மகரஜோதி மரணஜோதியாக மாறிவிட்டது. 102 ஐய்யப்ப பக்தர்கள், நெரிசலில் சிக்கி மரணத்தைத் தழுவியது உலக செய்தியாக சொல்லப்பட்டது. தமிழர்கள் உற்சாகமாக கொண்டாடும் தைப் பொங்கல் விழா, மற்றும் தமிழ்ப் புத்தாண்டு பல கிராமங்களில் மயான அமைதியாக, சப்தமில்லாமல் கடந்து சென்றது. விபத்தின் கோரம், விபத்திற்கான பின்னனி, அரசு மேற்கொண்டு இருக்க வேண்டிய பணிகள், ஆகியவை போதுமான அளவிற்கு, விவாதிக்கப் பட்டுவிட்டது. மத்திய வனத்துறையின் ஒப்புதல் குறித்த விவரத்தையும், அதிகரித்து வரும் ஐய்யப்ப பக்தர்களின் எண்ணிக்கையையும், விபத்தைத் தொடர்ந்து கேரள உயர்நீதி மன்றம் எழுப்பி வரும் கேள்விகளையும், மாநில உரிமைகளை மத்திய அரசு மதிக்காததன் விளைவு ஆகியவற்றையும் உழைப்பாளி மக்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய தருணம் இது.
மகரஜோதி உண்மையா?
சபரிமலையில் நடந்த கொடூரமான விபத்தைத் தொடர்ந்து, கேரள உயர்நீதி மன்றம் மாநில அரசையும், தேவசம் போர்டையும் விசாரணை நடத்தக் கேட்டுக் கொண்டது. மாநில அரசும் இது குறித்து தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகிறது. முதல் கட்ட அறிக்கையையும் நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இதைத் தொடர்ந்து மகர ஜோதி என்பது உண்மையா? அது எப்படி நடைபெறுகிறது என்பதைப் பொது மக்களுக்கு விளக்குவது உடனடி அவசியம் என்பதையும் நீதி மன்றம் வலியுறுத்தியுள்ளது. நீதிமன்றத்தின் இக்கேள்வி மிகமுக்கியமான ஒன்றாக கருதப்பட வேண்டும். ஏனென்றால். கடந்த 2010 செப்டம்பர் 30ல் அலகாபாத் உயர் நீதிமன்றம், பாபர் மசூதி இடிப்பு குறித்தும், மசூதி இருந்த இடம் குறித்தும் வழங்கிய தீர்ப்பு பல்வேறு கண்டனங்களை, நீதித் துறை மீதான அதிருப்தியை வெளிப்படுத்திய நிலை உருவாக காரணமாக அமைந்தது. ராமர் பிறந்தார் என்பதற்கு என்ன ஆதாரம் என்ற கேள்வியை அலகாபாத் நீதிமன்றத்தில் எழுப்பிய போது, நீதிபதிகள் அது நம்பிக்கை சார்ந்த விஷயம் என மழுப்பலான பதிலை வெளிப்படுத்தினர்.
இந்தப் பின்னனியில், கேரள உயர் நீதி மன்றம் எழுப்பிய கேள்விகள் மூலம், சமூக விழிப்புணர்வு கருத்துக்களை வலியுறுத்தி, நீதித் துறை தலையீடு அமைந்திருப்பது, ஆறுதல் அளிக்கிறது. வழக்கமாக கோடிக்கும் மேலான பக்தர்கள் சபரிமலைக்கு வருகை தந்தாலும், மகரஜோதியின் போது மிக அதிகமாக வருகின்றனர். சபரிமலையில் இரு பெரிய விபத்துகள் நடந்து உள்ளது இரண்டுமே மகரஜோதி காலத்தில் தான் நடந்துள்ளது. 1999 ல் பம்பை பகுதியிலும், தற்போது புல்மேடு பகுதியிலும் விபத்து நடந்துள்ளது. ஐய்யப்பன் மீதான நம்பிக்கையைப் போல் மகரஜோதியின் மீது, அதிசயம் என்ற ஈர்ப்பின் காரணமாக நம்பிக்கை பக்தர்களிடம் அதிகமாக இருக்கிறது. விபத்து நடந்ததாக சொல்லப் படுகிற, புல்மேடு பகுதி வழியாக மட்டுமே, 6 லட்சம் நபர்கள் பயணப் பட்டு இருக்கலாம் என்றும், 2.5 லட்சம் நபர்கள் 3 அல்லது 4 தினங்கள் புல்மேடு பகுதியில் முகாமிட்டு இருந்ததாகவும் சொல்லப் படுகிறது. மகர ஜோதி 14 ஜனவரி அன்று மாலை 7.07 மணிக்கு நிறைவு பெற்றதாகவும், புல்மேடு பகுதியில் இருந்து பக்தர்கள் வெளியேற துவங்கிய அந்த நேரத்தில், 2500க்கும் அதிகமான வாகணங்கள் அந்தப் பகுதியில் குவிந்து இருந்தது என்றும் சொல்லப் படுகிறது. வாகண நெரிசல் மற்றும் பக்தர்களின் அவசரம் அகியவை அன்றைய நெரிசல் ஏற்படவும், 102 நபர்கள் மரணத்தைத் தழுவுவதற்கும் பிரதானக் காரணம் என்பதை பத்திரிக்கைகள் வெளிப்படுத்திய செய்தி.
பத்திரிக்கைகள் சுட்டிக்காட்டிய செய்தியின் அடிப்படையில் அரசு நடவடிக்கை மேற்கொண்டால் எதிர்காலத்தில் இது போன்ற அசம்பாவிதங்கள் தவிர்க்கப் படக் கூடும். அரசு நடவடிக்கைகள் என்ற அளவில் சுருக்கிக் கொண்டு, உழைப்பாளி மக்களை இருட்டறையில் தொடர்ந்து அடைத்து வைக்க வேண்டுமா? பொது மக்களுக்கான விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டாமா? என்ற பொருளில் தான், தொழிலாளி வர்க்க கண்ணோட்டம் கொண்ட அனைவரும் அணுகவேண்டும். இருந்த போதிலும், மாநில அரசு சில நடவடிக்கைகளை மேற்கொள்ள முயற்சித்த போது, மத்திய அரசு வனப் பாதுகாப்பு மற்றும் புலிகள் சரணாலயம் என்பதைச் சுட்டிக் காட்டி, கேரள இடது ஜனநாயக முன்னனி அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளைத் தடுத்தது. விள்க்கு அமைக்கும் பணி, தண்ணீர் ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பிற்கு மத்திய காவல் படை உள்ளிட்ட தேவைகள் குறித்து மத்திய அரசிடம் முறையிட்ட போது, மத்திய அரசு நிராகரித்து இருப்பதை, தற்போது கேரள அரசு அம்பலப்படுத்தி இருக்கிறது. மத்திய மாநில அரசுகளின் உறவு எப்படி இருக்க வேண்டும் என பலகட்ட விவாதங்கள் நடந்து முடிந்தாலும், அதை மேம்படுத்த காங்கிரஸ் தலைமை ஒருபோதும் முயற்சித்ததில்லை. காங்கிரஸ் தனது மாற்றாந்தாய் மனப்பான்மையை, சபரிமலை போன்ற மிகவும் சென்சிட்டிவான பிரச்சனையில் கையாள்வது ஆபத்தான அனுகுமுறை என்பதை மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறது. இன்று கூட்டணி ஆட்சிக்குத் தலைமை வகிக்கும் நிலையிலும் காங்கிரஸ் தொடர்ந்து தனது பழைய பத்தாம் பசலித் தனமான கொள்கைகளைப் பின்பற்றுவது குறித்து கூட்டணியில் அங்கம் வகிப்பவர்களான தி.மு.க போன்ற கட்சிகள் கவலை கொள்வதில்லை. மக்களின் மரண ஒலத்திலும் மாநில ஆட்சியாளர்களைப் பழிவாங்கத்துடிப்பதை வேறு எப்படிப் புரிந்து கொள்வது?.
இந்நிலையில் மக்களின் நம்பிக்கையை உருவாக்கியவர்கள் மீதும், அதற்கு பின்னனியாக இருப்பவை பற்றியும் கேள்விகள் எழுந்துள்ளதையும் கணக்கில் கொள்ளவேண்டும். மகரவிளககு என்பது சபரிமலை இருக்கும் பிராந்திய மக்களின் திருவிழா, விளக்கு என்றால் திருவிழா என்று பொருள் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பொறுப்பை வகிக்கும், எம் ராஜகோபாலன் நாயர் குறிப்பிட்டதாக, ஜன 22, தி இந்து நாளிதழ் குறிப்பிடுகிறது. மேலும் அதே நாளிதழில், ராஜகோபாலன் நாயர் தொடர்ந்து குறிப்பிட்டு இருப்பதாவது, ”மகரஜோதி என்று அழைக்கப்படும், ஒளி பொன்னம்பல மேடு பகுதியில் மனிதனால் உருவாக்கப்படுவதாகும். அதே நேரத்தில் திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு இந்த ஒளியை உருவாக்குவதில் எந்த பங்களிப்பும் இல்லை. மகரவிளக்கு என்ற விழா, அந்தக்காலத்தில் பொன்னம்பல மேடு அமைந்துள்ள காடுகளில் வசித்த மக்கள் அல்லது பழங்குடியினர் உள்ளிட்டவர்களாலும் கொண்டாடப் பட்டது. இது ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடப் படும் பெரும் திருவிழாவாக காலப் போக்கில் மாறிவிட்டது. அதுவும் குறிப்பாக காடுகளில் வசித்த மக்கள் அங்கிருந்து வெளியேறிய பிறகும் இந்த மலைஉச்சியில் ஒளி ஏற்றும் நிகழ்வு தொடர்ந்தது”. எனக் குறிப்பிட்டு உள்ளார். கோவிலின் மூத்த தாந்திரி எனக் கருதப்படும், கண்டராரு மகேஸ்வரரு, கூறுகிற போது, பொன்னம்பலமேடு பகுதியில் தெரிகிற ஒளி மனிதனால் உருவாக்கப் படுவதே என்பதை ஒப்புக் கொண்டுள்ளார். மகர நட்சத்திரம் தெளிவாக தெரிகிற நாளில், இந்த ஒளி ஏற்றப்படுவதால், மகரஜோதி என்ற பெயரில் பிரமாண்டப்படுத்தப் பட்டிருக்க வேண்டும் எனத் தெரிகிறது.
ராஜகோபாலன் நாயர் தெரிவித்த கருத்துக்களை பந்தலம் அரண்மனையின் நிர்வாகக் குழுத் தலைவர் பி. ராமவர்ம ராஜா மற்றும் தாந்திரி ஆகியோரும், பழங்குடி மக்கள் விளக்கேற்றி கொண்டாடியதன் தொடர்ச்சி மற்றும் மனிதர்களால் உருவாக்கப்படுவதே, பொன்னம்பலமேடு பகுதியில், தெரிகிற ஒளி என்பதைக் குறிப்பிட்டுள்லனர். இத்தகைய வாக்குமூலங்கள் நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளைத் தொடர்ந்து வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தேவசம் போர்டின் வழக்கறிஞர், “மகரஜோதி என்பது புனிதமான தெய்வீகத் தன்மை கொண்டது என ஒரு போதும் வாதிட வில்லை. ஆனால் நம்பிக்கை சார்ந்த ஒன்று”, என நீதிமன்றத்தில் தெரிவித்தார். அதற்கு நீதிமன்றம் நம்பிக்கை அல்லது ஆன்மீகம் எதுவாக இருந்தாலும், உண்மையை மக்கள் அறிந்து கொள்ளும் உரிமை இருப்பதை தேவசம் போர்டு புரிந்து கொள்ள வேண்டும், என்பதை வலியுறுத்தியுள்ளது. எனவே தான் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகளுடன் ஒப்பிடுகையில் ஆறுதலளிப்பதாக இருக்கிறது என்க் குறிப்பிட்டோம்.
மூத்த காவல் துறை அதிகாரி ஒருவர் ஃப்ரண்ட்லைன் பத்திரிக்கையில் பகிர்ந்து கொண்ட செய்தி, “ஐய்யப்பனை தரிசிக்க பிற மாநிலங்களில் இருந்தே மிக அதிக அளவில் வருகின்றனர். அவர்களுக்கு, மேற்படி மகர ஜோதி மனிதனால் உருவாக்கப் படுவது என்ற உண்மை தெரியாத காரணத்தால், அது அதிசயம் கடவுளின் அற்புதங்களில் ஒன்று, என ஆன்மீகத்துடன் இனைத்துப் புரிந்து கொள்கின்றனர். ஆகவே தான் குறிப்பிட்ட ஜனவரி 14 தேதியை கணக்கிட்டு பக்தர்கள் அதிக அளவில் குவிகின்றனர். தேவசம் போர்டு இந்த மகரஜோதி என்ற மனிதன் நிகழ்த்தும் செயல் என்ற உண்மையைத் தெளிவு படுத்தினால், பக்தர்களுக்கு இருக்கிற ஈர்ப்பு குறையும். அத்தகைய பொறுப்பு கொண்ட ஒன்றாக தேவசம் போர்டு இருக்க வேண்டும்” எனவும் அந்த அதிகாரி வலியுறுத்தி உள்ளார்.
ஆனால் தேவசம் போர்டு இதை செய்வதற்கு வாய்ப்பில்லை. பக்தர்களுக்கு இருக்கும் நம்பிக்கை அதிகரித்தால் மட்டுமே, கோவில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கும். அதோடு வருமானமும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கும். அத்தகைய வருமான இழப்பை அனுமதிப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது. உதாரணத்திற்கு ஃபிரண்ட் லைன் ஏடு தெரிவித்துள்ள செய்திகளைக் கணக்கிலெடுக்க வேண்டும். 2008-09 ஆண்டின் டிசம்பர் மற்றும் ஜனவரியில் சபரிமலை மூலம் தேவசம் போர்டு வருமாணம் ரூ 113.23 கோடி. 2009-2010 ல் 128.48 கோடி, 2011 ல் எதிர்பார்க்கப் பட்ட தொகை ரூ 131.15 கோடி. (1,76,319 கோடியுடன் ஒப்பிட்ட வேண்டாம்). எதிர் பார்க்கப் படும் தொகை என்ற வரவு செலவு கணக்கு குறித்து தேவசம் போர்டு நிர்வாகம் ஆலோசிக்கத் துவங்கி விட்டாலே அங்கு, ஆன்மீகத்தை விடவும், லாபத்தை எதிர்பார்க்கும் தொழிலாக, கோவிலைப் பார்க்கும் குணம் வளர்ந்து விட்டது என்று தானே பொருள். மேலும், திருவிதாங்கூர் தேவசம் போர்டு என்பது ஒரு சட்ட ரீதியில் தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பு. இந்த அமைப்பிற்கு கீழ் 1208 கோவில்கள் இருப்பதாகவும் அங்கு 5000 தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இதில் சபரிமலை மட்டுமே பெரும் வருமாணம் ஈட்டித் தரும் கோவில் என்றும் தகவல் தெரிவிக்கிறது. எனவே மகர ஜோதி என்கிற பொன்முட்டையிடும் வாத்து இருக்கிற வரையிலும் தான், ஈர்ப்பு தொடரும், விழிப்புணர்வு என்ற முறையில் அடிமடியில் கை வைப்பதை தேவசம் போர்டு நிச்சயமாக ஏற்றுக் கொள்ளாது. நீதிமன்றமும் தொடர்ந்து தற்போது வலியுறுத்தும், இதே நிலைபாடுடன் இருக்கும் என எதிர்பார்க்க முடியாது.
இப்போதே மத நம்பிக்கைகள் மீது கேள்வி எழுப்ப நீதி மன்றத்தை அனுமதிக்க மாட்டோம் என்ற வீராவேசத்துடன் பாரதீய ஜனதா மற்றும் இந்துத்வா அமைப்புகள் களம் இறங்கி விட்டன. எனவே இது உழைப்பாளி மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற வேண்டும் என்ற அக்கறை கொண்ட, அனைவரும் மேற்கொள்ள வேண்டிய பணி. தேவசம் போர்டு என்பது மத உணர்வுகளுக்கு இடம் கொடுக்கும் அமைப்புகள் மட்டுமல்ல. அது இன்றைக்கும் ஆளும் வர்க்கத்திற்கு சேவகம் செய்யும் அமைப்பாகவே இருக்கிறது, தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதையே ஆளும் வர்க்கம் எதிர்பார்க்கிறது.. இடது ஜனநாயக முன்னனி சிறிய அளவில் மட்டுமே தலையீடு செய்ய முடியும் என்பதையும் கணக்கில் கொள்வது அவசியம்.
உயரும் பக்தர்கள் எண்ணிக்கை:
சமூக அக்கறை அதிகரிக்கிற போது, மேலே குறிப்பிட்ட கேள்விகள் எழுப்பப் படுவது தவிர்க்க முடியாது. கோவில்களை நோக்கி மனிதர்கள் பயணம் செய்வது, ஐயப்பனுக்கு மட்டுமல்ல. எண்ணற்ற கடவுளர்களுக்கு, மத வேறுபாடுகள் இல்லாமல் அணிவகுக்க, திட்டமிட்ட ஏற்பாடுகள் இருக்கிறது. இந்தியாவின் பல்வேறு கோவில்களில் நிகழ்ந்த விபத்துக்களைக் குறிப்பாக, கூட்ட நெரிசலில் சிக்கி இறந்த சம்பவங்களைத் தொகுத்துப் பார்த்தால் அதிர்ச்சியாக இருக்கும். 2005 ல் ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் உள்ள துர்க்கா கோவிலில், நவராத்திரி கொண்டாடத்தின் போது, அதிகாலை 6 மணிக்கு, 2000லிருந்து 3000 க்கு உட்பட்ட பக்தர்கள், கோவிலுக்குள் காற்றோட்டம் இல்லாத காரணத்தால், ஏற்பட்ட நெரிசலால், 147 நபர்கள் பரிதாபமாக இறந்தனர். அதே 2005 ஆகஸ்டில், ஹிமாச்சலப் பிரதேசத்தில், நைனாதேவி கோவிலில் ஏற்பட்ட நெரிசலில், 145 நபர்கள் மரணத்தைத் தழுவினர். காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகை கோவிலில், வழிபாடு செய்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள், நாடு முழுவதிலும் இருந்து பயணம் மேற்கொள்கின்றனர். சமீபத்தில் நிகழ்ந்த தரிசனத்தின் போது நெரிசல் காரணமாக இரண்டு பேர் இறந்தனர். குகைக்கு வெளியில் அதிகபட்சம் 6000 வரை திரண்டு நிற்க முடியும் என்ற நிலையைத் தெரிந்தும், 15 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரம் வரையிலான மக்கள் திரண்டனர். அதுவே நெரிசலுக்கு காரணமாக அமைந்து விட்டது.
இந்தியாவில் நடந்த கும்பமேளா விழாவின் போது கூட்ட நெரிசலில் சிக்கி மரணம் அடைந்தோர் அதிகளவில் உள்ளனர். 1954 ல் அலகாபாத் கும்பமேளா நிகழ்வில் திரண்ட சுமார் 30 முதல் 40 லட்சம் மக்களுக்கு இடையே ஏற்பட்ட நெரிசல் காரணமாக 800 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 200 பேர் காணமல் போனதாகவும் 2000 நபர்கள் வரையிலும், காயமடைந்ததாகவும், அரசு அன்று வெளியிட்ட செய்திகள் தெரிவிக்கின்றன. அதன் பின் பத்ரிநாத், ஹரித்துவார், உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்ற் கும்ப மேளா நிகழவுகளில் பலர் மாண்டு இருக்கின்றனர். இது நீண்ட நெடும்காலமாக இந்திய சமூகத்தில் நிகழும் சம்பவங்கள் தான் எனக் கருதாமல், இதன் மீது மக்கள் கேள்வி எழுப்பி பார்க்கும் சிந்தனை வளர்ச்சி, நமது சமூகத்தில் ஏன் ஏற்படவில்லை, என்ற விவாதத்தை இடது சாரிகளைத் தவிர வேறு யாரும் எழுப்புவதில்லை. காரணம் இந்த நிலைக்கு முதலாளித்துவ கட்சிகள் அனைத்தும் பங்கு வகிக்கிறது என்பதாகும்.
மேற்படி நிகழ்வுகள் அனைத்தும் மக்களுக்குத் துன்பங்கள் அதிகரித்து, அதன் விளைவாக, கடவுளிடம் முறையிடச் செல்லும் தனமை கொண்டது. ஒரு சிலர் வேண்டுமானால் சுற்றுலா எனச் சென்று இருக்கலாம். அறிவியல் வளர்ந்திருக்கும் இக்காலத்திலும், அதிகமான கோரிக்கைகளுடன், மிக அதிகமான மக்கள் கடவுளிடம் முறையிடச் செல்கின்றனர், என்பதுதான் இந்திய சமூகத்தின் ஆச்சரியமான செய்தி. இதைத்தான் காரல் மார்க்ஸ், “மதம் என்பது ஒடுக்கப் பட்ட ஜீவராசியின் அடையாளம், இதயமற்ற உலகின் இதயம், உயிர்ப்பற்ற சூழல்களின் உயிர். அது மக்களின் அபின். மக்களின் கற்பிதமான இன்பம் என்கிற மதத்திற்கு மாற்றாக மெய்யான மாற்றத்தைக் கொண்டு வர வேண்டியிருக்கிறது”, என்று கூறினார். மார்க்ஸ் சொன்ன வார்த்தைகளைத் தமிழகம் மற்றும் இந்திய சூழலில் ஒப்பிட்டுப் பார்த்தால், மிகச் சரியாக இருக்கும். கடந்த 10 ஆண்டுகளில், விளிம்பு நிலை மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வறுமை உயர்ந்துள்ளது. சமூக அவலங்களும் பெருகியுள்ளன. பெரும்பான்மையான மக்கள் அன்றாட பிழைப்பை நடத்துவதில், பெரும் நெருக்கடிக்கும், போராட்டத்திற்கும் ஆளாகி வருகின்றனர். மத்திய அரசு நியமனம் செய்த அர்ஜூன் சென் குப்தா கமிட்டி, நாளொன்றுக்கு ரூ 20 மட்டுமே செலவிடும் மக்கள் 77.4 சதமானோர் இந்தியாவில் வசிக்கின்றனர், என்பதை ஆய்வு செய்து குறிப்பிட்டது.
அர்ஜூன் சென் குப்தா கமிட்டி கொடுத்த ஆய்வறிக்கை உண்மையானது என்பதற்கு, இந்தியாவில் நிறைய உதாரணங்கள் உள்ளன. கோவில் நெரிசலில் மட்டும் மக்கள் இறப்பதில்லை. முன்னாள் பிரதமர் வாஜ்பாய், 2004 பொதுத் தேர்தலில் போட்டியிட்ட போது, அவருக்கு ஆதரவான நபர் இலவச வேட்டி, சேலை வழங்கிய நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில், பலர் இறந்தனர். 2005 டிசம்பரில் வெள்ள நிவாரணம் பெறச் சென்ற சென்னை வாழ் மக்கள் 18 பேர் நெரிசலில் சிக்கி பரிதாபமாக மடிந்தனர். இச் சம்பவங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். இத்தகைய வாழ்க்கை நெருக்கடியில் உள்ள மக்கள், தன்னை ஏளனம் செய்யாத, அதே நேரத்தில் தனது புலம்பலுக்கு இடம் கொடுக்கிற சூழலைத் தேடுகின்றனர். அப்படிப் பட்டவர்களை ஈர்க்கும் இடமாக ஆன்மீகம் இருக்கிறது. இதைத் தான் மார்க்ஸ் இதயம் அற்ற உலகில் இதயம் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.
ஏழைகள் என்ற உழைக்கும் வர்க்கம் மீது தீராக் காதல் கொண்டு செயல்படுகிற கம்யூனிஸ்டுகள் தான் உண்மைக்கும் மாயைக்குமான வேறுபாட்டினை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்திட முடியும். 77.4 கோடி மக்கள் வெறும் 20 ரூபாய் மட்டுமே செலவிடும் நிலையில், அதற்கு காரணமான அரசு அதிகாரத்தின் மீது கோபம் கொள்ளத் தூண்ட வேண்டியுள்ளது. சபரிமலைக்கும், திருவண்ணாமலைக்கும், மேல் மருவத்தூருக்கும், பழனி மலைக்கும் உழைக்கும் மக்கள், கடன் வாங்கி செலவிடும் பரிதாபத்தை இந்த சமூக அமைப்பு உருவாக்கி வைத்திருக்கிறது. இந்த அறியாமையை உழைக்கும் மக்களிடம் அம்பலப் படுத்த தீவிர திட்டமிடலை மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஒருவேளை சிலர் அதீத நாத்திகம் பேசி தீவிர புரட்சியாளர் என்று பெயர் வாங்கிக் கொள்வதற்கான விவாதம் இது, என கேள்வி எழுப்பலாம். ஏங்கெல்ஸ், ஃப்ரான்ஸ் சம்பவத்தை நினைவு கூர்ந்து குறிப்பிட்டதையும் கூறலாம். சமூக ஜனநாயக கட்சியினரை விடவும், புரட்சியாளர்களாக காட்டிக் கொள்வதற்காக, நாத்திகம் குறித்து தீவிரப் பிரச்சாரம் செய்கிறார்கள், என ஏங்கெல்ஸ் ஃபிரான்சில் இருந்த, லூயிஸ் அகஸ்ட் பிளாங்கி யினுடைய பற்றாளர்களாக இருந்தவர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இங்கு நமது விவாதம் அத்தகைய புரட்சியாளர்கள் போன்றதல்ல. இந்திய சமூகத்தில் மார்க்ஸ் சொன்ன இதயமற்ற உலகில் இதயம் என்று செயல் படுவதை விட, மதம் ஒரு அபின் என்ற வரிகளைப் போலவே செயல் படுகிறது. உதாரணத்திற்கு உழைப்பாளர் மேற்கொள்ளும், சபரிமலை விரதங்கள். 40 நாள்கள் நோன்பு இருந்து, வழிபாட்டுக்கு சென்று வருகிறார். வந்த பின் கடனாளியாகவும் மாறுகிறார். ஆனால் துன்பங்களில் இருந்து விடுபட்டவராக மாறவில்லை. இந்த யதார்த்த உண்மையை, தொழிலாளி வர்க்கத்திற்கு, மிகச் சரியாக உணர்த்த வேண்டியுள்ளது.
மற்றொரு புறம் இன்றைய முதலாளித்துவ சமூக அமைப்பு திட்டமிட்ட முறையில், இத்தகைய வலி நிவாரண உணர்வை உருவாக்கி வருகிறது. கோவில் விழாக்கள், அரசியல் நிகழ்வுகளுக்கு சமமாக விளம்பரப்படுத்தப் படுகின்றன. அதேபோல், ரவிசங்கர், ஜக்கி வாசுதேவ், ஈசா யோகா மையம், நித்தியானந்தா, ராம் தேவ் போன்ற எண்ணற்ற நபர்களும் பெருகி வருகின்றனர். இவர்களில் பலரும் பெரும் கோடீஸ்வரர்களாக மாறி வருவது, கண்கூடு. இவர்கள் நடத்தும், ட்ரெஸ்டுகளுக்கு அளிக்கப்படும் நன்கொடைகளுக்கு, கொடுத்தவருக்கும் வரி விலக்கு, வாங்கியவருக்கும் வரிவிலக்கு என்ற முறையில் கறுப்பு பணம் சிறந்த முறையில், பாதுகாப்பதற்கான ஏற்பாடாக மாறிவருவது குறித்தும், புதிய அதிகார மையங்களாக மாறிவருவது குறித்தும், யாரும் கவலை கொள்வதில்லை.
இது போன்ற ஆஸ்ரமங்களை விரும்பும் நடுத்தர வர்க்கம், தனது செயலை நியாயப் படுத்தவும் செய்கிறது. ”மன அமைதியைத் தரும் மிகவும் பயனுள்ள நடவடிக்கைகள், மேற்படி சாமியார்களின் மடங்கள் மூலம் செய்யப்படுகிறது” என்பது நடுத்தர வர்க்கத்தினரின் வாதம். ஒருசில விதிவிலக்குகள் இருக்கலாம். அதுவே, தீர்வாகி விடாது. தற்போது இந்தியா பின்பற்றும் பொருளாதாரக் கொள்கை, ஏழை, பணக்காரர் வித்தியாசத்தை மட்டும் அதிகரிக்கவில்லை. கூடவே, மனநோயாளிகளின் எண்ணிக்கையையும் அதிகரித்து வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், நாளிதழ்களில், சுமார் 10 சதமான இந்திய மக்கள் மனநோயாளிகளாக, உளவியல் ரீதியில் பாதிப்பு அடைந்தவர்களாக வளர்ந்து வருகிறார்கள், என்ற செய்தி பிரசுரிக்கப் பட்டு இருந்தது. அதாவது வேலை செய்யும் நிறுவனங்களில், கணவன், மணைவி உறவில், குடும்பத் தேவையைப் பூர்த்தி செய்வதில் என எங்குமே, திருப்தி பெறமுடியாத, பற்றாக்குறை வருமானம் கொண்ட அல்லது, பாராட்டுப் பெறுகிற வாய்ப்பு இல்லாத காரணத்தால் மேற்படி உளவியல் பிரச்சனைகள் தோன்றுகிறது, என்பதும் குறிப்பிடப் பட்டு இருந்தது. இத்தகைய நிலை ஏற்படாமல் இருக்க கோவில்களுக்கு செல்லும் செயல் அல்லது ஆசிரம சீடர்களாக மாறி தொண்டாற்றும் செயல் வளர்ந்து வரலாம். இந்த வாதம் உண்மை என்றால், மக்களுக்கு ஏற்பட்டுள்ள இத்தகைய ஈர்ப்பு, முதலாளித்துவ கட்சிகளை எந்தவிதத்திலும் பாதிக்கப் போவதில்லை. ஏனென்றால் இத்தகைய நம்பிக்கைகளுக்குள் முடங்கும் மக்கள், ஆட்சியமைப்பு குறித்தும், இதர அவலங்கள் குறித்தும் கேள்வி எழுப்பாமல், தங்களயே தலையெழுத்து என்ற பெயரில் குற்றம் சுமத்திக் கொள்வார்கள். அதுதான் ஆள்வோருக்குத் தேவையானது. ஆனால் இடது சாரி அரசியலுக்குப் பாதகமாக அமையும். மேற்படி சிந்தனையின் விளைவு, சமூகத்தின் மீதான சுரண்டலை மேலும் வலுப்படுத்தும், என்பதை இடது சாரி இயக்க ஊழியர்களும், தொழிலாளி வர்க்கமும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
குறிப்பாக பொது மக்களிடத்தில் வாழ்வின் மீது ஒரு விதமான அச்சம் கலந்த அவநம்பிக்கை உணர்வை இன்றைய பொருளாதார கொள்கைகள் உருவாக்கி உள்ளன. வேலையின்மை, வேலைத் தளத்தில் ஏற்படும் நெருக்கடியை எதிர்க்க இயலாமை, பெண்கள் பணிக்கு செல்லும் வழியில் அல்லது பணியிடத்தில் சந்திக்கும் நெருக்கடிகள், ஆகியவற்றிலிருந்து விடுதலை பெற, சமூகம் ஏற்படுத்தியுள்ள கடவுள் நம்பிக்கைகளை நாடிச் செல்கின்றனர். கல்விக் கூடங்களில் கவுன்சிலிங் ஏற்பாடுகள் உருவாகி விட்டால், பள்ளிப் பருவத்திலேயே சில விழிப்புணர்வுகள் உருவாகும். தொழிற்சங்கம் அல்லது இதர பகுதி மக்களை ஒருங்கினைத்து வைத்துள்ள அமைப்புகள், தேவைக்கு ஏற்ற கவுன்சிலிங் பணிகளை மேற்கொள்ளும் போது, கேள்வி கேட்கிற, இன்றுள்ள எதிர்ப்பு அரசியலை புரிந்து கொள்ளும் மனபக்குவத்தைத் தொழிலாளி வர்க்கம் பெறமுடியும்.
இவற்றை இன்றைய ஆட்சியாளர்கள் செயல் படுத்துவது குறித்து ஆலோசிப்பதும், சமூக இயக்கங்கள் இந்த தேவையை வலியுறுத்துவதும், மக்களை ஒட்டு மொத்த நெரிசலில் இருந்தும், நெருக்கடியில் இருந்து விடுவித்துக் கொள்வது குறித்த சிந்தனையைத் தூண்டிவிட பங்களிப்பு செய்ய முடியும்.
Courtesy Marxist Tamil march 2011