திங்கள், 22 நவம்பர், 2010

அரசு வேலை உரிமை 7


சமூக நீதிக்கான போராட்டம், நவீன தாராளமயமாக்கல் கொள்கைகளுடன் சமரசம் செய்து கொள்ளும் நிர்ப்பந்தம், மாநில முதலாளித்துவ அரசியல் கட்சிகள் மத்திய ஆட்சியில் கூட்டணி அமைக்கத் துவங்கிய பிறகு அதிகரித்துள்ளது. அதிகாரம் பெறுவதில் முன்னெழுகிற போட்டி, பல பிராந்திய முதலாளித்துவ கட்சிகளை, தனது கொள்கைகளை விலக்கி வைக்கும் சூழலை ஏற்படுத்துகிறது.

அதேநேரத்தில், முதலாளித்துவ பொருளாதார கொள்கைகளுக்கு எதிரான ஒருங்கிணைப்பைத் தடுக்கும்விதத்தில் அடையாளங்களை முன்னிறுத்தும் அரசியல் நடவடிக்கையையும் பாதுகாக்கிறது. நமது நாட்டில் காஷ்மீர் துவங்கி, எட்டுத் திசைகளிலும் புதுப்புது அரசியல் இயக்கங்கள் அடையாளத்தை முன்வைத்து வளர்ச்சி பெற்று வருகின்றன.

உழைக்கும் மக்களாக உள்ளவர்களை சாதி, மதம், இனம் ஆகிய அடையாளங்களின் பெயரில் அதே அடையாளங்களைத் கொண்ட, முதலாளிகளுடன் இணைந்து கொண்டு, ஒரே அடையாளம். எனவே உரிமை கேட்கிறோம், என்று உணர்ச்சி வசப்படுத்தும் அரசியலை நாம் பார்க்கிறோம். இதன் சூத்ரதாரி உலகமயமாக்கல், நவீன தாராளமயமாக்கல் என்பதை உழைக்கும் வர்க்கத்திற்கு உணர்த்துவதில் மக்கள் இயக்கங்கள் சிரமப்படுகின்றன. இந்தியாவில் 1990களுக்குப் பின்னர்தான் சாதிய மோதல்களும், அடக்கப்பட்டவர்களுக்கான உரிமைக்கான போராட்டமும் வலுப்பெற்று இருப்பதாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாக, பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கான உரிமைகளை முன்வைத்து, பொதுமக்களைத் திரட்டுவது அதிகரித்துள்ளது.

ஆனால், இதே காலத்தில் தான் உலகமயமும், நவீன தாராளமயமும் இந்தியாவின் எல்லா திசைகளிலும் வெற்றி நடைக்கு முயற்சித்து உள்ளது. அரசுத்துறையில் இரண்டாம் கட்ட சீர்திருத்தம் என்ற பெயரில் மத்திய. மாநில அரசுகள் காலிப்பணியிடங்களை அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. நாடு முழுவதும் 30 லட்சத்திற்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளன. தமிழகத்தில் சுமார் 2.5 லட்சம் பணியிடங்கள் காலியாக வைக்கப்பட்டு இருக்கிறது.

அதே நேரத்தில் பெருகி இருக்கும் மக்கள் தொகைக்கும் இன்றைய அரசுஊழியர், ஆசிரியர் ஆகியோரின் எண்ணிக்கைக்கும் இடைவெளி அதிகரித்து வருகிறது. மக்கள் தொகை மற்றும் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசுஊழியர், ஆசிரியர் பணி நியமனங்கள் அதிகரிக்குமானால், மத்தியிலும், மாநிலத்திலும் புதியதாக பல லட்சம் பணியிடங்கள் உருவாகும்.

இத்தகைய காலிப்பணியிடங்கள் மற்றும் புதிய பணியிடங்கள், நிரப்பப்படவோ, உருவாக்கப்படவோ செய்தால் சமூக ரீதியில் ஒடுக்கப்பட்ட பின்தங்கிய மக்களுக்கான இடஒதுக்கீடு கிடைக்கும். இதன்மூலமே கடந்த காலத்தில் இழந்த சமூகநீதியை மீட்டெடுக்க முடியும். இதே நிலைதான் பொதுத்துறை நிறுவனங்களிலும் பிரதிபலிக்கிறது. உலகமயமாக்கல், நவீன தாராளமயமாக்கல் கொள்கை அமலாகத் துவங்கிய கடந்த 18 அல்லது 19 ஆண்டுகளில் அரசு கைவசம் இருந்த பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போதும், அரசுத்துறைப் பங்குகள் விற்பனை மூலம் வரவு என்பதும் கணக்கீடு செய்யப்படுகிறது. அரசுகளின் இந்த நடவடிக்கை பல லட்சம் வேலை வாய்ப்புகளைப் பறித்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்கள் அடிப்படையில் இந்தியாவில் உள்ள தொழிலாளிகளில் 92 சதமானோர் முறைசாராத் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் என்பதையும், 8 சதமானோர் மட்டுமே அணிதிரட்டப்பட்ட தொழிலாளர்கள் என்பதையும் அறிய முடிகிறது. வேலையின்மை ஏற்படுத்தியுள்ள மற்றொரு தாக்கம், அரசே ஒப்பந்தத் தொழிலாளர்களை நியமனம் செய்யத் துவங்கியது ஆகும். மிகக்குறைவான கூலி, கடுமையான வேலை, எட்டுமணி நேரத்திற்கும் அதிகமான உழைப்பு நேரம் போன்ற தொழிலாளர் நல உரிமைபறிப்பை அரசே முன்னின்று செய்துவருகிறது. அரசு காலிப்பணியிடங்கள், பொதுத்துறை நிறுவனங்களின் புறக்கணிப்பு, தொழிலாளர் உரிமைபறிப்பு ஆகிய மூன்றையும் பெரும்பாலான தொழிற்சங்கங்கள் கண்டு கொள்வதில்லை.

குறிப்பாக பிற்படுத்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர் என்ற அடையாளங்களுடன் கூடிய தொழிற்சங்கங்களும் இடஒதுக்கீட்டுக்கான போராட்டத்தின் நாயகன் என்று கூறிக்கொள்ளும் மாநில அரசியல் கட்சிகளின் தொழிற்சங்கங்களும் இப்பிரச்சனை குறித்து விவாதிப்பதில்லை. இந்த சமரசத்தை எட்டுவதற்கு உலகமய, தாராளமயக் கொள்கைகளும் உணர்ச்சிமயமாக்கப்பட்ட அடையாள அரசியலும் பங்களிப்பு செய்திருக்கிறது. முதலாளித்துவத்தின் லாபத்தைப் பாதிக்காத அரசியல் பொருளாதாரம் தெளிவாக அமலாவதைப் பார்க்க முடியும். இதுபோன்ற அமைப்புகளின் சமூக உரிமைக்கான போராட்டம், சம்பந்தப்பட்ட சமூகத்தினை பொருளாதார ரீதியாக சுரண்டிக் கொள்வதற்கான லைசன்சாக மாற்றப்பட்டு வருகிறது.

சாதிய அமைப்புகளும், பெண்ணுரிமை பேசுகிற சில தன்னார்வக் குழுக்களும் இதே காலத்தில் இளம்பெண்கள் மீது நிகழ்த்துகிற உழைப்புச் சுரண்டல் மற்றும் பாலியல் சுரண்டல் குறித்து பெரும்பாலும் பேசுவதில்லை. குறிப்பாக, தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பெண்களே சுமங்கலித் திட்டம், மாங்கல்யத் திட்டம், கேம்ப் கூலி போன்ற பெயர்களில் இளம் பெண்களின் உழைப்பைச் சுரண்டுகிறது.

நாடும், மக்களும் தொழில்நுட்ப ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் வளர்ந்து விட்டது என சிலர் பேசுகின்றனர். ஆனால், பழைய நிலப்பிரபுத்துவ சமூகத்தில் வயலைச் சுற்றி அடைத்து வைக்கப்பட்ட மனிதக் கூட்டம், உழைப்பைக் காலநேரம் இல்லாமல் மன்னர்களுக்கும், பண்ணையாளர்களுக்கும் அர்ப்பணித்ததைப் போல், இந்த நவீன தாராளமயமாக்கல் கொள்கை, தன் உழைப்புச் சுரண்டல் என்ற சமூகக் கொடுமையைப் பூட்டி வைத்த விடுதிகளுக்குள்ளிருந்து அமலாக்கிக் கொண்டிருக்கிறது. இதோடு இணைத்து பாலியல் சுரண்டலையும் அரங்கேற்றி வருகிறது. இவை வேலையின்மை என்ற சமூகக் கொடுமையினால் பிரசவிக்கப்பட்ட அவலங்கள் என்பதை பல்வேறு சாதீய அமைப்புகள் ஏற்க மறுக்கின்றன. பல லட்சம் பெண் தொழிலாளர்கள் தமிழகத்தின் பஞ்சாலைகளிலும், கோடிக்கும் அதிகமான பெண் தொழிலாளர்கள் நாடு முழுவதிலும் சுரண்டப்பட்டு வருகின்றனர்.

வேலை கொடுப்பது அல்லது முறைப்படுத்துவது அரசின் கடமை அல்ல என்ற சிந்தனையின் வெளிப்பாடே, மேற்படி சுரண்டல் முறைகள். ஜனநாயக நாட்டில் சொத்து சேர்க்கும் உரிமைக்கு வக்காலத்து வாங்கும் அரசுகளும், அமைப்புகளும் இதுபோன்ற மனித உரிமைகளை பாதுகாக்கும் கடமையை மறுக்கின்றன. அப்படி மறுப்பதற்கு சமூக இயக்கங்களைப் பயன்படுத்துகின்றன என்பதையும் கவனிக்கவேண்டும். இதன் தொடர்ச்சியே, இன்றைய தமிழக ஆட்சியாளர்களின் மொழிப்பற்று. தாய்மொழியில் அல்லது தமிழ் மொழியில் படித்தோருக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை என்ற முழக்கமும் முன்னுக்கு வந்துள்ளது.

தொடரும்...


வெள்ளி, 19 நவம்பர், 2010

கண்களை விற்று சித்திரம் வாங்கினால் கை கொட்டி சிரியாரோ!




லைசன்ஸ் கொடுத்து கொள்ளை அடிக்கும் முறைக்கு சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பெயர் சூட்டினால் தவறில்லை. ஆம் இந்தியாவைப் பொருத்தளவில், இக்கொள்கை, 1965 காலத்திலேயே, ஏற்றுமதி வளாகங்கள் என்ற பெயரில், உருவாகியிருந்தாலும், 2000ன் இறுதியில் இருந்தே வேகம் பெறத் துவங்கியது. அதுவும் குறிப்பாக, 2005, சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கான, சிறப்பு சட்டத்தினை உருவாக்கி அமலாக்கத் துவங்கிய பிறகு, இடது சாரிகளால் மட்டும் பேசப்பட்டு வந்த, வாழ்வாதாரம் மற்றும் தொழிலாளர் குறித்த பாதிப்புகளை, வேறு சிலரும் பேசுகின்றனர். 2007-08 ல் டில்லிக்கு அருகில் உள்ள கோர்க்கான் பகுதியில் நடந்த மிகக் கொடுரமான அடக்கு முறையைத் தொடர்ந்தே பல அரசியல் கட்சிகள் சிறப்புப் பொருளாதார மண்டல பகுதிகளுக்குள் தங்களால் நுழைந்து அரசியல் செய்ய இயலாது என்பதை உணர்ந்தனர். நாடாளுமன்றத்தில், இந்த சிறப்பு சட்டத்தை மே 2005 ல் முன்மொழிந்த போது, இடதுசாரி கட்சிகள், குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் கொடுக்கப்படும், வரி உள்ளிட்ட சலுகைகளைத் திரும்பப் பெற வேண்டும், சட்டத்தில், நிலம் கையக படுத்துவதில் பல்வேறு மாற்றங்கள் தேவை என்பதை எழுத்து பூர்வமாக முன்வைத்தது.

மத்திய அரசு சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கான சிறப்பு சலுகைகளை, அறிவிக்கிற நேரத்தில், அ) பொருளாதார சுழற்சியை கூடுதலாக்குவது, ஆ). ஏற்றுமதி பொருள்களையும், சேவையையும் அதிகரிப்பது, இ). உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது, ஈ). வேலை வாய்ப்புகளைப் பெறுக்குவது, உ). உள்கட்டமைப்புகளை வளர்ப்பது, ஊ). நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை பராமரிப்பது, நாட்டின் பாதுகாப்பு மற்றும் வெளி நாடுகளுடனான நட்புறவை மேம்படுத்துவது, என்ற ஆறு முக்கியமான கருத்துகளை, அத்தியாயம் 2ல், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தெரிவித்துள்ளது. மாநிலத் தி.மு.க அரசு, இது போன்ற சிறப்புப் பொருளாதார மண்டலங்களை உருவாக்குவதன் மூலம், 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில், 20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கப் போவதாக அறிவித்தது. இதை யொட்டியே, தமிழ் நாட்டில் மாநில அரசு தொழில்கொள்கை ஒன்றையும் வெளியிட்டது. அறிவித்து 4 ஆண்டுகளாகும் நிலையில், எத்தனை லட்சம் நபர்கள் வேலை வாய்ப்பை சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மூலம் பெற்றிருக்கிறார்கள் என்பதை மாநில அரசு வெள்ளை அறிக்கை வெளியிட்டால் மட்டுமே, தமிழ்நாட்டு மக்கள் அறிந்து கொள்ள முடியும்.

சி.பொ.ம விற்கான, நிறைய சட்ட சலுகைகள் குறித்த விவாதம் இன்றய தேவை என்றாலும்,. அந்நிய செலாவணி, வேலை, வேலைச் சூழல் ஆகியவை மட்டுமே இக்கட்டுரையில் விவாதிக்கப்படுகிறது.

நாடு முழுவதும் உருவாக்கப் பட்ட சி.பொ.ம க்கள் எண்ணிக்கை 2008 ல் அனுமதி பெற்றவை, 400க்கும் மேல், செயல் பாட்டை துவக்கியவை, 300க்குள் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக 10 மாநிலங்களில் தீவிர ஆர்வம் காட்டப்படுகிறது. சாஃப்ட்வேர் நிறுவனங்கள் தவிர்த்து, அதிக முதலீடு தொலைபேசி அல்லது செல்ஃபோன் உற்பத்தியில் செய்யப்பட்டுள்ளதாக நெதர்லாந்து நாட்டைச் சார்ந்த, சோமா என்ற அமைப்பு இந்தியாவை ஆய்வு செய்து, அறிக்கை வெளியிட்டுள்ளது. 182,042.72 மில்லியன் ரூபாய் தொகையானது கடந்த 15 ஆண்டுகளில், 43 நாடுகள் மூலம் இந்தியாவில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய தொலைபேசி ஒழுங்காற்று ஆணையம் (ட்ராய்), தெரிவித்துள்ள தகவல்படி, மாதம் தோறும் செல்ஃபோன் பயன் படுத்துவோர் எண்ணிக்கை, 60 லட்சம் பேர் அதிகரிப்பதாக சொல்கிறது. 2008 ம் ஆண்டுக்குள் இந்தியாவில் செல்ஃபோன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 25 கோடியாக உயரும் என கூறப்பட்டது. தற்போது செல்ஃபோன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை சுமார் 36 கோடி என மதிப்பிடப்படுகிறது. உலக உற்பத்தியாளர்கள் உள்ளூரிலேயே உற்பத்தியும், சந்தையும் இருந்தால் மிகவும் நல்லது என எதிர்பார்க்கிறார்கள். அப்படி அமைந்து விட்டால் உடனடியாக தங்கள் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய பெரு முயற்சி மேற்கொள்கிறார்கள். இந்த வர்த்தக அடிப்படையிலேயே, இந்தியாவில் செல்ஃபோன் உற்பத்தி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

எல்.ஜி, மோட்டோரோலா, சாம்சங், நோக்கியா, சோனி எரிக்சன், ஃப்ளெக்ஸ்ட்ரானிக்ஸ், எல்கோடெக், ஃபாக்ஸ்கான், அஸ்கோகாம்ப், பெர்லோஸ், சால்காம்ப், இன்கேப், வின்கேட் டெக்னாலஜி, லாயிர்டு, பி.ஒய்.டி, சான்மினா-ஐ.சி.ஏ ஆகிய 16 செல்ஃபோன் மற்றும் உதிரிபாகங்கள் உற்பத்தி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவை அனைத்தும், சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் நோக்கமான ஏற்றுமதியை அதிகப்படுத்த வில்லை, என்பதை இப்போதாவது மத்திய அரசு புரிந்து கொண்டதா? என்பது தெரியவில்லை. எனவே ஏற்றுமதி பெருகும் அந்நிய செலாவணி கையிருப்பு உயரும் என அரசு சொன்னது, நடைமுறைக்கு வரவில்லை மாறாக அரசு ஏமாற்றம் அடைந்துள்ளது. 2008ல் உலகம் முழுவதும், பொருளாதார பெருமந்தம் ஏற்பட்ட போது, இந்தியாவில் செல்ஃபோன் வாங்குவோர் எண்ணிக்கை, 8 சதம் சரிந்தது, என்பது கூடுதல் தகவல்.

அரசின் மற்றொரு அறிவிப்பு, வேலை வாய்ப்பை பெருக்குவது என்பதாகும். இந்திய மொபைல் ஃபோன் சந்தையில் 50 சதத்தைக் கொண்டிருக்கும் நிறுவனம் நோக்கியா. இந்தியாவில் இருக்கும் என கருதப்படுகிறது. சென்னைக்கு அருகில் இருக்கும் திருப்பெரும் புதூரில் மட்டுமே இயங்கும் நோக்கியா, இதுவரை 285 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்துள்ளது. ஆனால் இவ்வளவு பெரிய தொகைக்கு ஏற்ற வேலை வாய்ப்பைத் தரவில்லை. நோக்கியா நிறுவனத்தில் பணிபுரிவோர் எண்ணிக்கை தற்போது 4700 பேர். அதில் 70 சதமானம் பெண்கள். நோக்கியாவிற்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களான, சால்காம்ப், அஸ்கோகாம்ப், ஃபாக்ஸ்கான், பெர்லோஸ், ஜாபில், லாயிர்ட், விண்கேட் ஆகிய அனைத்தும் சேர்ந்து, நோக்கியா அமைந்துள்ள வளாகத்திலேயே செயல்படுகின்றன. சில இன்னும் கட்டுமான பணிகளை முழுமையாக முடிக்கவில்லை. ஆனால் மொத்தமாக வளாகம் முழுவதும் உள்ள தொழிலாளர் எண்ணிக்கை, 30 ஆயிரம் மட்டுமே (ஆதாரம் சோமோ செப்-2009). சிறப்புப் பொருளாதார மண்டலத்தில், அரசு சொன்ன வேலை வாய்ப்பு என்பதும் அதிகரிக்கும் ஏற்பாடு இல்லை.

ஒட்டு மொத்த திருப் பெரும்புதூரில் ஆட்டோமொபைல், மற்றும் மின்னனு சாதன உற்பத்தி என சுமார் 1 லட்சம் தொழிலாளர் பணிபுரிவதாக மதிப்பிடப் படுகிறது. தி.மு.க. அரசு சொன்ன 20 லட்சம் வேலை வாய்ப்பு எப்போது உருவாகும் என தெரியவில்லை. சமீபத்தில் தமிழில் படித்தால் வேலை வாய்ப்பில் முன்னுரிமை, என அவசரச் சட்டத்தினை முன் மொழிந்திருக்கிறது, மாநில அரசு. ஆனால், ஆங்கிலம் தெரியாது என்ற காரணத்தை முன் வைத்து மேற்படி நிறுவனங்கள், உள்ளூர் இளைஞர்களை வேலைக்கு எடுப்பதில்லை, என்ற புகார், திருப்பெரும்புதூர் பகுதி இளைஞர்களிடம் இருப்பதாக சோமோ அமைப்பு தன் ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

வேலை, அந்நிய செலாவணி ஆகிய தனது இரண்டு பிரதான இலக்குகள் குறி தவறிப்போவது குறித்தே, கவலை கொள்ளாத அரசு, தொழிலாளர் நலன் பற்றி அக்கறை கொள்ளுமா? 53 பக்கங்களில், சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கான விதிமுறைகளை, உருவாக்கிய அரசு, தொழிலாளர் நலன் குறித்து, எதுவும் குறிப்பிட வில்லை. சி.பொ.ம வில் ஏதாவது பிரச்சனை முன்னெழுந்தால், அங்கு மத்திய அரசால் நியமிக்கப் பட்டிருக்கும் ஆணையர், அப்பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பார், எனச் சொல்கிறது. மார்க்சிஸ்ட் கட்சி, இந்த சிறப்பு ஆணையர் தேவையில்லை. மாறாக, சர்வ தேச தொழிலாளர் அமைப்பு குறிப்பிட்டதைப் போல், வளர்ச்சி ஆணையருக்கும், குறை தீர்க்கும் அதிகாரிக்குமான அதிகாரங்கள் வேறுபடுத்தி காட்டப்பட வேண்டும். மேலும் தற்போது, பிரிவு 5ல் சொல்லப்பட்டுள்ள தகவல்களுக்குப் பதிலாக, பிரதான விதிகளிலேயே தொழிலாளர் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் இடம் பெற வேண்டும் எனவும், கூட்டு பேர உரிமை மற்றும் தொழிற்சங்க உரிமைகள் உத்திரவாதம் செய்யப் பட வெண்டும் எனவும் தனது அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது.

எனவே தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்கும் எந்த ஏற்பாடும், மேற்படி மண்டலங்களில் இல்லை. கடந்த அக். 31 இரவு ஷிப்டுக்குச் சென்ற அம்பிகா என்ற பெண், பணி நேரத்தில் இயந்திரத்தில் சிக்கி இறந்துள்ளார். இயந்திரத்தை உடைத்து, உயிரைக்காப்பாற்றி இருக்கலாம். விலை மதிப்பு மிக்கது உயிரா? இயந்திரமா? என்ற பட்டிமன்ற விவாதத்தில் அம்பிகா இறந்து போனார். இது நடந்தது, நோக்கியா நிறுவனத்தில், அங்கு தொ.மு.ச. என்ற தி.மு.க.வின் தொழிற்சங்கம் தான் இருக்கிறது. திமு.க யார் பக்கம் நின்று வாதாடும் என்பதை, நெய்வேலி போராட்டமும், ஃபாக்ஸ்கான் போராட்டமும் தமிழ் கூறும் நல் உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது.

சிறப்புப் பொருளாதார மண்டலத்தில், பணி புரியும் தொழிலாளர்களில், பெரும் பாண்மையினர் பெண்கள். திட்டமிட்டு சேர்க்கப்படுகின்றனர். ஏனென்றால், திருமணமாகாத இளம்பெண்கள், இது போன்ற பணிகளில், ஈடுபடும் போது, தொழிற்சங்கம் உள்ளிட்ட, எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டார்கள் என்பது, முதலாளிகளின் கணக்கு. உழைப்புச் சுரண்டலுடன், பாலியல் சுரண்டலையும் சில வேலைகளில் அரங்கேற்று கின்றனர். ஃபாக்ஸ்கான் உள்ளிட்ட நிறுவனங்களில், பெண்களை வார்த்தைகளால், கொடுமைப் படுத்தும் நிகழ்வுகள் இருப்பதாக சோமாவும் குறிப்பிட்டுள்ளது. பெண் தொழிலாளர் என்றால் சம்பளம் குறைத்து கொடுக்கலாம் என்பது, நீண்ட நாள்களாக இந்திய சமூகத்தில் பின்பற்றப் பட்டு வரும் சுரண்டல் நடைமுறை. இதை உலக முதலாளிகளுக்கும், ஆள்வோர் பட்டுக்கம்பளம் விரித்து அறிமுகம் செய்கிறார்கள்.

வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்வோர் யார் என்பதை, ஐ.நா சபை தீர்மானிக்கிற போது, நாளொன்றுக்கு 2 டாலருக்கும், குறைவான வருமானம் உடையவர் என வரையரை செய்துள்ளது. இந்த வரையரைக்கு எந்த விதமான வலியும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே, பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் சம்பளத்தை தீர்மாணிக்கிற போது, 2.1 டாலர், அதாவது 3000ல் இருந்து 4500 ரூபாய் என நிர்ணயிக்கின்றனர். மூன்றாண்டுகளுக்கும் மேலாக சம்பள உயர்வு குறித்த பேச்சு வார்த்தை நடத்தாமல், தொழிலாளர்களை சுரண்ட மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்கின்றன. பிரிட்டிஷார் அல்லது இதர ஐரோப்பியர்கள், இந்தியாவில் இருந்து, கணிம வளங்களையும், செல்வங்களையும் சுருட்டி எடுத்து சென்றதால், இப்போது உலக முதலாளிகளுக்கு, மனித வளத்தைச் சுரண்டும் வேட்டைகாடாக இந்தியா அனுமதிக்கப் படுகிறார்களா?. என்ற கேள்வி தவிர்க்க இயலாததாக இருக்கிறது. அனுமதிக்கக் கூடாது என்பதே, தொழிலாளர் ஆதரவு இயக்கங்களின் நோக்கமாகும்.. எனவே தான் போராட்டம் தவிர்க்க முடியாததாக உள்ளது. போராட்டத்திற்குப் பின்னர் தான், தொழிலாளி மீது தொடுக்கப் படும் தாக்குதல்கள் வெளி உலகிற்கு தெரிய வருகிறது. மார்க்சிஸ்ட் கட்சி குறிப்பிட்டதைப் போல், தொழிலாளர்களைப் பாதுகாக்கும் ஏற்பாடுகளுடன், தொழிற்சாலைகள் துவங்கப் படுவதே சரியானது. கண்களை விற்று சித்திரம் வாங்கினால் கைகொட்டி சிரியாரோ என்பதை நினைவில் கொள்வது நல்லது.

வியாழன், 4 நவம்பர், 2010

 
Posted by Picasa

நவம்பர் புரட்சி – உத்வேகத்திற்கான நினைவலைகள்


இருபது ஆண்டுகளுக்கு முன், கிழக்கு ஐரோப்பாவில் இருந்த கம்யூனிஸ்ட் நாடுகளிலும், அன்றைக்கு இருந்த சோவியத் யூனியனிலும், ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாகிக் கொண்டிருந்தது. அப்போது இன்று இருப்பதைப் போல் அதிகமான மின் ஊடகங்கள் இல்லை தான். ஆனாலும், இருந்த மின் ஊடகங்கள் கிரேன்களில் கம்யூனிஸ்ட் தலைவர்களின் சிலைகளை அப்புறப்படுத்தும் நிகழ்சிகளைத் திரும்ப, திரும்ப ஒளி பரப்பிக் கொண்டிருந்தன. அச்சு ஊடகங்கள் இனி கம்யூனிஸத்திற்கு வாய்ப்பில்லை என எழுதிக் கொண்டிருந்தன. முதலாளித்துவ அறிவு ஜீவிகள், கம்யூனிஸத்திற்கு இறுதி அத்தியாயம் எழுதப் பட்டுவிட்டது, என கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர்.

இருபது ஆண்டுகள் முடிந்த இன்று, ஃப்ரான்சில், போர்ச்சுக்கல்லில், கிரீஸில், ஸ்பெயினில், இத்தாலியில், ஃபின்லாந்தில் என ஐரோப்பா கண்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும், தீப்பிடித்ததைப் போன்ற பெரும் போராட்டங்கள், வேலை நிறுத்தங்கள், பேரணிகளில் நிறைந்து வழியும் வீதிகள், என்ற நிலை உருவாகியுள்ளது. அனைத்து விதமான ஊடகங்களும் தவிர்க்க முடியாமல் சில செய்திகளை வெளியிடுகின்றனவே அல்லாது, சோசலிச நாடுகளில் ஏற்பட்ட மாற்றம் குறித்த பிரச்சாரம் போல் செய்ய வில்லை. முடிந்த அளவிற்கு போராட்ட செய்திகளின் வீரியத்தைக் குறைத்து, தனது முதலாளித்துவ விசுவாசத்தை வெளிப்படுத்தி வருகிறது. முதலாளித்துவ பொருளாதார மேதைகள், அறிவு ஜீவிகள் வாய் திறக்காது மௌனம் காக்கின்றனர்.

மேலே குறிப்பிட்ட இரண்டு அனுகுமுறைகளும், முதலாளித்துவ நலனில் இருந்து முன் வைக்கப்படுகிறது. ஆனால் வறுமையை ஒழித்திட, தொழிலாளர்களின் உரிமையை பாதுகாத்திட, கல்வி, வேலை, சுகாதாரம் போன்ற அடிப்படைத் தேவைகளை அரசு தடையின்றி செய்திட, முதலாளித்துவ அரசினால் முடியாது, என்பது நிரூபனமாகி உள்ளது. கெய்ன்ஸ் போன்ற பொருளாதார மேதைகள் உருவாக்கித் தந்த, தேவை விநியோகம் கொள்கை அல்லது நலத்திட்ட கொள்கை கூட, சோசலிச நாடுகள் இருக்கும் வரையில் தான் தீவிரமாகப் பின்பற்றப் பட்டது. உலகமய கொள்கைகளும், நவீன தாராளமய கொள்கைகளும், கொழுத்த லாபத்தை, முதலாளித்துவத்திற்கு தந்ததாலும், தேசிய அரசுகளே முதலாளிகளிடம் தடுமாறிக் கொண்டிருந்ததாலும், நலத் திட்டங்கள் படிபடியாக கைவிடப் பட்டன.

இரண்டாவது உலக முதலாளித்துவம் தன்னுடைய பகட்டினை நிலை நிறுத்த, ஊகவனிகத்தில் தீவிர அக்கறை கொண்டதாலும், இருப்பே இல்லாமல் கடன் கொடுத்து சிக்கிக் கொண்டதாலும், அமெரிக்க அரசு சப் பிரைம் லோன், என்ற கடன் பிரச்சனையில் மாட்டிக் கொண்டு, இரண்டு ஆண்டுகளாக வெளிவர முடியவில்லை. 2008 செப்டம்பரில் ஏற்பட்ட பாதிப்பு, உலகத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. வாஷிங்டன்னில் ஏற்பட்ட அதிகார மாற்றம் கூட இந்த பின்னனியில் தான் நடைபெற்றிருக்க வேண்டும். கறுப்பினத்தைச் சார்ந்த ஒருவருக்கு அதிபர் பதவி தந்த பெருந்தன்மை என்று தங்கள் ஜனநாயகத்தைப் பற்றி அமெரிக்கா ஆர்ப்பரித்தாலும், முதலாளித்துவத்தின் நெருக்கடியான ஒரு கால கட்டத்தில் பாரக் ஒபாமா அதிபர் பொறுப்பினை ஏற்றிருக்கிறார், என்ற அனுதாப குரல்களும் எழாமல் இல்லை. பால் கிரக்மான் போன்ற கட்டுரையாளர்கள், ”ஒபாமாவிற்கு பொருளாதார ஆலோசனை வழங்குபவர்கள், பொருளாதார நெருக்கடியின் அடிப்படை வேலையின்மை என்பதை உணரவில்லை” என கூறியுள்ளார். ஒபாமாவே அமெரிக்காவில் வேலையிண்மை விகிதாச்சாரம் 9 சதத்தை எட்டி உள்ளது, வருந்தத் தக்கது என குறிப்பிட்டுள்ளார்.

மூன்றாவது மார்க்சியம் என்பது விஞ்ஞானம். அது நெருக்கடிகளும், வறுமையும், பட்டினியும், பல்வேறு விதமான சமூக நிராகரிப்புகளையும் அரசு அரங்கேற்றுகிற பகுதிகளில், கம்யூனிஸ்ட் கட்சி விரியத்துடன் செயல் படுமானால், அங்கே தொழிலாளி வர்க்கப் புரட்சி அல்லது ஆட்சி மாற்றம் தவிர்க்க முடியாது என்பதாகும். இருக்கிற பிரச்சனைகளுக்கான தீர்வை கம்யூனிச ஆட்சி, சோசலிச சமூகம் தான் தர முடியும். எனவே ”கம்யூனிசத்தை யாராலும் அழிக்க முடியாது”, என்ற முழக்கத்தில் உண்மை இருப்பதை உணரும் காலம் இது. மார்க்ஸ் சொன்ன இந்த யதார்த்த உண்மையை முதலாளித்துவ அறிவு ஜீவிகளும் தெரிந்துள்ளனர். அதனால் தான் 2008 செப்டம்பரில், நிதி நெருக்கடி முற்றி அமெரிக்கப் பொருளாதரம் மூச்சு திணரும் நிலையில், காரல் மார்க்ஸ் எழுதிய மூலதனத்தை தேடி தேடி வாங்கினர். சென்னை பத்திரிகையில் செய்தி ஒன்று வந்திருந்தது. அதாவது, ”சென்னை அண்ணா சாலையில் உள்ள, ஹிக்கின் பத்தம்ஸ் என்ற ஆங்கில புத்தக கடையில் இருந்த மூலதனத்தின் 3 ஆங்கில பிரதிகளும் விற்று தீர்ந்ததாகவும், வேறு பிரதி இல்லாததால், பலர் கேட்டும் கொடுக்க முடியவில்லை”, என்றும் செய்தி குறிப்பிடப் பட்டு இருந்தது. உலகில் பல நாடுகளில் மூலதனம் புத்தக விற்பனை பரபரப்பான செய்தியாகவும் இருந்தது. நாம் முதலில் குறிப்பிட்டதைப் போல், நமது இந்திய ஊடகங்கள் இத்தகைய செய்திகளை பெரியளவில் கண்டுகொள்வதில்லை. எனவே அன்றைய ரஷ்ய நாட்டில் நிகழ்ந்த நவம்பர் புரட்சி நினைவு கூறத்தக்கது.

70 ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்ய தேசத்து மக்களுக்கு மாற்று அரசியலை முன்வைத்து மகத்தான சாதனைகளை நிகழ்த்திய, புரட்சி அது. கார்ப்பசேவ், போரீஸ் எல்ட்சின் போன்ற நபர்கள், புரட்சியின் வெற்றிப்பயணத்தை நிலை குலையச் செய்திருக்கலாம். அனால் பிரச்சனைகளிலும், நெருக்கடிகளிலும் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு ஆறுதல் தரக்கூடியது கம்யூனிஸ்டுகள் தலைமையிலான சமூக மாற்றம் மட்டுமே. உலக அரங்கிலும் இந்த தேவையை உணர முடியும். சோவியத் யூனியன் இருந்த வரையிலும், தனது ராணுவத்தை கட்டுப்படுத்தி வைத்திருந்த அமெரிக்கா, தற்போது, கட்டுப்பாடற்ற சுதந்திரத்தைக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறது. ஒபாமா மூன்றாம் உலக நாடுகளை புரிந்து கொள்வார், என்கிற எதிர்பார்ப்பு, செய்தி வாசிப்பவர்கள் மீது திணிக்கப் பட்டது. ஆனால் ஆஃப்கானிஸ்தான் கொள்கையிலோ, ஈராக் மீதான அனுகுமுறையிலோ, பாகிஸ்தானுடனான கூட்டு செயல் பாடிலோ, எந்த மாற்றமும் இது வரை ஏற்படவில்லை. இனியும் ஏற்பட வாய்ப்பிருப்பதாக அறிய முடியவில்லை.

இந்த நிலையில் தான் அமெரிக்கா கடும் பொருளாதார நெருக்கடியில் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறது. கடந்த கால அனுபவங்களும், முதலாளித்துவத்தின் அமலாக்கம் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவும், இது உடனடியாக தீருகிற நெருக்கடி அல்ல, என்பதை சுட்டிக்காட்டுகின்றன. தற்போது அமெரிக்காவின் வேலையின்மை 12 சதத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக கூறுகின்றனர். அரசு பின்பற்றும் கொள்கைகளின் தோல்வியே இந்த நெருக்கடிகளுக்கு காரணம் என பேசத்துவங்கி விட்டனர். ஈராக் மீது படை எடுத்ததன் மூலம் பெரும் எண்ணை வளத்தை சுருட்டி வைத்துக் கொண்டாலும் கூட, அமெரிக்கா பல வகையில் திணறிக்கொண்டு தான் இருக்கிறது. தற்போது ஒபாமாவின் பேச்சில் பிரதானமானது, அமெரிக்க அரசு, அவுட்சோர்சிங் என்கிற பணி ஒப்படைப்பு தடை செய்யப் படும் என்பதாகும். ஒபாமாவின் இந்திய வருகையின் போது, இப்பிரச்சனைக்கு முடிவு காணப்படும் என்றும், அவுட்சோர்சிங் காராணமாக சம்பாதிதுக் கொண்டிருக்கும், இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி போன்ற நபர்கள், இந்திய நாடாளுமன்றத்தில், ஒபாமா இது குறித்து பேசுவார், என்றும் எதிர் பார்க்கின்றனர்.

பொதுவான பொருளாதார அறிஞர்கள், ஒபாமாவின் இந்திய விஜயத்தில், பல லட்சம் கோடி ரூபாய்க்கான வர்த்தக ஒப்பந்தங்கள் அரங்கேறும். அதற்காகத் தான் ஒபாமா பெரும் படைபலத்துடன் இந்தியாவிற்கு வர சம்மதித்திருக்கிறார். எனவே மேற்குறிப்பிட்ட இரண்டு விவரங்களுடன் இனைத்துப் பார்க்கிற போது, ஒபாமாவின் இந்திய வருகை, இந்தியாவை கொள்ளை அடிக்கும் கொள்கையுடன் இனைந்தது என்பதையும், நாராயண மூர்த்தி போன்ற பெரும் பணக்காரர்களுக்குப் பலன் தருபவை என்பதையும், புரிந்து கொள்ளலாம்.

இந்தியாவில் உள்ள வருமான அசமத்துவம் குறித்து எக்கனாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி ஆங்கில வார இதழ், செப்டம்பர்,11, 2010 ல் ஒரு கட்டுரை வெளியிட்டு இருக்கிறது. இந்தியாவில் பொருளாதாரச் சீர்திருத்தம் துவங்கி 1993-94 முதல், 2005-2006 வரையிலான காலத்தில், கிராமப் புற விவசாயத் தொழிலாளிகள், நகர்புற ஏழைகளின் வருமானம் மிகப் பெரிய அளவில் குறைந்துள்ளதாகவும், அதே நேரத்தில், படித்தவர்களில் சிறு பகுதியினரும், நடுத்தர வர்க்கத்தின் பெரும் பகுதியினரும் கணிசமான வருமான உயர்வுக்கு ஆளாகி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. கடந்த 2004 ல், இந்தியாவில் 9 நபர்கள் 4600 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து மதிப்பு கொண்டிருந்தனர்,. தற்போது அந்த எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது, என்று இடதுசாரி இயக்கங்கள் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. இதற்கு உலகமயமாக்கல் அல்லது நவீன தாராளமய மாக்கல் கொள்கைகள் பயன்பட்டுள்ளது. இந்த நிலையில் இருந்தே இந்திய பெரும் முதலாளிகள், ஒபாமாவின் வருகையை ஆவலுடன் வரவேற்கின்றனர். நடுத்தர வர்க்கமும் இதற்கு ஒத்திசைக்கிறது.

சுரண்டலையோ, காலணி ஆதிக்கத்தையோ, ஏழைபணக்காரர் வித்தியாசத்தையோ, வேலையின்மையையோ, இதர பிரச்சனைகளையோ தீர்மானிப்பது, கறுப்பு , வெள்ளை என்ற வண்ணங்கள் அல்ல என்பதை, ஒபாமாவை சுட்டிக்காட்டி புரிய வைக்க வேண்டியுள்ளது. வண்ணங்கள் மாறினாலும், வாசங்கள் மாறாத நிலையில், உழைக்கும் மக்களை ஒன்றுபடுத்தி, போராடுவதும், நவம்பர் புரட்சியின் மகத்தான சாதனைகளை நினைவில் கொள்வதும், அதன் உத்வேகத்தில், மக்களை போராட்டப் பாதைகளுக்கு இழுத்து வருவதும், ஜனநாயக இயக்கங்களின் கடமை ஆகும்.

நன்றி: உழவன் உரிமை. November 2010