சமூகவயமாதலின் தாக்கங்கள்!!
தமிழ்ச் சமூகத்தில் அதிர்ச்சியூட்டும்
செய்தியாக, அதிகரித்து வரும் விவாகரத்து இருக்கிறது. சில தினங்களுக்கு முன் 25 முதல்
30 வயதுக்கு உள்பட்டவர்கள் இடையிலான திருமண உறவில், விரிசல்கள் அதிகரித்து வருவதாக
நாளிதல்கள் கவலையை வெளிப்படுத்தி இருந்தன. கவலையும் அதிர்ச்சியும் மட்டும் மேற்படிப்
பிரச்சனையைத் தீர்த்து விடுவதில்லை. அதற்கான மூலகாரணத்தை அறிந்து கொள்ளாமல் தீர்வை
எட்ட முயற்சிப்பது பலவீனமான சிந்தனையின் வெளிப்பாடு எனபதையும் கணக்கில் கொண்டு தீர்வு
காணமுயற்சிக்க வேண்டும்.
இந்த சமூகப் பிரச்சனைக்கு இரண்டு
முக்கிய வளர்ச்சிப் போக்கு காரணமாக இருப்பதைக் கணக்கில் எடுப்பதும் அவசியம். ஒன்று
குடும்ப அமைப்பு முறைக்கும், திருமண பந்தத்திற்கும் நெருங்கிய உறவிருப்பதை அறிவது மிக
அவசியம். அதாவது 20 ஆண்டுகளாக பின்பற்றப் பட்டு வரும், உலகமயமாக்கல், தனியார்மயமாக்கல்,
தாராளமயமாக்கல் ஆகிய கொள்கைகளுக்குப் பின்னர் குடும்ப உறவில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள்
குறித்த ஆய்வில் இருந்து கிடைக்கும் விவரங்கள். இரண்டு, 20 ஆண்டுகளில் தமிழகம் உள்ளிட்ட
பல மாநிலங்களில் பெண் கல்வி குறித்து ஏற்பட்டு வரும் விழிப்புணர்வு அதிகரிப்பின் காரணமாக
உருவாகும் பெண்ணுரிமை குறித்த கருத்தாக்கத்திற்கும் மதிப்பளிக்கிற போது குடும்ப உறவில்
ஏற்படும் முன்னேற்றம்.
இந்திய வரலாற்றில் முன்னெப்போதும்
இல்லாத அளவிற்கு, குடும்பத்தின் கணவன் மற்றும் மணைவி ஆகிய இருவரும் பணிக்கு செல்ல வேண்டியவர்களாக
இருக்கிறார்கள். கிராமங்களில் படித்தவர்கள் எதிர்பார்க்கிற வளர்ச்சி, கல்வி, வேலைவாய்ப்பு,
சுகாதாரம் மற்றும் பொழுது போக்கு அம்சங்கள் கிராமங்களில் கிடைப்பதில்லை. எனவே நகரங்களுக்கு
இடம் பெயருகின்றனர். நகரத்தில் வீட்டு வாடகை
துவங்கி பல்வேறு அத்தியாவசியத் தேவைகளுக்கான அதிகரிப்பும், அதற்கான வருவாய் தேவையும்,
கணவன், மணைவி இருவரையும் பணிக்கு செல்ல வேண்டியவர்களாக நிர்பந்திக்கிறது.
கூட்டுக் குடும்ப வாழ்க்கை, தனிகுடும்ப
வாழ்க்கையை நோக்கி இடம்பெயர்தல் காரணமாக தீவிரம் பெற்று இருக்கிறது. கூட்டுக் குடும்ப
வாழ்வில் கிடைத்து வந்த, வேலைப் பகிர்வு, குழந்தைப் பராமரிப்பு, நோய்வாய்ப்பட்ட குடும்ப
உறுப்பினரைப் பராமரித்தல் ஆகியவை தனிக்குடும்ப வாழ்வில் சுமையாக மாறுவதைக் காணலாம்.
இருவரும் வேலை முடிந்து திரும்பும்
போது, வீட்டில் இருவருக்குமே யாராவது உதவி செய்தால் பரவாயில்லை என்ற மனநிலையிலேயே வீட்டிற்கு
வருகின்றனர். அந்த உதவி கிடைக்காத நிலையில், விரக்தியுறுகின்றனர். தாய், தந்தையரிடம்
பெற்று வந்த அன்பை தன் வாழ்க்கைத் துணையிடம் பெற சாத்தியம் இல்லை என்ற சூழலில் மேற்படி
விரக்தி இன்னும் அதிகமாகிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில், வேலைக்குச் செல்லும் பெண்களில்
60 சதமானோர், விவாகரத்து பெறுகின்றனர் என்ற ஆய்வுடன் இதைப் பொருத்திப் பார்ப்பது அவசியமாகிறது.
இந்தியாவில் சமீப காலங்களில் தான்
பெண்கள் அலுவலகப் பணிகளுக்கு செல்லும் சூழல் அதிகரித்துள்ளது. வளர்ந்த நாடுகளிலோ நீண்ட
காலமாக பெண்கள் வேலைக்குச் செல்லும் நிலை உள்ளது. ஒருபுறம் இந்தியப் பெண்களுக்குக்
கிடைத்துள்ள வேலைக்குச் செல்லும் உரிமையைப் பாதுக்காக்க வேண்டும் என்ற அவசியம் இருக்கிறது.
அதே நேரத்தில் மாறியுள்ள சூழலுக்கு ஏற்ப குடும்ப வாழ்வியல் முறைகளையும் அமைத்துக் கொள்ள
இளம் தலைமுறை பயிற்றுவிக்கப் படவேண்டும்.
குறிப்பிட்ட சில நடவடிக்கைகளை
சமூக ரீதியில் மேற்கொள்வதன் மூலம் ஒரு புரிதலை இளம் தலைமுறைக்கு உருவாக்க முடியும்.
விவாகரத்து அரிதிலும் அரிதாக இருக்க வேண்டும் என்ற எதிர் பார்ப்பு இருக்கிறது. தமிழ்ச் சமூகத்தில் “அறுத்துக் கட்டும் சாதி” என்னும்
சொல் வழக்கு உண்டு. முழுக்க சாதி ஆதிக்க சிந்தனையின் வெளிப்பாடாக மேற்படி சொல்வழக்கைக்
குறிப்பிடுவர். இருந்த போதிலும், இனைந்து வாழ முடியாத சூழலில் வாழ்க்கைத் துணை ஒப்பந்தம்
செய்து கொண்டவர்கள், பிரிந்தோ, வேறு மனமொத்த துணையுடனோ வாழ்வதை பழக்கமாக கொண்ட சமூகம்,
கடந்த காலத்தில் தன் பண்பாடாக கொண்டிருந்திருக்கிறது, என்பதை விளங்கிக் கொள்ள மேற்படி
சொல்வழக்கைப் புரிந்து கொள்ளலாம். இன்னுமொரு விதத்தில், மறுமணம் செய்து கொள்ள சமூகம்
அனுமதித்த அடையாளமாகவும் இந்த சொல்வழக்கைக் கருதலாம்.
இது இன்றைய தலைமுறைக்கு தேவையில்லை
என்ற போதும், பல்வேறு பண்பாடுகளை நமக்கு முந்தைய சமூகம் பின்பற்றி இருக்கிறது, என்பதற்கான
உதாரணமாக கொள்ளலாம். அன்பும், பாசமும், கல்விக்கான வாய்ப்பும் குழந்தைகளின் இதர பல
தேவைகளும் பெற்றோர் மூலமாக மட்டும் தான் கிடைக்கும் என்ற உடமை சமூகத்தில், முன் குறிப்பிட்ட
சொல்வழக்கு, புதிய புதிய பிரச்சனைகளை உருவாக்கிவிடும். எல்லாக் காலங்களுக்கும் பொருந்த
கூடிய குடும்ப உறவு முறையோ, பண்பாட்டு செயல் திட்டமோ இருக்க முடியாது. எனவே காலமாற்றம்
மற்றும் வாழ்க்கைச் சூழலைப் புரிந்து கொண்டு சில செயல் திட்டங்கள் உருவாக்கப் படுவது
அவசியம்.
கூட்டுக் குடும்ப வாழ்வில் கிடைத்து
வந்த நல்ல அம்சங்களில், எதைத் தனிக்குடும்பம் தவற விட்டுள்ளது? தனிக்குடும்ப வாழ்க்கையில்
உள்ள இடைவெளிக்குக் காரணம் என்ன? என்பது அடிப்படைக் கேள்வி. இரண்டாவது மானுடவியலாளர்களும்,
சமூகவியலாளர்களும் குறிப்பிடுகிற, சமூகவயமாதல் நடவடிக்கை குறித்தது. பழமைச் சமூகம்
தன் ஆதித் தலைமை உருவாக்கிக் கொடுத்தவற்றை விதியாகக் கொண்டு பின்பற்றியது. நவீன சமூகம்
தனி நபர் வாழ்க்கையில் தலையிடுவதில்லை என்ற நாகரீக நடவடிக்கையின் பெயரால் அன்பு துவங்கி
அனைத்தையும் வணிகமாக்கி வருகிறது.
குழந்தையின் சமூகவயமாதலில் குடும்பம்,
கல்விக்கூடம், அவர் குடும்பம் இருக்கும் பகுதி ஆகிய மூன்றும் முக்கியப் பங்காற்றுகிறது.
பெற்றோர்களிடம் பள்ளிகளில் நடைபெறும் பெற்றோர் ஆசிரியர் சந்திப்புகளின் போது, ஆசிரியர்,
“ உங்கள் குழந்தையிடம் பேசுவதே இல்லையா? எனக் கேட்கின்றனர். இக்கேள்வியின் பொருள்,
பல பெற்றோர்கள் தங்கள் குழந்தையிடம் இயந்திரத்தனமாக நடந்து கொள்கின்றனர் என்பதாகும்.
குழந்தை கேட்பதை வாங்கிக் கொடுப்பது மட்டுமே பிரதானப் பணி என நம்மில் பலர் புரிந்து
கொண்டிருக்கிறோம். குழந்தைகளுடன் பெற்றோர் நடத்தும் உரையாடல், மிகப் பெரிய உளவியல்
தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், குழந்தைகளை ஆற்றல் படுத்தும் கருவியாகவும் செயல்படுகிறது,
என்பதை பெற்றோர்களாக இருக்கும் இன்றைய தலைமுறை அறிந்திருக்கவில்லை.
இதுபோன்ற இடைவெளியை தொலைக்காட்சிகள்
ஆக்கிரமித்துக் கொள்கின்றன. தொலைக்காட்சிகள் சில நல்ல விசயங்களைக் கற்றுக் கொடுத்தாலும்,
அந்த நிகழ்ச்சிகள் மீதான கருத்துப் பரிமாற்றம், குழந்தைகளுடன் நடத்தப் படாத காரணத்தால்,
குழந்தைக்கு முடிந்த அளவில் புரிந்து கொள்கிற போக்கிற்கு விட்டு விடுகிறோம். இரண்டாவதாக
குழந்தையின் விளையாட்டு அல்லது முழு உடலியக்கம் ஆகியவைத் தடைபடுகிறது. இதன் காரணமாக
இம்பொடன்சி அதிகரிக்கிறது என சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இதைக் காரணமாகக்
கொண்ட விவாகரத்து எண்ணிக்கை குறைவு, ஆனால் மனரீதியிலான கர்வத்தை அதிகரிக்கச் செய்கிறது,
என்று பத்மாசினி எனும் பத்திரிக்கையாளர், இந்தியாவில் வளர்ந்து வரும் விவாகரத்து விகிதாச்சாரம்
எனும் கட்டுரையில் குறிப்பிடுகிறார். இது குறித்து பேசும் மனதைரியம் நமது பெண்களிடம்
இல்லை என்பது ஒருவேளை காரணமாக இருக்கலாம்.
இத்தகைய குடும்ப இடைவெளியைத் தவிர்ப்பதற்கும்,
ஆரோக்கிய வளர்ச்சிக்கு வழி காணவும் நமது பள்ளிகளில் ஆலோசனைக்கான கவுன்சிலர்கள் நியமனம்
அவசியம். ஆசிரியர் நியமனத்திற்கே வழி இல்லாத போது, கவுன்சிலர் நியமனம் சாத்தியமா? என்ற
கேள்விக்கு இடம் தராமல், வளர்ச்சிக்குத் தேவையான ஒன்று என்ற முக்கியத்துவம் தரப்பட
வேண்டும். கல்வி என்பது வேலைக்கான தகுதி என்று மட்டும் பார்க்காமல், மனிதனுக்கான முழுத்தகுதியையும்
உருவாக்கும் திறவுகோல் என்பதாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
நமது பாடத்திட்டத்தில் ஆண், பெண்
பாலின சமத்துவம் குறித்த போதனை மிக அவசியம். இன்று கல்வியில் பெண்கள் முன்னேறியுள்ளனர்.
குறிப்பாக தமிழ் நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக பட்டம் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கையில்
ஆண்களை விட பெண்களே அதிகம். இன்று சுமார் 58 சதம் இளங்கலைப் பட்டப் படிப்பு படிப்பவர்களாக
உள்ளனர். இது பாராட்டுக்குறிய ஒன்று. ஆனால் ஆண், பெண் சமத்துவம் குறித்த புரிதல் பலவீனமாக
இருக்கிறது. 2005-06 ஆய்வுப்படி குடும்ப வன்முறைகளால் பாதிக்கப் பட்டவர்கள் 41.9 சதம்
என்பதை தமிழ் நாடு சமூக வளர்ச்சி குறித்த அறிக்கை குறிப்பிடுகிறது. அதேபோல் குடும்பத்தில்
எடுக்கப் படும் முடிவுகளில் தங்களுக்கும் பங்கிருப்பதாக 69.2 சதம் பெண்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்விவரம் அகில இந்திய சராசரியை விட முன்னேற்றம் என்றாலும், உயர் கல்வி விகிதாச்சாரத்திற்கு
ஏற்ப இல்லை என்பதையும் கவணத்தில் கொள்ள வேண்டும்.
எனவே குடும்பம் என்பது கூட்டாக
சேர்ந்து வாழ்தலின் அடையாளமாக இருப்பதை உணர்ந்து, ஆண், பெண் சமத்துவம், உரிமை ஆகியவை
குறித்த புரிதலை சமூகத்தில் அதிகப் படுத்தவும், அதற்கான ஆலோசனைகளைப் பெறுவதற்கான வாய்ப்புகளை
அதிகப் படுத்துவதும், வேண்டும். சமூகவயமாதலில் பெற்றோர், கல்வி நிறுவனங்கள் மற்றும்
சமூகம் ஆகியவற்றிற்கான பொறுப்பு உயர்த்தப் படுவதும், தமிழ் சமூகத்தில் சிறந்த தலைமுறை
உருவாக்கத்திற்கு வழிவகுக்கும்.
நன்றி: தினமணி