வியாழன், 20 ஜூன், 2013

காந்தி



மதசார்பின்மையை பாதுகாக்க வரலாறு கூறும் அனுபவம்

வயிற்றின் அடிப்பகுதியிலும், இதயத்திற்கும் கீழுமாக மூன்று தோட்டக்கள் துளைத்ததால், காந்தி சரிந்து மடிந்த நாள் ஜனவரி 30. இன்றும் அவர் முன்வைத்த மதச்சார்பின்மை கோட்பாடு, இந்துத்வா சக்திகளை வன்மம் கொள்ளச் செய்து வருகிறது. ”தேசப்பிதா என்று காந்தியை அழைக்காதீர்கள்” அலறினார் அத்வானி, இன்றளவும், இந்துத்வா சக்திகள் இந்தியாவில் வெற்றி பெறாமைக்குக் காரணம் இடதுசாரிகளும், காந்தியும் வலியுறுத்திய மதச்சார்பின்மையே ஆகும்.

அடிப்படையில், இந்துமத வழிப்பாட்டை மேற்கொள்பவர், சதா ராமநாமத்தை உச்சரிப்பவர், என்ற அடையாளங்களைக் கொண்ட காந்தி எப்படி, மதச்சார்பின்மையின் பிரதிநிதியாக இருக்க முடியும்? என்ற கேள்வி இன்றும் பலரைத் துளைத்து வருகிறது. ”மதம் ஒரு சொந்த பிரச்சனை, அதற்கு அரசியலில் இடம் இல்லை” என்று அன்றைக்கு அழுத்தமாக குறிப்பிட்டார் காந்தி.

பாகிஸ்தான் பிரிவினை முழக்கம் வலுத்த நிலையில் காந்தியைச் சந்தித்த குழுவிடம், ”நான் ஒரு சர்வாதிகாரியாக இருந்தால், மதமும், அரசியலும் தனித் தனியாகவே இருக்கும். என் மதத்தின் மேல் உறுதியாக் கூறுகிறேன். மதம் எனது சொந்த விவகாரம் அதில் அரசுக்கு எந்தவொரு வேலையும் இல்லை”, என்றார். ஹிந்த் ஸ்வராஜ் ஏட்டில், ”உலகில் எந்தப் பகுதியிலும் தேசிய இனமும் மதமும் ஒரே வரையறைக்கு உட்பட்டதாக இல்லை, இந்தியாவிலும் அப்படி ஒருபோதும் இருந்ததில்லை, அதை வலியுறுத்துவதே மதச்சார்பற்ற நம் போன்றோரின் கடமை” என்றார். பல்வேறு சந்தர்ப்பங்களில் இது போன்ற கருத்துக்களை மக்கள் மத்தியில் பரவலாகக் கொண்டு சென்றுள்ளார்.

காந்தி வலியுறுத்திய மேற்கண்ட கருத்துக்கள், இந்து மதம் என்ற பெயரிலும், முஸ்லீம் மதம் என்ற பெயரிலும் அரசியல் செய்தவர்களுக்கு வெறுப்பைத் தந்தது என்பதில் ஆச்சரியப் பட ஒன்றும் இல்லை. கோல்வாக்கர், ”கோவிலில் நீ வழிபடுவதும், உன் தெய்வங்களைத் தெருக்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்வதும், முஸ்லீம்களை எரிச்சலூட்டுமானால், அதைநிறுத்தி விடு, உங்கள் மனைவி, மகள் தூக்கிச் செல்லப் படும் போது தடுக்காதே, தடுத்தால் வன்முறை என்கிறார்கள்”, என்று காந்தியின் வாசகங்களைக் குத்திக் காட்டினார். வி.டி. சவர்க்கார்,” இந்தியாவிற்குள் பத்தானியர்கள் ஊடுருவவும், அமீர் முடிசூடவும் காந்தி அனுமதிப்பார்,” என்றார். மறுபக்கம் முஸ்லீம் லீக் மாநாட்டிலும், அலிகார் மாணவர்களிடையேயும் பேசிய ஜின்னா,” இந்து மதத்தைப் புணரமைத்து இந்த நாட்டில் இந்து ஆட்சியை ஏற்படுத்துவதுதான் அவரது நோக்கம். ஒரு இந்து ஆட்சியின் கீழ் முஸ்லீம்களை அடக்க வேண்டும் ஒடுக்க வேண்டும், என்பதே திருவாளர் காந்தியின் எதிர்பார்ப்பு”, என்று குறிப்பிட்டார்.

இந்துஸ்தானை முன் நிறுத்தியவர்களும், பாகிஸ்தானை முன் நிறுத்தியவர்களும், ஒரு சேர காந்திக்கு எதிராக களத்தில் நின்றனர். இதன் மூலம், காந்தியின் மக்கள் ஒற்றுமை கருத்துக்கள், இந்துத்துவா மற்றும் முஸ்லீம் லீக்கின் பிரச்சாரங்களைக் கடந்து, மக்களிடம் வரவேற்பைப் பெற்றிருந்தது என்பதையும் அறிய முடியும். எனவே தான் இருதரப்பும் ஒருசேர எதிர்த்து நின்றார்கள். காந்தி வலியுறுத்திய கோட்பாடுகள், பலநாட்டின் கருத்துக்களைப் போலவே நான்கு அடிப்படை அம்சங்களைக் கொண்டிருந்தது. 1. மதம் அரசியலில் ஊடுருவக் கூடாது. அரசியல், பொருளாதாரம், கல்வி, சமூக வாழ்வின் விரிவான பகுதிகள், பண்பாடு ஆகியவற்றில் இருந்து மதம் பிரிக்கப் பட்டிருக்க வேண்டும். இவை தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது. இந்திய மதச்சார்பின்மை என்ற பெயரில் இதை மறுப்பதானது. மதச்சார்பின்மையையே மறுப்பதாகும். மதச்சார்பற்ற அரசு என்றால், மதத்தை ஊக்குவிப்பதல்ல.

2. பலமதங்கள் இருக்கும் ஒரு சமூகத்தில், மதச்சார்பின்மை என்பது, அனைத்து நம்பிக்கைகள் தொடர்பாகவும் அரசு நடுநிலையைக் கடைப்பிடிக்கும், நாத்திகவாதத்திற்கும் அரசு சம்மதிப்பு அளிக்கும் என்பதாகும். 3. மதசார்பின்மை என்பது அரசு அனைத்து குடிமக்களையும் சமமாக நடத்த வேண்டும். மதத்தின் அடிப்படையில் ஆதரவாகவோ, எதிர்ப்பாகவோ பாரபட்சம் காட்டக் கூடாது, என்று பொருள் கொள்ள வேண்டும். 4. இந்தியாவில் காலணியாதிக்கத்திற்கு எதிராக மக்களை ஒன்றுபடுத்துகிற ஒரு கோட்பாடாகவும், தேசத்தை உருவாக்குகிற நடைமுறையின் ஒரு பகுதியாகவும், மதசார்பின்மை என்ற கருத்து உருவானது. அதேநேரத்தில் மக்களை சமூக மற்றும் அரசியல் ரீதியில் பிளவு படுத்தும் சக்தியாக மதவெறி வாதம் வளர்ந்தது. எனவே மதவெறிவாதத்திற்கு எதிர்ப்பு வாதமாக, மதச்சார்பின்மை வாதம் முன் நிறுத்தப் பட்டது. இந்த கோட்பாடுகளில் எந்த இடத்திலும் மதச்சார்பின்மைக்கான செயல் பாட்டாளர்கள் காந்தியுடன் மாறுபடும் வாய்ப்பு இல்லை.

இந்தக் கருத்துக்களின் விளைவு தான் இன்றளவும், மதசார்பின்மை என்ற வார்த்தை எட்டிக் காயாக மதவெறி சக்திகளால் கருதப் படுவதற்குக் காரணம் ஆகும். காந்தி கல்வி நிறுவனங்களில், மதக் கருத்துக்கள் பிரச்சாரம் செய்யப் படுவதை எதிர்த்தார். 1947 ல் கல்வி குறித்து ஆய்வு செய்ய அமைக்கப் பட்ட டாக்டர். ஜாகிர் உசைன் காந்தியை சந்தித்த போது, “அரசு மதக் கல்வி வழங்க வேண்டும் என்பதை நான் ஒப்புக் கொள்ளவில்லை”. மதத்தையும் நெறி முறைகளையும் கலக்காதீர்கள்”, என்றார். இரண்டு கோடிக்கும் அதிகமான மக்கள் சாகடிக்கப்பட்ட நிலையில், குழந்தைகளும், முதியவர்களும் ஆதரவற்றவர்களாக, மிகக் கொடிய வறுமைக்கு ஆட்பட்டவர்களாக ஒரே இரவில் மாற்றப் பட்ட நிலையில், மத அடையாளம் கொண்ட பெண்கள் குழந்தையாக இருந்தாலும், முதியவராக இருந்தாலும், மதவெறியில் பலாத்காரத்திற்கு ஆளான நிலை என்று, மதவாத வெறி உச்சத்தில் இருந்த 1947 ஆகஸ்ட் மாதத்தில், இந்த கருத்துக்களை முன்வைத்த காரணத்திற்காகவே காந்தியின் கருத்துக்களைப் பாராட்ட வேண்டும்.

இன்றைய ஆட்சியாளர்களைப் போலவே நேருவின் ஆட்சியாளர்களும், நடவடிக்கை எடுக்காது வேடிக்கை பார்த்ததை, காந்தியின் கொலையில் இருந்து அறியலாம். காந்தியை பலமுறை கொல்ல முயற்சித்து இருக்கிறார்கள். குறிப்பாக 1948 ஜனவரி 20 அன்று மாலை பிரார்த்தனைக்குச் செல்லும் போது, மதன்லால் பாவா என்பவரால், குண்டு எரிந்து கொல்வதற்கு முயற்சிக்கப் பட்டுள்ளார். அவர் கைது செய்யப் பட்டு பல்வேறு விசாரணைகள் மூலம் கோட்சே சகோதரர்கள் உள்ளிட்டு அனைவரும் அடையாளம் காணப் பட்ட பின்னரும் கைது செய்யப் படவில்லை. பிரதமர் பொறுப்பில் இருந்த நேரு அன்றைய உள்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேலுக்கு, கடிதம் எழுதி விசாரணை ஆதாரங்களின் அடிப்படையில் நடவடிக்கையை வலியுறுத்தி உள்ளார். விடுதலைப் போரில் முன் நிறுத்தப் பட்ட மனிதன், அதிகாரத்தில் இல்லாத காரணத்தால் மலிவாகி விட்டாரா? பட்டேலின் மௌனம் பல கேள்விகளை எழுப்புகிறது.

குறிப்பாக இந்தியப் பிரிவினையின் போது, சகலமும் பாகப் பிரிவினைக்கு உள்ளானது. ரொக்க இருப்பு 400 கோடியில் 75 கோடிதர வேண்டும் என்ற உடன்பாடு ஏற்பட்டது. அதில் 20 கோடி உடனே தரப் பட்டது, காஷ்மீர் பிரச்சனைத் தீராததால் மீதம் இருந்த 55 கோடி காலதாமதம் செய்யப் பட்டது. அதை கொடுத்து கணக்குத் தீர்க்க காந்தி வலியுறுத்தினார். நாட்டில் நடந்த மதகலவரங்களை நிறுத்தவும், 55 கோடியைக் கொடுத்திடவும் கோரிக்கைகளை வைத்து தனது ஆயுதமான உண்ணாவிரதத்தைத் துவக்கினார். இது நாதுராம் கோட்சேவை மட்ட்டுமல்ல,  ஆட்சியாளர்களையும் வெறுப்பேற்றியிருக்க வேண்டும். (பாகிஸ்தானுக்கு 55 கோடி தர மறுத்தவர்கள், இன்று லட்சக்கணக்கிலான கோடிகளை பன்னாட்டு முதலாளிகளுக்கு வாரி இரைப்பது தனிக்கதை)

மதசார்பின்மையில் உறுதியாக இருந்த காந்தி அப்போது நடந்த கலவரங்களை கட்டு படுத்த முடியாததை உணர்ந்தார். தன்னிடம் பிரத்யேக ஆயுதம் இல்லாததை தெரிந்து கொண்டார்.. காரணம் அவரின் அரசியல் தத்துவமற்ற கோட்பாடாக இருந்தது. மதவெறிக்கு எதிரான கோட்பாடுகள் ஒரு தத்துவப் பிடிப்பு கொண்ட மக்கள் பிரிவினரால் வலியுறுத்தப் படவேண்டும் என்பது அவரால் முன்னிறுத்தப் படவில்லை. இதன் விளைவு தான் காந்தி பிறந்த குஜராத்தில், மதவெறி சக்திகள் மீண்டும் வெற்றி பெற்று இருப்பதாகும். காந்தியை நினைவு கூர்வோம், அவரின் மதசார்பின்மையைப் பாராட்டுவோம். ஆனால் அது அதிகாரப் பசிக்குமுன் தோற்றுப் போனதன் அனுபவத்தில் இருந்து, தத்துவத்தின் அடிப்படையில், தொழிலாளி வர்க்க அரசியலுடன் முன்னிறுத்துவோம்.


ஜாலியன் வாலா பாக்


இந்திய மக்கள் சந்திந்த கொடும் அடக்கு முறைக்கா4ன சாட்சி!!

இந்திய விடுதலைக்கு சிந்திய ரத்தம் பெரும் குவியலாய் குவிந்து குன்று போல், தியாகத்தின் சாட்சியாய் காட்சியளிக்கும் இடங்களில் ஒன்று, ஜாலியன் வாலாபாக் மைதானம். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரின் மையத்தில், குறுகிய நுழைவாயிலைக் கொண்டது ஜாலியன் வாலா பாக். பிரிட்டிஷ் அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பின் படி 400 பேர் துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திலேயே மாண்டனர். பலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டு மடிந்தனர். ஆயிரம் முதல் இரண்டாயிரம் வரை கொடிய காயங்களுடன், பல ஆண்டுகள் படுக்கையில் விழுந்து சிகிச்சை எடுத்து, பின்  உயிர் பிழைத்தனர்.

டில்லியில் 1918 ம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் ஆண்டு மகாசபை, 1919ல் நடைபெற உள்ள அடுத்த மகாசபையை பஞ்சாப் மாநிலத்தில் நடத்துவது என முடிவு, செய்தது. தென் ஆப்பிரிக்காவில் நிற வெறிக்கு எதிரான போராட்டத்தைத் தீவிர படுத்திய காந்தி அப்போது தான் இந்தியா திரும்பி இருந்தார். காங்கிரஸ் இயக்கத்திற்குத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டார். பஞ்சாப் மாகாணத்தில் ஆண்டு மகாசபையை காங்கிரஸ் நடத்துவதாக எடுத்த முடிவு, பிரிட்டிஷாருக்கு பீதி கிளப்புவதாக அமைந்தது என்றால் மிகை அல்ல. அதுவரை பூரண சுதந்திரத்திற்காக எந்த முழக்கத்தையும் காங்கிரஸ் முன் வைக்கவில்லை. காந்தியும், ஆயுதப் போராட்டம் எதுவும் நடத்துவதாக அறிவிக்கவும் இல்லை. ஆனாலும் பிரிட்டிஷார் காங்கிரஸின் ஆண்டுப் பேரவை பஞ்சாபில் நடத்துவதை விரும்பவில்லை.

பஞ்சாப் மாநிலம் கத்தார் கட்சியின் விளைநிலமாக விளங்கியது. இக்கட்சி அமெரிக்காவில் துவக்கப் பட்டாலும், இந்தியாவில் பெரும் தாக்கத்தைக் குறிப்பாக, பஞ்சாபியர்கள் முழுமையாகப் பங்கு வகித்த, விடுதலைப் போராட்ட இயக்கமாக கத்தார் கட்சி இருந்தது. விரைவில் அவர்களின் போராட்டம் ஒடுக்கப் பட்டது. பல நூற்றுக்கானக் காணோர் தூக்கிலிடப் பட்டனர். பல நூற்றுக்கணக்கிலான இளைஞர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப் பட்டனர். பலர், அந்தமான் சிறைச்சாலை உள்ளிட்டு எண்ணற்ற சிறைகளில் அடைக்கப் பட்டனர். இது 1913 முதல் 1915 வரையிலும் நிகழ்ந்த கொடுமையாகும். பஞ்சாபி இளைஞர்கள் கணிசமான எண்ணிக்கையில் பிரிட்டிஷ் ராணுவத்தில் பணி புரிந்தாலும், இந்த படுகொலைகள் அவர்களிடம் பிரிட்டிஷ் எதிர்ப்பை உருவாக்கி இருந்தது. எனவே பஞ்சாபில் காங்கிரஸ் மாநாடு நடப்பது, பஞ்சாபியரை மேலும் ஆங்கிலேயருக்கு எதிரான மனநிலைக்கு கொண்டு செல்லும் என அஞ்சினர்.

அதேபோல் ஒத்துழையாமை இயக்கத்திற்கான அறைகூவல் டில்லி மாநாட்டிலேயே விடுக்கப் பட்டதால், பிரிட்டிஷ் அரசு மக்கள் ஒன்று கூடுவதைத் தடுக்கும் ரௌலட் சட்டத்தை உருவாக்கி இருந்தது. ராஜ துரோக வழக்கில் பல தனி நபர்களைக் கைது செய்து கணக்கில்லாமல் சிறையில் அடைக்கும் வாய்ப்பை ரௌலட் சட்டம் வழங்கியது. யார் சந்தேகத்திற்கு உரியவராக காவல் துறையால் கருதப் படுகிறாரோ அவரை கைது செய்து விசாரிக்கும் உரிமையை மாநில அரசுகள் ரௌலட் சட்டத்தின் பெயரில் வழங்கி இருந்தது.  இது பொது மக்களிடம் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான போராட்ட உணர்வைத் தூண்டியது.

1919 மார்ச் 30 அன்று ஒத்துழையாமை இயக்க அறைகூவலுக்கு செவி சாய்க்கும் முகமாக, டில்லியில் ஹர்த்தால் உள்ளிட்டப் போராட்டங்கள் ஆவேசமாக நடைபெற்றது. குறிப்பாக இந்து முஸ்லீம் என்ற இரு பகுதி மக்களும் இந்தப் போராட்டத்தில் மிகப் பெரும் சக்தியாக ஒன்றிணைந்தனர். அதன் விளைவாக 5 பேர் படுகொலை செய்யப் பட்டனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இதுவும் இளைஞர்களிடமும் தேச பக்தர்களிடமும் கடும் கோபத்தை உருவாக்கி இருந்தது. மூன்றாவது ஆத்திரமூட்டலாக, காங்கிரஸ் மகாசபையை நடத்தும் பொறுப்பாளர்களாக இருந்த டாக்டர். சைஃபூதின் மற்றும் டாக்டர். சத்தியபால் ஆகிய இருவரையும், காவல் துறை 1919 ஏப்ரல் 10 அன்று கைது செய்தது.

இந்த கைது சம்பவத்திற்கு எதிராக உடணடியாக லாகூர், அமிர்தசரஸ் உள்ளிட்ட பஞ்சாபின் பல்வேறு நகரங்களில் வெகுமக்கள் பிரிட்டிஷாருக்கு எதிராகத் திரண்டது மட்டுமல்லாமல், சில தாகுதல்களிலும் ஈடுபட்டனர். இது இந்தியா முழுவதும் பரவியது. குறிப்பாக டில்லி, கல்கத்தா, அஹமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் பெரும் மக்கள் எழுச்சியை உருவாக்கியது. மோதலாகவும் மாறியது. பல வெள்ளை அதிகாரிகள் உள்ளிட்டு ஏராளமானோர் படுகொலைக்கு ஆளாகினர். பஞ்சாப் மாநிலம் போர்களமாக காட்சியளித்தது.

டாக்டர்கள் கைது மற்றும் மக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து ஜாலியன் வாலாபாக்கில் பெரும் கண்டனப் பொதுக் கூட்டத்திற்கு பகிரங்க அழைப்பு விடுக்கப் பட்டது. சுமார் 20 ஆயிரம் பொது மக்கள் பங்கேற்ற மாபெரும் கூட்டத்தில், ஹன்ஸ்ராஜ் என்பவர் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார். மைதானத்தைச் சுற்றிலும், சுற்றுச் சுவர்களும், ஒரு பக்கம் மட்டுமே நுழிவாயிலாகவும், அதுவும் குறுகியதாகவும் மைதானத்திற்கு செல்லும் வழி இருந்தது. ஜெனரல் டையர் வெள்ளை அதிகாரி 50 பிரிட்டிஷ் காவலர்களையும், 100 இந்தியாவைச் சார்ந்த காவலர்களையும் அழைத்துக் கொண்டு மைதானத்திற்கு வந்தான். கூட்டம் நடத்த அனுமதி இல்லை, இவ்வளவு நபர்கள் ஓரிடத்தில் கூட அனுமதிக்க முடியாது எனவே களைந்து செல்லுங்கள் என உத்தரவிட்டதாகவும், அதற்கு கூடியவர்கள் செவி சாய்க்க வில்லை என்பதாலும், துப்பாக்கிச் சூடு நடத்தியதாக, டையர் மீதான விசாரனையில், அவன் தெரிவித்து உள்ளான். அதாவது 1600 ரௌவுண்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை விசாரிக்க அமைக்கப் பட்ட ஹண்டர் கமிட்டி, டையரை விசாரிக்கிற போது, “நான் ராணுவ பீரங்கியைத் தான் எடுத்துச் செல்ல விரும்பினேன் ஆனால் அந்த நுழைவாயிலுக்குள் வாகணம் செல்லாது என்பதால், அதை விட்டு விட்டு சென்றேன். உத்தரவிட்ட பிறகும் களைந்து செல்லாததால், சுட்டேன் சுட்டேன் குண்டுகள் தீரும் வரை சுட்டேன்” என திமிரான வாக்கு மூலத்தைப் பதிவு செய்தான். இன்றளவும், நமது ஆட்சியாளர்களுக்கு இத்தகைய சட்டங்களும், வாக்கு மூலங்களும் தான் போராடுபவர்களை ஒடுக்கப் பயன்பட்டு வருகிறது. உண்மையில் களைவதற்கு உத்தரவிட்ட போது களைய வேண்டும் என்றால் கூட 20 ஆயிரம் நபர்கள் வெளியேற வாயில் ஒன்றுதான் அதுவும் குறுகலானது என்பதைக் கூட, அன்றைய காவல் அதிகாரிகள் புரிந்து கொள்ளாத வெறி கொண்டவர்களாக இருந்தது.

அன்றைய துப்பாக்கிச் சூட்டில் பலர் மரணமடைய இரவும் முழுவதும் சிகிச்சை இல்லாமல் துன்பப் பட்டதும், குடிக்கத் தண்ணீர் கூட இல்லாமல் அவதிப்பட்டதுமே காரணமாக அமைந்தது. குழந்தைகளும் பெண்களும் இப்படுகொலைக்கு ஆளாகினர். ஒட்டு மொத்த நாடும் கண்டனக் குரல் எழுப்பியது. லண்டனிலும் கண்டன இயக்கம் நடந்தது. அதன் பிறகுதான் மெற்படி நிகழ்வை விசாரிக்கிற ஹண்டர் கமிட்டி அமைக்கப் பட்டது. விடுதலைப் போராட்ட வரலாற்றில் அழிக்க முடியாத வடுவாக மாறிப்போனது ஜாலியன் வாலாபாக். இன்றும் வரலாற்றை உயிர் ஓவியமாக  சொல்லிக் கொண்டிருக்கிறது.

காவல் அதிகாரிக்கு உத்தரவிட்ட பஞ்சாப் மாகாண கவர்னராக அன்று இருந்த ஓ.டயர் என்ற நபரைப் பல ஆண்டுகள் கழித்து லண்டனில் உத்தம் சிங் என்ற இளைஞன் சுட்டுக் கொன்றான். ஜாலியன் வாலாபாக் படுகொலையின் போது 12 வயது கொண்டிருந்த பகத்சிங் அந்த மைதானத்தில் இருந்து ரத்தம் தோய்ந்த மண்ணை எடுத்துச் சென்று வழிபட்டான். இப்படி ஏராளமான இளைஞர்கள் தீவிரமாக விடுதலைப் போரில் பங்கெடுக்கவும், பிரிட்டிஷாரை இந்தியாவை விட்டு விரட்டியே தீர வேண்டும் என உறுதி ஏற்பதற்கும் காரணமாக அமைந்தது.

இந்தியாவின் வளங்களையும், மனிதர்கள் மீதான் உழைப்புச் சுரண்டலையும் இழக்க விரும்பாத வெள்ளை ஏகாதிபத்தியம், போராடியவர்களை கொடுமையாக ஒடுக்கியதன் மூலம் போராட்டங்களை ஒடுக்க நினைத்தது. இன்று நவதாராளமயக் கொள்கைகள் மூலம் நேரடி ஆட்சியதிகாரம் இல்லாமல் இந்தியாவின் மிச்ச வளங்களையும், பன்னாட்டு முதலாளிகள் கொள்ளை அடிக்கிறார்கள். தேவை நாட்டைக் காப்பது. அதற்காக நினைவு தினங்கள் அனைத்தையும் போராட்ட தினங்களாக, வீரர்களுக்கு வீரியம் தரும் எண்ண அலைகளை உருவாக்குவதாக அமைத்திடுவோம். அடிமைத் தனம் எந்த வடிவில் வந்தாலும் முறியடிப்போம்.


நேர்மை

           நேர்மை இனி மெல்ல சாகுமோ?

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்” என்றார் கம்பர். இன்றைய நிலையோ “அரசியல் பிழைத்தோருக்கு அறம் வெற்றுப் பேச்சாகும்” எனக் கொள்ளப் படுகிறது. நேர்மை எங்கே இருக்கிறது? தேடினாலும் கிடைக்குமா? என்பது தெரியவில்லை. இப்போது நாம் பார்க்கிற மூன்று செய்திகள், மேற்படி விவாதத்தை வலுப்படுத்துகின்றன. ஒன்று சிறையில் இருந்து பிணையில் விடுவிக்கப் பட்ட முன்னாள் அமைச்சர் ஆ.ராசா குறித்தது. இரண்டு மத்திய அமைச்சராக இருக்கும் ப. சிதம்பரம் தேர்ந்தெடுக்கப் பட்ட விதம் பற்றிய நீதிமன்ற விவாதம் குறித்தது. மூன்று உ.பி.யில் டிம்பிள் என்ற பெண்மணி போட்டியின்றி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப் பட்டது.

ராசா சென்னை, கோவை, நீலகிரிக்கு வந்திறங்கிய போது ஆயிரக் கணக்கில் தொண்டர்களைத் திரட்டி வரவேற்றது அவரின் தனிமனித உரிமை  என்ற போதிலும், அதன் மூலம் மக்கள் ஆதரவு இருப்பதாகவும், தான் குற்றமற்றவர் என்பதாகவும் நிருவுவதற்கும் முயற்சிக்கிற ஏற்பாடாக கருத வேண்டியுள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு இருப்பவர்களெல்லாம் குற்றவாளிகள் ஆவதில்லை என்ற போதிலும், ராசா போன்றோர் மீது, நீதிமன்றம் கொடுத்துள்ள நிபந்தனைகளையும் கணக்கில் எடுக்க வேண்டும்.

ப.சிதம்பரத்தின் விண்ணப்பத்தை மதுரை உயர் நீதிமன்றம் ஏற்கவில்லை என்பதே, குற்றம் நிரூபிக்கப் பட்டதற்கான ஆதாரம் எனக் கருதவில்லை. ஆனால் கடந்த ஒருமாத கால அவகாசத்தில் இரண்டாவது முறையாக மத்திய அமைச்சர் சிதம்பரம் சர்ச்சைக்கு உள்ளாகிறார். முதலில் ஏர்செல் விற்பனை விவகாரத்தில், அவரது புதல்வரின் நடவடிக்கையும் இருக்கிறது, என்பது நாடாளுமன்றத்தில் சர்ச்சையானது. இரண்டாவது, அவர் தேர்ந்தெடுக்கப் பட்ட விதம் குறித்து தற்போது முன்னுக்கு வந்துள்ள சர்ச்சை. இவைகளின் மீது முறையான விவாதம் நடைபெறுவதற்கு, அவரின் உள்துறை அமைச்சர் பதவி தடையாக இருக்குமோ என்ற ஐயம் நியாயமானதே.

அடுத்ததாக உத்திரப் பிரதேச அரசியலில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மூலம் நுழைந்துள்ள டிம்பிள் என்னும் பெண்மணி. இவர் முதல்வர் அகிலேஷின் மணைவி. ஏற்கனவே இவர்களின் குடும்பத்தில் முலாயம் சிங் யாதவ், அகிலேஷ், முலாயமின் தம்பி, மைத்துனர், என்று நெடும் பட்டியல் கொண்ட குடும்ப உறுப்பினர்கள், அமைச்சர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக, பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் டிம்பிளின் தேர்வு ஜனநாயகத்தை கேலி கூத்தாக்குகிறதோ? என்ற எண்ணம் உருவாகாமல் இருக்காது.

இந்திய அரசியல் அதிகாரத்தில் இருந்தவர்களுக்கு முன்னுதாரணமாக இருந்தவர், லால் பகதூர் சாஸ்த்திரி. இவர் அரியலூர் ரயில் விபத்தில் 144 நபர்கள் மரணம் அடைந்ததற்கு பொறுப்பேற்று தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். விபத்திற்கு ஒரு துரும்பளவும் தொடர்பில்லாத அமைச்சரின் ராஜினாமா நிகழ்வு அதிகாரிகளை பெரும் அளவில் பொறுப்புடன் செயல்பட நிர்பந்திக்கும் ஏற்பாடு என்று புரிந்து கொள்வது அவசியம். ஒரு குழுவின் செயல் பாட்டில் எங்கேயோ நடந்த தவறை சரி செய்ய இத்தகைய நடவடிக்கைகள் அன்றைக்குத் தேவைப்பட்டிருக்கலாம். இன்று மனித இழப்புகளும் பொருள் இழப்புகளும் மிக சாதாரணமாகி, மலிந்து விட்டன. இன்றைய சூழலில், அதிகமான வளர்ச்சித் திட்டங்களும், சர்வ தேச அளவில் இந்தியாவின் மனித வள மேம்பாடு குறித்த முன்னேற்றமும் அதிக அளவில் எதிர்பார்க்கப் படுகிறது. எனவே இன்றைய  அமைச்சர்களுக்கும், அரசியல் கட்சிகளில் உயரிய பொறுப்பில் இருப்பவர்களுக்கும் கடந்த காலத்தை விட கூடுதல் பொறுப்புணர்ச்சி தேவை. ஆனால் குற்றச்சாட்டுப் பட்டியலில் இடம் பெற்ற பிறகும் தன் மீது நடைபெறும் விசாரணைக்கும், வகிக்கும் பதவிக்கும் தொடர்பில்லை, என விளக்கம் அளிப்பது ஏற்புடையதல்ல.

நேர்மையாக நிர்வகித்தல் குறைந்து வருகிறது, என்பதற்கு, விக்கிப்பீடியா வெளியிட்டுள்ள அதிர்ச்சி தரும் பட்டியலை உதாரணமாகக் கொள்ளலாம். இந்திய அரசியலில் ஊழல் குற்றச்சாட்டு பல இருந்தாலும் சில தீவிர சர்ச்சைக்கு உரியதாக மாறியது. ஒன்று 1958ல் 1.2 கோடி சம்மந்தப்பட்ட முந்த்ரா ஊழல். இரண்டு 1971 ல், 65 லட்சம் சம்மந்தப் பட்ட நகர்வாலா ஊழல். மூன்று 1987ல் 65 கோடி சம்மந்தப்பட்ட ஃபோபர்ஸ் ஊழல். நான்கு 1996ல் 900 கோடி மாட்டுத் தீவன ஊழல்.  ஐந்து 1999ல் சில ஆயிரம் கோடி சம்மந்தப் சவப்பெட்டி ஊழல். ஆறு 1 லட்சத்து 75 ஆயிரம் சம்மந்தப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஊழல்.  இவை இல்லாமல் கழிப்பிடம், சுடுகாடு ஆகிய அடிப்படைத் தேவைகளிலும், நாட்டைக் காக்கும் பணியில் உயிர் துறந்த, ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு வீடு ஒதுக்குவதிலும் என எல்லா கொள்முதல்களிலும் ஊழல் அரங்கேறியுள்ளது.

1948ல் ஒரு ஊழலில் துவங்கிய முறைகேடு, இப்போது 2012 ன் எட்டு மாத அவகாசத்திற்குள்ளேயே 89 ஊழல்கள் எனப் பெருகியுள்ளது. மத்திய, மாநில அரசுகளால் நிகழ்த்தப் பட்டதாக, சிஏஜி குறிப்பிட்டது என்பதனால், வழக்குகள் பதிவு செய்யப் பட்டு அம்பலமாகியுள்ளது. இதில் சுரங்கம் ஒதுக்கீடு மூலம் அரசுக்கு ஏற்பட்ட இழப்பாக 1 லட்சத்து 86 ஆயிரம் கோடி ஊழல் தற்போது முன்னுக்கு வந்துள்ளது. 2012 ல் மட்டும் 19 வகையான ஊழல்களில் 14 லட்சத்து 41 ஆயிரத்து 319 கோடி அரசுப் பணம் முறைகேடு செய்யப் பட்டுள்ளது அல்லது அரசுக்கு வரவேண்டிய வருவாயில் இழப்பு ஏற்பட்டுள்ளது ( ஆதாரம் விக்கிப் பீடியா).

இந்தியாவில் ஆளும் அரசியல்வாதிகளாக பொறுப்பில் இருப்பவர்கள் மற்றும் இருந்தவர்கள் சம்மந்தப் பட்ட ஊழல் 24. இதில் 4 நபர்கள் தண்டிக்கப் பட்டுள்ளனர். 4 நபர்கள் விடுதலை செய்யப் பட்டுள்ளனர். நீதிமன்ற விசாரணையில் இருவரின் மீதான குற்றச்சாட்டு நிலுவையில் உள்ளது. கடுமையான குற்றச்சாட்டின் பெயரில் வழக்குப் பதிவு செய்யப் பட்டவர்கள் 3 நபர்கள். குற்றப்பத்திரிக்கை மட்டும் தாக்கல் செய்யப் பட்டவர்கள் 11. தண்டிக்கப்பட்டாலும், குற்றம் சாட்டப் பட்டாலும், அடுத்து வருபவர், மேற்படித் தவறை செய்யாமல் இருப்பதில்லை.  1990 களுக்குப் பிறகு நவீன தாராளமயமாக்கல் கொள்கை பிரதான காரணம், என்பதை 1990க்குப் பின் நடைபெற்ற ஊழல்களே அதிகம் என்பதிலிருந்து அறியலாம்.

ஊழலின் ஊற்றுக் கண்ணாக நேர்மை யின்மை இருந்தாலும், அது உயர் பொறுப்பில் உள்ளவர்களால் தான் அரங்கேறுகிறது. உயர் பொறுப்பிற்கு வருவதற்கு தகுதியாக கல்வியும், நிர்வாக அறிவும் இருப்பதுடன் நேர்மையின்மையும் தேவைப்படுவதாக புரிந்து கொள்ளப் படுகிறது. தகுதி இல்லாதவர்களுக்கு அதிக சலுகை கொடுத்தல் துவங்கிய காலத்தில் தான் ஊழல்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. மத்திய ஆட்சி அமைப்பில் கூட்டணிக் கட்சிகள் ஆதிக்கம் செலுத்தினாலும், சலுகைசார் (favouratism) நடவடிக்கைகளுக்கு கூட்டணி ஆட்சி முறையும் ஒருவகையில் பங்களிப்பு செய்கிறது.

இந்தப் பின்னணியில் தான் குடும்ப அரசியல், பதவி விலக மறுத்தல், சிறையில் இருந்து வெளி வரும் போது கொடுக்கிற பிரமாண்ட வரவேற்புகள் அரசியல் அரங்கில் அரங்கேறி வருகிறது. லால் பகதூர் சாஸ்த்திரி உள்துறை அமைச்சராக இருந்த போது, அவருக்கு சொந்தமாக வீடு இருந்ததில்லை. அதை அன்றைய சக அமைச்சர்கள் ஹோம்லெஸ் ஹோம் மினிஸ்ட்டர் என நையாண்டி செய்ததாக, சொல்லப் படுகிறது. 1988 ம் ஆண்டு திரிபுரா மாநிலத்தில் இடது முன்னணி தோற்று, காங்கிரஸ் வெற்றி பெற்ற பின்னணியில், வெளி வந்த தினமணி செய்தி இன்று மிகமுக்கியமானது. அந்த செய்தி, ”அதிசயம் ஆனால் உண்மை”, என்று தலைப்பிடப் பட்டு இருந்தது. முதல்வராக இருந்த நிருபன் சக்கரவர்த்தி, முதல்வருக்கு ஒதுக்கப் பட்ட இல்லத்தில் இருந்து, வெளியேறி, சைக்கிள் ரிக்க்ஷாவில் ஏறி கட்சி அலுவலகத்திற்கு குடியிருக்கச் சென்றார், என்பது பிரசுரிக்கப் பட்டிருந்தது. மாநில அமைச்சராக இருந்த கக்கன் தனது இறுதி நாள்களில் அரசு மருத்துவமனையில் உரிய படுக்கை வசதி கூட இல்லாமல், சிகிச்சைப் பெற்று வந்தார்.

மேற்படி உதாரணங்கள் பல இருந்தாலும், அவை இன்றைய தலைமுறைக்கு சென்றடையும் ஏற்பாடு இல்லை. பாடப்புத்தகங்கள் இத்தகைய தகவல்களை முழுமையாக சொல்வதில்லை. நேர்மை குறித்து சில விவாதங்களை முன் வைக்கிறது. இருந்தாலும் தொலைக்காட்சி அல்லது நாளிதழ் செய்திகளை இனைத்து பார்க்கிற எந்த மாணவருக்கும், அதைப் பின்பற்றும் சூழலை உருவாக்காது. அநேகமாக ஆவணக்காப்பகத்தில், ஆய்வு மாணவர்கள் மட்டும் படிக்கும் செய்தியாக, மேலே குறிப்பிட்ட நல்ல உதாரணங்கள், சுருங்கி விடும் அபாயம் இருக்கிறது. எனவே இன்றைய அமைச்சர்களோ, அதிகாரிகளோ ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளாகிற போது, கடந்த கால அல்லது நிகழ்கால முன் உதாரணங்களுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். இல்லையென்றால் நேர்மை ஏட்டளவில் மட்டும் காட்சி தரும். நேர்மை பின்பற்றப் படாவிடில், சட்டம், ஒழுங்கு, நீதி என்ற வார்த்தைகள் நகைச்சுவை காட்சிகளாகவோ, சிரிப்பு போலீஸ்களாகவோ மாறி விடும்.

மருத்துவக் கல்வி


பாதுகாக்கப் பட வேண்டிய உயிர்காக்கும் தொழில்

நோய்நாடி நோய்முதல்நாடி அது தனிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

என்ற வள்ளுவரின் வரிகள், சமூகம் ஒரு பிரச்சனை குறித்து தீர ஆய்ந்து முடிவெடுப்பதற்கான சூத்திரம், என்ற பொருள் தருவதனால் தான் புகழ் பெற்ற குறளாக அமைந்துள்ளது. இதை மத்திய அரசு கணக்கில் கொள்ள வெண்ண்டும். ஒருமுறை தவறு நிகழலாம், அடுத்தடுத்து நிகழ்ந்தால், அதற்கு அடிப்படைக் காரணத்தைக் கண்டறிந்து தீர்க்க வேண்டும். இப்போது மருத்துவக் கல்விக்கான இடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான முயற்சியில் தனியார் கல்லூரி நிறுவனங்கள், ஈடுபடுகிற போது, லஞ்சம் கொடுத்தார்கள். கைது செய்யப் பட்டார்கள், என்ற செய்தி அடுத்தடுத்த ஆண்டுகளில் வெளிவந்து கொண்டிருக்கிறது.

கேதன் தேசாய் என்பவர் 2010ல் இந்திய மருத்துவக் கவுன்சிலின் தலைவராக இருந்த போது, அவர் மீதான புகாரை, இந்த தேசம் மறந்திருக்க வாய்ப்பில்லை. வீட்டின் சுவர்களில் கிலோ கணக்கில் தங்கம் அடுக்கப் பட்டு இருந்தது, என்ற செய்தி ஒட்டு மொத்த இந்தியர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய செய்தி. அவர் கைது செய்யப்பட்டது, பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியின் மாணவர் சேர்க்கைக்கான இடங்களை நிச்சயிக்கப் பட்ட இடங்களை அதிகரிப்பதற்கான விண்ணப்பத்தைப் பரிசீலித்து அனுமதித்தார். அப்படி அனுமதிப்பதற்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றார் என்பதே அடிப்படைக் குற்றச்சாட்டு.

2010 ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கேதன் தேசாய் கைது செய்யப் பட்டார் என்பது மட்டுமல்ல. அதற்கு முன் 2001 ஆண்டில், இந்திய மருத்துவக் கவுன்சிலின் பொறுப்பில் இருந்த போதே கைது செய்யப் பட்டுள்ளார். 65 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் சி.பி.ஐ யினால் கைது செய்யப் பட்டு, பின் 2009 ல் அதே சி.பி.ஐ யினால் அந்தப் பணம் நியாயப் பூர்வமானது, எனக் குறிப்பிடப் பட்டதால், கேதன் தேசாய், விடுதலை செய்யப்பட்டார். மீண்டும் அதே நபர் இந்திய மருத்துவக் கவுன்சிலின் தலைவராக பொறுப்பெடுத்தார் என்பதைக் கூட்டுக் கொள்ளையின் பகுதியாகவே புரிந்து கொள்ள முடியும்.

அதுமட்டுமல்ல, இந்திய மருத்துவக் கவுன்சில் பெரும் லாபம் ஈட்டித் தருகிற அமைப்பாகவே, கேதன் தேசாய் போன்ற நபர்களால் பார்க்கப் பட்டு வந்துள்ளது. 2010ல் கேதன் தேசாய் கைது செய்யப் பட்ட பின்னணியில், புலனாய்வுத் துறையைச் சேர்ந்தோர், 30 முதல் 35 மருத்துவக் கல்வி நிறுவனங்கள், லஞ்சம் கொடுத்ததன் மூலம் துவக்கப் பட்டவையே, எனக் கூறியுள்ளனர். அன்று சுகாதாரத் துறைச் செயலாளராக இருந்தவர், ”தற்போதைய இந்திய மருத்துவக் கழகம் களைக்கப் படும், புதிதாக 7 நபர்கள் கொண்ட குழு அமைத்து செயல்பட வழிவகை உருவாக்கப் படும், பல் மருத்துவக் கவுன்சில், மருந்தாளுனர் கவுன்சில் உள்ளிட்டு எல்லாவற்றையும் ஒன்றாக பராமரிக்கும் எண்ணமும் இருக்கிறது”, என்றார். உண்மையில் இந்த மாற்றம் அதிகாரத்தை வேண்டுமானால் மாற்றலாமே தவிர, பிரச்சனையைத் தீர்க்க உதவாது.

ஏனென்றால், பெரும்பான்மையான மருத்துவக் கல்லூரிகள், மற்றும் துணை மருத்துவக் கல்லூரிகளை நடத்துபவர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஆவர். தற்போதைய மத்திய அமைச்சரவையிலும் கூட, மருத்துவக் கல்லூரி உரிமையாளர்கள் இடம் பெற்றுள்ளனர். மருத்துவக் கல்வி நிறுவனங்கள் பெரும் லாபம் தரும் தொழிற்கூடங்களாக மாறியிருப்பதே இதற்குக் காரணம். தற்போது தமிழகத்தை சார்ந்த இருவர் கைது செய்யப் பட்டுள்ளது, பல் மருத்துவம் சார்ந்தது. பல் மருத்துவக் கல்லூரியில் முதுகலைப் பட்டப் படிப்புத் துவங்குவதற்கு அங்கீகாரம் பெற, கொடுக்கப் பட்ட லஞ்சம், ஒரு கோடி என பேரம் பேசப்பட்டுள்ளது. இது தொடர்பாக பல்வேறு இடங்களில், சி.பி.ஐ ரெய்டுகள் நடைபெற்று வருகின்றன.

சிலர் கைது செய்யப் படுவது கண் துடைப்பு நடவடிக்கைகளாகவே முடிவுறுகின்றன. உண்மையான தீவிர நடவடிக்கைத் தேவைப் படுகிறது. மருத்துவர், மனிதர்களால், உயிரைக் காக்கும் கடவுள் என்ற அந்தஸ்தில் வைத்துப் பார்க்கப் படுகிறார். அத்தகைய மருத்துவர் உருவாகும் கல்வி நிலையம், லஞ்சம் கொடுக்கப் பட்டதால், உருவானது என்பதும், அதற்காக அவர் குறைந்தது 35 லட்சம் ரூபாயும், முதுகலைப் படிப்பாக இருந்தால் ஒரு கோடிக்கும் மேல் சேர்க்கைக்காக செலவிட வேண்டியுள்ளது, என்பதும் பெரும் அதிர்ச்சி தரும் உண்மை. நன்கொடைத் தடைச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள் செயலிழந்து நிற்கின்றன, என்பதை இதன் மூலம் அறிய முடியும்.

இத்தைகைய வாய்ப்புகள் மூலம்தான் கேதன் தேசாய் போன்றவர்கள், 3000 கோடிக்கும் அதிகமான ரூபாய் பெறுமான சொத்துக்களைச் சேர்த்துள்ளனர். ஒரு மாதத்தில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விமான டிக்கட்டிற்கும், 20 லட்சம் ரூபாய் வரையிலும், 5 அல்லது 7 நட்சத்திர ஹோட்டல்களில் தங்குவதற்கும் தனிப்பட்ட முறையில் செலவிட முடிந்துள்ளது. மருத்துவத் துறையின் ஒரு பொறுப்பில் இருக்கும் நபர் இந்த அளவிற்கு சொத்து சேர்த்தது, உயிர் காக்கும் பணிக்கானத்  தொழில் என்ற கருத்தை மறுத்து வருகின்றனர், என்பதைத் தெளிவுப் படுத்துகிறது.

தமிழகத்தில் பல் மருத்துவக் கல்லூரிகள், ஒரே ஒரு அரசு கல்லூரி உள்ளிட்டு 19 உள்ளன. அதில் 1200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆண்டு ஒன்றுக்குச் சேர்க்கப் படுகின்றனர். ஒற்றைச் சாரள முறை என்ற மாணவர் சேர்க்கை வடிவங்கள் தகுதிப் படியை முறைப் படுத்த உதவியுள்ளது என்பதை மறுக்க முடியாது. ஆனால் அதேவேளையில், மாணவர் சேர்க்கைக்கான, கட்டணத்தைக் குறைக்க உதவவில்லை என்பதையும் மறுக்க முடியாது.

நமது நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும், பல் மருத்துவத்திற்கான விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. பல் போனால் சொல் போகும் என்பது ஆழமாக மனதில் பதிந்துள்ள ஒன்று. எனவே இதற்கான சிகிச்சையும் முக்கியத்துவம் பெறுகிறது. சிகிச்சை அளிக்கும் மருத்துவர், திறமையுடன் மனிதநேயமும் கொண்டவராக இருத்தல் வேண்டும். இல்லையென்றால் உயிர் காக்கும் பணி செய்யும் மருத்துவரை மக்கள் எளிதில் அனுக முடியாது. இன்று மருத்துவக் கவுன்சில் தலைவர் பொறூப்பில் இருந்தவர் கைது செய்யப் பட்டிருப்பதும், பல் மருத்துவக் கவுன்சில் உறுப்பினர் கைது செய்யப் பட்டிருப்பதும், இந்தத் துறைகள் தனது, தார்மீக குணத்தை இழந்து கொண்டிருக்கிறது, என்பதை வெளிப்படுத்துகிறது.

இந்திய மருத்துவக் கவுன்சில் அல்லது பல் மருத்துவக் கவுன்சில் ஆகியவை, கல்வி நிலையங்களைத் தகுதி கொண்டவையாக இருப்பதை உறுதி செய்வது, பட்டம் பெற்று மருத்துவர்களாக பதிவு செய்தோரின் தொழில் நேர்த்தியைக் கண்காணிப்பது, ஆகிய பொறுப்புக்களை செவ்வனே நிறைவேற்ற வேண்டிய அமைப்புகளாகும். கைது அரங்கேற்றங்கள் உருவாக்கியுள்ள கேள்விகள்  உடணடியாகத் தீர்க்கப் பட முடியாதவை. தாராளமயக் கொள்கைகளை அனுமதிப்பதாகக் கூறும் மத்திய அரசு மற்றும் பிரதமர், தனி மனித வளர்ச்சியையும், சமூக 
வளர்ச்சியையும் மேம்படுத்துவதற்காகவே, இத்தகைய கொள்கைகள் என்று நியாயப் படுத்துகின்றனர்.

விளைவு அதற்கு எதிர் திசையில் இருப்பதைக் காணமுடிகிறது. உதாரணத்திற்கு இந்தியாவைப் பொறுத்தளவில் 2000 நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதாச்சாரம் உள்ளது. கிராமங்களில் மருத்துவர் மக்கள் ஆகியோரின் விகிதாச்சாரம் 1:25000 என இருப்பது மிக மோசமானது என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். நகரங்களில் 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட மிகச்சொற்பமான முன்னேற்றம். ஆனால் கிராமங்களில் முன்னேற்றமே இல்லை, என்பதை மேற்படி விவரம் மூலம் அறியலாம். 2011 ஜூலை 31 கணக்குப்படி, 8.5 லட்சம் மருத்துவர்கள் பதிவு செய்திருந்தாலும், 6 லட்சம் மருத்துவர்கள் மட்டுமே மருத்துவத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர், என்று இந்திய மருத்துவக் கவுன்சில் வெளியிட்ட செய்தி தெரிவிக்கிறது.


அதே மருத்துவக் கவுன்சில் அதிகபட்சமாக சேர்க்கப் படும் மாணவர் எண்ணிக்கையை 150 ல் இருந்து 250 ஆக உயர்த்த வேண்டும். அதன் மூலம் மருத்துவர் மற்றும் மக்களுக்கான விகிதாச்சாரத்தைக் குறைக்க முடியும் என்று கூறுகிறது. மருத்துவக் கவுன்சிலின் இந்தக் கருத்து ஏற்கப் பட்டு கண்காணிப்புடன் அமலானால் உடணடியாக பெரும் அளவில் மருத்துவர்களின் எண்ணிக்கை உயரும். அதற்கான அடிப்படைக் கட்டமைப்புகள் தமிழகம் போன்ற மாநிலங்களின் அரசு மருத்துவக் கல்லூரிகளிலேயே இருக்கிறது. உயிர் காக்கும் பணி என்பதனால், அடிப்படைக் கட்டமைப்புகளிலும், பயிற்சியிலும் அக்கறை மற்றும் அமலாக்கம் ஆகியவற்றை உறுதி செய்து, கூடுதல் மாணவர் சேர்க்கையை அனுமதிக்கலாம். அது கேதன் தேசாய் போன்றவர்களின் ஆதிக்கத்தைத் தடுக்கும். உயிர் காக்கும் பணியை மேம்படுத்தும்.

சீனப் பயணம்


கூட்டு பேர உரிமையும் – பொருளாதார நெருக்கடிக்கான தீர்வும்!!

உலகின் பல பகுதிகளில் தொழிலாளி வர்க்கம் தனது உரிமையைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தில் தீவிரமாக இறங்கியுள்ளது. நெருக்கடியில் இருந்து மீள்வது என்ற பெயரில், இரக்கமற்ற முதலாளித்துவ சுரண்டலுக்கு சலுகைகள் தந்து பாதுகாக்கும் அரசுகள் தொழிற்சங்க நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த தீவிரம் காட்டுகிறது. இந்நிலையில் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ), ஆசியா – பசிபிக் பிராந்தியத்தில் உள்ள தொழிற் சங்க ஊழியர்களுடனான ஆய்வுப் பட்டறையை, மக்கள் சீனத்தில் ஐந்து தினங்கள் நடத்தியது. 10 நாடுகளில் உள்ள 16 தொழிற் சங்கங்களின் பிரதிநிதிகளாக 24 நபர்கள் கலந்து கொண்டனர். இதில் 11 பெண் தொழிற்சங்கத் தலைவர்களும் அடங்குவர். இந்தியாவில் இருந்து ஐ.என்.டி.யு.சி சார்பில் ஒருவரும், சி.ஐ.டி.யு சார்பில் நானும் கலந்து கொண்டோம்.

மக்கள் சீனத்தின் தொழிற் சங்கமான, அனைத்து சீன தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு, மேற்படி ஆய்வுப் பட்டறையை நடத்தித் தரும் பொறுப்பை ஏற்று சிறப்பாக நடத்திக் கொடுத்தது. துவக்க நிகழ்ச்சி மற்றும் நிறைவு நிகழ்ச்சி ஆகியவற்றையும் சேர்த்து 13 அமர்வுகள் நடத்தப் பட்டன. ”சம்பள உயர்வு – வேலை வாய்ப்பு அதிகரிப்பு – நெருக்கடியில் இருந்து மீள்தல்” என்பது பொதுவான தலைப்பாக இருந்தது. 2008 ல் வெளிப்பட்ட பொருளாதார நெருக்கடி, நீடித்து நிற்கிற நிலையில், பலமானத் தொழிற்சங்க அமைப்புகளும், அதன் மூலம் தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான கூட்டு பேர உரிமைகளும் பலம் பெற வேண்டிய தேவை உலக அளவில் உருவாகியுள்ளது. மனிதவளம் நிறைந்த ஆசியா கண்டம் மூலதனத்தை பெருமளவில் ஈர்த்து வருகிறது. ஆசியா – பசிபிக் பிராந்தியத்தில், வலுவான கூட்டு பேர உரிமை மூலம், நாகரீகமான ஊதியத்தையும், வேலையையும் பெற முடியும், என்பதை நிறுவுவதே ஆய்வுப் பட்டறையின் பிரதான நோக்கமாகும்
.
பல்வேறு நாடுகளின் அனுபவங்கள்:

உலகப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட இரண்டு ஆண்டுகள் காலத்தில் அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் தெருவில் நாங்கள் 99 சதம் என்ற முழக்கத்துடன் நீடித்து நடைபெற்ற போராட்டம் மிக முக்கியமாக கவணிக்கப் பட வேண்டிய ஒன்று. செல்வ வளம் மிகக்குறைவான நபர்களின் கைகளில் சிக்குண்டுள்ளது. அதேநேரத்தில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு, அரசுகள் தொழிலாளர் உரிமைகளில் கை வைப்பதை ஏற்க முடியாது என்பதே போராட்டக்காரர்களின் கோரிக்கையாகும்
.
மேற்படிக் கோரிக்கைக்குக் காரணம், கடந்த 30 ஆண்டுகளாக வளர்ந்த நாடுகள் பின்பற்றிய கொள்கைகள், அசமத்துவத்தை மிகப் பெரிய அளவில் அதிகரித்து உள்ளது ஆகும். அசமத்துவத்தின் அளவு உயர்வதை கட்டுக்குள் வைக்க பெருமுதலாளிகள் மீதான வரிவிதிப்பில் சலுகைகள் கூடாது என்பது, மிகமுக்கியமான, ஒரு அணுகுமுறை, ஆனால் வளர்ந்த நாடுகளில் இந்த அணுகுமுறை தொடர்ந்து மீறப்பட்டுள்ளது. இதன் விளைவு பில்லியன் டாலர் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை பெரும் எண்ணிக்கையில் உயர்ந்தது.

 சர்வதேச நிதி முனையம் (ஐ.எம்.எஃப்) வெளியிட்டுள்ள விவரங்களில் இருந்து ஐ.எல்.ஓ தெரிவித்துள்ள கருத்துக்கள் பின்வருமாறு. பொருளாதார ரீதியில் வளர்ந்த நாடுகள் என்று குறிப்பிடப்படுகிற, 16 ஐரோப்பிய நாடுகளின் தொழிலாளர்களுக்கான வருவாய் சராசரி 1970 களில் 70 என்ற அளவில் இருந்து 1980 காலம் வரையிலும், சராசரி 80 என்ற அளவை நோக்கி உயர்ந்தது. ஆனால் 1980 களில் சரியத் துவங்கியது. 2010ம் ஆண்டில் தொழிலாளர்களின் வருவாய் சராசரி 60 ஆகக் குறைந்துள்ளது. அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளின் தொழிலாளர் வருவாய் சராசரி 1970 களில் 70 என்பதில் இருந்து 1980களில் 75 என உயர்ந்து பின்னர் 2010ல், 55 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் 70 ஆக இருந்த வருவாய் சராசரி, படிப்படியாகக் குறைந்து 2010ல் 53என குறைந்துள்ளது. அதாவது, வளரும் நாடுகளின் தொழிலாளர் வருவாய் 1970 காலத்தில் இருந்து படிப்படியாகக் குறைய மட்டுமே செய்துள்ளது. வளர்ந்த நாடுகளைப் போல் 1970 முதல் 80 காலத்தில் ஏற்பட்ட உயர்வையும் அனுபவிக்கவில்லை என்பது துயரம் தரும் செய்தியாகும்.

அனால் உற்பத்தித் துறையில் 1999ன் போது இருந்த உற்பத்தி அளவு 2010ன் போது, 15 மடங்கு வளர்ச்சி பெற்றுள்ளது. தொழிலாளர் ஊதியமோ, கடந்த காலங்களை விட மிகக் குறைவாகவே உயர்வு பெற்றுள்ளது. தொழிலாளர்களுக்கான வருவாயில் ஏற்பட்டுள்ள குறைபாடு, உணவு மற்றும் இதர அத்தியாவசியத் தேவைகளை நுகர்வதிலும்  குறைபாட்டை உருவாக்குகிறது. இது மொத்தத்தில் உற்பத்தித் துறையைப் பாதிக்கவும், வேலை வாய்ப்பின் மீது உறுதியற்ற நிலையையும் ஏற்படுத்தவும் செய்கிறது. இதன் காரணமாக நெருக்கடியில் இருந்து மீள்வதற்குப் பதிலாக, மேலும் நெருக்கடிக்குள் சிக்கிக் கொள்ளும் தன்மை 
அதிகரித்து வருகிறது.

மேற்படி நிலைமைகளின் தாக்கம் தொழிற்சங்கங்களின் கூட்டு பேர உரிமையைக் கடுமையாகப் பாதிக்கிறது. அதே போல் அமைப்பு ரீதியில் திரட்டப் பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்து, பலமடங்கு அமைப்பு சாராத் தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. குறிப்பாக ஐரோப்பாக் கண்டத்தினை மிகப் பெரிய அளவில் தாக்கியுள்ளது. 2008 ல் 6.9% மாக இருந்த வேலையின்மை, 2013 மார்ச் வரையில் மட்டும் 10.9% மாக உயர்ந்துள்ளது. குறிப்பாக 24 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கான வேலையின்மை 23.5 சதமாக வளர்ச்சி பெற்றுள்ளது. காண்ட்ராக்ட் முறையின் மூலமான வேலை வாய்ப்பும், சுய வேலைவாய்ப்பு என்று சொல்லிக் கொள்கிற வேலை வாய்ப்பும் அதிகரிக்கவும், கூட்டு பேர உரிமையைப் பறிக்கிற நிலையும் ஐரோப்பாவில் அதிகரித்துள்ளது.  

மக்கள் சீனத்தின் அனுபவம்:

சீனா மனிதவளம் நிறைந்த நாடுகளில் முதல் இடத்தில் உள்ள நாடு என்பது அறிந்த ஒன்று. ஆண்டு ஒன்றுக்கு, 55.4 சதமான பட்டதாரிகளுக்கு மட்டுமே வேலைவாய்ப்பை உருவாக்க முடிந்துள்ளது. 23 சதமான பட்டதாரிகள், தாங்கள் எதிர்பார்த்த வேலை வாய்ப்பு இல்லாததால், தற்போது வேலை செய்ய விரும்பவில்லை என்பதையும், 21 சதமான பட்டதாரிகள் வேலையற்றவர்கள் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளனர். இது 2009 ஆம் ஆண்டு ஆய்வறிக்கை தரும் தகவலாகும். மற்றொரு புறம், கடலோர மாகாணங்களிலும், புதிய தொழில் வளர்ச்சி உருவாகும் நகரப் பகுதிகளிலும் வேலைக்கான ஆள் பற்றாக்குறை உருவானது. அதேபோல் தொழில் வளர்ச்சி பகுதிகளை நோக்கி இடம் பெயர்வது அதிகரிப்பதும் இக்காலத்தில் முன்னுக்கு வந்த பிரச்சனையாக உள்ளது. குறிப்பாக ஃபாக்ஸ்கான் போன்ற மின்னனு சாதனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் இளம் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை உருவானது, அரசுக்கும், ஏ.சி.எஃப்.டி.யு விற்கும் மிகப் பெரிய சவாலாக விளங்கியது.

இவைகளை எதிர் கொள்ள அரசு மற்றும் ஏ.சி.எஃப்.டி.யு ஆகியவை இணைந்து எடுத்த சில முயற்சிகள் பலன் தந்துள்ளன. வேலையாள் பற்றாக்குறை தனியார் நடத்தும் பெரும் நிறுவனங்களில் உருவாக அடிப்படைக் காரணம், போதுமான ஊதியம் வழங்கப் படாதது என்பதைத் தனியார் நிறுவனங்களுக்கு சுட்டிக் காட்டின. ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் மாதம் ஒன்றுக்கு 147 அமெரிக்க டாலர் (900 யுவான்) அளவிற்கு வழங்கப் பட்ட ஊதியம் 2010ல் 197 டாலராகவும் (1200 யுவான்), அடுத்த ஆண்டில், 328 டாலராகவும் (2000 யுவான்) உயர்த்த நடவடிக்கை எடுக்கப் பட்டது. அதேபோல் ஹோண்டா நிறுவனத்தில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்ததைத் தொடர்ந்து, மாதாந்திர ஊதியம் ஆண்டுக்கு 500 யுவான் (82 டாலர்) அளவிற்கு ஊதிய உயர்வுக்கான நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது. இது இளம் தொழிலாளர்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்கியது. மேலும் அரசு சட்டரீதியில் குறைந்த பட்ச ஊதியத்தை ஆண்டுக்கு ஒரு முறை பரிசீலிக்கவும் அதன் அடிப்படையில் மாற்றத்தை ஏற்படுத்தவும் செய்ததால் முன்னேற்றம் உருவானது. அதாவது, குறைந்த பட்ச ஊதியம் மாதத்திற்கு 1200 யுவான் (197 டாலர்), (11520 ரூபாய்) என்பதாகத் தீர்மானிக்கப் பட்டது.

மேற்படி நடவடிக்கை, இளம் தொழிலாளர்களிடம் தனியார் துறையில் வேலையில் சேரும் ஆர்வத்தை உருவாக்கவும், வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைக்கவும் பெருமளவில் பயன்பட்டுள்ளது. ஆசியக் கண்டத்தில் ஆண்டு சராசரி ஊதிய உயர்வு 2008ல் 2.8 ஆக இருந்தது, 2009ல் 1.5 ஆக குறைந்தது. இதில் சீனாவின் பங்களிப்பான 0.8 சதத்தை கழித்து விட்டால், ஆசியா கண்டத்தின் ஊதிய உயர்வு வளர்ச்சி விகிதம் 0.7 சதமாக மட்டுமே இருக்கும். அதாவது மக்கள் சீனத்தில் ஊதிய உயர்வு விகிதம், ஒட்டு மொத்த ஆசிய நாடுகளின் கூட்டுத் தொகைக்கு சமமாக இருக்கிறது. இதற்கு சீனாவில் உள்ள தொழிற் சங்க நடவடிக்கையும் ஒரு காரணம் எனச் சொல்கிறார்கள்.

மக்கள் சீனத்தில் 76.4 கோடி தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களில் ஏ.சி.எஃப்.டி.யு என்ற அனைத்து சீன தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பில், 28.9 கோடித் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். சீனத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1992ல் 14.2 ஆக இருந்த போது, ஊதிய வளர்ச்சி விகிதம் 6.5 ஆக இருந்தது. 2012ல் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 8.1 இருக்கும் நிலையில், ஊதிய வளர்ச்சி விகிதம் 10.2 ஆக இருக்கிறது. இது தொழிற் சங்கத்தின் நடவடிக்கை என்பதாக இருந்தாலும், சீனாவின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்துள்ளது.

காப்பீட்டுத் திட்டங்கள் மூலம் சமூகப் பாதுகாப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது. வயோதிகர் பராமரிப்பு, சுகாதாரத் திட்டம், வேலையற்றோர் பராமரிப்பு, பணியின் போதான விபத்து, மகப்பேறு ஆகிய ஐந்து காப்பீட்டுத் திட்டங்களின் அடிப்படையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளவும், அக்காலத்திற்குரிய வருவாய் ஏற்பாடும் இதற்குள் அடங்கும். பன்னாட்டு நிறுவனங்கள் அனைத்திலும் தொழிற்சங்கம் வைத்துக் கொள்ளும் உரிமையும், கூட்டு பேர உரிமையும் உறுதி செய்யப் பட்டு உள்ளதால், தனியார் நிறுவனங்களிலும், தொழிலாளர் ஊதியத்திற்கும் இதர சட்ட உரிமைகளைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப் பட்டு உள்ளது. இவைகளின் விளைவாக மக்களின் நுகர்வுத் தன்மையில் மேம்பாட்டை உருவாக்கவும், உள்நாட்டு உற்பத்திக்கு பாதுகாப்பு ஏற்படுத்தும் வகையில் சீனாவின் நடவடிக்கை இருப்பதாலும், சீனாவின் ஏற்றுமதி தொடர்ந்து முன்னிலையில் இருப்பதாலும் தான், வளர்ந்த முதலாளித்துவ நாடுகளின் பொருளாதார நெருக்கடி சீனத்தைப் பாதிக்கவில்லை.

ஐ.எல்.ஓவின் ஆலோசனைகள்:


உலகப் பொருளாதார நெருக்கடி தீர்வது வேலை வாய்ப்பை அதிகரிப்பதிலும், ஊதிய உயர்வை மேம்படுத்துவதிலும் இனைந்து இருக்கிறது. ஊதிய உயர்வை பெறுவதற்கு கூட்டு பேர உரிமைகளை அரசுகள் உறுதி செய்வதும், அதன் மூலம் நுகர்வு சக்தி அதிகரிப்பதும், உள்நாட்டு தேவைக்கான உற்பத்தி அதிகரிப்பும் ஏற்படும். அமைப்பு சாராத் தொழிலாளர்களின் முன்னேற்றத்தை உறுதி செய்ய, குறைந்த பட்ச ஊதியத்தை ஆண்டுக்காண்டு பரிசீலித்து, பெருமளவில் உயர்வு காண வேண்டும். நாட்டின் ஊதிய பங்கீட்டில் உள்ள அசமத்துவத்தை குறைக்கும் ஏற்பாடு இல்லாமல், முதலாளித்துவம் தற்போதைய நெருக்கடியில் இருந்து மீள முடியாது. இதே கோரிக்கைகளை முன் வைத்து இந்தியாவில் சி.ஐ.டி.யு உள்ளிட்ட அனைத்துத் தொழிற் சங்கங்களின் கூட்டுப் போராட்டக் குழு முன் வைத்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற சி.ஐ.டி.யு அகில இந்திய மாநாடும் இக்கோரிக்கைகளை முன்வைத்து விவாதித்தது முக்கிய அம்சமாகும்.