சனி, 16 ஆகஸ்ட், 2014


காந்தி – பகத்சிங் ஆகியோரிடம் இருந்து!!!

அஹிம்சையை வலியுறுத்திய மகாத்மா காந்தியும், சமூக மாற்றத்துடன் கூடிய மக்கள் விடுதலைக்குத் தேவையான போராட்ட வடிவங்களை கைக்கொள்ள முயன்ற, மாவீரன் பகத்சிங்கும் மத சார்பின்மைக் கொள்கையில் ஒற்றுமையைக் கொண்டிருந்தனர். மதசார்பின்மை கொள்கை விடுதலை இந்தியாவில் அமலாக வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருந்தனர். அனைத்து மக்களும் பயன்பெறும் சமூக புரட்சியானாலும், கிராம சுயராஜ்யம் என்ற சீர்திருத்தமானாலும் அமலாக வேண்டுமானால் அதற்கு மதசார்பின்மை என்ற அரசு கொள்கை அவசியம் என்பதே மேற்படி தலைவர்களான காந்தி மற்றும் பகத் சிங் ஆகியோரின் அணுகுமுறையாகும்.

காந்தியும், பகத்சிங்கும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடம் இருந்து இந்தியா விடுதலை பெற வேண்டும் என்பதற்காக தங்களை அற்பணித்துக் கொண்டவர்கள். அகிம்சையோ, கலகமோ இரண்டு வடிவங்களும் விடுதலை என்னும் ஒற்றை இலக்கை முன்னிறுத்தியே நிகழ்த்தப் பட்டது. ஆனால் வகுப்புவாதிகள் குறிப்பாக இந்த்துத்துவா என்ற கோட்பாட்டை முன்னுறுத்தியவர்கள் மேற்படி விடுதலைப் போரை வேடிக்கை பார்த்தவர்கள். மக்கள் ஒன்று பட்டு நிகழ்த்தும் போராட்டங்களை ஏகாதிபத்தியத்திடம்  காட்டிக் கொடுத்தவர்கள். சவார்க்கார் முதல் வாஜ்பாய் வரையிலும் தலைமை தாங்கியவர்களின் கொள்கை தான் வேடிக்கை பார்ப்பதும், காட்டிக் கொடுப்பதும் ஆகும். சவர்க்கார் எழுதிக் கொடுத்த மண்ணிப்புக் கடிதமும், வாஜ்பாய் ஆக்ரா கோர்ட்டில் அளித்த சாட்சியமும் வரலாற்றில் மண்ணிக்க கூடாத ஒன்று.

விடுதலைப் போரிலும் இந்தியா என்ற நாடு உருவாக்கத்திலும் முக்கியப் பங்கு வகித்த வல்லபாய் பட்டேலுக்கு சிலை வைப்பது, விடுதலைப் போராட்ட வீரர் ஒருவரை மதிப்பதன் நோக்கம் கொண்டது அல்லவா? என கேள்வி கேட்கலாம். ஒருகாலத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்ய வேண்டிய அவசியத்திற்குத் தள்ளப் பட்ட வல்லபாய் பட்டேலுக்கு சிலை வைப்பது அரசியல் நோக்கம் கொண்டது. ஆர்.எஸ்.எஸ் முன்னிறுத்தி உள்ள மோடி இந்த வேலையைச் செய்வது கூடுதலான உள்நோக்கம் கொண்டது. ஒரு சில எதிர் கேள்விகளை எழுப்புவதன் மூலம் இந்த உள்நோக்கத்தைப் புரிந்து கொள்ள முடியும். ஒன்று 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சியில் உள்ள மோடி ஏன் காந்திக்கு இது போன்ற சிலை அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபடவில்லை? இரண்டு குஜராத்தின் பல்வேறு தேவைகளுக்கு செலவிடத் தயங்கும் அரசு ஏன் வல்லபாய் படேல் சிலைக்கு இத்தனை கோடிகளை செலவிட வேண்டும்?.

இது போன்ற கேள்விகள் மூலம் மோடி நாட்டின் நலனை பின்னுக்குத் தள்ளி சில அடையாளங்களை முன்வைத்து மக்களைத் திசை திருப்புகிறார். அதற்கு பாஜக கட்சியின் அனைத்துப் பரிவாரங்களும் ஒத்து ஊதுகின்றன, என்பதைப் புரிந்து கொள்ள முடியும். காந்தி விடுதலை இந்தியாவின் முதல் பிரதமர் பொறுப்பிற்கு பட்டேலை நிராகரித்து நேருவை, முன்னிறுத்தினார், என்ற கருத்தை ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் ஆதரவு நிறுவனங்கள் விஷமப் பிரச்சாரம் செய்து வருகின்றன. இந்த சூழ்நிலையில் அன்று நிராகரிக்கப் பட்ட பட்டேலுக்கு தாங்கள் நியாயம் வழங்குகிறோம் என்பதே ஆர்.எஸ்.எஸ் அரசியல். உண்மையில் பட்டேலைப் புரிந்து கொண்டவர்களும், காந்தியும் பட்டேலினுடைய பழமைவாத கண்ணோட்டத்தை நிராகரித்தார்கள். முக்கியமாக நேருவின் பார்வை விசாலமானது வளர்ச்சி குறித்தது, எனவே விடுதலை இந்தியாவின் வளர்ச்சிக்குப் பயனளிக்கும் என எதிர்பார்த்தார்கள். இந்தியாவின் அன்றைய முதலாளிகளும், காந்தி மற்றும் அன்றைய காங்கிரஸ் தலைவர்களும் ஒரே மாதிரியான கருத்துக்களைக் கொண்டிருந்தார்கள். எனவே தான் நேரு பிரதமர் பொறுப்பிற்கு தேர்வு செய்யப் பட்டார்.

அன்று நாடு விடுதலை பெற்ற சூழலில் தொடர்ந்து வகுப்புக் கலவரம் அல்லது பிரிவினை உணர்வுகள் மேலோங்கி இருந்தால் இந்திய அரசு முன் வைத்த கலப்புப் பொருளாதாரம் வெற்றி பெற்று இருக்காது. இந்தியாவின் முதலாளித்துவ வளர்ச்சிக்குத் தேவையான கட்டமைப்பை உருவாக்க முடியாமல் போயிருக்கும். இப்போது அரசு கட்டமைப்பை தனியார் கபளிகரம் செய்யும் கொள்கைகளை இந்திய ஆளும் வர்க்கம் பின்பற்றுகிறது. இன்றைய நிலையில் காந்தியே நேரில் வந்து எந்த ஒரு காங்கிரஸ் தலைவரை ஆதரித்தாலும், இந்திய பெரும் முதலாளித்துவம் ஏற்றுக் கொள்ளாது. மாறாக அரசு மற்றும் கட்டமைப்பு வசதிகளை ஆக்கிரமிக்க மக்கள் ஒற்றுமை சீர்குழைய வேண்டும் என்பதே முதலாளித்துவ விருப்பமாகும்.

இந்தப் பின்னணியில் தான், பிழைப்பிற்கு வழியின்றி, கற்பப்பையை வாடகைக்கு (இது தேவையா இல்லையா என்பது தனி விவாதம்) விற்று பிழைப்பு நடத்தும் வாடகைத் தாய்கள் அதிகம் உள்ள குஜராத் மாநிலம், வளர்ச்சியடைந்த மாநிலம் என முன்னிறுத்தப் படுகிறது. இவ்வளவு வறுமைக்குக் காரணமான மோடி வளர்ச்சிக்கான குறியீடாக சொல்லப்படுகிறார். இவை அனைத்தும் இன்றைய முதலாளித்துவத்தின் திட்டமிட்ட ஏற்பாடு. இந்திய அரசியலில் உருவாக்கப் படும் இத்தகைய திட்டமிட்ட சதி முறியடிக்கப் பட வேண்டுமானால் காந்தி சொன்ன மத சார்பின்மையும், காந்தியை குறிப்பிட்ட பொருளாதார கொள்கைகளை விட வலுவான மாற்றுப் பொருளாதாரக் கொள்கையும் இன்று தேவைப் படுகிறது.

அத்தகைய சிந்தனை பகத்சிங்கிடம் இருந்தது. இன்றைக்கும் முற்போக்கு சிந்தனைகளுக்கும் சமூகம் குறித்த கனவுகளுக்கும் முன்னுதாரணமாக விளங்கும் விடுதலைப் போராட்ட வீரர் பகத்சிங் ஆவார். பகத் சிங்கினை வன்முறை வாதி என முத்திரை குத்துவதில், இந்திய ஆளும் வர்க்கம் பிரிட்டிஷாருடன் சேர்ந்து பிரச்சாரம் செய்தனர். 10 ம் வகுப்பு மட்டுமே படித்த, 4 மொழிகளில் பேச, எழுதத் தெரிந்த, அரசியல் அதன் எதிர் காலம், மாற்று சமூகம் குறித்த விளக்கம் ஆகியவற்றை பல நாடுகளின் அனுபங்களுடன் முன் வைத்து 20 வயதிலேயே விவாதித்த இளைஞர் தான் பகத்சிங். பிரிட்டிஷாரிடம் இருந்து விடுதலை பெறும் இந்தியா அரசியல் விடுதலை பெற்றால் மட்டும் போதாது, பொருளாதார மற்றும் சமூக விடுதலையைப் பெற வேண்டும், என பிரச்சாரம் செய்தார். மாபெரும் அறிவுஜீவியை தீவிரவாதி என்றது அப்பட்டமான அவதூறு. எனவே அவர் குறித்து காங்கிரஸ் தலைமை மற்றும் பிரிட்டிஷ் ஆட்சியினர் ஒரு சேர மதிப்பீடு செய்து அவதூறு செய்ததில் வியப்பில்லை.

குறிப்பாக இளம் அரசியல் ஊழியர்களுக்கு எனும் தலைப்பில், தன்னுடைய வாழ்நாளின் இறுதி நாள்களில் பகத்சிங் எழுதிய கடிதம் இன்றும் பொருத்தமாகவே இருக்கிறது. “குஜராத் அஹமதாபாத்தில் நடைபெற்ற தொழிலாளர் போராட்டத்தைத் தொடர்ந்து, காந்தி, பின்வருமாறு குறிப்பிட்டார், “நாம் தொழிலாளர்களை ஒருபோதும் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுத்தக் கூடாது. ஆலைத் தொழிலாளர்களை அரசியல் ரீதியாகப் பயன் படுத்துவது அபாயகரமானது”, என்றார். இது 1921 மே டைம்ஸ் இதழில் பிரசுரிக்கப் பட்டு இருந்தது. அதேபோல் விவசாயிகள் குஜராத் மாநிலம் பர்தோலியில் விவசாயிகள் பேரெழுச்சி உருவான போது இத்தலைவர்கள் பீதி அடைந்தனர். 1922 ம் ஆண்டு பர்தோலியில் நிறைவேற்றப் பட்ட காங்கிரஸ் மகாசபை தீர்மாணம் பிரிட்டிஷாரிடம் சரனடையத் தூண்டியது” என காந்தியையும் அவருடைய தலைமையில் செயல் பட்ட காங்கிரஸையும் பகத் செய்த விமர்சனம் இப்போதும் பொருத்தமாகவே இருக்கிறது.

அதேபோல் தான் மக்களின் மதநம்பிக்கை அடிப்படையாகக் கொண்டு அரசியல் செய்தோரையும் விமர்சிக்கிறார். அதில் இந்து, இஸ்லாம், கிருத்தவம் என்ற வேறுபாடுகள் இல்லை. எல்லோரிடமும் முன்னேற்றத்திற்கு தடையாக, மனித நம்பிக்கைகளை முன்வைத்து செய்கிற அரசியல், மனித குல வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் என்கிறார். இந்த அணுகுமுறை மிகச் சிறந்த மதசார்பின்மைக் கொள்கையாகப் பார்க்கபடவேண்டும். இன்றைக்கு இந்துத்துவா அமைப்புகள் முன் வைக்கும் வளர்ச்சி குறித்த பார்வை மேற்படி அடிப்படை வாதம் சார்ந்ததே. வறுமையில் தவிக்கும் மக்களிடம் அடிப்படைவாதம் பிரச்சராரம் செய்யப் படுகிறது. வாடகைத் தாய் தொழில் குஜராத் மாநிலத்தில் அதிகரித்து வருகிறது. அதற்காக வெறுமனே 50 ஆயிரம் ரூபாய் சன்மானம் என்பது, மிகக் கொடிய சுரண்டல் சார்ந்தது. வறுமையை மனிதனின் முன் ஜென்ம பாவம் சார்ந்த செயலாகக் கருதத் தூண்டுவது இந்த அடிப்படைவாதத்திற்குள் அடங்கி இருக்கிறது. அது ஒரு சமூகக் கொடுமை என்ற சிந்தனையில் எதிர் கொள்வதே உண்மையான விடுதலைக்கு வழிவகுக்கும், என பகத்சிங் வாதிடுகிறார்.


எனவே இன்றைய தேவை முதல் கட்டமாக மத சார்பின்மை. அடுத்து முழுமையான மனித குலத்திற்கான விடுதலை. அதற்கான பொருளாதாரக் கொள்கைகள் உருவாக்கப் பட வேண்டும். அதை நோக்கி பயனிப்பதே இந்திய மக்களுக்கு ஜனநாயக அமைப்புகள் செய்யும் கடமையாகும். இதை செய்யத் தடையாக உள்ள வகுப்பு வாதத்தை, இந்துத்துவாவை, அது முன்நிறுத்தும் கொள்கைகளை எதிர்ப்பதும், மக்களை அதற்கு எதிராக ஒன்று திரட்டுவதும் அவசியம். அதுவே பகத்சிங் போன்ற தியாகிகளுக்கு செலுத்தும் உண்மையான வீரவணக்கமாகவும் இருக்கும்.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக