புதன், 11 செப்டம்பர், 2024

கல்வி

 

 

கல்வி உரிமையை பாதுகாப்போம்

 

அதிகார குவிப்பை விரும்பும் சமூகத்தை இன்றைய முதலாளித்துவம் கட்டமைக்கிறது. அதற்கு நவ தாராளமய கொள்கை பாதை அமைக்கிறது. இந்த பாதையில் மட்டுமே அரசுகள் பயணிக்க முடியும் என்ற நிலையை, முதலாளித்துவ கட்சிகள் மீது வலிந்து திணிப்பது அதிகரிக்கிறது. குறிப்பாக பாஜகவின், வகுப்புவாத அரசியலும், தாராளமய கொள்கைகளும் கை கோர்த்து நடத்தும் தாக்குதல்களில் மாநில அரசுகளின் உரிமையும் பறி போகும் அபாயம் அரங்கேறுகிறது. இதை தடுப்பதும், மாநில உரிமைகளை வலுப்படுத்துவதும், அதிகார பரவலை மேம்படுத்துவதும் அவசியம். இந்திய ஆட்சி நிர்வாகத்தில் உள்ள மூன்றடுக்கு முறை மிக சிறந்த பங்களிப்பை ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமாக செய்திருக்கிறது. ஒன்றிய அரசு, மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள். இவை மூன்றுக்கும் வளர்ச்சி குறித்த வாதத்தில், பங்கிருப்பதை உணராமல், வளர்ச்சியின் பரிமானத்தை முன்னெடுக்க முடியாது.

அதிகார பரவலில் மார்க்சிஸ்ட் கட்சி:

அதிகார குவிப்பிற்கு மாற்றாக மார்க்சிஸ்ட் கட்சி அதிகார பரவலை முன் வைக்கிறது. வளர்ச்சி என்பது உள்ளூர் பொருளாதார வளர்ச்சியுடன் இணைந்து, வருவாய்  உயர்வு மற்றும் வேலை வாய்ப்பு ஆகியவற்றை, மேலும் மேலும் பரவாலாக்க உதவுவது என, மார்க்சிஸ்ட் கட்சி குறிப்பிடுகிறது. அண்மையில் கேரள மாநில மார்க்சிஸ்ட் கட்சி, மக்கள் திட்டம் உருவாக்கப் பட்ட 25 ஆவது ஆண்டு நிகழ்வை கொண்டாடியது. தோழர். இ.எம்.எஸ் அவர்கள் முன் முயற்சியில் மேலும் மேலும் அதிகாரப் பரவலுக்கான விவாதத்திற்கு வடிவம் கொடுக்கப் பட்டதை விழா நினைவு கூர்ந்துள்ளது.

அரசு நடத்திய பொது சுகாதார நிறுவனங்களை, 1991ல் மக்கள் 28 சதம் பயன்படுத்தினர், 2014ல் 38 சதமாகவும், கோவிட் காலத்தில் 48 சதமாகவும் உயர்ந்துள்ளது. அதேபோல் தனியார் பள்ளிகளை கைவிட்டு, அரசு பள்ளிகளுக்கு இடமாறுதல் பெற்றோர் எண்ணிக்கை 6 லட்சம் ஆகும். இது கட்டணம் செலுத்த முடியாமை காரணமாக அல்ல. அரசு பள்ளிகளின் தரம் உயர்ந்த காரணத்தால் ஆகும். இதற்கு அடிப்படையாக மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டில், உள்ளாட்சிகள் மூலமான திட்ட செலவுகளுக்கு ஒதுக்கப்பட்ட 36 சதம் நிதி ஆகும். இது ஒவ்வொரு ஆண்டும் தொடர்வதால் அதிகாரப் பரவல், உள்ளூர் மட்ட செயல்பாடு, வளர்ச்சி ஆகியவை பிரதிபலிப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடு உள்ளிட்ட இதழ்கள் கூறுகின்றன.

கல்வியில் அதிகார குவிப்பு:

சமூக வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிப்பது கல்வி முறை. இளம் தலைமுறைக்கு வளர்ச்சியை, வரலாற்றின் அடிப்படையிலும், மேலும் முன்னேறி அடைய வேண்டிய இலக்கையும் கற்றுத் தருவது மிக அவசியத் தேவையாக உள்ளது. ஆனால் இந்திய கல்வி முறை, படிப்படியாக மையப்படுத்தப் பட்டு வருகிறது. பாஜக ஆட்சி அதை முழுநேர வேலையாக செய்து வருகிறது. முதலாளித்துவம் கல்வியை வணிகமயமாக்க, ஒரு சரக்காக மாற்றி உள்ளது. சிந்தாந்த ரீதியில் அதிகார குவிப்பிற்கான ஒரு கருவியாக கல்வியை கைப்பற்றும் பணியை பாஜக செய்துள்ளது. கள்ளும் குரங்கும் இணைந்ததைப் போல், முதலாளித்துவமும், பாஜக வகுப்புவாதமும் இணைந்துள்ளது. கல்வி பாஜக ஆட்சியில், வணிகம், காவி, மையப் படுத்தல் என்ற மும்முனைத் தாக்குதலுக்கு இரையாகி உள்ளது.

உண்மையில் விடுதலை பெறும் போது டாக்டர். ராதாகிருஷ்ணன் அவர்கள் தலைமையிலான கல்விக்குழு தொடர்ந்து வரிசையாக, கோத்தாரி, ராமமூர்த்தி, யஷ்பால் வரை சொல்லும் அம்சம், விடுதலைக்கு பின் இந்திய வளர்ச்சிக்கான அடித்தளத்தை மேம்படுத்தும் வகையில் இருந்தது. அரசு கல்வி நிறுவனங்களை உருவாக்கவும், பாடத்திட்டத்தை வடிவமைக்கவும், ஜனநாயக ரீதியில் சில வாய்ப்புகள் வழங்கப்பட்டது.

தாராளமயமாக்கல் கொள்கை அமலாக்கம் துவங்கிய பின், பன்னாட்டு மற்றும் உள்நாட்டு ஏகபோக நிறுவனங்களின் மூலதனக்குவிப்புக்கு தேவையான டெக்னோகிராட்ஸ் களை ( தொழில் நுட்ப பணியாளர்களை) உருவாக்கும் வேலையை கல்வித் துறை செய்ய வேண்டும் என்பதாக மாற்றப் பட்டது. இத்தகைய மாற்றத்திற்கு, பிர்லா - அம்பானி தலைமையிலான கல்விக்குழு வழிவகுத்தது. இந்த குழுவை வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சி 2000 ஆண்டில் அமைத்தது. இன்று நாம் எதிர்க்கும் தேசிய கல்விக் கொள்கைக்கான அடித்தளமாக அது அமைந்தது.

நீட், க்யூட், நெக்ஸ்ட், என்.டி.ஏ:

மருத்துவ கல்விக்கான மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வாக நீட் (National Eligibility cum Entrance Test) ஒன்றிய பாஜக அரசினால் அமல் படுத்தப் பட்டு வருகிறது. இது அகில இந்திய அளவில் நடத்தப் பட்ட மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேர்வு மற்றும் மாநிலங்கள் நடத்திய தேர்வு முறைகளை ரத்து செய்து, ஒன்றிய அரசின் அதிகாரத்திற்கு எடுத்து கொண்டது. இதை தமிழகத்தில் அமலாக்க வேண்டாம் என்பதற்கான குழு அமைக்கப்பட்டு ஒரு அறிக்கையும் பெற பட்டது.  அந்த அறிக்கையின் அடிப்படையில் தமிழ்நாட்டில் நீட் தேர்வு வேண்டாம் என்றும், மாநில அரசே மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு உரிய தேர்வுகளை நடத்த அனுமதிக்க வேண்டும் எனவும் தீர்மானம் சட்டமன்றத்தில் இயற்றப்பட்டு, ஆளுநர் மற்றும் ஒன்றிய பாஜக அரசு காரணமாக அது கிடப்பில் போடப்பட்டுள்ளது. இது மாநில அரசின் சட்டம் இயற்றும் அதிகாரத்தை பறிப்பது மட்டுமல்ல. கல்வி பொதுப்பட்டியலில் இருந்து, ஒன்றிய அரசின் பட்டியலுக்கு எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், அபகரிப்பதை வெளிப்படுத்துகிறது.

நெக்ஸ்ட் ( The National Exit Test) மருத்துவ கல்வியின் முதுகலைப் படிப்பிற்கான நுழைவு தேர்வு என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. நீட் அல்லது நெக்ஸ்ட் இரண்டுமே மருத்துவ மாணவர் சேர்க்கையில், பணம் படைத்தவருக்கான வாய்ப்புகளை அதிகப்படுத்துவதை மட்டுமே நோக்கமாக கொண்டுள்ளது. 2006 ல், இந்தியா முழுவதும், மாணவர் சேர்க்கையில் பிற்படுத்தப் பட்டோர் இட ஒதுக்கீடு 27 சதம் அமலான போது, பெரும் எதிர்ப்பை பாஜக மற்றும் சங் பரிவார் அமைப்புகள் தூண்டி விட்டனர். அப்போது நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் அமர்த்தியா சென், தென் மாநிலங்களில், ஏராளமான பிற்படுத்தப் பட்ட சமூகத்தினர் மருத்துவர்களாக பணி புரிவதையும், மக்களுக்கு நெருக்கமாக மருத்துவம் செய்ய அவர்களால் முடிகிறது என்றும் கூறி இட ஒதுக்கீட்டின் தேவையை வலியுறுத்தினார். ஆனால் தற்போது, ஒன்றிய பாஜக அரசின் செயல்கள் காரணமாக, மீண்டும் மருத்துவ கல்வியை, மருத்துவர்களை, மக்களிடம் இருந்து விலக்கி வைக்கும், கார்ப்பரேட்மயமான சிந்தனையை கொண்டிருக்கிறது. இந்த செயல்பாடுகளை மாநில அரசு வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும் என்ற நிலையை உருவாக்குகிறது.

பல்கலைக் கழக மாணவர் சேர்க்கைக்கு, க்யூட் (Common University Entrance Test) இது 2022 முதல் அமலாகிறது. பல்வேறு தேர்வுகள் எழுதும் சிரமத்தை மாணவர்களுக்கு குறைக்க இந்த தேர்வு முறை உதவும் என்ற பொய் காரணத்தை ஒன்றிய பாஜக கூறுகிறது. உண்மையில் தேசிய கல்விக் கொள்கை அமலாக்கத்திற்காக சமூகத்தைப் பதப்படுத்தும் திட்டம் இதற்குள் அடங்கி இருக்கிறது. 80 பல்கலைக் கழகங்களுக்கான தேர்வாக இது அமையும். இதில் அந்தந்த மாநில மாணவர்களுக்கு கிடைத்து வந்த வாய்ப்புகள் சுருங்கி, தேசம் முழுவதுமான மாணவர்கள் போட்டியிடுவதும், பெரும் தொலைவு சென்று பயிலும் சூழல் உருவாவதும், அதிகரிக்கும். இது உயர் கல்வி பரவலையும், ஏழை மாணவர்களின் வாய்ப்பை பறிப்பதாக உள்ளதை உணர வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக மேற்படி தேர்வுகளை எதிர்கொள்ள மாணவர்கள் சிறப்பு பயிற்சிக்கு செல்லவும், அதற்காக பெரும் பொருள் செலவு செய்ய வேண்டிய தேவையும் அதிகரிக்கிறது. இது மேலும் மேலும் வசதியானவர்களுக்கான வாய்ப்பாகவும், அதிகார குவிப்பின் வெளிப்பாடாகவும் உள்ளது. இதன் மூலம் மாநில அரசுகள் உரிமை இழப்பதும், மாநில மாணவர்களின் வாய்ப்பு பறிக்கப்படுவதும், மாநில அரசுகளின் சமூக நீதி கொள்கைகளை முடக்குவதும் நடைபெறுகிறது.

என்.டி.ஏ (National Testing Agency) இதுவும் இன்றைய பாஜக ஆட்சியினால் 2017 முதல் அமலாக்கப்பட்டு வருகிறது. ஒன்றிய கல்வி அமைச்சகத்திற்கு கீழ், தன்னாட்சி அந்தஸ்து கொண்ட அமைப்பாக உள்ளது. இது நடத்தும் தேர்வுகளும் அதன் முடிவுகளுமே, உயர்கல்வி கற்க விரும்பும் மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது. பாஜக வழக்கம் போல் சொல்லும் வியாக்கியானம், உலக தரத்தில் உள்ள பல்வேறு தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள இந்த தேர்வு முகமை பயன்படும் என்பதாகும். முழுக்க முழுக்க தனியார் கோச்சிங் நிறுவனங்களை உருவாக்கவும் பயன்படுகிறது. இந்த 5 ஆண்டுகளில், பைஜு, ஆகாஷ், போன்ற பெயர்களில் பல நூறு கோச்சிங் நிறுவனங்கள் தோன்றியுள்ளன. இவை அனைத்தும் கார்ப்பரேட் தன்மை கொண்டு செய்ல்படுவதையும் காண முடிகிறது. இதிலிருந்தே பாஜக ஆட்சியாளர்கள் முன் வைத்துள்ள நோக்கத்தை அறிய முடியும்.

மார்க்சிஸ்ட் கட்சியின் கொள்கை:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், மக்கள் ஜனநாயக திட்டம் பள்ளிக்கல்வி வரை இலவச, கட்டாய கல்வி வழங்கப்படும் என்றும், மாநில மொழிகளில் பயிலும் வாய்ப்பை அதிகப்படுத்தப்படும் என்றும், கூறுகிறது. அரசு கட்டமைப்பு துறையில் அனைத்து தேசிய இனங்களுக்குமான சமத்துவம், மாநில சுயாட்சி ஆகியவை உறுதி செய்யப்படும் என கூறுகிறது. அனைத்து நிர்வாகப் பணிகளும் சம்மந்தப் பட்ட மாநிலம் அல்லது உள்ளாட்சி கட்டுப்பாட்டில் இருக்கும். இவ்வாறு பல்வேறு வகையில் அதிகார பரவலை வலியுறுத்துகிறது. ஜூலை 23 அன்று மதுரையில் மாநில உரிமைகள் பாதுகாப்பு மாநாடு இந்த நோக்கத்தை வலுப்படுத்தவும், ஒன்றிய பாஜகவின் அதிகார குவிப்பை தகர்க்கவும் நடத்தப் படுகிறது. வெல்லட்டும் மாநில உரிமைகளுக்கான இயக்கம்.    

சமூக பாதுகாப்புடன் கூடிய வேலை

 

சமூக பாது காப்பு… தேச வளர்ச்சியின் அடையாளம்..

 

வேலை கிடைப்பதே பெரிய விஷயம், அதிலென்ன சமூக பாதுகாப்புடன் கூடிய வேலை? இப்படி ஒரு கேள்வியை சிலர் எதிரொலிப்பதாக உள்ளது. வேலைக்கு சேரும் போதே, வெளியேறும் தேதியும் சான்றிதழ் பார்த்து குறித்தால், அது ஓய்வு பெறும் வயது, தேதி சார்ந்தது. ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பயன்படுத்தி பின் வெளியேற்றும் விதமாக, நாள் குறிக்கப்பட்டால், அது பிக்சட் டெர்ம் எம்ப்ளாய்மெண்ட். இன்று நவதாராளமய கொள்கை அளித்திருக்கும் வேலை வாய்ப்பின் தன்மை, பிக்சட் டெர்ம் எம்ப்ளாய்மெண்ட் என்ற வடிவில் உள்ளது. நிரந்தர வேலை இல்லை என்பதை தெளிவாக அரசும், தனியாரும் கூட்டாக சொல்கின்றனர்.

உழைப்பு சக்திக்கு நியாய விலை எப்போது?

தக்காளி அதிகம் விளைந்தால், விலை படுமோசமாக சரியும். தக்காளிக்கு கிராக்கி அதிகம் என்றால், விலை ஏறுகிறது. இப்போது நாம் காணும் அத்தியாவசிய பொருள்களுக்கான விலை அதைக் தான் குறிப்பிடுகிறது. அதேபோல் முதலாளித்துவ உற்பத்தியில், வீடுகள் அல்லது கார் போன்றவை மிக அதிகமாக உற்பத்தியாகி விற்பனைச் சந்தையில் காத்திருந்தாலும், விலை குறைவதில்லை. முதலாளி எதிர் பார்க்கும் விலைக்காக காத்திருக்கின்றனர். ஏனென்றால் குறுகிய காலத்தில் கெட்டுப் போகபோவதில்லை. எனவே முதலாளியால், தனது உற்பத்தி பொருளின் விலையை தீர்மானிக்கவும், அதற்கேற்ப விற்பனையை ஒத்தி வைக்கவும் முடிகிறது. ஆனால் விவசாயி அல்லது சிறு வணிகரால் அது முடிவதில்லை.

அதேபோல் தான் வேலை இல்லா இளைஞர் தான் விரும்பும் அல்லது தனது கல்வி தகுதிக்கான வேலை கிடைக்கும் வரை காத்திருக்க முடிவதில்லை. மாறாக ஏதாவது ஒரு வேலைக்கு செல்ல வேண்டியுள்ளது. இதன் காரணமாக உழைப்பு சந்தையில் பெரும் கூட்டம் இருப்பதால், உழைப்பு சக்தி மலிவான விலைக்கு விற்க வேண்டிய கட்டாயத்திற்கு தொழிலாளர் ஆளாகிறார்.  ஒரு வேளை படித்து முடித்தவர் தான் விரும்பும் வேலைக்காக காத்திருக்க வசதியாக வேலையில்லா கால நிவாரணம் கிடைக்கும் என்றால், போட்டி இருக்காது. அது மலிவு விலைக்கு உழைப்பு சக்தியை விற்கும் சூழலை உருவாக்காது. இந்த பின்னணியில் தான் வேலை உரிமை அடிப்படை உரிமைக்கான சட்டமாக்கபட வேண்டும். வேலை கிடைக்கும் வரை நிவாரணம் கிடைப்பது இதன் மூலம் உறுதியாகும்.  எனவே இந்த கோரிக்கையை வலுவாக முன் வைக்க வேண்டியுள்ளது.

வேலை இல்லா கால நிவாரணம் இன்று:

சோசலிச கொள்கையை பின்பற்றும் நாடுகள் எண்ணிக்கை, இரண்டாம் உலகப் போர் முடியும் போது அதிகரித்தது. சோசலிச நாடுகள் வேலை அல்லது நிவாரணம் என்பதை உத்தரவாதம் செய்தது. வேறு பல்வேறு சமூக பாதுகாப்பு கொள்கைகளை கொண்டிருந்தது. இதன் காரணமாக, முதலாளித்துவ நாடுகளுக்கு ஏற்பட்ட நெருக்கடியின் விளைவு, உலகின் பல நாடுகள் தங்களை, நலத்திட்ட அரசுகள் என பிரகடனம் செய்யும் நிலை உருவானது. வேலை அல்லது வேலை இல்லா கால நிவாரணம் என்ற கொள்கையை பின்பற்றின. இன்றும் பல வளர்ந்த நாடுகளில் இந்த சமூக பாதுகாப்பு கொள்கை அமலில் உள்ளது.

ஆனால் சோசலிச நாடுகள் சோவியத் உள்ளிட்டவை, பின்னடைவை சந்த்தித்த போது, முதலாளித்துவ நாடுகள், கூடுதல் லைசன்ஸ் வழங்கப்பட்டதைப் போல், அதி வேகமாக, தனது உழைப்பு சுரண்டல் கொள்கைகளை தீவிர படுத்தியது. வேலையின்மையை பராமரிப்பதும், போட்டியை அதிகப்படுத்துவதும், நவீன இயந்திரங்கள், ஆட்டோமேசன், ரோபோட்டைசேசன் மூலம் வேலை வாய்ப்பை சுருக்குவதும் இன்று அதிகமாகி உள்ளது. இது சுரண்டல் மற்றும் மூலதன குவிப்பிற்கு பெரும் உதவியாக உள்ளது. குறிப்பாக வேலை இல்லா கால நிவாரணம் போன்றவை கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.

அமெரிக்காவில் 2022 கணக்குபடி, மசாசூட்ஸ் மாநிலம் ஒரு வாரத்திற்கு1015 டாலர் என அதிகபட்சமாகவும், மிஸ்ஸிசிப்பி மாநிலத்தில் 235 டாலர் என குறைந்த பட்சமாகவும் வேலை இல்லா கால நிவாரணம் காப்பீட்டு திட்டத்தின் மூலம் வழங்குவதாக, விக்கிபீடியா தெரிவிக்கிறது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் 4.01 யூரோ ஒரு நாளைக்கு என்ற முறையில், வயதுக்கு ஏற்ப, வழங்கப்படுகிறது. குறைந்த பட்சம் லக்சம்பர்க் நாட்டில் 12 மாதம் துவங்கி ஸ்பெயின் 72 மாதங்கள் வரையிலும் வேலை இல்லா கால நிவாரணம் வழங்கப்படுகிறது. பரவலான முறையில் 24 மாதங்கள் பின்பற்றபடுகிறது. இது இளைஞர்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்கிறது.

சீனாவில் 1585 யுவான் ஒரு மாதத்திற்கு நிவாரணமாக வழங்கப்படுகிறது. வியட்நாமில் ஒரு மாத சம்பளத்தில் 60 சதம் வேலை இல்லா கால நிவாரணமாக அரசு வழங்குகிறது. வடகொரியாவில், 50சதம் வழங்கப்படுகிறது. கியூபாவில் உணவு பொருள்கள் முழுமையாக வழங்கும் ஏற்பாடு உள்ளது. இவை சமூக பாது காப்பு நடவடிக்கைகளுக்கான உதாரணமாக உள்ளன.

இந்தியாவில் வேலை இல்லா கால நிவாரணம்:

இந்தியாவில் இன்னும் பெரும்பாலான மக்களிடம் நிலப்பிரபுத்துவ சிந்தனையே மேலோங்கி உள்ளது. வேலை இல்லா கால நிவாரணம் வழங்கினால் அது மனிதர்களை சோம்பேறி ஆக்கி விடாதா? அரசிடம் அவ்வளவு பணம் எங்கிருக்கிறது? போன்ற பிற்போக்குதனமான கேள்விகள் முன்வைக்கப்படுவது நீடிக்கிறது. இது ஆட்சியாளர்களுக்கு சாதகமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால், ஆட்சியாளர்களின் பிரதிநிதிகளே இந்த பிற்போக்கு வாதத்தை பொது சமூகத்தில் தீவிரமாக முன் வைக்கின்றனர்.

இந்தியாவில் ஒன்றிய அரசு, வேலை இல்லா கால நிவாரணம் வழங்க முன் வராத காரணத்தால், சில மாநிலங்களே வேலை இல்லா கால நிவாரணம் வழங்குகின்றன. 2018 விவரத்தின் படி, திரிபுராவில் ரூ 1000 வழங்கப்படுகிறது. அரியானா மாநிலத்தில் 1000ரூ முதல் 2000ரூ வரை வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ரூ 350 துவங்கி 450ரூ வழங்கப்படுகிறது. இந்த குறைந்த பட்ச தொகைக்காக, ஏராளமான பிரச்சார இயக்கங்களும், போராட்டங்களும் முன் எடுக்கப்பட்டதை உலகறியும்.

கேரளாவில் கிராமப்புற வேலை உறுதி சட்டம் அடிப்படையில், வருத்திற்கு சராசரியாக 62 நாள்கள் ஒரு நபருக்கு வேலை வழங்கப்பட்டு, ரூ310 சம்பளம் வழங்கப்படுகிறது. மத்திய பிரதேசத்தில் 204 ரூ, குஜராத்தில் 239ரூ என்பதாக உள்ளது, இந்த மாநிலங்கள் வேலை நாள்கள் குறைவாக வழங்குகின்றன. இதை 200 நாள்களாகவும், ரூ 600 சம்பளமாகவும் வழங்கப்படுவதன் மூலமே வறுமை ஒழிப்பு நடவடிக்கையில் இந்தியா முன்னேற முடியும்.

இந்தியாவில் 2004 ல், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமைந்த பின்னணியில், அதில் இடதுசாரி, நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 62 ஆக இருந்த சூழலில், குறைந்த பட்ச பொதுத் திட்டம் அடிப்படையிலான ஆட்சி, மேற்குறிப்பிட்ட 100 நாள் வேலைதிட்டம் சட்டமானது. ஆனால் இன்றைய பாஜக ஆட்சியில், இந்த சட்டத்தை அமலாக்குவதற்கான நிதியை வெட்டி சுருக்கி உள்ளது. இதன் மூலம் சராசரியாக இந்தியாவில் 42 நாள்களாக குறைந்துள்ளது. பாஜக ஆட்சியில் படிப்படியாக 2019 முதல் குறைந்து வருகிறது. பாஜக ஆட்சி சமூக பாதுகாப்பு திட்டங்களை அழித்து வருகிறது என்பதற்கு இது ஒரு உதாரணமாகும்.

அய்யங்காளி நகர்புற வேலை உறுதி திட்டம் தனியாக கேரளாவில் செயல்படுத்தப்படுகிறது. இதில் ரூ 331 தினக்கூலி என்ற முறையில் அமலாகிறது.  இதை தமிழ்நாடும் அமலாக்க வேண்டும். இதன்மூலம் கல்வித் தகுதி குறைவானவர்களுக்கு சமூக பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். அதேநேரம், தமிழ்நாட்டிலும், வேலை இல்லா கால நிவாரணத்தை அதிகப்படுத்த வேண்டும்.

நிவாரணத்தை விடவும், காண்ட்ராக்ட் பரவாயில்லையா?

வேலை இல்லா கால நிவாரணத்தை விடவும், காண்ட்ராக்ட் அல்லது, அவுட்சோர்ஸ் முலமான வேலை வாய்ப்பை அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்குகின்றன. அரசின் சமூக பாதுகாப்பு நடவடிக்கை இல்லை என்பதாலேயே இளைஞர்கள் இந்த வேலைத் திட்டத்திற்குள் தள்ளப் படுகின்றனர். சமூக பாதுகாப்பிற்கு மாற்றாக காண்ட்ராக்ட் வேலை வாய்ப்பு இருக்க முடியாது. அது தனியார் கொள்ளை லாபத்திற்கு மட்டுமே வழி வகுக்கும்.

சமூக பாதுகாப்பு திட்டங்கள் இல்லாமை காரணமாக, தமிழ்நாடு உள்ளிட்ட, இந்தியா முழுவதும், ஏதாவது ஒரு வேலைக்கு செல்லும் நிலை, வரம்பற்ற வேலைநேரம், குறைந்த பட்ச ஊதிய சட்டம் பின்பற்றபடாதது, போன்றவை காரணமாக, ரத்த அழுத்தம், உடல் சோர்வு, சர்க்கரை நோய், மன அழுத்தம் போன்ற நோய்களுக்கு இளைஞர்கள் ஆட்படுவதை காணமுடிகிறது. இது சரியான திசையில் இந்திய மனிதவள குறியீடு பயணிப்பதற்கு மிகப் பெரிய தடை என்பதை அரசுகள் உணர வேண்டும்.

சமூகப் பாதுகாப்புடன் கூடிய வேலைக்கான இயக்கம்:

கடந்த காலங்களில், வேலையின்மைக்கு எதிரான நடவடிக்கை குழு என்ற பெயரில் தீவிரமாக வேலையின்மையை எதிர்த்த கூட்டு பிரச்சாரம் போராட்டம் நடைபெற்றது. இன்று சமூக பாதுகாப்புடன் கூடிய வேலைக்கான இயக்கம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதில் உள்ள பல்வேறு வெகுமக்கள் அமைப்புகள், கூட்டாக முன்னெடுக்கும் பிரச்சாரமும், போராட்டங்களும் ஆளும் அரசுகளை நிர்பந்திப்பதாக மாறும் வாய்ப்பு உள்ளது. சென்னை விருகம்பாக்கத்தில், ஆகஸ்ட் 1 அன்று நடைபெறும் சிறப்பு மாநாடு தமிழ் சமூகத்தின் இளம் தலைமுறைக்கு கட்டியம் கூறும் வகையில் எழுச்சி நடை போட அழைக்கிறது.

தீக்கதிர்

 

 

அதானி – பாஜக கூட்டணியிடம் இருந்து பொதுச் சொத்துக்களை பாதுகாப்போம்.. 

அதானி மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகள் வருகிறது. இதுவரை இந்தியாவில் எந்த ஒரு இந்திய பெரு நிறுவனத்தின் மீதும் இல்லாத குற்றச்சாட்டு அதானி மீது மட்டும் ஏன் வருகிறது, என்ற கேள்வி முக்கியமானது. எந்த ஒரு பெரு நிறுவனமும் 10 ஆண்டுகளில் பெரும் சொத்துக்களுக்கு சொந்தக் காரராக வளரவில்லை, என்ற உண்மையில் இருந்து ஊழலுக்கு அப்பாற்பட்ட நிறுவனம் அல்ல அதானி குரூப் ஆப் இண்டஸ்ட்ரீஸ் என்ற முடிவுக்கு வர முடியும்.

அதானி சொத்துக் குவிப்பில் பொதுத் துறை நிறுவனங்கள்:

முதலில் 2023 ஜனவரியில், ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் அதானி எப்படி பங்கு சந்தை வர்த்தகத்தை முறைகேடாக பயன்படுத்தினார் என்பதை அம்பலப் படுத்தியது. அதானியின் சில குறிப்பிட்ட நிறுவனங்களின் பங்கு மதிப்பு 819 சதம் திடீரென உயரும் வகையில் முறைகேடுகள் செய்யப் பட்டதை, ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் அம்பலப்படுத்தியது. பாரத ஸ்டேட் வங்கி, எல்.ஐ.சி நிறுவனங்களின் பெயரும் இதன் மூலம் பாதிப்புகளை சந்தித்தது. இந்த விவகாரத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் மொகுவா மொய்த்ரா தகுதி நீக்கம் செய்யப் பட்டார். பாஜக ஆட்சி, அந்த அளவிற்கு அதானி ஆதரவு நடவடிக்கைகளை மேற்கொண்டது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இடைக்கால நீக்கம் செய்யப் படும் அளவிற்கு, நாடாளுமன்றத்தில் பாஜக உறுப்பினர்கள் அதீதமாக நடந்து கொண்டனர்.

உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திரம் மூலம் நிதி பெறுவது, சட்டவிரோதம் என்றது. அதில் அதானி பெரிய அளவில் இடம் பெறாதது எப்படி என கேள்வி எழுப்பினர். ஆனால் அதானி நிறுவனத்தின் கிளை நிறுவனங்களான ABC இந்தியா, வெல்ஸ்பர்ன் லிவிங் லிமிடெட் ஆகியவை மூலம் 55.4 கோடி பாஜக கட்சிக்கு, தேர்தல் பத்திரம் வழங்கியதாக பாரத ஸ்டேட் வங்கி அளித்த விவரம் தெரியப் படுத்தியது. பாஜக உடன் அதானி நிறுவனம் நெருக்கமாக ஊல்லது என்பதற்கு இது கூடுதல் உதாரணம் ஆகும்.

மூன்றாவதாக அதானி நிறுவனம் கோலோச்சும் துறை கப்பல் துறைமுகம் ஆகும். 355 மில்லியன் டன் (35.5 ஆயிரம் கோடி கிலோ) சரக்குகளை கையாளும் அளவிற்கு 8 பெரிய  துறைமுகங்களை தன்வசம் கொண்டிருக்கிறது. மேற்கு கடற்கரையில், முந்த்ரா, டுனா, டாஹ்ஜ், ஹாஜிரா, திஹி, மோர்குவா மற்றும் விழிஞம் என ஒன்றிய அரசிற்கு சொந்தமானதை விடவும் அதிக எண்ணிக்கையை, மேற்கு கடற்கரையில் அதானி உடைமையாக்கி உள்ளார்.   தமிழ்நாட்டில் காட்டுப்பள்ளி துறைமுகமும் அதானிக்கு சொந்தமானது ஆகும்.

10 ஜனவரி, 2024 நிலவரப் படி, மங்களூர், லக்னோ, அகமதாபாத், கவுகாத்தி, ஜெய்பூர், திருவனந்தபுரம் மற்றும் மும்பை ஆகிய 7 விமான நிலையங்கள் அதானி கட்டுப்பாட்டில், 100 சதமானம் வைக்கப் பட்டிருக்கிறது. இங்கு 80 மில்லியன் (8கோடி) பயணிகள் கடந்தாண்டு வந்து சென்றுள்ளனர். அதானி ஏர்போர்ட் ஹோல்டிங் லிமிடெட் என்ற பெயரில், அதானியின் மகன் ஜீத் அதானி பொறுப்பாக்கப் பட்டு இயங்கி வருகிறது. இந்தியாவின் 25 சதமான பயணிகளையும், 33 சதமான கார்கோ (சரக்கு போக்குவரத்து) பணிகளையும் அதானி ஏர்போர்ட் ஹோல்டிங் லிமிடெட் நிறுவனம் செய்து வருகிறது. அடுத்து சென்னை விமான நிலையத்தை கைப்பற்றும் பணியில் தீவிரமாக இயங்கி வருகிறது.

அதானி நிறுவனமும், இந்தியாவின் மகாரத்னா நிறுவனம் என அழைக்கப்படும் இந்தியன் ஆயில் நிறுவனமும் இணைந்து, இந்தியன் ஆயில் அதானி கேஸ் பிரைவேட் லிட்., என்ற நிறுவனத்தை நடத்துகின்றனர். இந்தியாவின் 8 சதமான நுகர்வோர் இந்த நிறுவனத்தை சார்ந்து இருப்பதாக சொல்லப்படுகிறது. இது இல்லாமல் எண்ணெய் நிறுவனங்களும் செயல்படுகின்றன.

அதானியின் நிலக்கரி சுரங்கங்கள், சட்டிஸ்கர், மத்திய பிரதேஷ், ஒடிசா, ஆகிய மாநிலங்களிலும், இரும்புதாது சுரங்கம் ஒடிசா, மத்திய பிரதேஷ் மாநிலங்களிலும் உள்ளது. ஏரத்தாள அரசுக்கு இணையாக சுரங்கத் தொழிலில் ஈடுபட்டு வரும் நிறுவனமாக அதானி நிறுவனம் உள்ளது. ஏலத்தில் மற்ற எல்லோரையும் விட செல்வாக்கு பெற்ற நபராக அதானி இருப்பது அரசியல் செல்வாக்கு இல்லாமல் இருக்குமா? ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரிலும் நிலக்கரி சுரங்கம் அதானிக்கு இருக்கிறது.

மின்சார உற்பத்தி அதானியின் அடுத்த பெரிய தொழிலாகும். அதானிபவர் டாட் காம் இணைய தளம், 15,250 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் தெர்மல் பவர் பிளாண்ட் நடத்தி வருவதாக கூறுகிறது. குஜராத், மகராஷ்ட்ரா, கர்நாடகா, ராஜஸ்தான், சட்டிஸ்கர், மத்தியபிரதேஷ் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களின் மின் தேவை அதானியின் சேவையில் சிக்கி இருப்பதை அறிய முடிகிறது. இதன் காரணமாகவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கார்ப்பரேட்  - அரசுகளின் கள்ளக் கூட்டணி என தொடர்ந்து விமர்சித்து வருகிறது.

மொத்தத்தில் அதானியிடம் இல்லாத தொழில் இல்லை. அரசு படிப்படியாக தனது நிறுவனங்களை கூட்டு அல்லது தனியார் மயம் என்ற பெயரில் இழந்து வருகிறது. அரசின் கைவசம் உள்ள போது சேவை நிறுவனங்களாகவும், தனியாரிடம் செல்லும் போது கொள்ளை நிறுவனங்களாகவும் மாறும் என்பதற்கு, பைனான்சியல் டைம்ஸ் அம்பலப் படுத்தி உள்ள, நிலக்கரி குறித்த பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் மிகப் பெரிய உதாரணம் ஆகும்.

அதானி – பாஜக – அதிமுக கூட்டணி:

மே 22 தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் என்ற வேதாந்தா கார்ப்பரேட் நிறுவனத்தை காப்பதற்காக, அதிமுக அரசு, துப்பாக்கிசூடு நடத்திய நாள். அதே நாளில் லண்டனில் உள்ள பைனான்சியல் டைம்ஸ் இதழ் அதானி – பாஜக மற்றும் அதிமுக கூட்டணியின் கூட்டு கொள்ளை குறித்த விவரங்களை வெளியிட்டு உள்ளது. அமெரிக்காவைச் சார்ந்த ஜார்ஜ் சோரஸ் முதலீட்டில் இயங்கும் ஆர்கனைஸ்டு கிரைம் அண்ட் கரப்சன் ரிப்போர்ட்டிங் புராஜக்ட் (ஓ.சி.சி.ஆர்.பி) என்ற அமைப்பு, ஏராளமான ஆவணங்களை வெளிப்படுத்தி, மேற்படி ஊழலை அம்பலப் படுத்தி உள்ளது. 2014 ஜனவரி முதல் அக்டோபர் வரை 24 கப்பல்கள் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி, முதலில் தரம் குறைந்தது என விலை நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. அதன் பின் மூன்று மடங்கு விலையில் தமிழ்நாடு மின்சாரவாரியத்திற்கு விற்கப் பட்டுள்ளது. மேற்படி விவரம் பாஜக ஆட்சி துவங்கிய காலம், அதன் பின் விலை நிர்ணயத்தில் மாற்றம் என்றால், பாஜக துணை இல்லாமல் எப்படி சாத்தியம்? பாஜக துணையுடன் அதிமுக இந்த கொள்ளைக்கு உடந்தையாக இல்லாமல் எப்படி, அதானி இவ்வளவு பெரிய மோசடிக்கு தமிழ்நாடு மின்வாரியத்தை பயன்படுத்தி இருக்க முடியும்?.

மேற்படி நிலக்கரி டான்ஜெட்கோ என்ற தமிழ்நாடு மின்சார வாரிய நிறுவனத்தை அடையும் முன், கப்பலுக்கான ஆவணங்கள் சுப்ரீம் யூனியன் இன்வெஸ்ட்ரஸ் லிமிடெட் என்ற இடைத்தரகர் நிறுவனம் மூலம் வரி தளர்வுகள் அதிகம் கொண்ட  பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகளில் பதிவு செய்யப் பட்டதாக ஓ.சி.சி.ஆர்.பி என்ற அமைப்பு வெளிப்படுத்துகிறது. முழுக்கவும் அதானி செய்த மோசடி குறித்த விவரங்களாக இந்த புலனாய்வு அமைந்திருப்பதை கணக்கில் கொள்ள வேண்டும். சுமார் 7 ஆண்டுகள் இந்த கொள்ளைப் பயணத்தை வெற்றிகரமாக அதானி, பாஜக, அதிமுக கூட்டணி நடத்தி இருக்கிறது.  

விலை அதிகம் மட்டுமல்ல, எரிதிறன் என சொல்லப் படுகிற, தரம் குறித்த கேள்வியிலும் மேற்படி நிலக்கரி செல்லுபடி ஆகக் கூடியதல்ல. இந்தோனேசியாவில் உள்ள ஜான்லின் சுரங்க குழும நிறுவனத்திடம் பெற்ற நிலக்கரியின் எரிதிறன் 3000 கலோரி கொண்டதை அதானி இடைத்தரகராக இருந்து செயல்பட முடிவாகியுள்ளது. இதன் விலை 86 டாலர் என தீர்மானித்து உள்ளனர். இதை தமிழ்நாடு மின்வாரியம் ஒப்பந்தம் செய்து கொண்ட பின் தான், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் விலை அதிகம் கொடுத்து வாங்கியுள்ளது. ஆனால் 6000 கலோரி எரிதிறன் கொண்டநிலக்கரி செலவுகள் உள்பட 81 டாலருக்கு கிடைக்கிறது.

இதை விட மோசம், 2022ம் ஆண்டில் தி லான்செட் என்ற அமைப்பு நடத்திய ஆய்வு கூறும் செய்தியான, ஒவ்வொரு ஆண்டும், காற்று மாசு காரணமாக இந்தியாவில் 20 லட்சம் மக்கள் உயிரிழக்கின்றனர், என்பதாகும். அனல் மின் நிலையங்களை சுற்றி 100 மைல் சுற்றளவிற்கு குழந்தைகள் இறப்பு அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது.  

மேற்படி விவரங்கள் அரசு உடந்தையாக இருந்து செய்தது என்பதற்கு, சென்னையில் இயங்கும் அறப்போர் இயக்கம் என்ற அமைப்பு அளித்த புகார் முக்கியமான சான்று ஆகும். 2018ம் ஆண்டில், விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநகரகத்தில் அறப்போர் இயக்கம் புகார் அளித்துள்ளது. அதேபோல் இந்தியாவில் பொருளாதார குற்றங்களைத் தடுக்கும் நிதி அமைச்சகத்தின் புலனாய்வு பிரிவான, வருவாய் புலனாய்வு இயக்குநகரம், 6000 கலோரி எரிதிறன் கொண்ட நிலக்கரி 81 டாலருக்கு கிடைக்கும் போது, 3000 கலோரி எரிதிறன் கொண்ட நிலக்கரியை, 86 டாலருக்கு தமிழ்நாடு மின்வாரியம் கொள்முதல் செய்வதாக குறிப்பிட்டு உள்ளது. ஆனாலும், ஒன்றிய அரசும், அதிமுகவும் இதற்கு உடந்தை என்ற காரணத்தால் தான், மேற்படி கொள்ளை தடுக்கப் படவில்லை. 2016ம் ஆண்டில் ஒன்றிய அரசின் நிதி அமைச்சர்களாக அருண் ஜேட்லி மற்றும் ஜெயந்த் சின்ஹா இருந்துள்ளனர். தமிழ்நாடு மின்வாரிய துறை அமைச்சராக பி. தங்கமணி இருந்துள்ளார். தரம் குறைவான நிலக்கரியை அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்யும் பணி துவங்கிய காலத்தில் அமைச்சராக, நத்தம் விஸ்வநாதன் இருந்துள்ளார்.

ரூபாய் 6000 கோடி முதல் 10 ஆயிரம் கோடி வரை, மோசடி செய்யப்பட்டதாகவும் ஓ.சி.சி.ஆர்.பி நிறுவனம் கூறுகிறது. இந்த மோசடி நுகர்வோரின் மீது, கட்டண உயர்வு செய்யவும், மின்வாரிய ஊழியர்களின் நலன் காக்கும் திட்டங்களை கைவிட்டு, ஒப்பந்த ஊழியர்கள் மூலம், உழைப்பு சுரண்டலை அதிகப் படுத்தவும் பயன்பட்டுள்ளது. அதேபோல் சுற்றுசூழல் மாசு அதிகரிக்கவும் இந்த தம் குறைவான நிலக்கரி இறக்குமதி காரணமாகியுள்ளது. தி லான்செட் அமைப்பு கூறிய, 20 லட்சம் பேர் உயிரிழந்திருக்க கூடும் என்பது சாதாரண செய்தி அல்ல. மனித இழப்பும், பொருள் இழப்பும், அதானி – பாஜக- அதிமுக கஜானாக்களை நிரப்பி இருப்பது உண்மை.

தேவை பெரும் போராட்டங்கள்:

இந்தியாவிலும், உலக அனுபவத்திலும், நவ தாராளமய கொள்கை அமலான 190களுக்கு முன் ஊழல் குற்றச் சாட்டுகளுக்க்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாக இருந்தன. தாராளமய கொள்கைகள் அமலாக துவங்கிய பின் அம்பலமாகும் ஊழல்கள் மீதான எதிர்ப்பு இயக்கங்கள் குறைந்து வருகிறது. போபர்ஸ் எதிர்ப்பு, முந்த்ரா எதிர்ப்பு உள்ளிட்டவை வரலாற்றில் மிக முக்கியமான ஆட்சி மாற்றங்களுக்கு காரணமாக இருந்தது. பொதுமக்களும், வாலிபர், மாணவர் அமைப்பினர் பெரும் போராட்டங்களை நடத்தினர். 2014ல் 2ஜி ஊழல் ஆட்சி மாற்றத்திற்கு முக்கிய பங்கு வகித்தது.

பாஜக ஆட்சிக்கு வந்த பின், ரபேல் ஏர்கிராப்ட் ஊழல், அதானி நிறுவனங்கள் செய்யும் வகை வகையான ஊழல், ஆகியவை கார்ப்பரேட் பெரும் நிறுவனங்கள் வழிநடத்தும் ஊடகங்களால், மடைமாற்றம் செய்யப் படுகிறது. ஊடகங்கள் பாஜக வினால் அச்சுறுத்தப் படுவதும், கைப்பற்றப் படுவதும் அதிகரிக்கிறது. எனவே மக்கள் இயக்கம் தான் ஒரே வழி. அதானி நிறுவனத்தின் கொள்ளையை, அதற்கு உடந்தையாக இருந்த பாஜக மற்றும் அதிமுக கட்சியினரை அம்பலபடுத்தவும், பொதுச் சொத்துக்களை, பொதுத் துறை நிறுவனங்களை காக்கவும் தீவிர போராட்டங்கள் அவசியம்,    

வேலை நிறுத்தம்

 

கார்ப்பரேட்டுகளும், தொழிலாளி – விவசாயி நிலையும்

டபுள் எஞ்சின் பாஜக அரசு கொள்கை 

மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைந்து 10 ஆண்டுகள் முடியப் போகிறது. அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில், 7 வேலை நிறுத்தங்கள் இந்த 10 ஆண்டு காலத்தில் நடந்துள்ளது. விவசாய சங்கங்களுடன் இணைந்து மூன்று வேலைநிறுத்தங்கள் நடந்துள்ளன. மீண்டும் ஒரு வேலை நிறுத்தத்திற்கு, அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும், சம்யுக்த கிசான் மோர்ச்சா என்ற விவசாய சங்கங்களின் கூட்டமைப்பும், வருகிற பிப்ரவரி 16 வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

டில்லி மாநகரம் இந்திய நாட்டின் தலைநகரம் என்பதை மறந்து, ராஜாக்களின் கோட்டையாக நடத்துகின்றார், மோடி. விவசாயிகள் தங்களது எதிர்ப்பை பாஜகவின் ஆட்சி மற்றும் கொள்கைகளுக்கு எதிராக வலுவாக வெளிப்படுத்துவது, பாஜக ஆட்சிக்கு வயிற்றில் புளியை கரைப்பது போல் உள்ளது. டில்லியை சுற்றி உள்ள மாநிலங்களில் இருந்து பேரணியாக விவசாயிகள் வருவதை அனுமதிக்க கூடாது எனும், ஜனநாயக விரோத அணுகுமுறை காரணமாக, சாலைகளில் ஆணி பதிக்கும் வேலையில், காவல் துறையினர் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். துணை ராணுவப் படையினர், டில்லியை சுற்றிலும் குவிக்கப் பட்டு வருகின்றனர். இந்த ஆட்சி மக்கள் விரோத, தொழிலாளர் விரோத மற்றும் விவசாயிகள் விரோத ஆட்சி என தொழிற்சங்கங்களும், விவசாயிகள் சங்க கூட்டமைப்பினரும் தொடர்ந்து குற்றம் சுமத்துவதை, உண்மை என நிரூபிக்கும் வகையில், எதிர்த்து போராடும் உரிமையை மறுக்கும் ஜனநாயக விரோத ஆட்சியாக பாஜக ஆட்சி விளங்குகிறது.

எம்.எஸ். சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா – அவர் பரிந்துரைக்கு கல்தா?

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது அறிவித்து உள்ளது பாஜக ஆட்சி. இது ஒரு மாபெரும் அறிவியல் அறிஞருக்கு அவர் தகுதி காரணமாக கிடைக்க வேண்டிய ஒன்றுதான். ஆனால் அவர் வாழ்நாள் முழுவதும் வலியுறுத்திய, குறைந்த பட்ச ஆதார விலை, விவசாய விளை பொருளுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க பாஜக ஆட்சி தயாரில்லை. பாஜக ஆட்சிக்கு வந்த 10 ஆண்டுகளில், அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், உ.பி ஆகிய மாநிலங்களில் இருந்து விவசாயிகள் தொடர்ந்து இரண்டாவது கட்டமாக, டில்லியை நோக்கி அணி வகுக்கின்றனர். கடந்த 2020 நவம்பர் 26ல் தலைநகர் முற்றுகை எனும் முழக்கத்துடன் அணி வகுத்த விவசாயிகள், ஓராண்டு நீடித்த போராட்டம் மூலம், பாஜக ஆட்சி அறிவித்த மூன்று வேளாண் சட்டங்கங்களைத் திரும்ப பெற வைத்தனர்.

இப்போது மோடி அரசு, ராமருக்கு கோவில் திறந்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 26 வது நாளில் மீண்டும், விவசாயிகள் டில்லியை நோக்கி அணி வகுக்கின்றனர். இந்த அணிவகுப்பு குறித்த செய்தி, இரண்டு விவரங்களை வெளிப்படுத்துகிறது. ஒன்று, பாரத ரத்னா விருது எம்.எஸ். சுவாமிநாதனுக்கு அளிப்பது மோடி அரசின் போலித்தனமான பாராட்டு என்பதாகும். இரண்டாவது ராமருக்கு கோவில் கட்டி அதை அவசர அவசரமாக திறந்தாலும், மக்கள் தங்கள்  அடிப்படை தேவைக்கு போராடியே ஆக வேண்டும் என்பதாகும். மோடி ஆட்சியில் விருதுகளும், கோவில்களும் அரசியல் சாயம் பூசப்பட்ட ஒன்று என்பதை பொது சமூகம் உணர்ந்திருக்கிறது.

இதன் காரணமாகவே கடந்த காலத்தில் விவசாயிகள் போராட்டத்தின் போது, எண்ணற்ற அறிஞர்கள் தங்கள் விருதுகளை அரசிடம் திருப்பி தருவதாக அறிவித்தனர். அதுமட்டுமல்ல, அண்மையில் சாக்‌ஷி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் தங்கள் பதக்கங்களை திருப்பி அளிக்கும் அவலம், மோடி அரசின் விளையாட்டு கொள்கை அதில் பாஜகவினரின் பாலியல் வக்கிரங்கள், ஆதிக்கத்தை நிலை நிறுத்த எடுக்கும் முயற்சி ஆகியவை அம்பலமானது. எனவே போராட்டம் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.

மோடி ஆட்சியும் வேலைவாய்ப்பு குறித்த சுய தம்பட்டமும்:

இன்னும் கூட மோடி தான் 10 ஆண்டுகளாக பிரதமர், பொறுப்பில் இருப்பவர், என்பதை உணர்ந்து, தங்கள் ஆட்சி இவ்வளவு வேலை வாய்ப்பை வழங்கி உள்ளது என பேச தயாரில்லை. எப்போதும் ஒரு தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தின் உரையைப் போல் தான் அவருடைய பேச்சுக்கள் உள்ளன. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தால், இந்திய மூன்றாவது பொருளாதார நாடாக மாறும் என பேசி வருகிறார். அண்மையில் கடந்த கால காங்கிரஸ் ஆட்சியாளர்களை விடவும், ஒன்னரை மடங்கு கூடுதலான வேலை வாய்ப்பு வழங்கப்பட்டதாக சுய தம்பட்டம் அடித்துள்ளார். இதற்கான எந்த ஒரு விவரத்தையும் அளிக்கவில்லை.

உண்மை நிலவரம் மோடியும் அவரின் சங்க பரிவாரங்களும் கூறுவதற்கு எதிராக உள்ளது. அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட, பட்ஜெட்டில், கடந்த காலத்தில் வேளான் துறைக்கு ஒதுக்கீடு செய்யப் பட்ட தொகை ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவிடப் படாமல் திருப்பி செலுத்தப் பட்டுள்ளது. வேளாண் துறைக்கு இதை விட கேடு வேறு என்ன இருக்க முடியும்? எப்படி கிராமப் புற வேலைவாய்ப்பு உயரும்? அதேபோல் மகாத்மா காந்தி தேசிய கிராமப் புற வேலை உறுதி சட்டத்தை அமலாக்குவதற்கான நிதியை பாஜக தொடர்ந்து வெட்டி சுருக்கி உள்ளது. இதன் காரணமாக வேலை நாள்கள் எண்ணிக்கை 25 முதல் நாள்கள் கூட இல்லை.

பேராசிரியர். பிரபாத் போன்ற பொருளாதார அறிஞர்கள், ”பாஜக தாக்கல் செய்த பட்ஜெட், வேலை வாய்ப்பை அதிகரிக்க உதவாது, உண்மை ஊதியத்தில் உயர்வை ஏற்படுத்தாமல் சரிவை உருவாக்கி உள்ளது, இதன் காரணமாக வாங்கும் சக்தி குறைவதால், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களுக்கான நுகர்வு குறைகிறது”, என கூறுகின்றனர். 2018-19 ஆண்டை விட, 2023-24 ஆண்டில் உண்மை ஊதியத்தில் 20 சதம் அளவிற்கு சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார். இது மனித வளர்ச்சி குறியீட்டில் இந்தியா பின்னடைவை சந்திக்க காரணமாகிறது எனவும் கூறுகிறார். இந்தியா உலக வறுமை பட்டியலில் 125 நாடுகளில் 111 வது இடத்தில் இருந்ததை அண்மையில் காண முடிந்தது. இந்த விவரங்கள் பாஜக ஆட்சியின் அவலத்தை தோலுரிப்பதாகும்.

ஒருபுறம் வேலையின்மை அதிகரிப்பும் மறுபுறம் வேலையில் இருப்போர் மீதான வேலை பளு அதிகரிப்பும் நடந்து வருகிறது. அரசு போக்கு வரத்து கழகங்களில் ஓட்டுநர், நடத்துனர், மெக்கானிக் போன்றோர் பற்றாக்குறை உள்ளது. மின்வாரியம், அரசு அலுவலகங்கள், வங்கி உள்ளிட்ட தனியார் நிறுவனங்களில் போதுமான நியமனங்கள் இல்லை. தனியார் அப்பட்டமாக ஆள் எண்ணிக்கையை குறைத்தால் ஊதியத்தை உயர்த்துவோம் என பேசும் பேரம், ஆகியவை இந்துத்துவா மற்றும் கார்ப்பரேட் கூட்டணியின் விளைவால் கூடுதலாக உருவான செயல்கள் ஆகும். இந்த செயல் வேலையில் இருப்போர் மீதான வேலை பளுவை பல மடங்கு உயர்த்தி உள்ளது. வாஜ்பாய் ஆட்சி ஒளிரும் இந்தியா என்ற பிரச்சாரத்தால் மக்களிடம் அம்பலமானது. இப்போது மோடி ஸ்டார்ட் அப் இந்தியா, மேக் இன் இந்தியா, போன்ற பொய் முழக்கங்களை முன் வைத்து அம்பலமாகிறது. 

டபுள் எஞ்சின் ஆட்சியும், டபுள் டபுளாக முதலாளிகளுக்கு சலுகையும்:

ஏராளமான கார்ப்பரேட் நிறுவனங்கள் மோடி ஆட்சிக்கு வந்த பின்னணியில் பெரும் கொள்ளை லாபம் ஈட்டி உள்ளதை போர்ப்ஸ் உள்ளிட்ட இதழ்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. இந்திய முதலாளி அதானியின் நிறுவனம் இஸ்ரேல், உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் துறைமுகத்தை விலைக்கு வாங்கி உள்ளது. இதற்காக பல பத்தாயிரம் கோடிகளை முதலீடு செய்துள்ளதாக, சி.ஐ.டி.யு நிர்வாக குழு அறிக்கை குறிப்பிடுகிறது. தேசிய பணமயமாக்கல் திட்டத்தின் மூலம், எண்ணற்ற பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் நிலையில், புதிய கட்டமைப்பு பணிகளையும் தனியாரிடம் ஒப்படைக்கிறது. இது வேலையில் உள்ள தொழிலாளர்களை பாதிப்பது மட்டுமல்ல. சாலை, ரயில், விமானம், கப்பல் உள்ளிட்ட போக்குவரத்துகளைப் பயன்படுத்தும் மக்கள் தலையில் கூடுதல் விலையை ஏற்றி கொள்ளையடிக்க வழி வகுக்கிறது.

வங்கி ஊழியர்கள் அல்லது பொதுத் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யும் போது பொது மக்களை முனுமுனுக்கச் செய்வதில் ஆளும் வர்க்கம் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் வங்கிகளுக்கு வராக் கடன் தள்ளுபடி என 2.14 லட்சம் கோடியை மோடி அரசு 2023 ல் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கி உள்ளது. திவால் என்ற பெயரில் ஏராளமான வழக்குகள் வங்கிகள் நடத்தி தீர்வு காணப் படாத காரணத்தாலும் பொருளாதார இழப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் மூலம் ஏற்பட்ட இழப்பு, வராக் கடன் தள்ளுபடி மூலம் ஆன தொகையை விட அதிகம். டபுள் எஞ்சின் ஆட்சி, டபுள் டபுளாக முதலாளிகளுக்கு சலுகையை வழங்குகிறது. இது போல் மக்கள் சொத்துக்களை நாசம் செய்யும் பாஜக ஆட்சிக்கு எதிரான முனுமுனுப்புகளை காண முடிகிறது, அதை பாஜகவின் தோல்விக்கானதாக மாற்ற வேண்டிய பொறுப்பு உள்ளதை, உணர்ந்தே வேலை நிறுத்த அறைகூவல் விடப்பட்டுள்ளது.

காண்ட்ராக்ட், பயிற்சி போன்ற பெயர்களில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கொள்ளை லாபம் ஈட்டும் பெரும் நிறுவனங்களுக்கு, செயல் திரனுடன் இணைந்த ஊக்கத் தொகை (Performance Linked Incentive) என்ற அறிவிப்பின் மூலம் 1.97 லட்சம் கோடி ரூபாய் அளித்து உள்ளது. இவற்றை, உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களான, ஆட்டோமொபைல், மின்னனு சாதன உற்பத்தி, ஐ.டி மற்றும் டிஜிட்டல் நிறுவனங்களுக்கு அறிவிக்கப் பட்டுள்ளது. பணம் இல்லை என்பதை விடவும் மக்களுக்கும், தொழிலாளர், விவசாயிக்கு தரமுடியாது என்பதே பாஜக கொள்கையாக உள்ளது.

அமைப்பு சாரா தொழிலாளர்கள் மீதான பாரபட்சம்:

மனிதர்களை பாரபட்சமாக நடத்த கூடாது அது தண்டனைக்கு உரிய குற்றம் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், சமூக பாதுகாப்பு இல்லாத பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்களாக, அமைப்பு சாரா தொழிலாலர்கள் உள்ளனர். வேலை இல்லை என்பதால், படித்த இளைய தலைமுறை தொழிலாளர்கள் இப்படியான சுரண்டலுக்கு ஆளாகின்றனர். உலகின் பல நாடுகள் ஒரு மணி நேரத்திற்கு குறைந்த பட்ச கூலி சட்டத்தை அமலாக்குகின்றன. இந்தியாவில் மாதத்திற்கு குறைந்த பட்சம் ரூ 26 ஆயிரம், நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் என்ற கோரிக்கையை தொழிற்சங்கங்கள் முன் வைக்கின்றன. ஆனால் பாஜக தொடர்ந்து மறுத்து வருகிறது. குறைந்த பட்ச வாழ்க்கை தேவைக்கான தொகையை தீர்மானிக்க முன்வராத பாஜக ஆட்சி, முதலாளிக்கு அள்ளி அள்ளி தருவது பாரபட்சத்தின் மேலதிகமான உச்சம் என்பதை புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

இந்த பின்னணியில் தான் கிராமங்களில் சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பு முழு அடைப்பு என்ற அறைகூவலையும், தொழிற்சாலைகளிலும், சாலை போக்குவரத்து உள்ளிட்ட தொழிலாளர்களையும் வேலை நிறுத்தம் செய்ய அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறை கூவல் விடுத்துள்ளன. அந்த வகையில் பிப்ரவரி 16 வேலை நிறுத்தம், தொழிலாளி மற்றும் விவாசாயிகள் சார்பில் பாஜக அரசுக்கும் அவர் கொள்கைக்கும் அடிக்கும் சம்மட்டி அடியாக இருக்கட்டும்.   

தீக்கதிர்

 

 

நீட் தேர்வும் -  கொள்ளை முறையும் ஒழிக்கப் பட வேண்டும்…

முதலாளித்துவம் தான் உருவாக்கிய விதிகள் அனைத்தையும், தானே மீறுகிற செயல்களை லாபத்திற்காக செய்கிறது. லாபத்திற்காக தன்னை தூக்கில் இட்டுக் கொள்ள வேண்டும் என்றால், தூக்கிலிட்டு கொள்ள சம்மதிக்கும், என முதலாளித்துவம் பற்றி, மார்க்ஸ் குறிப்பிடுகிறார். அப்படியானால் முதலாளித்துவம் பிறர் குறித்து ஒரு போதும் கவலை கொள்ளாது. அண்மையில் மருத்துவ கல்விக்கான நீட் தேர்வு முடிவுகள் அறிவிப்பில், லாபம் காரணமாக அத்தகைய குளறுபடிகள் ஏராளம் வெளிப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மருத்துவம் உள்ளிட்ட தொழில் நிபுனத்துவம் கொண்ட கல்விக்கு நுழைவுத் தேர்வு உருவானது முதல் இப்போது நீட் தேர்வு வரைக்கும், முதலாளித்துவ வளர்ச்சி உருவாக்கியது. வணிக தன்மை கல்வியில் வளர வளர நுழைவுத் தேர்வுகளும் வளர்ந்தது என்பதை கல்வி வளர்ச்சியில் கான முடியும்.

40 ஆண்டுகால வரலாற்று பின்னணி:

1984 வரை தமிழ்நாட்டில் உயர் கல்வியில் சேருவதற்கு மாணவர்கள் நுழைவுத் தேர்வு எதுவும் எழுத வேண்டியதில்லை. எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த போது 1984ல் நுழைவுத் தேர்வு முறையை, மருத்துவம், பொறியியல், வேளாண் துறை மற்றும் சட்டம் ஆகியவற்றிற்கு அறிமுகம் செய்தார். அன்றைக்கு அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தராக இருந்த வி.சி.குழந்தைசாமி அவர்கள் தலைமையில் அமைக்கப் பட்ட குழு, இதற்கான வழிமுறைகளை பரிந்துரை செய்தது. முதல் தேர்வு 1984 ஜூலை 14 மற்றும் 15 தேதிகளில் நடந்தது. அன்றைக்கு இருந்த எதிர்கட்சிகள் உள்ளிட்டு பலரும் எதிர்த்தனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் தடை கோரி தொடுக்கப் பட்ட வழக்கில், நீதிமன்றம் நுழைவுத் தேர்வு சரி என்றது. அன்றைக்கு தமிழ்நாட்டில் 10 மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இருந்தன.

பின்னர் 2006ம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்ற போது, மாணவர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு, ஆளகின்றனர். +1 மற்றும் +2 ஆகிய இரண்டும் சேர்ந்த புதிய கல்வி முறையில், மாணவர்களுக்கு +2 மட்டுமே கவனம் செலுத்தப் படுகிறது. இதன் காரணமாக டாக்டர். அனந்த கிருஷ்ணன் தலைமையிலான குழு அமைக்கப் பட்டு அவர்கள் பரிந்துரையின் படி நுழைவுத் தேர்வு உயர் கல்விக்கு ரத்து செய்யப் பட்டு, ஒற்றை சாளர முறை, மாணவர் சேர்க்கைக்கு  அறிமுகம் செய்யப் பட்டது.

கல்வி வளர்ச்சியும், வணிக வளர்ச்சியும்:

கல்வி அத்தியாவசியம், சமூக வளர்ச்சிக்கு பல வகையில் பங்களிப்பு செய்யும் மூலதனம் என்ற பார்வை படிப்படியாக குறைந்தது. தனியார் மயம் அதிகரித்தது. நுழைவுத் தேர்வு முறை 1984 அறிமுகம் செய்யப் பட்டதைப் போல், மெட்ரிகுலேசன் பள்ளிகள் உருவாக, தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை 1978ல் தனி வாரியம் உருவாக்கியது. அன்றைக்கு இருந்த முதலாளித்துவம் இந்த தேவையை வலியுறுத்தியது. தமிழ்நாட்டில், பள்ளி மற்றும் தொழில் நுட்ப கல்லூரிகளில் தனியார் கல்வி நிலையங்கள் பெருகின.

இதைத் தொடர்ந்து ஆந்திரம், கர்நாடகா, மகராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களும் கல்வியைத் தனியார்மயமாக்குவதில், தமிழ்நாட்டுடன் கடும் போட்டியைச் சந்தித்தன. 1994 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய கல்வி பெறுவது வாழும் உரிமையுடன் இணைந்தது. இந்திய அரசியல் சாசன சட்டம் பிரிவு 21 அதை வலியுறுத்துகிறது என்ற தீர்ப்பு, இந்திய கல்வி வரலாற்றில் பேசப்பட்ட ஒன்றாக மாறியது. இதற்கு அடிப்படை தனியார் கல்வி நிறுவனத்தின் கட்டண கொள்ளை ஆகும். இதை எதிர்த்த நீதிமன்ற வழக்கில் தான் மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டது. இதை ஒட்டி தமிழ்நாட்டிலும் கட்டண கொள்ளைக்கு எதிரான போராட்டம் வலுப் பெற்ற போது, டாக்டர். அனந்த கிருஷ்ணன் தலைமையில் அமைக்கப் பட்ட கமிட்டி கட்டண நிர்ணயிப்புகளுக்கான, வழி காட்டுதல்களை பரிந்துரைத்தது.

1992ல் சென்னை உயர்நீதிமன்றம் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியை, ராமசாமி உடையாரிடம் அளிக்க உத்தரவிட்ட தீர்ப்பு, அதைத் தொடர்ந்து ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு ஒப்படைத்த விதம் ஆகியவற்றிற்கு எதிரான தீவிரமான மாணவர் போராட்டத்தை, இந்திய மாணவர் சங்கம் மற்றும் இடதுசாரிகள் மட்டுமல்ல திமுக உள்ளிட்ட கட்சிகளும் ஆதரித்தன. தமிழ்நாட்டில் முழு அடைப்பு போராட்டம் வரை வெற்றிகரமாக நடந்தது. விளைவு கல்லூரியில் படித்து கொண்டிருந்த மாணவர்கள் வரைக்கும், அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு மாறுதல் செய்யப் பட்டனர்.

நெறியற்ற முதலாளித்துவ வளர்ச்சியில் பெருகிய கோச்சிங் மையங்கள்:

தாராளமய கொள்கை முதலாளித்துவ வளர்ச்சியை தீவிர படுத்திய நிலையில், முதலாளித்துவம் தான் உருவாக்கிய விதிகளை தானே மீறவும் செய்தது. உலக அளவில் சோசலிசத்திற்கு ஏற்பட்ட பின்னடைவு, முதலாளித்துவத்தை மேலும் தீவிர கொள்ளையை நோக்கி தூண்டியது. எல்லாம் சரக்கு, எல்லாம் சந்தைமயம், எல்லாம் லாபத்திற்காக என்ற முதலாளித்துவ நோக்கத்தை தீவிரமாக அமலாக்கும் வகையில், மருத்துவம் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் கட்டமைக்கப் பட்டன. தமிழ்நாட்டில் தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் சட்டக் கல்லூரிகளுக்கு எதிரான போராட்டங்களுக்கு இருந்த ஆதரவு நிலைமை மாறி, கடந்த 20 ஆண்டுகளில் தனியார் கல்லூரிகள் அவசியம் என்ற மனநிலையை நடுத்தர மக்களிடம் கட்டமைப்பதில் முதலாளித்துவம் திட்டமிட்டு செயலாற்றியது.

கடந்த 10 ஆண்டுகளாக நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகள் வளர்ச்சி பெற்றதும், பாஜக ஆட்சிக்கு வந்த பின் தேசிய கல்வி கொள்கை உருவாக்கப் பட்டதும், முதலாளித்துவ லாப வெறி, சேவைத் துறையான கல்வியில் புகுந்து தீவிரம் பெறுவதையும் காணமுடிகிறது. பல்கலைக் கழகங்களின் தனித்த அடையாளத்தை ஒழித்து க்யூட் தேர்வு மூலம், மாணவ்ர் சேர்க்கைக்காக, எல்லா பல்கலைக் கழகத்திற்கும் ஒரே தேர்வு என்ற முறையை அமலாக்கி, கோச்சிங் மையங்களை முன்னிலைப் படுத்தி வருகிறது.

ராஜஸ்தான், பீகார் மற்றும் குஜராத் மாநிலங்கள் நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வு முடிவுகளில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இது எப்படி சாத்தியம் ஆகிறது. ராஜஸ்தானில், 35 மருத்துவக் கல்லூரிகளும், 238 பொறியியல் கல்லூரிகளும் உள்ளன. பீகாரில் 155 பொறியியல் கல்லூரிகளும், 13 மருத்துவ கல்லூரிகளும் உள்ளன குஜராத்தில் 32 மருத்துவ கல்லூரிகளும், 269 பொறியியல் கல்லூரிகளும் உள்ளன. ஆனால் தமிழ்நாட்டில் 74 மருத்துவ கல்லூரிகளும், 1277 பொறியியல் கல்லூரிகளும் உள்ளன. குறைவான கல்லூரிகள் ஆனால் அதிகமான கோச்சிங் என்ற பயிற்சி மையங்கள் ராஜஸ்தான், பீகார் போன்ற மாநிலங்களில் உள்ளது.

சென்னை மற்றும் புறநகரில் கார் தொழிற்சாலைகள் குவியலாக உள்ளது. இதை ஆட்டோமொபைல் ஹப் என சொல்கின்றனர். ஆனால் ராஜஸ்தானில் கோட்டா என்ற நகரம் கோச்சிங் என்ற பயிற்சி மையமாக உள்ளது. இதை கோச்சிங் ஹப் என கூறுகின்றனர். இந்த பின்னணியில் தான் 2024 நீட் தேர்வு குளறு படிகளில் பீகார், குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களை சேர்ந்த 20க்கும் அதிகமானோர் கைது செய்யப் பட்டுள்ளனர். கோச்சிங் மற்றும் பயிற்சி நிறுவனங்களுக்கு இடையே போட்டி அதிகரிக்கும் போது, தேர்வு நடத்தும் முகமை (National Testing Agency) அமைப்புகளுக்கு இடையே கள்ளத் தொடர்பு அதிகரிப்பதை காண முடிகிறது.

2024 நீட் முடிவுகளும் அம்பலமான தகிடுதத்தங்களும்:

நீட் என்ற தேர்வு முறை முற்றாக ஒழிக்கப் பட வேண்டும். அதே நேரம் இந்த ஆண்டு வெளியிடப் பட்ட முடிவுகள் நியாயமற்றது என்பதில் இருந்து அந்த முடிவுக்கு வர வேண்டும்.  டெக்கான் ஹெரால்டு என்ற ஆங்கில நாளிதழ் ஜூன் 16 அன்று வெளியிட்ட செய்தியில், 70 ஆயிரம் மாணவர்களை தேர்வு செய்ய வேண்டிய இடத்தில், NTA 13.16 லட்சம் மாணவர்களை தகுதி பெற்றவர்கள் என்பதை அறிவித்து உள்ளது. அடுத்து 1563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் அளிக்கப் பட்டுள்ளது. 67 மாணவர்கள் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். ஏராளமானவர்கள் 719 மற்றும் 718 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இவை அனைத்தும் நடைமுறையில் சாத்தியமற்றது. ஊழல் செய்யாமல் இவ்வளவு மதிப்பெண்கள், இத்தனை பேர் பெற முடியாது.  

ஒரு வினாவுக்கு 4 மதிப்பெண்கள், தவறாக எழுதினால் ஒரு மதிப்பெண் குறைக்கப் படும் இந்த விதிகள், வடிகட்டுவதற்காக உருவாக்கப் பட்டவை. ஆனால் விட்டாலாச்சார்யா கதாநாயகர்கள் போல், நீட் வெற்றியாளர்கள் அறிவிப்பு, நம்ப முடியாத ஒன்று. 24 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியதாக கூறப்படுகிறது. பீகார் மாநிலத்தில் சுமார் 1000 கோடி ஊழல் இது சார்ந்து நடந்திருக்கலாம் என டெக்கான் ஹெரால்டு கூறுகிறது. கேள்வி தாள் வெளியானதைத் தொடர்ந்து, 30 லட்சம் ரூபாய் ஒவ்வொரு மாணவரிடமும் வசூலிக்கப் பட்டுள்ளது, என்றும் செய்திகள் வருகின்றன. எனவே தொடர்ந்து குளறுபடிகளுக்கு வாய்ப்புள்ளதால். மொத்தமாகவே நீட் ரத்து செய்யப்பட வேண்டும்.

பாஜக ஆட்சி தவறு செய்பவர்களுக்கு உடந்தை:

இந்த ஆண்டு துவக்கத்தில், பொதுத் தேர்வுகள் சட்டம் (Prevention of Unfair Means) திருத்தப் பட்டது. இந்த சட்டத்தை முன்மொழியும் போது, அமைச்சர், ஜம்மு காஷ்மீரில், மேற்கு வங்கத்தில் கடந்த கால காங்கிரஸ் ஆட்சி செய்த தவறு என பட்டியலிட்டு பல நூற்றுக்கனக்கான முறைகேடுகள் பொதுத் தேர்வுகள் மற்றும் பணி நியமனத்திற்கான தேர்வுகளில் நடந்ததாக கூறியுள்ளார். சட்டம் இயற்றப் பட்ட சில மாதங்களில், நீட் குளறுபடிகள் அம்பலமாகி உள்ளது. பாஜக தனது ஆதரவை, தவறு செய்பவர்களுக்கு சாதகமாக வெளிப்படுத்தியும் வருகிறது. உயர் கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தேசிய தேர்வு முகமை மீது தவறில்லை என வாதாடுகிறார். 2024 தேர்வு முடிவுகள் மீது கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், விசாரணை செய்ய என்.டி. ஏ வின் தலைவரையே நியமனம் செய்தது, முறைகேடுகளின் உச்சமாகும்.

தற்போது உச்சநீதிமன்றம் கருணை மதிப்பெண் அனைத்தையும் ரத்து செய்துள்ளது. மீண்டும் ஜூலை8 அன்று வழக்கு விசாரணை என அறிவித்துள்ளது. இது நேர்மையான மாணவர் சேர்க்கைக்கு போதாது. மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர். டி.கே.ரங்கராஜன் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு நீட் தேர்வு குளறுபடிகளை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததன் மூலம், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் பெற்றுத் தந்தார். இப்போது மொத்தமாக ரத்து செய்வது தேவையாக உள்ளது.

நீட் ரத்து அவசியம்:

தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள மாணவர், அரசியல் மற்றும் சமூக இயக்கங்கள், நீட் தேர்வு முறை வேண்டாம் என்றும், கல்வி மாநிலப் பட்டியலுக்கு மீண்டும் எடுத்து வரப் பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன. தமிழ்நாட்டில் 20 மாணவ மாணவியர் தற்கொலை செய்து கொண்டது, இயலாமை காரணமானது அல்ல, நேரமையற்ற தேர்வு முறை ஏற்படுத்திய மன அழுத்தம் ஆகும். எனவே நீட் தேர்வு ரத்து செய்யப் பட வேண்டும்.

மாணவர் சேர்க்கை தமிழ்நாட்டில் இருந்த ஒற்றை சாளர முறை, அடிப்படையில் நீடிக்க வேண்டும். சிறந்த மருத்துவர்கள் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருவதே இதற்கு சான்று. தனியார் மற்றும் வணிகமய தேவையை ஏற்றுக் கொள்ள வைக்கும் முறையில், முதலாளித்துவ விதிகள் உருவாக்கப் பட்டது. தற்போது இந்த விதிகள் அம்பலமாகி உள்ள நிலையில், ஏற்கனவே இருந்த நடைமுறையை அனுமதிக்க வேண்டும். மார்க்சிஸ்ட் கட்சி நடத்தும் ஆர்ப்பாட்டம், இந்த நோக்கங்கள் நிறைவேறும் வகையில் வெற்றி பெறட்டும்.

 

தீக்கதிர்

 

பகத்சிங் பெயரை உச்சரிக்காதீர்…

ஜனநாயக முடக்கத்திற்கு துணை போகாதீர்

 

1931ல் தூக்கிலிடப்பட்ட பகத்சிங் இப்போது ஊடகங்களில் தீவிரமாக பேசப்பட்டு வருகிறார். 92 ஆண்டுகள் கழித்து, அதே சித்திரிப்புகளுடன் தான் இப்போதும் விவாதிக்கப் படுகிறார். அவர் ஒரு வன்முறையாளர். எதிர்காலத்தை குறித்து எந்த ஒரு தீர்க்கமான பார்வையும் இல்லாத, தனிநபர் என்ற கண்ணோட்டத்துடன் தான், 2023 டிசம்பர் 13 அன்று நாடாளுமன்ற அசம்பாவிதங்களின் ஊடாக பேசப்படுகிறார். தேசபற்று கொண்ட ஒவ்வொருவரும், இந்திய விடுதலையை அதன் போராட்ட உக்கிரத்திலிருந்து உணரும் ஒவ்வொரு இந்தியரும், பகத்சிங்கிடம் வன்முறையை காண்பதில்லை. வன்முறையற்ற, அனைவருக்குமான சமத்துவ வாழ்க்கையை  கணவு கண்ட பகத்சிங்கும் அவரின் தோழர்களின் கொள்கைகள் தான் காட்சிப் படும்.

2023 நாடாளுமன்றத்தில் வீசப்பட்ட புகை குப்பிகள், பகத்சிங் மற்றும் பட்டுகேஸ்வர் தத் தும் 1929 ஏப்ரல் 8 அன்று வீசிய டமார் என்ற வெடிசத்ததுடன் வீசப்பட்ட குண்டுகளுக்கும் வேறுபாடுகள் அதிகம். பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சியாளர்களால், நாடாளுமன்றத்தில் முன்மொழிய இருந்த தொழிலாளர் மசோதா குறித்து நாட்டு மக்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக வீசப்பட்டது, பகத்சிங் மற்றும் தத் ஆகியோரின் வெடியோசை. அது பிரிட்டிஷ் ஏகாதிப்பத்தியத்தின், காலனியாதிக்க சுரண்டல் கொள்கையை எதிர்த்தது. ஏற்கனவே கொதி நிலையில் இருந்த விடுதலைப் போராட்டத்தை தீவிரப் படுத்தும் வகையில் அன்றைய செயல்களை முன்னெடுத்தனர். தங்களுக்குள் பெரும் சர்ச்சையை நடத்தி பகத்சிங் மற்றும் பட்டுகேஸ்வர் தத் ஆகியோரே பொருத்தம் என்பதை இந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிகன் ஆர்மி, முடிவு செய்தது. ஆக்ராவின் யமுனை நதிக்கரையிலும், டில்லியின் கோட்லா மைதானம் அருகிலும் இதற்காக ஏராளமான விவாதங்களை அந்த புரட்சிகர இளைஞர் குழு நடத்தியது.

வெடியோசையைத் தொடர்ந்த கைதும், சிறைவாசமும், நீதிமன்ற விசாரணைகளும், நாட்டுமக்களிடையே பெரும் கிளர்ச்சியை உருவாக்கியது. சிறைக்குள்ளிருந்த பகத்சிங் மற்றும் அவரின் தோழர்கள், கம்யூனிசத்தை புரிந்து செயல்பட்டனர். பகத்சிங் தன் சகோதரன் குல்தார் சிங்கிற்கு, மார்ச் 3, 1931 அன்று  எழுதிய கடிதம், மற்றும் பிப்ரவரி 2 1931 அன்று இளம் அரசியல் ஊழியர்களுக்கு எழுதிய கடிதம் ஆகியவை, இன்றைய இளைஞர்களும் பின்பற்ற வேண்டிய, தொலைநோக்கு பார்வைகளை உள்ளடக்கியவை. அவை மாபெரும் தத்துவ விசாரணைகளை உள்ளடக்கியவை. இந்திய விடுதலை குறித்த நுட்பமான இலக்கை வெளிப்படுத்துபவை.

”இன்றைய சூழலில், எதிர்கால திட்டம் குறித்து விவாதிப்பது முக்கியம். அதன் அடிப்படையில், அமைப்புரீதியான செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். புரட்சி என்பது, திடீரென, அமைப்பாக திரளாமல், அல்லது தன்னெழுச்சியாக நடக்க கூடியதல்ல. அது மூன்று கட்டமைப்புகளை கொண்டது. ஒன்று இலக்கு, இரண்டு,  இன்றைய சூழலில் எங்கிருந்து துவக்குவது என்ற புரிதல், மூன்று செயல் திட்டம் அதன் உள்ளடக்கம் மற்றும் வழிமுறை, ஆகியவை ஆகும்”, என பகத்சிங் இளம் அரசியல் ஊழியர்களுக்கு எழுதிய கடிதத்தில் மிக தெளிவாக கூறியுள்ளார்.

நிச்சயம் பகத்சிங் வழி நடக்கும் செயல்வீரர்கள் இவற்றை தெரிந்திருக்காமல் களத்தில் இறங்க மாட்டார்கள். எனவே ஊடகங்கள் பகத்சிங் ஃபேன்ஸ் கிளப், பகத்சிங் மாடல் ஆகிய சொல்லாடல்களால் டிசம்பர் 13 நாடாளுமன்ற நிகழ்வுகளை வர்ணிப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும்.

பாஜகவும் குண்டு வெடிப்புகளும்:

இந்திய அரசியலைப் பொருத்தளவில் பாஜக தனது கட்சியினர் மற்றும் ஆர்.எஸ்.எஸ் செயல்பாட்டாளர்கள் மூலம் குண்டுகள் வைத்து பிடிபட்டு இருப்பது உலகறிந்த உண்மை. மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றது இஸ்மாயில் என பரப்பியது, பின்னர் அது கோட்சே என்ற உண்மை வெளிவந்தது. அவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சார்ந்தவர் என்பதும் உலகறிந்த விவரங்கள்.  தற்போது, கோட்சேக்கு சிலை வைப்பதை பெருமையாக பேசிக் கொள்ளும் துணிவு பெற்று இருப்பதில் இருந்து, சமயத்திற்கு ஏற்ப பெயர்களை சூட்டிக் கொள்வதையும், கலவரத்திற்கு ஏற்ப நிகழ்ச்சிகளை திட்டமிடுவதும் செயல்படுத்துவதும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரின் ரத்தத்துடன் கலந்து விட்ட ஒன்று, என்பதை அறியலாம்.  2006ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த, மாலே கான் குண்டுவெடிப்பு நிகழ்வு குறித்து, என்.ஐ.ஏ 2013ல் பின்வரும் விவரங்களை தெரிவித்தது. அபிநவ் பாரத் என்ற வலதுசாரி அமைப்பை சார்ந்த லோகேஷ் சர்மா, தன்சிங், மனோகர் சிங், ராஜேந்திர சவுத்ரி ஆகியோர் கைது செய்யப் பட்டதாகவும் தெரிவித்தது.

அதே மாலேகானில் 2008ல் நிகழ்ந்த ஒரு சம்பவத்தில் 10க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டவர், சாத்வி. பிரக்யா சிங் தாகூர். இவர் மோட்டார் சைக்கிள் குண்டு வெடித்த இடத்தில் இருந்தது. இவர் 2017ல் உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தால் பிணை வழங்கப் பட்டவர். பின் 2019ல் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். நாடாளுமன்றத்தில் காந்தியை சுட்டுக் கொண்ற கோட்சே மிகச் சிறந்த தேச பக்தர் எனக் கூறினார். கடுமையான விமர்சனங்களை எதிர் கொண்டார். இப்போதும் மத்திய பிரதேசத்தில், வன்முறையை தூண்டும் வகையில் பல சொற்பொழிவுகளை நிகழ்த்தி வருகிறார்.

2007ல் ஆஜ்மீர் தர்கா, மெக்கா மஸ்ஜித் மற்றும் சம்சவுதா எக்ஸ்பிரஸ் ரயில் ஆகிய வெடிவிபத்துகளுடன் தொடர்புடைய வழக்குகள், ஆசாராம் பாபு என்பவர் மீது நடந்து வருகிறது.  சிறையில் இருந்த படி கேரவன் இதழில் 2014ம் ஆண்டு இவர் அளித்த பேட்டி மூலம்   மேற்படி நிகழ்வுகள் உறுதி செய்யப்பட்டதும் உலகறியும்.  வனவாசி கல்யாண் அமைப்பிற்கு முக்கிய பொறுப்புகளில் இருந்து பணியாற்றியவர். குஜராத் டங்ஸ் மாவட்டம், மத்திய பிரதேசத்தின் ஜாபுவா மாவட்த்தில் நடந்த பல்வேறு நிகழ்வுகள் அனைத்திலும் இவருக்கு பங்குண்டு என கூறப்படுகிறது. ஆசாராம்பாபுவே தனது பேட்டியில் கேரவன் இதழில் இது போன்றவற்றை கூறியிருக்கிறார்.

சத்யபால் மாலிக், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர், 2019ம் ஆண்டு பிப்ரவரியில் புல்வாமா ராணுவ வீரர்கள் மீதான தாக்குதல் குறித்து அண்மையில் கூறிய விவரங்களும், பாஜக ஆட்சியின் செயல்பாடுகள் மீதான சந்தேகத்தை வலுப்படுத்துவதாக உள்ளது. அந்த சாலையில் செல்ல வேண்டாம் என்பது தெளிவாக எடுத்துரைக்கப் பட்ட பின்னரும், அந்த பாதையில் ராணுவ வாகணம் செல்வதற்கான உத்தரவு இடப்பட்ட விவரம் சத்யபால் மாலிக் தெரிவித்தது. இதன் காரணமாக இவருடைய வீடு சி.பி.ஐ அதிகாரிகளால் சோதனையிட பட்டதும் கவனிக்கத் தக்கது. இது போல் மேலும் விவரிக்க நிகழ்வுகள் உள்ளது.

கேள்விக்குளாகும் பாஜக வின் நாடாளுமன்ற ஜனநாயகம்:

ஒரு புறம் பகத்சிங் குறித்த கதையாடல்களும், மற்றொரு புறம் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப் பட்டு இருப்பதும், தான் பாஜக அரசு மீது கூடுதல் விமர்சனத்தை தூண்டுகிறது. அதானி மீதான குற்றச்சாட்டை, ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் முன்வைத்த போது நாடாளுமன்ற செயல்பாடுகளை முடக்கியது பாஜக. இப்போது சில இளைஞர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் புகை குப்பிகளை வீசி இருப்பதும், அவர்கள் நாடாளுமன்றத்திற்குள், பாஜக எம்.பி, பிரதாப் சிம்ஹா என்பவர் அளித்த பரிந்துரை கடிதத்தை பயன்படுத்தி இருப்பதும் கேள்விகள். ஆனால் இப்போதும் விவாதிக்க அனுமதி இல்லை.

குறிப்பாக கேள்விகள் கேட்டு விவாதிக்க வேண்டும் என வலியுறுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 14 பேர் இடைநீக்கம் செய்யப் பட்டுள்ளனர். உள்துறை அமைச்சர் அமித்ஷா, இது குறித்து விவாதிக்க மறுக்கிறார். பிரகலாத் ஜோஷி நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் இதை மறுக்கிறார். விவாதிக்க வேண்டாம் என்கிறார். குறிப்பாக நாடாளுமன்ற வளாகத்திற்குள் வழக்கம் போல் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல், பாஜக உறுப்பினர், பிரதாப் சிம்ஹா வளம் வருகிறார். பாஜக பிறர் மீது குத்தும் முத்திரையை வலுவாகவும், தன் மீது வரும் குற்றச்சாட்டுகளை எந்த ஒரு இடத்திலும் விவாதிக்காமல், திசை திருப்பும் அரசியல் மூலமும் சாதித்து கொள்ள நினைக்கிறது. மொத்தத்தில் அதானி விவாதிக்கப் படவே இல்லை. அது போல் இந்த நிகழ்வும் அமைந்து விடக் கூடாது.

ஊடகங்கள் நூற்றுக்கணக்கிலான காவலர் பணி இடங்கள் காலியாக இருப்பதை தீவிரமாக விவாதிக்கின்றன. அந்த இளைஞர்கள் காலணியில் மறைத்து புகை குப்பிகளை எடுத்து சென்றதாக பேசுகின்றன. ஏன் பிரதாப் சிம்ஹா பரிந்துரைத்தார் என்பதை பேச மறுக்கின்றன. இதில் தான் பாஜக வின் ஜனநாயகம் உள்ளடங்கி இருக்கிறது.

உலகம் முழுவதும் வலதுசாரி சக்திகள் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தி வருவதைக் காண முடிகிறது. ஜனநாயகத்தை அழிக்க நினைக்கும் வலதுசாரி குணத்தின் வெளிப்பாடாக இவை உள்ளது. பல நாள்கள் ஆன பின்னரும் மோடி, அமித்ஷா உள்ளிட்ட முக்கிய நபர்கள் யாரும் மேற்படி தாக்குதல் குறித்து வாய் திறக்க வில்லை. ஏன் என்ற கேள்விக்கு விசாரணையை திசை திருப்பும் வகையில் அமைந்து விடக்கூடாது என்று வியாக்கியானங்கள் செய்து வருகிறனர்.  அரசியலாக்க வேண்டாம் என பிரகலாத் ஜோஷி கூறுவதே ஒரு அரசியல் நோக்கம் கொண்டதாக உள்ளது. பாஜகவின் ஜனநாயக விரோத செயல்களுக்கு முடிவு கட்டுவதே தீர்வாக இருக்க முடியும்.

தீக்கதிர்

 

அம்பானி வீட்டு திருமணமும் – நம்மிடம் இருந்து பறிக்கப் பட்டவையும்.. 

சின்ன செய்திகளுக்கும் “இப்பவே கண்ணக் கட்டுதே” என்ற கமெண்ட் ஐ கேட்க முடியும். முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்ட் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டம் (Pre Wedding Celebration) மார்ச் முதல் வாரத்தில், குஜராத் மாநிலம், ஜாம் நகரில் நடந்த விவரங்களை கேட்டால், கண் மட்டும் கட்டுவதில்லை, உடலே நடுங்குகிறது. ஒன்னுமில்லை அந்த கொண்டாட்டத்தின் செலவு சுமார் ரூ 1250 கோடி என சொல்லபடுகிறது. தி மிண்ட் இணைய இதழ் ரூ 200 கோடி ரூபாய் உணவு செலவிற்காக என மதிப்பீடு செய்கிறது.

முக்கியமான செய்தி என்னவென்றால் எதிர் வரும் 2024 ஜூலை 12ல் தான் திருமணம் நடக்க உள்ளது. அதற்கு எவ்வளவு செலவாகும் என்றால் நிச்சயம் மேற்குறிப்பிட்ட தொகையை விடவும் கூடுதலாக இருக்கும். எங்கு திருமணம் என்ற கேள்விக்கு, மும்பை அல்லது ஏதாவது ஒரு தீவில் இருக்கலாம் என சொல்லப்படுகிறது. பல் இருப்பவர் பட்டாணி தின்கிறார் என கடந்து செல்லும் செய்தி அல்ல. நாம் பேரரசர்கள் குறித்து அறிந்து இருக்கிறோம். அதை விடவும் கூடுதல் செல்வாக்கை, மக்கள் ஆட்சி காலத்தில், முதலாளித்துவ பேரரசர்களால் நிகழ்த்த முடிகிறது, என்பதே இப்போது காணும் உண்மையாக உள்ளது. இதையே மார்க்சிஸ்ட் கட்சி, நெறியற்ற முதலாளித்துவம் (குரோனி கேப்பிட்டலிசம்) என்கிறது

சர்வ தேச விமான நிலையம்:

இந்த கொண்டாட்டத்திற்காக, ஜாம்நகர் விமான நிலையத்தை, பாஜக ஆட்சியாளர்கள், சர்வதேச விமான நிலையம் என 10 நாள்களுக்கு அறிவிப்பு செய்தது. அம்பானியின் சொத்து மதிப்பு 23.1 பில்லியன் அமெரிக்க டாலர் (1,91,730 ஆயிரம் கோடி ரூபாய்) இந்த தொகை, 19 நாடுகளின் ஜி.டி.பி (உள்நாட்டு உற்பத்தி) ஐ விடவும் அதிகம் என ஹிந்துஸ்தான் டைம்ஸ் கூறுகிறது.

இவ்வளவு சொத்து மதிப்பு கொண்டுள்ள, ஒரு நபரின் தேவைக்காக ஜாம்நகர் விமான நிலையத்தை 10 தினங்கள் சர்வ தேச விமான நிலையமாக விதிகளை மீறி அறிவித்தது சரிதான் என சிலர் கூறுவதையும் கேட்க முடிகிறது. கூடவே மேற்படி கொண்டாட்டத்திற்கு வருகை தந்தவர்கள் பட்டியலில், பில்கேட்ஸ், மார்க் ஜூகர்பெர்க், இவாங்கா டிரம்ப் (டிரம்ப்பின் மகள்) இடம் பெற்றுள்ளனர். இந்த பட்டியல் இந்திய ஆட்சியாளர்களை, தானாகவே முன் வந்து வசதி வாய்ப்புகளை செய்து கொடுக்க, அழுத்தம் தரும் என்பதை புரிந்து கொள்ள முடியும். பல நாடுகளில் உள்ள பிரமுகர்கள் மேற்படி கொண்டாட்டத்திற்கு வருகை தந்தாலும், நம் ஊர் திரைகலைஞர் ரஜினி காந்த் தனி விமானம் மூலம் அழைத்து செல்லப் பட்டுள்ளார்.

இங்கு பொதுமக்களுக்கு முன் வரும் கேள்வி, இப்படி தனி நபர்களின் தேவைக்காக விதிகளை மீற முடியுமானால், ஏன் ஒரு நாடாளுமன்ற தொகுதி மற்றும் தென் தமிழ் நாட்டு மக்கள் பயன்படுத்தும் மதுரை விமான நிலையத்தை சர்தேச தரம் கொண்டதாக மாற்ற கூடாது என்பதாகும். மதுரை விமான நிலையத்திற்கு விதி மீறல்களை கேட்கவில்லை. அரசு விதிகள் குறிப்பிடும் அளவை குறைப்பதன் மூலம், வளர்ச்சிக்கான வாய்ப்பை முன்னெடுக்க முடியும் என்பதாகும்.  

பில்லியன் டாலர் எப்படி வளர்ந்தது எப்படி?

ஜாம்நகர் சர்வ தேச விமான நிலையத்திற்காக, முகேஷ் அம்பானி சொத்துக்களையும், உலக பிரமுகர்களையும் சுட்டி காட்டும் நபர்கள் அந்த சொத்துக்கள் எங்கிருந்து வந்தது? என கேள்வி எழுப்புவதில்லை. 35 ஆண்டுகளில் இவ்வளவு பெரிய தொழில் அதிபராக எவ்வாறு வர முடிந்தது? ஒன்று அரசு அளிக்கும் சலுகைகள், இரண்டு பொதுதுறை வங்கிகள் அளிக்கும் கடன் பின் அதை தொடர்ந்து வழங்கும் தள்ளுபடி, மூன்று பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் உழைப்பு.

உதாரணத்திற்கு, முகேஷ் அம்பானி குடும்பத்திற்கு சொந்தமாக ஜாம்நகரில் 280 ஏக்கரில் ஒரு மிருக காட்சி சாலை உள்ளது. ரிலையன்ஸ் என அதற்கு பெயரும் சூட்டப் பட்டுள்ளது. வண்டலூர் மிருக காட்சி சாலையை விட குறைவு என ஒப்பிடுவதை விட, சிங்க பொம்மை வாங்கி தர சிரமப் படும் மனிதர்களுக்கு மத்தியில், அம்பானி தன் குழந்தைகளுக்கு அசல் மிருகங்களை காட்சி படுத்தி உள்ளார் என ஒப்பிடுவதே, இன்றைய இந்தியாவின் ஏற்ற இறக்கத்தையும், சமத்துவமற்ற தன்மைகளையும், சரியாக புரிந்து கொள்ள உதவும்.

அடுத்து ஜியோ நெட்வொர்க், இந்த நிறுவனம் 2015ல் துவங்கப் பட்டது. அதற்கு முன் செல்போன் கருவி விற்பனையை மட்டும் நடத்தி வந்த நிறுவனம், செல்போன் பயனை அனுபவிக்க தேவையான நெட் வொர்க் பொறுப்பு, ரிலையன்ஸ் குழுமத்திற்கு கிடைத்தது. இப்போது இந்த நெட்வொர்க் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, ஒட்டு மொத்த செல்போன் வாடிக்கையாளர்களில் 46.2 கோடிப் பேர் ஆவர்.  இது சுமார் 50 சதம் ஆகும். துவங்கும் போதே 4ஜி சேவை, என்ற அறிமுகத்தை, நமது பிரதமர், பாஜக கட்சியின் தலைவர் மோடி வழங்கினார். அதுமட்டுமல்ல, மோடி இந்த நிறுவனத்தின் விளம்பரங்களிலும் இடம்பெற்றார். ஜியோ குழுமம், பிரதமரை தனக்கு விளம்பர தூதுவராக பயன்படுத்தி கொண்டது.

இதன் மூலம் அப்பட்டமாக அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல் க்கு அந்த சேவை வழங்க இன்று வரை மறுத்து வருகிறது. ஆனால் ஜியோ உள்ளிட்ட தனியார் நிறுவனங்களுக்கு 5ஜி சேவை வரையிலும் அனுமதி வழங்கி, செல்வ வளத்தை அதிகரிக்க பாஜக அரசு உதவியுள்ளது. அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களை, மோடி தனது செயல்கள் மூலம் ஜியோ வாடிக்கையாளர்களாக மடைமாற்றம் செய்துள்ளார்.

மிண்ட் இணைய இதழின் (5.4.2023) செய்திபடி, 55 வங்கிகள் மூலம் முதலில் 3 பில்லியன் டாலர் கடனும், அதைத் தொடர்ந்து 18 வங்கிகள் மூலம் 2 பில்லியன் டாலர் கடனும், என மொத்தம் 5பில்லியன் டாலர் கடன், ரிலையன்ஸ் குழும நிறுவனங்கள் பெற்றுள்ளது. தி எக்கனாமிக் டைம்ஸ் இதழ் 1,61,035 கோடி ரூபாய் என குறிப்பிடுகிறது. அதேபோல் ஒவ்வொரு வருடமும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பாஜக அரசு கடன் தள்ளுபடி அறிவிப்பை வழங்கி வருகிறது. அறிவிக்கப் படும் தொகையின் அளவும் ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வருவதை காண முடிகிறது. தி இந்து நாளிதழ் கடந்த 10 ஆண்டுகளில் ரூ 10 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்துள்ளதாக செய்தி வெளியிட்டு உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில், அம்பானியின் பங்களிப்பு,  சுமார் 8 சதம் என மதிபிடப்படுகிறது. அநேகமாக இது கடன் பெறுவதிலும், கடன் தள்ளுபடி அனுபவிப்பதிலும் கூட பிரதிபலிக்கும் என்பதே உண்மை. அந்த வகையில் அரசின் பெரும்பான்மையான மக்களின் சேமிப்பு பணத்தை தொழில் துவங்குவது என்ற பெயரில் பயன்படுத்தும் நிலை உள்ளதை தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

தேர்தல் பத்திரங்களுடன் என்ன தொடர்பு?

தேர்தல் பத்திரங்கள் அளிக்கும் நபர்களின் பெயர்களும் விவரங்களும், ரகசியமாக வைக்கப் படும் என்ற அரசு முடிவு, மேலே கண்ட தனி நபர்களான தொழில் அதிபர்களுக்கான சலுகையுடன் இணைத்து பார்க்க வேண்டிய தேவை இருப்பதையும் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது. பாரத ஸ்டேட் வங்கி, தேர்தல் பத்திரம் வழங்கிய நபர்கள் அல்லது நிறுவனங்கள் குறித்த விவரங்களை அளிக்க தாமதம் செய்வது, இந்த தேர்தல் நேரத்தில் பாஜகவின் மீது வளரும் அதிருப்தியை அதிகரிக்காமல் இருக்கும் உள் நோக்கம் கொண்டது என்ற மார்க்சிஸ்ட் கட்சியின் கருத்து சரியானது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

குறிப்பாக தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்கள் வெளிவரும் போது, கடன் சலுகை அல்லது தள்ளுபடி சலுகை பெற்ற நிறுவனங்கள் அம்பலமாகும். 125 நாடுகள் கொண்ட வறுமை சார் பட்டியலில் இந்தியா 111 வது இடத்தில் இருக்கிறது.  ஆனால் அம்பானி குடும்பத்தினர், திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தை 1250 கோடி ரூபாய் செலவில் நடத்துவது, கேள்விக்கு உள்ளாக்கப் பட வேண்டும்.

ஒருபுறம் அரசின் சலுகைகள் மறுபுறம் மக்கள் விரும்பும் ஆளுமைகளை அழைப்பதன் மூலம் பொதுமக்களின் விமர்சனங்களை தவிர்க்க முயற்சிப்பதையும் காண முடியும். நாம் வசதியானவர்களின் திருமண விழாக்களை கேள்வி எழுப்பவில்லை. அதில் வெளிப்படும் ஆடம்பரம் மக்களுக்கு கிடைக்க வேண்டிய ஏதோ ஒரு சலுகையில் இருந்து பறிக்க பட்டுள்ளதையும் பார்க்க முடியும்.

 

ஆனால் கார்ப்பரேட் முதலாளிகள் எளிய மக்களுக்கு வழங்கும் சில அடிப்படை தேவைகளை, கேள்விக்கு உள்ளாக்குகின்றனர். குறிப்பாக பாஜக கட்சியினர், இலவச திட்டங்கள் நாட்டின் பொருளாதாரத்தை சீரழிக்கிறது என்ற பெயரில் வழக்குகளைத் தொடர்ந்து, மக்களையும், மக்கள் நலத் திட்டங்களையும் அவமானப் படுத்துகிறது. உதாரணத்திற்கு மகளிர் உரிமைத் திட்டத்திற்கு, ஒரு கோடியே 10 லட்சம் பேர் பயனடைய, ஆண்டுக்கு 13 ஆயிரம் கோடி செலவாகும் என்றால், 10 அல்லது 20 கார்ப்பரேட் பெரு நிறுவனங்களுக்கு 10 லட்சக்கணக்கான கோடி ரூபாய் கடன் தள்ளுபடி ஆவதை, விமர்சிப்பதில்லை. பாஜகவின் இந்த அரசியலை அம்பலப் படுத்துவது மிக அவசியமாகும்.

இந்து தமிழ்திசை

 முதலீடுகள் மட்டுமல்ல ..... உரிமைகளும் முக்கியம்

 

பிரமிக்கதக்க விடுதி, 17800 நபர்களுக்கான, படுக்கைகள், உணவுக்கூடம், விளையாட்டு வசதிகள் இன்னும் பல வசதிகள் என தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. உலகின் மிகப் பெரிய கைபேசி உற்பத்தி நிறுவனமான ஃபாக்ஸ்கான் கட்டிய விடுதிகளும், அதன் திறப்புவிழாவும் தான் இப்படி பேச வைக்கிறது. மேற்படி விடுதியில் பெண்கள் மட்டுமே தங்க முடியும். அதுவும், திருமணமாகாத இளம் பெண்களுக்கான வாய்ப்பாக இந்த விடுதிகளின் பயன்பாடு பேசப்படுகிறது.

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில், இந்த பிரமாண்டம் அமைந்திருக்கிறது. தொழில் முதலீடுகளை, கண்மூடித் தனமாக எதிர்க்க முடியாது. வேலைவாய்ப்பிற்காகத் தான் வெளிநாட்டு முதலீடுகளை வரவேற்கின்றோம், சலுகைகள் வழங்குகிறோம் என்பது, அரசுகள் வெளியிடும் முக்கியமான செய்தி. இத்தகைய நிறுவனங்கள், அரசுகளிடம் இருந்து பெறும் சலுகைகளுடன் ஒப்பீடு செய்தால், வேலைவாய்ப்பு உயர்ந்ததாகவும், மனித உரிமைகளை மதிக்க கூடியதாகவும் இருக்க வேண்டும்.

திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் வேலை செய்யலாமா?

கடந்த ஜூன் 25 தேதியன்று, சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்ட செய்தியால், சில விமர்சனங்களை பாக்ஸ்கான் சந்தித்தது. ஓராண்டு காலத்தில் அந்த நிறுவனத்தின் செய்தியாளர்கள் 20க்கும் மேற்பட்ட முறை ஸ்ரீபெரும்புதூர் பகுதிக்கு, சென்று பார்வையிட்டும், விவரங்கள் சேகரித்தும், செய்தி கட்டுரை வெளியிட்டதாக கூறுகிறது. திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் அதிக விடுப்பு எடுப்பர். குழந்தைபேறு ஒரு பிரச்சனையாக இருக்கும், போன்ற காரணங்களுடன், இந்து திருமண முறைப் படி அணியும், தாலி அல்லது ஆபரணம், உற்பத்தி தளத்தில் ஆபத்து விளைவிப்பதாக இருக்கும், என்ற காரணமும் முன் வைக்கப் படுகிறது.

தைவான் நாட்டு தலைமையகத்தில் பேசும்போது திருமணம் செய்வோர் வேலை செய்ய தடையல்ல எனக் கூறுகின்றனர். இந்தியாவிலும், 1961ல் நிறைவேற்றப்பட்ட சட்டம், 80 நாள்கள் பணி செய்த பெண் ஊழியரும், மகப்பேறு சட்ட பலன்களை அனுபவிக்கமுடியும் எனக் கூறுகிறது. 2017ல் சட்ட திருத்தம் மூலம் 26 வாரங்கள் மகப்பேறு விடுப்பு பலன்களை அனுபவிக்க வழிவகை செய்கிறது. தனியார் நிறுவனங்களுக்கும் இது பொருந்தும் என்றும், 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரியும் நிறுவனத்திற்கும் இது பொருந்தும் என்றும் கூறுகிறது.

இணைய தளத்தில், இந்தியாவில், பாக்ஸ்கான் 48000 பேருக்கு வேலை அளித்து வருவதாக கூறுகிறது. ஆனால் மகப்பேறு விடுப்பு வழங்குவதற்கு பதிலாக, திருமணம் செய்த பெண்களை வேலைக்கு வைத்துக் கொள்ள மாட்டோம் என மறைமுகமாக அமலாக்கி வருகிறது. இதுகுறித்த கேள்விக்கு, பாக்ஸ்கான் நிறுவனத்தின் இந்திய தலைமை அதிகாரி லியு 25 சதம் பெண்கள், திருமணம் செய்த பின் தங்கள் நிறுவனத்தில் வேலை செய்வதாக கூறுகிறார்.

தமிழ்நாட்டில், பெரியார், 1930களிலேயே, பெண் குழந்தை பெறும் இயந்திரம் அல்ல என்றும், பெண்கள் கருத்தடை செய்து கொள்வது குறித்தும் பேசியுள்ளார். பெண்களின் விடுதலைக்கும் சுயேட்சை செயல்பாடுகளை முன்னெடுக்கவும், கருத்தடை தேவை என்பதை வலியுறுத்துகிறார். பெரியார் குறிப்பிட்ட பெண் விடுதலை என்பது குழந்தை பெற்றுக் கொள்ளும் உரிமையை பேசுகிறது. சுமார் 95 ஆண்டுகளுக்கு முன் இப்படியான பெண் உரிமையை, தமிழ்நாட்டு மக்கள் விவாதித்து உள்ளனர். இன்று அதை விட பல மடங்கு முன்னேறிய சிந்தனையும், செயல்களும் தேவைப் படுகிறது.  நிறுவனங்கள் பல ஆண் தொழிலாளர்களுக்கு, தந்தைமை பேறு விடுப்பு என அனுமதிக்கும் முன்னேற்றத்தை, நமது நாட்டிலும் பெற்றுள்ளோம். எனவே திருமணம் வேலை செய்ய தடை அல்ல என்பதை நமது அரசுகள் வலியுறுத்த வேண்டும்.

மனித உரிமைகள் குறித்த ஐ.எல்.ஓ வழிகாட்டுதல்கள்:

பாக்ஸ்கான் தன்னிடம் வேலை செய்யும் ஊழியர்கள், தனது நிறுவனம் உருவாக்கியுள்ள விடுதியில் தங்க வலியுறுத்துகிறது. அக்கறை, நலன் போன்ற சொல்லாடல்கள் சார்ந்து, இந்த நடைமுறை பின்பற்றப் படுகிறதா? அல்லது உற்பத்தி சார்ந்து பின்பற்றப் படுகிறதா?. என்பதை விவாதிக்க வேண்டியுள்ளது. பெண்களுக்கான தனிப்பட்ட விருப்பங்களும், உரிமைகளும் இதன் மூலம் பாதிப்புகளை சந்திக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

24 நாடுகளில், 137 வளாகம் மூலம் பாக்ஸ்கான் உலக அளவில் செயல்பட்டு வருவதாக கூறுகிறது. பல லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். ஆனால் சீனா உள்ளிட்ட நாடுகளில் உள்ள நிறுவனமும், மேலே குறிப்பிட்ட விடுதியில் தங்க வைக்கும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறது. நமது தமிழ்நாட்டில் தற்போது திறக்கப் பட்டுள்ளது. இது மிகுந்த கவனத்துடன் கையாளப் பட வேண்டும் என்பதை தொழிற்சங்கம் தொடர்ந்து விவாதிக்கிறது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஐக்கிய நாடுகள் சபையினால் வழி நடத்தப் படுகிறது. அதேபோல் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சிக்கான ஒத்துழைப்புக்கான நாடுகளின் அமைப்பு (Organisation for Economically Co Operation and Development) என்ற அமைப்பும் உள்ளது. இரண்டு அமைப்புகளும் மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் உரிமைகளை இணைத்து வழிகாட்டுதல்களை அளித்துள்ளன. 38 நாடுகளைக் கொண்ட ஓ.இ.சி.டி.  இதில் உறுப்பினர்களாக உள்ளன. இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகள் மேற்குறிப்பிட்ட நாடுகளில் உறுப்பு நாடுகள் அல்ல.

ஒ.இ.சி.டி நாடுகளின் தொழில் முதலீடுகள், இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் நாடுகளில் அதிகம் உள்ளது. மனிதவளம், உள்நாட்டு சந்தை ஆகியவையும் மேற்படி முதலீடுகளுக்கு காரணமாக சொல்லப் படுகிறது. இதன் மூலம் 38 நாடுகளும் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் வலியுறுத்தப் படுகின்றன. குறிப்பாக, மனித உரிமைகள் மீறப்பட கூடாது. முதலீடு செய்யப் பட்ட நாடுகளின் சட்டங்களை மதித்து நடக்க வேண்டும், போன்றவை மிக முக்கியமானது ஆகும். இந்த அடிப்படையில் அரசுகள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்கின்றனவா? சர்வதேச தொழிலாளர் அமைப்பு வலியுறுத்தும் பல்வேறு வகையிலான தொழிலாளர் உரிமைகள் பின்பற்றப் படுகின்றனவா? என்பதை கண்காணிப்பதும், அமலாக்க வழிவகை செய்வதும், முதலீடுகளை கவரும், அரசுகள் கவனம் கொள்ள வேண்டியதாக உள்ளது.

முதலீடுகளுக்கான பயணம் நம் முதுகெழும்பையும் பாதுகாக்கட்டும்:

தமிழ்நாட்டின் முதல்வர் தற்போது முதலீடுகளை ஈர்ப்பதற்கான, வெளிநாட்டு பயணம் மேற்கொள்கிறார். கடந்த காலத்தில் அதிமுக அரசும் இதை மேற்கொண்டது. பிரதமர் மோடி தனது ஒவ்வொரு வெளிநாட்டு பயணத்திலும், வெளிநாட்டு முதலீடுகளை கவரும் வகையில் பேசி வருகிறார். இதன் மூலம் இந்தியாவில் முதலீடுகள் அதிகரிக்கின்றன, என்பதை மறுக்கவில்லை. வேலைவாய்ப்பும் உயர்ந்துள்ளது. மனித உரிமைகள் மீறப்படுவது அதிகரிக்கிறது, என்பதை ஏராளமான ஆய்வுகள் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றன.

தொழிலாளர் மற்றும் வாழுமிடங்களை பாதுகாக்கும், சுற்றுச் சூழல் சார்ந்த சட்ட வரையறைகள் என்ன? அதில் எவ்வாறு மீறுதல்கள் நடந்துள்ளன? என்னென்ன நிறுவனங்கள் மீறியுள்ளன? என்பது போன்ற கேள்விகள் எழுப்ப பட்டு, வழக்குகளும் நடந்துள்ளன. தமிழ்நாட்டிலும் உணவு விநியோகிக்கும் தொழிலாளர்கள் சார்ந்த பிரச்சனைகள் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளில் இடம் பெற்று உள்ளன.

உரிமைகள் வலுவாக முன் வைக்கப்படும் போது, நிறுவன அதிகாரிகள், வேறு மாநிலங்களுக்கு சென்று விடுவோம், என அச்சுறுத்துவது நடைபெறுகிறது. தொடர் முன்னேற்றம், திறன் படைத்த தொழிலாளர்கள் மூலமே சாத்தியம். நீடித்த வளர்ச்சி என்பது உள்நாட்டு சந்தை மற்றும் மக்களின் வாங்கும் சக்தி உயர்வு ஆகியவற்றுடன் இணைந்துள்ளது. தமிழ்நாடு இரண்டு வகையிலும் முன்னேறிய மாநிலமாக உள்ளது. எனவே நிறுவனங்களின் இடம்பெயர்ந்து விடுவோம் என்ற அச்சுறுத்தலுக்கு, அரசு ஆளாக கூடாது.

இது போன்ற பேரங்கள் மனித உரிமை மீறலுக்கு உதவுவதாக மாறிவிடும் அபாயம் இருப்பதை உணரவேண்டும். முதலீடுகளும் தேவை, மனித உரிமைகள், தனி மனித சுதந்திரம் போன்ற அடிப்படையான ஜனநாயக மாண்புகளும் மதிக்கப்பட வேண்டும். மற்றொரு புறம், இந்தியாவில், பிளாச்சிமடா உள்ளிட்ட பகுதிகளில் குளிர்பான நிறுவனங்கள் அமைந்த போது, குடிநீர், நிலத்தடி நீர் வளம் ஆகியவை பாதிக்கப்பட கூடாது என்ற உத்தரவுகளை கணக்கில் கொள்ள வேண்டும். இந்திய அரசியல் சாசன சட்டம், பிரிவு 21 முன் வைக்கும் வாழும் உரிமை குறித்த கருத்து மற்றும் பிரிவு 51 (A) முன்வைக்கும், சுற்றுச் சூழலை பாதுகாப்பது இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரின் அடிப்படை கடமை என்கிறது. அரசுக்கு முதல் பொறுப்பு இருப்பதை மறந்து விட முடியாது.

எஸ். கண்ணன்

துணைப் பொதுச் செயலாளர்

சி.ஐ.டி.யு தமிழ்நாடு.

9445367415

Ilaignar Muzhakkam

 

நாடாளுமன்ற தாக்குதலும்… வேலையின்மை அரசியலும்…

பாலுக்கு ஏங்கும் குழந்தை

கல்விக்கு ஏங்கும் மாணவர்

வேலை தேடும் இளைஞர்

பசியால் வாடும் மனிதர்

 

இவர்கள் எல்லாம் இல்லாத இந்தியாவே சுதந்திர இந்தியா என பகத்சிங்கும் அவரின் தோழர்களும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்து, இந்திய விடுதலை குறித்த எதிர்பார்ப்பை பதிவு செய்தனர். அப்படியான சமூக அமைப்பு உருவாவதிலேயே அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என அழுத்தமாக குறிப்பிட்டனர். இந்த கருத்தியல் பிரச்சாரம் உலகம் முழுவதும் இளைஞர்களால் முன்னெடுக்கப் பட்டது. அதற்கான விசால பார்வையை, சோவியத் யூனியன் பின்பற்றிய சோசலிச கொள்கை உலக இளைஞர்களுக்கு வழங்கியது. முதலாளித்துவ நாடுகள், தங்கள் நாடுகளில் இளைஞர்கள் புரட்சிகர பணிகளில் இறங்கி விடக் கூடாது என அஞ்சினர். அதற்காக ஜான் மோனார்ட் கெயின்ஸ் நலத் திட்ட பொருளாதார கொள்கையை முதலாளித்துவ அரசுகள் பின்பற்றுவதன் மூலமே, குறைந்த பட்சம் தங்கள் நாட்டின் இளைஞர்களை புரட்சிகர அரசியலுக்கு செல்லாமல் கட்டுபடுத்த முடியும் என வழிகாட்டினார்.

பகத்சிங் மற்றும் தோழர்களின் எதிர்பார்ப்பை இந்திய ஆட்சியாளர்கள் எப்போதோ கைவிட்டு விட்டனர். ஜான் மோனார்ட் கெயின்ஸ் ன் வழிகாட்டுதலை ஏகாதிபத்திய உலகமயமாக்கல் கொள்கை, மாற்று அரசியலின் அழுத்தம் இல்லை என்பதால் கைவிட்டது. விளைவு இன்றைய வேலையின்மை, கல்வி வணிகம், அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு, பசி, பட்டினி சாவுகள் ஆகிய பிரச்சனைகள் மேலதிகமாக முன்னுக்கு வந்து மக்களை வாட்டி எடுக்கிறது.

கார்ப்பரேட் அரசியல் அமலாக்கம்:

நாடாளுமன்றங்கள் மக்களுக்காக செயல்படுவதை விட, கார்ப்பரேட் முதலாளிகளுக்காக செயல்படுவது மிக மிக அதிகம். இதை ஏழை மக்கள் மீதான புயலின், ரெட் அலெர்ட் என குறிப்பிடலாம். இதை அம்பலப்படுத்துவதில் இடதுசாரிகள் வெளிப்படுத்தும் தீவிரத்தை, இதர ஜனநாயக சக்திகள் வெளிப்படுத்துவதில்லை. நெல்லுக்கு பாயும் நீர் ஆங்கே புல்லுக்கும் புசிந்தோடுமாம், என்பதைப் போல், முதலாளிகளுக்கான சலுகைகளில் வழிந்தோடும் சிறு பகுதி தான் வேலைவாய்ப்பாக காட்சி படுத்தப் படுகிறது. வேளாண் சட்ட திருத்தங்களை எதிர்த்த ஓராண்டு முற்றுகைப் போர், தொழிற்சங்கங்கள் தொடர்ந்து நடத்தும், வேலைநிறுத்தங்கள் ஆகியவை, பாதிக்கப் பட்ட மக்களின் கலகக் குரல். இது சமூக அமைப்புகளின் குரலாக பிரதிபலிக்கவில்லை.

ஓராண்டு நீடித்த போராட்டங்களை அரசியல் இயக்கங்களில் இடதுசாரி கட்சிகள் கடந்து களத்தில் ஆதாரிக்க ஆளில்லை. ஆதரவு இயக்கங்களும் இல்லை. ஆனாலும் உறுதியான போராட்டம் அளித்த அழுத்தம் பாஜக ஆட்சியை சற்று பின்வாங்க செய்திருக்கிறது. அரசியல் அழுத்தமாக வடிவம் பெற்று இருந்தால், ஒருவேளை அது மாற்று கொள்கைக்கான தேடலை உருவாக்கி இருக்கும். இடதுசாரி கட்சிகள் ஓரளவு முன்னெடுத்தாலும் அந்த மாற்று கொள்கைகள், குறிப்பிட்ட பகுதிக்குள் நின்று விட்டது. மாற்று கொள்கைகள் மீதான பிரச்சாரம் சம்மந்தப் பட்ட கூட்டு இயக்கங்களாலும், தொழிற்சங்க அமைப்புகளாலும் பேசப் பட்டது. ஆனால் வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப் படும் என்ற அறிவிப்பு வந்த பின் தொடரவில்லை. இதன் விளைவு தான், 2022 மார்ச் மாதம் நடந்து முடிந்த உத்திர பிரதேச மாநில தேர்தல் முடிவுகள். அது பாஜக விற்கு சாதகமாக மாறியது.  இது ஒருபகுதி இளைஞர்கள் மத்தியில் அதிருப்தியையும், விரக்தியையும் உருவாக்கியது. இதன் மூலம் சமூக திரட்டுதல் பணிகளில் நம்பிக்கை இழப்பை உருவாக்கி இருப்பதும் உண்மை தான். இந்த நம்பிக்கை இன்மையைத் தான் முதலாளித்துவம் விரும்புகிறது.

உலக அளவில், எண்ணற்ற புரட்சியாளர்கள் இருந்தாலும், சே குவேரா புரட்சிகர அரசியலுக்கான அடையாளமாக, இளைஞர்கள் மத்தியில் அங்கீகரிக்கபட்டுள்ளார். அதேபோல் இந்தியாவிலும் பலர் இருந்தாலும் பகத்சிங் மற்றும் அவரின் தோழர்கள் பெரும் உத்வேகம் அளிக்கும் அடையாளமாக உள்ளனர். உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் கொள்கைகளின் வணிகமயத்தில், சே குவேரா வை கரைக்க முயற்சித்து வருகின்றனர். இந்தியாவில் அண்மையில் நாடாளுமன்றத்தில் நடத்திய தாக்குதல் மூலம், பகத்சிங் மற்றும் அவரின் தோழர்களின் அரசியலை சிறுமைப் படுத்தி உள்ளனர். இது புரட்சிகரமான அரசியல் செய்ய ஆர்வம் செலுத்துவோரை குழப்பும் நோக்கம் கொண்டது.

ஏற்கனவே அர்பன் நக்சலைட் என்ற சொல்லாடல் மூலம், கம்யூனிச அரசியலை கொச்சைப் படுத்தும் பணியை பாஜகவின் வகுப்புவாத சித்தாந்தம் செய்து வருகிறது. தற்போது நாடாளுமன்றத்தில் இளைஞர்கள் நடத்திய ஒரு தாக்குதலை முன்வைத்து, பகத்சிங் ரசிகர் குழு என பெயர் சூட்டப் பட்டு விவாதிப்பது, அர்பன் நக்சலைட் என்ற தாக்குதலின் அடுத்த கட்டம். இதன் மூலம் பாஜகவின் வகுப்புவாத அரசியல் மற்றும், உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் கொள்கைகளுக்கான மாற்று, கம்யூனிசம் முன் வைக்கும் சோசலிச கொள்கை என்பது உறுதியாகிறது. எனவே சோசலிச கொள்கைகளின் அடையாளமாக உள்ள மாவீரர்கள் மற்றும் அவர்களின் அரசியல் செயல் பாடு, சிறுமைப் படுத்தப் படுகிறது.

தேவை வேலையின்மைக்கு எதிரான வலுவான பிரச்சாரம்:

வேலையின்மை முதலாளித்துவத்திற்கு மிக அவசியத் தேவையாக உள்ளது. மூலதன குவிப்பில் வேலையின்மை கணிசமான பங்களிப்பை செய்கிறது. வேலையில் இருப்போரின் கூட்டு பேர உரிமையை கட்டுப்படுத்தும் ஆயுதமாக வேலையின்மை உள்ளது. வேலையில் இருப்போருக்கு எதிராக வேலையில்லாதோரை நிறுத்தி, முதலாளித்துவம் குளிர் காய்கிறது. காரல்மார்க்ஸ் வேலையில்லா பட்டாளத்தை, சேமநலப் படை என குறிப்பிடுகிறார். அந்த ரிசர்வ் ஆர்மியை முதலாளித்துவம் தன் தேவைக்கு பயன்படுத்துகிறது என்கிறார். இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரும், விடுதலைப் போராட்ட வீரருமான பி.டி.ரணதிவே, வேலையில்லாதோரையும் திரட்ட வேண்டிய பொறுப்பு தொழிற் சங்கத்தினருக்கு உள்ளது எனக் கூறுகிறார். மேற்படி இருவருடைய விவாதங்களும், கார்ப்பரேட் மூலதனம் வேலையின்மையை பயன்படுத்தி கொள்ளும் ஆபத்தை வெளிப்படுத்துவதாகும்.

வேலையின்மையை வகுப்புவாதம், சாதி, உள்ளிட்ட அடையாளங்கள் இன்று பயன்படுத்தி வருவதை நாம் பார்க்கிறோம். மோதலுக்கு இரையாக இளைஞர்களை அவர்களின் அடையாள பெருமைகள் கூறி திரட்டிவந்த இந்துத்துவா வகுப்புவாத அரசியல், இப்போது, அதற்கு மாற்றான அரசியலின் அடையாளத்தை சிதைக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது. ஒருபுறம் பகத்சிங் நினைவு தினம், பிறந்த தினங்களில் பாஜக தலைமை ஈடுபட்டு கொண்டே, மற்றொரு புறம் அவரின் கொள்கைகளை சிறுமை படுத்துவதன் மூலம் நீர்த்து போகச் செய்கிறது. அதன் விளைவு தான் அண்மையில் நடந்த நாடாளுமன்ற தாக்குதல்.

அந்த தாக்குதல் மூலம் இருமுனை தாக்குதலை இடதுசாரி இளைஞர்கள் மீது முன் வைத்தது மேலும் ஒரு உதாரணம். ஒன்று டி.ஒய்.எப்.ஐ மற்றும் எஸ்.எப்.ஐ பயன்படுத்தும் பகத்சிங் என்ற புரட்சிகர அடையாளத்தை சிதைத்தது. இரண்டு இந்திய மாணவர் சங்கத்தின், மைசூர் மாவட்ட தலைவர் விஜயக்குமார்  பேசுவது போல் உள்ள புகைபடத்தை சில மணி நேரங்களில் பாஜகவின் தொழில் நுட்பகுழுவினர், நாடாளுமன்ற தாக்குதலில் ஈடுபட்ட மனோரஞ்சன் என்பவரின் புகைப்படத்துடன் இணைத்து அரசியல் செய்தது.

மேற்படி இரண்டும் இன்றைய முதலாளித்துவத்திற்கும், இந்துத்துவா கார்ப்பரேட்டிற்கும் இடதுசாரி சிந்தனை கொண்ட இளைஞர்களும், அவர்களின் அமைப்புகளுமே சவாலாக உள்ளதாக கருதுகின்றனர். முதலாளித்துவம் உருவாக்கும் தலைமுறைக்கு எதிரான கருத்தியல் ரீதியில் அதே இளைய தலைமுறையை உருவாக்கும் வலிமை, இடதுசாரி அரசியலுக்கு இருக்கும் காரணத்தினால், மேற்படி சித்தரிப்புகளை பாஜகவும், கார்ப்பரேட் இந்துத்துவா வும் முன்னெடுத்துள்ளது.

இந்த கட்டுரையின் முகப்பில் குறிப்பிட்டவாறு, சோசலிசத்தை எதிர் கொள்ள, ஜான் மொனார்டு கெயின்ஸ் என்ற நபர் முன்மொழிந்த திட்டம், லாபத்தையும், மூலதன குவிப்பையும் கட்டுபடுத்தியது. இன்று சோசலிச சமூக அமைப்பு பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், மூலதனம் மற்றும் லாபத்தின் குவிப்பு அதிகரித்துள்ளது. இந்த லாப வேட்டை நீடிக்க, சோசலிசம் குறித்த கருத்துரைகளும், பரப்புரைகளும் அழிக்கப் பட வேண்டும் என முதலாளித்துவம் விரும்புகிறது. இந்த சமூக விதியின் போக்கை புரிந்து கொள்ளும் போதே நாம் நமக்கான இளைஞர்களை அரசியலாக திரட்ட முடியும். வேலையின்மை என்பது முதலாளித்துவ அரசியல். வேலையின்மையை பயன்படுத்தி கொள்வது இந்துத்துவா வகுப்புவாத அரசியல்.