செவ்வாய், 2 மே, 2023

 இரக்கம் அற்ற கொடிய மிருகங்களின் நரவேட்டைக்கு, பலியான மக்கள் நூற்றாண்டைக் கடந்து, நினைக்கப்படுகிறார்கள். அவர்கள் சிந்திய ரத்தத்தின் 28 ஆண்டுகள் கடந்து, இந்தியாவிற்கு பிரிட்டிஷாரிடம் இருந்து, விடுதலை கிடைத்தது. ஆம் ஜாலியன் வாலாபாக் மைதானத்தில், பொது மக்கள் 400 பேர் வரையிலும்  படுகொலையான நாள், 1100 க்கும் மேலானோரை, குற்றுயிரும், கொலை உயிருமாக துப்பாக்கி குண்டுகள் துளைத்த நாள். ஏப் 13, 1919. மைதானத்தின் உள்ளே இருந்த கிணற்றில் இருந்து மட்டும் 200 க்கும் அதிகமானோர் சடலமாக எடுக்கப்பட்டனர்.

விடுதலைக்கு முந்தைய இந்தியாவில், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் நிகழ்த்திய பல நரவேட்டைகளில் ஒன்று ஜாலியன் வாலா பாக் படுகொலை. ஒன்று பட்ட பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநர் மைக்கேல் டயர் பிறப்பித்த ரௌலட் சட்டம், இந்த படுகொலைக்கு காரணமாக அமைந்தது. காவல் அதிகாரி, டையர் சுட்டேன் சுட்டேன் துப்பாக்கி குண்டுகள் தீரும் வரை சுட்டேன் என கொக்கரித்தான். இன்றும் நினைவு சின்னமாக, பெரும் தாக்கத்தை இந்தியா முழுவதும் ஏற்படுத்தி வருகிறது. அமிர்தசரஸ் நகரில், சீக்கியர்களின் பொற்கோவில் அருகில் உள்ள ஜாலியன்வாலா பாக். இந்தியாவின் பொன்விழா சுதந்திரம் கொண்டாட பட்ட போது, ஜாலியன் வாலா பாக்கிற்கு வருகை தந்த, பிரிட்டிஷ் அரசி எலிசபத், இந்திய மக்களிடம் ஜாலியன் வாலாபக் நிகழ்வுக்காக, மண்ணிப்பு கோரினார்.

 

ஏன் மேற்படி கொலைவெறி:

 

இன்றைய பாகிஸ்தானில் இருக்கும், பஞ்சாப் உள்ளிட்டது, ஒன்றுபட்ட பஞ்சாப். இந்த பஞ்சாப் கதர் இயக்கத்தை சார்ந்தோரால், பெருமளவில் ஈர்க்கப்பட்டு இருந்தது. முதலாம் உலகப்போர் முடிவுற்ற நிலையில் இந்தியாவின் சார்பில் ஏராளமான ராணுவ வீர்ர்கள் பிரிட்டிஷாருக்கு ஆதரவாக, உலகின் பல்வேறு பகுதிகளில் போரிட்டனர். குறிப்பாக ஐரோப்பாவின் பல பகுதிகளில் போரிட்டதன் விளைவாக, அவர்கள் தங்கள் சொந்த மண்ணின் விடுதலைக்காக போர் செய்யும் உணர்வை பெற்றனர். எனவே முதலாம் உலக போர் நிறைவு பெற்ற நிலையில், இந்தியாவிற்கு திரும்பிய போது, தீவிரப் போராட்டங்களில் பங்கெடுத்தது, பிரிட்டிஷாருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது.

மேலும் அதே காலகட்டத்தில் தான் ரஷ்யாவில் கம்யூனிஸ்ட்டுகள் தலைமையிலான புரட்சி வெற்றி பெற்று, சமூக மாற்றத்தைக் கண்டு இருந்த து. இதுவும் இந்தியவில் விடுதலைக்கான போராட்டத்தை நடத்தி வந்த இளைஞர்களிடம் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த பின்னணியில் கதர் இயக்கத்தினர் மேற்கொண்ட ஆயுதப் போராட்டத்தை மிக் கொடிய முறையில் பிரிட்டிஷ் ராணுவம் ஒடுக்கியது. பலநூறு பேர் தூக்கிலிடப்பட்டனர்.

 

இந்த கொடிய அடக்குமுறையும், ரஷ்யப்புரட்சியின் தாக்கமும், சத்யபால்சிங் மற்றும் சைபுதீன் கிட்ஜூ ஆகிய தேசிய தலைவர்களை கைது செய்த அடக்குமுறையும் மக்களிடையே கடும்கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. ஏதாவது சிறு துரும்பு கிடைத்தாலும் பெரும் போராட்டம் வெடிக்கும் என பிரிட்டிஷார் எதிர் பார்த்திருந்தனர். எனவே தான் பஞ்சாப் மாகாணத்தின் ஆளுநர் ரௌலட் சட்டத்தை அமலாக்கியிருந்தார். கூட்டம் நடத்த தடை, மக்கள் கூடும் விழாக்களுக்கும் தடை இருந்தது.

 

பைசாகி என்பது சீக்கியர்கள் 1669 ல் இருந்து குருகோவிந்த் சிங் கொண்டாட துவங்கிய அறுவடை திருவிழா. இந்த விழா ஏப் 13 அன்று கொண்டாட பட இருந்தது. ரௌலட் சட்டம் காரணமாக, இந்த விழாவிற்கும், அதைத் தொடர்ந்து மக்கள் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இது மக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. மற்றொருபுறம் விடுதலைப் போராட்டக்காரர்கள் தீவிரமான திரட்டுதலுடன் ரௌலட் சட்டத்திற்கு எதிரான மக்கள் கூட்டத்தை நடத்த திட்டமிட்டனர். அதன் விளைவாக ஆயிரக்கணக்கில் மக்கள் கூடினர்.

 

ஆனால் அச்சத்தில் இருந்த ஆட்சியாளர்கள், ஜெனரல் டயர் தலைமையிலான காவலர்களை அனுப்பி, ஒரு வழி மட்டுமே இருந்த மைதானத்தின் வாயிலில் நின்று கொண்டு களைந்து செல்ல அறிவிப்பு வெளியிடாமல், மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது. 1650 ரவுண்டுகள் சுட்டதாக டயர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளான்.

 

ஹன்டர் விசாரணைக்குழுவும், முடிவும்:

 

பலநூறு பேர் மிக கொடியமுறையில் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் தீவிரமானது. ஏப்ரல் 13.1919 ல் நடந்த இந்த படுகொலையைத் தொடர்ந்து, இந்தியா முழுவதும் வீசிய போராட்ட அலை, 1921 ல் ஒத்துழையாமை இயக்கமாக உருவெடுத்தது.

ஆங்கிலேய அரசு ஹன்டர் என்ற பிரிட்டிஷ் அதிகாரி தலைமையில் ஒரு குழுவை நியமித்து விசாரிக்க சொன்னது. மேற்படி குழுவில், 6 பேர் ஆங்கிலேயர், 3 பேர் இந்தியர். இவர்கள் பலதுறையின் அறிவாளிகள் என்ற போதும், ஜனநாயக குரலை ஒடுக்குவதில் ஒன்றுபட்டு இருந்தனர் என்பதை மறுக்க முடியாது. விசாரணை முடிவில், மக்களை களைந்து செல்ல சொல்லியிருக்க வேண்டும், முன் அனுமதி இன்றி மக்கள் கூடினர், அனுமதி மறுக்க பட்ட விவரத்தை மக்களுக்கு கொண்டு சேர்திருக்க வேண்டும், நீண்ட நேரம் துப்பாக்கி சூடு நடத்தியிருக்க கூடாது போன்ற வார்த்தைகளுடன் விசாரணைக் குழு தனது அறிக்கையை சமர்பித்தது.

 

துப்பாக்கி சூடு நடத்திய டயர், 1927 ம் ஆண்டில் இயற்கை மரணம் அடைந்தான். ஆனால் இதற்கு மூலகாரணமான மைக்கேல் டையர், பஞ்சாப் மாகாண கவர்னர், ஓய்வு பெற்று லண்டனுக்கு சென்ற பிறகு, 1940 ஆண்டில், மார்ச் 13 அன்று, உத்தம்சிங்கினால் சுட்டுக் கொல்லப்பட்டான்.

 

இன்றைக்கும் அரசுகளின் துப்பாக்கி சூடுகளும் விசாரணைக் குழுக்களும் எப்படி உள்ளது, என்பதற்கு ஜாலியன் வாலாபாக் ஒரு உதாரணம். ஷாஹின் பாக் போராட்டங்கள் அடக்கப்படுவதும் உதாரணம். நூறு ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், தியாகிகளை போற்றுவதும், சுரண்டலுக்கும், ஒடுக்குமுறைக்கும் எதிரான போராட்டங்களை வலுப்படுத்துவதும், ஜனநாயக குரலை பாதுகாப்பதும், தியாகிகளுக்கு செலுத்தும் அஞ்சலியாகும்.

 மத்திய, மாநில அரசுகள் சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளி அதிகம் கொண்டவை என்பது போலவே, கொரானாவிற்கும் அதன் அறிகுறிகளுக்குமான இடைவெளி அதிகரித்து வருகிறது. கோவிட் 2 வைரஸ் இந்திய ஆட்சியாளர்களையும், அறிவியலாளர்களையும் தினறச்செய்கிறது. குறிப்பாக உலகின் பல நாடுகள் தங்கள் நாடுகளில், குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று கண்டறியப்படவில்லை என்றது. அடுத்து சளி, இருமல், காய்ச்சல் ஆகிய அறிகுறிகள் கொரானவை கண்டறிய உதவும் என்றனர். ஆனால் இந்தியாவில் மேற்கண்ட இரண்டுமே பொய்த்துப் போய் உள்ளது. குழந்தைகள் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 104 குழந்தைகள் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அடுத்து கண்டறியப்பட்ட நோயாளிகளில் 80 சதமானோர் எந்தவித அறிகுறியும் காணாதவர்கள் ஆவர். 


அதாவது சத்தான உணவு இல்லாமை, பிற நாடுகளின் வயோதிகர்களும், நம் ஊரின் குழந்தைகளும் ஒரே விதமான பாதிப்பிற்கு ஆளானதை, வெளிப்படுத்துகிறது. இரண்டாவது பெரும்பான்மையான மக்கள் நெடுங்காலமாக பல நோய்த் தொற்றுகளுடன் அல்லது, நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இதன் காரணமாகவே, பிறநாடுகளில் இருந்த அறிகுறிகள், இங்கு வெளிப்படவில்லை. இவை. இரணடையும் எதிர்கொள்ள சத்தான உணவு உட்கொள்ளும் பழக்கத்தை மேம்படுத்த வேண்டியுள்ளது. மற்றொருபுறம், வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும். ஆனால் இவை இரண்டையும் செய்யக் கூடிய கொள்கைகளைக் கொண்டதாக மத்திய மாநில ஆட்சியாளர்கள் இல்லை. இன்றைய தொற்று நோய் பரவல் காலத்திலும் அதற்கான நடவடிக்கையை, மேற்கொள்ள தயாராகவும் இல்லை. 


காய்ந்த வயிறில் கட்டிக்கொள்ள வழங்கப்பட்ட ஈரத்துணி:


டெங்கு ஜுரத்தில் இருந்து தப்பிக்க, ஆறுமாதம் நிலவேம்பு கசாயம், தற்போது, கபசுர குடிநீர், அடுத்து என்ன? என்பது தான் தொழிலாளர்களின் வாழ்நிலை. பிரதமர் ஒருமுறை தனது உரையில் கசப்பு மருந்து நல்லது என்று பேசினார். ஆறு ஆண்டுகளாக பெரும்பான்மையோர் என்ற தொழிலாளர்களுக்கு கசப்பு மருந்து மட்டுமே வழங்கி வருகிறார். டெங்கு ஜூரத்தைக் கடந்து வாழ்க்கையை தனது உழைப்பின் மூலம் நடத்த முயற்சித்த தொழிலாளர்கள், கொரானா பொது முடக்கத்தில், எழுத்திருக்க முடியாத நிலையில் உள்ளனர். மாநில அரசின் அறிவிப்பான ஆயிரம் ரூபாய் என்பதை, தொலைக்காட்சியில் பார்க்க முடிகிறது, கையில் கிடைக்காதோர் பலலட்சம் உள்ளனர். பட்டியலில் இல்லாதோரும் பல லட்சம் பேர் உள்ளனர். சர்க்கரை என வெள்ளைத்தாளில் எழுதி நக்கினால், இனிக்குமா? என்பது போல் தான், இந்த நிவாரணம். அடுத்ததாக தொழிற்சங்கங்கள், எதிர் கட்சிகள் வலியுறுத்திய, குறைந்த பட்ச நிவாரணம் 7500 ரூபாய் என்ற கோரிக்கை குறித்து பரிசீலிக்க, மத்திய, மாநில அரசுகள் தயாரில்லை. 


உலகின் பல நாடுகள் குறிப்பாக தென் கொரியா தன் நாட்டில், 57400 ரூ(820 டாலர்) அளவிற்கான நிவாரணத்தொகையை அறிவித்தது. சீனா குறைந்த பட்ச கூலி என்ன தீர்மானிக்க பட்டதோ அது மாதா மாதம், அமைப்புசாரத் தொழிலாளர்களுக்கு வழங்கப் படும் என்றும், ஜப்பான் 928 அமெரிக்க டாலர் ( 64960 ரூ) நிவாரணத்தொகையாக அறிவித்தது. பிரேசில் 8400 ரூ ஒவ்வொரு மாதமும் என அறிவித்தது. இவையெல்லாம் இந்தியா போல் வளரும் நாடுகள் பட்டியலிலுள்ள நாடுகள் ஆகும். இவை அனைத்திற்கும் பிரதமர் மோடி, ஒருமுறையோ அல்லது அதற்கும் மேலோ பயணம் செய்து பல ஒப்பந்தங்களைக் கண்டவர். ஆனால் இந்தியா நாடு முழுவதும் அவ்வாறு ஒரு வழிகாட்டுதலைத் தரவில்லை. மூன்று முறை முதல்வர்களுடனும், கம்யூனிஸ்ட் கட்சிகளை தவிர்த்த இதர கட்சி தலைவர்களுடன் ஒரு முறையும், மூன்று முறை தொலைக் காட்சி மூலமும் பிரதமர் உரை நிகழ்த்தி இருக்கிறார். ஆனால் மேலே குறிப்பிட்ட நாடுகள் கூறியது போல், எந்த ஒரு அறிவிப்பையும், வெளியிடவில்லை. மாறாக கைதட்டு, விளக்கேற்று, ஆரோக்கிய சேது ஆப்பை பதிவிறக்கம் செய், தனித்திரு, விலகி இரு, வீட்டில் இரு என இலவச அறிவுரைகளை மத்திய, மாநில அரசுகள் வழங்கி வருகின்றன. 


எல்லாவற்றிற்கும் மேலாக, மாநிலம் விட்டு மாநிலம், மாநிலத்திற்குள்ளேயே என இரு ரக இடம்பெயர் தொழிலாளர்களும், மிகக் கடுமையான பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். அழைத்து வந்த ஒப்பந்த தாரர்களும், முதன்மை பணி வழங்குவோரும், சில இடங்களில் உதவினால் பெரும்பாலான இடங்களில் அரசின் நிவாரணங்களை எதிர் பார்த்து, ஏமாந்து நிற்போராக துயரத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். வேறு எந்த நாட்டிலும் இந்த அளவிற்கு இடம்பெயர் தொழிலாளர்கள் எண்ணிக்கை இருந்திருக்குமா? அல்லது இப்படி கண்டு கொள்ளாமல் விட்டிருப்பார்களா தெரியவில்லை. ஆனால் நியாயமற்ற செயலாக, 40 நாள்களும் நீடிக்கிறது. டில்லியில் இருந்து புறப்பட்ட தொழிலாளர், சூரத் நகரில், மும்பை பந்ரா ரயில் நிலையத்தில் என பெருத்த ஏமாற்றத்துடன் கூடியவர்களை, மௌனமாக வேடிக்கை பார்க்கும் அரசாக, பாஜக ஆட்சி உள்ளது. 


இந்த ஆட்சியாளர்களுக்கு துதிபாடும் பணியை நீதிமன்றங்கள் செய்கின்றன, என்ற குற்றச்சாட்டை, நீதிமன்றத்தில் பகிரங்கமாக வைக்க வேண்டிய அவலம் உருவாகியுள்ளது. இடிப்பாரை இல்லா ஏமறா மன்னன், என்பது போல், பல தன்னாட்சி அமைப்புகள் இக்காலத்தில், பாஜக ஆட்சியின் கீழான மற்றொரு, அமைச்சரவையாக மாறிவருகிறது. கொரானா பாதிப்பு பொது முடக்க காலத்தில், இது மக்களின் பிரச்சனைக்களுக்காக குரல் கொடுக்கும், இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. 


மேற்படி இலவச ஆலோசனைக்கான மூலக்கரு, நிவாரணத்திற்காக கையேந்தி நிற்கும் தொழிலாளர்கள், உழைப்பு என்ற அவர்களின் சரக்கை விற்பனை செய்ய வழியில்லை எனவே வேலையில்லா நாள்களுக்கு, உரிமையுடன் கூலி கேட்பதற்கான தகுதியை இழந்து விடுகின்றனர், என்பதாக உள்ளது. அமைப்பு சார்ந்த அல்லது அமைப்பு சாராத் தொழிலாளி என எப்படி இருந்தாலும், அவர் பெறும் கூலி, முழு உழைப்பு நேரத்தில் பாதி அளவாக மட்டுமே உள்ளது. இதன் காரணமாக தான், ஒரு நிறுவனம் பலவாக பெருகுகிறது. புதிய அசையா சொத்துக்கள் அதிகரிப்பு, தொழிலாளியின் உழைப்பில் இருந்தே உருவாகிறது, என்ற முதலாளித்துவப் பொருளாதாரம் குறித்து காரல்மார்க்ஸ் கூறியதை, வலுவாக வாதிடுவதன் மூலமே, உரிமையுடன் நிவாரணத் தொகையைப் பெற வழிவகுக்கும்.



முதுகில் குத்தும் குத்தீட்டி 2:


ஏற்கனவே, தொழிலாளர்களை வதைக்கும் சட்டத் திருத்தங்களை மத்திய பாஜக ஆட்சி செய்து வருகிறது. இந்த பொது முடக்க காலத்தை கூடுதலாக பயன்படுத்தி,  முதலாளித்துவ விசுவாசத்தை பாஜக ஆட்சி அதிகப்படுத்தி வருகிறது. முதலில், வேலை நேரத்தை, 8 மணியில் இருந்து 12 மணிநேரமாக உயர்த்தும், திருத்தத்தை மேற்கொண்டது. தற்போது தொழிலுறவு சட்ட திருத்தங்களை 8 நாள் என்கிற குறுகிய அவகாசத்தில், நாடாளுமன்ற நிலைக்குழு மக்களவை தலைவர் ஓம்பிர்லாவிடம் தாக்கல் செய்திருக்கிறது. ஏப்ரல் 14 அன்று தொலைக்காட்சியில், மோடி உரைநிகழ்த்தினார். ஏப்ரல் 15 அன்று நிலைக்குழு தலைவர், பிஜு ஜனதா தள தலைவர், பர்த்துரு ஹரி மகத்தா, தனது குழு உறுப்பினர்களுக்கு மெயில் மூலம் ஆவணங்களை அனுப்பி, 8 நாள்களுக்குள் கருத்துக்களைக் கேட்டுள்ளார். 21 பேர் கொண்ட குழுவில் மார்க்சிஸ்ட் கட்சியைச் சார்ந்த, எளமரம் கரீம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த, க.சுப்பராயன், தி.மு.க வைசார்ந்த மு. சண்முகம் ஆகியோர் மட்டுமே மாற்று கருத்துக்களை முன் வைத்துள்ளனர். நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரையிலும், அமைக்கப்பட்ட நிலைக்குழு, இவ்வளவு விரைவாக அறிக்கை தாக்கல் செய்தது, இதுவே முதல் முறையாக இருக்கக் கூடும். 


பிரதமர் மோடியின், உரைக்கும், நிலைக்குழு அறிக்கை தாக்கல் செய்ததற்கும், என்ன தொடர்பு என்பதே மிக முக்கியமானது. மோடி தனது உரையில், நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்வதோ, குறைப்பதோ கூடாது, ஏப்ரல் மாதத்திற்கான ஊதியத்தை வழங்க வேண்டும், என்பதை வலியுறுத்தினார். மறுநாளே மெயில் மூலம் கருத்து கேட்பு நடத்திய, நிலைக்குழு மூன்று உறுப்பினர்களின் எதிர்ப்புடன், இக்காலத்திற்கான ஊதியத்தை வழங்க, தனியார் நிறுவனங்களிடம் கட்டாயப் படுத்த முடியாது எனக் கூறியுள்ளனர். ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசமாக நிலைக்குழு செயல்பட்டுள்ளது. 


மற்றொரு புறம், மத்திய அரசை, முதலாளிகள் சங்கத்தினர் நிர்பந்திக்கும் வகையில், கருத்து தெரிவித்து வருகின்றனர். நோய் தொற்று பரவல் தடுப்பு சட்டம், எந்தவிதமான வரையறையும், ஊதியம் கூத்து கூறவில்லை. நோய் தொற்று கொண்ட நபர் வேலை செய்ய அனுமதிக்கப்பட்டால், நிர்வாக பிரிவு அதிகாரிகள் கடுமையாக தண்டிக்கப்படுவர் எனக் கூறுகிறது. இது போன்ற சட்டங்களால் பயனில்லை, உற்பத்தி துறைக்கு சாதகமாக இல்லை எனவும், கோபத்தில் உள்ளனர்.  இந்த கோபத்திற்கு வடிகால் அமைப்பதைப் போல், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒன்னரை ஆண்டுகளுக்கு அகவிலை படி உயர்வு இல்லை, என அறிவித்துள்ளது. மாநிலத்தில் உள்ள அதிமுக அரசும் அதை பின்பற்றியிருக்கிறது. தனியார் நிறுவனங்கள் அரசுகளின் வழிகாட்டுதலை பல மடங்கு வேகமாக அடுத்த கட்ட ஊதிய உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளில் கையாளும், என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.


ஆக மொத்தத்தில் எல்லா திசையிலும் தொழிலாளிகள் மீதான தாக்குதலை மத்திய, மாநில அரசுகள் அதிகரிக்கும் வேலையில், தொழிலாளர்கள் அடங்கி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதே, வரலாறு. கொதிநிலையில் இருக்கும் தொழிலாளர்கள் வழக்கத்தை விட அதிகமாக போராடுவது தவிர்க்க இயலாது. அந்தப் போராட்டங்களை, தொழிலாளி வர்க்க உணர்வு மட்டுமே, தீவிரமாக வழி நடத்த முடியும். 

முதலாளித்துவத்தின் அசுர வளர்ச்சியும்… அதிகரிக்கும் தற்கொலைகளும்…

 

தேர்வில் தோல்வி, நிறுவனத்தில் தொழிலாளருக்கு விடுப்பு இல்லை, நிர்வாகம் பழி வாங்குகிறது, வீட்டில் அமைதி இல்லை போன்ற சிறிய பிரச்சனைகளுக்கும் கூட மரணித்து விடுவது தீர்வு, என மனிதர்களை தள்ளுகிறது முதலாளித்துவம். அதன் லாப வெறி, தோல்வியடைந்தவர்களுக்கும், சோர்வுற்றவர்களுக்கும் இடம் இல்லை என அதிகாரம் செலுத்துகிறது. அண்மையில் நீட் தோல்வி காரணமாக 12 மாணவர்களின் தற்கொலைகளும், நிறுவனங்களின் தாக்குதல் காரணமாக தொழிலாளர் தற்கொலைகளும் சமூகத்தை பெரிய அளவில் எச்சரிக்கை செய்கிறது.


இந்தியாவில், கடந்த 2019 ல் 1,39,123 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 7 மாத கொரானா நோய் பாதிப்பில் இறந்தவர்களை ( 1,05,000) விட அதிகம். இந்த எண்ணிக்கை 2018 ஐ விடவும், 3.4 சதம் அதிகம். இதில், மகராஷ்ட் ரா 18,916 பேருடன் முதலிடத்திலும், தமிழ்நாடு 13493 பேருடன் இரண்டாம் இடத்திலும், 12665 பேருடன் மேற்கு வங்கம் மூன்றாம் இடத்திலும் உள்ளது. 10.1 சதம் வேலையின்மை காரணமாகவும், 32.4 சதம் குடும்ப பிரச்சனைகள் காரணமாகவும், விவசாயம் பொய்த்து கடனாளியாகி 7.4 சதம் பேர் தற்கொலை செய்து கொண்டதாகவும் National Crime Record Bureau கூறுகிறது. தற்கொலை செய்து கொள்வோரில் 69 சதம் 15 முதல் 39 வயது கொண்டோராவர். ஆண்கள் 70.2 சதம், பெண்கள் 29.8. உலகில் 2019 ல் 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதில் இந்தியா 17 சதம் பங்களிப்பு செய்துள்ளது. உலக அளவில் இந்தியாவின் மக்கள் தொகை, 17.5 சதம் ஆகும். 79 சத தற்கொலைகள் நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் கொண்ட நாடுகளில் நடப்பதாக உலக சுகாதர மையம் கூறுகிறது.  


தோல்வியும், இயலாமை உணர்வும்: 


உளவியல் சிக்கல் தற்கொலைகளில் பெரும் தாக்கம் செலுத்துகிறது. இதை தனிநபரின் பொறுப்பாக சமூகம் தட்டிக் கழிக்கிறது. சமூகமே இந்த உளவியல் சிக்கலின் மைய புள்ளி என்பதை புறம் தள்ளுகிறது. பாலர் பள்ளியில் இடம் பெறுவது துவங்கி, வேலை, திருமணம் உள்ளிட்ட அனைத்தும் போட்டிகள் நிறைந்ததாகவும், சட்ட விதிகள் நிறைந்ததாகவும் உள்ளது. பிக் பாஸ் வீட்டில் 100 நாள்கள் வசிப்பது வாழ்நாள் சாதனையாக சித்தரிக்கப்படுகிறது. சமையல் அறை துவங்கி மற்றோரின் ஆலோசனை எரிச்சல் ஊட்டும் ஒன்றாக பார்க்க தூண்டப்படுகிறோம். சின்ன நிகழ்வுகள் நாளெல்லாம் பேசப்படுவதாக, ஒரு தொலைக்காட்சியில் மட்டுமல்ல, இதர இதழ்களிலும், சமூக ஊடகங்களிலும் பேசு பொருளாக மாறி ஒவ்வொருவர் தலைக்குள்ளும் புரண்டு, அழுத்தம் தருவதாக, மாறுகிறது.  மிக மென்மையான மனிதர்களாக பக்குவப்படுத்தப் படுகிறோம். அந்த மென்மை எதிர்ப்பைக் கொன்று, ஏற்பைதிணிப்பது அல்லது வெளியேற்றும் அரசியல் என்பதை மறக்க பயிற்று விக்கப்படுகிறோம். 


உலக சுகாதார மையம், மார்ச் 21, 2020 ல் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் 90 மில்லியன் மக்கள் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளனர், என கூறியுள்ளது. இது இந்திய மக்கள் தொகையில் 7.5 சதமாகும். பிரிட்டிஷ் நாட்டு நிறுவனம் ஒன்று 2019 ல் நடத்திய ஆய்வு மூலம், இந்தியாவில் கார்ப்பரேட் நிறுவனங்களின் பணியாளர்களில் 42.5 சதம் பேர் மனரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறது. இதைத் தொடர்ந்து உலக சுகாதார மையம், மனநல மேம்பாடும், தற்கொலை தடுப்பும் இணைந்த, செயல் திட்டம் அவசியம் என வலியுறுத்துகிறது. இது திட்டமிட்ட கொள்கையாக மேம்படாவிட்டால், 2020 ம் ஆண்டில், 200 மில்லியன் மனிதர்கள் மனநோயாளிகளாக மாறும் அபாயம் உள்ளது, என்பதையும் சேர்த்தே குறிப்பிட்டுள்ளது. இந்தியா உலக பொருளாதார பட்டியலில் 5 ம் இடத்தில் உள்ளது. ஆனால் மனநலம் குறித்த மருத்துவத்திற்கு 0.05சதம் மட்டுமே செல்விடுகிறது. இது முகேஷ் அம்பானி மூன்று மணி நேரத்தில் சம்பாதிக்கும் தொகை என சொல்லப்படுகிறது. ஆனால் உலகில் இந்தியாவை விட வருவாய் குறைந்த நாடுகள் அதிகம் செல்விடுவதை, வசதியாக மறந்து விடுகிறது, என்ற குற்றச்சாட்டையும் முன் வைக்கிறது. 


தேர்வுகளில் தோல்வியும், தற்கொலைகளும்:


தமிழகத்தில் நீட்தேர்வில் தோல்வி காரணமாக 12 மாணவ மாணவியர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். வேறுபல தேர்வுகளின் முடிவுகளின் போதும் தற்கொலை குறித்த செய்திகளை காணமுடிகிறது. முதலாளித்துவ கொள்ளையின் எல்லை, கல்வி துறையில் விரிவடையும் போது, விதிகளும், சட்டங்களும் முன்னுக்கு வருகிறது. கிட்டிப்புல்லும், கபடியும் ஊரில் விளையாடும் போது கொண்டிருந்த விதிகளை, தொலைக்காட்சி பார்வையாளர்கள் அதிகரித்த நிலையில், கிரிக்கட்டில் டக்வொர்த் லீவிஸ் விதி யாருக்கும் புரியாமல் விழிப்பதை போல் இருக்கிறது, நீட் தேர்வு. சித்தர்களின் சிகிச்சையும், பழங்குடி மனிதர்களின் நாட்டு மருத்துவமும், அறிவியல் வளர்ச்சியில் நிருபணம் செய்ய வழியில்லாமல், ஒரு படித்தான மருத்துவக் கல்வி கோலோச்சுகிறது. 


மூலதனத்தின் தாக்கம் கல்வித்துறையில் மேலாதிக்கம் செலுத்த துவங்கி உள்ளது. அறிவு வளர்ச்சி இனக்குழுக்களிடம் இருந்து பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், நாடுகளுக்கும் அபகரிக்கப்படுகிறது. பிரமிக்க வைக்கும் கல்வி வளாகத்திற்குள் ஆர்வம் உள்ளவர்களை ஈர்ப்பதற்கு பதிலாக, பணம் உள்ளவர்களை ஈர்ப்பதாக மாறுகிறது. எனவே தான் வசதியானவர் தோல்வியுற்றாலும், வேறுநாட்டில் மருத்துவம் படிக்க சென்றுவிடுகின்றனர். வசதியற்றோர் குறிப்பாக பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியிலின மாணவர்களில் ஒரு பகுதி, தோல்வியுடன் விரக்தியும் அடைந்து தற்கொலை செய்கின்றனர். தெலுங்கானா மாநிலத்தில், 2019 ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்ட 42 மாண்வர்களில் 80 சதம் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மாணவர்கள் என சொல்லப்படுகிறது. மைய அரசியலில் இருந்து எல்லா வகையிலும் துரத்தப்படுவோராக இப்பிரிவு மக்கள் உள்ளனர். மீண்டும் மன்னர் மகன் மன்னர், என்ற சமூக படிநிலையை நிலைநிறுத்துகிறது உலகமயமாக்கல். சாதாரண மனிதர்களின் வைத்தியம் போன்றவற்றை சட்ட விதிகளின் பெயரில் பறித்து கொள்கிறது. மண் சார்ந்த தொழில்நுட்பத்தின் வேரை அபகரிக்கிறது. 


தொழிலாளர்களும் தற்கொலைகளும்:


கார்ப்பரேட் நிறுவங்களில் பணிபுரிவோர் 42.5 சதம் மனநிலை பாதிக்கபடுகின்றனர் என்பதை கண்டோம். முதலாளித்துவம், ஜனநாயகத்தின் உச்சம் எனக் கூறி கொள்கிறது. வேலைக்கான கூலி உறுதி எனவும், குறைந்த பட்ச கூலி சட்டம், தொழிலாளர் நலச் சட்டம் எனவும் பெருமை பேசிக் கொள்கிறது. அனால் உண்மையில் சுரண்டல் அதிகரித்தால் மட்டுமே மூலதனம் விரிவடையும் என்ற உண்மையை மார்க்சீயவாதிகள் கூறுகின்றனர். முதலாளித்துவம் கூறும் ஜனநாயகம் வார்த்தை அளவில் மட்டுமே உள்ளது. உரிமைப் பறிப்பை ஜனநாயகத்தின் பெயரில், விதிகளின் பெயரில் அபகரிக்கிறது முதலாளித்துவம், என குற்றம் சுமத்துகிறது மார்க்சீயம். 


தற்போது கடந்த சில மாதங்களில் பன்னாட்டு ஆலைகளில் தற்கொலை செய்து கொள்வோர் அதிகரித்துள்ளனர். சிகிச்சை பெற, கற்பினி மனைவியின் சிகிச்சைக்காக குடும்ப உறுப்பினர்களின் சிகிச்சைக்காக ஒரு தொழிலாளி விடுப்பு எடுக்கும் உரிமை மறுக்கப்படுகிறது.  நிலையாணை சட்டம் என்ற பெயரில் குறுக்கே விழுந்து தடுக்கும் வேலையைச் செய்யும். நிறுவனத்தில் உரிமை கேட்ட தொழிலாளரை கண்காணிக்க சி.சி.டி.வி வளையம் அமைக்கப்பட்டு மன உலைச்சல் அதிகரிப்பது, சட்டத்தின் படி நியாயப்படுத்தப்படும். பண்டிகைகளுக்கு ஊர் செல்ல செய்த முன்பதிவு காரணத்தை சொல்லி, ஒரு மணி நேரம் அனுமதி பெற முடியாது. அப்படி கேட்பவர் கொரானா காலத்திற்கு முன்பே தனி அறையில் நாள் கணக்கில் காத்திருக்க கட்டாயப்படுத்தப்படுவார். தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் வேலையற்றோர் பெஞ்சில் உட்கார வைக்கும். இவை மன உலைச்சலின் உச்சம். இத்தகைய காரணங்களால் தான் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். 


மாக்கியவல்லிகள் முதல் ஸ்டிரைக் பிரேக்கர்கள் வரை:


1500 ஆம் ஆண்டுகளில் இத்தாலிய நாட்டில் அரசியல் விதிகளை போதித்தவர் மாக்கியவல்லி. இந்தியாவில் சாணக்கியர் 3 வது நூற்றாண்டில் நிலப்பிரபுத்துவ கட்டத்திற்கான சட்டதிட்டங்களை வகுத்தளித்தது போல், முதலாளித்துவ வணிகம் துவங்கிய காலத்திற்காக சட்டதிட்டங்களை உருவாக்கி வில்லத்தனம் செய்தவர் மாக்கியவல்லி. இன்று எல்லாத் துறைகளிலும் நிபுணத்துவம் கோலோச்சுகிறது. அதில் மனிததன்மை, இரக்க குணம் அழிக்கப்பட்டு, அனைத்தும் விதிகளாக, கோட்டை மதில்களாக அடைத்து வைக்கிறது. மற்றொரு புறம் போராட்ட உணர்வு கொண்டவர்களை கண்டறிந்து கழுத்தறுக்க, தொழில் உறவு, தொழிலாளி உறவு கற்ற பெரும் நிபுணர்கள் ஆலைகளில் வளம் வருகின்றனர். உற்பத்தியை விட, சைக்கிள் டைம் என்ற விதி மீதான கண்கானிப்பே இவர்களின் பணி. தற்கொலை செய்து கொள்ள தொழிலாளி இந்த நடவடிக்கைகளால் தூண்டப்பட்டால், அது தலைவிதி என கருமாதி செய்யப்படுகிறது. 


அண்மையில் பன்னாட்டு ஆலைகள் அதிகம் உள்ள சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தற்கொலை அதிகரித்து வருகிறது. நிறுவனங்கள் அளிக்கும் மன அழுத்தம் காரணமாக உள்ளது. வெளிநாட்டு அதிகாரிகள், உள்நாட்டு அதிகாரிகள் என்ற பாரபட்சம் இன்றி நிர்பந்திக்கின்றனர். மூலதனம் இங்கு அடையாள அரசியலை தலையெடுக்க விடுவதில்லை. காரணம் கோரும் அறிவிப்பு, குற்றச்சாட்டு குறிப்பாணை என்ற பெயரில் தனிநபர்களான தொழிலாளர்களை சித்திரவதை செய்வதை ரசிக்கும், வக்கிரம் வெளிப்படுகிறது. 


எங்கே செங்கொடி இயக்கம் வலுவுடன் இருக்கிறதோ அங்கே இந்த அநீதி வெளிகொணரப்பட்டு போராட்டம் தீவிரம் பெறுகிறது. போராட்டங்கள் தொழிலாளர்கள் மீதான மன அழுத்தத்தை குறைக்கிறது. மற்ற இடங்களில் எதிர்ப்பு பெயரளவிற்கே இருக்கிறது. தூண்டப்படும் தற்கொலைகளுக்கு சவக்குழி தோண்டப்படுவதே அவசரம் அவசியம். பரிதாபமும், முனுமுனுப்புகளும் போதாது. முதலாளித்துவ லாபவெறியை அம்பலப்படுத்துவதும், தீவிர போராட்ட நடவடிக்கைகளுமே தற்கொலை செய்வோருக்கு நம்பிக்கை ஏற்படுத்தும். 




தமிழகத்தில் தொழில் வளர்ச்சியும் கம்யூனிஸ்ட்டுகளும்

 

கம்யூனிஸ்ட் இயக்கம் இந்தியாவில் நூறாண்டுகளாக, ஆளும்வர்க்க எதிர்ப்பு அரசியலுடன், செயல் பட்டுவருவது போராட்டத்தின் வெற்றி தான். ஒரு அரசியல் இயக்கம் போல் அல்ல. ஆனால் பட்டியலிட முடியாத அளவிற்கு சமூகத்தில் சாதனைகளைப் படைத்துள்ளது. சமூக மாற்றத்திற்கான போராட்டத்தை, தற்போதைய சமூக அமைப்பின் சீரழிவுகளை அம்பலப்படுத்திக் கொண்டு, வாழ்வாதாரம், சமூக உரிமை ஆகியவற்றை பாதுகாக்கவும், முன்னேற்றம் காணவும் போராடி கொண்டிருக்கும் இயக்கம். பாட்டாளிவர்க்கம் என அழைக்கப்படும், உடைமை அற்ற பெரும்பான்மையோரின் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்த போராடுவதே, கம்யூனிஸ்ட் இயக்கத்தின் செயல் திட்டமாக அமைந்திருக்கிறது. வாழ்வாதார முன்னேற்றத்தில், தொழில் வளர்ச்சி முக்கியமான வினைபுரிகிறது. 


தொழில் வளர்ச்சி தானாக உருவாகவில்லை. நடைமுறை சமூகத்தின் அவலங்கள், அதற்கு எதிரான போராட்டங்கள், சந்தை விரிவாக்கம் ஆகிய காரணங்கள் தொழில் வளர்ச்சிக்கு அடித்தளமிடுகின்றன. அந்த வகையில், கம்யூனிஸ்ட் இயக்கம் உருவாவதற்கு முந்தைய இந்தியாவின் நிலை, கம்யூனிஸ்ட் இயக்கம் உருவான பின் 1947 வரை, 1947 க்கு பின் என மூன்று கட்டங்களாக இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் தொழில் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்கினை விவாதிக்க முடியும். 


கம்யூனிஸ்ட் இயக்கம் உருவாவதற்கு முந்தைய நிலை:


முதலில் இந்தியா ஒரு நாடாக இல்லை. சமஸ்தானங்களாக பல ஆட்சிப் பிரிவுகளுக்கு ஆட்பட்டு இருந்தது. ஒரு மொழிக்குள்ளும் பல்வேறு சமஸ்தானம், சில மொழிகள் இணைந்து ஒரு சமஸ்தானம் என்ற வகையில்  ஆட்சிகள் இருந்தது. விவசாயம், கைவினைஞர்களின் உற்பத்தி ஆகியவை மட்டுமே தொழில். மன்னர்களுக்கு விவசாயிகள் 4 ல் ஒரு பகுதி விளைச்சலை அல்லது 6 ல் ஒரு பகுதி விளைச்சலை வரியாக செலுத்திட வேண்டும். மன்னர்கள் சுக வாழ்க்கையுடன் விவசாயிகளுக்கான பாசன வசதிகளை உறுதிசெய்யவும், இந்த வரியில் சிறு பகுதியை செலவிட்டதை அறிய முடிகிறது. இந்த மன்னராட்சி நடைமுறையை அந்நிய படையெடுப்பின் மூலம் ஆட்சி செய்த முகலாயர்களும் பின்பற்றினர். ஏனென்றால் அவர்கள் இந்திய மண்ணிலேயே, தங்கி விட்டனர்.


15 ம்நூற்றாண்டு துவங்கி இந்தியா வரத்துவங்கிய மேற்கத்திய கம்பெனிகள் அல்லது ஐரோப்பாவின் மாலுமிகள் மற்றும் வணிகர்கள், வணிக ஏற்பாடுகளுடன், கிடங்குகள் அமைக்கும் ஏற்பாடுகளையும் உறுதிசெய்தனர். வணிக ஆதிக்கம் ஆட்சியின் ஆதிக்கமாக வளர்ந்த விவரங்கள் நாம் அறிந்ததே. பிளாசி யுத்தம் 1757 ல் நடந்து ராபர்ட் கிளைவ் வென்றது துவங்கி பல மாற்றங்கள் ஏற்பட்டது. 1757 க்கு பிந்தைய இங்கிலாந்தின் செல்வம் பிரமிக்கதக்கது 1760 வரை இங்கிலாந்தில் ஜவுளி உற்பத்திக்கு பயன்பட்ட இயந்திரங்கள் அன்றைய இந்தியாவில் இருந்த தன்மையிலேயே இருந்தது. ஆனால் இந்தியாவில் இருந்து ஆற்றோட்டம் போல் வந்து இங்கிலாந்தில் குவிந்த செல்வம், இயந்திரப் புரட்சிக்கு வழிவகுத்ததாக ரஜினி பாமிதத் இன்றைய இந்தியா (பக் 161-163) நூலில் விவரிக்கிறார்.


இதில் கவனிக்க வேண்டியது, முகலாயர்கள் போல் அல்லாமல், பிரிட்டிஷார் இந்தியாவில் இருந்து செல்வத்தை தங்கள் நாட்டிற்கு மொத்தமாக வாரி சுருட்டி சென்றனர் என்பதாகும். இதன் காரணமாக இந்தியாவின் கட்டமைப்பான ஏரி, குளம் பராமரிப்பு பலவீனமானது. இரண்டாவதாக இங்கிலாந்தில் வளர்ந்த இயந்திரப் புரட்சி காரணமாக, இந்திய நுகர்வோர் சந்தையை பிரிட்டிஷார் கைப்பற்றினர். அதுவரை இருந்த கைவினைஞர்கள் தொழிலை இழக்கும் கொடுமை அரங்கேறியது. விவசாயம் மற்றும் கைத்தொழில் போன்றவை அழியும் நிலையில் பஞ்சம் தலை விரித்தாடியது. 1800-1825  காலத்தில் 10 லட்சம் பேர் பட்டினிச்சாவை சந்தித்தனர். 1875 - 1900 காலத்தில் 1.5 கோடிப்பேர் பட்டினிச்சாவை சந்தித்தனர். மொத்தத்தில் 19 ம் நூற்றாண்டில், 2.15 கோடிப்பேர் பட்டினி சாவிற்கு ஆளானதை அறிய முடிகிறது. (இன்றைய இந்தியா)


இந்தியாவில் முதல் விடுதலை போர் என்ற, மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் கட்டுரைகளின் தொகுப்பு நமக்கான புரிதலை விசாலமாக்குகிறது. அதாவது, “இந்தியாவிலும், சீனாவிலும் இருந்த தந்தை வழி உறவுகளும் படைமானிய உறவுகளும் ஒழிந்து முதலாளித்துவ வளர்ச்சி படிப்படியாக உருவானதால் மாறுதல்கள் நிகழ்ந்தன. 1857 புரட்சிக்கான காரணங்கள் மன்னர்களுக்கு இருந்த அதிருப்தி ஒருபுறம். மற்றொரு புறம், பிரிட்டிஷ் பருத்தி ஆடைகள் இந்திய சந்தையில் குவிக்கப்பட்டன. இது கைநெசவு மற்றும் பல்வேறு கைவினை தொழில்களை அழித்தது”, என பதிவு செய்துள்ளனர். அதேபோல் பிரிட்டிஷாரின் ஜமீன்தாரி, ரயத்வாரி வரி விதிப்பிலும், ஏகாதிபத்தியத்தின் தீவிர கொள்ளை காரணமாகவும் இந்திய விவசாயிகள் சித்திரவதைக்கு ஆளாகினர், எனவும் மார்க்ஸ் கூறுகிறார். 


இந்த பின்னணியில் நடந்த 1857 விடுதலைப் போர் தோல்வியடைந்தது. இருந்தாலும் அடுத்தடுத்த நிகழ்வு போக்குகள் இந்தியாவின் வறுமை ஒழிப்பு அல்லது பட்டினி சாவு குறித்த விவாதத்தை தூண்டியது. இந்தியாவில் மக்கள் குவியல் குவியலாக பட்டினிச்சாவை சந்திக்க, முதல் காரணம் விவசாயத்தை மட்டுமே நம்பியிருப்பது, இரண்டாவது மக்கள் தொகை அபரிமிதமாக வளர்ந்தது, மூன்றாவதாக தொழில் வளர்ச்சி ஏற்படாதது என பிரிட்டிஷார் முன்வைத்தனர். இந்தியாவில் படித்து அரசியல் பணியில் ஈடுபட்ட,  தேசிய தலைவர்கள் தாதாபாய் நௌரோஜி, ராணடே போன்றோரில் ஒரு பகுதி, பிரிட்டிஷாரின் வாதத்தை ஏற்கவும், மற்றொரு பகுதியினர் எதிர்க்கவும் செய்தனர். விவாதத்தில் எதிர்கருத்துக்கள் இருந்தாலும் தொழில் வளர்ச்சி என்பது, அனைவருக்கும் ஏற்புடையதாகஇருந்தது. அன்றைக்கு தொழில் எனக் குறிப்பிட்டால் பஞ்சாலையே பிரதானமாக இருந்தது. வேலைவாய்ப்பிற்கு அந்நிய மூலதனம் தவிர்க்க முடியாததது என்ற வாதமும் அன்று உருவாகியுள்ளது (பிபின் சந்திரா வின், இந்தியாவில் பொருளாதார தேசியத்தின் வளர்ச்சியும், தோற்றமும்). இந்திய முதலாளிகள் சிலரும் கவனம் செலுத்தினர், பிரிட்டிஷாரும் ஆதிக்கம் செலுத்தினர். 


இந்திய முதலாளிகள் பிரிட்டிஷார் செய்த முதலீட்டுடன் போட்டியிடுவதில் சிரமத்தை சந்தித்தனர். அந்நிய முதலீடுகளுக்கு இன்றைய இந்திய ஆட்சியாளர்கள் ஏராளமான கடன், வரி தள்ளுபடி, நிலம் குத்தகை, போன்ற சலுகைகள் தருவது போல், அன்றைக்கும் வழங்கப்பட்டு இருக்கிறது. இன்றைய நவ காலனியாதிக்க நடைமுறை, அன்றைய காலனியாதிக்க பழக்கதின் தொடர்ச்சியாக பார்க்க வேண்டியுள்ளது. அரசாங்க கடன் வழங்குதல், தோட்டம், வெளிநாட்டு வர்த்தகம் ஆகியவற்றில் ஆதிக்கம் செலுத்திய அந்நிய முதலீடு, சணல், கம்பளி, பட்டு ஆடைகள், காகிதம், சர்க்கரை, இரும்பு, பித்தளை வார்ப்பு ஆகியவற்றிலும் கோலோச்சியது. இதன் காரணமாக அந்நிய முதலீடு தவிர்க்க முடியாது, இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு அவசியம் என வாதிட்டோரும், இந்திய முதலாளிகளின் தொழில் பாதிப்பு குறித்து அங்கலாய்த்தனர். குறிப்பாக அந்நிய முதலீடு தேவையில்லை என்ற வாதம் அதிகரித்தது. 


இந்த பின்னணியில் தான் இந்திய விடுதலைப் போர் மன்னர்கள் மற்றும் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக இருந்த நிலை, இந்திய முதலாளிகள் மற்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கும் எதிரான போராட்ட வடிவம் பெற்றது. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் உருவான வளர்ச்சியும், படித்த இளைஞர்கள் உலக அரசியல் போக்குகளை புரிந்து கொண்டதும், இளைஞர்களிடையே அரசியல் போராட்டத்தில் பங்கேற்கும் ஆர்வத்தை அதிகரித்தது. இந்த சூழல் சுதேசி முழக்கத்தை 1905 ல் முன் வைத்து, போராட்ட களம் சூடேற காரணமாக அமைந்தது. தமிழகத்திலும், சுதேசி கப்பல், கோரல் மில் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு போராட்டம் மற்றும் ஒப்பந்தம் இவை பிரதான இயக்கங்களாக மாறியதும், வ.உ.சி போன்ற தலைவர்கள் எழுச்சி பெற்றதும், இந்த பின்னணியில் என்பதை புரிந்து கொள்ள முடியும். 


இ.எம்.எஸ் எழுதிய, இந்திய விடுதலை போராட்ட வரலாறு நூல், பின்வருமாறு கூறுகிறது. “ 1857 முதல் விடுதலை போர் மற்றும், முதல் உலகப் போர் நடந்த காலத்தில் நடந்த சில கலகங்களும் தோல்வியில் முடிந்தன. இவை இரண்டும் சில வேறுபாடுகளைக் கொண்டிருந்தது. குறிப்பாக முதல் உலகப்போருக்கு முந்தைய நிலை, சுதேசி முழக்கம் காரணமாக இந்திய முதலாளி வர்க்கம் முன்னர் இல்லாத வளர்ச்சியை பதிவு செய்தனர். பஞ்சாலை, இலகு ரக தொழில்களுடன் நிறுத்துக் கொள்ளாமல் கனரக உற்பத்தி தொழில்களிலும் ஈடுபட துவங்கினர். டாடா, எஃகு ஆலையை நிறுவினார். ஆசியாவில் ஜப்பானுக்கு அடுத்தப்படியாக இந்த ஆலை அமைந்தது. உலக யுத்தம் துவங்கிய பின், பிரிட்டிஷார் இந்திய முதலாளிகள் தொழில் துவங்க கையாண்ட தடை முயற்சிகளை கை விட்டனர்”, என மேற்படி நூல் தெளிவுபடுத்துகிறது (பக்கம் 237). மொத்தத்தில் இந்திய தொழில் வளர்ச்சி பெரும் உற்பத்தி, கனரக தொழிலில் கால் பதிக்க பெரும் போராட்டம் தேவைப் பட்டுள்ளது, என்பதை புரிந்து கொள்ள முடியும். 


1850 முதல் 1947 வரை இந்திய தொழில் வளர்ச்சியில் மூன்று தன்மைகள் என்ற கட்டுரையில், ஜிஜ்ஸ்பெர்ட் ஆங்க் (Ginsbert Oonk - Industrialisation in India 1850-1947, Three Variations in the emergence of Indigenous Industrialists) என்பவர், கொல்கத்தாவை மையப்படுத்தி, மார்வார் பிராந்திய முதலாளிகளை ஈடுபடுத்தி, சணல் ஆலை மற்றும் சார்பு துறைகளிலும், மும்பையை மையப்படுத்தி பார்சி இனத்தவரை பயன்படுத்தி பஞ்சாலை தொழில்களிலும், அகமதாபாத் பகுதியில் இதர இந்து பிரிவினரை பயன்படுத்தி, பஞ்சாலை மற்றும் வங்கி தொழிலிலும் விரிவாக்கம் செய்ய பிரிட்டிஷ் ஆட்சி துணை நின்றது எனக் கூறுகிறார். இவை இந்திய முதலாளித்துவ வளர்ச்சிக்கு துணைபுரிந்துள்ள நிலைமைகளை புரிந்து கொள்ள முடிகிறது. 


கம்யூனிஸ்ட் கட்சி உருவான பின்னர் 1947 வரை:


இ.எம்.எஸ் குறிப்பிட்டதைப் போல் இந்தியாவில் 1907 ம் ஆண்டில் சூரத் நகரில் நடைபெற்ற இந்தியதேசிய காங்கிரஸ் மாநாட்டில், விவசாயிகள் மற்றும் தொழிலாளர் பிரச்சனைகள் தவிர்க்க முடியாத ஒன்றாக விவாதிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னரே திலகர் தலைமையில் மும்பையில் நடந்த போராட்டங்களும், வ.உ.சி. தலைமையில் நடைபெற்ற தொழிலாளர் போராட்டங்களும் தீவிரம் பெற்றன. 


1900ம் ஆண்டில், பதிவு செய்யப்பட்ட தொழில் நிறுவனங்கள் 1360, அதுவே 1907ம் ஆண்டில் 2661 ஆக உயர்வு பெற்றது (working Class of India - Sukomalsen) இந்த உயர்வு தொழிலாளர்கள் மீதான சுரண்டலிலும் பிரதிபலித்தது. எனவே சுரண்டலுக்கு எதிரான போராட்டங்களும் தீவிரம் பெற்றது. ரயில்வே, போர்ட், பஞ்சாலை,என்ஜினியரிங் ஆகிய தொழில்களில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தங்கள் மீதான சுரண்டலுக்கு எதிரான வேலை நிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். தூத்துகுடி, மதுரை, சென்னை உள்ளிட்டு கராச்சி வரையிலும் இந்தியாவின் அனைத்து பெரு நகரங்களிலும் வேலை நிறுத்தங்கள் நடந்துள்ளன. 1917 காலத்தில் சென்னையில் மட்டும் 16 வேலைநிறுத்தங்கள் நடந்துள்ளன. இந்தியா முழுவதும் 1920 ல் 110 வேலைநிறுத்தங்களில் 24.75 லட்சம் தொழிலாளர்கள் பங்கெடுத்துள்ளனர். சென்னையில் மெட்ராஸ் லேபர் யூனியன் 1918 ல் முதல் பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்கமாக உருவெடுத்தது.  


இதற்கு முன்னதாகவே, சதிஷ் சந்திர முகர்ஜி என்பவர், டான் பத்திரிக்கையில், இந்திய தொழிலாளர்களின் நிலை, அவர்கள் தங்களுக்குள் ஒன்று சேர்ந்து தொழிலாளர் அமைப்புகளை உருவாக்காமல், தங்கள் வாழ்வை மேம்படுத்தவோ, உரிமைகள் பெறவோ வாய்ப்பில்லை, என எழுதியுள்ளார். இதற்கு பிரடெரிக் எங்கெல்ஸ் எழுதிய இங்கிலாந்தில் தொழிலாளர் நிலை கட்டுரையை கோடிட்டு காட்டியுள்ளார். இந்த பின்னணியில் இருந்தே நாடு தழுவிய மத்தியத் தொழிற்சங்கம் AITUC 1920 அக்டோபர் 31 ல் உருவானது. 1920 அக்டோபர் 17 அன்று தாஷ்கண்ட் நகரில், 7 பேர் கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளை உருவானது. அது இந்தியாவின் விடுதலை குறித்து விவாதித்தது. அதற்கு முந்தைய ரஷ்ய புரட்சி இந்தியாவில் இருந்த படித்த இளைஞர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது. கம்யுனிச சித்தாந்தம், பேசும் பொருளாக இந்திய அரசியலிலும், விடுதலை போராட்டத்திலும், தொழிலாளர் உரிமைகள் கோரும் போராட்டங்களிலும் பிரதிபலித்ததையும் பார்க்க முடிகிறது. 


திலகருடன் மிக நெருக்கமாக போராட்டங்களில் பங்கெடுத்தவரும், பம்பாய் நகரின் மேயராக பின்னர் தேர்வு செய்யப்பட்டவருமான, ஜோசப் பாப்டிஸ்ட்டா, AITUC மாநாட்டிற்கான வரவேற்பு குழு தலைவராக ஆற்றிய உரையில், “தொழிலாளர்கள் விற்கும் உழைப்பு சக்தியை அபரிமிதமாக உறிஞ்சும் முதலாளி வர்க்கம் அதிகமான லாபத்தை சம்பாதிக்கிறது” என மார்க்ஸ் கூறியது போல் பேசியுள்ளார். இந்த மாநாட்டில் தலைவராக தேர்வான அன்றைய இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர், லாலா லஜபதி ராய் தனது உரையில், சோவியத் ரஷ்யாவில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் குறித்து பேசியதுடன், அமைப்பு ரீதியில் ஆலைகளில் பணியாற்றி வரும் இந்திய தொழிலாளர்களும், உண்மையான மாற்றத்திற்கான போராட்டத்தை நடத்துவது தவிர்க்க முடியாது என குறிப்பிட்டார். இந்த மாநாட்டில் 101 பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்கங்கள் தங்களை AITUC உடன் இணைத்து கொண்டன.  பின் வந்த ஆண்டுகளில் ம. சிங்காரவேலர் உள்ளிட்டோர் ஆலோசனை குழுவில் இடம்பெற்று வழிநடத்தியதாக கூறப்படுகிறது. சென்னையில் 1923 ல் மே தின கொடி ஏற்றியது. தொழிலாளி விவசாயி கெஜட் வெளியிட்டது, எட்டு மணி நேர வேலை உள்ளிட்ட கோரிக்கைகள் கொண்ட பிரகடனம் ஆகியவை ஆலோசனை குழுவில் சேர்க்கப்பட்டதற்கான பின்புலமாகும்.


கம்யூனிஸ்ட் கட்சியின் உருவாக்கம், மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் லாகூர் ஆகிய இடங்களிலும் குழுக்களாக கம்யூனிஸ்ட்டுகள் செயல்படும் சூழலை உருவாக்கியது. 1922 ல் கயாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பெயரில் தெளிவான திட்டம் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது. பூரண சுயராஜ்யம் துவங்கி 13 அம்சங்கள் இடம் பெற்று இருந்தது. குறிப்பாக மூன்றாவது அம்சமான, நிலபிரபுத்துவத்தை அழித்து, நவீன விவசாய மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கு பாடுபடுவது, எட்டு மணி நேர வேலை, குறைந்த பட்ச கூலி ஆகிய உத்திரவாதமான ஏற்பாடுகளையும், வேலை நிறுத்தம் செய்யும் உரிமையும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும், போன்றவை இடம் பெற்று இருந்தது. அதாவது தொழில் வளர்ச்சி என்பது தொழிலாளர்களுக்கான உரிமைகள் மற்றும் முன்னேற்றத்துடன் கூடியது என்பதை, மேற்படி செயல் திட்டம் விளக்கமாக கூறியிருந்தது. 


இத்தகைய சூழலில் தங்களை தற்காத்துக் கொள்ள இந்திய தொழிலாளி வர்க்கம் நடத்திய போராட்டங்கள் இந்திய தொழிற்சங்க சட்டம் என்பதை 1926 ல் உருவாக்கியது. இதன் பின்னணியில் 1921 ல் லண்டன் நகரில் செயல்படடு வந்த இந்தியாவினுடைய தொழிலாளர் நலக்குழு மூலமும், பிரிட்டிஷ் தொழிற்சங்கம் மூலமும், அதில் செயல்பட்ட கம்யூனிஸ்ட் சக்லத்வாலா போன்றோரின் முயற்சியாலும் பிரிட்டிஷ் அரசுக்கு நிர்பந்தம் அளிக்கப்பட்டது. பிரிட்டிஷ் அரசு 1926 ல் தொழிற்சங்க சட்டத்திற்கு அனுமதி அளித்த கையுடன் மீரட் சதி வழக்கில் கம்யூனிஸ்ட்டுகள் மீது சதி வழக்கு பதிவு செய்து செயல் பாட்டை முடக்கவும் செய்தது. 


இந்திய விடுதலைப்போரில், மன்னர்கள், தேசிய முதலாளிகள் ஆகியோரின் பங்களிப்பில் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் பங்களிப்பாக மாறும் நிலை படிப்படியாக உருவானதை காண முடிகிறது. 1921 ல் மக்கள் தொகை 30.18 கோடியாக இருந்தது, 1931 ல், 30.52 கோடியாக உயர்ந்தது. கிராமங்களில் இருந்த சூழல் வேலைவாய்ப்பை அதிகரிப்பதாக இல்லை. தொழில் வளர்ச்சி உருவான பகுதிகளை நோக்கிய இடம் பெயர்தல் அதிகரிக்க இந்த சூழல் நிர்பந்தம் அளித்தது. இந்தியத் தொழிற்சாலைகளின் நிலைமை குறித்து ஆய்வு செய்ய 1929 ல் பணிக்கப்பட்ட ராயல் கமிசன் இது குறித்த விவரங்களை பதிவு செய்துள்ளது. மேற்குறிப்பிட்ட ஆண்டு இடைவெளியில், நடந்த போராட்டங்கள் அல்லது தொழிற்சாலைகளின் நிலைமை, ஆட்குறைப்பு, பணிநீக்கம், ஊதிய உயர்வு, போனஸ் ஆகிய பிரச்சனைகள் சார்ந்ததாக இருந்ததாகவும் ராயல் கமிசன் பதிவு செய்துள்ளது.  அன்றைய சூழ்நிலையில் முதலாளித்துவ பாணியிலான தொழில் வளர்ச்சி அளித்த வேலைவாய்ப்பு, வேலையின்மை அதிகரிக்கும் போது செய்யும் வேலையை நிரந்தரமற்றதாக்கும் பணியை  செய்த விவரங்களை ராயல் கமிஷன் அறிக்கையின் விபரங்களில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது. 


விடுதலைக்கு பின் இந்திய தொழில் வளர்ச்சி:


இத்தகைய தேசிய முதலாளிகளின் வளர்ச்சியை தொடர்ந்தே, 1944 பாம்பே திட்டம், டாடா, பிர்லா, பாய் குருப் உள்ளிட்ட பலர் இந்திய வர்த்தக கூட்டமைப்பு (FICCI) லிருந்து பங்கெடுத்து உருவாக்கியுள்ளனர். இந்திய விடுதலைக்கு பின் விவசாயம், தொழில், சேவை ஆகியவற்றின் கலவை அப்போதைக்கு இருந்த 53%, 17%, 22 ஐ, குறைந்த பட்சம் சில ஆண்டுகளில் 40%, 35%, 20% ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளனர். அதேபோல் மக்களின் வாழ்வாதாரம் 2800 கலோரி உணவு, 100 சதுர அடியில் வீடு போன்ற அளவில் இருப்பதை உறுதி செய்வது பேசப்பட்டுள்ளது. 1934 லேயே விஸ்வேஸ்ரய்யா மைசூர் திவான், இந்தியாவின் திட்டமிட்ட பொருளாதாரம் என்ற நூலை வெளியிட்டு உள்ளார். 1938 ல் நேரு, தலைமையில் இந்திய தேசியக் காங்கிரஸ் திட்டக் குழுவை உருவாக்கியுள்ளது. நேரு ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்தது, குறிப்பாக சோவியத்தில் அவர் கண்ட வளர்ச்சியும், அது குறித்து அவருடைய உரைகளும் இதற்கு காரணமாக அமைந்தது. ஜெயப்பிரகாஷ் நாராயணன், சர்வோதயா திட்டம் என 1950 ல் பேசியுள்ளார். ஶ்ரீமான் நாராயணன் என்பவர், காந்திய திட்டம் என பேசியுள்ளார். எம்.என். ராய் தலைமையில் கம்யூனிஸ்ட்டுகள் 1945 ல் மக்கள் திட்டம் என்பதை வெளியிட்டனர். 


மக்கள் திட்டம், 10 ஆண்டுகளில் அடைய வேண்டிய இலக்குகளை முன்வைத்தது. விவாசாயத்தில் கவனம், மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்துவது, அதன் மூலம் தொழில் வளர்ச்சியை துரிதப் படுத்துவது, அனைவருக்கும் சமமான பங்கீடு தரும் விதத்தில் மக்கள் ஆட்சி இந்தப் பணிகளை செய்யும், குறிப்பாக வளர்ச்சிக்கு மிக முக்கிய தேவையான உள்கட்டமைப்புகளான, சாலை, ரயில் உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து வசதிகள் திறம்பட செய்யப்படும் என இருந்தது. நேருவின் தலமையிலான அரசு அமைந்தபின், மகலனோபிஸ் உள்ளிட்ட அறிஞர்களின் தயாரிப்பை உள்வாங்கி கொண்டு செயல்பட்டது. குறிப்பாக சோவியத் அமைப்பு பின் பற்றிய 5 ஆண்டு திட்டங்களை உள்ளடக்கியதாக மகலனோபிஸ் தயாரித்த திட்டம் இருந்தது. 


1952 ல் தேர்வு செய்யப் பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் கம்யூனிஸ்ட்டுகள் இரண்டாவது இடத்தில் இருந்தனர். இதை இந்திய வளர்ச்சிக்கான ஆக்கப் பூர்வமான பங்களிப்பு செய்யவும் பயன்படுத்தினர். அதில் மிக முக்கியமானவை, நெய்வேலி நிலக்கரி சுரங்கம், மின்சார தயாரிப்பு மற்றும் இரும்பு உருக்காலை, சேலத்தில் அமைப்பது ஆகியவை முக்கியமானதாகும். இதில் பி. ராமமூர்த்தி முக்கிய பங்களிப்பு செய்தார். திருச்சியில் பெல் மற்றும் துப்பாக்கி தொழிற்சாஅலைகள் அமைவதில் நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பின் மூலம் அனந்த நம்பியார் நிறைவேற்றினார். இந்திய விடுதலையை தொடர்ந்து தொழில் வளர்ச்சிக்கு மற்ற முதலாளித்துவ நாடுகள் உதவி செய்யாத நிலையில், சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஜெர்மனி ஆகிய கம்யூனிஸ்ட் நாடுகள் மேற்படி தொழில் வளர்ச்சிக்கு உதவி செய்தன. 


1953 ல் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் பங்கெடுத்த ஏ.கே.கோபாலன், சோவியத் அதிபர் ஸ்டாலினிடம் இந்திய தொழில் வளர்ச்சிக்கு உதவி செய்ய கேட்டு கொண்டார். இந்தியாவிற்குத் திரும்பிய பின் நேருவை சந்தித்து, சோவியத் உதவியை நட வலியுறுத்தினார். ஏற்கனவே பிரதமர் நேரு, அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளிடம் உதவி கேட்டு வெறும் கையுடன் திரும்பிய நிலையில், சோவியத் உதவியை நாடினார். அதன் மூலம் உருவானதே, பிலாய், ரூர்கேலா உருக்கு ஆலைகள். அதேபோல் பல எண்ணெய் நிறுவனங்கள். ஆனால் இந்திய ஆளும் வர்க்கம், இதை நினைத்துப் பார்க்கவோ, உருவான பொதுச் சொத்தை மேம்படுத்தவோ இன்று முயற்சிக்கவில்லை என்பதைப் பார்க்கிறோம். திருச்சி பெல் நிறுவனத்தை, ஜார்ஜ் பெர்னாண்டஸ் 1978 ல் தொழில் துறை அமைச்சராக இருந்த போது, அன்றைய மேற்கு ஜெர்மனியின் சீமென்ஸ்க்கு விற்க முயற்சித்தார். அதை பி.ராமமூர்த்தி அம்பலப்படுத்தி தடுத்து நிறுத்தினார். இன்று வரை இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களை விற்பதை தடுக்கும் போராட்டத்தை கம்யூனிஸ்டுகள் நடத்தி வருகின்றனர். 


அதேபோல் கேரளா, மேற்கு வங்கம் மற்றும் திரிபுரா வில் கிடைத்த இடது முன்னணி ஆட்சியை அடிப்படை கட்டமைப்பை மாற்றுவதற்கு பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது. மக்கள் திட்டம் முன் வைக்கப்பட்டதை போல், விவசாய வளர்ச்சிக்கு பெரும்பாங்காற்றியதன் மூலம் வாங்கும் சக்தியில் மாற்றத்தை உருவாக்கிய பெருமை இடதுமுன்னணி ஆட்சிக்கு உண்டு. இந்திய விடுதலைக்கு முன் உருவாக்கப்பட்ட பல திட்டங்கள் வெறும் அறிவிப்புகளாக, பிரச்சாரப் பயன்பாட்டு தேவையுடன் நின்றது. ஆனால் கம்யூனிஸ்ட்டுகள் தங்களின் திட்டம் மற்றும் புதிய திட்ட உருவாக்கங்களுடன், இந்தியாவில் அனைவருக்குமான தொழில் வளர்ச்சிக்கு போராடி வருகின்றனர். 








சோசலிசம்

சோசலிசமே மாற்று….

 நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பதை, நன்றாக உணர முடிகிறது. சோசலிச சோவியத் யூனியன் புரட்சி மூலம் ஆட்சியை, பாட்டாளி வர்க்க தலைமையில் கட்டமைத்த போது, உலகில் காலினியாதிக்க நாடுகள் விடுதலை பெற்றது. இந்தியாவே இரண்டாம் உலகம் போரில் பாசிசம் வீழ்ந்து சோவியத் எழுச்சி பெற்ற நிலையிலேயே விடுதலை பெற்றது. இரண்டாம் உலகப் போருக்கு காரணமான, ஹிட்லரின் வகுப்புவாத வெறி சோசலிச சோவியத் யூனியன் மூலம் அடக்கப்பட்ட போது, உலகம் முழுவதும் அனைத்து நாடுகளும் தங்களின் ஆட்சியில், நலத்திட்டங்களை முன்வைக்கும், சமூக அழுத்தம் உருவானது. ஜான் மொனார்டு ஹெயின்ஸ் என்ற முதலாளித்துவ பொருளாதார அறிஞர் இத்தகைய கொள்கைகளை, முதலாளித்துவ ஆட்சியாளர்களுக்கு உருவாக்கித் தர நியமனம் செய்யப்பட்டர். உலகம் முழுவதும் சோசலிச ஈர்ப்பு அதிகரித்த காரணத்தால், முதலாளித்துவம் அடக்கி வாசிக்க ஒப்புக் கொண்டது. சமூக பாதுகாப்பு திட்டங்களை முன் வைக்கும் சூழல் உருவானது. அந்த பின்புலத்தில் இருந்து தான் ஐரோப்பிய நாடுகளின் மக்கள் இன்றளவும் அனுபவிக்கும், உரிமைகள் ஆகும். சோசலிச சோவியத் உருவாக்கிய மக்கள் நலக் கொள்கைகளின் பிரதிபலிப்பே இதற்கு மூலகாரணம் என்பதை மறுக்க முடியாது. 


அதுவரையிலும் இருந்த வரம்ப்பற்ற உழைப்பு நேரம் மூலமான சுரண்டல் எட்டு மணி நேரம் என சோசலிச ஆட்சி தான் சட்டம் இயற்றியது. அதைத் தொடர்ந்தே அனைத்து முதலாளித்துவ நாடுகளும் வேலைநேர குறைப்பு குறித்து சட்டம் இயற்ற ஒப்புக் கொண்டனர். இரண்டாம் உலகப் போருக்கு பின் சோவியத் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்த சூழலிலும், சில ஆண்டுகளிலேயே, வேலை நேரத்தை, வாரம் 36 மணி நேரம் என சட்டம் இயற்றியது. இது வேலை வாய்ப்பை அதிகரித்து, வேலையில்லை என்ற சூழல் உருவாவதை, சோசலிசம் தடுத்தது. இதுவும், உலகின் முதலாளித்துவ நாடுகளுக்கு அழுத்தம் அளித்தது. குறிப்பாக அமெரிக்கா வாரம், 40 மணிநேரம், ஐரோப்பா கண்டத்தின் பல நாடுகளில் 35 அல்லது 36 மணிநேரங்கள் என சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அவ்வாறு உழைப்பு சுரண்டல் குறைக்கப்படவில்லை எனில், தங்கள் நாட்டிலும், புரட்சி வெடிக்கும், பாட்டாளி வர்க்கம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் என்ற அச்சம் முதலாளித்துவத்திற்கு உருவானது. 


சோவியத் புரட்சி வெற்றி பெறுவதில் தொழிலாளி வர்க்கம் நகர் புறத்தில் பங்களிப்பு செய்தது போல், கிராமங்களில் முஜீக்குகள் (விவசாயி) மகத்தான பங்களிப்பு செய்தனர். நகரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் தயாரித்த துண்டு பிரசுரங்களை, ஜார் ஆட்சியின் காவல்துறையின் கண்ணில் மண்ணைத் தூவி, கிராமங்களுக்கு எடுத்து சென்றதிலும், அதை விநியோகித்ததிலும், விவசாயிகளை மாபெரும் எழுச்சிக்கு தயார் செய்ததிலும், தொழிலாளர்களும், பெண்களும், மாணவர்களும் மகத்தான பங்களிப்பு செய்தனர். அதன் விளைவாகவே நிலமற்றவர்களுக்கு நிலம் சொந்தமாகவும், பின்னர் கூட்டுப் பண்ணை விவசாயம் செழிக்கவும், விவசாயத்தில் நவீன வளர்ச்சி ஏற்பட்டு பெரும் முன்னேற்றம் ஏற்படவும் காரணமாக அமைந்தது. வாழ்க்கை முறையிலும் வசதிகளை அனுபவிப்பதிலும் கிராமம், நகரம் என்ற வேறுபாடுகளை களைந்த ஆட்சியாக சோசலிச சோவியத் யூனியன் அமைந்தது. இந்த வளர்ச்சிப் போக்கும் உலக முதலாளித்துவ நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது. 


உற்பத்தி மாற்றங்கள்:


சோவியத் தொழிலாளி – விவசாயி ஒற்றுமையும், உறுதியும் இல்லாமல் இதை சாதித்திருக்க முடியாது. தமிழ் மார்க்சிஸ்ட்டில் 2005 ஆண்டு வெளிவந்த கட்டுரை சில விவரங்களை குறிப்பிடுகிறது. ஸ்டாலின் 1933ம் ஆண்டு கட்சியின் மத்தியக்குழு கூட்டத்தில் பெருமையோடு சொன்னார். இதற்கு முன்பு இரும்பு எஃகு தொழிற்சாலை ஏதும் இல்லை. இப்போது இருக்கிறது; முன்பு ட்ராக்டர் தயாரிக்கும் ஆலை இல்லை, இப்போது இருக்கிறது; முன்பு, கார் தயாரிக்கும் தொழிற்சாலை இல்லை, இப்போது இருக்கிறது; முன்பு ரசாயன தொழிற்சாலை இல்லை, இப்போது இருக்கிறது. இந்த பொருளாதார அடிப்படை தான் பின்னர் பாசிசம் தொடுத்த தாக்குதலை எதிர்கொள்ளும் பலத்தினை சோவியத் யூனியனுக்கு கொடுத்தது. மார்ஷல் ஜூகோவ் எழுதுகிறார். வரலாறு ரீதியாக சரி என்று நிரூபிக்கப்பட்ட கட்சியின் விவேகம், மதிக்கூர்மை, வளர்ச்சிக்காக தேர்ந்தெடுத்த பாதை, பணியிடத்தில் தொழிலாளிகளும் மற்ற பகுதி மக்களும் காட்டிய வீரம், தியாகம் – இவைகள் தான்இரண்டாம் உலகப் போரில் நமது வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தன.


தொழில்மயமாக்கலும் விவசாயத்தில் கூட்டுப் பண்ணை முறையும் ஒன்றோடொன்று இணைந்த பொருளாதார வளர்ச்சியினை சோவியத் யூனியன் கண்டது. கூட்டுப் பண்ணை தொழில்மய மாக்குதலுக்கு தேவையான மூலதனத்தை கொடுத்தது புதிய பொருளாதார கொள்கையிலிருந்து வேகமாக தொழில்துறை வளர்ச்சிக்கு போக வேண்டுமென்ற முடிவு, பெரிய அளவில் கூட்டுப் பண்ணை விவசாயத்தின் அடிப்படையில் தான் எடுக்க வேண்டிய நிலை எழுந்தது. 


1934ல் மொத்த விவசாயக் குடும்பங்களில் 71.4 சதம் கூட்டுப் பண்ணைக்குள்  வந்தார்கள்; பல இடங்களில் கொண்டு வரப்பட்டார்கள் என்பதும் உண்மை. 1926ம் ஆண்டு மக்கள் தொகை கணிப்பின் படி சோவியத் யூனியனின் 82 சதம் மக்கள் கிராமப்புறத்தில் வாழ்ந்தார்கள். தொழில்மயமாக்கலின் வேகம் 1928லிருந்து 1939க்குள் சுமார் 25 லட்சம் மக்களை கிராமத்திலிருந்து தூக்கி நகரங்களில் வைத்தது. தொழில்மய மாக்கலும் விவசாய கூட்டுப் பண்ணை முறையும் பதிவு செய்த அளப்பரிய வெற்றி. அன்று சோவியத் சந்தித்த சவால்களை எதிர்கொள்ள கூட்டு விவசயாமே துணை கொண்டு நிறைவேற்றப் பட்ட தொழில்மயமாக்கலுக்கு மாற்று வழி ஏதேனும் இருந்ததா? ஐரோப்பாவிலேயே மிகவும் பின் தங்கிய நாடு, திரட்டப்பட்ட மூலதனம் ஏதுமில்லாத நாடு, முன் அனுபவம் ஏதுமின்றி ஒரு புதிய அமைப்பை உருவாக்க முனைந்த நாடு, பூகோள ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் ஏகாதிபத்தியம் விரித்த சதி வலையினை எதிர்நோக்கும் நாடு – எந்த வழியினை தேர்ந்தெடுத்திருக்க முடியும்? 1929லிருந்து முதலாளித்துவ உலகம் பெரும் வீழ்ச்சியினை சந்தித்துக் கொண்டிருந்த காலம் அது; இரண்டரைக் கோடி தொழிலாளர்கள் வேலையினை இழந்து வீதிக்கு வந்தனர். இந்த பின்னணியில் சோவியத் பரிசோதனை உலக மக்களை கவ்விப் பிடிக்கத் துவங்கியது. முதலாளித்துவ உலகம் பல்வேறு வகையிலான மூலதன திரட்டலுக்கு வாய்ப்பு இருந்த நிலையிலும் தொழில் முன்னேற்றத்தை காண பல ஆண்டுகள் பிடித்தன; ஆனால் ஒரு சில ஆண்டுகளிலேயே வெளிநாட்டு மூலதனம் கடன் உதவி ஏதுமில்லாமல் 1930ம் ஆண்டிலேயே தொழில் வளர்ச்சியில் ஐரோப்பாவின் முதல் இடத்திலும் உலகின் இரண்டாவது இடத்திலும் சோவியத் யூனியனை கொண்டு வந்து நிறுத்தியது.


இன்றைய சூழலில் சோசலிசமே மாற்று:


பெரும் நோய்த் தொற்று காரணமாக மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முதலாளித்துவ கொள்கையே இந்த நோய்த் தொற்றை எதிர் கொள்ள முடியாமைக்கு காரணமாகும். பொதுசுகாதாரத்தை தனியாருக்கு தாரை பார்த்து அரசு வேடிக்கை பார்ப்பது, முதலாளித்துவ லாபவெறி காரணமாக இயற்கை பெருமளவில் கொள்ளையடிக்கப்படுவது, மூன்றாவதாக உலகமயமாக்கல் கொள்கை உணவு, உள்ளிட்ட பழக்க வழக்கங்களில் ஏறபடுத்திய மாற்றங்கள் ஆகியவையே, இந்த நோய் தொற்றை எதிர் கொள்ள முடியாமைக்கான காரணம், என கூறுவதை ஆட்சியாளர்கள் கவனிப்பதில்லை.  இந்தியாவை ஆட்சி செய்யும் பாஜக, சுற்றுச் சூழல் தாக்க அறிக்கை, வேளாண் சட்டங்களில் மாற்றம், தொழிலாளர் சட்டங்களில் மாற்றம் ஆகியவை முதலாளித்துவத்தின் கொள்ளை லாபத்தை உயர்த்தவே. மேலும் மேலும் முதலாளித்துவத்தின் லாபவெறிக்கு துணை போவதை, பாஜக ஆட்சியாளர்கள் சாதனையாக குறிப்பிடும் காலத்தில், சோசலிச சோவியத் தின் சாதனைகள், பேசப்பட வேண்டியுள்ளது. 


உலகம் இந்த நோய் தொற்றை எதிர் கொண்ட வகையிலும் கூட சோசலிசமே சிறந்தது என்பதை நிரூபித்துள்ளது. சோசலிச கொள்கையை அமலாக்கு கம்யூனிச நாடுகளில் பொது சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு நடவடிக்கைகள் அரசு வசம் இருப்பதால், கொரானா பதிப்பில் இருந்து விரைந்து மீண்ட உண்மையை காண முடியும். ஐக்கிய நாடுகள் சபையின் கட்டுப்பாட்டில் உள்ள உலக சுகாதார மையம், சீனா, வியட்நாம், வடகொரியா, கியூபா ஆகிய நாடுகளில் நோய்த் தொற்று விவரங்களை சரியாக அளித்துள்ளன. அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி, ஸ்பெயின், பிரேசில், இந்தியா ஆகிய நாடுகள் உயிர் பலியை அதிகரித்து இருப்பதையும் காண முடிகிறது. இது சோசலிசத்திற்கும் முதலாளித்துவத்திற்குமான முரண்பாட்டை வெளிப்படுத்துகிறது. 


நியுஸிலாந்து நாட்டில், தொழிலாளர் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றவும், அமெரிக்காவில் டிரெம்ப் தோல்வியை சந்திக்கும் நிலை உருவானதற்கும் நோய்த் தொற்று கட்டுப்படுத்த படுவதே காரணம். நியூசிலாந்த்து வெற்றிகரமாக கையாண்டது. அமெரிக்கா பொதுசுகாதார பராமரிப்பை தனியாரிடம் ஒப்படைத்து வேடிக்கை பார்த்தது. டிரெம்ப் பிரச்சாரத்தில் பங்கெடுத்தவர்களில் சுமார் 30 ஆயிரம் பேர் நோய்த் தொற்றுக்கு ஆளானதை பிடேன், பெரும் பிரச்சாரமாக மாற்றியதையும் பார்க்க முடியும். 


மற்றொரு தேர்தல் முடிவான, பொலிவியாவில் மீண்டும் சோசலிச கட்சி வெற்றி பெற்றது. ஏற்கனவே நான்கு முறை வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தில் இருந்த ஈவோமோரேல்ஸ் அமெரிக்க ராணுவ நடவடிக்கையால், ராஜினாமா செய்ய வைக்கப் பட்டு, அர்ஜெண்டைனாவுக்கு நாடு கடத்தப்பட்டார். ஆனால் அவர் அவர் அமைச்சரவையில் இடம் பெற்று இருந்த லூயிஸ் அர்ஸ் ஓராண்டு இடைவெளியில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றது அமெரிக்காவிற்கு பெரும் தோல்வி என கூறப்படுகிறது. ஆட்சி பொறுப்பை ஏற்க உள்ள லூயிஸ் அர்ஸ், தனது ஆட்சி கியூபா, வெனிசூலா, ஈரான் ஆகிய நாடுகளுடன் உறவை பலப்படுத்தும் என அறிவித்துள்ளார். நான் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைபாவையாக இருக்க மாட்டேன் என்பதை தெளிவு படுத்தியுள்ளார். 


எனவே உலகம் தற்போதைய துன்பத்தில் இருந்து விடுதலை பெறவும், தொடர்ந்து முன்னேற்றகரமான வாழ்க்கைமுறையை மேம்படுத்திக் கொள்ளவும், சோசலிசமே தீர்வாக முடியும். அந்தவகையில் இந்திய மக்கள் வகுப்புவாத பாஜகவை முறியடிப்பதும், இடதுசாரி ஜனநாயக சக்திகளை ஆதரிப்பதுமே ஒரே வழியாகும். அதற்கான போராட்டத்தை விவசாயிகளும், தொழிலாளர்களும் கூட்டாக தீவிரப்படுத்துவதும் இன்றைய தேவை ஆகும்.

மே தின கட்டுரைகள் 3

 

மே தினம் விடுமுறை தினம் மட்டுமல்ல…

மே தினம் 1, உழைப்பாளர் தினம் உலகம் 8 மணி நேரம் என்பதை உழைப்பு நேரமாக தீர்மானிக்க வேண்டும், என்பதை போராடி பெற்ற வரலாற்று தினம். முதலாளிகளுடனும், அரசுகளுடனுமான போரில், உயிர் பலி தந்த, ரத்தம் சிந்திய தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நாள். வரால்ற்றில் இருந்து, உழைப்பு சுரண்டலை தடுக்கவும், புதிய உரிமைகளுகளுக்கான குரலை வலுப்படுத்தவும், உறுதி ஏற்கும் தினம். இந்த 2020 ஆண்டில், உலகம் பொது முடக்கத்திற்குள் தள்ளப்பட்ட காலத்தில், நம்மை கடக்க இருக்கிறது. முடங்கி இருக்கும் நமக்கு, போராட்ட வரலாறே, புதுத் தெம்பூட்டுகிறது. முதலாளித்துவ சுரண்டலை எதிர்க்கும் போராட்டத்தை வலுப்படுத்துகிறது. 


இந்தியாவில் உற்பத்தியும் தொழிலாளர்களும்:


இந்தியாவில், பிரிட்டிஷ் கால முதலாளித்துவ உற்பத்தி வளர்ச்சி முறை, புதிய தொழிலாளர்களை உருவாக்கியது. 1857-59 கால முதல் விடுதலைப்போர், இந்தியாவில் ரயில் பாதை அமைக்க வேண்டிய கட்டாயத்தை பிரிட்டிஷாருக்கு ஏற்படுத்தியது. இது இந்தியாவை நவீனப்படுத்தும் நோக்கம் கொண்டதாக, பிரிட்டிஷாரின் அவர்களை அண்டிப் பிழைத்த கூட்டமும் சொன்னது உண்மையில்லை. இந்தியாவை மறு உற்பத்தி நாடாக மாற்றி அமைப்பது, பிரிட்டிஷ் முதலாளிகளுக்கு தேவையான ஒன்று, என காரல் மார்க்ஸ் கூறியுள்ளார். (இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி குறித்து மார்க்ஸ்)


இந்தியாவில் முதலாளி வர்க்கம் என்ற ஒரு வர்க்கம் பிறப்பதற்கான நிகமுறையை, பிரிட்டிஷ் ஆட்சி துவக்கி வைத்தது. இந்த வர்க்கம், நிலப்பிரபுத்துவ உயர்குடி வர்க்கத்தில் இருந்து வேறுபட்டதாக இருந்தது. முதலாளி வர்க்கத்தின் பகைமை சக்தியான தொழிலாளி வர்க்கமும், முதலாளித்துவம் பிறக்கும் போதே, ஜனித்து விட்டது. அவ்வாறு உருவான தொழிலாளி வர்க்கம், அலையலையாய் எழுந்த விடுதலைப் போராட்டத்தில், முன்னணி பங்கு வகித்தது, என மார்க்சிய அறிஞர் இ.எம்.எஸ் குறிப்பிடுகிறார். ( இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு)


உலகத்திற்கு தொழிலாளர் எவ்வளவு வசியம் என்பதை தொழிலாளர்களே இன்னும் உணரவில்லை. உலகத்தாருக்கு வேண்டிய பொருள்கள் எல்லாம், தொழிலாளர்களே உற்பத்தி செய்கின்றனர். நெல்லாக இருந்தாலும், நீராவி கப்பல் ஆனாலும் தொழிலாளர்களின் உழைப்பினாலேயே கிடைக்கிறது. ஆனால் அந்த தொழிலாளி உயிர் வாழ்வதற்கான உணவு, உடை மற்றும் வீடுகள் பற்றாக்குறையாக உள்ளது. இது திட்டமிட்டே உருவாக்கப்பட்டுள்ளது. இதை எதிர்ப்பதும், தீர்வு காண்பதும், அவசியம். அதற்காக தொழிலாளர்கள் சங்கமாக ஒன்று சேர்வதும், போராடுவதும் தேவையாக உள்ளது, என ம. சிங்காரவேலர் கூறியுள்ளார். ஸ்வதர்மா எனும் இதழில் 1921 ல் எழுதிய கட்டுரையில் இவ்வாறு கூறியுள்ளார். (ம. சிங்காரவேலரின் சிந்தனைக் களஞ்சியம்)


மேலே குறிப்பிட்ட வளர்ச்சிப் போக்குகளில் இருந்தே இந்தியத் தொழிலாளி வர்க்கம், தனது உரிமைகளுக்கான போராட்டத்தை துவக்கியுள்ளது. சிங்காரவேலர் 1921ல் மேலே கூறிய சொல்லாடல்களின் பிறப்பிடமாக, சென்னையில் இருந்த பி&சி மற்றும் பின்னி ஆலைகளும் அதில் நடந்த போராட்டங்களும் அடித்தளமாக அமைந்தன. இந்திய சமூகத்தின் வளர்ச்சி முழுமையாக முதலாளித்துவ உற்பத்தி சார்ந்ததாக இல்லை. எனவே தான் சிங்காரவேலர், 1923 ல் மே தினம், என்ற உழைபாளர் தினத்தை, சென்னை திருவல்லிக்கேணியில் கொண்டாடிய போது, தொழிலாளர் விவசாயி கட்சியின், கெஜட் என்ற பெயரில், 22 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறிய கருத்துக்கள் இந்தியா முழுவதும், சுரண்டப்பட்ட தொழிலாளர்களுக்கு எழுச்சியூட்டுவதாக இருந்தது, அதன் காரணமாகவே, 1924 ஆண்டில் கயாவில்  நடந்த காங்கிரஸ் மாநாட்டில், தொழிலாளர் உரிமைகள் குறித்த தீர்மானம் முன்மொழியப்பட்டது. அதை சிங்காரவேலர் முன் மொழிந்து பேசியுள்ளார். 


தொழிலாளர் விவசாயி கட்சியின், செயல் திட்டம் தயாரிக்கப்பட்டு, 1923 மே 1, கொடியேற்றம் முடிந்தவுடன், வெளியிடப்பட்டுள்ளது. சங்கம் வைக்கும் உரிமை, வேலை நிறுத்தம் செய்யும் உரிமை, வார விடுப்பு, 8 மணி நேரம் வேலை நேரமாக தீர்மானிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் கொண்டதாக, மேற்படி செயல் திட்டம் இருந்தது. 


இந்தியாவில் மே தின தியாகிகளை நினைவு கூறும் பேரணிகள்:


பிரிட்டிஷ் காலனியாதிக்க ஆட்சிக்கு எதிராக தொழிலாளர்கள் குவியலாக பங்கெடுக்கும் வேகத்தை தந்தது, ஆலைகளுக்குள் இருந்த உழைப்பு சுரண்டல் ஆகும். உழைப்பு சுரண்டலில் இருந்து தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளை நிலைநாட்டுவது, பிரிட்டிஷாரை இந்தியாவில் இருந்து விரட்டுவது, என்ற அரசியல் போராட்டத்துடன் இணைந்தது, என்பதை இந்தியாவின் ஆலை தொழிலாளி வர்க்கம் நன்கு உணர்ந்தது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் நடத்திய போராட்டங்களில் தொழிலாளர் பங்கேற்பு அதிகரித்தது, இந்த பின்னணியில் தான். 


1920 முதல் 1940 கால கட்டத்தில் இந்தியாவின் பிரதான, நகரங்களில் தொழிலாளர்கள் ஏராளமான வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். ஒரு ஆலை தொழிலாளருக்கு ஆதரவாக, பிற பகுதி தொழிலாளர்கள் போராடுகிற வர்க்க ஒற்றுமையும், பெருமளவில் வெளிப்பட்டது. குறிப்பாக சென்னை ராஜதானி, போராட்டங்கள் நிறைந்ததாக மாறியது. இன்றைய ஆந்திராவின், எளூர் நகரில் சணல் ஆலை தொழிலாள்ர்களின் போராட்டம், கோவை, மதுரை, நெல்லை அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களில் நடந்த பஞ்சாலை போராட்டங்கள், நாகபட்டினம் ஸ்டீல் தொழிலாளர்கள், திருச்சி ரயில்வே தொழிலாளர்கள் சென்னை நகரில் டிராம் தொழிலாளர், பஞ்சாலை தொழிலாளர், பீடி தொழிலாளர், வெஸ்ட்டர்ன் இந்தியா மேச் ஃபாக்டரி தொழிலாளர்  மற்றும் டயீஸின் பிரஸ் தொழிலாளர்கள் என பல்வேறு வகைப்பட்ட தொழிலாளர்கள் போராட்டங்களில் பங்கெடுத்தனர்.  தண்டையார் பேட்டையில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பங்கெடுத்த பேரணி, சென்னை மாகாண நிர்வாகத்தை, நெருக்கடிக்கு ஆளாக்கியது. இது டிராம் வே தொழிலாளர்களின் உரிமைகளுக்கு வழிவகுத்தது. ஏகாதிபத்தியம் ஒழிக, முதலாளித்துவம் வீழ்க எனும் முழக்கங்கள், அரசுகளை நிர்பந்தித்தது, என, Colonialism, Labour and politics, என்ற நூல் குறிப்பிடுகிறது.


அதேபோல் இன்றைய கேரளத்தின் பகுதிகளான, கோழிக்கோடு, கண்ணூர், தலசேரி ஆகிய பகுதிகளிலும், பீடி, கயிறு தயாரித்தல் ஆகிய தொழில்களில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தீவிரமாக போராடினர். இந்த போராட்டங்கள் அனைத்தும் சென்னை மே தினக் கொடியேற்றம் நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடந்தது. இப்போராட்டங்கள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை ஆலைப்பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, மாரிசன் என்பவர் தலைமையிலும், ராயல் என்பவர் தலைமையிலும், வெவ்வேறு காலங்களில் இந்தியாவிற்கு அனுப்பி ஆய்வு மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக சில சீர்திருத்தங்களும் செய்தனர். ஆனாலும் 8 மணி நேர வேலைக்கான போராட்டங்கள் தொடர்ந்தது. 


1936,1937,1938 ஆண்டுகளில் மே தின பேரணிகள் படிபடியாக அன்றைய சென்னை ராஜதானி முழுவதும், பரவியது. விசாகபட்டினம், ராஜமுந்திரி, நெல்லூர், சென்னை, மதுரை, கோவை, நாகப்பட்டினம், கடலூர், திருச்சி, திருநெல்வேலி, கோழிக்கோடு, கண்ணூர், தலசேரி ஆகிய இடங்களில் 6000 முதல் 10000 ஆயிரம் தொழிலாளர்கள் வரையிலும் பேரணிகளில் பங்கெடுத்துள்ளனர். தொழிலாளர்கள் மேலே குறிப்பிட்ட தினங்களை கடந்து, ரஷ்ய புரட்சி தினம், காரல் மார்க்ஸ் தினம், லெனின் தினம் ஆகியவைகளையும் நினைவு கூர்ந்துள்ளனர். இந்த நாள்களில் தொழிலாளர்களுக்கு அன்றைய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் உரை நிகழ்த்தியுள்ளனர். 


மே தினம் விடுமுறை தினம்: 


சிக்காகோ வீதிகளின் ரத்ததுளிகளும், தூக்கிலிடப்பட்ட தியாகிகளும், சுட்டுக் கொல்லப்பட்டவர்களும் நம் தலைமுறையிலும், வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள், அவர்கள் தந்த உரிமைப் போராட்டம், என்கிற மூச்சுகாற்று வழியாக, தொழிலாளர்கள் இன்றளவும் சுவாசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருநாள் நினைத்து பார்க்கும் நாள் அல்ல. ஒவ்வொரு நாளும் நினைக்க வேண்டிய வரலாறு. தலைமுறை தலைமுறையாக நினைவுகளும், தியாகமும், போராட்டமும் கடத்தப்படும் போது தான், சுரண்டலை ஒழிக்கும் நெருப்பை அணையாமல் காக்க முடியும். 


1886 ல் பற்ற வைக்கப்பட்ட 8 மணி நேர வேலை, 8 மணி நேர உறக்கம், 8 மணிநேரம் ஓய்வு என்ற முழக்கம் அங்கீகரிக்கப்பட்டது. அதற்காக, ஆல்பர்ட் பார்சன்ஸ், ஆகஸ்ட் ஸ்பைஸ், ஜார்ஜ் எங்கல், சாமுவேல் ஃபில்டன் ஆகியோர் தூக்கிலப்பட்டனர். பலர் ஊர்வலத்திலேயே கொல்லப்பட்டனர். லட்சங்களில் பங்கேற்ற தொழிலாளர் பேரணி, பலபத்தாண்டுகளாக நடந்த பிரச்சாரத்தின் விளைவாகும். இதன் தொடர்ச்சியாக பாரிஸ் நகரில் நடந்த தொழிலாளர் மாநாட்டில், பிரடெரிக் ஏங்கெல்ஸ் சர்வதேச அளவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து நெருப்பு கனன்று கொண்டிருந்ததே ஒழிய, தீர்வு உருவாகவில்லை. 


முதலில் 8 மணிநேர வேலை என்பதை சட்டமாக்கி, மே தினப் போராளிகளையும், தியாகிகளையும் அங்கீகரித்தது, சோவியத் யூனியன் தான். லெனின் தலைமையில் பாட்டாளி வர்க்கம் ஆட்சியைக் கைப்பற்றி, நிறைவேற்றிய சட்டங்களில் முக்கியமானதாக எட்டு மணி நேர வேலை அமைந்தது. அன்றைய தினத்தை தொழிலாளர் தினமாக, ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டது. மார்க்சிம் கார்கி யின் தாய் நாவலில், மே தின கொண்டாட்டத்திற்கான தயாரிப்புகள் விவரிக்கப்படும், கொடியை நீங்கள் தான் சுமந்து செல்ல வேண்டுமா? அப்படியானால் மீண்டும் சிறைக்கு போக போகிறீர்களா? போன்ற கேள்விகள் நாவலின் நாயகன் பாவெலை நோக்கி பாயும். அந்த சிறிய ஊரில், ஆலை தொழிலாளர்கள் மே தின வரலாறு குறித்த துண்டு பிரசுரங்களை, வாசிப்பதும், பலருக்கும் விநியோகிப்பது, குதுகலத்துடனும், திகிலாகவும் விவரிக்கப்படும். இந்த பெருமைக்குரிய கதையாடல், உரையாடல், விவரிப்புகள் தான், ரஷ்ய மக்களை புரட்சிப் பாதையில் அணிவகுக்க செய்தது. எனவே சோவியத் யூனியன் எட்டு மணி நேர வேலை குறித்து சட்டம் இயற்றியது, ஆச்சரியமல்ல.


இன்று பெரும்பான்மையான ஐரோப்பிய நாடுகள் மே தினத்தை பொது விடுமுறை தினமாக அறிவித்துள்ளன. இந்தியாவிலும் அது மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சிங்காரவேலர் கொடிஏற்றிய பாரம்பரியம் காரணமாக துவக்கத்திலேயே விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது. கேரளா அடுத்ததாகவும், மேற்கு வங்கம் 1967 ல் ஐக்கிய முன்னணி அரசு அமைந்த போது, ஜோதிபாசு முயற்சியில் அறிவிக்கப்பட்டது. கர்நாடகா, ஆந்திரா, திரிபுரா, கர்நாடகா, கோவா, பீகார், அஸ்ஸாம், ஜார்கண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்கள் மட்டுமே பொது விடுமுறையை கடைப்பிடிக்கின்றன. இதர மாநிலங்கள் இந்திய பெருமுதலாளிகளின் அழுத்தம் காரணமாக அடங்கி கிடக்கின்றன. மத்திய அரசு தனது அதிகாரத்திற்கு உட்பட்டு விடுப்பு அறிவிக்க தயாரில்லை. மகாராஷ்ட் ரா மாநிலத்தில் மே முதல் விடுமுறை தான், அது தொழிலாளர் தினம் என்பதால் அல்ல, மாறாக மகராஷ்ட் ரா மாநிலம் 1960, மே 1 அன்று உதயம் ஆன தினம் என்பதால், இப்படி தான் இந்தியாவில் நிலை உள்ளது. 


மே தினப் பூங்கா:


சென்னை மாநகரம் தொழிலாளர்களின் போராட்ட வரலாறு கொண்ட நகரம் ஆகும். குறிப்பாக சிந்தாதிரிப்பேட்டை, சென்னை மௌண்ட் ரோடு ( இப்போது அண்ணாசாலை), தொழிலாளர்களின் போராட்ட வரலாறை சித்தரிக்கும் அடிஅயாளம் ஆகும். குறிப்பாக 1920 துவங்கி  1970-75 வரையிலும் தொழிலாளர்கள் தங்களின் கூட்டு பேர உரிமைக்காக, நடத்திய வீரம் செறிந்த போராட்டம் நடத்திய பகுதி ஆகும். சிம்சன் ஆலை, மே தினப் பொருள் கூட்டம், பேரணி ஆகியவை அதிக தாக்கத்தை உருவாக்கிய பகுதி. 


1869 ல் சென்னை நகராட்சி, 14.5 ஏக்கர் பரப்பளவில் அமைத்த பூங்கா, சென்னை ராஜதானியின் 10 வது கவர்னராக இருந்த, ஃபிரான்சிஸ் நேப்பியர் பெயரில் அமைக்கப்பட்டது. 1950 ல்., சென்னை ராஜதானியின் விவசாய அமைச்சராக இருந்த, ஏ.பி. ஷெட்டி பொது மக்களும் பயன்படுத்த அனுமதிக்கும் வகையில் திறந்து வைத்தார். அதுவரை பொது மக்கள் அனுமதிக்கப்படவில்லை என தெரிகிறது. 1989 ல், இந்த பூங்கா மே தினப் பூங்கா எனப் பெயர் சூட்டப்பட்டது. இது வெறும் தகவல் அல்ல. பத்திரமா பாத்துக்கங்க, என்பது போலான, மிக முக்கிய சாதனை, மைல்கல். நின்று இளைப்பாறி பாய்ச்சல் வேகத்தில் முன்னேறுவதற்கான, தாங்கல்.


இப்போதைய தாராளமய பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிரான போரட்டத்தை கட்டமைக்கும் நுணுக்கங்களைக் கற்றுத் தரும் இந்த வரலாற்றை, பாதுகாப்போம். அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்துவோம்.. இது நம் வரலாறு.

மே தின கட்டுரைகள் 2


சவால்களை முறியடிக்க முடியும்

 ஆளும் அரசுக்கு எதிராக அல்லது, அடக்கிய கருத்தாக்கத்திற்கு எதிரான கலக குரல் எல்லாகாலத்திலும் இருந்துள்ளது. உலகம் உண்ண உண், உலகம் உடுக்க உடுத்து போன்ற, சமத்துவ எண்ணங்களும் ஆங்காங்கு, எல்லா காலத்திலும் பிரதிபலிக்கவே செய்துள்ளது. வலியோர் வென்றதாக சொல்லப்படும் ஒவ்வொரு நிகழ்விலும், எளியோரின் முன்னேற்றம் இல்லாமல் இல்லை. அது பௌதீக சக்தியாக ஆட்கொண்டு, எளியோரை வழி நடத்துவது, கருத்தியல் தளத்தில் அடையும் முன்னேற்றம் சார்ந்ததாகும். காரல் மார்க்ஸ் அத்தகைய கருத்தியல் பலத்தை, பாட்டாளி வர்க்கத்திற்கு அளித்துள்ளார். 1808 ல், பிலடெல்பியா நகரில் கட்டுமானத் தொழிலாளர்கள், தங்களின் வேலைநேரத்தைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த போது, மார்க்ஸ் பிறந்திருக்கவில்லை. ஆனால் தாங்க முடியா பளுவை இறக்கி வைக்கும், ஆறுதலாக வேலை நேர குறைப்பை கருதுவதற்கும், சுரண்டலை தடுத்து, சமத்துவத்தை நோக்கி பயணிப்பதற்கான வழியாக வேலை நேரம் குறைக்கப்படுவதை பார்க்க வேண்டும். அவசிய உழைப்பு நேரம், தனக்காகவும், உபரி உழைப்பு நேரம் சமுதாயத்திற்காகவும் இருப்பதை, உறுதி செய்வது, உபரி உழைப்பு நேரத்தை தனியார் வசம் அல்லது, ஏகபோக பெருமுதலாளிகள் வசம் குவிப்பதற்கும் வேறு பாடு நிறைய இருக்கிறது, என்பதை காரல் மார்க்ஸ் தெளிவு படுத்துகிறார்.


1886 ல் சிக்காகோ வீதிகளில் போராடிய லட்சக்கணக்கான தொழிலாளர்கள் மீது காவல்துறை கொடிய அடக்கு முறையை ஏவிவிட்டது. பலர் கொல்லப்பட்டனர். தலைவர்கள் எட்டு பேர் கைது செய்யப்பட்டு விசாரணை என்ற பெயரில் நாடகம் நடத்தி, 4 பேர், தோழர்கள் ஆல்பர்ட் பார்சன்ஸ், ஆகஸ்ட் ஸ்பைசஸ், சாமுவேல், ஜார்ஜ் எங்கெல் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். அன்றைய ஜனநாயக சக்திகள் இந்த போராட்டத்தின் நியாயத்தை வலியுறுத்திய அடிப்படையில், கோரிக்கை அங்கீகரிக்கப்பட்டது. ஆனால் சட்டமாக நிறைவேற்றப்படவில்லை. மேற்படி தியாகிகளுக்கு தொழிலாளர்கள் நினைவுச்சின்னம் அமைக்கும் முன்னரே, காவல் துறை 1888 ல் மேற்படி சிக்காகோ வீதியில், ஹே மார்க்கட்டில் காவல் துறையினருக்கு, சிக்காகோ காவல்துறையினர்,  நினைவுச்சின்னம் வைத்தனர். 1889 ல் தான் தொழிலாளர்கள் இறந்த தொழிலாளர் நினைவாக நினைவு சின்னம் அமைத்தனர். மே தின தியாகிகளின் வரலாறு பேச,பேச, 1960 ல் ஹே மார்க்கட்டில் இருந்த காவலர்களுக்கான நினைவு சின்னம், அமெரிக்க மாணவர்களால் இடிக்கப்பட்டது, இப்போது அது காவல் அலுவலகத்திற்குள்ளேயே வைக்கபட்டுள்ளது. எனவே வரலாறு பேசப்படுவது, ஏதாவது ஒரு கட்டத்தில் பயன்படும்.


இன்றைய தலைமுறை அல்லது நவீன பாட்டாளி வர்க்கம், எட்டு மணிநேரம் வேலை நேரம் என்பதை, அரசு சட்டங்களால் நிலை நாட்டியது என புரிந்து கொள்கின்றனர். சட்டங்கள் உருவாக நடந்த போராட்டங்களையும், அடக்குமுறைகளையும், சிறை, சித்திரவதைகளையும், புரிந்து வினையாற்றுவதில்லை. அதையே முதலாளித்துவம் விரும்புகிறது. இந்த முதலாளித்துவ விருப்பதின் விளைவே, அன்மையில், பாஜக ஆட்சி வேலைநேரத்தை 12 மணிநேரமாக உயர்த்த முடிவு செய்ததாகும். ஏற்கனவே உருவான எட்டு மணி நேரத்திற்கான சட்ட வழிகாட்டுதலின் வரலாற்றை அறிந்திருக்கும் தலைமுறையாக இன்றைய தலைமுறை இல்லாதது, முதலாளித்துவத்திற்கு சாதகமாக உள்ளது. டிரோன் கேமராக்கள் விரட்டும், விளையாட்டு வீரர்களை, நக்கலாக சித்தரிக்கும் ஊடகங்கள், 12 மணிநேரமாக வேலை நேரம் உயர்த்துவதை பெரிய செய்தியாக படம்பிடிக்கவோ, விவாதிக்கவோ செய்யவில்லை. 


தாராளமயத்தின் ஆதிக்கமும், வரலாற்று பின்னடைவும்:


வேலைநேரம் உலகத்தில் வளர்ந்த நாடுகள் என சொல்லிக்கொள்ளும் நாடுகள் அனைத்திலும், குறைக்கப்பட்டது. இதற்கு அழுத்தம் தந்தது, சோவியத் யூனியன் என்ற மகத்தான சோசலிஸ நாடு ஆகும். லெனின் தலைமையில் அரசமைத்த பாட்டாளி வர்க்கம், எட்டுமணி நேரம் ஒரு நாளைக்கு வேலை நேரம், என்பதை முதலில் சட்டமாக்கியது. அதன்பின்னர் தான் பிற நாடுகள் இவ்வாறுசட்டம் இயற்றின. அதன் பின் சோவியத் சோசலிச அரசு, வேலை நேரத்தை ஆறு மணிநேரமாக குறைத்தது, அதுவும் இதர முதலாளித்துவ நாடுகளுக்கு அழுத்தத்தை உருவாக்கியது. குறிப்பாக ஐ.எல்.ஓ என்ற சர்வ தேச தொழிலாளர் அமைப்பு, வாரம் 40 மணிநேரம் வேலைநேரம் என வழி காட்டியது. இதைத் தொடர்ந்தே பெரும்பாலான நாடுகள் தங்கள் நாடுகளில் வேலைநேரத்தை குறைக்க வேண்டிய கட்டாயம் உருவானது. அவ்வாறு குறைக்கவில்லை எனில், தங்கள் நாட்டு இளைஞர்கள் சோசலிச சோவியத் யூனியனைப் போல் புரட்சி செய்வர், என்ற அச்சம் இருந்தது. எனவே வேலை நேர குறைப்புக்கு போராட்டம் ஒரு காரணம் எனில், கருத்தியல் ரீதியில் மாற்று அரசு ஒன்றின் இருப்பும் முக்கிய பங்கு அளித்தது.


சோசலிச சோவியத் யூனியன் பல நாடுகளாக சிதறுண்டு, அரசியல் பின்னடைவை சந்தித்த நிகழ்வும், உலகை தாராளமய பொருளாதரக் கொள்கை மேலாதிக்கம் செய்வதும் ஒன்றாக நடந்தது. அநேகமாக 1990 க்குப் பின் தொழிலாளர் இயக்கம் பெரும் பான்மையான நாடுகளில் தங்களுக்கான புதிய சட்ட உரிமைகளைப் பெற முடியவில்லை. நிரந்தர வேலை வாய்ப்பே கேள்விக்கு உள்ளான நிலையில், வேலை நேர குறைப்புக்கான போராட்டங்களோ, வேலையின்மையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளோ, தாராளமய கொள்கை கொண்ட அரசுகளால் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக ஒப்பந்த ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு, அமர்த்து பின் துரத்து போன்ற நிரந்தரமற்ற வேலைத் தன்மை, அவுட் சோர்சிங் என்ற அயல்பணி ஒப்படைப்பு போன்றவை அதிகரித்து, வேலையில் இருப்போரின் உரிமைகளை அச்சப்படுத்திக் கொண்டே இருக்கிறது, முதலாளித்துவம். இதன் தொடர்ச்சியாக அன்மையில் ஆர்ட்டிபிசியல் இண்டெலிஜெண்ட் என்ற செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள், தானியங்கி இயந்திரங்கள போன்றவையும் சவாலாக நவீன தொழிலாளி வர்க்கத்திற்கு உள்ளது.


மேலே குறிப்பிட்ட தாராளமய பொருளாதார கொள்கை அமலாக்கத்தை, எதிர்க்க வேண்டிய மக்கள் அரசியல் ரீதியில் அல்லது வர்க்க ரீதியில் ஒன்று சேர சில தடைகள் முன்னுக்கு வருகின்றன. இதை நாடுகள் பயன்படுத்திக் கொள்கின்றன. ஏற்கனவே இருக்கக் கூடிய சமூக முரண்பாடுகள் இக்காலத்தில் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் கூடுதலாக வெளிப்படுகின்றன. குறிப்பாக முதலாளித்துவ வளர்ச்சி இருந்தாலும், உழைப்பு சுரண்டல், சமூக சுரண்டலுக்கு பழகி போன ஆளும் வர்க்கம், தாராளமய காலத்தில், வேகமாக வளர்ச்சி பெற்றதும், தொழிலாளி வர்க்கத்திற்கு கடுமையான சவாலை உருவாக்கியுள்ளது.

சாதிரீதியில் அணி சேர்ந்து, 20 ஆண்டுகள் முடிந்த நிலையில் அடுத்த தலைமுறையை மதரீதியில் ஒருங்கிணைக்கும் பணிக்கு தாராளமய பொருளாதார கொள்கை உத்வேகம் அளிக்றது. 


இந்தியாவில் பாஜக “வளர்ச்சி” என்ற முழக்கத்தை முன்வைத்து வரலாறை பின்னோக்கி நகர்த்துகிறது. போராடி பெற்ற ஜனநாயக உரிமைகளையும், தொழிலாளர் உரிமைகளையும் மெல்ல பறித்து வருகிறது. கொரானா பொது முடக்க காலத்தை பயன்படுத்தி, தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணிநேரமாக உயர்த்துவது, ஆலை தொழிலாளர்களுக்கு ஊதியம் தர மறுக்கும் நிர்வாகங்களை மறைமுகமாக ஆதரிப்பது போன்றவை உதாரணங்கள் ஆகும். கொரானா பாதிப்பிற்கான காரணத்தை அமெரிக்கா சீனா மீது சுமத்துவது போல், இந்தியாவில் இஸ்லாமியர்கள் மீது சங்கிகள் கூட்டம் சுமத்தியது. ஒட்டு மொத்தமாக வலது சாரி திருப்பம் இத்தகைய திசை திருப்பும் அரசியலுக்கு பங்களிக்கிறது. தொலைக்காட்சி பார்க்கும் உழைக்கும் மக்களுக்கு, வெளியில் செல்வது குறித்த அச்சத்தை ஊட்டும் வகையில், டிரோன் கேமராமூலம் விளையாடுபவர்களை விரட்டுவதை காணமுடிகிறது. விளையாடுவது அவ்வளவு குற்றமாக கருதப்படும் நாட்டில், உழைப்பு நேரத்தை அதிகரிப்பது, தொழிலாளர் விரோத மசோதாக்களை சட்டம் ஆக்குவது ஆகியவற்றில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. 


சவால்களை முறியடிக்கும் வலிமை தொழிலாளி வர்க்கத்திற்கு உண்டு:


சவால்களை எதிர்ப்பது, சுரண்டலின் அளவைத் தக்கவைக்க அல்லது மேலும் அதிகரிக்கும் அதிகாரத் திணிப்பை எதிர்த்த போராட்டத்தின் பகுதியாகும். எந்தவிதமான கல்வி, சமூக மாற்றத்திற்கான வழிகாட்டுதல் ஆகியவை இல்லாத நிலையில், மக்கள் எழுச்சியை, சில நபர்களே உருவாக்கினர். அதற்காக கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டது. சிறை வாழ்க்கை கூட பரவாயில்லை, ஆனால் சிரச்சேதங்கள் அதிகம் இருந்தன. ஜூலியஸ் பூசிக் என்ற பத்திரிக்கையாளன், தனது 40 வயதில் முதலாளித்துவ சமூகத்திற்கு எதிராக அணி திரட்டிய காரணத்திற்காக தூக்கிலிடப்பட்டார். சிறைசாலையில், மே தினக் கொடியேற்றும் நிகழ்வையும் பதிவு செய்துள்ளனர். பகத்சிங், லெனின் பிறந்தநாளுக்கு சிறையில் இருந்து தந்தி அனுப்பிய வரலாறு, தூக்கு தண்டனைக்கு முந்தைய நாளில் அரசும் புரட்சியும் புத்தகம் படித்ததுதும், உலக இளைஞர்களுக்கு எழுச்சியை தந்தது. சே குவேரா உலகம் முழுவதும் ஒரு கலகக்காரனின் அடையாளமாக முன்னிறுத்தப்பட்டுள்ளார். ஆனால் இரு கைகளும் துண்டிக்கப்பட்ட நிலையில், சுட்டுக் கொல்ல முயற்சித்த காவல் அதிகாரியிடம், நில் எழுந்து நிற்கிறேன், அதன் பின் சுடு, எனக் கூறியதாக நாம் படிப்பது, நமது மனவலிமைகளை அதிகரித்து கொள்ள மட்டுமல்ல. முதலாளித்துவத்திற்கான சிம்ம சொப்பனம், தொழிலாளி வர்க்கம் என்பதை, சுட்டிக் காட்ட. 


இதெல்லாம், கருத்தியல் தாக்கத்திற்கு அப்பாற்பட்டவை அல்ல. மார்க்ஸ் சொன்னவைகளுடன் பொருந்தி போக கூடியதே. முதலாளித்துவம், தனக்கான சவக்குழியைத் தானே தோண்டுகிறது, என்பதே அது. ஆலைக்குள் குவிந்து இருக்கும் தொழிலாளி வர்க்கம் முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிராக ஒன்று சேர்வது தவிர்க்க முடியாதது. உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்ற முழக்கம், முதலாளித்துவ சுரண்டல் முறைக்கு, எதிரான வலுவான கருத்தாயுதம் என்பதையும் பார்க்கிறோம். ஆனால் இந்த முழக்கங்கள் உண்மையாவது கள செயல்பாடுகளும், அமைப்பின் முயற்சிகளுமாகும். எனவே மே தின சூளுரையோ, உழைப்பு சுரண்டலுக்கு எதிரான நடவடிக்கைகளோ, எதுவானாலும், பாதிப்புக்கு ஆளானோரைத் திரட்டுவதில் இருந்தே வெளிப்பட முடியும். 


இன்று ஆலைகளில் ஒப்பந்த, பயிற்சி தொழிலாளர்கள், படித்த வல்லுநர்கள் கடுமையான உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகின்றனர். நவீன இயந்திரங்கள், மற்றும் தொழில் நுட்பம் காரணமாக அதிகரித்து வரும் வேலை இழப்புகள் அல்லது அதிகரித்து வரும் அமைப்பு சாரா தொழிலாளர்களின் எண்ணிக்கை ஆகியவை கலகத்திற்கான, பெரும்படையாக உள்ளது. ஆனால் இந்த பெரும் படை ஆளும் வர்க்கத்தின் சமூக காரணிகளுக்குள் சிக்கிக் கொண்டுள்ளது. பொருளாதார சுரண்டலையும், சமூக சுரண்டலையும் இணைந்து நடத்த, திட்டமிட்ட முயற்சிகள் போதுமான அளவிற்கு சாதகமாக அமையவில்லை, இருந்த போதும் அதை சலிப்பில்லாமல் தொடர்வதும், ஒன்றுபட்ட முயற்சிகளை அதிகப்படுத்துவதும் இன்றைய தேவையாக உள்ளது. தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக சிறப்பு பொருளாதார மண்டலங்களிலும், பன்னாட்டு நிறுவனங்களிலும் நடந்த போராட்டங்கள் மிகுந்த நம்பிக்கையை அளித்துள்ளது. இப்போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்துவதே, இந்த 135 வது மே தினத்தின் உறுதி ஏற்பாக இருக்க முடியும்.