தனிநபரின் கொண்டாட்டங்களைப் பார்த்து ஆத்திரப்பட்டு எழுதவில்லை. அதே நேரத்தில் தனிநபர்களின் கொண்டாட்டங்களில், அப்பாவி உழைப்பாளி மக்களை உள்ளடக்குகிற போது, அமைதியாகவும் இருக்க முடியவில்லை. மகாத்மா காந்தி, அண்ணல் அம்பேத்கார் ஆகியோரின் பிறந்த தினங்களுக்கு விடுமுறை விடப்படுகிற, காரணத்தால், ஓரளவு நினைக்கப்படும் சாத்தியம் இருக்கிறது. மகாகவி பாரதி, பெரியார், பகத்சிங் போன்றவர்களுக்கு விடுமுறையும் இல்லை, கட் அவுட் வைத்து நினைவூட்டுவதற்கு, பணம் மற்றும் படைபலமும் இல்லை. மேற்குறிப்பிட்ட தியாகிகளுக்கு இல்லாத பணம் மற்றும் படைபலம், இன்றைய அரசியல் வாதிகளில் பலருக்கும் இருப்பதால், அவர்களின் பிறந்த தினத்தை நினைவில் வைக்க கட்டாயப் படுத்தப் படுகிறோம். சாலையைக் கடக்கும் ஒவ்வொரு, சராசரி குடிமகனும், பார்த்தே தீரவேண்டும் என்ற நோக்கத்தில், இந்த விளம்பரங்கள் மேற்கொள்ளப் படுகின்றன. பிறமாநிலங்களை விட தமிழகம், இக்கொண்டாட்டத்தில் முன்னனியில் இருக்கிறது.
தமிழகத்தில் நடைபெறும் பிறந்த நாள் கொண்டாட்டங்களை பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது. அருகில் இருக்கும் புதுச்சேரி செல்வோர், அப்பிரதேசத் தலைவர்களின், பிறந்த நாள் கொண்டாட்டங்கள் இல்லாத நாளைப் பார்ப்பது அரிது. நண்பர் ஒருவர், நமது தலைவர்களின் பிறந்த நாள் நிகழ்வுகளை கட் அவுட் மற்றும் சுவரெழுத்துக்களில் தொடர்ந்து பார்த்த காரணத்தால், வரிசையாக பட்டியலிடுகிற அளவிற்குப் பழகிப்போனார். தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் தலைவர்களின் கொண்டாட்டம் அந்தளவிற்குத் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தேசியக் கட்சி காங்கிரஸ் பேரியக்கம் எனச் சொல்லப் பட்டதன் விளைவாக, நிறைய தலைவர்கள், எனவே நிறையக் கொண்டாட்டங்கள். காங்கிரஸ் தலைவர்களின் பிறந்த தினக் கொண்டாட்டத்திற்கு, நாட்குறிப்பில் நாள்கள் போதாது, அத்தனை கொண்டாட்டங்கள்.
இது ஒரு நாள் கொண்டாட்டமாக இருந்தால், நாம் கவலை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. மாதக் கணக்கில் நடைபெறும், பிரச்சாரங்களாக மாறிவருவதால், பொது மக்கள் அக்கறை கொள்ள வேண்டிய தேவை அதிகரித்து வருகிறது. சுவர் எழுத்துப் பிரச்சாரம் துவங்கி, தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை விளம்பரங்கள், திரும்பும் திசை எங்கும் கட் அவுட்கள் ஆகியவை ஒருபுறம். மற்றொரு புறம் வாரக்கணக்கில், கிரிக்கட் அல்லது வேறு போட்டிகள், நகரமாக இருந்தால் குத்தாட்டம், கிராமமாக இருந்தால் கரகாட்டம் போன்ற உற்சாகமூட்டும் ஏற்பாடுகள். இவை போதாது என்று, தெருக்கள் தோரும் ஒலி மற்றும் ஒளி அமைப்புகளும், போதை வஸ்துகளும் ஏற்படுத்தும் தாக்கம்.
மதுரை கடந்த சில வருடங்களாக சிறப்புச் செய்தியாக மாறி வருவது கண் கூடு. 2008, ஜனவரி 30 ம் தேதி மதுரையில், விடுதலைப் போராட்ட வீரராக அடையாளம் காணப்பட்ட, வீரபாண்டிய கட்ட பொம்மனின் சிலையை கட் அவுட்கள் கொண்டு வெளியில் தெரியாத அளவிற்கு, மறைத்து விட்டனர், மதுரை மாநகரத்து உடன்பிறப்புகள். 2010, ஜூலை 15 காமராஜரின் பிறந்த தினம், நகர மக்கள் தொகைக்கு விஞ்சுகிற அளவிற்கு விளம்பரங்கள். ஆனால் அதில் காமராஜரைத்தான் காணவில்லை. அன்று விருதுநகருக்கு வருகை தந்த மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர், புரந்தேஸ்வரியின் புகைப் படத்திற்கு கொடுத்த முக்கியத்துவம், காமராஜருக்குத் துளியும் தரப்படவில்லை. ”எளிமையின் அடையாளமே” என்ற வாசகங்களை, இது போன்ற வாழ்த்துச் செய்திக்கான விளம்பரப் பலகைகளில் பார்க்கிற போது, நடமாடும் நகைச்சுவைத் தொலைக்காட்சிகள் வந்து விட்டனவோ, என சந்தேகம் கொள்ளாமல் இருக்க முடியாது. தங்கள் தலைவர்களாக போற்றப் பட வேண்டிய மறைந்த வீரர்கள், இருட்டடிப்புச் செய்யப் படுவதும், ஆடம்பரங்கள் தலைவிரித்து ஆடுவதும், பொது மக்களுக்கு, வேடிக்கைப் பொருளாக மாறுவது, சமுக அக்கறையின்மையின், வெளிப்பாடு. எனவே இது குறித்த கவலை பொதுமக்களிடம் உருவாக வேண்டியுள்ளது. சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு, உயர் நீதிமன்றம் சென்னை நகரில், குறிப்பாக விமான நிலையத்திற்கு அருகில், உள்ள விளம்பரப் பலகைகளுக்கு சில கட்டு பாடுகளை விதித்தது. அதற்குக் காரணம் விமான ஓட்டிகளின் பார்வையைக் கூச்சமுறச் செய்கிற வகையில் வண்ண விளக்குகளைக் கொண்டதாக விளம்பரம் அமைந்தது ஆகும். அது போல் பொது மக்களை, தேசத் தலைவர்களைக் களங்கப்படுத்தாமல், பொது இடங்களின் அமைதியை பாதிக்காத தனி நபர் விழாக்களாக அமைத்துக் கொள்ள உத்தரவிட வேண்டும்.
இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில், பொதுக் கூட்டங்களுக்கும், போராட்டம் நடத்தும் இடங்களுக்கும் கட்டுப் பாடுகளை விதிக்கும், அரசும், நீதித்துறையும் இது போன்ற தனி நபர்கள் செய்யும் இடயூறுகளைப் பொருத்துக் கொள்வது ஏன்? என்பது பொதுவான அரசியல் நோக்கர்களின் கேள்வி. அதுமட்டுமல்ல, தனி நபர்கள் முன்னிலைப் படுத்தப் படும் போக்கு, கொள்கையற்ற நிலையிலேயே மேலோங்குகிறது. கொள்கைக்கு இடம் இன்றி தலைவரின் புகைப்படங்கள் விளம்பரங்கள் ஆக்கிரமிக்கிறது. விமர்சனக் கண்ணோட்டம் இல்லாத, விவாதமற்ற, துதிபாடுகிற அரசியலுக்கு வழிவகுக்கும். இதன் மூலமான திசை திருப்பல் ஏற்பாடுகள், ஜனநாயகத்தைக் கீழ்நோக்கி தள்ளும் அபாயம் இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறது.
இத்தகைய விளம்பரப் பலகைகளை அமைப்பவர்கள், தங்கள் பெயரையும் சேர்த்துக் கொள்கிறார்கள். பல இடங்களில், பல்வேறு சமூக விரோத செயல்களைச் செய்பவர்களும் இடம் பெறுவதைக் கண்ணுற முடிகிறது. இத்தகைய நபர்களின் விளம்பர நோக்கம், தலைவரின் வீட்டு விழாவிற்கானதாக மட்டும் இருப்பதில்லை. கூடவே, தான் இந்த தலைவருக்கு வேண்டியவர் என்பதையும், காவல் துறை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு, சுட்டிக் காட்டும் உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது. இத்தகைய தனிநபர் கொண்டாட்டங்களில், சமூக விரோதிகளில் பலர் தங்களைக் காத்துக் கொள்கிறார்கள், என்பதை, சம்மந்தப் பட்ட தலைவர்களும், அப்பாவி பொது மக்களும் உணர வேண்டும். இதனோடு வரி கட்டப்படாத கருப்புப் பணம் மற்றும் ஊழல் பணம் போன்றவை புழக்கத்திற்கு வருவதன் காரணமாக, மக்களுக்கான பணம் இப்படி வாரி இரைக்கப்படுவதைக் கவலையுடன் பார்க்க வேண்டியுள்ளது.
பிறந்த தினங்களை அல்லது தங்கள் வீட்டு விழாக்களை கொண்டாடக் கூடாது என அராஜகமான வாதத்தை முன்வைக்க விரும்பவில்லை. அது தனி மனித உரிமை. மூத்த அரசியல் தலைவர்களுக்கு எதிர்க் கட்சித் தலைவரும் கூட வாழ்த்துச் சொல்லும் மாண்பு வளர வேண்டும். அது பத்திரிக்கைச் செய்தியாக உருப்பெற வேண்டும். அந்த அளவிலான நிகழ்வுகள் சமூகத்தை பண்படுத்தும். ஆனால் ஒரு நாட்டில், 20 ரூபாய் மட்டுமே செலவிடும் நிலையில் 83.4 சதமான மக்கள் உள்ள நிலையில், அத்தகைய உழைப்பாளி மக்களை, தலைவரின் வீட்டு விஷேசத்திற்காக சுவரெழுத்து உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்துவது, மனிதகுலம் போதுமான நாகரீக வளர்ச்சியடையாத, பின்தங்கிய சமூகத்தின் பண்பாடு இல்லையா?. எனவே சமூகம் தொடர்ந்து வளர்ச்சி பெற, இது போன்ற சின்ன சின்ன நிகழ்வுகள் குறுக்கீடாக அமைகிறதோ, என்ற ஐயப்பாட்டில் இருந்தே இந்த விவாதத்தை முன் வைக்க வேண்டியுள்ளது. மக்களை அவர்களின் உரிமை குறித்த சிந்தனைக்குத் தூண்டுவதில், தலைவர்களுக்குப் பங்கு இருக்கிறது, என்கிற ஆதங்கத்தில் இருந்தே இந்த விவாதத்தை தூண்ட வேண்டியுள்ளது. இத்தகைய விவாதங்களில் உலக மற்றும் தமிழக முற்போக்கு இயக்கங்களுக்குப் பங்கு இருக்கிறது.
ஒரு சிலர் இது போன்ற கொண்டாட்டங்களின் போது, இலவசத் திருமணங்கள், அன்னதானம் ஆகிய நற்பணிகள் நடைபெறுவதைக் குறிப்பிடுகின்றனர். தமிழகத்தில், நிறைய கொண்டாட்டங்கள அரங்கேறுவதால், இலவசங்களில் மக்கள் வாழ்ந்து விடலாம், என்று கருதினால், சுயமரியாதை இயக்கம் வளர்ந்த தமிழ்நாடு, என வரலாறு கற்பிப்பதில் பொருளில்லை. மகாபாரதக் கதையில், பாண்டவர்களின் தலைவன் தருமனுக்கு ஏழு உலகத்தையும் சுற்றிக்காட்ட, கிருஷ்ணன் தன்னோடு அழைத்துக் கொண்டு சென்றாராம். ஒரு உலகத்தில், யாரும் யாருக்கும் தருமம் செய்யாத தன்மையும், மக்கள் எங்குமே கையேந்தாத நிலையும், இருப்பதையும் தர்மன் கண்டுள்ளார். இவ்வூரில், தருமம் செய்வோரே இல்லையே. இவ்வூரின் மன்னனும், தர்ம காரியங்களில் ஈடுபடவில்லையே, என கிருஷ்ணனிடம், தருமன் கேட்டதாகவும், அதற்கு கிருஷ்ணன், இவ்வூரில் யாருக்கும் தர்மம் தேவைப்படாத நிலையை மன்னன் ஏற்படுத்தியுள்ளான், என்று புரிந்து கொள்ளச் சொல்லி, விளக்கம் அளித்ததாகவும், பள்ளி ஆசிரியர் நீதிபோதனை வகுப்பில் குறிப்பிட்டதை, மறுவாசிப்பு செய்ய வேண்டியுள்ளது. ஆம் மக்களை யாசகராக வைத்திருப்பதை விடவும், யாசகர் இல்லாத ஆட்சியை உருவாக்குவது, சாலச் சிறந்தது. நற்பணிகள் என்பது சமூக அக்கறையை வெளிப்படுத்தும் விதத்தில், அனைவரும் இணைந்து, செய்வது. நமது நாட்டில் ஒருவர் கொடுப்பதையும், மற்றொருவர், யாசகம் செய்வதையும், நற்பணி என சுருக்கிக் கொள்ளக் கூடாது.
தினமணியின் தலைப்புச் செய்தியில், ஒருமுறை கல்பாக்கம் அணுபுறத்தைச் சார்ந்த தம்பதியினர் இடம் பிடித்தனர். தொடர்ந்து 25 ஆண்டுகளாக இலவச டியூசன் கற்றுக் கொடுத்து வந்தனர் என்பதே செய்திக்கு அடிப்படை. அந்த செய்திக்கு முன் அந்த தம்பதிகளுக்கு, வேறு எந்த வகையிலான விளம்பரங்களும் ஏற்பாடு செய்யப் பட்டதில்லை. அது போல் ஓசையின்றி பிறருக்கு உதவுவதே சிறந்த பண்பாடாகக் கொள்ள முடியும். ஒரு கை தருவதை இன்னொரு கை அறியக் கூடாது என்ற பழமொழி, இத்தகைய பொருளில் தான் சொல்லப் பட்டிருக்க வேண்டும். ஆனால் செய்யும் தவறுகளைப் பிறர் அறிந்து விடக் கூடாது என்ற பொருளில் தான், இப்போது விளக்கங்களைக் கேட்க முடிகிறது.
இவை அனைத்தும் தனிநபர்களை மட்டும் பாதுகாக்கும் கொள்கைத் திணிப்பன்றி வேறில்லை. தனிமனித உரிமையைப் பாதுகாப்பதற்கும், தனிநபர்களைப் பாதுகாப்பதற்குமான வேறுபாட்டைப் புரிந்து கொள்ளாததன் விளைவே இத்தகைய சமூக பிறழ்வுக்கான காரணமாகும். எனவே கொண்டாட்டங்கள், பிறந்த தினமாக இருந்தாலும், வேறு நிகழ்வுகளாக இருந்தாலும், அதைப் பொது வெளிக்கு கொணர்ந்து மக்கள் உணர்வுகளை, மழுங்கச் செய்வதைத் தவிர்க்க முன்வர வேண்டும். நம் தேசத்தில் விவாதிக்க நிறைய கருத்துக்களும், கொள்கைகளும் இருக்கிறது. அவற்றைத் திசை திருப்ப வேண்டாம் என்பதே வேண்டுகோள்..
நன்றி தினமணி 03.01.2011