மே தினம் உலகத் தொழிலாளர்களின் திருவிழா. 125 வது மே தினத்தைத் தொழிலாளர் வர்க்கம் கொண்டாடத் துவங்கியுள்ளது. உலகில் மிக சமீபத்தில் நடந்த பல போராட்டங்கள், தொழிலாளர்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வை பறை சாற்றுகிறது. சோவியத் யூனியன் சிதைந்ததற்குப் பின்னர், உலக அளவில் நடைபெற்றுள்ள இப்போராட்டங்கள், புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. குறிப்பாக அரபு மண்ணில் ஜனநாயகத்திற்காக உயர்ந்துள்ள போர்க் குரல்கள், தொழிலாளர் உரிமைகளுக்கும் பொருந்துவதாக அமையும். அரசியல் ஜனநாயகம் குறித்த விழிப்புணர்வு கொண்டோரிடம், தொழிலாளர் உரிமைகளுக்கான குரல்களும் கூடுதலாக பிரதிபலிக்கும் வாய்ப்பு இருக்கிறது. இத்தகைய வாய்ப்புகள், உலகில் அரக்கத்தனமாக செயல் பட்டு வரும் மூலதனத்தைக் குறைந்த பட்ச கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரும் என எதிர்பார்க்கலாம்.
இப் பின்னனியில் இந்திய தொழிலாளர்களைத் திரட்டுவது, இடதுசாரி அரசியலுக்கு பெரும் கடமையாகவும், சவாலாகவும் இருக்கிறது. இந்திய மண்ணில் ஜனநாயகம் தலைத்திருந்தாலும், அவை, சமூகத்தின் அனைத்துப் பகுதி மக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தி விட்டது எனக் கருத இயலாது. வாக்களிப்பதுடன் தனது ஜனநாயகம் முடிந்து விட்டதாக மக்களும், வாக்களித்த பின் எதையும் மக்கள் எதிர் பார்க்கக் கூடாது, என முதலாளித்துவ அரசியல் தலைமையும் கருதுகின்றனர். இக்கருத்து இந்தியாவில் உள்ள ஜனநாயகம் முழுமையடைய வில்லை என்பதை, தெளிவுபடுத்துகிறது. முழுமையான ஜனநாயகத்திற்காக இடது சாரி அரசியல் மட்டுமே அரசியல் களத்தில் நின்று கொண்டிருப்பதைத் தொழிலாளி வர்க்கத்தின் கவணத்திற்கு எடுத்துச் செல்வது பிரதான பணி என்றால் மிகை அல்ல.
மே தினத்திற்கான போராட்டம் 1886 ல் 2.50 லட்சம் மக்கள் திரளுடன் சிக்காகோ வீதிகளில் ரத்தப் பலியுடன் வெற்றி பெற்ற போதிலும் கூட, இந்தியாவில் நாம் பின் தங்கியே இருக்கிறோம். 8 மணி நேரத்திற்கு மேல் ஒரு ஷிப்ட் இயங்கக் கூடாது என சட்டம் இருந்தாலும், அவைகள் மீறப்படுகின்றன. சமீபத்தில் சான்மினா எஸ்.சி.ஐ என்ற அமெரிக்க நிறுவனம் ஒரு ஷிப்டை 12 மணி நேரம் இயக்கிய குற்றத்திற்காக, சி.ஐ.டி.யு புகார் செய்ததன் விளைவு 1.20 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப் பட்டுள்ளது. 12 மணி நேரமாக இயக்குவதால், கிடைக்கும் அபரிமிதமான லாபம் காரணமாக, அபராதம் விதித்த பிறகும், தொடர்ந்து அதே தவறை நிறுவனம் செய்து வருகிறது. அரசும் அதிகாரிகளும் வேடிக்கை பார்க்கின்றனர். பி.ஒய்.டி என்ற தைவான் நிறுவனம் 12 மணி நேரம் கொண்ட ஷிப்டைச் செயல் படுத்தியமைக்காக, அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்பது புரியாத ஒன்று. தங்கள் நாடுகளில் ஏற்பட்ட விழிப்புணர்வின் காரணமாகத் தங்கள் நாட்டுத் தொழிலாளர்களைச் சுரண்ட இயலாத நிலை இருப்பதை, பன்னாட்டு பெரு முதலாளிகள் உணர்ந்துள்ளனர். எனவே தான், உழைப்புச் சுரண்டலுக்கு ஏற்ற, கேள்வி கேட்காமல் 12 மணி நேரம் வேலை செய்யும் தொழிலாளர் நிறைந்த இந்தியாவை நாடி பன்னாட்டு நிறுவனங்கள் வருகின்றன. கொழுத்த லாபம் தேடி வரும் இது போன்ற முதலைகளிடம் தொழிலாளர் உரிமைகளை அரசோ, அதிகாரிகளோ பேசுவது இல்லை. மாறாக புரிந்துணர்வு ஒப்பந்தம் என்ற பெயரில் சலுகைகள் கொடுப்பதையும், தொழிலாளர் சட்டங்களில் உள்ள தொழிலாளருக்கு சாதகமான அம்சங்களைப் பறித்துக் கொள்வதையும் செய்து வருகின்றனர்.
இன்று 12 அல்லது 14 மணி நேரம் வேலை செய்வதை கணிணிப் பொறியாளர் அல்லது மென் பொறியாளர்கள் போன்ற பணி செய்வோர், சட்ட விரோதமானது என்பதை அறிந்திருக்கவில்லை. படித்தவர்களே இப்படி இருக்கும் போது, படிக்காத பாமரத் தொழிலாளியின் நிலை கேட்க வேண்டியதில்லை. இன்றைய இளம் தலை முறைக்கு, மே தினக் கொண்டாட்டத்தின், வரலாற்றுப் பின்னனி தெரியவில்லை. பண்டிகைக்கான விடுமுறை தினங்களில் ஒன்றாகவும் கூட படித்த நபர்கள் கருதுவது வேதனையாக இருக்கிறது. வேலையில்லாத் திண்டாட்டம், பணியில் இருப்போரின் உரிமைகளை விலை பேசுவதாக அமைந்து விட்டதும், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்குத் தாரை வார்க்கப் பட்டதும், பிரதான காரணமாக அமைந்து விட்டது. இத்தகைய சவாலான சூழ்நிலையில் தான் மே தினத்தின் பாரம்பரியத்தை இடது சாரி அரசியல் கொண்டோர், பேச வேண்டியவர்களாக உள்ளனர்.
இடதுசாரி அரசியல் கொண்டோர் எனும் போது, தொழிற்சங்கத்தை மட்டும் குறிப்பதில்லை. 8 மணி நேர வேலைக்கான போராட்டம் என்பது, தொழிலாளர் பிரச்சனை என்ற போதும், அதில் இன்றைக்கு ஏற்பட்டிருக்கும் மாற்றத்திற்கான அடிப்படைக் காரணம், அரசுகள் பின்பற்றுகிற கார்ப்பரேட் ஆதரவு பொருளாதாரக் கொள்கைகள் ஆகும். கார்ப்பரேட் முதலாளிகள் ஜனநாயகத்தைக் கூட விலை பேசுகிற காட்சிகளை ஊடகங்கள் பகிரங்கமாக வெளிப்படுத்தின. அரசுகளை நிர்மானம் செய்யும் வலிமை கொண்டதாக மாறிக்கொண்டிருக்கும் ஒரு தேசத்தில், ஜனநாயகம் வலுவான பங்களிப்பைத் தொடர்ந்து செய்யும் என்று, எதிர்பார்க்க முடியாது. அதனால் தான் மேற்கு வங்க இடது முன்னனியின் ஆட்சியை மம்தாவைக் கொண்டு அகற்றும் கீழ்த்தரமான பணியை, இந்தியாவிற்கான அமெரிக்க தூதரக அதிகாரிகள் செய்து வருகின்றனர். இச் செயல்கள் ஜனநாயகத்தை கைப்பற்ற நினைக்கும் ஏகாதிபத்திய அரசியலுடன் கைகோர்த்த கார்ப்பரேட் நிறுவனங்கள் சார்ந்தது என்பதை உறுதியாக அறிய முடியும்.
இந்நிலையில் தொழிலாளர்கள் அரசியல் போராட்டங்களுக்கு தீவிர ஆதரவு தெரிவிப்பதும், தொழிலாளர்களுக்கு அரசியல் சக்திகள் தங்களின் பகிரங்கமான ஆதரவினை வெளிப்படுத்துவதும் அவசியம். கார்ப்பரேட் நிறுவனங்களிடம் நிதி பெற்று அரசியல் பிழைப்பு நடத்தும் கட்சிகள் நாம் எதிர்பார்க்கும் இப்பணியைச் செய்யப் போவதில்லை. ஆனால் இடது சாரி அரசியலை பின்பற்றுவோர், எப்போதும் இதைச் செய்து கொண்டுள்ளனர். காரல் மார்க்ஸ் குறிப்பிட்டதைப் போல், படித்த வேலை தேடும் இளம் தலைமுறை சேம நலப் படையைப் போல், வேலையில் இருப்போரைத் தாக்குவதற்காக ஆளும் வர்க்கத்தினரால் பயன்படுத்தப் படுகிறது. இதை மார்க்ஸ் 150 ஆண்டுகளுக்கு முன் விவாதித்திருந்தாலும், இன்று கண் கூடாக தொழிற்சங்கம் அனுபவித்து வரும் பிரச்சனை ஆகும். சி.ஐ.டி.யு வேலையில்லா இளைஞர்களின் கோரிக்கைகளை முன் வைப்பதன் மூலமே, ஆலைக்குள் இருக்கும் தொழிலாளர்களைப் பாதுகாக்க முடியும், என்ற முழக்கத்தை முன் வைத்து, பல போராட்டங்களை நடத்தியுள்ளது. எனவே தொழிலாளர்களுக்கு அப்பாற் பட்ட நேச சக்திகளின் ஒருங்கினைவும், அதற்கான முன்முயற்சியும் தொழிற்சங்கங்களின் சார்பில் மேற்கொள்வது குறித்த விவாதம் அதிகரித்து வருகிறது.
ஐ.நா சபை வரைவு செய்த மனித வள மேம்பாடு அறிக்கையில் இந்தியா 2002 ல் 127 வது இடத்திலும் இப்போது 134வது இடத்திலும் என பின்னோக்கி வளர்ந்து கொண்டிருக்கிறது. தொழிலாளர் வாழ்க்கையில் முன்னேற்றம் காணாமல், மனித வள மேம்பாட்டு அறிக்கையில் இந்தியா வளர்ந்து விடும் என எதிர் பார்ப்பது, மூடநம்பிக்கைகளில் ஒன்றாக மட்டுமே இருக்க முடியும். இன்று சென்னை அதை சுற்றியுள்ள பகுதிகள் தொழிற் வளர்ச்சி பெற்றவையாக மாறி வருகின்றன. இதே நிலை 1800 ன் இறுதியிலும், 1900 ன் துவக்கத்திலும் இருந்தது. எனவே தொழில் வளர்ச்சி என்பது சென்னைக்கு புதிதல்ல. அன்று,” தொழிற் சாலைகளில் விரும்பத்தக்க சூழல் இல்லை, உடல் நலம் கெடவும் விபத்துகள் நடக்கவும் வாய்ப்புகள் அதிகம் இருந்தன. இயந்திரங்கள் மிகவும் நெருக்கமாகவும், வெளிச்சம் இன்றியும் இருந்தன. பஞ்சாலைகளில் மூக்கு, காது, வாய், வழியாக பஞ்சை உட்கொண்டு பல நோய்களுக்கு ஆளானவர்களாக தொழிலாளர்கள் இருந்தனர். சென்னை நகரம், செங்கல்பட்டு மாவட்டம் ஆகியவற்றில் அறிவிக்கப் பட்ட ஆலைவிபத்துகள் அதிகரித்துக் கொண்டே இருந்தன. இக்காரணங்கள் தொழிற்சங்க அமைப்புகள் மூலம் தொழிலாளர்கள் ஒன்றுபட வேண்டிய நிபந்தந்தைக் கொடுத்தது.” என்று சென்னை பெரு நகர தொழிற் சங்க வரலாறை ஆய்வு செய்த, ஐ.ஐ.டியில் பேராசிரியராக பணியாற்றி மறைந்த வீரராகவன் குறிப்பிட்டுள்ளார்.
மேற்படி வரலாற்றை படிக்கிற இன்றைய சென்னை அல்லது புறநகர் ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளி, 110 ஆண்டுகளாக எந்த வளர்ச்சியும் இல்லாமல் தான் இருக்கிறோமா? என கேட்காமல் இருக்க மாட்டார். அன்று இருந்த தொழில்களும் தொழில் முதலாளிகளும் இன்று இல்லை. மாறி இருக்கிறார்கள். தொழிலாளர்களும் மாறி இருக்கிறார்கள். ஆனால் முதலாளித்துவ அனுகுமுறையில் கொள்கையில் மாற்றம் இல்லை. இன்று திருப் பெரும்புதூரில், நோக்கியா ஆலையில் நடந்த விபத்தில் அம்பிகா, போஸ் ஹூண்டாய் விபத்தில் தமிழ் செல்வன், மெப்ஸ் வளாகத்தில் அமைந்துள்ள பிரிஸில்லா ஷூ தயாரிக்கும் பேரூந்தின் விபத்தில் 17 வயது பெண் தொழிலாளி ஆகியவை கடந்த 3 மாத காலத்தில் நிகழ்தவை. ஹூண்டாய் ஆலையில் தொடர்ந்து ஏற்படும் விபத்தினால் போரூர் ராமச்சந்திரா மருத்துவ மனையில் அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கை, ஆகியவை தொழிற் துறை நிர்வாக அனுகுமுறையில், எந்த மாற்றமும் இல்லை என்பதை வெளிப்படுத்துகிறது.
124 ஆண்டுகள் கடந்த மே தினப் போராட்டத்தின் வரலாறும், 110 ஆண்டுகளுக்கு முன் சென்னை தொழிலாளர்கள் நடத்திய பெருமை மிக்க போராட்ட வரலாறும் இன்றைய தலைமுறைக்கு கற்றுக் கொடுப்பது மிக அவசியமாக இருக்கிறது. இளம் தொழிலாளர்களை ஆலைகளில் மட்டும் அல்லாமல், குடியிருக்கும் பகுதிகளிலும் அணி திரட்ட வேண்டியதன் அரசியல் தேவையை, தொழிற் சங்கங்களும், இடதுசாரி சிந்தனை கொண்ட வர்க்க, வெகுஜன அமைப்புகளும் தங்கள் முயற்சிகளை அதிகரிக்க வேண்டும். இந்தியாவில் மே தினம் சென்னையில் தான் முதல் முதலாக சிங்காரவேலர் முயற்சியில் கொண்டாடப் பட்டது. இப்பெருமையை தக்க வைக்கும் விதத்தில் தமிழகத் தொழிலாளர்கள் உரிமைக்கான போராட்டத்தில், இது போன்ற புது முயற்சிகள் மூலம் முன் நிற்க வேண்டியுள்ளது. நிச்சயம் மே தினம் போன்ற உரிமைக்கான தினங்களின் வரலாறு புதியதாக எழுதப் படும்.
நன்றி: தீக்கதிர் மே 1