்பினராக இருக்கின்றது. காமன் வெல்த் அமைப்பிற்குத் தனிப்பட்ட அதிகாரம் இல்லை என்றாலும், இந்த அமைப்பின் செயல்பாடு, தங்கள் நாடு மீது, பக்கிங்காம் அரண்மனையை சார்ந்த வாரிசுகளின் ஒடுக்கு முறையை, சுரண்டலை, வளங்களை வாரிச் சென்றதை, இன்றைய தலைமுறையிடம் மறைக்கச் செய்வதற்கானதாக உள்ளது. இந்தியாவில் இருந்து, தனது வர்த்தக நோக்கத்திற்காக, பருத்தி, அவுரி உள்ளிட்ட பணப் பயிர்களை விளைவித்து, அதை இங்கிலாந்து கொண்டு சென்றனர். உதாரணத்திற்கு, 1859 ல், 50 ஆயிரம் பேல்கள் இந்தியாவில் இருந்து இங்கிலாந்திற்கு அனுப்பப் பட்டது. கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகத்தில் இருந்த இந்தியாவை, விக்டோரியா மகாராணி தனது நேரடி நேரடி நிர்வாகத்திற்கு மாற்றிக் கொண்ட காலம் அது. அதிலிருந்து 5 ஆண்டுகளில், அதாவது 1864ல் 14 லட்சம் பேல்களாக உயர்ந்தது. விளைவு, உணவு உற்பத்தியில் சரிவும், பணப் பயிர் விளைச்சல் அதிகரிக்கவும் செய்தது. அதன் மூலம் இந்தியாவில் மிகக் கொடிய உணவுப் பஞ்சம் உருவானதை மறந்து விட முடியுமா?

இக்காலத்தில் பல கோடி இந்தியர்கள் மாண்டு போனதை, எழுத்தாளர்கள் நிறையவே பதிவு செய்துள்ளனர். முதலில் மக்கள் பிச்சை எடுத்தார்கள், யார் பிச்சை போடுவது? வண்டியை விற்றார்கள், மாட்டை விற்றார்கள், நிலத்தையும் விற்றார்கள், தங்கள் பெண்குழந்தைகளை விற்றார்கள், தொடர்ந்து குழந்தைகளையும், மனைவிகளையும் வாங்குவதற்கு யாரும் இல்லை. மரங்களுக்கு மேலேயும், அடியிலும் வாழ்ந்தார்கள். நாய்களையும், பூனைகளையும், எலிகளையும் சாப்பிட்டார்கள். பலர் எங்கோ மறைந்து போனார்கள். எஞ்சியவர்கள், பசியாலும், நோயாலும், லட்சக் கணக்கில் மாண்டு போனார்கள். இப்படி பங்கிம் சந்திர சட்டோபாத்தியாவின் ஆனந்த மடம் நாவல் சித்தரிக்கிறது. இந்தியாவில் மட்டும் இது போன்ற அபகரிப்புகள் நிகழந்துள்ளது என்றால், 53 நாடுகளை, அடிமைப் படுத்தி வைத்திருந்த பிரிட்டிஷ் ரானியின் குடும்ப செல்வ வள உயர்வுக்கு, வேறென்ன வேண்டும்.

17 ம் நூற்றாண்டில், வெனிஸ் நகரவாசி, மனெளச்சி என்பவர், இந்தியாவின் செல்வ வளத்தை, பல நாடுகளுடன் ஒப்பிட்டு சொல்லியிருக்கிறார். பஞ்சாடை, சில்க், சக்கரை, அவுரி, ஆகியவை எகிப்தை விட உயர்ந்தது என்பதை இன்றைய இந்தியா புத்தகத்தில், ரஜினி பாமிதத் பதிவு செய்திருக்கிறார். இதிலிருந்து இரண்டு விவரங்கள் தெளிவாகிறது. ஒன்று, இந்தியாவில் கிடைத்த விலைமதிப்பு மிக்க, செல்வங்களை மட்டுமல்ல, விளைபொருள்களையும் எடுத்துச் சென்றுள்ளனர். இரண்டு, இந்தியாவில் மட்டுமல்ல, எகிப்து போன்ற நாடுகளிலும் இத்தகைய வளங்களை எடுத்துச் சென்றுள்ளனர், என்பதாகும். இத்தகைய வரலாற்றுப் பின்னனியில் இருந்தே, வில்லியம் மற்றும் கேத் மிடில்டன் திருமண நிகழ்வு மற்றும் ஒளிபரப்புகளை கவணிக்க வேண்டியுள்ளது.

நான்காவதாக, ஐரோப்பா கண்டத்தில் தொழிற் புரட்சி நடைபெற்று, முதலாளித்துவ ஜனநாயகம் தலையெடுத்த நாடுகளில் பிரதானமானது, பிரிட்டிஷ் அரசு, என கற்பிக்கப் பட்டு இருக்கிறோம். சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னரே நிலப்பிரபுத்துவ முறையை கைவிட்டு, முதலாளித்துவ முறையை நோக்கி சென்ற ஒரு நாட்டில், திறனில்லாத விவசாயிகளை விடவும், தொழில் திறன் கொண்ட தொழிலாளர்கள் நீண்ட காலத்திற்கு முன்பே உருவாக்கப் பட்டுள்ளனர். இதற்கான கல்வி போதனைகளும் துவங்கப் பட்டுள்ளன. அத்தகைய ஒரு சமூகத்தில், அரச குடும்ப திருமணத்தை காண பல லட்சம் மக்கள், அழைக்கப் படாமலேயே காத்திருந்தனர், என்ற செய்தி அதிர்ச்சி அளிக்காமல் எப்படி இருக்க முடியும். அத் திருமணத்தை வழிபாட்டுக்கு உரிய நிகழ்வுகளைப் போல் முன்னிறுத்துவதை எப்படி ஏற்றுக் கொள்வது. தனி நபர் புகழ் பாடுவதில், இந்தியத் துணைக் கண்டத்தினரை விடவும், இங்கிலாந்து முன்னேறி நிற்கிறது, என்றுதானே பொருள் கொள்ள முடியும். இத்தகைய முன் உதாரணங்களின் தாக்கமாக, இந்தியாவில், வாரிசு அரசியல் தலையெடுப்பதும், அதற்கு நியாயம் கற்பிப்பதும், நிகழ்கிறதோ, என்ற எண்ணம் உருவாவதைத் தவிர்க்க முடியவில்லை.

இந்தியாவின் நாடாளுமன்ற அமைப்பு முறை, நீதிமன்ற செயல் பாடுகள் போன்றவை இன்றைக்கும் பிரிட்டிஷ் நாட்டினைப் பின்பற்றியே வடிவமைக்கப் பட்டுள்ளது. ஆனால் சில மாற்றங்களை இந்தியாவில் செய்ய முடிந்துள்ளது. இந்தியா விடுதலை பெறுகிற போது, 500க்கும் அதிகமான மன்னர்கள் இருந்தனர், எனக் கேள்விப்படுகிறோம். சுதந்திர இந்தியா, மிகத் துணிச்சலுடன், அவர்களின் அதிகாரத்தைப் பறித்து குடியாட்சியை, நிலை நாட்டியது. மறுத்தவர்கள் மண்டியிடும் சூழலையும் அன்றைய ஆட்சியாளர்கள் உருவாக்கினார்கள். 64 ஆண்டுகளுக்கு முன் இருந்த இந்தியாவில் வசித்த மக்கள், இன்று போல் ஜனநாயகக் கருத்துகளின் மீதான எண்ணம் கொண்டோராக இல்லை. இருந்தபோதும் மன்னர்களின் ஆட்சிமுறைக்கு, முடிவு காண அரசு செயல் பட்ட போது, மக்கள் மன்னர்களுக்குப் பின் அணிவகுக்கவில்லை என்பது, முக்க்கியச் செய்தி. பின்னர் மன்னர் மான்யமும் ஒழிக்கப் பட்டது. அன்றைய நிலையில் இது போன்ற நடவடிக்கைகள், ஜனநாயகத்தின் மீதான ஈர்ப்பை மேலும் உறுதியாக்குவதற்குப் பயன்பட்டது.

இந்தியாவில் மேற்கொள்ள முடிந்த நடவடிக்கைகளை, ஏன் இங்கிலாந்தில் மேற்கொள்ள முடியவில்லை. ராணி எலிசபெத்தின் குடும்பம் இந்திய குறு நில மன்னர்களை விடவும், அதிகாரம் கொண்ட பேரரச குடும்பமாக இருந்தது என்பதனால், பிரிட்டிஷ் மக்களாட்சியால், எந்த மாற்றத்தையும் கொண்டு வரமுடியவில்லை. நமது நாட்டை விட முன்னேறிய சமூகம் என சொல்லப் படுகிற, பிரிட்டனில் ஜனநாயக மாண்புகளும் உயர்ந்து இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது தவறில்லை. அது போன்ற நிலை இல்லாமல், ஒருவரின் திருமணத்தை, வினோதமான ஒன்றாக மாற்றும் வலிமையோடு ராணியின் அதிகாரம் இருப்பதை, ஜனநாயக சக்திகள் விவாதிக்காமல் எப்படி இருக்க முடியும். இந்த நிலையில் இங்கிலாந்து மக்கள் இருக்கிறார்கள், என்றால், இங்கிலாந்து மக்களின் விழிப்புணர்வு பின் தங்கி இருக்கிறது, என்று புரிந்து கொள்வதைத் தவிர வழியில்லை.

வில்லியம் தம்பதிகளின் திருமணம், தொலைக்காட்சி சீரியல் போன்ற ஒன்று, என பொது மக்கள் கருதும் வேளையில், இப்படி ஒரு சீரிய விவாதம் தேவையா?, என்று சிலர் கேட்கலாம். மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு, நினைவு படுத்திக் கொண்டே இருப்பது, வரலாற்று ஆசிரியரின் கடமை, என்ற வரலாற்று ஆய்வாளர் எரிக் ஹாப்ஸ்வாமின் வரிகளை நினைவில் நிறுத்தி வாழ்த்துவோம் வில்லியம் தம்பதியினரை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக