வியாழன், 30 ஏப்ரல், 2020

May Day 2020

மே தின சிறப்பு கட்டுரை: போற்றுதலுக்குரிய மே தினம்….. நமக்கான வரலாறு.. – எஸ். கண்ணன்

221VIEWS
Spread the love
மே தினம் 1, உழைப்பாளர் தினம் உலகம் 8 மணி நேரம் என்பதை உழைப்பு நேரமாக தீர்மானிக்க வேண்டும், என்பதை போராடி பெற்ற வரலாற்று தினம். முதலாளிகளுடனும், அரசுகளுடனுமான போரில், உயிர் பலி தந்த, ரத்தம் சிந்திய தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நாள். வரலாற்றில் இருந்து, உழைப்பு சுரண்டலை தடுக்கவும், புதிய உரிமைகளுகளுக்கான குரலை வலுப்படுத்தவும், உறுதி ஏற்கும் தினம். இந்த 2020 ஆண்டில், உலகம் பொது முடக்கத்திற்குள் தள்ளப்பட்ட காலத்தில், நம்மை கடக்க இருக்கிறது. முடங்கி இருக்கும் நமக்கு, போராட்ட வரலாறே, புதுத் தெம்பூட்டுகிறது. முதலாளித்துவ சுரண்டலை எதிர்க்கும் போராட்டத்தை வலுப்படுத்துகிறது.
இந்தியாவில் உற்பத்தியும் தொழிலாளர்களும்:
இந்தியாவில், பிரிட்டிஷ் கால முதலாளித்துவ உற்பத்தி வளர்ச்சி முறை, புதிய தொழிலாளர்களை உருவாக்கியது. 1857-59ல் நடந்த முதல் விடுதலைப்போர், இந்தியாவில் ரயில் பாதை அமைக்க வேண்டிய கட்டாயத்தை பிரிட்டிஷாருக்கு ஏற்படுத்தியது. இது இந்தியாவை நவீனப்படுத்தும் நோக்கம் கொண்டதாக, பிரிட்டிஷாரும் மற்றும்  அவர்களை அண்டிப் பிழைத்த கூட்டமும் சொன்னது உண்மையில்லை. இந்தியாவை மறு உற்பத்தி நாடாக மாற்றி அமைப்பது, பிரிட்டிஷ் முதலாளிகளுக்கு தேவையான ஒன்று, என காரல் மார்க்ஸ் கூறியுள்ளார். (இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி குறித்து மார்க்ஸ்)
இந்தியாவில் முதலாளி வர்க்கம் என்ற ஒரு வர்க்கம் பிறப்பதற்கான நிகழ்முறையை, பிரிட்டிஷ் ஆட்சி துவக்கி வைத்தது. இந்த வர்க்கம், நிலப்பிரபுத்துவ உயர்குடி வர்க்கத்தில் இருந்து வேறுபட்டதாக இருந்தது. முதலாளி வர்க்கத்தின் பகைமை சக்தியான தொழிலாளி வர்க்கமும், முதலாளித்துவம் பிறக்கும் போதே, ஜனித்து விட்டது. அவ்வாறு உருவான தொழிலாளி வர்க்கம், அலையலையாய் எழுந்த விடுதலைப் போராட்டத்தில், முன்னணி பங்கு வகித்தது, என மார்க்சிய அறிஞர் இ.எம்.எஸ் குறிப்பிடுகிறார். ( இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு)
உலகத்திற்கு தொழிலாளர் எவ்வளவு அவசியம் என்பதை தொழிலாளர்களே இன்னும் உணரவில்லை. உலகத்தாருக்கு வேண்டிய பொருள்கள் எல்லாம், தொழிலாளர்களே உற்பத்தி செய்கின்றனர். நெல்லாக இருந்தாலும், நீராவி கப்பல் ஆனாலும் தொழிலாளர்களின் உழைப்பினாலேயே கிடைக்கிறது. ஆனால் அந்த தொழிலாளி உயிர் வாழ்வதற்கான உணவு, உடை மற்றும் வீடுகள் பற்றாக்குறையாக உள்ளது.
மே நாளில் ம.சிங்காரவேலர் | தமிழக ...
இது திட்டமிட்டே உருவாக்கப்பட்டுள்ளது. இதை எதிர்ப்பதும், தீர்வு காண்பதும், அவசியம். அதற்காக தொழிலாளர்கள் சங்கமாக ஒன்று சேர்வதும், போராடுவதும் தேவையாக உள்ளது, என ம. சிங்காரவேலர் கூறியுள்ளார். ஸ்வதர்மா எனும் இதழில் 1921 ல் எழுதிய கட்டுரையில் இவ்வாறு கூறியுள்ளார். (ம. சிங்காரவேலரின் சிந்தனைக் களஞ்சியம்)
மேலே குறிப்பிட்ட வளர்ச்சிப் போக்குகளில் இருந்தே இந்தியத் தொழிலாளி வர்க்கம், தனது உரிமைகளுக்கான போராட்டத்தை துவக்கியுள்ளது. சிங்காரவேலர் 1921ல் மேலே கூறிய சொல்லாடல்களின் பிறப்பிடமாக, சென்னையில் இருந்த பி&சி மற்றும் பின்னி ஆலைகளும் அதில் நடந்த போராட்டங்களும் அடித்தளமாக அமைந்தன. இந்திய சமூகத்தின் வளர்ச்சி முழுமையாக முதலாளித்துவ உற்பத்தி சார்ந்ததாக இல்லை.
எனவே தான் சிங்காரவேலர், 1923 ல் மே தினம், என்ற உழைப்பாளர் தினத்தை, சென்னை திருவல்லிக்கேணியில் கொண்டாடிய போது, தொழிலாளர் விவசாயி கட்சியின், கெஜட் என்ற பெயரில், 22 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறிய கருத்துக்கள் இந்தியா முழுவதும், சுரண்டப்பட்ட தொழிலாளர்களுக்கு எழுச்சியூட்டுவதாக இருந்தது, அதன் காரணமாகவே, 1924ம் ஆண்டில் கயாவில்  நடந்த காங்கிரஸ் மாநாட்டில், தொழிலாளர் உரிமைகள் குறித்த தீர்மானம் முன்மொழியப்பட்டது. அதை சிங்காரவேலர் முன் மொழிந்து பேசியுள்ளார்.
தொழிலாளர் விவசாயி கட்சியின், செயல் திட்டம் தயாரிக்கப்பட்டு, 1923 மே 1, கொடியேற்றம் முடிந்தவுடன், வெளியிடப்பட்டுள்ளது. சங்கம் வைக்கும் உரிமை, வேலை நிறுத்தம் செய்யும் உரிமை, வார விடுப்பு, 8 மணி நேரம் வேலை நேரமாக தீர்மானிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் கொண்டதாக, மேற்படி செயல் திட்டம் இருந்தது.
இந்தியாவில் மே தின தியாகிகளை நினைவு கூறும் பேரணிகள்:
பிரிட்டிஷ் காலனியாதிக்க ஆட்சிக்கு எதிராக தொழிலாளர்கள் குவியலாக பங்கெடுக்கும் வேகத்தை தந்தது, ஆலைகளுக்குள் இருந்த உழைப்பு சுரண்டல் ஆகும். உழைப்பு சுரண்டலில் இருந்து விடுபட்டு, தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளை நிலைநாட்டுவது, பிரிட்டிஷாரை இந்தியாவில் இருந்து விரட்டுவது, என்ற அரசியல் போராட்டத்துடன் இணைந்தது, என்பதை இந்தியாவின் ஆலை தொழிலாளி வர்க்கம் நன்கு உணர்ந்தது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் நடத்திய போராட்டங்களில் தொழிலாளர் பங்கேற்பு அதிகரித்தது, இந்த பின்னணியில் தான்.
மே தினம் உருவானது எப்படி? - Punnagai | DailyHunt
1920 முதல் 1940 கால கட்டத்தில் இந்தியாவின் பிரதான, நகரங்களில் தொழிலாளர்கள் ஏராளமான வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். ஒரு ஆலை தொழிலாளருக்கு ஆதரவாக, பிற பகுதி தொழிலாளர்கள் போராடுகிற வர்க்க ஒற்றுமையும், பெருமளவில் வெளிப்பட்டது. குறிப்பாக சென்னை ராஜதானி, போராட்டங்கள் நிறைந்ததாக மாறியது.
இன்றைய ஆந்திராவின், எளூர் நகரில் சணல் ஆலை தொழிலாளர்களின் போராட்டம், கோவை, மதுரை, நெல்லை அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களில் நடந்த பஞ்சாலை போராட்டங்கள், நாகபட்டினம் ஸ்டீல் தொழிலாளர்கள், திருச்சி ரயில்வே தொழிலாளர்கள் சென்னை நகரில் டிராம் தொழிலாளர், பஞ்சாலை தொழிலாளர், பீடி தொழிலாளர், வெஸ்ட்டர்ன் இந்தியா மேச் ஃபாக்டரி தொழிலாளர்  மற்றும் டயோசின் பிரஸ் தொழிலாளர்கள் என பல்வேறு வகைப்பட்ட தொழிலாளர்கள் போராட்டங்களில் பங்கெடுத்தனர்.
தண்டையார் பேட்டையில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பங்கெடுத்த பேரணி, சென்னை மாகாண நிர்வாகத்தை, நெருக்கடிக்கு ஆளாக்கியது. இது டிராம் வே தொழிலாளர்களின் உரிமைகளுக்கு வழிவகுத்தது. ஏகாதிபத்தியம் ஒழிக, முதலாளித்துவம் வீழ்க எனும் முழக்கங்கள், அரசுகளை நிர்பந்தித்தது, என, Colonialism, Labour and politics, என்ற நூல் குறிப்பிடுகிறது.
அதேபோல் இன்றைய கேரளத்தின் பகுதிகளான, கோழிக்கோடு, கண்ணூர், தலசேரி ஆகிய பகுதிகளிலும், பீடி, கயிறு தயாரித்தல் ஆகிய தொழில்களில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தீவிரமாக போராடினர். இந்த போராட்டங்கள் அனைத்தும் சென்னை மே தினக் கொடியேற்றம் நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடந்தது. இப்போராட்டங்கள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை ஆலைப்பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, மாரிசன் என்பவர் தலைமையிலும், ராயல் என்பவர் தலைமையிலும், வெவ்வேறு காலங்களில் இந்தியாவிற்கு அனுப்பி ஆய்வு மேற்கொள்ள வேண்டிய அழுத்தத்தை தந்தது.அதன் தொடர்ச்சியாக சில சீர்திருத்தங்களும் செய்தனர். ஆனாலும் 8 மணி நேர வேலைக்கான போராட்டங்கள் தொடர்ந்தது.
What Is Labor Day? A History of the Workers’ Holiday – The New …
1936,1937,1938 ஆண்டுகளில் மே தின பேரணிகள் படிபடியாக அன்றைய சென்னை ராஜதானி முழுவதும், பரவியது. விசாகபட்டினம், ராஜமுந்திரி, நெல்லூர், சென்னை, மதுரை, கோவை, நாகப்பட்டினம், கடலூர், திருச்சி, திருநெல்வேலி, கோழிக்கோடு, கண்ணூர், தலசேரி ஆகிய இடங்களில் 6000 முதல் 10000 ஆயிரம் தொழிலாளர்கள் வரையிலும் பேரணிகளில் பங்கெடுத்துள்ளனர். தொழிலாளர்கள் மேலே குறிப்பிட்ட தினங்களை கடந்து, ரஷ்ய புரட்சி தினம், காரல் மார்க்ஸ் தினம், லெனின் தினம் ஆகியவைகளையும் நினைவு கூர்ந்துள்ளனர். இந்த நாள்களில் தொழிலாளர்களுக்கு அன்றைய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் உரை நிகழ்த்தியுள்ளனர்.
 மே தினம் விடுமுறை தினம்: 
சிக்காகோ வீதிகளின் ரத்ததுளிகளும், தூக்கிலிடப்பட்ட தியாகிகளும், சுட்டுக் கொல்லப்பட்டவர்களும் நம் தலைமுறையிலும், வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள், அவர்கள் தந்த உரிமைப் போராட்டம், என்கிற மூச்சுகாற்று வழியாக, தொழிலாளர்கள் இன்றளவும் சுவாசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருநாள் நினைத்து பார்க்கும் நாள் அல்ல. ஒவ்வொரு நாளும் நினைக்க வேண்டிய வரலாறு. தலைமுறை தலைமுறையாக நினைவுகளும், தியாகமும், போராட்டமும் கடத்தப்படும் போது தான், சுரண்டலை ஒழிக்கும் நெருப்பை அணையாமல் காக்க முடியும்.
1886 ல் பற்ற வைக்கப்பட்ட 8 மணி நேர வேலை, 8 மணி நேர உறக்கம், 8 மணிநேரம் ஓய்வு என்ற முழக்கம் அங்கீகரிக்கப்பட்டது. அதற்காக, ஆல்பர்ட் பார்சன்ஸ், ஆகஸ்ட் ஸ்பைஸ், ஜார்ஜ் எங்கல், சாமுவேல் ஃபில்டன் ஆகியோர் தூக்கிலப்பட்டனர். பலர் ஊர்வலத்திலேயே கொல்லப்பட்டனர். லட்சங்களில் பங்கேற்ற தொழிலாளர் பேரணி, பலபத்தாண்டுகளாக நடந்த பிரச்சாரத்தின் விளைவாகும். இதன் தொடர்ச்சியாக பாரிஸ் நகரில் நடந்த தொழிலாளர் மாநாட்டில், பிரடெரிக் ஏங்கெல்ஸ் சர்வதேச அளவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து நெருப்பு கனன்று கொண்டிருந்ததே ஒழிய, தீர்வு உருவாகவில்லை.
Amazon.com: LAMINATED 36x24 inches POSTER: Worker And Kolkhoz ...
முதலில் 8 மணிநேர வேலை என்பதை சட்டமாக்கி, மே தினப் போராளிகளையும், தியாகிகளையும் அங்கீகரித்தது, சோவியத் யூனியன் தான். லெனின் தலைமையில் பாட்டாளி வர்க்கம் ஆட்சியைக் கைப்பற்றி, நிறைவேற்றிய சட்டங்களில் முக்கியமானதாக எட்டு மணி நேர வேலை அமைந்தது. அன்றைய தினத்தை தொழிலாளர் தினமாக, ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டது. மார்க்சிம் கார்கியின் தாய் நாவலில், மே தின கொண்டாட்டத்திற்கான தயாரிப்புகள் விவரிக்கப்படும், கொடியை நீங்கள் தான் சுமந்து செல்ல வேண்டுமா?
அப்படியானால் மீண்டும் சிறைக்கு போக போகிறீர்களா? போன்ற கேள்விகள் நாவலின் நாயகன் பாவெலை நோக்கி பாயும். அந்த சிறிய ஊரில், ஆலை தொழிலாளர்கள் மே தின வரலாறு குறித்த துண்டு பிரசுரங்களை, வாசிப்பதும், பலருக்கும் விநியோகிப்பதும், குதுகலத்துடனும், திகிலாகவும் விவரிக்கப்படும். இந்த பெருமைக்குரிய கதையாடல், உரையாடல், விவரிப்புகள் தான், ரஷ்ய மக்களை புரட்சிப் பாதையில் அணிவகுக்க செய்தது. எனவே சோவியத் யூனியன் எட்டு மணி நேர வேலை குறித்து சட்டம் இயற்றியது, அவர்கள் சுமந்த கருவின் பிரசவம்.
இன்று பெரும்பான்மையான ஐரோப்பிய நாடுகள் மே தினத்தை பொது விடுமுறை தினமாக அறிவித்துள்ளன. இந்தியாவிலும் அது மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சிங்காரவேலர் கொடிஏற்றிய பாரம்பரியம் காரணமாக துவக்கத்திலேயே விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது.
கேரளா அடுத்ததாகவும், மேற்கு வங்கம் 1967 ல் ஐக்கிய முன்னணி அரசு அமைந்த போது, ஜோதிபாசு முயற்சியில் அறிவிக்கப்பட்டது. கர்நாடகா, ஆந்திரா, திரிபுரா, கர்நாடகா, கோவா, பீகார், அஸ்ஸாம், ஜார்கண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்கள் மட்டுமே பொது விடுமுறையை கடைப்பிடிக்கின்றன. இதர மாநிலங்கள் இந்திய பெருமுதலாளிகளின் அழுத்தம் காரணமாக அடங்கி கிடக்கின்றன. மத்திய அரசு தனது அதிகாரத்திற்கு உட்பட்டு விடுப்பு அறிவிக்க தயாரில்லை. மகாராஷ்டரா மாநிலத்தில் மே முதல் விடுமுறை தான், அது தொழிலாளர் தினம் என்பதால் அல்ல, மாறாக மகராஷ்டரா மாநிலம் 1960, மே 1 அன்று உதயம் ஆன தினம் என்பதால், இப்படி தான் இந்தியாவில் நிலை உள்ளது.
மே தினப் பூங்கா:
May Day Park, Chennai, Tamil Nadu
சென்னை மாநகரம் தொழிலாளர்களின் போராட்ட வரலாறு கொண்ட நகரம் ஆகும். குறிப்பாக சிந்தாதிரிப்பேட்டை, சென்னை மௌண்ட் ரோடு (இப்போது அண்ணாசாலை), தொழிலாளர்களின் போராட்ட வரலாறை சித்தரிக்கும் அடையாளம் ஆகும். குறிப்பாக 1920 துவங்கி  1970-75 வரையிலும் தொழிலாளர்கள் தங்களின் கூட்டு பேர உரிமைக்காக, நடத்திய வீரம் செறிந்த போராட்டம் நடத்திய பகுதி ஆகும். சிம்சன் ஆலை, மே தினப் பொதுக் கூட்டம், பேரணி ஆகியவை மூலம் அதிக தாக்கத்தை உருவாக்கிய பகுதி.
1869 ல் சென்னை நகராட்சி, 14.5 ஏக்கர் பரப்பளவில் அமைத்த பூங்கா, சென்னை ராஜதானியின் 10வது கவர்னராக இருந்த, ஃபிரான்சிஸ் நேப்பியர் பெயரில் அமைக்கப்பட்டது. 1950 ல்., சென்னை ராஜதானியின் விவசாய அமைச்சராக இருந்த, ஏ.பி. ஷெட்டி பொது மக்களும் பயன்படுத்த அனுமதிக்கும் வகையில் திறந்து வைத்தார். அதுவரை பொது மக்கள் அனுமதிக்கப்படவில்லை என தெரிகிறது. 1989 ல், இந்த பூங்கா மே தினப் பூங்கா எனப் பெயர் சூட்டப்பட்டது. இது வெறும் தகவல் அல்ல. பத்திரமா பாத்துக்கங்க, என்பது போலான, மிக முக்கிய சாதனை, மைல்கல். நின்று இளைப்பாறி பாய்ச்சல் வேகத்தில் முன்னேறுவதற்கான, தாங்கல்.
இப்போதைய தாராளமய பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தை கட்டமைக்கும் நுணுக்கங்களைக் கற்றுத் தரும் இந்த வரலாற்றை, பாதுகாப்போம். அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்துவோம்.. இது நம் வரலாறு.

புதன், 29 ஏப்ரல், 2020

Covid 19... relief

பொது முடக்கம் ... வாழ்க்கையை முடக்க அனுமதியோம்..

மத்திய, மாநில அரசுகள் சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளி அதிகம் கொண்டவை என்பது போலவே, கொரானாவிற்கும் அதன் அறிகுறிகளுக்குமான இடைவெளி அதிகரித்து வருகிறது. கோவிட் 2 வைரஸ் இந்திய ஆட்சியாளர்களையும், அறிவியலாளர்களையும் தினறச்செய்கிறது. குறிப்பாக உலகின் பல நாடுகள் தங்கள் நாடுகளில், குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று கண்டறியப்படவில்லை என்றது. அடுத்து சளி, இருமல், காய்ச்சல் ஆகிய அறிகுறிகள் கொரானவை கண்டறிய உதவும் என்றனர். ஆனால் இந்தியாவில் மேற்கண்ட இரண்டுமே பொய்த்துப் போய் உள்ளது. குழந்தைகள் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 104 குழந்தைகள் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அடுத்து கண்டறியப்பட்ட நோயாளிகளில் 80 சதமானோர் எந்தவித அறிகுறியும் காணாதவர்கள் ஆவர். 

அதாவது சத்தான உணவு இல்லாமை, பிற நாடுகளின் வயோதிகர்களும், நம் ஊரின் குழந்தைகளும் ஒரே விதமான பாதிப்பிற்கு ஆளானதை, வெளிப்படுத்துகிறது. இரண்டாவது பெரும்பான்மையான மக்கள் நெடுங்காலமாக பல நோய்த் தொற்றுகளுடன் அல்லது, நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இதன் காரணமாகவே, பிறநாடுகளில் இருந்த அறிகுறிகள், இங்கு வெளிப்படவில்லை. இவை. இரண்டையும் எதிர்கொள்ள சத்தான உணவு உட்கொள்ளும் பழக்கத்தை மேம்படுத்த வேண்டியுள்ளது. மற்றொருபுறம், வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும். ஆனால் இவை இரண்டையும் செய்யக் கூடிய கொள்கைகளைக் கொண்டதாக மத்திய மாநில ஆட்சியாளர்கள் இல்லை. இன்றைய தொற்று நோய் பரவல் காலத்திலும் அதற்கான நடவடிக்கையை, மேற்கொள்ள தயாராக இல்லை. 

காய்ந்த வயிறில் கட்டிக்கொள்ள வழங்கப்பட்ட ஈரத்துணி:

டெங்கு ஜுரத்தில் இருந்து தப்பிக்க, ஆறுமாதம் நிலவேம்பு கசாயம், தற்போது, கபசுர குடிநீர், அடுத்து என்ன? என்பது தான் தொழிலாளர்களின் வாழ்நிலை. பிரதமர் ஒருமுறை தனது உரையில் கசப்பு மருந்து நல்லது என்று பேசினார். ஆறு ஆண்டுகளாக பெரும்பான்மையோர் என்ற தொழிலாளர்களுக்கு கசப்பு மருந்து மட்டுமே வழங்கி வருகிறார். டெங்கு ஜூரத்தைக் கடந்து வாழ்க்கையை தனது உழைப்பின் மூலம் நடத்த முயற்சித்த தொழிலாளர்கள், கொரானா பொது முடக்கத்தில், எழுத்திருக்க முடியாத நிலையில் உள்ளனர். மாநில அரசின் அறிவிப்பான ஆயிரம் ரூபாய் என்பதை, தொலைக்காட்சியில் பார்க்க முடிகிறது, கையில் கிடைக்காதோர் பலலட்சம் உள்ளனர். பட்டியலில் இல்லாதோரும் பல லட்சம் பேர் உள்ளனர். சர்க்கரை என வெள்ளைத்தாளில் எழுதி நக்கினால், இனிக்குமா? என்பது போல் தான், இந்த நிவாரணம். தொழிற்சங்கங்கள், எதிர் கட்சிகள் வலியுறுத்திய, குறைந்த பட்ச நிவாரணம் 7500 ரூபாய் என்ற கோரிக்கை குறித்து பரிசீலிக்க, மத்திய, மாநில அரசுகள் தயாரில்லை. 

உலகின் பல நாடுகள் குறிப்பாக தென் கொரிய 57400 ரூ(820 டாலர்) அளவிற்கான நிவாரணத்தொகையை அறிவித்தது. சீனா குறைந்த பட்ச கூலி என்ன தீர்மானிக்க பட்டதோ அது மாதா மாதம், அமைப்புசாரத் தொழிலாளர்களுக்கு வழங்கப் படும் என்றும், ஜப்பான் 928 அமெரிக்க டாலர் ( 64960 ரூ) நிவாரணத்தொகையாக அறிவித்தது. பிரேசில் 8400 ரூ ஒவ்வொரு மாதமும் என அறிவித்தது. இவையெல்லாம் இந்தியா போல் வளரும் நாடுகள் பட்டியலிலுள்ளவை ஆகும். இவை அனைத்திற்கும் பிரதமர் மோடி, ஒருமுறையோ அல்லது அதற்கும் மேலோ பயணம் செய்து பல ஒப்பந்தங்களைக் கண்டவர். ஆனால் இந்திய நாடு முழுவதும் அவ்வாறு ஒரு வழிகாட்டுதலைத் தரவில்லை. மூன்று முறை முதல்வர்களுடனும், கம்யூனிஸ்ட் கட்சிகளை தவிர்த்த இதர கட்சி தலைவர்களுடன் ஒரு முறையும், மூன்று முறை தொலைக் காட்சி மூலமும் பிரதமர் உரை நிகழ்த்தி இருக்கிறார். ஆனால் மேலே குறிப்பிட்ட நாடுகள் கூறியது போல், எந்த ஒரு அறிவிப்பையும், வெளியிடவில்லை. மாறாக கைதட்டு, விளக்கேற்று, ஆரோக்கிய சேது ஆப்பை பதிவிறக்கம் செய், தனித்திரு, விலகி இரு, வீட்டில் இரு என இலவச அறிவுரைகளை மத்திய, மாநில அரசுகள் வழங்கி வருகின்றன. 

எல்லாவற்றிற்கும் மேலாக, மாநிலம் விட்டு மாநிலம், மாநிலத்திற்குள்ளேயே என இரு ரக இடம்பெயர் தொழிலாளர்களும், மிகக் கடுமையான பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். அழைத்து வந்த ஒப்பந்த தாரர்களும், முதன்மை பணி வழங்குவோரும், சில இடங்களில் உதவினாலும், பெரும்பாலான இடங்களில் அரசின் நிவாரணங்களை எதிர் பார்த்து, ஏமாந்து நிற்கும் துயரத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். வேறு எந்த நாட்டிலும் இந்த அளவிற்கு இடம்பெயர் தொழிலாளர்கள் எண்ணிக்கை இருந்திருக்குமா? அல்லது இப்படி கண்டு கொள்ளாமல் விட்டிருப்பார்களா தெரியவில்லை. ஆனால் நியாயமற்ற செயலாக, 40 நாள்களும் நீடிக்கிறது. டில்லியில் இருந்து புறப்பட்ட தொழிலாளர், சூரத் நகரில், மும்பை பந்ரா ரயில் நிலையத்தில் என பெருத்த ஏமாற்றத்துடன் கூடியவர்களை, உணர்ச்சியற்று வேடிக்கை பார்க்கும் அரசாக, பாஜக ஆட்சி உள்ளது. 

இந்த ஆட்சியாளர்களுக்கு துதிபாடும் பணியை நீதிமன்றங்கள் செய்கின்றன, என்ற குற்றச்சாட்டை, நீதிமன்றத்தில் பகிரங்கமாக வைக்க வேண்டிய அவலம் உருவாகியுள்ளது. இடிப்பாரை இல்லா ஏமறா மன்னன், என்பது போல், பல தன்னாட்சி அமைப்புகள் இக்காலத்தில், பாஜக ஆட்சியின் கீழான மற்றொரு, அமைச்சரவையாக மாறிவருகிறது. கொரானா பாதிப்பு பொது முடக்க காலத்தில், இது மக்களின் பிரச்சனைக்களுக்காக குரல் கொடுக்கும், இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. 

மேற்படி இலவச ஆலோசனைக்கான மூலக்கரு, நிவாரணத்திற்காக கையேந்தி நிற்கும் தொழிலாளர்கள், உழைப்பு என்ற அவர்களின் சரக்கை விற்பனை செய்ய வழியில்லை எனவே வேலையில்லா நாள்களுக்கு, உரிமையுடன் கூலி கேட்பதற்கான தகுதியை இழந்து விடுகின்றனர், என்பதாக உள்ளது. அமைப்பு சார்ந்த அல்லது அமைப்பு சாராத் தொழிலாளி என எப்படி இருந்தாலும், அவர் பெறும் கூலி, முழு உழைப்பு நேரத்தில் பாதிஅளவிற்கு உரியதாக மட்டுமே உள்ளது. இதன் காரணமாக தான், ஒரு நிறுவனம் பலவாக பெருகுகிறது. புதிய அசையா சொத்துக்கள் அதிகரிப்பு, தொழிலாளியின் உழைப்பில் இருந்தே உருவாகிறது, என்ற முதலாளித்துவப் பொருளாதாரம் குறித்து காரல்மார்க்ஸ் கூறியதை, வலுவாக வாதிடுவதன் மூலமே, உரிமையுடன் நிவாரணத் தொகையைப் பெற வழிவகுக்கும்.


முதுகில் குத்தும் குத்தீட்டி 2:

ஏற்கனவே, தொழிலாளர்களை வதைக்கும் சட்டத் திருத்தங்களை மத்திய பாஜக ஆட்சி செய்து வருகிறது. இந்த பொது முடக்க காலத்தை கூடுதலாக பயன்படுத்தி,  முதலாளித்துவ விசுவாசத்தை பாஜக ஆட்சி அதிகப்படுத்தி வருகிறது. முதலில், வேலை நேரத்தை, 8 மணியில் இருந்து 12 மணிநேரமாக உயர்த்தும், திருத்தத்தை மேற்கொண்டது. தற்போது தொழிலுறவு சட்ட திருத்தங்களை 8 நாள் என்கிற குறுகிய அவகாசத்தில், நாடாளுமன்ற நிலைக்குழு மக்களவை தலைவர் ஓம்பிர்லாவிடம் தாக்கல் செய்திருக்கிறது. ஏப்ரல் 14 அன்று தொலைக்காட்சியில், மோடி உரைநிகழ்த்தினார். ஏப்ரல் 15 அன்று நிலைக்குழு தலைவர், பிஜு ஜனதா தள தலைவர், பர்த்துரு ஹரி மகத்தா, தனது குழு உறுப்பினர்களுக்கு மெயில் மூலம் ஆவணங்களை அனுப்பி, 8 நாள்களுக்குள் கருத்துக்களைக் கேட்டுள்ளார். 21 பேர் கொண்ட குழுவில் மார்க்சிஸ்ட் கட்சியைச் சார்ந்த, எளமரம் கரீம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த, க.சுப்பராயன், தி.மு.கவைசார்ந்த மு. சண்முகம் ஆகியோர் மட்டுமே மாற்று கருத்துக்களை முன் வைத்துள்ளனர். நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரையிலும், அமைக்கப்பட்ட நிலைக்குழு, இவ்வளவு விரைவாக அறிக்கை தாக்கல் செய்தது, இதுவே முதல் முறையாக இருக்கக் கூடும். 

பிரதமர் மோடியின், உரைக்கும், நிலைக்குழு அறிக்கை தாக்கல் செய்ததற்கும், உள்ள தொடர்பு முக்கியமானது. மோடி தனது உரையில், நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்வதோ, குறைப்பதோ கூடாது, ஏப்ரல் மாதத்திற்கான ஊதியத்தை வழங்க வேண்டும், என்பதை வலியுறுத்தினார். மறுநாளே மெயில் மூலம் கருத்து கேட்பு நடத்திய, நிலைக்குழு மூன்று உறுப்பினர்களின் எதிர்ப்புடன், இக்காலத்திற்கான ஊதியத்தை வழங்க, தனியார் நிறுவனங்களிடம் கட்டாயப் படுத்த முடியாது எனக் கூறியுள்ளனர். ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசத்துடன் நிலைக்குழு செயல்பட்டுள்ளது. 

மற்றொரு புறம், மத்திய அரசை, முதலாளிகள் சங்கத்தினர் நிர்பந்திக்கும் வகையில், கருத்து தெரிவித்து வருகின்றனர். நோய் தொற்று பரவல் தடுப்பு சட்டம், எந்தவிதமான வரையறையும், ஊதியம் குறித்து கூறவில்லை. நோய் தொற்று கொண்ட நபர் வேலை செய்ய அனுமதிக்கப்பட்டால், நிர்வாக பிரிவு அதிகாரிகள் கடுமையாக தண்டிக்கப்படுவர் எனக் கூறுகிறது. இது போன்ற சட்டங்களால் பயனில்லை, உற்பத்தி துறைக்கு சாதகமாக இல்லை எனவும், கோபத்தில் உள்ளனர்.  இந்த கோபத்திற்கு வடிகால் அமைப்பதைப் போல், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒன்னரை ஆண்டுகளுக்கு அகவிலை படி உயர்வு இல்லை, என அறிவித்துள்ளது. மாநிலத்தில் உள்ள அதிமுக அரசும் அதை பின்பற்றியிருக்கிறது. தனியார் நிறுவனங்கள் அரசுகளின் வழிகாட்டுதலை பல மடங்கு வேகமாக அடுத்த கட்ட ஊதிய உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளில் கையாளும், என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

ஆக மொத்தத்தில் எல்லா திசையிலும் தொழிலாளிகள் மீதான தாக்குதலை மத்திய, மாநில அரசுகள் அதிகரிக்கும் வேலையில், தொழிலாளர்கள் அடங்கி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதே, வரலாறு. கொதிநிலையில் இருக்கும் தொழிலாளர்கள் வழக்கத்தை விட அதிகமாக போராடுவது தவிர்க்க இயலாது. அந்தப் போராட்டங்களை, தொழிலாளி வர்க்க உணர்வு மட்டுமே, தீவிரமாக வழி நடத்த முடியும்.

புதன், 22 ஏப்ரல், 2020

கொள்ளை நோயில் முடங்கி இருக்கும் தொழிலாளியை கொள்ளையடிக்கும் 12 மணிநேர வேலை – எஸ்.கண்ணன்.

293VIEWS
Spread the love
எரியும் வீட்டில் பிடுங்கியது மிஞ்சம் என்ற பழமொழி உண்டு. அதுபோல் தான் மத்திய அரசு, இந்தியா-வில் எரிந்து கொண்டிருக்கும் கோவிட் 19 வைரஸ் காரணமான கொள்ளை நோயை, தடுப்பதற்கு செயல்படுவது போல் ஒரு பாவனையை செய்து கொண்டே, தொழிலாளர்களை மேலும் வஞ்சித்துக் கொண்டிருக்கிறது. ஒரு தினக்கூலித் தொழிலாளிக்கு, 36 நாள்கள் வீட்டில் இருப்பது, வேலையற்று இருப்பது, வருமானத்தை முடக்கிய அரசிடம் இருந்து, ஓராயிரம் ரூபாய், கொஞ்சம் அரிசி, பருப்பு ஆகியவற்றை, வரிசையில் நின்று பெறுவது போன்றவை, மிகப்பெரிய மன உலைச்சல் தரும் துயரம் ஆகும். இந்த துயரத்தை, 40 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்களும் அவர்களின் குடும்பங்களும் அனுபவித்து வருகின்றனர்.
தொழிலாளர்களில் யாருக்கு சட்டம்?
மீன் பிடிக்க இயலாத கையறு நிலை, கட்டுமானத்திற்கு, தையல் தொழில செய்ய, சலவை செய்ய, சலவை செய்த துணிகளுக்கு இஸ்த்திரி செய்ய, வீட்டு வேலை செய்ய, ஆட்டோ, கார் உள்ளிட்ட வாடகை வாகணங்களை ஓட்ட இயலாமை காரணமாக, பெரும் துயரம் மற்றும் மன உலைச்சலை அனுபவித்து வருகின்றனர். பாரம்பரியத் தொழில்களான, விவசாயம், தறி நெசவு போன்றவை முடங்கி போயுள்ளன. இந்த தொழில் செய்யும் மக்கள், பெரும் வருமானம் கொண்டவர்களோ, வங்கி இருப்பு கொண்டவர்களோ அல்லது, நகைகள் இருக்கிறது பின்னர் அடமானம் வைத்துக் கொள்ளலாம் என்ற நிலையில் உள்ளவர்களோ அல்ல. மாறாக ஏற்கனவே இருக்கும் கடனுக்கு வட்டி செலுத்திக் கொண்டும், அரை வயிறுமாக வாழ்க்கை நடத்தும் மனிதர்கள். இவர்களுக்கு சட்ட வழி காட்டுதல்களோ, விதிமுறைகளோ இல்லை. 18 வயதில் வேலைக்கு சேரமுடியும், 58 அல்லது 60 வயதில் ஓய்வு போன்ற எந்த ஒழுங்கும் இல்லை. முதுகெழும்பு நிமிர்ந்து நிற்கும் வரை கடினமான வேலை, கூன் விழுந்தாலும், ஏதாவது ஒரு வேலை என்று தான் ஓடிக் கொண்டிருகின்றனர்.
இவர்களுடன் இணைந்து சுமார் 8 கோடிப்பேர் ஆலை மற்றும் சேவைத் துறைகளில், தொழிற்சாலைகள் சட்டம் மற்றும் விதிகளுக்கு உள்பட்டு வேலை செய்து வருகின்றனர். வளர்ந்த நாடுகள் என்று சொல்லப்படுபவைகளில் இந்த என்ணிக்கை, விகிதாச்சார அடிப்படையில் அதிகம்.  சங்கம் வைக்கும் உரிமை அல்லது ஒன்று கூடும் உரிமை, ஊதியம் உள்ளிட்ட தனது தேவைகளை நிறுவனம் அல்லது முதலாளிகளுடன் பேரம் பேசி பெறுகிற, கூட்டு பேர உரிமை போன்றவை இன்றைக்கும் கூட, இந்தியாவில் இல்லை. இத்தகைய அடிப்படை ஜனநாயக உரிமைகளில் நாம் பின் தங்கி தான் இருக்கிறோம்.
                                                               photo courtesy Spor Haberleri
இந்தியா விடுதலை பெற்றபோது, படிப்படியாக பல்வேறு தொழிலாளர் சட்டங்கள் இந்தியத் தொழிலாளி வர்க்கம் மற்றும் இடதுசாரிகளின் போராட்டம் காரணமாக, மத்திய அரசினால் எடுத்துவரப் பட்டது. பிரிட்டிஷாரின் காலனியாதிக்க காலத்தில், இந்தியாவில், தொழிலாளர்கள் மிகக் கடுமையாக சுரண்டப்பட்டனர். சுரண்டலுக்கு எதிரான போராட்டங்களும் அன்று தீவிரம் பெறத் துவங்கியது. 1901 முதல் 1929 வரை சென்னை, செங்கல்ப்பட்டு பகுதியில் நடைபெற்ற ஆலை விபத்துகள் குறித்து, சென்னைப் பெரு நகர தொழிற்சங்க வரலாறு எனும் புத்தகத்தில், பேரா. தே. வீரராகவன் குறிப்பிட்டது முக்கியமானது. மேற்படி கால கட்டத்தில் “சென்னை பெருநகர மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்த ஆலைகளில் நடைபெற்ற விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வந்தது ஒவ்வொரு 10000 தொழிலாளர்களில் 159 பேர் அன்று ஆலைக்குள் நடந்த விபத்துகளில் மரணத்தை தழுவியுள்ளனர். இவையன்றி பதிவு செய்யப்படாத தொழிற்சாலைகளில் நடந்த விபத்துகள் குறித்து புள்ளி விவரங்கள் இல்லை”, எனக் கூறியுள்ளார்.
விபத்துக்கான காரணங்களை ஆய்வு செய்த, பிரிட்டிஷ் அதிகாரிகள் தொழிலாளர்கள் மீதே குற்றம் சுமத்தினர். ஆம்ஸ்ட் ராங், என்ற சென்னை துறைமுக மேலாளர், மிகக் கடினமான சரக்குகளை சென்னை கூலிகள் சாதாரணமாக கையாளுவதாகவும், ஓடும் ரயில் பெட்டிகளில் சரக்குகளை ஏற்றி இறக்குவது கண்டு தான் அதிர்ச்சி அடைந்ததாக கூறி இருக்கிறார். அதாவது தனக்கு தேவை என்றால், இந்தியத் தொழிலாளியை இப்படியெல்லாம் வேலை வாங்க முடியும், அதுவே சட்டத்திற்கு முன் கேள்வியாகிவிட்டால், தொழிலாளி மீதே பழி சுமத்துவது, எல்லா காலத்திலும் இருந்துள்ளது. இத்தகைய பின்னணியில் தான் வேலை ஆள் இழப்பீட்டு சட்டம் 1923 ல் உருவாக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் ஒன்று கூடுவது போராடுவது நீடிக்கவே 1926 ல் தொழிற்சங்க சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
சம்பளம் தராமல் இருப்பது, ஆலைகளில் 1850 களில் பயிற்சியாளர் சட்டம் என்ற பெயரில் ஒரு சட்டத்தை உருவாக்கி, ஊதியமில்லாத ஊழியத்தை, கிழக்கு இந்திய கம்பெனியின், பின்னர் பிரிட்டிஷ் அரசு, வெள்ளைக் கார முதலாளிகளும் செய்து வந்துள்ளனர். திருவல்லிக்கேணி, வண்ணாரப்பேட்டை போன்ற பகுதிகளில் பீடி சுற்றி வந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து பகுதி தொழிலாளர்களும், சென்னை மட்டுமல்லாமல், மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களிலும் ஊதியம் உள்ளிட்ட பிரச்சனைகள் முன்னெழுந்த போது, சம்பளப்பட்டு வாடா சட்டம் 1936 ல் உருவாக்கப்பட்டது. தொடர்ந்து தொழிலாளர்கள் முன் வைத்த கோரிக்கை, போராட்டம், உலகம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு ஆகியவை காரணமாக, வாரவிடுப்பு சட்டம் 1942 ஆகியவை பிரிட்டிஷார் காலத்தில் உருவானது.
                                                                         photo courtesy news 18 tamil
ஆனால் விடுதலை இந்தியாவில் 36 சட்டங்கள் மட்டுமே உருவாகியுள்ளன. பிரிட்டிஷார் காலத்தில் 22 ஆண்டுகளில் 4 சட்டங்களை இந்திய தொழிலாளி வர்க்கம் போராடி பெற்றுக் கொள்ள முடிந்தது. விடுதலை இந்தியாவின் வயது 73 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில், ஆலைகள் மற்றும் வேலை நேரம், குறைந்த பட்ச ஊதிய சட்டத்தை திருத்தி அமைப்பது போன்ற தொழிலாளர்களுக்கு சாதகமான நடவடிக்கைகள் போதாது. உருவாக்கப்பட்ட 36 சட்டங்களின் தோற்றமும் கூட, இடதுசாரிகள் தொடர்ந்து நடத்திய போராட்டம் மற்றும் நிர்பந்தம் ஒரு காரணம் என்றாலும், சர்வதேச சமூகத்தின் நிர்பந்தமும் மற்றொரு காரணம். 1990 களுக்கு பின் சோசலிச நாடுகளின் அரசியல் தோல்வி காரணமாக, சர்வதேச சமூகமும், உழைப்பு சுரண்டலுக்கான புதிய வடிவங்களை கண்டறிந்து அமலாக்க துவங்கிய நிலையில் இந்தியாவில் எந்த ஒரு புதிய சட்டமும் உருவாக்கப்பட வில்லை. இடதுசாரிகள் ஆதரவில் 1996 ல் அமைந்த ஐக்கிய முன்னணி ஆட்சி, கட்டுமானத் தொழிலாளர் செஸ் சட்டம் 1996 ஐ உருவாக்கியது. அதேபோல் இடதுசாரிகள் ஆதரவில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இருந்த போது, அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கான சமூகபாதுகாப்பு சட்டம் 2008 ல் உருவாக்கப்பட்டது. குறிப்பாக சர்வ தேச மூலதனக் குவிப்பு நடந்து வரும் நிலையில், சிறப்பு பொருளாதார மண்டல சட்டம் உள்ளிட்ட பல முதலீட்டாளர் ஆதரவு சட்டங்கள் உருவானதே தவிர, ஆலை தொழிலாளர்களுக்கான சட்டத்தில் முன்னேற்றமோ, புதிய சட்டங்களோ உருவாகவில்லை.
தொழிலாளருக்கான வேலை நேரம்:
உலகின் தொழிலாளர்கள் தங்களுக்கான வேலை நேரத்தை குறைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து போராடத் துவங்கிய போது, இந்தியாவில் ஆலைகள் பெரும் எண்ணிக்கையில் உருவாகி இருக்க வில்லை. 19 ம்நூற்றாண்டின் இறுதி பகுதியில் தான் பஞ்சாலைகள் பம்பாய், சென்னை, கல்கத்தா பகுதிகளில் உருவாகி வளர்ச்சி பெற்றது. வேலைநேரம் சூரிய உதயம் துவங்கி மறையும் வரையானதாக தீர்மனிக்கப்பட்டது. பின் மின் விளக்குகள் பயன்பாடு அதிகரித்த பின், வேலை நேரமும் அதிகரித்தது. எனவே வேலை நேரத்தை குறைக்க வேண்டும் என்ற போராட்டமும் தவிர்க்க முடியாததாக மாறியது. அதாவது இந்தியாவில், குழந்தைகளையும், பெண்களையும் அதிக எண்ணிக்கையில், பஞ்சாலை உற்பத்தியில் நேரம் காலம் இல்லாமல் ஈடுபடுத்தியதால், இந்தியாவின் ஆலைகள், இங்கிலாந்தின் லங்காஷயர் ஆலைகளை விடவும் மலிவாக உற்பத்தி செய்து தர முடிந்தது.
அதேநேரம் வேலைநேரத்தைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. 1891 ல் தொழிற்சாலைகள் சட்டம் 12 வயதுக்கு கீழ் இருந்த சிறுவர்களின் உழைப்பு நேரத்தை, 9 மணிநேரமாகவும், பெண்களுக்கான வேலை நேரத்தை 12 மணி நேரமாகவும், இரவு வேலை செய்வதில் இருந்து பெண்களுக்கு விலக்களிப்பது என்றும், திருத்தி சட்டம் இயற்றப்பட்டது. மற்ற ஆண் தொழிலாளர்களுக்கான வேலை நேரம் 14 அல்லது 16 மணி நேரமாக இருப்பது நீடிக்கும் என்றும் வரையறை செய்யப்பட்டது. தொடர்ந்து போராட்டங்கள் நீடிக்கவே, 1908 ல் வேலைநேரம் குறித்து விசாரணை நடத்த மாரிசன் என்பவர் தலைமையில் ஒரு குழு வந்தது. அக்குழு தனது அறிக்கையை தாக்கல் செய்த பின்னணியிலேயே, 1911 ல் 12 மணி நேரம் வேலை நேரமாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து 1922 ல் தொழிலாளர்கள் வேலைநேரம் மற்றும் ஓய்வு, இடைவேளை ஆகியவை குறித்த பிரச்சனைகள் முன்னுக்கு வந்தது. சென்னையில் 1923 ல் இந்திய வரலாற்றில் முதல் முறையாக சிங்காரவேலர் மே தினக் கொடியேற்றினார். அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் பிரிட்டிஷ் அரசு ராயல் கமிஷன் என்ற குழு மூலம் 1929 ல் விசாரணை நடத்தியது. அதன் பரிந்துரைப்படி, 1934 ல் வேலைநேரம் 9 மணிநேரமாக குறைக்கப்பட்டது.
                                      photo courtesy IndiaMART
அதைத் தொடர்ந்து நடைபெற்ற தொழிலாளர் போராட்டங்கள் மற்றும் ஜனநாயக குரலின் அதிகரிப்பு ஆகியவை வேலைநேரத்தை 8 மணிநேரமாக குறைக்க வேண்டும் என்ற அழுத்தத்தை அதிகப்படுத்தியது. அம்பேத்கார், 1942 நவம்பர் 7 ல் அரசு நடத்திய, தொழிலாளர் மாநாட்டில், வேலைநேரத்தை 8 மணிநேரமாக குறைக்க வேண்டும், என்ற கோரிக்கையை முன் வைத்து பேசினார். “வேலைநேரத்தைக் குறைப்பது என்பது, வேலையில் இருக்கும் தொழிலாளர்களுக்கு நிவாரணம் அளிப்பதுடன், மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் செய்யும், அதேநேரத்தில் இக்கோரிக்கையை அரசு ஏற்கும் நிலையில், அவர்களின் அடிப்படை சம்பளத்தையோ, பஞ்சப்படியையோ குறைப்பது என்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது”, என தெளிவாக அம்பேத்கர் அவர்கள் பேசியுள்ளார். இப்படி பல்வேறு நிர்பந்தங்களைத் தொடர்ந்தே, பிரிட்டிஷ் அரசு 8 மணி நேர வேலைக்கு ஒப்புக் கொண்டது. இந்தியாவில் 8 மணிநேர வேலை வாரம் 48 மணி நேரம் என்பது அமலாக துவங்கி 80 ஆண்டுகள் ஆகிறது. 80 ஆண்டுகளுக்கு பின் மீண்டும், வேலை நேரத்தை 12 ஆக உயர்த்துவதை இந்த ஊடங்கு காலத்தில் அமலாக்க பாஜக அரசு எல்லா வேலைகளையும் செய்து வருகிறது.
7 மணி நேரமாக குறைப்பதே இன்றைய தேவை:
இப்போது இந்திய பொருளாதாரம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 23% பேர் வேலை இழந்துள்ளனர். அல்லது வேலையின்றி உள்ளனர். இதன் எண்ணிக்கை சுமார் 10 கோடி. இவர்கள் கையிலும் வாங்கும் சக்தி ஏற்படும் போது தான், பொருளாதாரம் மேம்படும். உற்பத்தி பெருகும், வேலை வாய்ப்பு அதிகரிக்கும். இந்த சூழல் உருவாக வேலை நேரத்தை குறைப்பதே அவசியம், அது தொழிலாளர்களுக்கான ஓய்வு அல்லது நிவாரணமாக பார்க்கப்பட கூடாது.
ஆனால் மத்திய பாஜக ஆட்சி, கொரானா கால ஊரடங்கிற்கு, வாய் சவடால் நிவாரணம் வழங்கியது போல், வேலைநேரத்தை 8 ல் இருந்து 12 மணி நேரமாகஅதிகரித்து, அதிக உற்பத்திக்கு அழைப்பு விடுத்துள்ளது. இது உற்பத்தி தேக்கத்திற்கே வழிவகுக்கும், உற்பத்தியை தூண்டும், குறைவான தொழிலாளர்களின் வருவாயை மட்டும் உயர்த்துவதன் மூலம் வாங்கும் சக்தி அதிகரிக்காது. மாறாக வேலை நேரத்தை குறைப்பது, மூலதனக் குவிப்பை கட்டுப்படுத்தும். பரவலான வருவாய் உயர்வுக்கு வழி வகுக்கும். கடந்த 80 ஆண்டுகளில் பெரும் பணக்காரர்களின்  செல்வ மதிப்பு பல்லாயிரம் மடங்கு உயர்ந்துள்ளது. புதிய பெரும் பணக்காரர்கள் தலையெடுத்துள்ளனர். முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு 18 பில்லியன் டாலர் (1.26 லட்சம் கோடி) கடந்த ஓராண்டில் உயர்ந்துள்ளது. அலிபாபா அல்லது அமேசான் அதிபர்களின் சொத்து மதிப்பு கூட இந்த அளவு உயரவில்லை என எக்னாமிக் டைம்ஸ் குறிப்பிடுகிறது.
கோவிட் 19 பாதிப்பு, லாகடவுன் 1இன் போது, 21 நாள்களும், லக்டவுன் இரண்டின் போது19 என மொத்தமாக, 40 நாள்கள் தொழிலாளர்களையும், பொதுமக்களையும் வீட்டுக்குள் பூட்டி விட்டு, மறைமுகமாக, தொழிற்சாலைகள் சட்டம் 1948 பிரிவு 51 ஐ, 12 மணிநேரமாக உயர்த்தும் வகையில் திருத்துகிறது. இத்தகைய திருத்தத்திற்காக, முன்மொழியப்பட்ட தொழிற்சாலைகள் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் வேலைதன்மை2019 மசோதா, நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைக்காக அனுப்பப்பட்டுள்ளது. அக்குழுவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இடம் பெற்றுள்ள எளமரம். கரீம், தனது திருத்தங்களை 7 பக்கங்களில் முன்மொழிந்துள்ளார். குறிப்பாக வேலை நேரத்தை வரையறை செய்துள்ள, தற்போதைய பிரிவுகள், 51,54 ஆகியவற்றை திருத்தல் கூடாது. ஜப்பான் ஆய்வு சுட்டிக் காட்டியது போல், வேலை நேரத்தை குறைப்பதன் மூலம் கூடுதல் வேலை வாய்ப்பை உருவாக்க முடியும் என்பதையும் இணைத்து கூறியுள்ளார்.
                                      photo courtesy IndiaMART
அன்மையில் நடைபெற்ற சி.ஐ.டி.யு 16 வது அகில இந்திய மாநாடு, வேலை நேரத்தை ஒருநாளைக்கு 7 மணிநேரம் எனவும், வாரம் 35 மணிநேரமாகவும் குறைக்க வேண்டும். இதன் மூலம் வாரம் இருநாள்கள் விடுமுறை உருவாகும். அதேபோல் கணிசமான வேலையின்மையை இதன் மூலம் குறைக்க முடியும் என்றும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஐரோப்பிய நாடுகள் பெரும்பான்மையாக, வாரம் 35 அல்லது 36 மணிநேரம் என்ற தன்மையில் வேலை நேரத்தை வரையறை செய்து, பல பத்தாண்டுகளாக அமலாக்கி வருவது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் வாரம் 40 மணிநேரம் என்பது 50 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் நிலையாகும். எனவே அனைத்துவிதமான ஜனநாயக சக்திகளும், தற்போதைய வேலைநேரத்தை, மேலும் சுரண்டலுக்கு வழிசெய்யும் வகையில் திருத்த அனுமதிக்க கூடாது..
வரலாற்றில் இருந்தும், இந்திய ஆட்சியாளர்கள் பாடம் கற்க வேண்டும், உலகப் பொருளாதார பெருமந்தம், 1930 களில் உருவான போது, உலகப்போர் மூண்டது, போர் முடிவுக்கு வந்த போது, முதலாளித்துவ வளர்ச்சி கொண்ட நாடுகள் பலவும் வேலைநேரத்தை குறைப்பது குறித்த அழுத்தத்திற்கு ஆளாகின. குறிப்பாக 1935, ஜூன்4 அன்று, சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ) முன் மொழிந்த தீர்மானமான, வாரம் 40 மணி நேரமாக வேலை நேரம் குறைக்கப்பட வேண்டும் என்பது, முக்கிய பங்களிப்பைச் செய்தது. பொருளாதார பெருமந்தத்திற்கு பல காரணங்கள் இருந்தாலும், முக்கியமான ஒன்று வேலையின்மை ஆகும். வேலை நேரத்தை குறைப்பதன் மூலம், வேலையின்மையை குறைக்க முடியும், பெருமந்தத்திற்கு தீர்வு காண முடியும், என்பதையும் தீர்மானம் தெளிவு படுத்துகிறது.
அதேபோல் 1962 ஜூனில், ஐ.எல்.ஓ மீண்டும் ஒரு தீர்மானத்தின் மூலம், மேலும் வேலை நேரத்தை ஒவ்வொரு நாடும் தற்போதைய நிலையில் இருந்து குறைப்பது குறித்து ஆலோசிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. 2000 ல் இருந்து, ஃபிரான்ஸ் வேலை நேரத்தை வாரத்திற்கு 35 மணி நேரமாக குறைத்தது. பல நாடுகள் இதை பின்பற்றின. ஆனால் இந்தியா, உலக வளர்ச்சியின் இந்த பாதையை, இருட்டடிப்பு செய்கிறது. இடதுசாரி இயக்கங்கள், தொழிற்சங்கங்கள் இது குறித்து அவ்வப்போது, வலியுறுத்துகின்றன. ஆனால் இது பெரும் ஜனநாயக எழுச்சிக்கான குரலாக மாறவில்லை. இப்போது மோடி தலைமையிலான பாஜக ஆட்சியின் முயற்சியை எதிர்த்து அத்தகைய பெரும் குரல் எழுப்பப்படுவதும், வீச்சாக பரவுவதும் பற்றி எரிவதும் அவசியம். தொழிலாளர்களும், அவர் தம் குடும்பங்களும், வேலைக்காக போராடும் இளைஞர்களும் இந்த முழக்கத்தில் ஒன்றினைவது காலத்தின் கட்டாயம்.
நன்றி... bookday.co.in