செவ்வாய், 2 மே, 2023

முதலாளித்துவத்தின் அசுர வளர்ச்சியும்… அதிகரிக்கும் தற்கொலைகளும்…

 

தேர்வில் தோல்வி, நிறுவனத்தில் தொழிலாளருக்கு விடுப்பு இல்லை, நிர்வாகம் பழி வாங்குகிறது, வீட்டில் அமைதி இல்லை போன்ற சிறிய பிரச்சனைகளுக்கும் கூட மரணித்து விடுவது தீர்வு, என மனிதர்களை தள்ளுகிறது முதலாளித்துவம். அதன் லாப வெறி, தோல்வியடைந்தவர்களுக்கும், சோர்வுற்றவர்களுக்கும் இடம் இல்லை என அதிகாரம் செலுத்துகிறது. அண்மையில் நீட் தோல்வி காரணமாக 12 மாணவர்களின் தற்கொலைகளும், நிறுவனங்களின் தாக்குதல் காரணமாக தொழிலாளர் தற்கொலைகளும் சமூகத்தை பெரிய அளவில் எச்சரிக்கை செய்கிறது.


இந்தியாவில், கடந்த 2019 ல் 1,39,123 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 7 மாத கொரானா நோய் பாதிப்பில் இறந்தவர்களை ( 1,05,000) விட அதிகம். இந்த எண்ணிக்கை 2018 ஐ விடவும், 3.4 சதம் அதிகம். இதில், மகராஷ்ட் ரா 18,916 பேருடன் முதலிடத்திலும், தமிழ்நாடு 13493 பேருடன் இரண்டாம் இடத்திலும், 12665 பேருடன் மேற்கு வங்கம் மூன்றாம் இடத்திலும் உள்ளது. 10.1 சதம் வேலையின்மை காரணமாகவும், 32.4 சதம் குடும்ப பிரச்சனைகள் காரணமாகவும், விவசாயம் பொய்த்து கடனாளியாகி 7.4 சதம் பேர் தற்கொலை செய்து கொண்டதாகவும் National Crime Record Bureau கூறுகிறது. தற்கொலை செய்து கொள்வோரில் 69 சதம் 15 முதல் 39 வயது கொண்டோராவர். ஆண்கள் 70.2 சதம், பெண்கள் 29.8. உலகில் 2019 ல் 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதில் இந்தியா 17 சதம் பங்களிப்பு செய்துள்ளது. உலக அளவில் இந்தியாவின் மக்கள் தொகை, 17.5 சதம் ஆகும். 79 சத தற்கொலைகள் நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் கொண்ட நாடுகளில் நடப்பதாக உலக சுகாதர மையம் கூறுகிறது.  


தோல்வியும், இயலாமை உணர்வும்: 


உளவியல் சிக்கல் தற்கொலைகளில் பெரும் தாக்கம் செலுத்துகிறது. இதை தனிநபரின் பொறுப்பாக சமூகம் தட்டிக் கழிக்கிறது. சமூகமே இந்த உளவியல் சிக்கலின் மைய புள்ளி என்பதை புறம் தள்ளுகிறது. பாலர் பள்ளியில் இடம் பெறுவது துவங்கி, வேலை, திருமணம் உள்ளிட்ட அனைத்தும் போட்டிகள் நிறைந்ததாகவும், சட்ட விதிகள் நிறைந்ததாகவும் உள்ளது. பிக் பாஸ் வீட்டில் 100 நாள்கள் வசிப்பது வாழ்நாள் சாதனையாக சித்தரிக்கப்படுகிறது. சமையல் அறை துவங்கி மற்றோரின் ஆலோசனை எரிச்சல் ஊட்டும் ஒன்றாக பார்க்க தூண்டப்படுகிறோம். சின்ன நிகழ்வுகள் நாளெல்லாம் பேசப்படுவதாக, ஒரு தொலைக்காட்சியில் மட்டுமல்ல, இதர இதழ்களிலும், சமூக ஊடகங்களிலும் பேசு பொருளாக மாறி ஒவ்வொருவர் தலைக்குள்ளும் புரண்டு, அழுத்தம் தருவதாக, மாறுகிறது.  மிக மென்மையான மனிதர்களாக பக்குவப்படுத்தப் படுகிறோம். அந்த மென்மை எதிர்ப்பைக் கொன்று, ஏற்பைதிணிப்பது அல்லது வெளியேற்றும் அரசியல் என்பதை மறக்க பயிற்று விக்கப்படுகிறோம். 


உலக சுகாதார மையம், மார்ச் 21, 2020 ல் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் 90 மில்லியன் மக்கள் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளனர், என கூறியுள்ளது. இது இந்திய மக்கள் தொகையில் 7.5 சதமாகும். பிரிட்டிஷ் நாட்டு நிறுவனம் ஒன்று 2019 ல் நடத்திய ஆய்வு மூலம், இந்தியாவில் கார்ப்பரேட் நிறுவனங்களின் பணியாளர்களில் 42.5 சதம் பேர் மனரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறது. இதைத் தொடர்ந்து உலக சுகாதார மையம், மனநல மேம்பாடும், தற்கொலை தடுப்பும் இணைந்த, செயல் திட்டம் அவசியம் என வலியுறுத்துகிறது. இது திட்டமிட்ட கொள்கையாக மேம்படாவிட்டால், 2020 ம் ஆண்டில், 200 மில்லியன் மனிதர்கள் மனநோயாளிகளாக மாறும் அபாயம் உள்ளது, என்பதையும் சேர்த்தே குறிப்பிட்டுள்ளது. இந்தியா உலக பொருளாதார பட்டியலில் 5 ம் இடத்தில் உள்ளது. ஆனால் மனநலம் குறித்த மருத்துவத்திற்கு 0.05சதம் மட்டுமே செல்விடுகிறது. இது முகேஷ் அம்பானி மூன்று மணி நேரத்தில் சம்பாதிக்கும் தொகை என சொல்லப்படுகிறது. ஆனால் உலகில் இந்தியாவை விட வருவாய் குறைந்த நாடுகள் அதிகம் செல்விடுவதை, வசதியாக மறந்து விடுகிறது, என்ற குற்றச்சாட்டையும் முன் வைக்கிறது. 


தேர்வுகளில் தோல்வியும், தற்கொலைகளும்:


தமிழகத்தில் நீட்தேர்வில் தோல்வி காரணமாக 12 மாணவ மாணவியர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். வேறுபல தேர்வுகளின் முடிவுகளின் போதும் தற்கொலை குறித்த செய்திகளை காணமுடிகிறது. முதலாளித்துவ கொள்ளையின் எல்லை, கல்வி துறையில் விரிவடையும் போது, விதிகளும், சட்டங்களும் முன்னுக்கு வருகிறது. கிட்டிப்புல்லும், கபடியும் ஊரில் விளையாடும் போது கொண்டிருந்த விதிகளை, தொலைக்காட்சி பார்வையாளர்கள் அதிகரித்த நிலையில், கிரிக்கட்டில் டக்வொர்த் லீவிஸ் விதி யாருக்கும் புரியாமல் விழிப்பதை போல் இருக்கிறது, நீட் தேர்வு. சித்தர்களின் சிகிச்சையும், பழங்குடி மனிதர்களின் நாட்டு மருத்துவமும், அறிவியல் வளர்ச்சியில் நிருபணம் செய்ய வழியில்லாமல், ஒரு படித்தான மருத்துவக் கல்வி கோலோச்சுகிறது. 


மூலதனத்தின் தாக்கம் கல்வித்துறையில் மேலாதிக்கம் செலுத்த துவங்கி உள்ளது. அறிவு வளர்ச்சி இனக்குழுக்களிடம் இருந்து பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், நாடுகளுக்கும் அபகரிக்கப்படுகிறது. பிரமிக்க வைக்கும் கல்வி வளாகத்திற்குள் ஆர்வம் உள்ளவர்களை ஈர்ப்பதற்கு பதிலாக, பணம் உள்ளவர்களை ஈர்ப்பதாக மாறுகிறது. எனவே தான் வசதியானவர் தோல்வியுற்றாலும், வேறுநாட்டில் மருத்துவம் படிக்க சென்றுவிடுகின்றனர். வசதியற்றோர் குறிப்பாக பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியிலின மாணவர்களில் ஒரு பகுதி, தோல்வியுடன் விரக்தியும் அடைந்து தற்கொலை செய்கின்றனர். தெலுங்கானா மாநிலத்தில், 2019 ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்ட 42 மாண்வர்களில் 80 சதம் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மாணவர்கள் என சொல்லப்படுகிறது. மைய அரசியலில் இருந்து எல்லா வகையிலும் துரத்தப்படுவோராக இப்பிரிவு மக்கள் உள்ளனர். மீண்டும் மன்னர் மகன் மன்னர், என்ற சமூக படிநிலையை நிலைநிறுத்துகிறது உலகமயமாக்கல். சாதாரண மனிதர்களின் வைத்தியம் போன்றவற்றை சட்ட விதிகளின் பெயரில் பறித்து கொள்கிறது. மண் சார்ந்த தொழில்நுட்பத்தின் வேரை அபகரிக்கிறது. 


தொழிலாளர்களும் தற்கொலைகளும்:


கார்ப்பரேட் நிறுவங்களில் பணிபுரிவோர் 42.5 சதம் மனநிலை பாதிக்கபடுகின்றனர் என்பதை கண்டோம். முதலாளித்துவம், ஜனநாயகத்தின் உச்சம் எனக் கூறி கொள்கிறது. வேலைக்கான கூலி உறுதி எனவும், குறைந்த பட்ச கூலி சட்டம், தொழிலாளர் நலச் சட்டம் எனவும் பெருமை பேசிக் கொள்கிறது. அனால் உண்மையில் சுரண்டல் அதிகரித்தால் மட்டுமே மூலதனம் விரிவடையும் என்ற உண்மையை மார்க்சீயவாதிகள் கூறுகின்றனர். முதலாளித்துவம் கூறும் ஜனநாயகம் வார்த்தை அளவில் மட்டுமே உள்ளது. உரிமைப் பறிப்பை ஜனநாயகத்தின் பெயரில், விதிகளின் பெயரில் அபகரிக்கிறது முதலாளித்துவம், என குற்றம் சுமத்துகிறது மார்க்சீயம். 


தற்போது கடந்த சில மாதங்களில் பன்னாட்டு ஆலைகளில் தற்கொலை செய்து கொள்வோர் அதிகரித்துள்ளனர். சிகிச்சை பெற, கற்பினி மனைவியின் சிகிச்சைக்காக குடும்ப உறுப்பினர்களின் சிகிச்சைக்காக ஒரு தொழிலாளி விடுப்பு எடுக்கும் உரிமை மறுக்கப்படுகிறது.  நிலையாணை சட்டம் என்ற பெயரில் குறுக்கே விழுந்து தடுக்கும் வேலையைச் செய்யும். நிறுவனத்தில் உரிமை கேட்ட தொழிலாளரை கண்காணிக்க சி.சி.டி.வி வளையம் அமைக்கப்பட்டு மன உலைச்சல் அதிகரிப்பது, சட்டத்தின் படி நியாயப்படுத்தப்படும். பண்டிகைகளுக்கு ஊர் செல்ல செய்த முன்பதிவு காரணத்தை சொல்லி, ஒரு மணி நேரம் அனுமதி பெற முடியாது. அப்படி கேட்பவர் கொரானா காலத்திற்கு முன்பே தனி அறையில் நாள் கணக்கில் காத்திருக்க கட்டாயப்படுத்தப்படுவார். தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் வேலையற்றோர் பெஞ்சில் உட்கார வைக்கும். இவை மன உலைச்சலின் உச்சம். இத்தகைய காரணங்களால் தான் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். 


மாக்கியவல்லிகள் முதல் ஸ்டிரைக் பிரேக்கர்கள் வரை:


1500 ஆம் ஆண்டுகளில் இத்தாலிய நாட்டில் அரசியல் விதிகளை போதித்தவர் மாக்கியவல்லி. இந்தியாவில் சாணக்கியர் 3 வது நூற்றாண்டில் நிலப்பிரபுத்துவ கட்டத்திற்கான சட்டதிட்டங்களை வகுத்தளித்தது போல், முதலாளித்துவ வணிகம் துவங்கிய காலத்திற்காக சட்டதிட்டங்களை உருவாக்கி வில்லத்தனம் செய்தவர் மாக்கியவல்லி. இன்று எல்லாத் துறைகளிலும் நிபுணத்துவம் கோலோச்சுகிறது. அதில் மனிததன்மை, இரக்க குணம் அழிக்கப்பட்டு, அனைத்தும் விதிகளாக, கோட்டை மதில்களாக அடைத்து வைக்கிறது. மற்றொரு புறம் போராட்ட உணர்வு கொண்டவர்களை கண்டறிந்து கழுத்தறுக்க, தொழில் உறவு, தொழிலாளி உறவு கற்ற பெரும் நிபுணர்கள் ஆலைகளில் வளம் வருகின்றனர். உற்பத்தியை விட, சைக்கிள் டைம் என்ற விதி மீதான கண்கானிப்பே இவர்களின் பணி. தற்கொலை செய்து கொள்ள தொழிலாளி இந்த நடவடிக்கைகளால் தூண்டப்பட்டால், அது தலைவிதி என கருமாதி செய்யப்படுகிறது. 


அண்மையில் பன்னாட்டு ஆலைகள் அதிகம் உள்ள சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தற்கொலை அதிகரித்து வருகிறது. நிறுவனங்கள் அளிக்கும் மன அழுத்தம் காரணமாக உள்ளது. வெளிநாட்டு அதிகாரிகள், உள்நாட்டு அதிகாரிகள் என்ற பாரபட்சம் இன்றி நிர்பந்திக்கின்றனர். மூலதனம் இங்கு அடையாள அரசியலை தலையெடுக்க விடுவதில்லை. காரணம் கோரும் அறிவிப்பு, குற்றச்சாட்டு குறிப்பாணை என்ற பெயரில் தனிநபர்களான தொழிலாளர்களை சித்திரவதை செய்வதை ரசிக்கும், வக்கிரம் வெளிப்படுகிறது. 


எங்கே செங்கொடி இயக்கம் வலுவுடன் இருக்கிறதோ அங்கே இந்த அநீதி வெளிகொணரப்பட்டு போராட்டம் தீவிரம் பெறுகிறது. போராட்டங்கள் தொழிலாளர்கள் மீதான மன அழுத்தத்தை குறைக்கிறது. மற்ற இடங்களில் எதிர்ப்பு பெயரளவிற்கே இருக்கிறது. தூண்டப்படும் தற்கொலைகளுக்கு சவக்குழி தோண்டப்படுவதே அவசரம் அவசியம். பரிதாபமும், முனுமுனுப்புகளும் போதாது. முதலாளித்துவ லாபவெறியை அம்பலப்படுத்துவதும், தீவிர போராட்ட நடவடிக்கைகளுமே தற்கொலை செய்வோருக்கு நம்பிக்கை ஏற்படுத்தும். 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக