மக்களுக்கான ஜனநாயகத்தை உறுதி செய்வோம்.
உள்ளாட்சி தேர்தல் களம் சூடாகியுள்ளது.
கட்சி அணிகள் மட்டுமல்லாது, மக்களில் ஒரு பகுதியினரும் உற்சாகமாகியுள்ளனர். சமீபத்தில்
ஊராட்சித் தலைவர் பொறுப்பை ஏலத்திற்கு விட்ட காரணத்தினால் மதுரை மாவட்டத்தில், 6 நபர்கள்
கைது செய்யப் பட்டுள்ளனர். ஜனநாயகத்தை விற்கலாமா? என்ற கேள்விக்கு, ஊர் நலனுக்கு தான்
இந்த பணம் செலவிடப் படும், என பதிலளிக்கின்றனர். ஊர் நலன் என்ற வார்த்தை கேள்விக்கு
உள்ளாவது மட்டுமல்ல. ஒரு கிராம ஊராட்சியின் செயல்பாடு ஒருநபர் சார்ந்ததா? என்ற கேள்வியும்
எழுகிறது. ஊர் நலனுக்காக ஒரு நபர் பணம் தந்து, பின் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் படுகிறார்
என்றால், அதிகாரத்தை, நிர்வாகத்தைப் பரவலாக்குவது, மக்கள் பங்கேற்போடு செய்வது, என்ற
ஜனநாயக அணுகு முறை என்ற இந்திய அரசியல் சட்டத்திற்கும், பஞ்சாயத் ராஜ் மற்றும் நகர்பாலிகா
சட்டங்களுக்கும் வேலை என்ன?
இப்படியான அறியாமை மக்களிடமும்,
அதிகார மோகம் கிராமத்தின், சில பெரியவர்களிடமும், தொடர்கிறது. தமிழ்நாட்டில் கிராம
பஞ்சாயத்து சட்டம் 1958 ல், உருவாக்கி, பின் 1994 திருத்தம் செய்யப் பட்டது. அதேபோல்
மத்திய பஞ்சாயத்து ராஜ் சட்டம் இயற்றி, அதற்கான அதிகார வரம்புகள் குறித்தெல்லாம், அரசியல்
கட்சிகள், தன்னார்வ குழுக்கள் போன்றவை தீவிர விவாதம் நடத்தியுள்ளது. ஆனாலும் பங்கேற்பு
அரசியல் குறித்த கருத்துக்கள், வாக்காளர்களாகிய பொது மக்களிடம், போதுமான அளவில் சென்றடைய
வில்லை என்பது உண்மையாக இருக்கிறது.
குறிப்பாக ஜனநாயகத்தை ஆழப்படுத்துவதும்,
அகலப்படுத்துவதுமே பஞ்சாயத்துராஜ் சட்டத்தின் நோக்கம் என சொல்லப்பட்டுள்ளது. சட்டமன்ற
நாடாளுமன்றப் பங்கெடுப்புகள் மூலம் இந்தியாவில் 4700 மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்
படுகிறார்கள் என்றால், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சுமார் 30 லட்சம் மக்கள் பிரதிநிதிகள்
தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். தமிழகத்தில் சுமார் 1,31000 பிரதிநிதிகள் தேர்வு செய்யப்
பட உள்ளனர். இந்த ஏற்பாடு, மக்களுக்கு அருகாமையில் மக்கள் பிரதிநிதிகளை வைத்து, மக்களின்
அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காணச் செய்தல் என்ற ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டது
ஆகும். இதில் அரசியல் கட்சிகளுக்குப் பிரதானப் பங்கு உள்ளது.
மேற்கு வங்கம், கேரளா போன்ற சில
மாநிலங்களில் தான், அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி சின்னத்தில், ஊராட்சிப் பொறுப்பிற்கும்
போட்டியிடுகின்றன. தமிழ்நாட்டில், 12524 என்ற மிக அதிகமான எண்ணிக்கையில் உள்ள ஊராட்சிகளில்
அரசியல் கட்சிகள் நேரடியாகப் போட்டியிடாததற்கு, எவ்வளவு காரணங்கள் கூறப்பட்டாலும், ஏற்புடையதாக தெரியவில்லை.
கட்சி மாட்சிமைகள் கடந்து பணியாற்றியதில்
எந்தெந்த கிராம ஊராட்சிகள் முன்னேறியுள்ளது, என்ற விவரத்தை, யாராவது ஆய்வு செய்ய முன்
வந்தால் வரவேற்கலாம். உண்மை நிலை வேறாக இருப்பதை அறிய முடியும். ஒன்று, இது போன்ற பொது
வேட்பாளர் அல்லது அரசியல் கட்சிகளின் நேரடி பங்கேற்பு இல்லாமை, ஆகியவையின் விளைவு,
கிராம ஊராட்சி நிர்வாகத்திற்கும் அரசியல் கட்சிகளுக்குமான நேரடித் தொடர்பு துண்டிக்கப்
படுகிறது. இதன் காரணமாக சம்மந்தப் பட்ட நபரின் அடையாளம், பெரும்பாலும் சாதி அல்லது
சமூக, பொருளாதார அதிகாரம் என்ற திரைக்குள் மறைந்து விடுகிறது.
இரண்டு இது போன்ற தனிநபர்கள் தான்
சார்ந்த அரசியல் கட்சி அதிகாரத்தை மறைமுகமாக பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக, ஏலத்தில்
தேர்வு பெற்ற பின், ஆளும் கட்சியுடன் தனது செல்வாக்கை விரிவு செய்து, தான் செய்யும்
தவறுகளை மறைக்கப் பயன் படுத்திக் கொள்கின்றனர். என்பதை கிராம மக்கள் பார்க்கத் தவறுகின்றனர்.
மூன்று இட ஒதுக்கீட்டு முறையிலான
வாய்ப்பைப் பயன் படுத்துவதில் உள்ள குறைபாடுகள் சார்ந்தது. 2006ல் ஒருவழியாக 10 ஆண்டுகளாக
தேர்தல் நடத்தப் படாத கிராம ஊராட்சிகளில் தேர்தல் நடத்தப் பட்டது. அனால் 2006 தேர்தலுக்குப்
பின், நக்கலமுத்தன் பட்டி, மருதன் கிணறு, ஆகிய கிராம ஊராட்சித் தலைவர்கள், படுகொலை
செய்யப் பட்டார்கள். தாழையூத்து கிராம ஊராட்சித் தலைவர், பெண் என்ற போதும் இரக்கமில்லாமல்
கொடிய முறையில் தாக்கப் பட்டார். இத் தாக்குதல்களுக்குக் காரணம், மேலாதிக்கம் செலுத்தி
வந்தவர்கள், குறைவான மக்கள் தொகை கொண்ட தலித் பிரிவினரில் இருந்து, ஒருவரை வேட்பாளராக்கி,
வெற்றி பெறச் செய்த பின் தங்கள் கட்டுப் பாட்டுக்குள் வரவில்லை என்ற காரணத்தால் திட்டமிட்டு
நடத்தப் பட்டது.
இது போன்ற நிகழ்வுகள், கடந்த காலத்தைப்
போல் தீவிர விவாதமாக முன்னெழ வில்லை. மேலே குறிப்பிட்ட விவரங்களை, சென்னைப் பல்கலைக்
கழக மானுடவியல் ஆய்வு மாணவர் பகத் சிங் தனது ஆய்வில் தெரிவித்ததுடன், பிரச்சனைகளுக்கான மூலத்தையும்
தெரியப் படுத்தியுள்ளார்.
ஒருவேளை அரசியல் கட்சிகளின் சின்னங்களில்
வேட்பாளர்கள் போட்டியிடுவதற்காக, முன்மொழியப் பட்டிருந்தால், படுகொலைகள் அரசியல் தளத்திற்கு
வந்திருக்கும். குறைந்த பட்ச பாதுகாப்பிற்கான வழி பிறந்திருக்கும். சாதிய ஒடுக்கு முறை
அரசியலுக்கு, பிரதான அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் துணை போவது குறைவதற்கு வாய்ப்புகள்
இருந்திருக்கும். எனவே தமிழகத்தில் கிராம ஊராட்சிகளிலும் அரசியல் கட்சிகளின் சின்னங்களில்
போட்டியிடுவதற்கான முன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் இடதுசாரிகள் தவிர, இடஒதுக்கீடு
போராட்டத்தில் தீவிரம் காட்டிய திராவிட கட்சிகள் இப்பிரச்சனையில் அக்கறை செலுத்தவில்லை. பஞ்சாயத்து
ராஜ் சட்டத்தின் அடிப்படைகளில் ஒன்று, சமூகநீதி என்பதை, தமிழக அரசியல் கட்சிகள் மறந்து
விடமுடியாது.
நான்காவது வளர்ச்சி சார்ந்தது.
இன்று ஏலம் அல்லது பொது வேட்பாளர் மூலம் தேர்ந்தெடுக்கப் படுபவர், கிராம வளர்ச்சிக்கு
முன்னுரிமை கொடுப்பார், என்ற கருத்து அனுபவ அடிப்படையில் பலன் தந்ததாக காணமுடியவில்லை.
எங்கெல்லாம் மக்கள் பங்கேற்புடன் திட்டங்கள் தீட்டப்பட்டனவோ, அங்கு கூடுதல் வளர்ச்சியை
எட்ட முடிந்திருக்கிறது. எனவே மக்கள் பங்கேற்கும் திட்டங்களுக்கு முன்னுரிமை தரவேண்டும்
என்பது சட்டம் வலியுறுத்தும் கருத்து. அதன் காரணமாகத் தான் கிராம சபைக் கூட்டங்கள்
நடத்தப் பட வேண்டும் என்ற கொள்கை உருவானது. ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர்
அலுவலகங்களுடன் தொடர்பு கொண்ட இந்த கிராம சபை நடவடிக்கைகள் குறித்து மாநில அரசு வெள்ளை
அறிக்கை சமர்பிக்க வேண்டும். அப்போது தான் மக்கள் தங்கள் உரிமைகளை முழுதாக உணர முடியும்.
இடஒதுக்கீடு உரிமையைப் பெற போராட்டங்கள்
நடந்தது போல், கிராம சபைக் கூட்டங்ளை உறுதி செய்யவும் போராட்டங்கள் தேவைப்படுகிறது.
கிராம வளர்ச்சிக்கான திட்டங்களை ஊராட்சி மன்றக் கூட்டங்களில் மட்டுமல்லாது, கிராமசபைக்
கூட்டங்களிலும் ஆலோசனை பெற்று அமல் படுத்த வேண்டும் என வழிகாட்டப் பட்டுள்ளது. அரசியல்
கட்சிகளின் பங்கேற்பு கிராம ஊராட்சிகளில் இருந்தால், எந்தெந்த அரசியல் கட்சிகளின் பொறுப்பில்
உள்ள தலைவர்கள் இத்தகைய கிராம சபைக் கூட்டத்தை நடத்த வில்லை, என்பதை பகிரங்கப் படுத்துவதன்
மூலம், நிர்பந்தம் தரமுடியும்.
கிராம வளர்ச்சி குறித்து பேசுகிற
போது, மகளிர் சுய உதவிக்குழுக்களை உருவாக்கியதை மட்டுமே பெரிதாகக் குறிப்பிட முடியும்.
அதுவும் ஆளும் கட்சி அரசியல் மாநாடுகளுக்கு, அரசு விழாக்களுக்கு ஆள் திரட்டும் ஏற்பாடாகத்
தான் பெரும்பாலும் அமைந்து விட்டது. மனித வளம், இயற்கை வளம் ஆகியவற்றைப் பயன்படுத்தியும்,
மத்திய, மாநில அரசுகள் தருகிற நிதியைப் பயன்படுத்தியும், வேலைவாய்ப்புகளை கிராமப் புறங்களில்
உருவாக்க வேண்டும், என வலியுறுத்தப் பட்டுள்ளது. அந்த வகையில் கிராம ஊராட்சிகளின் செயல்
பாடுகள் அமையவில்லை. உதாரணம் தமிழ்நாடு நகர்மய மாதலில் முதல் இடத்தில் உள்ளது, என்பதாகும்.
தமிழ் நாட்டில் 1901 ம் ஆண்டு
முதலே படிப்படியாக நகர்மயமாதல் இடம் பெற்று வந்தாலும், கடந்த 20 ஆண்டுகளில் பாய்ச்சல்
காட்டி வளர்ந்துள்ளது. 2001 ம் கணக்கெடுப்புப்படி, கிராம மக்கள் தொகை அளவு 55.96% என்ற
நிலையில் இருந்து, 2011 ல் 51.55% மாகக் குறைந்து விட்டது. இந்த எண்ணிக்கையில் கிராமங்களில்
பெயர் மட்டும் பதிவு செய்து கொண்டு, நகரங்களில் வசிப்போரை நாம் சேர்க்கவில்லை. தருமபுரி,
கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், நாகை, திருவாரூர்,
புதுக்கோட்டை ஆகிய 10 மாவட்டங்கள் மட்டுமே, நகர்மயமாதல் சதவீதத்தில், 25 க்கும் கீழே
உள்ளன. மற்ற 19 மாவட்டங்கள் நகர்மயமாதலில் தீவிர வளர்ச்சி பெற்று வருகின்றன.
இதன் விளைவு, பெரிய அளவில் நகர
சேவைகள் பாதிக்கப் பட்டுள்ளன. குடிநீர் விநியோகம், திடக்கழிவு மேலாண்மை, பாதள சாக்கடைத்
திட்டம் போன்றவை பின்னடைவைச் சந்தித்து உள்ளதாகக் கூறுகின்றனர். நகர்மயமாதலுக்கு அடிப்படை
இடப்பெயர்வு, வேலை வாய்ப்பும், அடிப்படை வசதிகளும் கிராமங்களில் உறுதி செய்யப் பட்டால்,
இத்தகைய இடப் பெயர்வு கட்டுக்குள் வரும். பஞ்சாயத்து ராஜ் சட்டத்திற்கு முந்தைய
1946ம் ஆண்டு சென்னை மாகாண ஆட்சிக்காலத்திலேயே, ஃபிர்க்கா வளர்ச்சி மேம்பாட்டுத் துறை
உருவாக்கப் பட்டது. கிராமங்களில் வளர்ச்சி மேம்பாட்டை உருவாக்குது இதன் முக்கியப்பணி.
திட்டங்களை உருவாக்கினாலும், செயல் படுத்தினாலும் அதில் இப் ஃபிர்க்கா வளர்ச்சித் துறை
மக்களை ஈடுபடுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. இப்ஃபிர்க்காக்களுக்கு அதிகாரிகள்
பொருப்பாக்கப் பட்டுள்ளனர்.
அதிகாரிகள் பொருப்பாக இருந்த போதும்
சரி, கிராம பஞ்சாயத்திற்கு மக்கள் பிரதிநிதிகள் பொருப்பாக இருந்த போதும் சரி, விதிவிலக்காக
உள்ள சில பஞ்சாயத்துகள் தவிர மற்றவை வளர்ச்சி பெற்றதற்கான ஆதரங்களை காணமுடியவில்லை.
காரணம் மக்களை ஈடுபடுத்த வேண்டும் என்ற சிந்தனையும், அமலாக்கமும் இல்லாதது ஆகும். தேர்தல் ஜனநாயகத் திருவிழா, பணநாயகத் திருவிழாவாக
மாற அனுமதிக்கக் கூடாது.