சனி, 16 ஆகஸ்ட், 2014


வண்ணமும், வெளுப்பும் சுரண்டலைத் தடுப்பதில்லை!!!

விமலா என்ற பெயர் பெண்களுக்கு வைக்கப் பட்டு இருந்தால், அது கம்யூனிஸ்ட் குடும்பம் என்பதும் ஒரு காரணம் என்பதை அறியலாம். விமலா ரணதிவே என்ற தலைவரை நினைவு கூறும் விதமாக வைக்கப் பட்ட பெயராக இருக்கும். விமலா ரணதிவே, கம்யூனிஸ்ட் தலைவர், தொழிற் சங்கத் தலைவர் மற்றும் மாதர் இயக்கத் தலைவர், என்ற பொறுப்புக்களைத் திறம்பட நிர்வகித்தவர். மும்பையில் வாழ்க்கையைத் துவக்கி, இந்தியா முழுவதும் பயணித்து பெண்களைத் திரட்டும் காந்தமாக விளங்கியவர். திரட்டப் பட்டவர்களை சரியாக ஆற்றல் படுத்துவதில் ஆர்வம் கொண்டிருந்தவர்.

கருத்தாக்கங்களை உடைப்பதில்:
உழைக்கும் பெண்கள் அனுபவித்த வேலைப் பளு, பணி நேரம் ஆகியவற்றிற்கு எதிராக, தங்களை ஓரணியில் திரட்டிய போராட்ட வரலாற்றை பெருமை வாய்ந்த, சர்வதேசப் பெண்கள் தினம் என இன்று கொண்டாடுகிறோம். ஆனால் வீட்டோடு மணைவி என  குறிப்பிடப் படுகிறோம். இன்று வீட்டு வேலை செய்யும் பெண்களும் சில இடங்களில் அணி திரட்டப் பட்டு வந்தாலும் வீட்டோடு மணைவி என்ற கருத்தாக்கத்தில் மாற்றம் இல்லை. இத்தகைய கருத்தாக்கங்களைக் கழைவதற்கான போராட்ட களத்தில் முன்னின்றவர், விமலா ரணதிவே. பொதுவாக கம்யூனிஸ்ட் பெண்கள் தான் இத்தகைய மாற்றத்திற்கு எதிரான அணிவகுப்பை முன்வைத்தார்கள், என்ற வரலாற்றையும் அறிந்து வைப்பதும், அதை அடுத்த தலைமுறைகளுக்கு சொல்வதும் அவசியம்.

கணவர் மணைவி என்ற இரண்டு பேரும் சமூகப் பணியில் ஈடுபட்ட பெருமை கம்யூனிஸ்ட் கட்சியில் பல தம்பதியினருக்கு உண்டு. அதுவும் முழு நேரமாக என்பது கூடுதல் குடும்ப சுமை கொண்ட ஒன்று. ஆனால் அதை வெற்றிகரமாக எதிர் கொண்டு வாழ்ந்து காட்டிய தம்பதி விமலா மற்றும் ரணதிவே ஆகியோர். இன்று போல் அன்றைய சமூகம் இல்லை. மிகவும் பிற்போக்கு சிந்தனை கொண்டது. இருந்தாலும் அன்றைய கருத்தாக்கத்தை முழு நேர கம்யூனிஸ்ட் கட்சிப் பணி என்ற புதிய வேலை முறையை உருவாக்கிய வகையில், விமலா ரணதிவே கருத்தாக்கங்களை உடைப்பதில் செய்த பங்கினை, இன்று அது போல் பணிசெய்யும் கம்யூனிஸ்ட்டுகள் உணர முடியும்.

இத்தகைய பங்களிப்பைச் செய்த விமலா மறைந்த தினம் ஜுலை 24. உழைக்கும் பெண்கள் இந்த நாளை இந்தியாவில், உழைக்கும் பெண்களின் உரிமைகளை நினைவுகூறும் வகையில் அனுசரிக்கிறார்கள். 1999 ஜுலையில்  மறைந்தார். அவருடைய நினைவைப் போற்றுவது காலத்தின் தேவையாகவும் இருக்கிறது. குறிப்பாக ஆளுமை குறித்து பல கருத்தாக்கங்களை முதலாளித்துவம் திணிக்கிறது. அதற்கு சாதகமாக ஆதிக்கம் செலுத்தும் ஊடகங்கள் வளர்ந்து உள்ளன. வேலைக்குச் செல்லும் படித்த பெண்களுக்கு பல வகையில் தாழ்வு மனப்பான்மை உருவாக்கப் படுகிறது. உதாரணத்திற்கு பெண் தன்னுடைய புடவையை சலவை செய்வது குறித்து இரண்டு விளம்பரங்கள் முன் வருகின்றன. ஒன்று துணி வியாபாரம் செய்யும் பெண்ணுக்கு என்ன சலவைப் பவுடர் பயன் படுத்த தெரியாது, என்பதும், படவை பளிச் சென்று ஆன பின் தான் தன்னால் சிரித்து பேசி வியாபாரம் செய்ய முடிந்தது என்பதாகும்.

மற்றொன்று, முதல் சம்பளத்தில் அம்மாவை அழைத்துக் கொண்டு ஒரு ஹோட்டலுக்குச் செல்லும் பெண்ணை, காவலாளி முதல் முறையா என உடையைப் பார்த்து வெளியே நிறுத்துவது, உடனே அந்தப் பெண் தன்ன்னுடைய ஓவர் கோட்டை கழற்றுவது. அதேபோல் மற்றொரு விளம்பரம் ஏழே நாளில் சிவப்பணு தரும் மாற்றம் குறித்ததாகும். சிவப்பா கறுப்பா என்ன வண்ணம் என்றாலும், அழுக்கா பளிச்சா என்ன வெளுப்பாக இருந்தாலும் பெண் சுரண்டலுக்கு ஆளாகிறாள், என்பதே உண்மை. எனவே கருத்தாக்கங்களை உடைப்பது மிக அவசியம்.  

இன்றைய உழைக்கும் பெண்கள் நிலை:

அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் மட்டும் அல்ல, தனியார் நிறுவனங்களில் மற்றும் பெண்கள் தலைமையேற்று நடத்தும் குடும்பங்கள் என்று, உழைக்கும் பெண்கள் எண்ணிக்கை உயர்ந்து இருப்பதைக் காண முடியும். இது வரவேற்க வேண்டிய அம்சம். ஆனால் போராடிப் பெற்ற உரிமைகளை அனுபவிக்க முடிகிறதா? அல்லது புதிதாகப் பெற வேண்டிய உரிமைகளுக்காகப் போராட முடிகிறதா? என்ற வினாக்கள் விடைகளைக் கண்டறிவது அவசியம்.

உழைக்கும் வர்க்கத்தில் பலவீனமான பிரிவு என முதலாளித்துவம் கருதுவது, பெண் தான். அரசு, தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்ட துறைகளில் பணிபுரியும் பெண்கள் உள்ளிட்டு கூடுதல் வேலை வாங்கப் படுபவர் பெண்களாகத் தான் உள்ளனர். ஆண்களைப் போல் தனக்கான இன்றைய வேலை இவ்வளவு தான் என நிராகரிக்கும் வலிமை இல்லாததால், அதிகமான உழைப்புச் சுரண்டலுக்கு பெண் ஆளாவதைக் காண முடியும்.

தொழிற்சங்க போராட்டத்தில், வீட்டிற்கு கடிதம் எழுதி உங்கள் பெண் ஆண் தொழிலாளர்களுடன் இணைந்து போராடி வருகிறார். கூடுதல் தகவலாக சில ஆண் தொழிலாளர்களுடன் இணைந்து ஊர் சுற்றும் வேலையையும் செய்து வருகிறார், என அவதூறு பரப்பி, பெண்ணுக்கான உரிமையை அசிங்கப் படுத்தும் பன்னாட்டு நிறுவனங்களைப் பார்க்க முடிகிறது. சமீபத்திய உதாரணம் நோக்கியா, ஃபாக்ஸ்கான் இங்கு பெரும் எண்ணிக்கையில் வேலை செய்வோர் பெண்கள். ஆனால் நிறுவனம் தனக்கான லாப வேட்டை முடியும் நிலையில் விருப்ப ஓய்வு என்ற பூதத்தைக் காட்டி மிரட்டப் பட்டதும், முதலில் இந்தத் திட்டத்தை ஏற்கச் செய்யப் பட்டவரும், பெண் தான்.

விருப்ப ஓய்வுத் திட்டம் என்ற பெயரில் முதலாளித்துவம் தனது சுரண்டலைத் தீவிரப் படுத்த முயற்சிக்கிற போது, சமூகத்தின் பழமை வாதக் கண்ணோட்டத்தை பயன் படுத்திக் கொள்கிறது. நோக்கியா, திருமணம் ஆகாத பெண்களிடத்தில் பேசி ஏற்கச் செய்தது, அவர்கள் விருப்ப ஓய்வினை ஏற்றுக் கொண்டால், திருமணத்திற்கானத் தொகையை உறுதி செய்ய முடியும் என்பதே நய வஞ்சக வார்த்தைகள். இதே அனுபவம் பஞ்சாலைத் தொழிலில் இன்றளவும் நடைபெற்று வருகிறது. சுமங்கலி மற்றும் மாங்கல்யத் திட்டம் என்ற பெயரில் நடைபெறும் உழைப்புச் சுரண்டல் தடுக்கப் படவில்லை. எனவே சமூகத்தில் நீடிக்கும் வரதட்சனைக் கொடுமை, மிகப் பெரிய ஊனமாக, தொழிலாளரின் போராட்ட வரலாறு காண வேண்டும்.
ஒழிக்கப் படவேண்டிய கருத்தாக்கங்களில் இது மிக முக்கியமான ஒன்று. அதேபோல், தகவல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சேவை செய்யும் பிபிஓ மற்றும் கால் செண்டர்களில் பணிபுரியும் பெண்கள், தகவல் தொழில் நுட்பப் பொறியாளர்கள், அல்லது புதிய உற்பத்தித் துறைகளான, பன்னாட்டு நிறுவனங்களில் பணி புரியும் பெண்கள், ஆகியோர், கருத்தறித்துக் கொள்ளும் உரிமையை இழக்கின்றனர். பிரசவ விடுப்பு மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 மாதம் மாநில அரசு ஊழியர்களுக்கு 3 மாதம் என்ற உரிமை போராட்ட வரலாறு பெற்றுத் தந்தது.

மகப்பேறின் போது, மாநில அரசு, மத்திய அரசு என்ற வகையில் பெண் எந்த வகையில் வேறுபடுகிறாள் என்ற கேள்வியும், பாரபட்சமும் தனிக் கதை. இன்றைய முதலாளித்துவம் இதை அபகரிக்க தனது லாபத்தை தீவிரப் படுத்த, நிரந்தரமற்ற வேலைச் சூழலில் கூட பெண் மீது கருவுறாதே என ஆதிக்கம் செலுத்த முடிகிறது. கருவுறுவது குறித்த முடிவை முதலாளி எடுக்க முடிகிறது. இங்கு ஏற்கனவே பெண்ணின் உரிமை பறிக்கப் பட்டு உள்ளது, கூடுதலாக  குடும்ப உரிமையும் பறிக்கப் படுவதைக் காண முடியும்.

நிலப் பிரபுத்துவம் மற்றும் முதலாளித்துவ சமூக அமைப்பு சுரண்டலைத் தன் வசப் படுத்த அமைத்துக் கொண்ட வேலியாக உள்ள, சாதி, திருமணத்திற்கான வரதட்சனை ஆகிய கெட்ட பண்பாட்டுக் கூறுகள் இன்றளவும் உழைக்கும் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கத் தடையாக உள்ளது. மதுரை உயர் நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பு இதற்கு ஒரு உதாரணம். தந்தை பணியில் இருக்கும் போது இறந்து விட்டால், மகனுக்கு வாரிசு வேலை, அதே மகன் திருமணம் செய்து கொண்ட பிறகும் வாரிசு வேலை பெறும் உரிமை படைத்தவராகிறார். ஆனால் பெண் திருமணத்திற்குப் பின் வாரிசு வேலை கோரும் உரிமையை இழந்து விடுகிறார், என்பது வழக்கு. இதை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பெண் திருமணம் செய்து கொண்ட பிறகும் வாரிசு வேலை கோரும் உரிமை படைத்தவரே என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.


அதே போல் தொடர் கதையாக நீடித்து வரும் பணியிடங்களில் பாலியல் தொல்லை என்பதும் இன்று உழைக்கும் பெண்கள் அனுபவிக்கும் ஆகப் பெரிய கொடுமையாக உள்ளது. விசாகா கமிட்டி தீர்ப்பு, பணியிடங்களில் அமைக்கப் படவேண்டிய கமிட்டி அமைக்கப் படுவதும் இல்லை. அது குறித்த விழிப்புணர்வை பெண்களுக்குக் கொண்டு செல்லவும் இல்லை. இதுபோல் நீண்டு செல்லும் சுரண்டலை முடிவுக்குக் கொண்டு வருவதே, விமலா ரணதிவே போன்ற போராளிகளை நினைவு கூறும் அனுபவமாக இருக்க முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக