செவ்வாய், 29 மே, 2018

தூத்துக்குடி 110 ஆண்டுகளுக்கு முன்னும் பின்னும்

தூத்துக்குடி

22.05.2018 அன்று தூத்துக்குடியில் நடந்த அரசு அரங்கேற்றிய கொலை பாதகம், வரலாற்று ரீதியில் 110 ஆண்டுகளுக்குப் பின் நடந்த கொடூரமாகவே வெளிப்படுகிறது. அன்று பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், இன்று ஏகாதிபத்திய நலன் விரும்பும் இந்திய மற்றும் மாநில ஆட்சியாளர்கள் என்பதே வேறுபாடு. மழை, பெரு வெள்ளம், சுனாமி என பேரிடர் காலங்களில், தமிழகத்தில் இத்தனை ஆண்டுகளுக்கு முன், இதே போல் ஒரு சம்பவம் நிகழ்ந்தது, என விவரிப்பது ஒரு வழக்கமாக இருந்து வருகிறது. அழிவுகளில் இருந்து பாடம் கற்க இவைப் பயன்படவும் செய்கிறது. போராட்ட வரலாறும், அத்தகையதே.  

பெரு முதலாளிகள் மற்றும் இயற்கை வளக் கொள்ளையர்கள் இன்று சட்டப் பாதுகாப்புடன், ஜனநாயகம் என்ற போர்வையை போர்த்தி கொண்டு, தனது செயலை அரங்கேற்றி வருவது கண்கூடு. அன்றைய காலனி ஆதிக்க பிரிட்டன் அரசு, இந்தியா போன்ற நாடுகளின் செல்வாதாரத்தையும், தொழிலாளார்களையும் சுரண்டி செல்வது உரிமை என செய்து வந்தது. ஜனநாயகம் இப்போது பெரிதாகப் பேசப் பட்டாலும், அது உழைக்கும் மக்களுக்கும் பொதுச் சொத்தை அனுபவிக்க வேண்டிய பெரும்பான்மை மக்களுக்கும் எதிராகவே உள்ளது. எனவே உண்மையான ஜனநாயகத்திற்கான போராட்டமே, அன்றும் இன்றும் நடந்துள்ளது. தூத்துக்குடி நகரம் அதற்கு மிகச் சிறந்த உதாரணம்.

கோரல் மில் தொழிலாளர்களின் போராட்டம்:

தொழிலாளர்களின் போராட்டத்தில் தூத்துக்குடி மிக முக்கிய பங்களிப்பை செய்துள்ளது. 1888 ம் ஆண்டு காலத்தில் கோரல் பஞ்சாலை, தூத்துக்குடி கடற்கரை சாலையில் துவக்கப்பட்டது. இன்று அது மதுரா கோட்ஸ் என அழைக்கப்படுகிறது. அந்த ஆலையில் 10 முதல் 12 வயது சிறுவர்கள் கூட வேலை வாங்கப் பட்டனர். காலை 6 முதல் மாலை 6 வரை வெளிச்சம் இருக்கும் வரை வேலை வாங்கப் பட்டனர். சாப்பிட, இயற்கை உபாதையைத் தீர்த்துக் கொள்ள, முடியாத அளவிற்கு வேலை பளுவுடன் வேலை வாங்கப் பட்டனர். விடுப்பு இல்லை. விடுப்பு எடுத்தால் சம்பளம் இல்லை என்பதுடன் தண்டனையும் உண்டு.

இந்த கொடுமைகளை அறிந்த ..சி, சுப்பிரமனிய சிவா, பத்மநாப ஐயங்கார் ஆகியோர் தொழிலாளர் உரிமைக்கு குரல் கொடுக்க முடிவு செய்தனர். 1905 ல் வங்கப் பிரிவினையைத் தொடர்ந்து, சுதேஷிப் போராட்டத்தின் தொடர்ச்சியாக, கோரல் மில் தொழிலாளர் பிரச்சனை வெடித்தது.

ஆலை முதலாளிகளை முடக்குவதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று இயந்திரங்களைச் சேதப்படுத்துவது, மற்றொன்று, வேலை நிறுத்தம் செய்வது. அதில் வேலை நிறுத்தம் என்ற வழியை உடனே பின்பற்றுவது என முடிவு செய்துள்ளனர், என 26.02.1908 தேதியிட்ட போலீஸ் அறிக்கை கூறியுள்ளது. 27.02.1908 அன்று வேலை நிறுத்தம் துவங்கியுள்ளது. ஊதிய உயர்வு மற்றும் வாரவிடுப்பு போன்ற கோரிக்கைகள் முதன்மை இடத்தை பிடித்துள்ளன.

144 தடை உத்தரவு புதிதல்ல:

கோரல் பஞ்சாலையில் வேலை நிறுத்தம் துவங்கிய உடன் அன்றைய திருநெல்வேலி ஆட்சியர் தூத்துக்குடி நகரத்திற்கு போலீஸ் படையை அனுப்பியதுடன், தூத்துக்குடி நகரத்தில் 144 தடை உத்தரவையும் பிறப்பித்துள்ளார். ஆலை முதலாளிகளின் தேவையை நிறைவேற்றுவதே அரசின் கடமையாக காலனியாதிக்க ஆட்சியும், இன்றைய மக்களாட்சியும் கொண்டிருப்பதை புரிந்து கொள்ள முடியும். நீதிமன்றங்களும் இத்தகைய தேவைக்கு துணை செய்துள்ளதே வரலாறாக இருந்துள்ளது.

தூத்துக்குடி நகர மக்களோ அன்றும் இன்றும் ஒரே மாதிரி  ஆட்சியாளர்களுக்கு எதிரான உணர்வை வெளிப்படுத்தி வருகின்றனர். அன்றைய கோரல் மில் நிர்வாகம் தொழிலாளர் கோரிக்கையை ஒரு பொருட்டாக கருதாத நிலையில், தூத்துக்குடி நகர மக்கள் போராடிய தொழிலாளர்களுக்கு ஆதரவாக தங்களின் ஒருமைப்பாட்டை சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் கடைகளை அடைத்தனர். வெள்ளையர்களுக்கு வீட்டு வேலை செய்ய மறுத்தனர். உணவு விடுதிகளை மூடினர். சவரம், சலவை போன்ற வேலைகளைச் செய்ய மறுத்தனர். இலங்கையில் இருந்து உணவு வரவழைத்து ஆங்கிலேயர்கள் சாப்பிடும் நிலை உருவானது. 05.03.1908 அன்று அன்றைய இந்து நாளிதழ், A Barber refuses to Shave என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது.

06.03.1908 அன்று, ..சி யைத் தேடி வந்து பேச்சு வார்த்தை நடத்தும் நிலைக்கு நிர்வாகம் நெருக்கடிக்கு ஆளானது. 50 சத சம்பள உயர்வு, வாரவிடுப்பு ஆகியவை ஏற்க பட்டு மகத்தான வெற்றியைத் தொழிலாளி வர்க்கம் பெற்றது. ஆனால் ஒரே வாரத்தில் ..சி ஐயும், சுப்பிரமணிய சிவாவையும் பழி வாங்கும் எண்ணத்தில் செயல் பட்ட ஆட்சியர் ஆஷ், பிபின் சந்திர பாலின் விடுதலையை கொண்டாடிய தலைவர்கள் மீது வெளிப்படுத்தினான். 12.03.1988 அன்று நெல்லையில் ..சி மற்றும் சிவா ஆகியோரைக் கைது. செய்தான். கிளர்ந்தெழுந்த மக்களை அடக்க தானே குதிரையில் வந்து துப்பாக்கி சூடு நடத்தினான். 4 பேர் கொல்லப்பட்டனர்.

பிரித்தாளும் சூழ்ச்சி அன்றும் இன்றும்:

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மக்களை பிளவு படுத்த பல கேடுகெட்ட செயல்களில் ஈடுபட்டது வரலாறு. வங்கப்பிரிவினை இந்து முஸ்லிம் ஒற்றுமையை சீர்குழைக்கும் நோக்கம் கொண்டது. தமிழகத்திலும் அத்தகைய பல முயற்சிகள் எடுக்கப் பட்டு தோல்வி அடைந்தது. நெல்லை மற்றும் தூத்துக்குடியில் மூன்று நாள்கள் பற்றி எறிந்த நெருப்பை அடக்கவும் அவ்வாறு முயற்சி. செய்துள்ளதாக கூறப் படுகிறது. ஆனாலும் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பும், உழைக்கும் மக்களின் ஒற்றுமையுமே வெற்றி பெற்றது.

இன்று தூத்துக்குடியில் நடந்த கொடூரத்தையும், ஆட்சியர்களின் அதிகாரத்தையும், அரசுகளின் நிர்வாகத்தையும் அதே வழியில் தான் பார்க்க முடிகிறது. வருடம் 110 முடிந்தாலும், கொள்கை, செயல் ஆகியவற்றில் அரசுகளின் தன்மை மக்களுக்கு எதிராகவும், முதலாளி மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவாகவும் இருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. குறிப்பாக மத்திய பாஜக ஆட்சி, அனைத்து வகையிலும் தனது முதலாளித்துவ ஆதரவு நிலைபாட்டை மக்கள் மீது திணிக்கிறது. அதற்கு சாதகமாக தனது மத அடிப்படையிலான, வகுப்பு வாத பிரிவினையைத் திணிக்கிறது.

முகநூலில் பேரா. . மார்க்ஸ், தூத்துக்குடி வாழ் மூத்த பேரா. . சிவசுப்பிரமணியம் தன்னிடம் தொலை பேசியில் கூறிய விவரத்தை பதிவிட்டுள்ளார். அதில், பேரா. . சிவசுப்பிரமணியன் மேற்படி துப்பாக்கி சூட்டினைக் கண்டிக்காத இந்துத்துவா அமைப்பினர், இப்போராட்டத்தில் கடற்கரை வாழ் மக்களே காரணம் எனக் கூறியதாக குறிப்பிடுகிறார். மேலும் இது குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார். அதாவது, கடற்கரை மக்களின் வழிபாட்டு முறை, இறை நம்பிக்கை, தூத்துக்குடி மட்டுமல்ல அனைத்து பகுதி மக்களும் நன்கறிந்த உண்மை.

ஒரு அடையாளத்தின் வழி நின்று, முதலாளிகளைக் காக்கும் கடமையை இந்துத்துவா அமைப்பினரும், பாஜகவும் பகிரங்கமாக செய்து வருகிறது. இத்தகைய சிந்தாந்த நோக்கத்திற்கும்,  சுரண்டலுக்கும் ஒத்து ஊதுகிற, ஒரு அடியாள் பணியை, மாநில அதிமுக அரசு மேற்கொண்டு வருகிறது.

அன்றைய போராட்டத்தின் படிப்பினையில் இருந்து:

தூத்துக்குடி நகரின் கோரல் மில் தொழிலாளர் போராட்ட வெற்றியைத் தொடர்ந்து, அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்ட போது, தொடர்ந்து ..சி மற்றும் சிவா போன்ற தலைவர்கள் கைது செய்யப் பட்டனர். இது தலைமையற்ற போராட்டத்திற்கு வழிவகுத்தது. மேலும் தொழிலாளர்கள் பெற்ற சம்பள உயர்வு மற்று வாரவிடுப்பு என்ற வெற்றி ஒப்பந்ததையும் கோரல் மில் நிர்வாகம் ரத்து செய்தது. எல்லா காலத்திலும், பெரும் எழுச்சி மிக்க தன்னெழுச்சி போராட்டங்கள், சரியான தலைமை இல்லாத சூழல் உருவாகும் போது, அடக்கப்படுவது நடைபெற்றுள்ளது, என்பதை அறிய முடிகிறது.

ஜல்லிக் கட்டு போராட்டம் அண்மையில் பார்த்த மற்றுமொரு உதாரணம். எல்லோரும் கூட்டாக போராடுவது அவசிய தேவை.. ஆனால் ஒரு பொறுப்பான ஒருங்கிணைப்பு குழு அல்லது கூட்டான தலைமை, போராட்டத்திற்கும், அரசு அடக்குகிற போது எதிர் கொள்வதற்கும் தேவை, என்பது வரலாறு நமக்கு சொல்லும் பாடம். தலைமையற்ற தன்னெழுச்சி போராட்டம், தற்காலிக வெற்றிகளைத் தரலாம். தீர்வை நோக்கி போராடவும், வலிமையான மாற்று செயல் திட்டத்தை முன் வைக்கவும் கொள்கை ரீதியிலான ஒருங்கிணைப்பும் ஒற்றுமையும் அவசியம்.

இன்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஸ்டெர்லைட் ஆலை திறக்கப் படும் சூழல் இல்லை, என தெரிவித்தார். ஆனால் ஸ்டெர்லைட் நிர்வாகம் அவ்வாறு மூடி விட்டு செல்லும் எண்ணம் இல்லை என்கிறது. இதில் எதை எடுத்து கொள்வது. 2500 புற்று நோய் பாதித்தவர்கள் தூத்துக்குடியில் இருக்கிறார்கள், எனவே எதிர்கிறோம் என்பது முக்கியமான ஒன்று. இயற்கைவளம், சுற்றுச்சுழல், ஆகியவை குறித்தும், வேலைவாய்ப்பு, வறுமையில் இருந்து விடுதலை, ஆகியவை குறித்தும் இணைத்து குழப்பம் விளைவிக்கும் ஆட்சியாளர் முன், தெளிவான, மாற்று கொள்கையுடன் போராடும் தலைமையை கண்டறிவது காலத்தின் தேவை. இடதுசாரிகள் அதை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

முதலாளித்துவமும் இன்றைய இந்துத்துவாவும் கூட்டாக, ஜனநாயக பறிப்பையும் வளர்ச்சியையும் இணைத்து குழப்பம் விளைவிக்கிறது. இந்நிலையில், இடதுசாரிகளின் போராட்ட பலமும், செல்வாக்கும் உயர வேண்டியுள்ளது.