அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 14 மே, 2011

இன்னும் முடியாத முடியாட்சி !!

திருமணம் பெரும்பான்மையோரின் வாழ்வில் வந்து செல்லும் மிகவும் இனிமையான நிகழ்வு. சாதாரண குடிமகனுக்கு அது ஒரு நிகழ்வு மட்டுமே. பிரமுகர் குடும்பத்திற்கோ தனது செல்வாக்கை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு. எனவே, பிரமாண்ட ஏற்பாடுகள் கூடுதலாகவும், பிரமுகர் மட்டுமே கலந்து கொள்ள முடியும், என்ற நிலையும் இருக்கும். அதுவும் உலகின் சொற்ப எண்ணிக்கையிலான பிரமுகர்களுக்கு தான் அழைப்பு என்றால் கேட்கவும் வேண்டுமா? அப்படி ஒரு திருமணமாக வில்லியம் மற்றும் கேத் மிடில்டன் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இளவரசர் வில்லியமின் திருமணத்தைக் கண்டுகளிக்க பல லட்சம் மக்கள் குவிந்தனர் என்பது உலகம் முழுவதும் பிரதான செய்தி. குளிரையும் பொருட்படுத்தாது, வெஸ்ட் மினிஸ்டர் அபே தேவாலயம் முன் மக்கள் காத்துக் கிடந்தனர். இவை உலகின் பெரும் ஊடகங்கள் என அழைக்கப் படும் பி.பி.சி உள்ளிட்ட நிறுவனங்களால் ஒளி மற்றும் ஒலி பரப்பப் பட்டவை. பி.பி.சி எடுத்த வீடியோ காட்சிகள் மூன்று மணி நேரத்திற்கு தொகுக்கப் பட்டு, சந்தை வர்த்தகத்தில், இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் சுடச்சுட ஓடிக்கொண்டிருக்கிறதாம். 15 முதல் 25 பவுண்டுகள் ( 1305 ரூ முதல் 2175 ரூ வரை ) விலை தீர்மாணிக்கப் பட்டு இருப்பதையும், இதன் மூலம் கிடக்கும் தொகை, வில்லியம் மற்றும் அவர் சகோதரர் ஹாரி பெயரில் அமைந்துள்ள ஃபவுண்டேசனுக்கு போய்ச் சேரும் என்றும் ஊடகங்கள் செய்திகளாகச் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? நீண்ட இடைவெளிக்குப் பின் மகாராணியின் குடும்பத்தில் நடைபெறும் திருமணம் என்பதனாலா? மன்னர் வீட்டு வைபவம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற காரணமா? போன்ற கேள்விகள் முன்னெழுந்துள்ளன. இக் கேள்விகள் நியாயமானவையே. ஏனென்றால், வில்லியம் அல்லது கேத் மிடில்டன் ஆகியோர், இதுவரை தனிப்பட்ட முறையில் எந்த ஒரு சாதனையையும் நிகழ்த்தியதாக அறிய முடியவில்லை. எனவே அவர்களின் திருமணம் உலக செய்தியானது, அவர்களின் குடும்ப பின்னனி காரணமாகத் தான் என்ற முடிவுக்கு எளிதில் வரமுடியும். பொதுவாக ஒரு குடும்பத்தின் செல்வாக்கு இரண்டு வகைகளில் இருக்கலாம். ஒன்று பெற்றோர் அல்லது அவர்களுக்கும் முன்னோடிகள், அந்த தேசத்திற்காக ஏதாவது பெரும் தியாகத்தை செய்திருக்க வேண்டும். இரண்டு, அவர் தம் பெற்றோரின் அதிகாரம் கோலோச்சுவதாக இருக்க வேண்டும். இங்கு நாம் விவாதிக்கும் வில்லியமின் திருமணத்திற்கான படாடோபங்கள், இரண்டாவது வகைப்பட்டது. முன்னோர்களின் பெருமை, இன்றைய தலைமுறைக்கு முக்கியத்துவம் அளிக்குமானால், முன்னோர்கள் செய்திட்ட தீயவைகளைச் சுட்டிக்காட்டி, அக்குடும்பத்தின் இன்றைய நிகழ்வுகளை விமர்சிப்பதற்கும் இடமிருக்கிறது, என்ற தர்க்கத்தின் அடிப்படையிலேயே, மேற்படித் திருமணத்தின் மீது சில கேள்விகளை முன் வைக்கிறோம்.

முதலில், பெரும் தியாகத்தை ராணி எலிசபெத் குடும்பம் செய்திருக்க வாய்ப்பு இருந்திருக்காது. அவர்களின் ஆட்சி நிலைத்து இருக்க வேண்டும் என்பதற்காக படை வீரர்களும், மக்களும் தியாகம் செய்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதை, நிச்சயம் புரிந்து கொள்ள முடியும். ஏனென்றால் கி.பி 400ம் ஆண்டு முதல் 1900ன் துவக்கம் வரை 1500 ஆண்டுகள், எலிசபெத் அம்மையாரின் குடும்பத்தினர் தான், இங்கிலாந்து தேசத்தின் ஆட்சிப் பொறுப்பை முழுமையாக கவணித்து வந்துள்ளனர். மன்னராட்சி நிலை நிறுத்தப் பட, மக்கள் தான் அர்ப்பணிப்பு செய்திருக்கிறார்களே ஒழிய, மன்னர்களின் வாரிசுகளோ உடமைகளோ, எந்த இடத்திலும் பறிபோனதாக அறிய முடியவில்லை. இரண்டாவதாக விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டியது, இன்றைக்கும், பக்கிங்காம் அரண்மனையின் அதிகாரம் கோலோச்சுவதை பல்வேறு இடங்களில், இங்கிலாந்து அரசு நடவடிக்கைகளின் மூலமாக, நேரடியாகப் பார்க்க முடியும். உதாரணத்திற்கு, பக்கிங்காம் அரண்மனைக்கு என தனிக் கொடி இன்றும் பறந்து கொண்டிருக்கிறது. இந்த கொடிக்கு கீழ் தான் பிரிட்டிஷ் குடியாட்சியின் ஜாக் கொடி பறந்து கொண்டிருக்கிறது. இதன் பொருள், அரண்மனைக்கு கீழ் தான், குடியாட்சி இருந்து கொண்டிருக்கிறது, என்ற அதிகார வெளிப்பாட்டின் வடிவம் என்பதாகும்.

மூன்றாவதாக, காமன் வெல்த் நாடுகள் என்ற அமைப்பை உருவாக்கி, அதற்கு தலைவராக, பிரிட்டிஷ் மன்னர்களின் வாரிசு இருந்து வருகிறார். 53 நாடுகள் இந்த அமைப்பில் உறுப்பினராக இருக்கின்றது. காமன் வெல்த் அமைப்பிற்குத் தனிப்பட்ட அதிகாரம் இல்லை என்றாலும், இந்த அமைப்பின் செயல்பாடு, தங்கள் நாடு மீது, பக்கிங்காம் அரண்மனையை சார்ந்த வாரிசுகளின் ஒடுக்கு முறையை, சுரண்டலை, வளங்களை வாரிச் சென்றதை, இன்றைய தலைமுறையிடம் மறைக்கச் செய்வதற்கானதாக உள்ளது. இந்தியாவில் இருந்து, தனது வர்த்தக நோக்கத்திற்காக, பருத்தி, அவுரி உள்ளிட்ட பணப் பயிர்களை விளைவித்து, அதை இங்கிலாந்து கொண்டு சென்றனர். உதாரணத்திற்கு, 1859 ல், 50 ஆயிரம் பேல்கள் இந்தியாவில் இருந்து இங்கிலாந்திற்கு அனுப்பப் பட்டது. கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகத்தில் இருந்த இந்தியாவை, விக்டோரியா மகாராணி தனது நேரடி நேரடி நிர்வாகத்திற்கு மாற்றிக் கொண்ட காலம் அது. அதிலிருந்து 5 ஆண்டுகளில், அதாவது 1864ல் 14 லட்சம் பேல்களாக உயர்ந்தது. விளைவு, உணவு உற்பத்தியில் சரிவும், பணப் பயிர் விளைச்சல் அதிகரிக்கவும் செய்தது. அதன் மூலம் இந்தியாவில் மிகக் கொடிய உணவுப் பஞ்சம் உருவானதை மறந்து விட முடியுமா?

இக்காலத்தில் பல கோடி இந்தியர்கள் மாண்டு போனதை, எழுத்தாளர்கள் நிறையவே பதிவு செய்துள்ளனர். முதலில் மக்கள் பிச்சை எடுத்தார்கள், யார் பிச்சை போடுவது? வண்டியை விற்றார்கள், மாட்டை விற்றார்கள், நிலத்தையும் விற்றார்கள், தங்கள் பெண்குழந்தைகளை விற்றார்கள், தொடர்ந்து குழந்தைகளையும், மனைவிகளையும் வாங்குவதற்கு யாரும் இல்லை. மரங்களுக்கு மேலேயும், அடியிலும் வாழ்ந்தார்கள். நாய்களையும், பூனைகளையும், எலிகளையும் சாப்பிட்டார்கள். பலர் எங்கோ மறைந்து போனார்கள். எஞ்சியவர்கள், பசியாலும், நோயாலும், லட்சக் கணக்கில் மாண்டு போனார்கள். இப்படி பங்கிம் சந்திர சட்டோபாத்தியாவின் ஆனந்த மடம் நாவல் சித்தரிக்கிறது. இந்தியாவில் மட்டும் இது போன்ற அபகரிப்புகள் நிகழந்துள்ளது என்றால், 53 நாடுகளை, அடிமைப் படுத்தி வைத்திருந்த பிரிட்டிஷ் ரானியின் குடும்ப செல்வ வள உயர்வுக்கு, வேறென்ன வேண்டும்.

17 ம் நூற்றாண்டில், வெனிஸ் நகரவாசி, மனெளச்சி என்பவர், இந்தியாவின் செல்வ வளத்தை, பல நாடுகளுடன் ஒப்பிட்டு சொல்லியிருக்கிறார். பஞ்சாடை, சில்க், சக்கரை, அவுரி, ஆகியவை எகிப்தை விட உயர்ந்தது என்பதை இன்றைய இந்தியா புத்தகத்தில், ரஜினி பாமிதத் பதிவு செய்திருக்கிறார். இதிலிருந்து இரண்டு விவரங்கள் தெளிவாகிறது. ஒன்று, இந்தியாவில் கிடைத்த விலைமதிப்பு மிக்க, செல்வங்களை மட்டுமல்ல, விளைபொருள்களையும் எடுத்துச் சென்றுள்ளனர். இரண்டு, இந்தியாவில் மட்டுமல்ல, எகிப்து போன்ற நாடுகளிலும் இத்தகைய வளங்களை எடுத்துச் சென்றுள்ளனர், என்பதாகும். இத்தகைய வரலாற்றுப் பின்னனியில் இருந்தே, வில்லியம் மற்றும் கேத் மிடில்டன் திருமண நிகழ்வு மற்றும் ஒளிபரப்புகளை கவணிக்க வேண்டியுள்ளது.

நான்காவதாக, ஐரோப்பா கண்டத்தில் தொழிற் புரட்சி நடைபெற்று, முதலாளித்துவ ஜனநாயகம் தலையெடுத்த நாடுகளில் பிரதானமானது, பிரிட்டிஷ் அரசு, என கற்பிக்கப் பட்டு இருக்கிறோம். சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னரே நிலப்பிரபுத்துவ முறையை கைவிட்டு, முதலாளித்துவ முறையை நோக்கி சென்ற ஒரு நாட்டில், திறனில்லாத விவசாயிகளை விடவும், தொழில் திறன் கொண்ட தொழிலாளர்கள் நீண்ட காலத்திற்கு முன்பே உருவாக்கப் பட்டுள்ளனர். இதற்கான கல்வி போதனைகளும் துவங்கப் பட்டுள்ளன. அத்தகைய ஒரு சமூகத்தில், அரச குடும்ப திருமணத்தை காண பல லட்சம் மக்கள், அழைக்கப் படாமலேயே காத்திருந்தனர், என்ற செய்தி அதிர்ச்சி அளிக்காமல் எப்படி இருக்க முடியும். அத் திருமணத்தை வழிபாட்டுக்கு உரிய நிகழ்வுகளைப் போல் முன்னிறுத்துவதை எப்படி ஏற்றுக் கொள்வது. தனி நபர் புகழ் பாடுவதில், இந்தியத் துணைக் கண்டத்தினரை விடவும், இங்கிலாந்து முன்னேறி நிற்கிறது, என்றுதானே பொருள் கொள்ள முடியும். இத்தகைய முன் உதாரணங்களின் தாக்கமாக, இந்தியாவில், வாரிசு அரசியல் தலையெடுப்பதும், அதற்கு நியாயம் கற்பிப்பதும், நிகழ்கிறதோ, என்ற எண்ணம் உருவாவதைத் தவிர்க்க முடியவில்லை.

இந்தியாவின் நாடாளுமன்ற அமைப்பு முறை, நீதிமன்ற செயல் பாடுகள் போன்றவை இன்றைக்கும் பிரிட்டிஷ் நாட்டினைப் பின்பற்றியே வடிவமைக்கப் பட்டுள்ளது. ஆனால் சில மாற்றங்களை இந்தியாவில் செய்ய முடிந்துள்ளது. இந்தியா விடுதலை பெறுகிற போது, 500க்கும் அதிகமான மன்னர்கள் இருந்தனர், எனக் கேள்விப்படுகிறோம். சுதந்திர இந்தியா, மிகத் துணிச்சலுடன், அவர்களின் அதிகாரத்தைப் பறித்து குடியாட்சியை, நிலை நாட்டியது. மறுத்தவர்கள் மண்டியிடும் சூழலையும் அன்றைய ஆட்சியாளர்கள் உருவாக்கினார்கள். 64 ஆண்டுகளுக்கு முன் இருந்த இந்தியாவில் வசித்த மக்கள், இன்று போல் ஜனநாயகக் கருத்துகளின் மீதான எண்ணம் கொண்டோராக இல்லை. இருந்தபோதும் மன்னர்களின் ஆட்சிமுறைக்கு, முடிவு காண அரசு செயல் பட்ட போது, மக்கள் மன்னர்களுக்குப் பின் அணிவகுக்கவில்லை என்பது, முக்க்கியச் செய்தி. பின்னர் மன்னர் மான்யமும் ஒழிக்கப் பட்டது. அன்றைய நிலையில் இது போன்ற நடவடிக்கைகள், ஜனநாயகத்தின் மீதான ஈர்ப்பை மேலும் உறுதியாக்குவதற்குப் பயன்பட்டது.

இந்தியாவில் மேற்கொள்ள முடிந்த நடவடிக்கைகளை, ஏன் இங்கிலாந்தில் மேற்கொள்ள முடியவில்லை. ராணி எலிசபெத்தின் குடும்பம் இந்திய குறு நில மன்னர்களை விடவும், அதிகாரம் கொண்ட பேரரச குடும்பமாக இருந்தது என்பதனால், பிரிட்டிஷ் மக்களாட்சியால், எந்த மாற்றத்தையும் கொண்டு வரமுடியவில்லை. நமது நாட்டை விட முன்னேறிய சமூகம் என சொல்லப் படுகிற, பிரிட்டனில் ஜனநாயக மாண்புகளும் உயர்ந்து இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது தவறில்லை. அது போன்ற நிலை இல்லாமல், ஒருவரின் திருமணத்தை, வினோதமான ஒன்றாக மாற்றும் வலிமையோடு ராணியின் அதிகாரம் இருப்பதை, ஜனநாயக சக்திகள் விவாதிக்காமல் எப்படி இருக்க முடியும். இந்த நிலையில் இங்கிலாந்து மக்கள் இருக்கிறார்கள், என்றால், இங்கிலாந்து மக்களின் விழிப்புணர்வு பின் தங்கி இருக்கிறது, என்று புரிந்து கொள்வதைத் தவிர வழியில்லை.

வில்லியம் தம்பதிகளின் திருமணம், தொலைக்காட்சி சீரியல் போன்ற ஒன்று, என பொது மக்கள் கருதும் வேளையில், இப்படி ஒரு சீரிய விவாதம் தேவையா?, என்று சிலர் கேட்கலாம். மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு, நினைவு படுத்திக் கொண்டே இருப்பது, வரலாற்று ஆசிரியரின் கடமை, என்ற வரலாற்று ஆய்வாளர் எரிக் ஹாப்ஸ்வாமின் வரிகளை நினைவில் நிறுத்தி வாழ்த்துவோம் வில்லியம் தம்பதியினரை.

வெள்ளி, 3 டிசம்பர், 2010

குலத்தொழிலா அரசியல்?

சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சரின் புதல்வர் கொண்டாடிய, பிறந்த தின விழா, தனிப் பட்ட உரிமை சார்ந்தது. ஆனாலும் காங்கிரஸ் கட்சியின் அடிமட்ட ஊழியர்கள் அந்த விழாவிற்காக எடுத்துக் கொண்ட முயற்சி, பொது விவாதத்தை தூண்டுகிறது. இது போல் பலரும் கொண்டாடுகிறார்கள். எனவே வாரிசுகளின் அரசியல் குறித்து பல விதமான கருத்துக்கள் முன் வைக்கப்பட்டும் வருகிறது. மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள இளைஞர்கள் பலரும் ”வாரிசுகள்” என்பதை தவிர, வேறு எந்த சிறப்புத் தகுதியையும் பெற்றிருக்கவில்லை. அரசியலின் பால் இளைஞர்கள் ஈர்க்கப் படாமல், அரசியல் மாற்றங்களோ, நேர்மைக்கான போராட்டத்திற்கோ, உருவம் காணமுடியாது. எனவே சமூகத்தின் எல்லாத் தரப்பு இளைஞர்களும், என்ற வரிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியம் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே அரசியல் குறித்து நடுததர வர்க்கத்தினர் முகம் சுழிக்கின்றனர். சாதாரண குடும்பத்தை சார்ந்தோர், கல்லூரிக் கல்வி, போன்றவை கிடைக்காத காரணத்தால், அரசியலில் இருந்தாலும், பொறுப்புகளுக்கு வர இயலாதவர்களாக உள்ளனர். இந்நிலையில் தமிழகம் மற்றும் நாடு முழுவதும் ஏற்பட்டு வரும் வாரிசு அரசியலின் தாக்கம் காரணமாக, இளம் தலைமுறை விவாதிக்க வேண்டியதன் அவசியம் அதிகரித்து வருகிறது.

ராஜாஜி 1952 ல், தமிழக முதலமைச்சராக இருந்த போது குலக்கல்வித் திட்டத்தினை அறிமுகம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். அவர் எந்த நோக்கத்தில் அறிமுகம் செய்திருந்தாலும், அன்றைய எதிர்க் கட்சிகள் தங்கள் பொறுப்பினை உணர்ந்து, எதிர்ப்புத் தெரிவித்தனர். மனிதன் செய்கிற தொழில்கள் சாதிய பிரிவினையையும், அதன் காரணமாக சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகளையும் உருவாக்கி வைத்தது. குலக்கல்வித் திட்டத்தின் மூலம், சாதிய அடையாளங்களைப் பள்ளிக் குழந்தைகள் பற்றி நிற்குமோ? ஏற்றத்தாழ்வுகளை நியாயப் படுத்தும் உணர்வு, குழந்தைகளிடம் வலுப்பெறுமோ? போன்ற கேள்விகள் காரணமாக, எதிர்க்கட்சிகள் மற்றும் பொது மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். எனவே குலக்கல்வித் திட்டம் கைவிடப்பட்டது.

மன்னரின் வாரிசு மன்னர், மந்திரியின் வாரிசு மந்திரி, படைத் தளபதியின் வாரிசு தளபதி, என்ற நடைமுறை மன்னராட்சி காலத்தில் பின்பற்றப்பட்டது. இன்று நாம் மக்களாட்சி காலத்தில் வாழ்ந்து வருகிறோம். மக்களாட்சியின் மகத்துவம் பலதரப்பட்ட மனிதர்களும் அரசியலில் பொறுப்பிற்கு வர வேண்டும் என்பதாகும். இந்திய சமூகத்தில் ஆதிதிராவிடர்களுக்கும், பழங்குடி மக்களுக்கும் நீண்ட நெடும் காலமாக அரசியல் தலைமை பொறுப்புகளுக்கு வரும் வாய்ப்பு மறுக்கப்பட்டதால், அவர்களின் பங்கேற்கும் உரிமையை, உறுதி செய்யும் விதத்தில், தனி தொகுதிகள் ஒதுக்கீடு செய்யும் முறை, நமது நாட்டில் உருவாக்கப் பட்டது. இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில், மகாத்மா காந்திக்கும், டாக்டர். அம்பேத்காருக்குமான விவாதங்களில், மிக முக்கியமானது இரட்டை வாக்குரிமை குறித்தது. இப்போது பெண்களும் அதிக எண்ணிக்கையில் பங்கேற்றிடும் நிலையை உருவாக்க, மகளிர் இடஒதுக்கீடு குறித்த விவாதம், பொதுத் தளத்தில் தீவிரமடைந்துள்ளது. மேற்படி இரண்டும் அனைவருக்கும் சமமான வாய்ப்பு என்ற ஜனநாயகத் தேவையில் இருந்து முன்வைக்கப் படுகிறது.

பொதுவாழ்வில் ஆட்சி செய்யும் உரிமையைப் பெறுதலும், ஆட்சி உரிமை பெற்று கட்மைகளைச் செலுத்துதலும் உள்ளடங்கிய செயல் பாடுகளே அரசியல் என வரையறை செய்யப் படுகிறது (the activities involved in getting and using power in public life is politics). இதில் அனைவருக்கும் வாய்ப்புக் கிடைக்க வேண்டும் என்ற முறையில் ஜனநாயகம், குடியரசு ஆகிய சொற்கள் பலம் பெற்றுள்ளன. அது மட்டுமல்ல, முந்தைய மன்னராட்சி இன்றைய மக்களாட்சியை விட பின்தங்கியது என விமர்சிக்கிறோம். காரணம் அன்று வாய்ப்பு சமமானதாக இல்லை என்பதாகும். இனக் குழுக்கள் என்ற நிலையில் மனிதர்கள் வாழ்ந்த காலத்தில், அதிகாரம் குழுத் தலைவனிடத்தில் மட்டும் இருந்ததில்லை. ஒரு கூட்டு குழுவினர் அதிகாரம் பொருந்தியதாக இருந்தனர், என்ற விவரத்தை மானுடவியலாளர்கள் ஆய்வு மூலம் வெளிப்படுத்தியுள்ளனர். இன்றைக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையின் பகுதியாக இருக்கும் ஆனைமலையில் வசிக்கும் மலைமலசர், என்ற பழங்குடி மக்களின் குடியிருப்பை, ஒரு உதாரணமாக கொள்ளலாம். 30 குடும்பங்கள் வசிக்கும் அந்த குடியிருப்பை 5 பேர் கொண்ட குழு, நிர்வகிக்கிறது. ஒரே இனமாக இருந்தாலும், அவர்களுக்குள் உள்ள சந்ததி (lineage) அடிப்படையில், 5 பேர் கொண்ட குழு ஆரம்பத்தில் உருவாக்கப் பட்டது. இன்றும் அதே நடைமுறையை பின்பற்றுகின்றனர். அவர்களுக்கு, ஊர் பெரியவர்கள் என்ற மரியாதையைத் தவிர, தனியாக பிரத்யேக சலுகைகள் எதுவும் இல்லை. அரசியல் இயக்கங்கள் இப்பழங்குடி மக்களை அணுக இயலாத அல்லது இவர்களின் எண்ணிக்கை வாக்கு வங்கி கணக்கிற்கு உதவாது என்ற நிலையில், இம்மக்கள் தங்களின் பாரம்பரிய நிர்வாகத்தை இன்றளவும் பற்றி நிற்கிறார்கள். அதன் மூலம் தான் வனத்துறை உள்ளிட்ட அதிகாரிகளை எதிர்கொள்கின்றனர். இப் பழங்குடியினரின், இனக்குழு தலைமை, மன்னராட்சியை விட மேம்பட்ட அனுகுமுறையைக் கொண்டதாக தெரிகிறது. மன்னராட்சி முறையை, நமது நாட்டின் விடுதலைப் போராட்டத்துடன் இனைந்து எதிர்த்த காரணத்தால், விடுதலை இந்தியாவில், மன்னராட்சி ஒழிக்கப்பட்டது. பின்னர் மன்னர்களாக இருந்தவர்களுக்கு வழங்கப்பட்ட மான்யமும் ஒழிக்கப் பட்டது. இதை ஜனநாயகத்தின் வளர்ச்சி என்றே கருத வேண்டும்.

நாடு விடுதலை பெற்று 63 ஆண்டுகள் நிறைவுற்ற இன்றைய சூழலில், சிலர் அதே சந்ததி முறையை பின்பற்றினால், மக்கள், அரசியல் பங்கேற்பில் இருந்து தங்களை விலக்கிக் கொள்வதற்கு தூண்டப்படுகிறார்கள், என பொருள் கொள்ளப்படும். வாரிசு முறையில் அதிகாரம் செலுத்திய, மன்னராட்சி காலத்திலும் கூட, மன்னன் நிறை வேற்ற வேண்டிய கடமைகள் பல வரையறுக்கப் பட்டதாக கூறுகின்றனர். அத்தகைய வரையறைகளை, பற்றி ஒழுகாத மன்னன் மதிக்கப் பட்டதும் இல்லை, என்பதையும் சில வரலாற்றுத் தகவல்கள் மூலம் அறிகிறோம். வெ. சாமிநாத சர்மா இது குறித்து புராதான இந்தியாவில் அரசியல் எனும் புத்தகத்தை எழுதியுள்ளார். “நமது முன்னோர் வகுத்து வைத்துப் போயிருக்கிற, வாழ்க்கைத் திட்டத்தில், அரண்மனைகளாகட்டும், குடிசைகளாகட்டும், எவராக இருந்தாலும், அவர் பின்பற்ற வேண்டியவை என்பதில், கடமை தான் நுழை வாயிலாக இருந்திருக்கிறது”, எனக் கூறுகிறார்.

”அரசனுடைய காப்பாற்றும் கடமையானது திருடர், கயவர் ஆகியோரிடமிருந்து, மக்களை காப்பாற்றுகிற போலீஸ் வேலையைச் செய்து வருவது மட்டும் அல்ல. பசி, பிணி, அறியாமை, அநீதி, ஆகியவை இல்லாது மக்களைக் காக்க வேண்டும்”. மக்களுடைய புறவாழ்க்கைக்கு மட்டுமல்ல, அகவாழ்க்கைக்கும் அரசன் பொறுப்பாளி. அகவாழ்க்கையை பண்படுத்தவும், தூய நிலையில் வைத்திருக்க வேண்டியதும் அரசனின் கடமை”, என வரையறை செய்திருந்ததாக சாமிநாத சர்மா கூறுகிறார். மன்னர்கள் நிச்சயம் மேற்படி அனைத்தையும், பின்பற்றி இருப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. ஒருவேளை பின்பற்றி இருந்தால், மன்னராட்சியை ஒழிக்கும் போது, பெரும் கழகத்தை, மக்கள் உருவாக்கி இருப்பார்கள்.

மன்னருக்கான வரையறை, இளவரசர்களுக்கும் பொருந்தும் என்றும், இளம் வயதிலேயே பயிற்சி பெறும் விதத்தில் அன்றைக்கு ஏற்பாடுகள் இருந்ததையும் படித்து அறிய முடிகிறது. ஆனாலும் இன்று நாம் வாழ்ந்து வரும் ஜனநாயக அமைப்பை விட, பின் தங்கிய நிர்வாக முறை என்ற கருத்து தான், மன்னராட்சி குறித்து நாம் அறிந்திருப்பது. இத்தகைய மன்னராட்சி முறையில் இருந்த உரிமைகளை விடவும், கூடுதல், உரிமைகளுடன், பங்கேற்புடன் அரசினை உருவாக்குகிற போது தான், மக்களாட்சி முறை வளர்ச்சி அடைந்த சமூகமாக மாறும். ஆனால் இன்றைய அரசியலில், அக்காலத்திய வாரிசு அரசியல் மேலோங்கி வருவதைப் பார்க்கிற போது, நம் சமூகம் பின்னோக்கி பயணிக்கிறதா? எனும் கேள்வி, தவிர்க்க முடியாததாக இருக்கிறது.

வாரிசுகளாக அறியப்படுபவர்கள் அரசியல் தளத்திற்கு வருகிற போதே, பிறந்த நாள் சுவரொட்டிகளுடனும், பிரமாண்டமான கட் அவுட்களுடனும் தான் பிரவேசிக்கிறார்கள். அல்லது அரசியலில் அமைச்சராக, நாடாளுமன்ற, சட்டமன்ற பொறுப்புகளில் இருந்து மறைந்த காரணத்தால், நடத்தப் படும் இடைத் தேர்தலின் போது, வேட்பாளராக அரசியல் பிரவேசம் அரங்கேற்றப் படுகிறது. அநேகமாக இடது சாரி அரசியல் இயக்கங்களைத் தவிர, பெரும்பான்மையான அரசியல் கட்சிகளில், வாரிசு அரசியல் பின்பற்றப் பட்டு வருகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும் அரங்கேறிவரும், குடும்ப அரசியல் திடீரென்று அதிகரித்துள்ளது. அதுவும் 1990க்குப் பின் தீவிர வேகம் பெற்று இருக்கிறது. குறிப்பாக சமூக நீதிக்காகவும், ஒடுக்குமுறைக்கு எதிராகவும் போராட்டங்களில் ஈடுபட்ட மாநில அரசியல் கட்சிகளிலும், மத்திய அமைச்சராக இருந்து வரும், முதல் தலைமுறை அரசியல் வாதிகளின் குடும்பங்களில் இருந்தும் வாரிசு அரசியல் தீவிரமாகவும் வெளிப்படுகிறது.

அரசியலில் பெரும் பொறுப்புகளில் இருப்போரின் செல்வமதிப்பு உயர்ந்து வருவதற்கும், அரசியல் வாரிசு கொள்கையின் வளர்ச்சிக்கும் நெருக்கம் இருக்கிறது. அதன் காரணமாகவே, 1990களுக்குப் பின், வாரிசுகளின் அணிவகுப்பு அரசியலில் அதிகரிக்கிறது. அரசியலுக்கு வருவதற்கு முன்னும், வந்த பின்னும் சேர்த்திருக்கும் சொத்து மதிப்புகள் குறித்து பகிரங்க விவாதங்கள் நடைபெறாமல், அரசியல் ஜனநாயகத்தை பாதுகாக்க முடியாது. உறவினரின் நிழலும், செல்வாக்கும் தான் அரசியல் வாழ்க்கைக்கு மூலதனம் என்றால், அந்த பொது வாழ்க்கையின் நோக்கம், பொதுச் சொத்துக்களைப் பாதுகாக்கும் உன்னத உணர்வின் வெளிப்பாடாக இருக்காது. அத்தகைய நபரிடம் கட்சி தொண்டர்கள் அல்லது சில தொழில் பிரமுகர்கள் சலுகைகளை எதிர்பார்த்தே உறவு நிலையை அமைத்துக் கொள்கின்றனர். இல்லை என்றால், கட்சியில் மிக உயர்ந்த பொறுப்பில் இல்லாத ஒருவரின் பிறந்த நாள், மிகப் பிரமாண்டமாக கொண்டாடப் பட்டிருக்குமா? வாரிசுகள் அரசியலில் ஈடுபடக்கூடாது என வாதிட விரும்பவில்லை. இளம் வயது துவங்கி, அரசியலில் ஈடுபடாமல், நேரடியாக, நாடாளு மன்ற, சட்ட மன்ற உறுப்பினர்களாக வருவது அல்லது அரசியல் அதிகாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக மாறுவதும், சம்மந்தப் பட்ட கட்சியினரால் கேள்விக்கு உட்படுத்தப் பட வேண்டும். அத்தகைய கேள்விகளை எழுப்பப்படாத சூழல் கொண்ட கட்சிகளை, அரசியல் ஜனநாயகம் நிறைந்த அரசியல் இயக்கம் என ஏற்க இயலாது.

மருத்துவரின் வாரிசு மருத்துவர், பொறியாளரின் வாரிசு பொறியாளர், வழக்குரைஞரின் வாரிசு வழக்குரைஞர் ஆசிரியரின் வாரிசு ஆசிரியர் எனத் தொழில்கள் பரம்பரை சார்ந்ததாக, நம் சம காலத்தில் வளர்ந்து வருகிறது. தனக்குப் பின் தனது வாரிசு, தான் உருவாக்கி வைத்த செல்வத்தைப் பாதுகாக்கும், தேவையில் இருந்து, தனது வாரிசுகள் தன் தொழிலைப் பின்பற்றும் வகையில், வாரிசுகளின் கல்வியில் கவணம் செலுத்துகின்றனர். இதுவே ஒரு புதிய வேலைப் பிரிவினை அல்லது குலக்கல்வித் திட்டம் போல் செயல் படுகிறது. இந்நிலையில் அரசியல் தலைவரின் வாரிசும், அரசியல் தலைவராக அடையாளம் காட்டப்படுவது, அரசியல் குலத்தொழில் என்பதை நோக்கி சென்றுவிடும். இப்போது பெற்று இருக்கிற சமூக நீதி, பெண்ணுரிமை, தனித்தொகுதி ஒதுக்கீடு போன்றவை, மெல்லப் புதைக்கப் படும், என்பதை ஜனநாயக் ஆதரவாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நன்றி; தினமணி. நவம்பர். 25 2010