தேர்தல் அறிக்கையா? வாய்சவடாலா?
எஸ். கண்ணன்
தேர்தல் அறிக்கை மற்றும் அதன் மீதான விவாதம், முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கில் மாறுபட்டதாக உள்ளது. ஒரு கட்சி தனது கொள்கையை பறைசாற்றுவதாக தேர்தல் அறிக்கை இருந்தது. சமூகத்தின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான தேவையை தேர்தல் அறிக்கைகள் பேசியது உண்டு. ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களின் போது, வளர்ச்சி என்ற சவடால், சாகச வார்த்தைகள் நிறைந்தாக உள்ளது. ஆட்சி அமைந்தபின், அது ஜும்லா (சும்மா) என, குற்ற உணர்ச்சி அற்ற, வெட்கமற்று ஒப்புக் கொள்ளும் காட்சிகளை முதலாளித்துவ வளர்ச்சியில் காண முடிகிறது.
இந்த வளர்ச்சிப் போக்கில், இந்துக்களுக்காக என பாஜகவும், குறிப்பிட்ட சாதி மக்களின் நலனுக்காக என முழங்கிய சாதிய அரசியல் இயக்கங்களும், இன ரீதியில் போராடுவதாக சொல்லிக் கொண்ட பலரும் அம்பலமாகி நிற்பதைக் காண முடிகிறது. உதாரணத்திற்கு, பாஜக குறிப்பிட்ட ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை, வீட்டிற்கு 15 லட்சம் ரூபாய் என்ற இரண்டும், பெரும் ஏமாற்றத்தை சந்தித்திருக்கிறது. 2013 ம் ஆண்டில் 4.9 சதமாக இருந்த வேலையின்மை விகிதாச்சாரம், 2021 பிப்ரவரியில், 6.9 சதமாக உயர்ந்திருக்கிறது. இது பாஜக வின் மிகப் பெரிய தோல்வி. தமிழ்நாட்டில், 43.5 புள்ளிகள் உயர்ந்து, தேசிய சராசரியை விட வேலையின்மை அதிகரித்து இருப்பதாக இந்திய பொருளாதாரம் குறித்த கண்காணிப்பு மையம் (CMIE) தெரிவிக்கிறது. இந்த காலத்தில் தான் அதிமுக அதிக அளவு அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்ததாக தனது பிரச்சாரத்த்தில் குறிப்பிடுகிறது. எனவே வேலையின்மையை ஒழிப்பதில் அல்லது குறைப்பதில், பாஜக, அதிமுக ஆகிய இரண்டும், கிஞ்சிற்றும் கவலைப் படவில்லை என்பதே உண்மை.
இருட்டிப்பு செய்யப்பட்ட கருப்பு பணம்:
அடுத்ததாக ரூ 15 லட்சம் ரூபாய் ஒவ்வொரு வீட்டிற்கும் தரப் போவதாக பாஜக 2014 தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது. இதை வெளிநாட்டில் உள்ள இந்தியர்களின் கருப்பு பணத்தை கைப்பற்றுவதன் மூலம் செய்யப் போவதாக கூறியது. 2011 ல் 343.04 பில்லியன் அமெரிக்க டாலராக (26 லட்சத்து, 7ஆயிரத்து, 104 கோடி ரூ) இருந்த வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்ட கருப்பு பணம், 2021 ல் 1.4 டிரில்லியன் அமெரிக்க டாலராக (ஒரு கோடியே ஆறு லட்சத்து நாற்பதாயிரம் கோடி ரூபாய் ) என உயர்ந்துள்ளது. எனவே பதுக்கல் அல்லது, கருப்பு பணம் வெளிநாடுகளில் அதிகரித்துள்ளதே தவிர, குறையவில்லை. இதன் மூலம், பாஜக மத்திய அரசு, வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்களுக்கான கருப்பு பணத்தை கைப்பற்றவும், இல்லை, கட்டுப்படுத்தவும் இல்லை, மாறாக அதிகரிக்க உதவி செய்துள்ளது. சுமார் 75 லட்சம் கோடி பணம் வெளிநாடுகளில், இந்திய பெரு முதலைகளின் பணம் பதுக்கப்படுவதற்கு, பாஜக ஆட்சி துணை செய்துள்ளது.
கொரானாவிலும் கொள்ளை:
மற்றொரு புறம், கொரானா பாதிப்பு காலத்தில், பொதுமுடக்கத்தில் வைக்கப்பட்ட தொழிலாளர்களின் குடும்பத்திற்கு தலா 7500 ரூ வீதம் மூன்று மாதங்களுக்கு வழங்க கேட்டு சி.ஐ.டி.யு உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் கோரிக்கை வைத்து, பல கட்ட போராட்டங்களை நடத்தியது. இந்த கோரிக்கையை மத்திய அரசு, எள் முனை அளவும் பரிசீலிக்கவில்லை. மாறாக இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அனுப்பபட்ட சிறப்பு ரயில்களில் கட்டணமும் வசூலித்தது. மாநில அதிமுக ஆட்சியும் இதற்கு உடந்தை. உலகில் பல நாடுகள் பொது முடக்க காலத்தில், மூன்று முதல் ஐந்து மாதங்களுக்கு குறைந்த பட்ச ஊதியத்தை வழங்கிட நடவடிக்கை எடுத்தன. அப்போது வழங்க மனமில்லாத அதிமுக ஆட்சியாளர்கள், தங்களின் தேர்தல் அறிக்கையில், வீட்டு தலைவியாக உள்ள பெண்களுக்கு மாதம் ரூ 1500 வழங்கப்படும் எனக் கூறியுள்ளது. உண்மையில் இடதுசாரிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் மட்டுமல்ல, ரகுராம்ராஜன், ப. சிதம்பரம், அர்விந்த் சுப்பிரமணியன், போன்ற பொருளாதார வல்லுனர்களும், கொரானா காரணமான, பொருளாதார பாதிப்பை மீட்க மக்கள் கையில் பணம் அளிக்க வேண்டும், என்கின்றனர். அதிமுக பாதிப்பின் போதே வழங்காத நிலையில், தேர்தல் வாக்குறுதியாக கூறியிருப்பது, அப்பட்டமான ஏமாற்று ஆகும்.
அதேபோல் தொழிலாளர் வாரியங்கள் மூலம் தொழிலாளர்களுக்கு பட்டுவாடா செய்யப்பட்டது மிக சொற்பமே. குறிப்பாக தமிழக கட்டுமான நலவாரியத்தில், 3 ஆயிரம் கோடி ரூபாய் கையிருப்பு, உள்ளது. இதை வாரியம் எப்படி தொழிலாளர் நலனுக்கு பயன்படுத்தியது என்பது, பெரிய கேள்விகுரியே. ஒரு கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் நலவாரியங்களில் பதிவு செய்யப்பட்ட நிலையில், நலவாரிய பயன்களைப் பெற்ற தொழிலாளர் எண்ணிக்கை மிக மிக சொற்பம் ஆகும். கூரையேறி கோழி பிடிக்க முடியாத ஆட்சியாளர்கள் வானம் ஏறி வைகுண்டம் காட்டுவதாக கூறுவது, ஏமாற்றத்தின் உச்சம் ஆகும்.
பெண் உழைப்பாளர்கள்:
தமிழ்நாட்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் தான் பெண் உழைப்பாளர்கள் மிக அதிகம் என்பதை, இந்த ஆட்சியாளர்கள் புரிந்து கொள்வர். குடும்பத்தில் தலைமை தாங்கும் பொறுப்பு கிராமப் புறம், அதிலும், தொழில் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி இல்லாத மாவட்டங்களில் மிக அதிகமாக உள்ளது. அதேபோல் கன்னியாகுமரி போன்ற படித்தோர் நிறைந்த மாவட்டங்களில் பெண் உழைப்பாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும், அண்ணை தெரசா மகளிர் பல்கலைக் கழக ஆய்வறிக்கை கூறுகிறது. உண்மையில் அதிமுக அரசு பெண்கள் நலனில் அக்கறை கொண்டதாக இருந்திருந்தால், தமிழகத்தில் குறைந்த பட்ச ஊதியத்தை உயர்த்துவதில் வெளிப்பட்டிருக்கும்.
குறைந்த பட்ச ஊதியம்:
அமெரிக்காவில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில், குறைந்த பட்ச ஊதியத்தை ஒரு மணி நேரத்திற்கு 8 டாலர் என்பதில் இருந்து 15 டாலராக உயர்த்துவோம், என்பது பிரச்சாரமாக, தேர்தல் வாக்குறுதியாக இருந்தது. கடந்த 2016 அதிபர் தேர்தலின் போதும் இத்தகைய வாக்குறுதிகள் இருந்தது. அதை தமிழகத்தில் செய்திகளாக காணவும் முடிந்தது. மற்றொரு புறம் கடந்த 2012 ல் இருந்து தொடர்ச்சியாக தொழிற்சங்கங்கள் நடத்தி வரும் அகில இந்திய வேலை நிறுத்தங்கள் குறைந்த பட்ச ஊதியத்தை, ரூ 18000, பின் ரூ 21000 என உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து வருகின்றன. கேரளத்தை ஆளுகிற இடது ஜனநாயக முன்னணி அரசு ரூ 18000 என்பதை சட்டமாக்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டை ஆட்சி செய்த அதிமுக இது குறித்து முயற்சிக்கவில்லை. அவ்வாறு செய்திருந்தால், தமிழகத்தில் உண்மையில், உற்பத்தி வளர்ச்சியும், நுகரும் வளர்ச்சியும், வேலைவாய்ப்பும் ஓரளவு அதிகரித்திருக்கும். இந்த கோணத்தில், தமிழகத்தில் வருவாயை உயர்த்த எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கலாம், என்ற ஆலோசனையை, முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர், சி. ரங்கராஜன் தலைமையில் நடத்திய போது, பல அமைப்புகள் சிறந்த ஆலோசனைகளை வழங்கியுள்ளன. ஆனால் அதிமுக ஆட்சி இந்த ஆலோசனை விவரங்களை கொஞ்சமும் மதிக்கவில்லை, என்பதே உண்மை. இந்நிலையில் அதிமுக தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கும் எதுவும் அமலாக போவதில்லை.
குடிநீர் இல்லாத ஊரில் வாசிங் மெசின்:
குடிநீர் பெரும் பிரச்சனையாக மாநிலம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. என்ன தொலை நோக்கு திட்டத்தை அதிமுக முன்வைத்தது? இப்போதும் அதன் தேர்தல் அறிக்கையில் குடிநீர் வழங்குவது பற்றிய விவரங்கள் இல்லை. ஒருபுறம் நிலத்தடி நீரை உறிஞ்சி பெப்சி, கொக்கோ கோலா நிறுவனங்கள் குடிநீர் விற்பனையில் கொள்ளை லாபம் ஈட்டுகின்றன. மற்றொருபுறம் குடிநீர் இல்லாமல் நோய் தாக்குதலுக்கு, குழந்தைகளும், தொழிலாளர்களும் ஆளாகி பாதிக்கப்படுகின்றனர்.
அடுத்ததாக, வாசிங் மெஷின் வீடு தோறும் வழங்கப்படும் என அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது. இதில் ஒரு வாதமும் முன்வைக்கப்படுகிறது. வாசிங்மெசின் உற்பத்தி அதிகரிக்கும் என்று. இது உண்மை யென்றால், ஏன் கிரண்டர் உற்பத்தி அதிகரிக்கவில்லை. கோவையில் கிரைண்டர் உற்பத்தியில் ஈடுபட்ட சிறு, குறு உற்பத்தியாளர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏன் உருவானது. தமிழகத்தின் முதல்வராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி, கொங்கு மண்டலத்தை சார்ந்தவர், எனவே அதிமுக அந்த பகுதியில் மிக அதிக தொகுதிகளில் வெற்றி பெறும், என கூறப்படுகிறது. கொங்கு மண்டலத்தில், சிறு குறு தொழில்கள் முடங்கி, வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டிருப்பதை மறைக்கவே, இது போன்ற பிராந்திய அல்லது சாதிய உணர்வுகள் மக்கள் மேல் திணிக்கப் படுகிறது.
அதேபோல் தமிழ்நாட்டில் ஆறு சிலிண்டர்கள் வீடுகளுக்கு வழங்கப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கை கூறியுள்ளது. மாநில அரசு பெட்ரோல் மீதான வரி மூலம், ஒரு லிட்டருக்கு 24 ரூபாய் பெறுவதாக கூறப்படுகிறது. இதை குறைக்க கடந்த காலத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் மூலம் 2500 கோடி ரூபாய் வருவாய் இருக்கும் என எகனாமிக் டைம்ஸ் கூறுகிறது. இதை குறைத்து கொள்ள முன் வராத அதிமுக ஆட்சியாளர்கள், சமையல் எரிவாயுவிற்காக ரூ 4800 கோடிக்கு என்ன திட்டம் வைத்திருக்கிறது.
எனவே தேர்தல் அறிக்கை மூலம் அதிமுக, பாஜகவை போல் வாய்சவடால் விடுத்து வருகிறது. வேலைவாய்ப்பு, பாதுகாப்பான குடிநீர், சிறு குறு தொழில் வளர்ச்சி, விலை உயர்வை கட்டுப்படுத்துவது, குறைந்த பட்ச ஊதியத்தில் உயர்வு போன்றவையே முக்கியம்.
அதற்கான தேர்தல் அறிக்கைகளையும், மேற்படி கோரிக்கைகளுக்காக போராடுவோரையும், தமிழக மக்கள் இனம் கண்டு செயலாற்ற வேண்டிய பொறுப்பு உள்ளது. எனவே இடதுசாரிகள் அங்கம் வகிக்கும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களிப்பது காலத்தின் தேவையாகும்.
சி.ஐ.டி.யு செய்தி மார்ச் 2021