திங்கள், 21 நவம்பர், 2011

வால்ஸ்ட்ரீட்



             வால்ஸ்ட்ரீட் சொல்லும் பாடம்

அமெரிக்காவின் அதிபராக ஒபாமா தேர்ந்தெடுக்கப் பட்டபோது, கருப்பினத்தின் பிரதிநிதி என்ற அடையாளம், அவரின் ஆற்றல் ஆகிய இரண்டும், அமெரிக்காவிற்குப் புதிய பரிமானத்தைக்  கொடுக்கும் என்று முதலாளித்துவம் ஆரூடம் கூறியது. மூன்று ஆண்டுகள் முடிந்து விட்டது. ஆனால் 2008 அக்டோபரில் துவங்கிய பொருளாதாரப் பெரு மந்தத்தில் இருந்து விடுபட முடியாமல், மேலும் நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறது. நெருக்கடிகளோ அல்லது அதற்கான தீர்வோ அடையாளங்களையும், தனிநபரையும்  மையப்படுத்தி உருவாவதில்லை. ஒரு சமூகம் பின்பற்றும் கொள்கைகளில் இருந்தே உருவாகிறது. பூர்வ குடி மக்களின் சமாதி மீதும், உலகில் உள்ள மூன்றாம் உலக நாடுகளின் மீதான சுரண்டல்கள் காரணமாகவும், படையெடுப்புகள் காரணமாகவும் வளர்க்கப் பட்ட அமெரிக்க மூலதனம், அந்நாட்டில் பிரச்சனைகளை உருவாக்கி, நெருக்கடியாக வளர்ந்து இருக்கிறது. அதன் விளைவே நாங்கள் 99 சதம் என்ற முழக்கமாகும்.

கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன் சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்த சோசலிச நாடுகள் வீழ்ச்சியுற்ற பின், முதல் முறையாக நாங்கள் 99 சதம் என்ற முழக்கம் வடிவம் எடுத்துள்ளது. பெரு முதலாளிகளுக்கு எதிரான இச் செயலை முதலாளித்துவம் சற்றும் எதிர்பார்த்திராத ஒன்று. ஏனென்றால் கடந்த இருபது ஆண்டுகளில் பின் நவீனத்துவப் போக்கு காரணமாக, முதலாளித்துவம் அடையாளங்களை முன்னிறுத்தி அரசியல் செய்து வந்தது. உலகமயமாக்கலுக்கு எதிராக, 10 ஆண்டுகளுக்கு முன் உருவான உலக சமூக மாமன்றம் கூட, இது போல் 99 சதம் என்ற முழக்கத்தை முன் வைக்கவில்லை. உலகமயமாக்கலை எதிர்த்த உலக சமூக மாமன்றம், பல வேற்றுமைகளைக் கொண்ட விளிம்பு நிலை பிரிவினருக்கு, முக்கியத்துவம் தந்தது. குறிப்பாக இனம், மொழி, பாலினம், ஆகியவற்றின் பெயரிலான சுரண்டலுக்கு எதிரான கருத்துக்களுக்கு மட்டும் தான் முக்கியத்துவம் கொடுத்தது. இத்தகைய வேற்றுமைகளூம், பாரபட்சங்களும் தீர்க்கப் பட வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால் தொழிலாளி வர்க்க  அணி திரளுதலைத் தவிர்த்து விடுவதன் மூலமோ, சமூக மாற்றத்திற்கு வழிவகை காணாமல் விடுவதன் மூலமோ, பாரபட்சங்கள் தீர்க்கப் படுவதற்கு சாத்தியம் இல்லை. எவ்வளவு பெரிய அணிதிரட்டல் நடந்தாலும் பலன் இல்லை என்பது கடந்த கால உண்மை.

உலக சமூக மாமன்றத்தில் தொழிலாளி வர்க்க அரசியலின் பங்களிப்பை விடவும், தன்னார்வ குழுக்களின் பங்களிப்பே நிறைந்திருந்தது. இன்றைக்கு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்புப் போராட்டத்தில் தன்னார்வக் குழுக்கள் உள்ளிட்டு, 200க்கும் மேற்பட்ட அமைப்புகள் பங்கெடுத்துள்ளன. இதில் பல இனவாத கருத்துக் கொண்டவர்களும், பல மொழி பேசுபவர்களும், பாலின பாகுபாடு குறித்து பல கருத்துக் கொண்டவர்களும், ஜனநாயகம் என்ற கொள்கையுடையவர்களும், பெண்ணுரிமை, மனித உரிமை, சிவில் சொசைட்டி குழுக்கள் ஆகிய அனைவரும் இணைந்துள்ளனர். அமெரிக்காவிற்கான கணவுலகம் என்ற அமைப்பு 50 லட்சம் உறுப்பினர்களைக் கொண்டது, அமெரிக்க மாணவர் சங்கம் 40 லட்சம் உறுப்பினர்களைக் கொண்டது, 400 கல்வி வளாகங்களில் இருந்து இவர்கள் பங்கெடுப்பு செய்துள்ளனர். இவர்களெல்லாம் இணைந்து இருப்பது தான் இப்போராட்டத்தின் சிறப்பு. இதை பல தொழிற்சங்க இயக்கத்தினர் வழி நடத்துகின்றனர். அதனால் தான் கடந்த காலங்களை விடவும், ஒரு சதம் மட்டுமே உள்ள பெருமுதலாளிகளுக்கு எதிரான, நாங்கள் 99 சதம் என்ற முழக்கம் முன்னுக்கு வந்துள்ளது.

போராட்டத்தில் பங்கெடுத்துள்ளோரில், 3ல் ஒருவர், 35 வயதைக் கடந்தவர். 50 சதத்தினர் வேலையில் இருப்போர். 13 சதமானோர் வேலையில்லாதோர், 13 சதமானோர் ஆண்டுக்கு 75 ஆயிரம் டாலர் சம்பாதிப்பவர். 27.3 சதத்தினர் தங்களை ஜனநாயகவாதிகள் என்று அழைத்துக் கொள்பவர்கள். இதன் பொருள், நடுத்தர வர்க்கம், தொழிலாளி வர்க்கம், இளைஞர்கள் மற்றும் அறிவு ஜீவிகள் என்ற பின்னனியுடன் பங்கேற்பாளர்கள் உள்ளனர் என்பதாகும். செப்டம்பர் 19 அன்று ஆயிரம் என்ற எண்ணிக்கையில் துவங்கிய போராட்டம் 82 நாடுகளில் 951 நகரங்களின் வீதிகளை ஆக்கிரமித்தது, குறைத்து மதிப்பிடக் கூடியதல்ல. அரசு சில அடக்குமுறைகளைக் கையாண்ட போதும், இரண்டு மாதங்களை கடந்து போராட்டம் நீடிப்பதற்கு, போராட்டக்காரர்களின் கூட்டு முயற்சியும், உலக அளவிலான சகோதர ஆதரவு நடவடிக்கைகளாகும். கம்யூனிஸ்ட் அறிக்கை குறிப்பிட்ட உலக தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்ற  முழக்கம் இப்போது வெற்றி பெற்று விட்டது, என தெளிவாகக் கூறமுடியாது. ஆனால் அதற்கான அடிப்படைக் கூறுகள், இப்போராட்டத்தின் மூலம் விதைக்கப் பட்டுள்ளது எனக் கருதலாம்.

வால்ஸ்ட்ரீட்டை ஆக்கிரமித்ததன் பின்னனி:

இந்தியாவை விட அமெரிக்க மக்கள், சற்று கூடுதல் விழிப்புணர்வைக் கொண்டவர்கள், என்பதை நாம் ஒப்புக் கொண்டாக வேண்டும். அர்ஜூன் சென் குப்தா தலைமையிலான குழு இந்தியா முழுவதும் பயணம் செய்து வெளியிட்ட ஆய்வறிக்கை, ”இந்தியாவில் 77 சதமான மக்கள் ஒரு நாளைக்கு 20 ரூபாய் மட்டுமே செலவிடக் கூடியவர்களாக உள்ளனர்” என்பதைச் சுட்டிக் காட்டிய போது, எதிர்ப்புத் தெரிவித்து இருந்தாலும், நாட்டின் மையப்புள்ளியாக அந்த விவாதத்தை முன்னிறுத்த வில்லை. இந்த அறிக்கை சமர்பிக்கப் பட்டு 5 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது இன்னும் முழுமையான விழிப்புணர்வை தொழிலாளி வர்க்கத்திடம் உருவாக்கிட வில்லை. அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் சுமார் 50 லட்சம் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையிலும் பெரும் எதிர்ப்பு இயக்கங்களுக்குத் தயாராகவில்லை. அமெரிக்கவிலோ இப்போது நடைபெறும் போராட்டத்திற்கு அடிப்படை காரணம், நீண்ட பட்டியலைக் கொண்டது. ஒரு சதம் மட்டுமே உள்ள பெருமுதலாளிகள் மிகப் பெரிய லாபத்தை சம்பாதித்துள்ள நிலையில், 99 சத மக்கள் மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்காக காப்பீட்டு நிறுவனங்களிடம் கையேந்தி நிற்க வேண்டியுள்ளது. 1980 ல், ஒரு சதத்தினரின் ஆண்டு வருமானம், அமெரிக்காவின் மொத்த உற்பத்தியில் 9.1% ஆகவும், 2006 ல் 18.8% ஆகவும் இருந்தது. 2010 ல் அதே ஒரு சதத்தினரின் ஆண்டு வருமான வளர்ச்சி, 40% ஆக உயர்ந்து விட்டது. அதே நேரத்தில் அந்த ஒரு சதத்தினர் செலுத்தும் வரி, பொருளாதார பெருமந்த காலத்தில், அரசு கஜானா காலியான நிலையிலும் 37 சதமானம் குறைக்கப் பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், வால்தெருவில் உள்ள தனியார் வங்கிகள் பலவும் திவால் கணக்கை நீட்டிய போது, பல ஆயிரம் கோடி டாலரை, அமெரிக்க அரசு தனியார் வங்கிகளை மீட்டெடுக்க முதலீடு செய்தது.

எனவே தான், பங்குச் சந்தைகள் திவாலாவதற்கு இவ்வளவு கோடிகள் கொட்டப் பட வேண்டுமா?, சுதந்திர சந்தைப் போக்கு தொடர வேண்டுமா?. பெரும் செல்வந்தர்கள் மீதான வரி விதிப்பை குறைக்க வேண்டுமா? தனியார் நிறுவனங்களைக் கட்டுப் படுத்த வேண்டாமா?. அமெரிக்காவின் வேலை வாய்ப்புகள் வெளி நாட்டிற்கு அனுப்பப் படக் கூடாது. கல்வி மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்ய வேண்டும்.  பணிஓய்வு காலம் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். ஒருங்கினைந்த தேசீய செவிலியர்கள் என்ற அமைப்பினர், பெரும் பணக்காரர்கள் மீதான  350 பில்லியன் டாலர் (17,50,000 கோடி ரூபாய்) வரிக்குறைப்பைத் தவிர்த்து (ஒரு ஆண்டுக்கு மட்டும்) இருந்தால், 99 சதமானோர் மீதான பொருளாதார தாக்குதல் குறையுமே, என்ற ஆலோசனையையும் முன்வைத்துள்ளனர். இத்தகைய கோரிக்கைகளைக் கொண்ட அமெரிக்கர்கள் தான் வால்ஸ்ட்ரீட் வீதிகளில் கூடி இரண்டு மாதமாக போராடி வருகின்றனர். 

போராட்டக்காரர்களின் கோரிக்கை குறித்து பல்வேறு அமைப்புகள் கருத்துக் கணிப்புகளை நடத்தி வருகிறது. டைம், வால்ஸ்ட்ரீட் ஜர்னல், கின்னிபியாக் பல்கலைக் கழகம்,  நியூ யார்க் டைம்ஸ், ஆகியவை நடத்திய கருத்துக் கணிப்பு மிக முக்கியமானது. ஏனென்றால், மேற்படி அமைப்புகள் அனைத்தும் முதலாளித்துவத்தைத் தூக்கி நிறுத்தும் தூண்களே. ஆனாலும் உண்மைக்கு மாறாக தங்களது கருத்துக் கணிப்பை வெளியிட முடிய வில்லை. சில பெரு முதலாளிகளின் குடும்பத்தினருக்கும் அச்சம் ஏற்பட்டிருக்க வேண்டும் என அறிய முடிகிறது. எண்ணெய் நிறுவன அதிபர் எச்.எல் ஹண்டின் பேத்தி, லே ஹண்ட் ஹெண்ட்ரிக்ஸ் என்ற 28 வயதுடையவர், “நாங்கள் ஒரு சதம் என்றாலும், 99 சதத்தினருடன் இருப்போம்” என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார். ஃபர்ஹத் இப்ராகிமி என்ற 33 வயது பெண், போஸ்டன் நகரில் நடந்த எதிர்ப்பு இயக்கத்தில் “ எங்கள் மீது வரி போடு “ என்ற வாசகம் தாங்கிய டி.சர்ட் அணிந்து கொண்டு கலந்துள்ளார். இதுபோல் சிலர் ஆங்காங்கு தங்கள் ஆதரவை பதிவு செய்கின்றனரா அல்லது புலம்புகின்றனரா? என்பது தெரியா விட்டாலும், போராட்டத்தின் வேகத்தை எடுத்துக் காட்டுவதாக செய்திகள் அமைந்துள்ளன.

முதலாளித்துவக் கொள்கையின் மீதான நெருக்கடி:

மேற்படி நெருக்கடி முதலாளித்துவ கொள்கைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி என்று மார்க்சிஸ்டுகள் மட்டுமே மதிப்பிட முடியும். சோவியத் யூனியனின் வீழ்ச்சியும் உலகமயமாக்கல் கொள்கையும், ஒரே நேரத்தில் முன்னுக்கு வந்தது. விளைவு முதலாளித்துவ நாடுகளைச் சார்ந்த விரல்விட்டு எண்ணும் அளவிலான, நாடுகளின் கட்டுப்பாட்டிற்குள் கூட அடங்காத வகையில், நிதி மூலதனம் விஸ்ரூபம் கொள்ள முடிந்தது. நாட்டின் தேவைக்காக செயல் பட்ட நிதி மூலதனம் தனது சொந்த நலன்களை முன்னிறுத்தும் வகையில் செயல்பட வாய்ப்புகள் உருவானது. தேசிய அரசு தான், விரும்பா விட்டாலும் நிதி மூலதனத்தின் விருப்பங்களுக்கு இணங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியே நிதி மூலதனத்தின் நலன்களை பொருத்து, சமுதாயத்தின் நலன்கள் அமையும் என்ற நிலையை செயற்கையாக முதலாளித்துவ அரசுகளும், பங்கு சந்தை முதலீட்டாளர்களும் திட்டமிட்டு உருவாக்கினர். இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளாக நிதி அமைச்சராக செயல் பட்டு வருபவர்கள், இந்தியப் பங்கு சந்தை வீழ்ச்சியை சந்திக்கும் காலங்களில் எல்லாம், உடனடியாக மும்பைக்கு பறந்து போவதன் ரகசியம் அது தான்.

பேரா. பிரபாத் பட்நாயக் “நிதி மூலதனத்திற்கு ஆதரவாக தலையீடு செய்யும் அரசு, உழைக்கும் மக்களைப் பாதுகாப்பதற்காக தலையீடு செய்ய மறுக்கிறது. இந்தியாவில் உணவுப் பொருள்களின் விலை கடுமையாக உயரும் இந்த நிலையிலும், 6 கோடி டன் உணவு தானியங்களைப் பதுக்கி வைத்துள்ளது. இதனைப் பொது விநியோக அடிப்படையில் வெளியே விட்டால், அது நிதிப் பற்றாக் குறையை அதிகரித்து நிதி மூலதனத்தை நோகடிக்கும் என்பதால் உழைக்கும் வர்க்கத்திற்கு ஆதரவாக செயல் பட மறுக்கிறது,” என்று குறிப்பிடுகிறார்.  மேலும் அவர் கூறுகிற போது, வெவ்வேறு நாடுகளின் நிதி அமைச்சர்கள், மத்திய வங்கிகளின் ஆளுநர்கள், உயர் மட்ட நிதி அதிகாரிகள் ஆகியோர் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது, அவர்கள் ஒரு அறிவுச் சமூகமாகவும், ஒருவரின் கொள்கைக்கு மற்றவர் ஆதரவு தருவதாக, கருதிக் கொள்வது அதிகரித்துள்ளது. இது நிதி உலகின் போலித்தனங்கள் ஆகும். ”இது நேரடியான லஞ்சம் துவங்கி, பணி ஓய்வுக்கு பிந்தைய காலத்தில் அளிக்கப் படும் பெரும் வருவாய் ஈட்டும் பதவிகளுக்கான வாய்ப்பாக கருதப்பட இடம் இருக்கிறது”, என்ற லெனின் கூற்றையும் பிரபாத் நினைவு படுத்துகிறார்.

நிதி மூலதனத்தின் செயல்பாடு, நிதிச் சந்தை தனக்குள் கொண்டிருந்த சுய கட்டுப்பாடுகளையே உடைத் தெரிந்தது. பேரா. சி.பி சந்திர சேகர் குறிப்பிட்டதைப் போல், வங்கிகளின் லாபம் மூலதனத்தைத் தொடர்ந்து இயங்க வைப்பதில் உள்ளடங்கி இருப்பதால், வங்கிகள் கடன் பெறுவோர் எண்ணிக்கையை தொடர்ந்து விரிவு படுத்தி வந்தது. கடன் பெறுவது எளிதாக இருந்ததால், கடனைத் திரும்ப செலுத்து வருமானம் இல்லாதவர்களும் கூட கடன் வலைக்குள் ஈர்க்கப்பட்டனர். நிதி மூலதனம் கடன் வலைக்குள் வீழ வைக்கும் தூண்டுதல் தன்மையுடன் செயல் பட்டது. அமெரிக்காவில் சப் பிரைம் லோன் என்ற அழைக்கப் பட்ட, வீட்டுக் கடன் அதிகரித்து வங்கிகள் திவால் ஆகும் நிலை உருவானது, நிதி மூலதனத்தின் இந்த அனுமுறை காரணமாகவே. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட வளர்ச்சி விகிதக் குறைவு, வேலையின்மை போன்ற பிரச்சனைகள் இன்றைய உலகப் பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக அமைந்துள்ளது.

மூன்றாம் உலக நாடுகளிலும் இதே நெருக்கடி துவங்கி விட்டதா?

வளர்ந்த நாடுகளின் பொருளாதார நெருக்கடியில் கணிசமான நடுத்தர வர்க்கத்தினர், சிக்கிக் கொண்டுள்ளனர். ஏனென்றால் பென்சன் சேமிப்புப் பணத்தை அமெரிக்க அரசு வங்கிகளில் இருந்து, பங்குச் சந்தைக்கு மாற்றியது. விளைவு நிதிமூலதன சூதாட்டத்தில், நடுத்தர வர்க்கம் தனது சேமிப்பை இழந்தது. தொழிலாளி வர்க்கம் எப்போதும் போல் பாதிக்கப் பட்டு இருந்தாலும், இன்றைய வால்ஸ்ட்ரீட் போராட்டம், நடுத்தர வர்க்கத்தினரின் கணிசமான பங்களிப்புடனேயே சென்று கொண்டிருக்கிறது. இது உலக அளவில் விரிவு பெற்று இருந்தாலும், இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் போதிய பிரதிபலிப்பை ஏற்படுத்தவில்லை. வேலையின்மையும், வறுமையும் தான் பெரும் போராட்டங்களுக்குத் தூண்டுதலாக அமையும் என்பது உண்மை என்றாலும், பணக்கார நாடுகளுக்கு இசைவான கொள்கைகளைக் கொண்டதால், வளர்ந்து வரும் நாடுகளில் வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு போன்ற போராட்டங்கள் வலுப் பெறவில்லை. ”அமெரிக்காவில் உள்ள வறியவர்களின் வாழ்க்கை நிலை உலகில் 3ல் 2 பங்கு மக்களின் வாழ்நிலையை விட மேம்பட்டதாக இருக்கிறது”, என்று லாரி எலியட் மற்றும் சார்லெட் டென்னி என்ற இரெண்டு கார்டியன் பத்திரிக்கையாளர்கள் 91 நாடுகளில் உள்ள 85 சதமான மக்களைப் பற்றி விரிவாக ஆய்வு செய்ததில் இருந்து குறிப்பிட்டு உள்ளனர். இந்த ஆய்வின் மூலம் பெரு முதலாளிகளுக்கான வரிச் சலுகை, தங்களுடைய வாழ்வாதரத்தின் மீது இழப்பை ஏற்படுத்துகிறதே, என்ற புரிதலைக் கொண்டவர்களாக வளர்ந்த நாடுகளின் போராட்டக் காரர்கள் அறியப்படுகிறார்கள். அதன் விளைவு தான், ஐரோப்பாக் கண்டத்தின் பல நாடுகளிலும் நடைபெறும், போராட்ட அலையாகும். பிரிட்டனில் வரும் நவம்பர் 30 அன்று, 4 மில்லியன் (40 லட்சம்) பொதுத் துறை ஊழியர்கள், வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். பிரிட்டிஷ் வரலாற்றில் இது முதல் முறை என சோசலிசம் டுடே இதழ் தெரிவிக்கிறது.

இந்தியாவிலும் அனைத்து தொழிற் சங்கங்கள் ஆளும் கட்சிகள் தலைமை தாங்கும் தொழிற் சங்கங்கள் உள்ளிட்டு, அகில இந்திய அளவில் சிறை நிரப்பும் போராட்டம் என்று அறிவித்தது. பெரும் எழுச்சியை தொழிலாளர்களிடம் ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் ஆளும் கட்சி சார்ந்த தொழிற் சங்கங்கள் உளப் பூர்வமாக பங்கேற்கவில்லை. அதில் இரட்டை வேடம் இருப்பதைக் காணமுடியும். மாநில ஆட்சிப் பொறுப்பை இழந்தவுடன், தி.மு.க வின் தொழிலாளர் முன்னேற்றப் பேரவை, விலைவாசி உயர்வுக்கு எதிராக குரல் கொடுத்ததை தொழிலாளர்கள் ஏற்கவில்லை. இதே நாடகத்தை மம்தா தலைமையிலான திரினாமுல் காங்கிரஸ் கட்சியும் மேற்கொண்டு வருகிறது. இத்தகைய போராட்டங்களை இடதுசாரித் தொழிற் சங்கங்கள் நடத்துவதில் இருந்து வேறுபடுத்தி பார்க்கும், விழிப்புணர்வை தொழிலாளிகளுக்கு உருவாக்கும், அரசியல் பொறுப்பு இந்திய இடதுசாரி தொழிற் சங்கங்களுக்குக் கூடுதலாக உள்ளது. இதே சூழ்நிலை தான் பல மூன்றாம் உலக நாடுகளிலும் இருந்து வருகிறது. வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் பெருமந்தத்திற்குக் காரணமான நிதிமூலதனமும் புதிய தொழில் மூலதனமும், வளரும் நாடுகளில் ஏற்கனவே குவிக்கப் பட்டிருப்பதால்,  வளர்ந்த நாடுகளின் கட்டுப்பாட்டிற்குள்ளேயே வளரும் நாடுகள் சிக்கிக் கொண்டுள்ளது, என்ற உண்மையையும் நாம் உணர வேண்டும்.

இந்தியா போன்ற நாடுகளில் வால்ஸ்ட்ரீட் போராட்டம் குறித்த செய்தி  எத்தனைத் தொலைக்காட்சிகளால் ஒளிபரப்பு செய்யப் படுகிறது?. திட்டமிட்டு மறைக்கப் படுகிறது என்பதை உறுதியாகக் கூறலாம். இந்தியாவில், மாருதி சுசூகி, ஃபாக்ஸ்கான், ஹூண்டாய், எகிப்து மற்றும் இந்தோனேசியாவில் சுரங்கத் தொழிலாளர்களின் போராட்டம், கஜகஸ்தானில் பல ஆயிரம் தொழிலாளர்கள் பங்கேற்போடு  எண்ணெய் நிறுவனங்களில் நடைபெறும் போராட்டம், தாய்லாந்தில் நடைபெறும் எலக்ட்ராணிக்ஸ் நிறுவன ஊழியர்களின் போராட்டம் ஆகிய வற்றைக் குறைத்து மதிப்பிட முடியாது. மேற்படிப் போராட்டங்களில் எல்லாம் அப்பட்டமாக, தேசிய அரசுகள் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக நடந்து கொண்டுள்ளது. இந்திய அரசு மட்டும் கடந்த 6 ஆண்டுகளில் பன்னாட்டு முதலாளிகளுக்கும், உள்நாட்டு முதலாளிகளுக்கும் வரிச் சலுகையாக சுமார் 20 லட்சம் கோடி ரூபாயை வழங்கியிருக்கிறது. அதே நேரத்தில், பெட்ரோல், டீசல் விலை ஒரு வருடத்தில் 13 முறை உயர்த்தப் படுகிறது. உணவுப் பணவீக்கம் 11 சதத்தில் இருந்து 13 சதமாக உயர்ந்து விட்டது. ஆனாலும் நாங்கள் 99 சதம் என்ற ஒருங்கினைப்பை நோக்கி நகரவில்லை.

அரசியல் ரீதியிலும், அனுபவ ரீதியிலும் அமெரிக்கா போன்ற நாட்டின் இடதுசாரிகள் மூலம் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு கூடுதலாக சென்றடையும் ஏற்பாடு உள்ளது. உதாரணம் சோசலிசம் டுடே என்ற இனையதள இதழ் வால்ஸ்ட்ரீட் மீதான கருத்துக்களைப் பலமுறை பதிவு செய்திருக்கிறது. 1998ம் ஆண்டில், “வால்ஸ்ட்ரீட்டில் நீண்ட நாள்கள் செலவிட்ட அனுபவத்தில் இருந்து, மார்க்ஸ் சொன்னதே சரியானது, முதலாளித்துவம் குறித்து அவர் அனுகியவிதம் இன்றைக்கும் மிகச் சரியாக பொருந்துகிறது” என்று வங்கியின் பெரும் முதலீட்டாளர் ஒருவரின் குமுறலை வெளியிட்டிருக்கிறது. வால்ஸ்ட்ரீட்டில் நிகழப் போகும் நிதி மூலதன நெருக்கடியை சோசலிஸ்ட் டுடே இதழால் 13 ஆண்டுகளுக்கு முன்னரே அனுமானிக்க முடிந்துள்ளது.

அதுமட்டுமல்ல, பின் நவீனத்துவக் கருத்துக்களை எதிர்த்த தொழிலாளி வர்க்கக் கருத்துக்கள், மார்க்சீய கண்ணோட்டத்தில் தொடர் விவாதமாக, வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் நடந்து வருகிறது. லிபரல் எழுத்தாளர்கள் என்று சொல்லிக் கொள்ளும் டோடல் கிட்லின் மற்றும் மைக்கேல் காசின் ஆகியோர் தி டிஸ்ஸண்ட் என்ற இனையதள இதழில், “1960 மற்றும் 1970 களிலும் அமெரிக்காவிற்கு இது போன்ற நெருக்கடி இருந்தது என்றும், அன்றைக்கு கருப்பின மக்களின் விடுதலைக்கான போராட்டத்தின் காரணமாக, நாங்கள் 99 சதம் என்ற ஒற்றுமை உருவாகவில்லை” எனவும் கூறுகின்றனர். பின் நவீனத்துவ சோசலிசவாதிகள் என்று சொல்லிக் கொண்ட பார்பாச், நுவன்ஸ், மற்றும் காகர் லிட்ஸ்கி போன்றோர், சோவியத் வீழ்ச்சியைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் அறிக்கையும் இறந்து விட்டது என்று கூச்சலிட்டனர்.  வால்ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற ஊக வணிகம், இது போன்ற கூச்சல்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும், என சோசலிஸ்ட் டுடே இதழ் 1997 ன் போதே கட்டுரை எழுதி உள்ளது. கம்யூனிஸ்ட் அறிக்கை மார்க்ஸ் எங்கெல்ஸ் குறிப்பிட்ட காலத்தை விடவும் இன்று கூடுதல் பொருத்ததுடன் இருப்பதையும் சுட்டிக் காட்டி இருக்கிறது. மேலும் 1890, 1930 மற்றும் 1960 ஆகிய காலங்களில் ஏற்பட்ட நெருக்கடிகளின் அனுபவத்தில் இருந்து, இடதுசாரிகள் புதிய சிந்தனையுடன், இன்றைய வால்ஸ்ட்ரீட் போராட்டத்தில் இறங்கியுள்ளனர், என்றும் டிஸ்ஸண்ட் என்ற இனைய தளம் குறிப்பிடுகிறது. எனவேதான் மின்சாரம் இல்லையென்றாலும், தங்குவதற்கு வசதி இல்லை என்றாலும், உணவுக்கான ஏற்பாட்டை போதுமான வகையில் செய்ய வழியில்லை என்ற போதும், இரண்டு மாதங்களாக போராட்டத்தில் பங்கேற்றோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதுமட்டுமல்ல அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி இப்போராட்டத்தில் தீவிர பங்களிப்பு செய்து வருகிறது. செங்கொடிகள் நீண்ட இடவெளிக்குப் பிறகு அமெரிக்க வீதிகளில் உயர்த்திப் பிடிக்கப் படுவதைப் பார்க்க முடியும். அதனால் தான் முன்னெப்போதும் இல்லாத வகையில் நெருக்கடிக்கு சோசலிசமே தீர்வு என்ற வாசகங்களும் வளம் வருகிறது.

மேற்குறிப்பிட்ட விவாதங்களின் அவசியம் அதிகரித்துள்ளது. மற்ற பல வேற்றுமைகளைப் பொருளாதார சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தின் மூலம் விரைந்து ஒழிக்க முடியும் என்பது இன்றைய மையக்கருத்தாக மாறியிருப்பதை மறுக்க முடியாது. இன்று இனையதள ஊடகம் தீவிரமான வாசகர் வட்டத்தை உருவாக்கி வருவதையும் கணக்கில் கொள்ள வேண்டும். டுனீசியா மற்றும் எகிப்தில் நடைபெற்ற மல்லிகைப் புரட்சிக்கு பின்னால் இனையதளத்தின் பங்கு மகத்தானதாக இருந்தது என்பதையும், இந்திய இடதுசாரிகள் கவணிக்க வேண்டியுள்ளது. இங்கு இடதுசாரிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் கூட, வீதி போராட்டங்களில் பங்கேற்காமல், மக்களைத் திரட்டும் போராட்டங்களுக்குத் தயாராகாமல், கம்யூனிஸ்டுகளை வசைபாட மட்டுமே தனது இனைய தள அறிவைப் பயன்படுத்தும் நிலை உள்ளது. மற்றொரு புறம், சில ஜனநாயக எண்ணம் கொண்டோர் அல்லது லிபரல் அனுகுமுறை கொண்டோரும் தாங்கள் நடத்தும் இனையதள இதழ்களில், கம்யூனிஸ்டுகளை வசை பாடவே பயன் படுத்துகின்றனர். மாருதி சுசூகி, ஹூண்டாய் போன்ற பன்னாட்டு மூலதனங்களுக்கு எதிரான போராட்டத்தின் போது கூட வசைபாடும் பணியை மட்டுமே செய்து வந்தார்கள். எரிக் காப்ஸ்வாம் குறிப்பிட்டதைப் போல் மேற்படி செயல்களால், மறைமுகமாக முதலாளித்துவத்திற்கு சேவை செய்வது இந்திய அறிவு ஜீவிகள் என அறியப் படுபவர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இத்தகைய உள்நாட்டுக் குழப்பங்களை எதிர் கொள்வதற்கும், வால்ஸ்ட்ரீட் போராட்டக் காரர்கள் மற்றும் மல்லிகைப் புரட்சி நடத்தியவர்களின் அனுபவமான கருத்துப் பிரச்சார களமாக இனையதளத்தைக் கையாள வேண்டிய தேவை இந்திய இடதுசாரிகளுக்கு அதிகரித்துள்ளது. இரண்டாவதாக இந்தியாவில் அதிகரித்துள்ள சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அல்லது பன்னாட்டு மூலதனங்களின் வருகை சார்ந்த அரசு அறிவிப்புகள். இதன் மூலம் பெரும் மூலதனத்தைக் கொண்டோருக்கு வரிச்சலுகை அளிப்பதையும், விவசாயிகளின் நிலம் பறி போவதையும், வேலைகள் தங்கள் வசிப்பிடங்களில் பறிக்கப் பட்டு இடம்பெயரச் செய்யப் படுவதும், உருவான தொழிற் சங்கங்களை அங்கீகரித்துப் பேச மறுப்பதையும், தேசிய அரசுகள் தொழிலாளர் சட்டங்களை மூலதனத்திற்கு சாதகமாக வளைப்பதையும் கம்யூனிஸ்டுகளும், பல்வேறு ஜனநாயகக் கருத்துக் கொண்டோரும் பிரச்சனைகளாக்கிட வேண்டும். தொழிற் சங்கத்தின் கோரிக்கையாக இருந்தாலும், பிரச்சனை சமூகப் பிரச்சனையாக மாறி விட்ட சூழலில் இருந்து அனுக முயற்சிக்க வேண்டும். தற்போது தொழிற் சங்கங்கள் எடுத்து வரும் முயற்சியை செழுமைப் படுத்திட இந்த அனுகுமுறை பலனளிக்கும்.   

நன்றி: மார்க்சிஸ்ட் தமிழ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக