மகளிர் சிந்தனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மகளிர் சிந்தனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 16 ஆகஸ்ட், 2014


காந்தி – பகத்சிங் ஆகியோரிடம் இருந்து!!!

அஹிம்சையை வலியுறுத்திய மகாத்மா காந்தியும், சமூக மாற்றத்துடன் கூடிய மக்கள் விடுதலைக்குத் தேவையான போராட்ட வடிவங்களை கைக்கொள்ள முயன்ற, மாவீரன் பகத்சிங்கும் மத சார்பின்மைக் கொள்கையில் ஒற்றுமையைக் கொண்டிருந்தனர். மதசார்பின்மை கொள்கை விடுதலை இந்தியாவில் அமலாக வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருந்தனர். அனைத்து மக்களும் பயன்பெறும் சமூக புரட்சியானாலும், கிராம சுயராஜ்யம் என்ற சீர்திருத்தமானாலும் அமலாக வேண்டுமானால் அதற்கு மதசார்பின்மை என்ற அரசு கொள்கை அவசியம் என்பதே மேற்படி தலைவர்களான காந்தி மற்றும் பகத் சிங் ஆகியோரின் அணுகுமுறையாகும்.

காந்தியும், பகத்சிங்கும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடம் இருந்து இந்தியா விடுதலை பெற வேண்டும் என்பதற்காக தங்களை அற்பணித்துக் கொண்டவர்கள். அகிம்சையோ, கலகமோ இரண்டு வடிவங்களும் விடுதலை என்னும் ஒற்றை இலக்கை முன்னிறுத்தியே நிகழ்த்தப் பட்டது. ஆனால் வகுப்புவாதிகள் குறிப்பாக இந்த்துத்துவா என்ற கோட்பாட்டை முன்னுறுத்தியவர்கள் மேற்படி விடுதலைப் போரை வேடிக்கை பார்த்தவர்கள். மக்கள் ஒன்று பட்டு நிகழ்த்தும் போராட்டங்களை ஏகாதிபத்தியத்திடம்  காட்டிக் கொடுத்தவர்கள். சவார்க்கார் முதல் வாஜ்பாய் வரையிலும் தலைமை தாங்கியவர்களின் கொள்கை தான் வேடிக்கை பார்ப்பதும், காட்டிக் கொடுப்பதும் ஆகும். சவர்க்கார் எழுதிக் கொடுத்த மண்ணிப்புக் கடிதமும், வாஜ்பாய் ஆக்ரா கோர்ட்டில் அளித்த சாட்சியமும் வரலாற்றில் மண்ணிக்க கூடாத ஒன்று.

விடுதலைப் போரிலும் இந்தியா என்ற நாடு உருவாக்கத்திலும் முக்கியப் பங்கு வகித்த வல்லபாய் பட்டேலுக்கு சிலை வைப்பது, விடுதலைப் போராட்ட வீரர் ஒருவரை மதிப்பதன் நோக்கம் கொண்டது அல்லவா? என கேள்வி கேட்கலாம். ஒருகாலத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்ய வேண்டிய அவசியத்திற்குத் தள்ளப் பட்ட வல்லபாய் பட்டேலுக்கு சிலை வைப்பது அரசியல் நோக்கம் கொண்டது. ஆர்.எஸ்.எஸ் முன்னிறுத்தி உள்ள மோடி இந்த வேலையைச் செய்வது கூடுதலான உள்நோக்கம் கொண்டது. ஒரு சில எதிர் கேள்விகளை எழுப்புவதன் மூலம் இந்த உள்நோக்கத்தைப் புரிந்து கொள்ள முடியும். ஒன்று 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சியில் உள்ள மோடி ஏன் காந்திக்கு இது போன்ற சிலை அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபடவில்லை? இரண்டு குஜராத்தின் பல்வேறு தேவைகளுக்கு செலவிடத் தயங்கும் அரசு ஏன் வல்லபாய் படேல் சிலைக்கு இத்தனை கோடிகளை செலவிட வேண்டும்?.

இது போன்ற கேள்விகள் மூலம் மோடி நாட்டின் நலனை பின்னுக்குத் தள்ளி சில அடையாளங்களை முன்வைத்து மக்களைத் திசை திருப்புகிறார். அதற்கு பாஜக கட்சியின் அனைத்துப் பரிவாரங்களும் ஒத்து ஊதுகின்றன, என்பதைப் புரிந்து கொள்ள முடியும். காந்தி விடுதலை இந்தியாவின் முதல் பிரதமர் பொறுப்பிற்கு பட்டேலை நிராகரித்து நேருவை, முன்னிறுத்தினார், என்ற கருத்தை ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் ஆதரவு நிறுவனங்கள் விஷமப் பிரச்சாரம் செய்து வருகின்றன. இந்த சூழ்நிலையில் அன்று நிராகரிக்கப் பட்ட பட்டேலுக்கு தாங்கள் நியாயம் வழங்குகிறோம் என்பதே ஆர்.எஸ்.எஸ் அரசியல். உண்மையில் பட்டேலைப் புரிந்து கொண்டவர்களும், காந்தியும் பட்டேலினுடைய பழமைவாத கண்ணோட்டத்தை நிராகரித்தார்கள். முக்கியமாக நேருவின் பார்வை விசாலமானது வளர்ச்சி குறித்தது, எனவே விடுதலை இந்தியாவின் வளர்ச்சிக்குப் பயனளிக்கும் என எதிர்பார்த்தார்கள். இந்தியாவின் அன்றைய முதலாளிகளும், காந்தி மற்றும் அன்றைய காங்கிரஸ் தலைவர்களும் ஒரே மாதிரியான கருத்துக்களைக் கொண்டிருந்தார்கள். எனவே தான் நேரு பிரதமர் பொறுப்பிற்கு தேர்வு செய்யப் பட்டார்.

அன்று நாடு விடுதலை பெற்ற சூழலில் தொடர்ந்து வகுப்புக் கலவரம் அல்லது பிரிவினை உணர்வுகள் மேலோங்கி இருந்தால் இந்திய அரசு முன் வைத்த கலப்புப் பொருளாதாரம் வெற்றி பெற்று இருக்காது. இந்தியாவின் முதலாளித்துவ வளர்ச்சிக்குத் தேவையான கட்டமைப்பை உருவாக்க முடியாமல் போயிருக்கும். இப்போது அரசு கட்டமைப்பை தனியார் கபளிகரம் செய்யும் கொள்கைகளை இந்திய ஆளும் வர்க்கம் பின்பற்றுகிறது. இன்றைய நிலையில் காந்தியே நேரில் வந்து எந்த ஒரு காங்கிரஸ் தலைவரை ஆதரித்தாலும், இந்திய பெரும் முதலாளித்துவம் ஏற்றுக் கொள்ளாது. மாறாக அரசு மற்றும் கட்டமைப்பு வசதிகளை ஆக்கிரமிக்க மக்கள் ஒற்றுமை சீர்குழைய வேண்டும் என்பதே முதலாளித்துவ விருப்பமாகும்.

இந்தப் பின்னணியில் தான், பிழைப்பிற்கு வழியின்றி, கற்பப்பையை வாடகைக்கு (இது தேவையா இல்லையா என்பது தனி விவாதம்) விற்று பிழைப்பு நடத்தும் வாடகைத் தாய்கள் அதிகம் உள்ள குஜராத் மாநிலம், வளர்ச்சியடைந்த மாநிலம் என முன்னிறுத்தப் படுகிறது. இவ்வளவு வறுமைக்குக் காரணமான மோடி வளர்ச்சிக்கான குறியீடாக சொல்லப்படுகிறார். இவை அனைத்தும் இன்றைய முதலாளித்துவத்தின் திட்டமிட்ட ஏற்பாடு. இந்திய அரசியலில் உருவாக்கப் படும் இத்தகைய திட்டமிட்ட சதி முறியடிக்கப் பட வேண்டுமானால் காந்தி சொன்ன மத சார்பின்மையும், காந்தியை குறிப்பிட்ட பொருளாதார கொள்கைகளை விட வலுவான மாற்றுப் பொருளாதாரக் கொள்கையும் இன்று தேவைப் படுகிறது.

அத்தகைய சிந்தனை பகத்சிங்கிடம் இருந்தது. இன்றைக்கும் முற்போக்கு சிந்தனைகளுக்கும் சமூகம் குறித்த கனவுகளுக்கும் முன்னுதாரணமாக விளங்கும் விடுதலைப் போராட்ட வீரர் பகத்சிங் ஆவார். பகத் சிங்கினை வன்முறை வாதி என முத்திரை குத்துவதில், இந்திய ஆளும் வர்க்கம் பிரிட்டிஷாருடன் சேர்ந்து பிரச்சாரம் செய்தனர். 10 ம் வகுப்பு மட்டுமே படித்த, 4 மொழிகளில் பேச, எழுதத் தெரிந்த, அரசியல் அதன் எதிர் காலம், மாற்று சமூகம் குறித்த விளக்கம் ஆகியவற்றை பல நாடுகளின் அனுபங்களுடன் முன் வைத்து 20 வயதிலேயே விவாதித்த இளைஞர் தான் பகத்சிங். பிரிட்டிஷாரிடம் இருந்து விடுதலை பெறும் இந்தியா அரசியல் விடுதலை பெற்றால் மட்டும் போதாது, பொருளாதார மற்றும் சமூக விடுதலையைப் பெற வேண்டும், என பிரச்சாரம் செய்தார். மாபெரும் அறிவுஜீவியை தீவிரவாதி என்றது அப்பட்டமான அவதூறு. எனவே அவர் குறித்து காங்கிரஸ் தலைமை மற்றும் பிரிட்டிஷ் ஆட்சியினர் ஒரு சேர மதிப்பீடு செய்து அவதூறு செய்ததில் வியப்பில்லை.

குறிப்பாக இளம் அரசியல் ஊழியர்களுக்கு எனும் தலைப்பில், தன்னுடைய வாழ்நாளின் இறுதி நாள்களில் பகத்சிங் எழுதிய கடிதம் இன்றும் பொருத்தமாகவே இருக்கிறது. “குஜராத் அஹமதாபாத்தில் நடைபெற்ற தொழிலாளர் போராட்டத்தைத் தொடர்ந்து, காந்தி, பின்வருமாறு குறிப்பிட்டார், “நாம் தொழிலாளர்களை ஒருபோதும் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுத்தக் கூடாது. ஆலைத் தொழிலாளர்களை அரசியல் ரீதியாகப் பயன் படுத்துவது அபாயகரமானது”, என்றார். இது 1921 மே டைம்ஸ் இதழில் பிரசுரிக்கப் பட்டு இருந்தது. அதேபோல் விவசாயிகள் குஜராத் மாநிலம் பர்தோலியில் விவசாயிகள் பேரெழுச்சி உருவான போது இத்தலைவர்கள் பீதி அடைந்தனர். 1922 ம் ஆண்டு பர்தோலியில் நிறைவேற்றப் பட்ட காங்கிரஸ் மகாசபை தீர்மாணம் பிரிட்டிஷாரிடம் சரனடையத் தூண்டியது” என காந்தியையும் அவருடைய தலைமையில் செயல் பட்ட காங்கிரஸையும் பகத் செய்த விமர்சனம் இப்போதும் பொருத்தமாகவே இருக்கிறது.

அதேபோல் தான் மக்களின் மதநம்பிக்கை அடிப்படையாகக் கொண்டு அரசியல் செய்தோரையும் விமர்சிக்கிறார். அதில் இந்து, இஸ்லாம், கிருத்தவம் என்ற வேறுபாடுகள் இல்லை. எல்லோரிடமும் முன்னேற்றத்திற்கு தடையாக, மனித நம்பிக்கைகளை முன்வைத்து செய்கிற அரசியல், மனித குல வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் என்கிறார். இந்த அணுகுமுறை மிகச் சிறந்த மதசார்பின்மைக் கொள்கையாகப் பார்க்கபடவேண்டும். இன்றைக்கு இந்துத்துவா அமைப்புகள் முன் வைக்கும் வளர்ச்சி குறித்த பார்வை மேற்படி அடிப்படை வாதம் சார்ந்ததே. வறுமையில் தவிக்கும் மக்களிடம் அடிப்படைவாதம் பிரச்சராரம் செய்யப் படுகிறது. வாடகைத் தாய் தொழில் குஜராத் மாநிலத்தில் அதிகரித்து வருகிறது. அதற்காக வெறுமனே 50 ஆயிரம் ரூபாய் சன்மானம் என்பது, மிகக் கொடிய சுரண்டல் சார்ந்தது. வறுமையை மனிதனின் முன் ஜென்ம பாவம் சார்ந்த செயலாகக் கருதத் தூண்டுவது இந்த அடிப்படைவாதத்திற்குள் அடங்கி இருக்கிறது. அது ஒரு சமூகக் கொடுமை என்ற சிந்தனையில் எதிர் கொள்வதே உண்மையான விடுதலைக்கு வழிவகுக்கும், என பகத்சிங் வாதிடுகிறார்.


எனவே இன்றைய தேவை முதல் கட்டமாக மத சார்பின்மை. அடுத்து முழுமையான மனித குலத்திற்கான விடுதலை. அதற்கான பொருளாதாரக் கொள்கைகள் உருவாக்கப் பட வேண்டும். அதை நோக்கி பயனிப்பதே இந்திய மக்களுக்கு ஜனநாயக அமைப்புகள் செய்யும் கடமையாகும். இதை செய்யத் தடையாக உள்ள வகுப்பு வாதத்தை, இந்துத்துவாவை, அது முன்நிறுத்தும் கொள்கைகளை எதிர்ப்பதும், மக்களை அதற்கு எதிராக ஒன்று திரட்டுவதும் அவசியம். அதுவே பகத்சிங் போன்ற தியாகிகளுக்கு செலுத்தும் உண்மையான வீரவணக்கமாகவும் இருக்கும்.   

வாக்களிப்பது ஏன்? யாருக்கு?

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் நிலையில், கடந்த கால நாடாளுமன்ற செயல்பாடுகள் மற்றும் கட்சிகளின் பங்களிப்பைத் தெரிந்து கொள்ள வேண்டி உள்ளது. உலகில் மிகப் பெரிய மக்கள் தொகை ஜனநாயக முறைப்படி, பல கட்சிகளில் இருந்து தேர்ந்தெடுத்து அனுப்புகிற உறுப்பினர்களின் செயல்பாடு அறிந்து கொள்ளப் பட வேண்டியுள்ளது. ஏராளமான இளம் உறுப்பினர்கள் தேர்வு செய்யப் பட்டனர். ஆனால் என்ன செய்தார்கள் என்ற கேள்விகள் நம்மை அரித்துக் கொண்டே இருக்கிறது. மிளகுப் பொடி ஸ்பிரே மாபெரும் செய்தியாக உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது. ஏராளமான மசோதாக்கள் நிறைவேற்றப் படாமல் கிடப்பில் போடப் பட்டுள்ளன. விலைவாசி உயர்வை விட, தங்கள் மக்கள் பிரச்சனைகளை விட, திசை திருப்பும் அரசியலில் தான் அதிக கவணம் செலுத்தியுள்ளனர், போன்ற விவரங்கள், நம்மை மேலும் சித்தித்து செயல் படுத்துவதாக அமையும்.

பேசாத உறுப்பினர்கள்:

எங்கள் உறுப்பினர் என்ன பேசினார் என்பதை பொது மக்கள் விவாதிப்பதில்லை. ஓட்டு கேட்டு வரும் வேட்பாளர்களை மக்கள் ஊருக்குள் விடவில்லை என்பது செய்தி. ஆனால் எதற்காக அனுமதி மறுக்கப் பட்டனர், என்பதில் இருந்தே விவாதம் தேவை. 15வது நாடாளுமன்றத்தில் 60 எம்.பிக்கள் மக்களவையிலும், 35 எம்.பிக்கள் மாநிலங்களவையிலும் கடந்த 5 வருடங்களில், எந்த ஒரு விவாதத்திலும் பங்கேற்க வில்லை. ஒருவேளை அவர்களின் கட்சிகள் அவர்களுக்கு வாய்ப்பு தராமல் இருந்திருக்கலாம். ஆனாலும் தொகுதி பிரச்சனை குறித்த கேள்விகள் மூலம், வேறு விதமான தலையீடுகள் மூலம் கேள்வி எழுப்பி இருக்கலாம். 
ஏன் செய்யவில்லை? என்ற கேள்வியை பி.ஆர்.எஸ் என்ற ஆய்வு நிறுவனம் கேள்வி எழுப்பி உள்ளது.

10 சீனியர் உறுப்பினர்கள் உதடுகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டு உடகார்ந்துள்ளனர். எப்போதாவது பேசுவது என்ற பங்களிப்பை செய்துள்ளனர். அவர்களின் பெயர்களைப் பார்க்கிற போது, தங்களின் அந்தஸ்திற்கு இவ்வளவு பேசினால் போது என்ற முடிவெடுத்ததாக புரிந்து கொள்ள முடியும்.  ராகுல் காந்தி தொகுதி வளர்ச்சி குறித்து ஒரு கேள்வி கூட க்கட்டதில்லை. ஆனால் எப்போதாவது பேசி உள்ளார். சோனியா காந்தி சில வாழ்த்துக்களைப் தெரிவிக்கும் நேரங்களில் மட்டும் பேசியதுண்டு, 2004ல் தேசீய கிராமப் புற வேலை உறுதி சட்டம் உருவாக்கப் பட்டபோது பேசியிருக்கிறார். அதன் பின் அவருடைய பங்களிப்பு மசோதாக்கள் சார்ந்தோ, பிரச்சனைகள் சார்ந்தோ இருந்ததில்லை. எல்.கே அத்வானி மூத்த உறுப்பினர், இவரும் எப்போதாவது தான் பேசுவார். அவருடைய அனுபவத்திற்கான பிரதிபலிப்பு நாடாளுமன்றத்தில் இருந்ததில்லை, என்பதை பி.ஆர்.எஸ் ஆய்வு மையம் குறிப்பிடுகிறது.

நிறைவேற்றப் பட்ட மசோதாக்கள்:

நாடாளுமன்றம் பல மசோதாக்களை முன்மொழிந்து சட்டமாக்கும் பணியை செய்யும் அமைப்பு. 15வது நாடாளுமன்றம், 165 மசோதாக்கலைத் தாக்கல் செய்துள்ளது. இதில் 126 நிலுவையில் உள்ளது. தோட்டத்தில் பாதி கிணறு என்பது போல். இதில் 72 மக்களவையில் நிலுவையில் உள்ளது. காலம் முடிந்ததால் இனி பயனில்லை. 72க்கும் மரணமே கதி. மாநிலங்களவையில் 54 நிலுவையில் உள்ளது. மகளிருக்கு நாடாளுமன்றம் சட்டமன்றங்களில் 33 சத இடஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் மட்டுமே நிறைவேறியது.

தனியாருக்குத் தாரைவார்க்கும் மசோதாக்கள் விரைந்து அமலாகி உள்ளன. உதாரணத்திற்கு சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு, வங்கித்துறை, காப்பீட்டுத் துறைகளில் தனியார் பங்குகள் சதவீதம் உயர்வு. போன்றவை குறிப்பிடத்தக்கவை. 14வது மக்களவையில் இடது சாரிகள் வலுவான எண்ணிக்கையில் 64 ஆக இருந்த போது மேற்படி மசோதக்கள் சபைக்கு வரும் துணிச்சல் கொண்டிருக்கவில்லை. ஆனால் அதே இடதுசாரிகள் ஆதரவு வாபஸ் பெறப்பட்ட போது, எண்ணெய் விலையை, எண்ணெய் நிறுவனங்களே தீர்மாணித்துக் கொள்ளலாம் என்ற முடிவை, விலைக்கு வாங்கிய உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றினர். 1987 முதல் 27 வருடங்களாக இந்திய மருத்துவக் கவுன்சில் குறித்த மசோதா நிலுவையில் இருக்கிறது. இதுபற்றி அரசுகளுக்கும், உறுப்பினர்களுக்கும் கவலை இல்லை. மேலே குறீப்பிட்ட மசோதாக்கள் நிறைவேற்றம் என்பது ஆளும் வர்க்க நலனில் இருந்து பிரதிபலித்து இருப்பதை நன்கு உணர முடியும்.

கோடீஸ்வர உறுப்பினர்கள்:

இந்திய நாடாளுமன்றத்தில் 300க்கும் அதிகமான உறுப்பினர்கள் கோடீஸ்வரர்களாக உள்ளனர். இவர்களில், 180 நபர்கள் பில்லியனர்ஸ் என்ற அழைக்கப் படுகிற மகா கோடீஸ்வரர்கள். உ.பி இந்தியாவின் மிக வறுமையான மாநிலமாக கருதப் படுகிறது. ஆனால் அங்கிருந்து 52 கோடீஸ்வரர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். மகராஷ்ட்ராவில் இருந்து 37 நபர்கள் தேர்வாகியுள்ளனர். தமிழகத்தில் இருந்தும் திமுக உறுப்பினர்கள் கோடீஸ்வரர்களாக இடம் பெற்று உள்ளனர். காங்கிரஸ் கட்சியில் 138 கோடீஸ்வரர்களும், பாஜகவில் 58 கோடீஸ்வரர்களும் பகுஜன் சமாஜ் கட்சியில் 13, சமாஜ்வாடி 14 என்ற தன்மையில் கோடீஸ்வரர்களுக்கான வாய்ப்புகளை வழங்கியுள்ளன. சமீபத்தில் தேர்வு செய்யப் பட்ட 55 மாநிலங்களவை உறுப்பினர்களில் 38 நபர்கள் கோடீஸ்வரர்கள் என்பது கூடுதச் செய்தி.

இத்தகைய உறுப்பினர்கள் ஒருபோது மக்கள் பிரச்சனைகளைகளைப் பற்றிக் கவலைப் படுவதில்லை. 14வது மக்களவையில் 2010 இறுதியில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது, கூட்டம் நடத்த முடியாத் சூழலில் 95 கோடி இழப்பு ஏற்பட்டது. 15 நாள்கள் கூட்டம் 10 நிமிடங்களுக்கு மேல் நடந்ததில்லை. 1.76 லட்சம் கோடி ஊழல் குற்றச்சாட்டு குறித்த பிரச்சனையில் அமைச்சர் ராஜா ராஜினாமா செய்த பின்னர் தான் ஓய்ந்தது. இதை அமைச்சரவை முன்னதாகவே முடிவெடுத்து இருக்க முடியும். ஆனால் கூட்டணிக் கட்சிகளின் தயவிற்காக நடைபெறவில்லை. மக்கள் பணம் வீனானது. பல லட்சம் கோடிகளுக்கு பெரு முதலாளிகளுக்கு வரி சலுகை அளிக்கும் ஆட்சியாளர்களுக்கு இந்த தொகை வீணாவது குறித்து எப்போது கவலை உருவாகப் போவதில்லை.

தெலுங்கானா பிரச்சனை குறித்து 2011, 2012, 2013, 2014 என பல கட்டங்களில் ஒரு நாளைக்கு 2 கோடி வீதம் 40க்கும் மேற்பட்ட நாட்கள் வீணடிக்கப் பட்டது. ஆனால் மக்கள் பிரச்சனை குறித்து பேசுவதில் இத்தகைய வீரம் வெளிப்பட வில்லை. அரசு தன்னுடைய உறுதியை வெளிப்படுத்தியதில்லை. உதாரணத்திற்கு மகளிர் இட ஒதுக்கீடு மசோதா எதிர்ப்பின் காரணமாக நிறுத்தப் பட்டதாகக் கூறப் படுகிறது. தெலுங்கானா மசோதாவின் போது மிளகுப் பொடி ஸ்பிரே செய்யும் அளவிற்கு எதிர்ப்பும், தரம் தாழ்ந்த அணுகுமுறையும் இருந்தாலும் காங்கிரஸ் அரசினால் மசோதாவைத் தாக்கல் செய்து சட்டமாக்க முடிந்தது. இந்த ஆளும் கட்சி உறுதியை ஏன் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் வெளிப்படுத்த முடியவில்லை. மகளிருக்கு இட ஒதுக்கீடு கூடாது என்பது ஒட்டு மொத்த ஆளும் வர்க்க சிந்தனையின் வெளிப்பாடே.

இடதுசாரிகளுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்:

இப்போது உள்ள காங்கிரஸ் கூட்டணிக்கு மாற்று பாஜக கூட்டணி இருக்க முடியாது. 14 மற்றும் 15 ஆவது மக்களவைகளை எப்படி சரியாகக் காங்கிரஸ் பயன்படுத்தத் தவறியதோ அதே போல் 12 மற்றும் 13 வது மக்களவைகளை வீணடித்தது. குறிப்பாக 12 வது மக்களவையில் வெறும் 52 மசோதாக்கள் மாட்டுமே தாக்கல் செய்யப்பட்டன. அந்த அளவிற்கு வாஜ்பாய் தன் கூட்டணி கட்சிகளைத் தாஜா செய்து கொண்டிருந்தார். மேலும் பாஜகவின் கவணம் நாட்டை வகுப்புவாதமயமாக்குவது என்பதில் தான் இருந்தது. 13வது மக்களவையில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தபோது, குஜராத் கலவரம், ஒடிசாவில், பாதிரியார் மற்றும் குழந்தைகள் எரிக்கப்பட்டது. குஜராத்தில் தேவாலயங்கள் எரிக்கப்பட்டது. மத்தியப் பிரதெசத்தில் கன்னியாஸ்திரிகள், பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகியது. ஆகிய நிகழ்வுகள் ஏராளமான உதாரணங்கள் ஆகும்.

இந்தக் கலவரங்களுக்கு மத்தியில் தான் ஸ்பெக்ட்ரம் ஊழல் துவக்கவும் நிலக்கரி தனியாருக்கு ஏலம் விடும் சட்டமும் அமைதியாக நிறைவேறியது. எனவே கொள்கை அளவில் பாஜக கூட்டணியோ அல்லது தனி ஆட்சியோ மாற்று மட்டுமல்ல ஆபத்தானதும் கூட. காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு அணிகளையும் தோற்கடிப்பது தான், இன்று பிரதானக் கடமையாக இருக்க முடியும்.

அத்தகைய பொருத்தமான மாற்றாக இடது மற்றும் ஜனநாயக சக்திகளைத் தேர்வு செய்ய முடியும். ஒன்று நாடாளுமன்றத்தில், மகளிர் இட ஒதுக்கீடு நிறைவேற்றத்திற்காகத் தொடர் போராட்டத்தை நடத்துபவர்கள். இரண்டு, விலைவாசி உயர்வு மற்றும் பெட்ரோ டீசல் விலை நிர்ணயம் செய்யும் உரிமை மத்திய அரசின் கட்டுபாட்டிற்கு மீண்டும் கொண்டுவருவதற்காக முயற்சிப்பவர்கள். இந்திய நாடாளுமன்றப் பணிகளில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்ட பின்னரும், யாதொரு இடது சாரி உறுப்பினரும் ஊழல் குற்றச் சாட்டிற்கோ, சொத்து சேர்த்த குற்றச்சாட்டிற்கோ ஆளானதில்லை. இந்திய மக்களின் பொதுச் சொத்துக்களான, பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாப்பது, வேலை வாய்ப்பை உருவாக்குவது, கல்வி மற்றும் ஆரோக்கியம் குறித்த உரிமைகளைப் பாதுகாப்பது போன்ற நடவடிக்கைகளில், இடது சாரிகளே ஈடுபட முடியும். எனவே இடது சாரிகளுக்கு வாக்களிப்பதே சாலப் பொருத்தம்.   


வண்ணமும், வெளுப்பும் சுரண்டலைத் தடுப்பதில்லை!!!

விமலா என்ற பெயர் பெண்களுக்கு வைக்கப் பட்டு இருந்தால், அது கம்யூனிஸ்ட் குடும்பம் என்பதும் ஒரு காரணம் என்பதை அறியலாம். விமலா ரணதிவே என்ற தலைவரை நினைவு கூறும் விதமாக வைக்கப் பட்ட பெயராக இருக்கும். விமலா ரணதிவே, கம்யூனிஸ்ட் தலைவர், தொழிற் சங்கத் தலைவர் மற்றும் மாதர் இயக்கத் தலைவர், என்ற பொறுப்புக்களைத் திறம்பட நிர்வகித்தவர். மும்பையில் வாழ்க்கையைத் துவக்கி, இந்தியா முழுவதும் பயணித்து பெண்களைத் திரட்டும் காந்தமாக விளங்கியவர். திரட்டப் பட்டவர்களை சரியாக ஆற்றல் படுத்துவதில் ஆர்வம் கொண்டிருந்தவர்.

கருத்தாக்கங்களை உடைப்பதில்:
உழைக்கும் பெண்கள் அனுபவித்த வேலைப் பளு, பணி நேரம் ஆகியவற்றிற்கு எதிராக, தங்களை ஓரணியில் திரட்டிய போராட்ட வரலாற்றை பெருமை வாய்ந்த, சர்வதேசப் பெண்கள் தினம் என இன்று கொண்டாடுகிறோம். ஆனால் வீட்டோடு மணைவி என  குறிப்பிடப் படுகிறோம். இன்று வீட்டு வேலை செய்யும் பெண்களும் சில இடங்களில் அணி திரட்டப் பட்டு வந்தாலும் வீட்டோடு மணைவி என்ற கருத்தாக்கத்தில் மாற்றம் இல்லை. இத்தகைய கருத்தாக்கங்களைக் கழைவதற்கான போராட்ட களத்தில் முன்னின்றவர், விமலா ரணதிவே. பொதுவாக கம்யூனிஸ்ட் பெண்கள் தான் இத்தகைய மாற்றத்திற்கு எதிரான அணிவகுப்பை முன்வைத்தார்கள், என்ற வரலாற்றையும் அறிந்து வைப்பதும், அதை அடுத்த தலைமுறைகளுக்கு சொல்வதும் அவசியம்.

கணவர் மணைவி என்ற இரண்டு பேரும் சமூகப் பணியில் ஈடுபட்ட பெருமை கம்யூனிஸ்ட் கட்சியில் பல தம்பதியினருக்கு உண்டு. அதுவும் முழு நேரமாக என்பது கூடுதல் குடும்ப சுமை கொண்ட ஒன்று. ஆனால் அதை வெற்றிகரமாக எதிர் கொண்டு வாழ்ந்து காட்டிய தம்பதி விமலா மற்றும் ரணதிவே ஆகியோர். இன்று போல் அன்றைய சமூகம் இல்லை. மிகவும் பிற்போக்கு சிந்தனை கொண்டது. இருந்தாலும் அன்றைய கருத்தாக்கத்தை முழு நேர கம்யூனிஸ்ட் கட்சிப் பணி என்ற புதிய வேலை முறையை உருவாக்கிய வகையில், விமலா ரணதிவே கருத்தாக்கங்களை உடைப்பதில் செய்த பங்கினை, இன்று அது போல் பணிசெய்யும் கம்யூனிஸ்ட்டுகள் உணர முடியும்.

இத்தகைய பங்களிப்பைச் செய்த விமலா மறைந்த தினம் ஜுலை 24. உழைக்கும் பெண்கள் இந்த நாளை இந்தியாவில், உழைக்கும் பெண்களின் உரிமைகளை நினைவுகூறும் வகையில் அனுசரிக்கிறார்கள். 1999 ஜுலையில்  மறைந்தார். அவருடைய நினைவைப் போற்றுவது காலத்தின் தேவையாகவும் இருக்கிறது. குறிப்பாக ஆளுமை குறித்து பல கருத்தாக்கங்களை முதலாளித்துவம் திணிக்கிறது. அதற்கு சாதகமாக ஆதிக்கம் செலுத்தும் ஊடகங்கள் வளர்ந்து உள்ளன. வேலைக்குச் செல்லும் படித்த பெண்களுக்கு பல வகையில் தாழ்வு மனப்பான்மை உருவாக்கப் படுகிறது. உதாரணத்திற்கு பெண் தன்னுடைய புடவையை சலவை செய்வது குறித்து இரண்டு விளம்பரங்கள் முன் வருகின்றன. ஒன்று துணி வியாபாரம் செய்யும் பெண்ணுக்கு என்ன சலவைப் பவுடர் பயன் படுத்த தெரியாது, என்பதும், படவை பளிச் சென்று ஆன பின் தான் தன்னால் சிரித்து பேசி வியாபாரம் செய்ய முடிந்தது என்பதாகும்.

மற்றொன்று, முதல் சம்பளத்தில் அம்மாவை அழைத்துக் கொண்டு ஒரு ஹோட்டலுக்குச் செல்லும் பெண்ணை, காவலாளி முதல் முறையா என உடையைப் பார்த்து வெளியே நிறுத்துவது, உடனே அந்தப் பெண் தன்ன்னுடைய ஓவர் கோட்டை கழற்றுவது. அதேபோல் மற்றொரு விளம்பரம் ஏழே நாளில் சிவப்பணு தரும் மாற்றம் குறித்ததாகும். சிவப்பா கறுப்பா என்ன வண்ணம் என்றாலும், அழுக்கா பளிச்சா என்ன வெளுப்பாக இருந்தாலும் பெண் சுரண்டலுக்கு ஆளாகிறாள், என்பதே உண்மை. எனவே கருத்தாக்கங்களை உடைப்பது மிக அவசியம்.  

இன்றைய உழைக்கும் பெண்கள் நிலை:

அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் மட்டும் அல்ல, தனியார் நிறுவனங்களில் மற்றும் பெண்கள் தலைமையேற்று நடத்தும் குடும்பங்கள் என்று, உழைக்கும் பெண்கள் எண்ணிக்கை உயர்ந்து இருப்பதைக் காண முடியும். இது வரவேற்க வேண்டிய அம்சம். ஆனால் போராடிப் பெற்ற உரிமைகளை அனுபவிக்க முடிகிறதா? அல்லது புதிதாகப் பெற வேண்டிய உரிமைகளுக்காகப் போராட முடிகிறதா? என்ற வினாக்கள் விடைகளைக் கண்டறிவது அவசியம்.

உழைக்கும் வர்க்கத்தில் பலவீனமான பிரிவு என முதலாளித்துவம் கருதுவது, பெண் தான். அரசு, தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்ட துறைகளில் பணிபுரியும் பெண்கள் உள்ளிட்டு கூடுதல் வேலை வாங்கப் படுபவர் பெண்களாகத் தான் உள்ளனர். ஆண்களைப் போல் தனக்கான இன்றைய வேலை இவ்வளவு தான் என நிராகரிக்கும் வலிமை இல்லாததால், அதிகமான உழைப்புச் சுரண்டலுக்கு பெண் ஆளாவதைக் காண முடியும்.

தொழிற்சங்க போராட்டத்தில், வீட்டிற்கு கடிதம் எழுதி உங்கள் பெண் ஆண் தொழிலாளர்களுடன் இணைந்து போராடி வருகிறார். கூடுதல் தகவலாக சில ஆண் தொழிலாளர்களுடன் இணைந்து ஊர் சுற்றும் வேலையையும் செய்து வருகிறார், என அவதூறு பரப்பி, பெண்ணுக்கான உரிமையை அசிங்கப் படுத்தும் பன்னாட்டு நிறுவனங்களைப் பார்க்க முடிகிறது. சமீபத்திய உதாரணம் நோக்கியா, ஃபாக்ஸ்கான் இங்கு பெரும் எண்ணிக்கையில் வேலை செய்வோர் பெண்கள். ஆனால் நிறுவனம் தனக்கான லாப வேட்டை முடியும் நிலையில் விருப்ப ஓய்வு என்ற பூதத்தைக் காட்டி மிரட்டப் பட்டதும், முதலில் இந்தத் திட்டத்தை ஏற்கச் செய்யப் பட்டவரும், பெண் தான்.

விருப்ப ஓய்வுத் திட்டம் என்ற பெயரில் முதலாளித்துவம் தனது சுரண்டலைத் தீவிரப் படுத்த முயற்சிக்கிற போது, சமூகத்தின் பழமை வாதக் கண்ணோட்டத்தை பயன் படுத்திக் கொள்கிறது. நோக்கியா, திருமணம் ஆகாத பெண்களிடத்தில் பேசி ஏற்கச் செய்தது, அவர்கள் விருப்ப ஓய்வினை ஏற்றுக் கொண்டால், திருமணத்திற்கானத் தொகையை உறுதி செய்ய முடியும் என்பதே நய வஞ்சக வார்த்தைகள். இதே அனுபவம் பஞ்சாலைத் தொழிலில் இன்றளவும் நடைபெற்று வருகிறது. சுமங்கலி மற்றும் மாங்கல்யத் திட்டம் என்ற பெயரில் நடைபெறும் உழைப்புச் சுரண்டல் தடுக்கப் படவில்லை. எனவே சமூகத்தில் நீடிக்கும் வரதட்சனைக் கொடுமை, மிகப் பெரிய ஊனமாக, தொழிலாளரின் போராட்ட வரலாறு காண வேண்டும்.
ஒழிக்கப் படவேண்டிய கருத்தாக்கங்களில் இது மிக முக்கியமான ஒன்று. அதேபோல், தகவல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சேவை செய்யும் பிபிஓ மற்றும் கால் செண்டர்களில் பணிபுரியும் பெண்கள், தகவல் தொழில் நுட்பப் பொறியாளர்கள், அல்லது புதிய உற்பத்தித் துறைகளான, பன்னாட்டு நிறுவனங்களில் பணி புரியும் பெண்கள், ஆகியோர், கருத்தறித்துக் கொள்ளும் உரிமையை இழக்கின்றனர். பிரசவ விடுப்பு மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 மாதம் மாநில அரசு ஊழியர்களுக்கு 3 மாதம் என்ற உரிமை போராட்ட வரலாறு பெற்றுத் தந்தது.

மகப்பேறின் போது, மாநில அரசு, மத்திய அரசு என்ற வகையில் பெண் எந்த வகையில் வேறுபடுகிறாள் என்ற கேள்வியும், பாரபட்சமும் தனிக் கதை. இன்றைய முதலாளித்துவம் இதை அபகரிக்க தனது லாபத்தை தீவிரப் படுத்த, நிரந்தரமற்ற வேலைச் சூழலில் கூட பெண் மீது கருவுறாதே என ஆதிக்கம் செலுத்த முடிகிறது. கருவுறுவது குறித்த முடிவை முதலாளி எடுக்க முடிகிறது. இங்கு ஏற்கனவே பெண்ணின் உரிமை பறிக்கப் பட்டு உள்ளது, கூடுதலாக  குடும்ப உரிமையும் பறிக்கப் படுவதைக் காண முடியும்.

நிலப் பிரபுத்துவம் மற்றும் முதலாளித்துவ சமூக அமைப்பு சுரண்டலைத் தன் வசப் படுத்த அமைத்துக் கொண்ட வேலியாக உள்ள, சாதி, திருமணத்திற்கான வரதட்சனை ஆகிய கெட்ட பண்பாட்டுக் கூறுகள் இன்றளவும் உழைக்கும் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கத் தடையாக உள்ளது. மதுரை உயர் நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பு இதற்கு ஒரு உதாரணம். தந்தை பணியில் இருக்கும் போது இறந்து விட்டால், மகனுக்கு வாரிசு வேலை, அதே மகன் திருமணம் செய்து கொண்ட பிறகும் வாரிசு வேலை பெறும் உரிமை படைத்தவராகிறார். ஆனால் பெண் திருமணத்திற்குப் பின் வாரிசு வேலை கோரும் உரிமையை இழந்து விடுகிறார், என்பது வழக்கு. இதை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பெண் திருமணம் செய்து கொண்ட பிறகும் வாரிசு வேலை கோரும் உரிமை படைத்தவரே என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.


அதே போல் தொடர் கதையாக நீடித்து வரும் பணியிடங்களில் பாலியல் தொல்லை என்பதும் இன்று உழைக்கும் பெண்கள் அனுபவிக்கும் ஆகப் பெரிய கொடுமையாக உள்ளது. விசாகா கமிட்டி தீர்ப்பு, பணியிடங்களில் அமைக்கப் படவேண்டிய கமிட்டி அமைக்கப் படுவதும் இல்லை. அது குறித்த விழிப்புணர்வை பெண்களுக்குக் கொண்டு செல்லவும் இல்லை. இதுபோல் நீண்டு செல்லும் சுரண்டலை முடிவுக்குக் கொண்டு வருவதே, விமலா ரணதிவே போன்ற போராளிகளை நினைவு கூறும் அனுபவமாக இருக்க முடியும்.