புதன், 11 செப்டம்பர், 2024

தீக்கதிர்

 

 

நீட் தேர்வும் -  கொள்ளை முறையும் ஒழிக்கப் பட வேண்டும்…

முதலாளித்துவம் தான் உருவாக்கிய விதிகள் அனைத்தையும், தானே மீறுகிற செயல்களை லாபத்திற்காக செய்கிறது. லாபத்திற்காக தன்னை தூக்கில் இட்டுக் கொள்ள வேண்டும் என்றால், தூக்கிலிட்டு கொள்ள சம்மதிக்கும், என முதலாளித்துவம் பற்றி, மார்க்ஸ் குறிப்பிடுகிறார். அப்படியானால் முதலாளித்துவம் பிறர் குறித்து ஒரு போதும் கவலை கொள்ளாது. அண்மையில் மருத்துவ கல்விக்கான நீட் தேர்வு முடிவுகள் அறிவிப்பில், லாபம் காரணமாக அத்தகைய குளறுபடிகள் ஏராளம் வெளிப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மருத்துவம் உள்ளிட்ட தொழில் நிபுனத்துவம் கொண்ட கல்விக்கு நுழைவுத் தேர்வு உருவானது முதல் இப்போது நீட் தேர்வு வரைக்கும், முதலாளித்துவ வளர்ச்சி உருவாக்கியது. வணிக தன்மை கல்வியில் வளர வளர நுழைவுத் தேர்வுகளும் வளர்ந்தது என்பதை கல்வி வளர்ச்சியில் கான முடியும்.

40 ஆண்டுகால வரலாற்று பின்னணி:

1984 வரை தமிழ்நாட்டில் உயர் கல்வியில் சேருவதற்கு மாணவர்கள் நுழைவுத் தேர்வு எதுவும் எழுத வேண்டியதில்லை. எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த போது 1984ல் நுழைவுத் தேர்வு முறையை, மருத்துவம், பொறியியல், வேளாண் துறை மற்றும் சட்டம் ஆகியவற்றிற்கு அறிமுகம் செய்தார். அன்றைக்கு அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தராக இருந்த வி.சி.குழந்தைசாமி அவர்கள் தலைமையில் அமைக்கப் பட்ட குழு, இதற்கான வழிமுறைகளை பரிந்துரை செய்தது. முதல் தேர்வு 1984 ஜூலை 14 மற்றும் 15 தேதிகளில் நடந்தது. அன்றைக்கு இருந்த எதிர்கட்சிகள் உள்ளிட்டு பலரும் எதிர்த்தனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் தடை கோரி தொடுக்கப் பட்ட வழக்கில், நீதிமன்றம் நுழைவுத் தேர்வு சரி என்றது. அன்றைக்கு தமிழ்நாட்டில் 10 மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இருந்தன.

பின்னர் 2006ம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்ற போது, மாணவர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு, ஆளகின்றனர். +1 மற்றும் +2 ஆகிய இரண்டும் சேர்ந்த புதிய கல்வி முறையில், மாணவர்களுக்கு +2 மட்டுமே கவனம் செலுத்தப் படுகிறது. இதன் காரணமாக டாக்டர். அனந்த கிருஷ்ணன் தலைமையிலான குழு அமைக்கப் பட்டு அவர்கள் பரிந்துரையின் படி நுழைவுத் தேர்வு உயர் கல்விக்கு ரத்து செய்யப் பட்டு, ஒற்றை சாளர முறை, மாணவர் சேர்க்கைக்கு  அறிமுகம் செய்யப் பட்டது.

கல்வி வளர்ச்சியும், வணிக வளர்ச்சியும்:

கல்வி அத்தியாவசியம், சமூக வளர்ச்சிக்கு பல வகையில் பங்களிப்பு செய்யும் மூலதனம் என்ற பார்வை படிப்படியாக குறைந்தது. தனியார் மயம் அதிகரித்தது. நுழைவுத் தேர்வு முறை 1984 அறிமுகம் செய்யப் பட்டதைப் போல், மெட்ரிகுலேசன் பள்ளிகள் உருவாக, தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை 1978ல் தனி வாரியம் உருவாக்கியது. அன்றைக்கு இருந்த முதலாளித்துவம் இந்த தேவையை வலியுறுத்தியது. தமிழ்நாட்டில், பள்ளி மற்றும் தொழில் நுட்ப கல்லூரிகளில் தனியார் கல்வி நிலையங்கள் பெருகின.

இதைத் தொடர்ந்து ஆந்திரம், கர்நாடகா, மகராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களும் கல்வியைத் தனியார்மயமாக்குவதில், தமிழ்நாட்டுடன் கடும் போட்டியைச் சந்தித்தன. 1994 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய கல்வி பெறுவது வாழும் உரிமையுடன் இணைந்தது. இந்திய அரசியல் சாசன சட்டம் பிரிவு 21 அதை வலியுறுத்துகிறது என்ற தீர்ப்பு, இந்திய கல்வி வரலாற்றில் பேசப்பட்ட ஒன்றாக மாறியது. இதற்கு அடிப்படை தனியார் கல்வி நிறுவனத்தின் கட்டண கொள்ளை ஆகும். இதை எதிர்த்த நீதிமன்ற வழக்கில் தான் மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டது. இதை ஒட்டி தமிழ்நாட்டிலும் கட்டண கொள்ளைக்கு எதிரான போராட்டம் வலுப் பெற்ற போது, டாக்டர். அனந்த கிருஷ்ணன் தலைமையில் அமைக்கப் பட்ட கமிட்டி கட்டண நிர்ணயிப்புகளுக்கான, வழி காட்டுதல்களை பரிந்துரைத்தது.

1992ல் சென்னை உயர்நீதிமன்றம் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியை, ராமசாமி உடையாரிடம் அளிக்க உத்தரவிட்ட தீர்ப்பு, அதைத் தொடர்ந்து ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு ஒப்படைத்த விதம் ஆகியவற்றிற்கு எதிரான தீவிரமான மாணவர் போராட்டத்தை, இந்திய மாணவர் சங்கம் மற்றும் இடதுசாரிகள் மட்டுமல்ல திமுக உள்ளிட்ட கட்சிகளும் ஆதரித்தன. தமிழ்நாட்டில் முழு அடைப்பு போராட்டம் வரை வெற்றிகரமாக நடந்தது. விளைவு கல்லூரியில் படித்து கொண்டிருந்த மாணவர்கள் வரைக்கும், அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு மாறுதல் செய்யப் பட்டனர்.

நெறியற்ற முதலாளித்துவ வளர்ச்சியில் பெருகிய கோச்சிங் மையங்கள்:

தாராளமய கொள்கை முதலாளித்துவ வளர்ச்சியை தீவிர படுத்திய நிலையில், முதலாளித்துவம் தான் உருவாக்கிய விதிகளை தானே மீறவும் செய்தது. உலக அளவில் சோசலிசத்திற்கு ஏற்பட்ட பின்னடைவு, முதலாளித்துவத்தை மேலும் தீவிர கொள்ளையை நோக்கி தூண்டியது. எல்லாம் சரக்கு, எல்லாம் சந்தைமயம், எல்லாம் லாபத்திற்காக என்ற முதலாளித்துவ நோக்கத்தை தீவிரமாக அமலாக்கும் வகையில், மருத்துவம் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் கட்டமைக்கப் பட்டன. தமிழ்நாட்டில் தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் சட்டக் கல்லூரிகளுக்கு எதிரான போராட்டங்களுக்கு இருந்த ஆதரவு நிலைமை மாறி, கடந்த 20 ஆண்டுகளில் தனியார் கல்லூரிகள் அவசியம் என்ற மனநிலையை நடுத்தர மக்களிடம் கட்டமைப்பதில் முதலாளித்துவம் திட்டமிட்டு செயலாற்றியது.

கடந்த 10 ஆண்டுகளாக நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகள் வளர்ச்சி பெற்றதும், பாஜக ஆட்சிக்கு வந்த பின் தேசிய கல்வி கொள்கை உருவாக்கப் பட்டதும், முதலாளித்துவ லாப வெறி, சேவைத் துறையான கல்வியில் புகுந்து தீவிரம் பெறுவதையும் காணமுடிகிறது. பல்கலைக் கழகங்களின் தனித்த அடையாளத்தை ஒழித்து க்யூட் தேர்வு மூலம், மாணவ்ர் சேர்க்கைக்காக, எல்லா பல்கலைக் கழகத்திற்கும் ஒரே தேர்வு என்ற முறையை அமலாக்கி, கோச்சிங் மையங்களை முன்னிலைப் படுத்தி வருகிறது.

ராஜஸ்தான், பீகார் மற்றும் குஜராத் மாநிலங்கள் நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வு முடிவுகளில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இது எப்படி சாத்தியம் ஆகிறது. ராஜஸ்தானில், 35 மருத்துவக் கல்லூரிகளும், 238 பொறியியல் கல்லூரிகளும் உள்ளன. பீகாரில் 155 பொறியியல் கல்லூரிகளும், 13 மருத்துவ கல்லூரிகளும் உள்ளன குஜராத்தில் 32 மருத்துவ கல்லூரிகளும், 269 பொறியியல் கல்லூரிகளும் உள்ளன. ஆனால் தமிழ்நாட்டில் 74 மருத்துவ கல்லூரிகளும், 1277 பொறியியல் கல்லூரிகளும் உள்ளன. குறைவான கல்லூரிகள் ஆனால் அதிகமான கோச்சிங் என்ற பயிற்சி மையங்கள் ராஜஸ்தான், பீகார் போன்ற மாநிலங்களில் உள்ளது.

சென்னை மற்றும் புறநகரில் கார் தொழிற்சாலைகள் குவியலாக உள்ளது. இதை ஆட்டோமொபைல் ஹப் என சொல்கின்றனர். ஆனால் ராஜஸ்தானில் கோட்டா என்ற நகரம் கோச்சிங் என்ற பயிற்சி மையமாக உள்ளது. இதை கோச்சிங் ஹப் என கூறுகின்றனர். இந்த பின்னணியில் தான் 2024 நீட் தேர்வு குளறு படிகளில் பீகார், குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களை சேர்ந்த 20க்கும் அதிகமானோர் கைது செய்யப் பட்டுள்ளனர். கோச்சிங் மற்றும் பயிற்சி நிறுவனங்களுக்கு இடையே போட்டி அதிகரிக்கும் போது, தேர்வு நடத்தும் முகமை (National Testing Agency) அமைப்புகளுக்கு இடையே கள்ளத் தொடர்பு அதிகரிப்பதை காண முடிகிறது.

2024 நீட் முடிவுகளும் அம்பலமான தகிடுதத்தங்களும்:

நீட் என்ற தேர்வு முறை முற்றாக ஒழிக்கப் பட வேண்டும். அதே நேரம் இந்த ஆண்டு வெளியிடப் பட்ட முடிவுகள் நியாயமற்றது என்பதில் இருந்து அந்த முடிவுக்கு வர வேண்டும்.  டெக்கான் ஹெரால்டு என்ற ஆங்கில நாளிதழ் ஜூன் 16 அன்று வெளியிட்ட செய்தியில், 70 ஆயிரம் மாணவர்களை தேர்வு செய்ய வேண்டிய இடத்தில், NTA 13.16 லட்சம் மாணவர்களை தகுதி பெற்றவர்கள் என்பதை அறிவித்து உள்ளது. அடுத்து 1563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் அளிக்கப் பட்டுள்ளது. 67 மாணவர்கள் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். ஏராளமானவர்கள் 719 மற்றும் 718 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இவை அனைத்தும் நடைமுறையில் சாத்தியமற்றது. ஊழல் செய்யாமல் இவ்வளவு மதிப்பெண்கள், இத்தனை பேர் பெற முடியாது.  

ஒரு வினாவுக்கு 4 மதிப்பெண்கள், தவறாக எழுதினால் ஒரு மதிப்பெண் குறைக்கப் படும் இந்த விதிகள், வடிகட்டுவதற்காக உருவாக்கப் பட்டவை. ஆனால் விட்டாலாச்சார்யா கதாநாயகர்கள் போல், நீட் வெற்றியாளர்கள் அறிவிப்பு, நம்ப முடியாத ஒன்று. 24 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியதாக கூறப்படுகிறது. பீகார் மாநிலத்தில் சுமார் 1000 கோடி ஊழல் இது சார்ந்து நடந்திருக்கலாம் என டெக்கான் ஹெரால்டு கூறுகிறது. கேள்வி தாள் வெளியானதைத் தொடர்ந்து, 30 லட்சம் ரூபாய் ஒவ்வொரு மாணவரிடமும் வசூலிக்கப் பட்டுள்ளது, என்றும் செய்திகள் வருகின்றன. எனவே தொடர்ந்து குளறுபடிகளுக்கு வாய்ப்புள்ளதால். மொத்தமாகவே நீட் ரத்து செய்யப்பட வேண்டும்.

பாஜக ஆட்சி தவறு செய்பவர்களுக்கு உடந்தை:

இந்த ஆண்டு துவக்கத்தில், பொதுத் தேர்வுகள் சட்டம் (Prevention of Unfair Means) திருத்தப் பட்டது. இந்த சட்டத்தை முன்மொழியும் போது, அமைச்சர், ஜம்மு காஷ்மீரில், மேற்கு வங்கத்தில் கடந்த கால காங்கிரஸ் ஆட்சி செய்த தவறு என பட்டியலிட்டு பல நூற்றுக்கனக்கான முறைகேடுகள் பொதுத் தேர்வுகள் மற்றும் பணி நியமனத்திற்கான தேர்வுகளில் நடந்ததாக கூறியுள்ளார். சட்டம் இயற்றப் பட்ட சில மாதங்களில், நீட் குளறுபடிகள் அம்பலமாகி உள்ளது. பாஜக தனது ஆதரவை, தவறு செய்பவர்களுக்கு சாதகமாக வெளிப்படுத்தியும் வருகிறது. உயர் கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தேசிய தேர்வு முகமை மீது தவறில்லை என வாதாடுகிறார். 2024 தேர்வு முடிவுகள் மீது கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், விசாரணை செய்ய என்.டி. ஏ வின் தலைவரையே நியமனம் செய்தது, முறைகேடுகளின் உச்சமாகும்.

தற்போது உச்சநீதிமன்றம் கருணை மதிப்பெண் அனைத்தையும் ரத்து செய்துள்ளது. மீண்டும் ஜூலை8 அன்று வழக்கு விசாரணை என அறிவித்துள்ளது. இது நேர்மையான மாணவர் சேர்க்கைக்கு போதாது. மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர். டி.கே.ரங்கராஜன் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு நீட் தேர்வு குளறுபடிகளை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததன் மூலம், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் பெற்றுத் தந்தார். இப்போது மொத்தமாக ரத்து செய்வது தேவையாக உள்ளது.

நீட் ரத்து அவசியம்:

தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள மாணவர், அரசியல் மற்றும் சமூக இயக்கங்கள், நீட் தேர்வு முறை வேண்டாம் என்றும், கல்வி மாநிலப் பட்டியலுக்கு மீண்டும் எடுத்து வரப் பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன. தமிழ்நாட்டில் 20 மாணவ மாணவியர் தற்கொலை செய்து கொண்டது, இயலாமை காரணமானது அல்ல, நேரமையற்ற தேர்வு முறை ஏற்படுத்திய மன அழுத்தம் ஆகும். எனவே நீட் தேர்வு ரத்து செய்யப் பட வேண்டும்.

மாணவர் சேர்க்கை தமிழ்நாட்டில் இருந்த ஒற்றை சாளர முறை, அடிப்படையில் நீடிக்க வேண்டும். சிறந்த மருத்துவர்கள் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருவதே இதற்கு சான்று. தனியார் மற்றும் வணிகமய தேவையை ஏற்றுக் கொள்ள வைக்கும் முறையில், முதலாளித்துவ விதிகள் உருவாக்கப் பட்டது. தற்போது இந்த விதிகள் அம்பலமாகி உள்ள நிலையில், ஏற்கனவே இருந்த நடைமுறையை அனுமதிக்க வேண்டும். மார்க்சிஸ்ட் கட்சி நடத்தும் ஆர்ப்பாட்டம், இந்த நோக்கங்கள் நிறைவேறும் வகையில் வெற்றி பெறட்டும்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக