வியாழன், 20 ஜூன், 2013

மருத்துவக் கல்வி


பாதுகாக்கப் பட வேண்டிய உயிர்காக்கும் தொழில்

நோய்நாடி நோய்முதல்நாடி அது தனிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

என்ற வள்ளுவரின் வரிகள், சமூகம் ஒரு பிரச்சனை குறித்து தீர ஆய்ந்து முடிவெடுப்பதற்கான சூத்திரம், என்ற பொருள் தருவதனால் தான் புகழ் பெற்ற குறளாக அமைந்துள்ளது. இதை மத்திய அரசு கணக்கில் கொள்ள வெண்ண்டும். ஒருமுறை தவறு நிகழலாம், அடுத்தடுத்து நிகழ்ந்தால், அதற்கு அடிப்படைக் காரணத்தைக் கண்டறிந்து தீர்க்க வேண்டும். இப்போது மருத்துவக் கல்விக்கான இடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான முயற்சியில் தனியார் கல்லூரி நிறுவனங்கள், ஈடுபடுகிற போது, லஞ்சம் கொடுத்தார்கள். கைது செய்யப் பட்டார்கள், என்ற செய்தி அடுத்தடுத்த ஆண்டுகளில் வெளிவந்து கொண்டிருக்கிறது.

கேதன் தேசாய் என்பவர் 2010ல் இந்திய மருத்துவக் கவுன்சிலின் தலைவராக இருந்த போது, அவர் மீதான புகாரை, இந்த தேசம் மறந்திருக்க வாய்ப்பில்லை. வீட்டின் சுவர்களில் கிலோ கணக்கில் தங்கம் அடுக்கப் பட்டு இருந்தது, என்ற செய்தி ஒட்டு மொத்த இந்தியர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய செய்தி. அவர் கைது செய்யப்பட்டது, பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியின் மாணவர் சேர்க்கைக்கான இடங்களை நிச்சயிக்கப் பட்ட இடங்களை அதிகரிப்பதற்கான விண்ணப்பத்தைப் பரிசீலித்து அனுமதித்தார். அப்படி அனுமதிப்பதற்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றார் என்பதே அடிப்படைக் குற்றச்சாட்டு.

2010 ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கேதன் தேசாய் கைது செய்யப் பட்டார் என்பது மட்டுமல்ல. அதற்கு முன் 2001 ஆண்டில், இந்திய மருத்துவக் கவுன்சிலின் பொறுப்பில் இருந்த போதே கைது செய்யப் பட்டுள்ளார். 65 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் சி.பி.ஐ யினால் கைது செய்யப் பட்டு, பின் 2009 ல் அதே சி.பி.ஐ யினால் அந்தப் பணம் நியாயப் பூர்வமானது, எனக் குறிப்பிடப் பட்டதால், கேதன் தேசாய், விடுதலை செய்யப்பட்டார். மீண்டும் அதே நபர் இந்திய மருத்துவக் கவுன்சிலின் தலைவராக பொறுப்பெடுத்தார் என்பதைக் கூட்டுக் கொள்ளையின் பகுதியாகவே புரிந்து கொள்ள முடியும்.

அதுமட்டுமல்ல, இந்திய மருத்துவக் கவுன்சில் பெரும் லாபம் ஈட்டித் தருகிற அமைப்பாகவே, கேதன் தேசாய் போன்ற நபர்களால் பார்க்கப் பட்டு வந்துள்ளது. 2010ல் கேதன் தேசாய் கைது செய்யப் பட்ட பின்னணியில், புலனாய்வுத் துறையைச் சேர்ந்தோர், 30 முதல் 35 மருத்துவக் கல்வி நிறுவனங்கள், லஞ்சம் கொடுத்ததன் மூலம் துவக்கப் பட்டவையே, எனக் கூறியுள்ளனர். அன்று சுகாதாரத் துறைச் செயலாளராக இருந்தவர், ”தற்போதைய இந்திய மருத்துவக் கழகம் களைக்கப் படும், புதிதாக 7 நபர்கள் கொண்ட குழு அமைத்து செயல்பட வழிவகை உருவாக்கப் படும், பல் மருத்துவக் கவுன்சில், மருந்தாளுனர் கவுன்சில் உள்ளிட்டு எல்லாவற்றையும் ஒன்றாக பராமரிக்கும் எண்ணமும் இருக்கிறது”, என்றார். உண்மையில் இந்த மாற்றம் அதிகாரத்தை வேண்டுமானால் மாற்றலாமே தவிர, பிரச்சனையைத் தீர்க்க உதவாது.

ஏனென்றால், பெரும்பான்மையான மருத்துவக் கல்லூரிகள், மற்றும் துணை மருத்துவக் கல்லூரிகளை நடத்துபவர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஆவர். தற்போதைய மத்திய அமைச்சரவையிலும் கூட, மருத்துவக் கல்லூரி உரிமையாளர்கள் இடம் பெற்றுள்ளனர். மருத்துவக் கல்வி நிறுவனங்கள் பெரும் லாபம் தரும் தொழிற்கூடங்களாக மாறியிருப்பதே இதற்குக் காரணம். தற்போது தமிழகத்தை சார்ந்த இருவர் கைது செய்யப் பட்டுள்ளது, பல் மருத்துவம் சார்ந்தது. பல் மருத்துவக் கல்லூரியில் முதுகலைப் பட்டப் படிப்புத் துவங்குவதற்கு அங்கீகாரம் பெற, கொடுக்கப் பட்ட லஞ்சம், ஒரு கோடி என பேரம் பேசப்பட்டுள்ளது. இது தொடர்பாக பல்வேறு இடங்களில், சி.பி.ஐ ரெய்டுகள் நடைபெற்று வருகின்றன.

சிலர் கைது செய்யப் படுவது கண் துடைப்பு நடவடிக்கைகளாகவே முடிவுறுகின்றன. உண்மையான தீவிர நடவடிக்கைத் தேவைப் படுகிறது. மருத்துவர், மனிதர்களால், உயிரைக் காக்கும் கடவுள் என்ற அந்தஸ்தில் வைத்துப் பார்க்கப் படுகிறார். அத்தகைய மருத்துவர் உருவாகும் கல்வி நிலையம், லஞ்சம் கொடுக்கப் பட்டதால், உருவானது என்பதும், அதற்காக அவர் குறைந்தது 35 லட்சம் ரூபாயும், முதுகலைப் படிப்பாக இருந்தால் ஒரு கோடிக்கும் மேல் சேர்க்கைக்காக செலவிட வேண்டியுள்ளது, என்பதும் பெரும் அதிர்ச்சி தரும் உண்மை. நன்கொடைத் தடைச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள் செயலிழந்து நிற்கின்றன, என்பதை இதன் மூலம் அறிய முடியும்.

இத்தைகைய வாய்ப்புகள் மூலம்தான் கேதன் தேசாய் போன்றவர்கள், 3000 கோடிக்கும் அதிகமான ரூபாய் பெறுமான சொத்துக்களைச் சேர்த்துள்ளனர். ஒரு மாதத்தில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விமான டிக்கட்டிற்கும், 20 லட்சம் ரூபாய் வரையிலும், 5 அல்லது 7 நட்சத்திர ஹோட்டல்களில் தங்குவதற்கும் தனிப்பட்ட முறையில் செலவிட முடிந்துள்ளது. மருத்துவத் துறையின் ஒரு பொறுப்பில் இருக்கும் நபர் இந்த அளவிற்கு சொத்து சேர்த்தது, உயிர் காக்கும் பணிக்கானத்  தொழில் என்ற கருத்தை மறுத்து வருகின்றனர், என்பதைத் தெளிவுப் படுத்துகிறது.

தமிழகத்தில் பல் மருத்துவக் கல்லூரிகள், ஒரே ஒரு அரசு கல்லூரி உள்ளிட்டு 19 உள்ளன. அதில் 1200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆண்டு ஒன்றுக்குச் சேர்க்கப் படுகின்றனர். ஒற்றைச் சாரள முறை என்ற மாணவர் சேர்க்கை வடிவங்கள் தகுதிப் படியை முறைப் படுத்த உதவியுள்ளது என்பதை மறுக்க முடியாது. ஆனால் அதேவேளையில், மாணவர் சேர்க்கைக்கான, கட்டணத்தைக் குறைக்க உதவவில்லை என்பதையும் மறுக்க முடியாது.

நமது நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும், பல் மருத்துவத்திற்கான விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. பல் போனால் சொல் போகும் என்பது ஆழமாக மனதில் பதிந்துள்ள ஒன்று. எனவே இதற்கான சிகிச்சையும் முக்கியத்துவம் பெறுகிறது. சிகிச்சை அளிக்கும் மருத்துவர், திறமையுடன் மனிதநேயமும் கொண்டவராக இருத்தல் வேண்டும். இல்லையென்றால் உயிர் காக்கும் பணி செய்யும் மருத்துவரை மக்கள் எளிதில் அனுக முடியாது. இன்று மருத்துவக் கவுன்சில் தலைவர் பொறூப்பில் இருந்தவர் கைது செய்யப் பட்டிருப்பதும், பல் மருத்துவக் கவுன்சில் உறுப்பினர் கைது செய்யப் பட்டிருப்பதும், இந்தத் துறைகள் தனது, தார்மீக குணத்தை இழந்து கொண்டிருக்கிறது, என்பதை வெளிப்படுத்துகிறது.

இந்திய மருத்துவக் கவுன்சில் அல்லது பல் மருத்துவக் கவுன்சில் ஆகியவை, கல்வி நிலையங்களைத் தகுதி கொண்டவையாக இருப்பதை உறுதி செய்வது, பட்டம் பெற்று மருத்துவர்களாக பதிவு செய்தோரின் தொழில் நேர்த்தியைக் கண்காணிப்பது, ஆகிய பொறுப்புக்களை செவ்வனே நிறைவேற்ற வேண்டிய அமைப்புகளாகும். கைது அரங்கேற்றங்கள் உருவாக்கியுள்ள கேள்விகள்  உடணடியாகத் தீர்க்கப் பட முடியாதவை. தாராளமயக் கொள்கைகளை அனுமதிப்பதாகக் கூறும் மத்திய அரசு மற்றும் பிரதமர், தனி மனித வளர்ச்சியையும், சமூக 
வளர்ச்சியையும் மேம்படுத்துவதற்காகவே, இத்தகைய கொள்கைகள் என்று நியாயப் படுத்துகின்றனர்.

விளைவு அதற்கு எதிர் திசையில் இருப்பதைக் காணமுடிகிறது. உதாரணத்திற்கு இந்தியாவைப் பொறுத்தளவில் 2000 நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதாச்சாரம் உள்ளது. கிராமங்களில் மருத்துவர் மக்கள் ஆகியோரின் விகிதாச்சாரம் 1:25000 என இருப்பது மிக மோசமானது என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். நகரங்களில் 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட மிகச்சொற்பமான முன்னேற்றம். ஆனால் கிராமங்களில் முன்னேற்றமே இல்லை, என்பதை மேற்படி விவரம் மூலம் அறியலாம். 2011 ஜூலை 31 கணக்குப்படி, 8.5 லட்சம் மருத்துவர்கள் பதிவு செய்திருந்தாலும், 6 லட்சம் மருத்துவர்கள் மட்டுமே மருத்துவத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர், என்று இந்திய மருத்துவக் கவுன்சில் வெளியிட்ட செய்தி தெரிவிக்கிறது.


அதே மருத்துவக் கவுன்சில் அதிகபட்சமாக சேர்க்கப் படும் மாணவர் எண்ணிக்கையை 150 ல் இருந்து 250 ஆக உயர்த்த வேண்டும். அதன் மூலம் மருத்துவர் மற்றும் மக்களுக்கான விகிதாச்சாரத்தைக் குறைக்க முடியும் என்று கூறுகிறது. மருத்துவக் கவுன்சிலின் இந்தக் கருத்து ஏற்கப் பட்டு கண்காணிப்புடன் அமலானால் உடணடியாக பெரும் அளவில் மருத்துவர்களின் எண்ணிக்கை உயரும். அதற்கான அடிப்படைக் கட்டமைப்புகள் தமிழகம் போன்ற மாநிலங்களின் அரசு மருத்துவக் கல்லூரிகளிலேயே இருக்கிறது. உயிர் காக்கும் பணி என்பதனால், அடிப்படைக் கட்டமைப்புகளிலும், பயிற்சியிலும் அக்கறை மற்றும் அமலாக்கம் ஆகியவற்றை உறுதி செய்து, கூடுதல் மாணவர் சேர்க்கையை அனுமதிக்கலாம். அது கேதன் தேசாய் போன்றவர்களின் ஆதிக்கத்தைத் தடுக்கும். உயிர் காக்கும் பணியை மேம்படுத்தும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக