திங்கள், 29 ஏப்ரல், 2019

On May Day


                                                   மே தினமும் இன்றைய தேவையும்.....
                                                                   எஸ். கண்ணன்


உழைக்கும் வர்க்கத்தினர் தன் உரிமைக்காக போராடிய தியாகிகளை நினைத்துப் பார்க்கவும், புதிய சவால்களை எதிர்கொள்ளும் மனநிலையையும், உறுதியையும் வளர்த்துக் கொள்ளவும் மே தினத்தை அனுஷ்டித்து வருகின்றனர். வரலாறு முழுவதும் வர்க்கப் போராட்டங்களே நிறைந்திருக்கிறது. எட்டு மணி நேரம் என்ற வேலைநேர குறைப்பிற்கான போராட்டம், முதலாளி வர்க்கத்தை ஆட்டி படைத்து என்றால் மிகை அல்ல. லாபம் குறைந்து விடுமோ என பதட்டமாகி, சமூகத்தில் தொழிலாளி வர்க்கத்தை குற்றவாளியாக்க முயற்சித்தது முதலாளித்துவம். கொடும் தாக்குதல்களை நடத்தியது மட்டுமல்லாமல், அமெரிக்கா போன்ற தொழில் மூலதனம் வளர்ந்த நாடுகளில், தொழிலாளிகள் மீது அவ்வப்போது துப்பாக்கி சூடு நடத்தி, கொத்து கொத்தாக கொலை செய்யவும், கைது செய்து சிறையில் அடைக்கவும் செய்தது.

தியாகிகளின் உதிரம் காய்ந்து விட கூடாது. அதன் துளிகள் உலகம் முழுவதும் உள்ள தொழிலாளி வர்க்கத்தை எழுச்சி கொள்ளவும், விழிப்புணர்வு பெற்று அடுத்த கட்ட முன்னேற்றத்தை பெறவும் வழிகாட்டுவதாய் அமைத்து கொள்ள வேண்டும். அதற்கு மே தினம் போன்ற உரிமை போராட்டங்கள் திரும்ப திரும்ப பேசப்பட வேண்டியுள்ளது. அது மட்டுமல்ல உழைக்கும் பெண்கள் தங்களின் உரிமைகள் குறித்து, முதலாளித்துவ சுரண்டல்வாதிகளிடம் நடத்திய போராட்டமே, மார்ச் 8 சர்வதேச பெண்கள் தினம் என்ற வரலாற்றையும் நினைவு கூற வேண்டியுள்ளது. உழைப்பு நேரத்தை குறைக்கவும், மனித உரிமைகளை பெறுவதற்குமான போராட்டங்களே, இவை, என்பதை அழுத்தமாக பதிவிட வேண்டியுள்ளது.

தொழிலாளி வர்க்கம், உண்ணவும், சற்று உறங்கவும் நேரம் தரப்பட்டதே ஒழிய, ஓய்வெடுக்க நேரம் தரப்பட்டதில்லை. குடும்பத்தினருடன் பொழுது போக்க அனுமதிக்கப்பட்டதில்லை. இவையெல்லாம், முதலாளிகளுக்கு மட்டுமே விதிக்கப்பட்டவை என்று ஏற்றுக் கொள்ள செய்யப் பட்டது. ஆனால் எல்லாக்காலத்திலும் கேள்விகள் கேட்கும் மக்கள் இருந்துள்ளனர். அப்படி துவங்கிய கேள்விகள் தான் எட்டு மணி நேர வேலை, எட்டு மணி நேர உறக்கம், எட்டு மணி நேர ஓய்வு என்ற முழக்கமாகும். ஓய்வுக்கும், உறக்கத்திற்கும் வேறுபாடு இருப்பதை இன்றுவரை, பெரும் பகுதி தொழிலாளி வர்க்கம் உணரவில்லை. ஆனால் மேற்படி முழக்கம் 1886 களில் தீவிரம் பெற்றுள்ளது. இப்போது 134 வது ஆண்டாக மே தின தியாகிகள் நினைக்கப்படுகின்றனர்.

சிக்காகோவின் வீதிகளின் காட்சியும் – நாமும்:

அமெரிக்காவின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்று சிக்காகோ, இங்கு பலநாடுகளை சார்ந்த தொழிலாளர்கள் குவியல் குவியலாக வாழ்ந்தனர். பல மொழி, பல இனம் என்ற வேறுபாடுகள் நிறைந்திருந்தது. புலம்பெய்ர்ந்து வந்த மனிதர்கள் கேள்வி கேட்க முடியாமல் வேலை வாங்கப்பட்டனர். போதாக்குறைக்கு வேலை இல்லா திண்டாட்டம், வேலையில் இருப்போரை சுரண்டுவதற்கான வாய்ப்புகளை வாரி வழங்கி வந்தது. முதலாளிகள் துப்பாக்கிகள் வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தனர். குறிப்பிட்ட கால போராட்டத்திற்கு பின் தொழிலாளி வர்க்கமும் துப்பாக்கி வைத்து கொள்ள அனுமதிக்கப் பட்டாலும், எல்லோராலும் துப்பாக்கி வைத்து கொள்ள முடியவில்லை. அதுமட்டுமல்ல, துப்பாக்கிகள் மட்டும் பிரச்சனைகளை தீர்ப்பதில்லை. எனவே சுரண்டல் கொடுமையாக இருக்கவும், அதை எதிர்த்த போராட்டமும் தீவிரம் பெற்றது.

134 ஆண்டுகளுக்கு முந்தைய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இந்த அளவிற்கு இல்லை என்றாலும், அன்றும், தொழில் நுட்ப வளர்ச்சி வேலையில் இருப்போரை, வீட்டிற்கு அனுப்பும் பணியை செய்தது. தொழில்நுட்பம் வளர்ந்தால், வேலைநேரத்தை குறைக்க முடியுமே. ஏன் செய்ய மறுக்கிறது ஆளும் வர்க்கம் இந்த கேள்வி பிரதானமாக மாறியது. வேலைசெய்யும் நேரம் குறைந்தால், கூடுதல் தொழிலாளர்களுக்கு வேலை அளிக்க முடியும் என்ற மிகச்சிறந்த வாதத்தை மே தின போராட்டக் காரர்கள் முன்வைத்தனர். இது ஈர்ப்பு மிக்கதாக மாறியது.

இன்று நம் தமிழகத்தின் தொழில் நகரங்களும், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து தொழில் நகரங்களிலும் கூட மேலே குறிப்பிட்ட நிகழ்வுகளைக் காணமுடிகிறது. பலமொழி, பல இனம், பல சாதி, பல மதம் என்ற வேறுபாடுகளைக் கொண்ட தொழிலாளி வர்க்கத்தை, முதலாளித்துவம் தனது சுரண்டல் தேவைக்கு பயன்படுத்தி கொள்கிறது. குறிப்பாக பெண்கள் சரிபாதி பயன்படுத்தப் படுவது அதிகரித்துள்ளது. பல தொழில்களில் உற்பத்தியாளர்களாக சேவைப்பணியாளராக பெண்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். அதேநேரம் வேலைக்கான பாதுகாப்பு உத்தரவாதம் இல்லை. ஏனென்றால் வேலை இல்லா திண்டாட்டம் மிகப் பெரும் அளவில் உயர்ந்து வருகிறது. முதலாளித்துவம் தனது லாபவிகிதத்தை தக்க வைக்க, தொழில்நுட்பத்தையும், வேலை இல்லா திண்டாட்டத்தையும் பயன்படுத்தி வருகிறது.

இன்றைக்கும் வேலை நேரம் அதிகம் என்பதே பிரச்சனை:

நாம் மேலே விவாதித்த வேலை இல்லா திண்டாட்டமும், தொழில்நுட்ப வளர்ச்சியும் ஒன்றுக்கு ஒன்று பயன்பட்டு, சமூக வளர்ச்சியை உறுதி செய்ய, வேலை நேரம் குறைக்கப்படுவது அவசியம். கடந்த 30 ஆண்டுகளில் உலக அளவில் வறுமை உயர்ந்த அளவை விட பலமடங்கு, லாபம் சிலருக்கு உயர்ந்துள்ளது. இது, தொழில்நுட்ப வளர்ச்சியாலும், வேலை இல்லா திண்டாட்டததால், வேலையில் இருப்போர் மீதான சுரண்டலை அதிக படுத்தியதாலும் ஏற்பட்ட விளைவு ஆகும்.

வேலைநேரம் குறைக்கப்பட வேண்டும் என்பது குறித்து சீரிய விவாதம் தேவை. இந்தியா போன்ற நாடுகளில், வேலைநேரம் இன்னும் கூட எட்டு மணிநேரமாக உறுதி செய்யப்படவில்லை. சட்டம் இருந்தாலும், அது முதலாளிகளின் முன் மண்டியிட்டு வணங்குவதாகவே உள்ளது. சட்டத்தை அமலாக்கு என தொழிற்சங்கங்கள் போராடும் போது, குறைந்தபட்ச சம்பளம் மட்டும் பெற்றுக் கொண்டால் எப்படி வாழ்வது.? என்ற கேள்விகள் தொழிலாளியை நிலை குழையச் செய்கிறது. ஆம் இந்தியா போன்ற நாடுகளில் குறைந்த கூலி, ஒருநாளைக்கு 350/- என்ற அளவிலேயே உள்ளது. இது தொழிலாளிகள் தங்கள் வாழ்க்கை தேவையை பூர்த்தி செய்ய உதவுவதில்லை. தேவைக்காக, கூடுதல் நேரம் உழைக்க வேண்டும் என்ற நிலைக்கு ஆளாகும் கொடுமை உள்ளது.

இதற்கு தீர்வு வேலைநேர குறைப்பே ஆகும். உலகில் மே தின போராளிகளின் நினைவாக, எட்டு மணி நேரமே. உழைப்பு நேரம் என்பதை சட்டமாக்கியது சோவியத் யூனியன். பின்னாளில் வளர்ச்சி காரணமாக எட்டு மணி நேரத்தை 6 மணிநேரமாக குறைக்கவும் செய்தது சோவியத் யூனியன். இது உலக நாடுகள் மீதும் தொழிலாளி வர்க்கத்தின் மீதும் ஏற்படுத்திய தாக்கமே, அமெரிக்காவில் வாரம் 40 மணிநேரம், ஜெர்மனியில் 36 மணிநேரம், பிரான்ஸ் ல் 35 மணிநேரம், ஸ்பெயின் மற்றும் ஸ்வீடன் போன்ற நாடுகளில் 35 மணிநேரம் ஆகும். ஆனால் இந்தியாவில் இத்தகைய தாக்கம் உருவாகவில்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட்) மட்டுமே தனது திட்ட அமலாக்கத்தை குறிப்பிடும் போது, வேலைநேரம் 6 மணி நேரமாக குறைக்க படும் என சொல்லியிருக்கிறது.

இப்போது இந்திய தொழிலாளி வர்க்கத்திடம் வேலை நேரக் குறைப்பு குறித்த விவாதம் உடனடி தேவை. செயற்கை நுண்ணறிவு இயந்திரங்களும், ரோபோக்களும் மனித உழைப்பை கொள்ளை அடித்து, ஆட்குறைப்புக்கு ஏற்பாடு செய்கிற இந்த காலத்தில், வேலைநேரம் குறைக்கப்படுவது, மிக அவசியம். குறிப்பாக தகவல் தொழில்நுட்பம் போன்ற பிரிவுகளில் பணியாற்றும் தொழிலாளர்கள், அதுவும் பெண்கள் தங்கல் மீதான பல்வேறு கட்டுப்பாடுகளில் இருந்து விடுதலை பெற உழைப்பு நேரம் குறைக்கபட வேண்டும். அதற்கான போராட்டத்தை தீவிரமாக்க வேண்டும். அதுவே மே தின தியாகிகளுக்கு செலுத்தும் அஞ்சலியாகும்.