வியாழன், 12 நவம்பர், 2015


எழுத்தறிவு தினத்தின் அடுத்த கட்ட வளர்ச்சி!!!

செப்டம்பர் 8 உலக எழுத்தறிவு தினம். 1946ம் ஆண்டு, யுனெஸ்கோவின் முதல் பொது மாநாடு நடைபெற்ற போது, உலக அளவில் கல்விக்கான சிறப்புக் கவனம் தேவை என்ற விவாதம் எழுந்தது. ஆனால் 1965ம் ஆண்டில் டெஹ்ரானில் நடைபெற்ற பொது அமர்வில் தான், செப்டம்பர் 8 ஐ உலக எழுத்தறிவு தினமாக கடைப் பிடிப்பது என முடிவெடுக்கப் பட்டது. முடிவு பொன்விழாவை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், எழுத்தறிவு தினத்தின் தேவைகள் மற்றும் தொடர் கவனம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

உலக அளவில் எழுத்தறிவின்மையை ஒழிப்பதற்காகக் கூடிய கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் எடுக்கப் பட்ட இந்த முடிவைத் தொடர்ந்து கல்விக்கு ஒதுக்கீடு செய்யும் நிதியின் அளவு சற்று உயர்ந்தது. இருந்தாலும் இன்றைய தேவைக்கு அது முன்னேறவில்லை, என்பதனால், தற்போது தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. உலக எழுத்தறிவு தினக் கொண்டாட்ட உணர்வு கூட மங்கி வருவதாக யுனெஸ்கோவை சார்ந்த அலுவலர்கள் குறிப்பிட்டு உள்ளனர். எழுத்தறிவு என்பதுடன் சமூக அறிவு குறித்த புரிதலும், அதன் மீதான அக்கறையும் உயரும் போது தான், கல்வி பெற்றவருக்கும், கல்வி பெறாதவருக்குமான வேறுபாடுகள் தெரியவரும்
கொண்டாட வேண்டிய உலக எழுத்தறிவு தினம்:

இன்றும் இந்தியாவில் எழுத்தறிவற்ற மக்கள் உள்ளனர், என்பதை அரசுகள் கவணிக்க வேண்டும். இந்திய எழுத்தறிவு விகிதம் 2001ல் 64.83%ஆக இருந்தது 2011ல் 73.04% ஆக உயர்ந்துள்ளது. உலக அளவில் உள்ள எழுத்தறிவு விகிதாச்சாரத்துடன் ஒப்பிடுகையில், வளர்ச்சி விகிதத்தில் 10 சதம் இந்தியா பின்தங்கி உள்ளது. இதற்கு காரணங்களாக யுனெஸ்கோ, “இந்தியாவின் நகர் பகுதிகளில் உள்ள 6 லட்சம் குடிசைப் பகுதிகளில் பகுதி நேர ஆசிரியர்களே பணிபுரிகின்றனர். குடிநீர், கழிவறை, வகுப்பறை ஆகிய இல்லாமைகள் ஒரு காரணம். 1:42 என்ற விகிதாச்சாரத்தில் ஆசிரியர் மாணவர் உள்ளனர். இது வகுப்பறையை உயிரோட்டமாக வைத்துக் கொள்ள உதவாது”, எனக் கூறுகிறது. மேலும் 6 முதல் 14 வயதுக்குட்பட்ட  சுமார் 6 கோடி குழந்தைகள் பள்ளிகளில் இல்லை, என்றும் கூறுகிறது.
  
தமிழகம் இந்தியாவில் 14 வது இடத்தில் 80.33% என எழுத்தறிவு பெற்றவர்களின் விகிதாச்சாரத்தில் உயர்ந்துள்ளது. ஆனால் 2001ல் 73.45% என்ற விகிதத்தில் 13வது இடத்தில் இருந்து 14 வது இடத்திற்கு பின்னோக்கி சென்றுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 6.88% விகித வளர்ச்சியை மட்டுமே தமிழகத்தில் பெற முடிந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்திய விகிதாச்சாரம் 9.28% என்ற வளர்ச்சிக்கு உயர்ந்துள்ள நிலையில், தமிழகம் எங்கே தவறிழைத்தது, என்பதைக் கண்டறிய வேண்டும்.

மதிய உணவு, சத்துணவு ஆகிய திட்டங்களை அமலாக்கம் செய்து தமிழகம் அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் முன்னோடியாக விளங்கினாலும், தமிழகத்தை விடவும் 13 மாநிலங்கள் முன்னேறிய நிலையில் உள்ளன, என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். மேற்படி நலத்திட்டங்கள் கடந்து மேலும் செயலாற்ற வேண்டிய இடத்தைக் கண்டறிய வேண்டும். குறிப்பாக அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி சட்ட அமலாக்கம், குறித்த அக்கறை, தீவிரமாக வெளிப்பட வேண்டிய தருணம்.

இதற்கு உலக எழுத்தறிவு தினம் போன்ற நாட்களைக் கொண்டாடுவது, மிக அவசியத் தேவை. வேறுபல தினங்களுக்குக் கிடைக்கிற கவர்ச்சியோ, விளம்பரமோ எழுத்தறிவு தினத்திற்குக் கிடைப்பதில்லை. அரசு எடுக்கும் முயற்சி மட்டுமே எதிரொலித்துள்ளது. இந்த அனுபவத்தில் இருந்து எழுத்தறிவு தினத்தை முன்னிலும் கூடுதலாக கடைப்பிடிக்கவும், செயல்படுத்தவும் பல இயக்கங்களை அரசு முயற்சியில் ஒருங்கிணைக்க முடியும். 

கட்டாயக் கல்வி சட்டம்:

தமிழகமோ அல்லது இந்திய அரசோ மேற்கொள்ள வேண்டிய கடமை பின்தங்கிய மாவட்டங்களில், மாநிலங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது ஆகும். உதாரணத்திற்கு கன்னியாகுமரி 92.14% அதிக எழுத்தறிவு உள்ள மாவட்டமாக உள்ள நிலையில், தருமபுரி 64.71% என கடைசியாக பட்டியலில் உள்ளது. சேலம், தருமபுரி, கிருஷ்னகிரி, நாமக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஆரம்பக் கல்வி பயிலும் குழந்தைகளில் 59 சதமானோர் பாதியில் நின்றவர்கள். அப்படி நின்றவர்களில் 80 சதக் குழந்தைகள் குழந்தை உழைப்பாளர்களாகி உள்ளனர். இவர்களில் பெரும்பாலும் தலித் குழந்தைகள் ஆவர். இந்த தகவலை CRY போன்ற அமைப்புகள் குறிப்பிடுகின்றன.

மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் ஒருபகுதி தொழில் வளர்ச்சி மற்றும் விவசாய வளர்ச்சியைப் பெற்று இருந்தாலும் சமூக வளர்ச்சியைப் பெறவில்லை. மற்றொரு பகுதி பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக வளர்ச்சி ஆகிய இரண்டையும் பெறவில்லை என்பதைக் காணமுடியும். எனவே இங்கு அரசு கட்டாய இலவசக் கல்வி வழங்கும் நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதே நேரத்தில் இங்குதான் மிக அதிகமான தனியார் பள்ளிகளும் உள்ளன. அதில் 25 சத இடஒதுக்கீட்டை கட்டாய இலவசக் கல்விக்காக அரசு உறுதி செய்யும் நடவடிக்கைகளையும் கையாள வேண்டும்.

மாநிலத்திற்குள்ளேயே இடம்பெயரும் குடும்பங்கள் அதிகரித்து வருகின்றன. வேலைச்சூழல் இதர சமூகப் பிரச்சனைகளின் போது, ஏன் வெளியேறுகிறோம்?, என்பதை அறியாமலேயே பெற்றொருடன் கிராமங்களை விட்டு, குழந்தைகளும் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது. இத்தகைய சூழலைக் கையாள நமது நிர்வாக அமைப்பு குறிப்பாக பள்ளி கல்வித் துறை, குழந்தைகளின் கல்வி வாய்ப்பை உறுதி செய்வதற்காக சிறப்பு நடவடிக்கைகளை உருவாக்கிட வேண்டும்.

நன்றி: இந்து தமிழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக