கார்ப்பரேட்டுகளும்,
தொழிலாளி – விவசாயி நிலையும்
டபுள்
எஞ்சின் பாஜக அரசு கொள்கை
மோடி தலைமையில் பாஜக ஆட்சி
அமைந்து 10 ஆண்டுகள் முடியப் போகிறது. அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில், 7
வேலை நிறுத்தங்கள் இந்த 10 ஆண்டு காலத்தில் நடந்துள்ளது. விவசாய சங்கங்களுடன் இணைந்து
மூன்று வேலைநிறுத்தங்கள் நடந்துள்ளன. மீண்டும் ஒரு வேலை நிறுத்தத்திற்கு, அனைத்து மத்திய
தொழிற்சங்கங்களும், சம்யுக்த கிசான் மோர்ச்சா என்ற விவசாய சங்கங்களின் கூட்டமைப்பும்,
வருகிற பிப்ரவரி 16 வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
டில்லி மாநகரம் இந்திய நாட்டின்
தலைநகரம் என்பதை மறந்து, ராஜாக்களின் கோட்டையாக நடத்துகின்றார், மோடி. விவசாயிகள் தங்களது
எதிர்ப்பை பாஜகவின் ஆட்சி மற்றும் கொள்கைகளுக்கு எதிராக வலுவாக வெளிப்படுத்துவது, பாஜக
ஆட்சிக்கு வயிற்றில் புளியை கரைப்பது போல் உள்ளது. டில்லியை சுற்றி உள்ள மாநிலங்களில்
இருந்து பேரணியாக விவசாயிகள் வருவதை அனுமதிக்க கூடாது எனும், ஜனநாயக விரோத அணுகுமுறை
காரணமாக, சாலைகளில் ஆணி பதிக்கும் வேலையில், காவல் துறையினர் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
துணை ராணுவப் படையினர், டில்லியை சுற்றிலும் குவிக்கப் பட்டு வருகின்றனர். இந்த ஆட்சி
மக்கள் விரோத, தொழிலாளர் விரோத மற்றும் விவசாயிகள் விரோத ஆட்சி என தொழிற்சங்கங்களும்,
விவசாயிகள் சங்க கூட்டமைப்பினரும் தொடர்ந்து குற்றம் சுமத்துவதை, உண்மை என நிரூபிக்கும்
வகையில், எதிர்த்து போராடும் உரிமையை மறுக்கும் ஜனநாயக விரோத ஆட்சியாக பாஜக ஆட்சி விளங்குகிறது.
எம்.எஸ். சுவாமிநாதனுக்கு பாரத
ரத்னா – அவர் பரிந்துரைக்கு கல்தா?
வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனுக்கு
பாரத ரத்னா விருது அறிவித்து உள்ளது பாஜக ஆட்சி. இது ஒரு மாபெரும் அறிவியல் அறிஞருக்கு
அவர் தகுதி காரணமாக கிடைக்க வேண்டிய ஒன்றுதான். ஆனால் அவர் வாழ்நாள் முழுவதும் வலியுறுத்திய,
குறைந்த பட்ச ஆதார விலை, விவசாய விளை பொருளுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க
பாஜக ஆட்சி தயாரில்லை. பாஜக ஆட்சிக்கு வந்த 10 ஆண்டுகளில், அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான்,
உ.பி ஆகிய மாநிலங்களில் இருந்து விவசாயிகள் தொடர்ந்து இரண்டாவது கட்டமாக, டில்லியை
நோக்கி அணி வகுக்கின்றனர். கடந்த 2020 நவம்பர் 26ல் தலைநகர் முற்றுகை எனும் முழக்கத்துடன்
அணி வகுத்த விவசாயிகள், ஓராண்டு நீடித்த போராட்டம் மூலம், பாஜக ஆட்சி அறிவித்த மூன்று
வேளாண் சட்டங்கங்களைத் திரும்ப பெற வைத்தனர்.
இப்போது மோடி அரசு, ராமருக்கு
கோவில் திறந்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 26 வது நாளில் மீண்டும், விவசாயிகள் டில்லியை
நோக்கி அணி வகுக்கின்றனர். இந்த அணிவகுப்பு குறித்த செய்தி, இரண்டு விவரங்களை வெளிப்படுத்துகிறது.
ஒன்று, பாரத ரத்னா விருது எம்.எஸ். சுவாமிநாதனுக்கு அளிப்பது மோடி அரசின் போலித்தனமான
பாராட்டு என்பதாகும். இரண்டாவது ராமருக்கு கோவில் கட்டி அதை அவசர அவசரமாக திறந்தாலும்,
மக்கள் தங்கள் அடிப்படை தேவைக்கு போராடியே
ஆக வேண்டும் என்பதாகும். மோடி ஆட்சியில் விருதுகளும், கோவில்களும் அரசியல் சாயம் பூசப்பட்ட
ஒன்று என்பதை பொது சமூகம் உணர்ந்திருக்கிறது.
இதன் காரணமாகவே கடந்த காலத்தில்
விவசாயிகள் போராட்டத்தின் போது, எண்ணற்ற அறிஞர்கள் தங்கள் விருதுகளை அரசிடம் திருப்பி
தருவதாக அறிவித்தனர். அதுமட்டுமல்ல, அண்மையில் சாக்ஷி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த வீராங்கனைகள்
மற்றும் வீரர்கள் தங்கள் பதக்கங்களை திருப்பி அளிக்கும் அவலம், மோடி அரசின் விளையாட்டு
கொள்கை அதில் பாஜகவினரின் பாலியல் வக்கிரங்கள், ஆதிக்கத்தை நிலை நிறுத்த எடுக்கும்
முயற்சி ஆகியவை அம்பலமானது. எனவே போராட்டம் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.
மோடி ஆட்சியும் வேலைவாய்ப்பு
குறித்த சுய தம்பட்டமும்:
இன்னும் கூட மோடி தான் 10 ஆண்டுகளாக
பிரதமர், பொறுப்பில் இருப்பவர், என்பதை உணர்ந்து, தங்கள் ஆட்சி இவ்வளவு வேலை வாய்ப்பை
வழங்கி உள்ளது என பேச தயாரில்லை. எப்போதும் ஒரு தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தின்
உரையைப் போல் தான் அவருடைய பேச்சுக்கள் உள்ளன. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிக்கு
வந்தால், இந்திய மூன்றாவது பொருளாதார நாடாக மாறும் என பேசி வருகிறார். அண்மையில் கடந்த
கால காங்கிரஸ் ஆட்சியாளர்களை விடவும், ஒன்னரை மடங்கு கூடுதலான வேலை வாய்ப்பு வழங்கப்பட்டதாக
சுய தம்பட்டம் அடித்துள்ளார். இதற்கான எந்த ஒரு விவரத்தையும் அளிக்கவில்லை.
உண்மை நிலவரம் மோடியும் அவரின்
சங்க பரிவாரங்களும் கூறுவதற்கு எதிராக உள்ளது. அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட, பட்ஜெட்டில்,
கடந்த காலத்தில் வேளான் துறைக்கு ஒதுக்கீடு செய்யப் பட்ட தொகை ஒரு லட்சம் கோடி ரூபாய்
செலவிடப் படாமல் திருப்பி செலுத்தப் பட்டுள்ளது. வேளாண் துறைக்கு இதை விட கேடு வேறு
என்ன இருக்க முடியும்? எப்படி கிராமப் புற வேலைவாய்ப்பு உயரும்? அதேபோல் மகாத்மா காந்தி
தேசிய கிராமப் புற வேலை உறுதி சட்டத்தை அமலாக்குவதற்கான நிதியை பாஜக தொடர்ந்து வெட்டி
சுருக்கி உள்ளது. இதன் காரணமாக வேலை நாள்கள் எண்ணிக்கை 25 முதல் நாள்கள் கூட இல்லை.
பேராசிரியர். பிரபாத் போன்ற
பொருளாதார அறிஞர்கள், ”பாஜக தாக்கல் செய்த பட்ஜெட், வேலை வாய்ப்பை அதிகரிக்க உதவாது,
உண்மை ஊதியத்தில் உயர்வை ஏற்படுத்தாமல் சரிவை உருவாக்கி உள்ளது, இதன் காரணமாக வாங்கும்
சக்தி குறைவதால், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களுக்கான நுகர்வு குறைகிறது”, என
கூறுகின்றனர். 2018-19 ஆண்டை விட, 2023-24 ஆண்டில் உண்மை ஊதியத்தில் 20 சதம் அளவிற்கு
சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார். இது மனித வளர்ச்சி குறியீட்டில் இந்தியா பின்னடைவை
சந்திக்க காரணமாகிறது எனவும் கூறுகிறார். இந்தியா உலக வறுமை பட்டியலில் 125 நாடுகளில்
111 வது இடத்தில் இருந்ததை அண்மையில் காண முடிந்தது. இந்த விவரங்கள் பாஜக ஆட்சியின்
அவலத்தை தோலுரிப்பதாகும்.
ஒருபுறம் வேலையின்மை அதிகரிப்பும்
மறுபுறம் வேலையில் இருப்போர் மீதான வேலை பளு அதிகரிப்பும் நடந்து வருகிறது. அரசு போக்கு
வரத்து கழகங்களில் ஓட்டுநர், நடத்துனர், மெக்கானிக் போன்றோர் பற்றாக்குறை உள்ளது. மின்வாரியம்,
அரசு அலுவலகங்கள், வங்கி உள்ளிட்ட தனியார் நிறுவனங்களில் போதுமான நியமனங்கள் இல்லை.
தனியார் அப்பட்டமாக ஆள் எண்ணிக்கையை குறைத்தால் ஊதியத்தை உயர்த்துவோம் என பேசும் பேரம்,
ஆகியவை இந்துத்துவா மற்றும் கார்ப்பரேட் கூட்டணியின் விளைவால் கூடுதலாக உருவான செயல்கள்
ஆகும். இந்த செயல் வேலையில் இருப்போர் மீதான வேலை பளுவை பல மடங்கு உயர்த்தி உள்ளது.
வாஜ்பாய் ஆட்சி ஒளிரும் இந்தியா என்ற பிரச்சாரத்தால் மக்களிடம் அம்பலமானது. இப்போது
மோடி ஸ்டார்ட் அப் இந்தியா, மேக் இன் இந்தியா, போன்ற பொய் முழக்கங்களை முன் வைத்து
அம்பலமாகிறது.
டபுள் எஞ்சின் ஆட்சியும், டபுள்
டபுளாக முதலாளிகளுக்கு சலுகையும்:
ஏராளமான கார்ப்பரேட் நிறுவனங்கள்
மோடி ஆட்சிக்கு வந்த பின்னணியில் பெரும் கொள்ளை லாபம் ஈட்டி உள்ளதை போர்ப்ஸ் உள்ளிட்ட
இதழ்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. இந்திய முதலாளி அதானியின் நிறுவனம் இஸ்ரேல்,
உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் துறைமுகத்தை விலைக்கு வாங்கி உள்ளது. இதற்காக பல பத்தாயிரம்
கோடிகளை முதலீடு செய்துள்ளதாக, சி.ஐ.டி.யு நிர்வாக குழு அறிக்கை குறிப்பிடுகிறது. தேசிய
பணமயமாக்கல் திட்டத்தின் மூலம், எண்ணற்ற பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை
வார்க்கும் நிலையில், புதிய கட்டமைப்பு பணிகளையும் தனியாரிடம் ஒப்படைக்கிறது. இது வேலையில்
உள்ள தொழிலாளர்களை பாதிப்பது மட்டுமல்ல. சாலை, ரயில், விமானம், கப்பல் உள்ளிட்ட போக்குவரத்துகளைப்
பயன்படுத்தும் மக்கள் தலையில் கூடுதல் விலையை ஏற்றி கொள்ளையடிக்க வழி வகுக்கிறது.
வங்கி ஊழியர்கள் அல்லது பொதுத்
துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யும் போது பொது மக்களை முனுமுனுக்கச் செய்வதில்
ஆளும் வர்க்கம் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் வங்கிகளுக்கு வராக் கடன் தள்ளுபடி என
2.14 லட்சம் கோடியை மோடி அரசு 2023 ல் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கி உள்ளது.
திவால் என்ற பெயரில் ஏராளமான வழக்குகள் வங்கிகள் நடத்தி தீர்வு காணப் படாத காரணத்தாலும்
பொருளாதார இழப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் மூலம் ஏற்பட்ட இழப்பு, வராக் கடன் தள்ளுபடி
மூலம் ஆன தொகையை விட அதிகம். டபுள் எஞ்சின் ஆட்சி, டபுள் டபுளாக முதலாளிகளுக்கு சலுகையை
வழங்குகிறது. இது போல் மக்கள் சொத்துக்களை நாசம் செய்யும் பாஜக ஆட்சிக்கு எதிரான முனுமுனுப்புகளை
காண முடிகிறது, அதை பாஜகவின் தோல்விக்கானதாக மாற்ற வேண்டிய பொறுப்பு உள்ளதை, உணர்ந்தே
வேலை நிறுத்த அறைகூவல் விடப்பட்டுள்ளது.
காண்ட்ராக்ட், பயிற்சி போன்ற
பெயர்களில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கொள்ளை லாபம் ஈட்டும் பெரும் நிறுவனங்களுக்கு,
செயல் திரனுடன் இணைந்த ஊக்கத் தொகை (Performance Linked Incentive) என்ற அறிவிப்பின்
மூலம் 1.97 லட்சம் கோடி ரூபாய் அளித்து உள்ளது. இவற்றை, உள்நாட்டு மற்றும் பன்னாட்டு
நிறுவனங்களான, ஆட்டோமொபைல், மின்னனு சாதன உற்பத்தி, ஐ.டி மற்றும் டிஜிட்டல் நிறுவனங்களுக்கு
அறிவிக்கப் பட்டுள்ளது. பணம் இல்லை என்பதை விடவும் மக்களுக்கும், தொழிலாளர், விவசாயிக்கு
தரமுடியாது என்பதே பாஜக கொள்கையாக உள்ளது.
அமைப்பு சாரா தொழிலாளர்கள்
மீதான பாரபட்சம்:
மனிதர்களை பாரபட்சமாக நடத்த
கூடாது அது தண்டனைக்கு உரிய குற்றம் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், சமூக பாதுகாப்பு
இல்லாத பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்களாக, அமைப்பு சாரா தொழிலாலர்கள் உள்ளனர். வேலை
இல்லை என்பதால், படித்த இளைய தலைமுறை தொழிலாளர்கள் இப்படியான சுரண்டலுக்கு ஆளாகின்றனர்.
உலகின் பல நாடுகள் ஒரு மணி நேரத்திற்கு குறைந்த பட்ச கூலி சட்டத்தை அமலாக்குகின்றன.
இந்தியாவில் மாதத்திற்கு குறைந்த பட்சம் ரூ 26 ஆயிரம், நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய்
என்ற கோரிக்கையை தொழிற்சங்கங்கள் முன் வைக்கின்றன. ஆனால் பாஜக தொடர்ந்து மறுத்து வருகிறது.
குறைந்த பட்ச வாழ்க்கை தேவைக்கான தொகையை தீர்மானிக்க முன்வராத பாஜக ஆட்சி, முதலாளிக்கு
அள்ளி அள்ளி தருவது பாரபட்சத்தின் மேலதிகமான உச்சம் என்பதை புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
இந்த பின்னணியில் தான் கிராமங்களில்
சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பு முழு அடைப்பு என்ற அறைகூவலையும், தொழிற்சாலைகளிலும்,
சாலை போக்குவரத்து உள்ளிட்ட தொழிலாளர்களையும் வேலை நிறுத்தம் செய்ய அனைத்து மத்திய
தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறை கூவல் விடுத்துள்ளன. அந்த வகையில் பிப்ரவரி 16 வேலை
நிறுத்தம், தொழிலாளி மற்றும் விவாசாயிகள் சார்பில் பாஜக அரசுக்கும் அவர் கொள்கைக்கும்
அடிக்கும் சம்மட்டி அடியாக இருக்கட்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக