வெள்ளி, 13 நவம்பர், 2015


விளம்பர உலகில் சிதைவுறும் பெண்!!

ஒருவயது குழந்தையும், மனநலம் பாதிக்கப் பட்ட பெண்ணும், 80 வயது மூதாட்டியும் கூட பாலியல் பலாத்காரத்தில் இருந்து தப்ப முடியவில்லை. பள்ளியில் வைத்து 6 வயது சிறுமி பலாத்காரம் செய்யப் படுகிறாள். கதவு கூட இல்லாத வீட்டைச் சார்ந்த பெண்குழந்தை, தூங்கிக் கொண்டு இருக்கும் போது, கடத்தப் பட்டு, பலாத்காரத்திற்குள்ளாகி, தூக்கிலிட்டு சாகடிக்கப் படுகிறாள். முந்தைய நாள் செய்தியை விட அதிர்வுகளை அதிகப்படுத்தும் தன்மை கொண்ட, பெண் மீதான தாக்குதல் குறித்த செய்தி வராத நாளில்லை.

2013 ம் ஆண்டு தேசீய குற்றப் பதிவு அமைப்பு தெரிவித்துள்ள தகவல் அடிப்படையில், தமிழகத்தில் 7475 பாலியல் தாக்குதல்கள் பெண்கள் மீது நடந்துள்ளது. இதில் 853 பாலியல் வல்லுறவுக் கொடுமைகள். 1188 குற்றச் செயல்கள் குழந்தைகளுக்கு எதிரானது. தமிழகத்தில் 2012ல் 737 ஆக இருந்த பாலியல் பலாத்கார குற்றம் குறித்த வழக்கு, 2013ல் 853 ஆக உயர்ந்துள்ளது.

2012 டிசம்பரில் டில்லி மாணவி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி, இறந்த பின், பல்லாயிரம் மக்கள் போராட்டங்களில் பங்கேற்ற பின், அச்சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீதான தண்டனை உறுதி செய்யப் பட்ட நிலையில், 2013ல் பாலியல் குற்றங்கள் அதிகரித்து உள்ளன. தண்டனைகள் குறித்தோ, சமூகத்தின் எதிர்ப்பு குறித்தோ, எவ்வித உணர்வும் இல்லாமல், குற்றவாளிகள் உலாவருகின்றனர்.

பாலியல் குற்றச் சாட்டுகளுக்கு ஆளாகும் இளைஞர்களின் வயது தண்டனைக்குத் தடையாக இருக்கக் கூடாது, என்ற விவாதமும் அதிகரித்து வருகிறது. மிகச் சமீபத்தில் பெங்களூரில் பந்த் நடைபெற்றுள்ளது, இருந்த போதிலும், வன்முறை எதிர்ப்பு நடவடிக்கைகளைப் போலவே, வன்முறைக் குற்றங்களும் ஒரு சேர 
அதிகரிப்பதன் காரணத்தை ஏன் சமூகம் இன்னும், ஆராய முற்படவில்லை?

உடைக்கப் பட வேண்டிய கருத்தாக்கங்கள்:

போராட்டங்கள் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் குற்றங்களைத் தடுப்பது, குறித்த விழிப்புணர்வை ஓரளவு உருவாக்கி வருகிறது. அதே நேரத்தில் பெண் மீதான நுகர்வு வேட்கையையும், தூண்டி விடுகிற செயல்களும் அதிகரித்துள்ளது. ஆம் சமூகத்தில் பெண் ஒரு சக மனுசி என்று கருதப் படாமல், நுகர் பொருள் என்ற கருத்தே வலுவாக பதிவாக்கப் பட்டுள்ளது. எனவே தான் போராட்டங்களை விடவும் பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை பெருகி உள்ளன. இந்நிலையில் கருத்தாக்கங்களை மாற்றுவதும் மிக அவசியமாகும்.

யுனிசெஃப் 2012ல் வெளியிட்டு இருக்கும் ஆய்வறிக்கை, ”இந்தியாவில் 15 முதல் 19 வயதுக்கு உள்பட்ட ஆண்களில் 57 சதமும், பெண்களில் 53 சதமும், கணவனால் மணைவிகள் அடித்து துன்புறுத்தப் படுவது நியாயம் என்றே புரிந்து கொண்டுள்ளனர். ஏனென்றால் பெண் மீது ஆணுக்கு இருக்கும் ஆதிக்க உரிமை ஆகும்”, என்று கூறுகிறது. இளைஞர்களில் பலரும் இன்று கூட்டாக பாலியல் பலாத்கார செயலில் ஈடுபடுவதற்கு மேற்படி புரிதலும் ஒரு காரணமாக இருக்கிறது.

புராணங்களில், காப்பியங்களில் பெண்கள் இரண்டாம் பாலினம் தான், என்னும் கருத்துக்கள் ஏராளமாக முன்வைக்கப் பட்டுள்ளன. அதிக மக்களைக் கவர்ந்த ஊடகமான, வண்ணத்திரை கதைகள் பலவும், பெண்ணை தாழ்வாகவே வடிவமைத்துள்ளது. ஒருவேளை ஒரு பெண் சுயமரியாதை உணர்வுடன் செயல் பட்டாலும், அவள் கட்டுப்படாதவள் அல்லது அவள் ஒரு மாதிரி, என்ற கருத்து, கதையின் நீதியாக முன்வைக்கப்பட்டு, வணக்கம் சொல்லி முடிந்துவிடும்.

இதன் தொடர்ச்சியே இன்றைய அரசியல் தலைவர்களின் கருத்தாக நீள்கிறது. சமீபத்தில் முலாயம் சிங் யாதவ் ஆண்கள் என்றால் அப்படித் தான், இதைப் பெரிது படுத்தலாமா?, என்று கவலைப் பட்டுள்ளார். மற்றொரு புறம், மார்க்சிஸ்ட்டுகளின் வீட்டுப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய, எங்கள் பையன்களை அனுப்புவேன், என நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள, தபஸ்பால் என்ற திருணாமுல் காங்கிரஸ் பிரமுகர் பேசியுள்ளார்.

மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் பெண்களுக்குப் பாதுகாப்பான இடம் எனக் கருதக் கூடிய அவர்களின் வீடுகளிலும் பாதுகாப்பில்லை, எனவே பாலியல் குற்றங்கள் பற்றி பேச என்ன இருக்கிறது? என வினா எழுப்பி, எல்லோரும் மோசம் தான் என பதிலும் உரைத்து, அமைதிப்படுத்த முயற்சிக்கிறார். தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் பெண்கள் படிப்பு காரணமாக, புகார் அளிப்பது அதிகரித்து வருகிறது. மற்றபடி பெண்கள் மீதான குற்ற எண்ணிக்கை உயரவில்லை, என பேசியுள்ளார். மத்திய பாதுகாப்புத் துறை அருண்ஜேட்லி, 2012 டிசம்பரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட நிர்பயா பிரச்சனை பெரிதாக எடுத்துக் கொள்ளப் படவில்லை என பேசி, கடும் கண்டனம் காரணமாக, வருத்தம் தெரிவித்து உள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், மூத்த அரசியல் வாதிகள், சினிமா கதைகளை உருவாக்கும் அறிவு ஜீவிகள், காப்பியங்களை மறுவாசிப்பு செய்யத் தூண்டும், எழுத்தாளர்கள் போன்ற முதல் தர குடிமக்கள் என அழைக்கப் படுபவர்களிடம் இருந்தே பெண்கள் குறித்த பார்வையை மீட்டெடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. இந்நிலையில் கொடூர காமஉணர்வு படைத்தவர்களின் குற்றச் செயல்களை எந்த வகை மக்களைக் கொண்டு  தடுக்க  போகிறோம்?.

கேள்விக்குள்ளாகும் காட்சி விளம்பரங்கள்:

சென்னையில் 1998ல் சரிகாஷா என்ற மாணவி ஈவ்டீசிங் காரணமாக இறந்து போனார். அப்போது, தமிழ் சமூகம் பல்வேறு எதிர்ப்புகளை வெளிப்படுத்தியது. அன்று சென்னைப் பல்கலைக் கழக மாணவிகள் சிலர், பேருந்துகளில் ஈவ்டீசிங் செய்யும் ஆண்கள் குறித்த தகவல்களைச் சேகரித்தனர். அதில் பெண்களைச் சீண்டுதல், கூட்ட நெரிசலைப் பயன் படுத்தி, உரசுதல் அல்லது வரம்பு மீறுதல் ஆகிய செயல்களைச் செய்தோர், பெரும்பாலும் 35 வயதைக் கடந்தோர், என்பது கண்டறியப் பட்டது.

சிரித்தல், நகைப்புக்காக நையாண்டி செய்தல் போன்ற செயல்களில் ஈடுபட்ட மாணவர் அல்லது வளர் இளம் பருவத்தினர், இன்று மாறி உள்ளனர். பெண்களை நுகர்ந்தே தீர வேண்டும் என்கிற அளவிற்கு வெறியூட்டப்பட்டு உள்ளனர்.  தொலைக்காட்சி விளம்பரங்கள், எந்த தணிக்கைக்கும் உள்ளாவதில்லை. விளம்பரம் மட்டுமே குறியாக இருக்கிறது. அது ஏற்படுத்தும் கருத்து மீது எந்த ஒரு விவாதமும் நடைபெறுவதில்லை.

உதாரணத்திற்கு டியோடரண்ட் குறித்த விளம்பத்தில், ”வெறும் டியோடரண்ட் பயன்படுத்துவதன் மூலம் பெண்களைக் கவர முடியாது”, எனக் கூறுவது பெண்களுக்கு எதிரான பயங்கரமான வாசகம். மற்றொரு நிறுவனம், இரண்டு இளைஞர்களில் யார் அதிகப் பெண்களை ஈர்த்தவர்கள் என்பது குறித்து தன் கையில் இருக்கும் மானிட்டரில் பார்த்து பூரித்துக் கொள்ளும் காட்சியை விளம்பரம் செய்கிறது. இங்கு டியோடரண்ட்டின் தேவை, வியர்வை, துர்நாற்றம் ஆகியவற்றில் இருந்து பாதுகாக்க, என்பதை விட பெண்களை ஈர்க்க, என்ற கருத்தே மேலோங்குகிறது. இது சமூகத்தில் நேர்மறை தாக்கத்தை எப்படி ஏற்படுத்தும்?

கைபேசி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி மூலமான சேவைகளைச் செய்வது, சில கேள்விகளை எழுப்புகின்றன. நர்மதா 25, விரிவுரையாளர், ரஷ்மி 21, மாணவி, பிந்து 23, பிபிஓவில் பணி ஆகியோர் தற்போது நேரடி சாட்டிங்கிற்காக தயார், இலவச பதிவு, சாட்டிங்கைத் துவக்கிட, 12630066 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும், கட்டணம் ரூ.5 மட்டுமே. இப்படி ஒரு குறுஞ்செய்தி பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப் பட்டுள்ளது.

நிறுவனங்களின் விளம்பரத்திற்காக என்றாலும், ”நயன்தாராவின் வீடியோ கலெக்‌ஷன் வேண்டுமா? பின்வரும் இணைய தளத்தினைத் தொடர்பு கொள்ளவும். உங்களின் கனவு தேவதை அல்லது தேவனை கண்டறிய, இந்த எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும். நல்ல அழகான வடிவம் கொண்ட பிக்னி உடை மாடல்களுக்கு, ரூ 29 மாதக் கட்டணம் செலுத்தி, கிளிக் செய்யவும். 18 வயதுக்கு மேலான ஆண்கள் வேடிக்கையான நகைச்சுவைக்கு இந்த எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பவும்” என்ற அளவிற்கு வாடிக்கையாளர்களைப் பெண்கள் மீதான நுகரும் வேட்கையைத் தூண்டும் வகையிலான, சேவைகளைச் செய்யத் தான் வேண்டுமா?

இது போன்ற விளம்பரங்கள் தடுக்கப்படுவது, அரசின் கடமையாக இருத்தல் வேண்டும். மீன் விற்ற காசு வேண்டுமானால் நாறாமல் இருக்கலாம். அதில் உழைப்பும், உணவும் இருக்கிறது, என பெருமை கொள்ளும் நியாயம் இருக்கிறது. ஆனால் மேற்கூறிய தன்மையிலான குறுஞ்செய்தி மூலமான விளம்பரம், பெண்ணை கொச்சைப்படுத்துவது மட்டுமல்ல, பால் இச்சையைத் தூண்டி, சமூகத்தைச் நாறடிக்கவும் செய்கிறது.

கைபேசி மற்றும் இணையதளங்களின் வளர்ச்சி சிறந்த அம்சம் என்பதை மறுக்க முடியாது. ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் அவைகள் அறிவு மற்றும் ஆற்றல் மேம்பாட்டிற்காகப் பயன்படுத்தப் படுவதை விட, நுகர்வு உணர்வையும், பாலினக் கவர்ச்சி மீதான நாட்டத்தை அதிகப்படுத்தவுமே உதவுகிறது. சில கூட்டான பாலியல் பலாத்கார நிகழ்வுகள் செல்ஃபோன் வீடியோக்களைப் பார்த்துக் கொண்டே நடைபெறுகிறது, என்கின்றனர்.

எனவே கருத்தாக்கங்களை உடைத்து, பாலின சமத்துவத்திற்கு முக்கியத்துவம் தரவேண்டிய தேவையை சமூகம் உணர வேண்டும். சிறுவயது முதலே தொழில் நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தும் சூழல் வளர்ச்சி பெற்றுள்ளதைக் கணக்கில் கொண்டு, தனிமனிதனின் அறிவு மற்றும் ஆற்றல் வளர்ச்சிக்கும், சமூக மேம்பாட்டிற்கும் பயன்படுத்தத் தூண்டுவது  அவசியம். எல்லாவற்றிற்கும் மேலாக விளம்பரம் மற்றும் கதைகளில் பெண் குறித்த சித்தரிப்புகளை சமூக கண்ணோட்டத்தில் மாற்றி அமைத்திட வேண்டும். அதுவே பெண்ணை ஒரு சக மனுசியாக மதிக்கத் தூண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக