ஞாயிறு, 5 டிசம்பர், 2010
அரசு வேலை உரிமை தொடர்-8
தற்போது வேலை நிறுத்தம் செய்து வரும், ஃபாக்ஸ்கான், பி.ஒய்.டி, போன்ற தொழிற்சாலைகளில், பணியாற்றும் தொழிலாளர்களில் பலரும், 12, அல்லது 10 படித்து முடித்த இளைஞர்களே. இவர்கள் தொடர்ந்து ஒரே வேலையைச் செய்ததன் மூலமாக திறன் வாய்ந்தவர்களாக மாறினார்கள் என்பதே உண்மை. இதன் காரணமாகத் தான், அந்த நிறுவனங்களின், உற்பத்தி ஏற்கனவே இருந்ததை விடவும் அதிகரிக்கிறது. இதை மார்க்ஸ், மூலதனத்திற்கு எந்த செலவும் இல்லாமல், உற்பத்தித்திறன் அதிகரிப்பதற்கான வழிவகையை முதலாளித்துவம் உருவாக்கிக் கொள்வதாக குறிப்பிடுகிறார். உற்பத்தி முறையில் இயந்திரம் அறிமுகப்படுத்தப் படும் போது, உழைப்பு பிரிவினை (செக்ஸன்) உருவாவதும் நடைபெறுகிறது. கூட்டு உழைப்பு பெருக்கம் அடைகிறது. எனவே மூலதனத்திற்கு செலவில்லாமல், கூட்டு உழைப்பு மற்றும் உழைப்புப் பிரிவினை காரணமாக, முதலாளிக்கான லாபம் அதிகரிக்கிறது என்பதை இன்றைய உழைப்பு சூழலில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது.
இத்தகைய அனுபவங்கள் சுட்டிக்காட்டும் உண்மை, வேலை வாய்ப்பைப் பெருக்குவதற்கு பதிலாக, லாபத்தைப் பெருக்கும், நோக்கத்துடன், இயந்திரங்கள் அறிமுகப் படுத்தப் பட்டிருக்கிறது, என்பதாகும். காலம் காலமாக மனிதன் தனது திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும், என்ற வகையில் தூண்டப்பட்டுக் கொண்டே இருக்கிறான். 1990களுக்கு முந்தைய பொருளாதாரக் கொள்கை, உலகமயமாக்கல் என்று அழைக்கப் படவில்லை என்றாலும், உலக பொருளாதரக் கொள்கையுடன் இனைந்தே, இந்திய பொருளாதாரக் கொள்கைகள் தீர்மாணிக்கப் பட்டது. அப்போதும் வேலையில்லாத் திண்டாட்டம் இருந்தது. அன்றைக்கு, ஐ.டி.ஐ, பாலிடெக்னிக், போன்ற தொழில் கல்வி மீதான ஈர்ப்பு திட்டமிட்டு உருவாக்கப் பட்டது. ஒருசில தேவையும், வேலை வாய்ப்பில் இருந்தது. அலுவலகப் பணிகளுக்கு, தட்டச்சு, ஸ்டெனோக்ராஃப், ஆகிய தொழில் நுட்பம் அவசியம் என்பது வலியுறுத்தப் பட்டது.
1985க்குப் பின் அமலான புதிய பொருளாதாரக் கொள்கை, இன்னும் கூடுதல் இயந்திரங்களுடன் அணிவகுத்தது. விளைவு, பொறியியல் கல்லூரிகள் புற்றீசலைப் போல், பல்கிப் பெறுகியது. அத்தகைய தொழில் நுட்பக் கல்வித் தகுதி உடையோர் மட்டுமே, வேலை வாய்ப்பைப் பெற முடியும், என்ற புனைவுகளும் இனைந்தே கட்டவிழ்க்கப் பட்டது. குறிப்பாக கணிணித் துறையின் மீதான ஈர்ப்பு, மிக கவணமாக செதுக்கப் பட்டது. வேலைக்கான தகுதிகளாக இவை தீர்மானிக்கப் படும் நிலையில், மேற்படித் தனியார் வசம் விற்பனைப் பொருளாக இருந்த, தொழில் நுட்பக் கல்வியை, தொழிலாளி வர்க்க குடும்பத்தைச் சார்ந்த இளைஞர்களால் பெற முடியாது போனது. எனவே நவீன வேலைவாய்ப்பில் இருந்து, உழைக்கும் வர்க்கக் குடும்பத்தைச் சார்ந்தோர் ஒதுக்கி வைக்கப் பட்டனர். நடுத்தர வர்க்கம் மற்றும் மேல் நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்தோர், உலகமயமாக்கப் பட்ட பொருளாதாரக் கொள்கை காலத்தில், பலனடைந்தோராக உருமாறியதையும் காண முடிந்தது. தொழிலாளி வர்க்க குடும்பத்தினர், திறனற்றவர்கள், என்ற முத்திரை குத்தப் படுவதற்கும், வடிகட்டப் படுவதற்கும் ஆளானார்கள்.
இரண்டு, புகுத்தப் பட்ட இயந்திரங்களைக் கண்காணிக்கும் அல்லது இயக்கும், மனித உழைப்பு சக்தி குறைவதற்கு பதிலாக அதிகரித்திருக்கிறது என்பதாகும். உதாரணத்திற்கு, நவீனத் தொழில்நுட்பம் வளர்ச்சி பெற்றுள்ள இக்காலத்தில் தான், வேலை நேரம் காலவரம்பற்றதாக மாறி இருக்கிறது. 8 மணி நேரம் வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர உறக்கம் என்ற கோரிக்கையை முன்வைத்து போராடி வெற்றி பெற்ற, மே தினம் கொண்டாடத் துவங்கி, 124 ஆண்டுகள் முடிந்து விட்டது. ஆனால் இந்திய திருநாட்டில், 12 மணி நேரம் வேலை வாங்கப்படுகிறது. குறிப்பாக இளம் தொழிலாளர்கள், அதுவும் பெண்கள் இத்தகைய கொடுமையை அனுபவிக்கின்றனர்.
தொழில் நுட்பத்தின் வளர்ச்சி, ஒருபுறம், மனிதனின் உழைப்பு நேரத்தினை அதிகரிப்பதற்காகக் கூடுதலாகப் பயன்படுகிறது. அதே நேரத்தில் மற்றொரு புறம், இருக்கிற தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும், புதிய வேலை வாய்ப்பைத் தடுக்கவும் பயன்பட்டிருக்கிறது. இருக்கிற மனித வளத்தினைப் பயன் படுத்துவதன் மூலமே, ஒரு நாட்டின் பொருளாதாரம் மேம்பட முடியும். ஆனால் அரசுகள், தனது முதலாளித்துவ வர்க்க நலனை பாதுகாப்பதற்காக, தீவிரத் தன்மையுடன் செயல் படுகிறது. அமெரிக்க அதிபர் ஒபாமாவின் சமீபத்திய இந்திய பயணம், அரசுகளின் அனுகுமுறைக்கு மிகச் சிறந்த உதாரணம். ஒபாமா இந்திய அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் மூலம், அமெரிக்கவில், 53000 வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும், என்ற உண்மை, நமது பாமர மக்கள் அறியாத ஒன்று. 2008ல் இருந்து அமெரிக்கப் பொருளாதாரம், தேக்க நிலையில் நீடிப்பதற்கு முக்கிய காரணம், அமெரிக்கவில் ஏற்பட்ட பொருளாதார மந்தம், வேலைவாய்ப்பு அதிகரிக்காமல், வேலை வாய்ப்பு, பறிக்கப் பட்டதன் விளைவே ஆகும். மனித உழைப்பின் மூலமான, பொருளாதார சுழற்சி, தடைபடுகிற போது, உலகில் பெரும் பணக்கார நாடு என்றழைக்கப் படுகிற அமெரிக்காவே நிலைகுழைந்து உள்ளது என்பதை இந்திய ஆட்சியாளர்கள் கவணிக்க வேண்டும்.
இயந்திரத்தின் அவசியத்தை மறுப்பது, இக்கட்டுரையின் நோக்கமன்று. புதிய கண்டு பிடிப்புகள் தவிர்க்க இயலாது.; அதுவும் முதலாளித்துவத்தின், லாப வேட்கை அதிகரிக்கிற போது, இயந்திரமயமாக்கல் அதிகரிக்கவே செய்யும். லாபமற்ற, சுகாதரப் பராமரிப்பு பணிகளான, பாதாளச் சாக்கடை மற்றும் கழிவுகள் அகற்றுதல் ஆகியவற்றில் ஏன், இயந்திரங்கள் அறிமுகம் செய்யப் படவில்லை? என்ற கேள்விக்கு முதலாளித்துவம் ஒரு போதும் பதில் சொல்லப் போவதில்லை. எந்திரன் திரைப்படத்தில், ரோபோவிற்கான கண்டுபிடிப்பை நியாயப்படுத்தும் போது, ராணுவத்தின் கடினமான பணிகளை ரோபோ கொண்டு இயக்கலாம், என்ற கருத்து முன்வைக்கப் படுகிறது. இச்செய்தியை சினிமாவாக மட்டும் கவணிக்கும் எவரொருவரும், சிறந்த ஆலோசனை என்றே கருதுவர். செய்தியின் பொருளைக் கவணித்தால் இரண்டு நெறிப் பிறழ்வை விதைப்பது புரியும். ஒன்று ராணுவத்திலும் வேலைவாய்ப்பைப் பறிக்கும் விதத்தில், மனிதர்களைக் குறைத்து, இயந்திரங்களைப் புகுத்துவது. இரண்டு, மனிதன் கையாளும், போதே அணுகுண்டுகளின் அச்சுறுத்தல் இருக்கிறது. இயந்திரமயமாகி விட்டால், என்ன நடைபெறும், என்ற கேள்வி சார்ந்தது. அதாவது முதலாளித்துவ உற்பத்தி முறை மனித நேயத்தை, சிறிது, சிறிதாக அழித்து வருகிறது, உதாரணம், நோக்கியா நிறுவனத்தில், மிகச் சமீபத்தில் நிகழ்ந்த விபத்து. அம்பிகா என்ற இளம் பெண், இரவுப் பணியின் போது, இயந்திரத்தில் சிக்கி கொண்டால். இயந்திரத்தை உடைத்தால், அப்பெண்ணை சில சேதாரத்துடன் உயிருடன் மீட்டிருக்கலாம். ஆனால் நிர்வாகம் இயந்திரத்தை உடைத்தால், நிர்வாகத்திற்கான இழப்பு அதிகமாக இருக்கும் என்ற காரணத்தால், இயந்திரத்தைக் காத்தது, உயிரைப் பறித்தது.
எனவே இப்போதைய தேவை திறன் மட்டுமல்ல. மனித மான்புகளைப் பாதுகாக்கும் கொள்கையும் தான். அப்போது தான் திறன் கொண்டோருக்கும் வேலை கொடுக்கும் கொள்கை உருவாகும். இல்லை என்றால் திறன் என்பதும், பேக்காரி கட்டவோ(வேலையின்மையே வெளியேறு), என்பது போல் வெற்று முழக்கமாகி விடும்.
(தொடரும்)
திங்கள், 22 நவம்பர், 2010
அரசு வேலை உரிமை 7

சமூக நீதிக்கான போராட்டம், நவீன தாராளமயமாக்கல் கொள்கைகளுடன் சமரசம் செய்து கொள்ளும் நிர்ப்பந்தம், மாநில முதலாளித்துவ அரசியல் கட்சிகள் மத்திய ஆட்சியில் கூட்டணி அமைக்கத் துவங்கிய பிறகு அதிகரித்துள்ளது. அதிகாரம் பெறுவதில் முன்னெழுகிற போட்டி, பல பிராந்திய முதலாளித்துவ கட்சிகளை, தனது கொள்கைகளை விலக்கி வைக்கும் சூழலை ஏற்படுத்துகிறது.
அதேநேரத்தில், முதலாளித்துவ பொருளாதார கொள்கைகளுக்கு எதிரான ஒருங்கிணைப்பைத் தடுக்கும்விதத்தில் அடையாளங்களை முன்னிறுத்தும் அரசியல் நடவடிக்கையையும் பாதுகாக்கிறது. நமது நாட்டில் காஷ்மீர் துவங்கி, எட்டுத் திசைகளிலும் புதுப்புது அரசியல் இயக்கங்கள் அடையாளத்தை முன்வைத்து வளர்ச்சி பெற்று வருகின்றன.
உழைக்கும் மக்களாக உள்ளவர்களை சாதி, மதம், இனம் ஆகிய அடையாளங்களின் பெயரில் அதே அடையாளங்களைத் கொண்ட, முதலாளிகளுடன் இணைந்து கொண்டு, ஒரே அடையாளம். எனவே உரிமை கேட்கிறோம், என்று உணர்ச்சி வசப்படுத்தும் அரசியலை நாம் பார்க்கிறோம். இதன் சூத்ரதாரி உலகமயமாக்கல், நவீன தாராளமயமாக்கல் என்பதை உழைக்கும் வர்க்கத்திற்கு உணர்த்துவதில் மக்கள் இயக்கங்கள் சிரமப்படுகின்றன. இந்தியாவில் 1990களுக்குப் பின்னர்தான் சாதிய மோதல்களும், அடக்கப்பட்டவர்களுக்கான உரிமைக்கான போராட்டமும் வலுப்பெற்று இருப்பதாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாக, பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கான உரிமைகளை முன்வைத்து, பொதுமக்களைத் திரட்டுவது அதிகரித்துள்ளது.
ஆனால், இதே காலத்தில் தான் உலகமயமும், நவீன தாராளமயமும் இந்தியாவின் எல்லா திசைகளிலும் வெற்றி நடைக்கு முயற்சித்து உள்ளது. அரசுத்துறையில் இரண்டாம் கட்ட சீர்திருத்தம் என்ற பெயரில் மத்திய. மாநில அரசுகள் காலிப்பணியிடங்களை அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. நாடு முழுவதும் 30 லட்சத்திற்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளன. தமிழகத்தில் சுமார் 2.5 லட்சம் பணியிடங்கள் காலியாக வைக்கப்பட்டு இருக்கிறது.
அதே நேரத்தில் பெருகி இருக்கும் மக்கள் தொகைக்கும் இன்றைய அரசுஊழியர், ஆசிரியர் ஆகியோரின் எண்ணிக்கைக்கும் இடைவெளி அதிகரித்து வருகிறது. மக்கள் தொகை மற்றும் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசுஊழியர், ஆசிரியர் பணி நியமனங்கள் அதிகரிக்குமானால், மத்தியிலும், மாநிலத்திலும் புதியதாக பல லட்சம் பணியிடங்கள் உருவாகும்.
இத்தகைய காலிப்பணியிடங்கள் மற்றும் புதிய பணியிடங்கள், நிரப்பப்படவோ, உருவாக்கப்படவோ செய்தால் சமூக ரீதியில் ஒடுக்கப்பட்ட பின்தங்கிய மக்களுக்கான இடஒதுக்கீடு கிடைக்கும். இதன்மூலமே கடந்த காலத்தில் இழந்த சமூகநீதியை மீட்டெடுக்க முடியும். இதே நிலைதான் பொதுத்துறை நிறுவனங்களிலும் பிரதிபலிக்கிறது. உலகமயமாக்கல், நவீன தாராளமயமாக்கல் கொள்கை அமலாகத் துவங்கிய கடந்த 18 அல்லது 19 ஆண்டுகளில் அரசு கைவசம் இருந்த பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போதும், அரசுத்துறைப் பங்குகள் விற்பனை மூலம் வரவு என்பதும் கணக்கீடு செய்யப்படுகிறது. அரசுகளின் இந்த நடவடிக்கை பல லட்சம் வேலை வாய்ப்புகளைப் பறித்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்கள் அடிப்படையில் இந்தியாவில் உள்ள தொழிலாளிகளில் 92 சதமானோர் முறைசாராத் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் என்பதையும், 8 சதமானோர் மட்டுமே அணிதிரட்டப்பட்ட தொழிலாளர்கள் என்பதையும் அறிய முடிகிறது. வேலையின்மை ஏற்படுத்தியுள்ள மற்றொரு தாக்கம், அரசே ஒப்பந்தத் தொழிலாளர்களை நியமனம் செய்யத் துவங்கியது ஆகும். மிகக்குறைவான கூலி, கடுமையான வேலை, எட்டுமணி நேரத்திற்கும் அதிகமான உழைப்பு நேரம் போன்ற தொழிலாளர் நல உரிமைபறிப்பை அரசே முன்னின்று செய்துவருகிறது. அரசு காலிப்பணியிடங்கள், பொதுத்துறை நிறுவனங்களின் புறக்கணிப்பு, தொழிலாளர் உரிமைபறிப்பு ஆகிய மூன்றையும் பெரும்பாலான தொழிற்சங்கங்கள் கண்டு கொள்வதில்லை.
குறிப்பாக பிற்படுத்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர் என்ற அடையாளங்களுடன் கூடிய தொழிற்சங்கங்களும் இடஒதுக்கீட்டுக்கான போராட்டத்தின் நாயகன் என்று கூறிக்கொள்ளும் மாநில அரசியல் கட்சிகளின் தொழிற்சங்கங்களும் இப்பிரச்சனை குறித்து விவாதிப்பதில்லை. இந்த சமரசத்தை எட்டுவதற்கு உலகமய, தாராளமயக் கொள்கைகளும் உணர்ச்சிமயமாக்கப்பட்ட அடையாள அரசியலும் பங்களிப்பு செய்திருக்கிறது. முதலாளித்துவத்தின் லாபத்தைப் பாதிக்காத அரசியல் பொருளாதாரம் தெளிவாக அமலாவதைப் பார்க்க முடியும். இதுபோன்ற அமைப்புகளின் சமூக உரிமைக்கான போராட்டம், சம்பந்தப்பட்ட சமூகத்தினை பொருளாதார ரீதியாக சுரண்டிக் கொள்வதற்கான லைசன்சாக மாற்றப்பட்டு வருகிறது.
சாதிய அமைப்புகளும், பெண்ணுரிமை பேசுகிற சில தன்னார்வக் குழுக்களும் இதே காலத்தில் இளம்பெண்கள் மீது நிகழ்த்துகிற உழைப்புச் சுரண்டல் மற்றும் பாலியல் சுரண்டல் குறித்து பெரும்பாலும் பேசுவதில்லை. குறிப்பாக, தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பெண்களே சுமங்கலித் திட்டம், மாங்கல்யத் திட்டம், கேம்ப் கூலி போன்ற பெயர்களில் இளம் பெண்களின் உழைப்பைச் சுரண்டுகிறது.
நாடும், மக்களும் தொழில்நுட்ப ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் வளர்ந்து விட்டது என சிலர் பேசுகின்றனர். ஆனால், பழைய நிலப்பிரபுத்துவ சமூகத்தில் வயலைச் சுற்றி அடைத்து வைக்கப்பட்ட மனிதக் கூட்டம், உழைப்பைக் காலநேரம் இல்லாமல் மன்னர்களுக்கும், பண்ணையாளர்களுக்கும் அர்ப்பணித்ததைப் போல், இந்த நவீன தாராளமயமாக்கல் கொள்கை, தன் உழைப்புச் சுரண்டல் என்ற சமூகக் கொடுமையைப் பூட்டி வைத்த விடுதிகளுக்குள்ளிருந்து அமலாக்கிக் கொண்டிருக்கிறது. இதோடு இணைத்து பாலியல் சுரண்டலையும் அரங்கேற்றி வருகிறது. இவை வேலையின்மை என்ற சமூகக் கொடுமையினால் பிரசவிக்கப்பட்ட அவலங்கள் என்பதை பல்வேறு சாதீய அமைப்புகள் ஏற்க மறுக்கின்றன. பல லட்சம் பெண் தொழிலாளர்கள் தமிழகத்தின் பஞ்சாலைகளிலும், கோடிக்கும் அதிகமான பெண் தொழிலாளர்கள் நாடு முழுவதிலும் சுரண்டப்பட்டு வருகின்றனர்.
வேலை கொடுப்பது அல்லது முறைப்படுத்துவது அரசின் கடமை அல்ல என்ற சிந்தனையின் வெளிப்பாடே, மேற்படி சுரண்டல் முறைகள். ஜனநாயக நாட்டில் சொத்து சேர்க்கும் உரிமைக்கு வக்காலத்து வாங்கும் அரசுகளும், அமைப்புகளும் இதுபோன்ற மனித உரிமைகளை பாதுகாக்கும் கடமையை மறுக்கின்றன. அப்படி மறுப்பதற்கு சமூக இயக்கங்களைப் பயன்படுத்துகின்றன என்பதையும் கவனிக்கவேண்டும். இதன் தொடர்ச்சியே, இன்றைய தமிழக ஆட்சியாளர்களின் மொழிப்பற்று. தாய்மொழியில் அல்லது தமிழ் மொழியில் படித்தோருக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை என்ற முழக்கமும் முன்னுக்கு வந்துள்ளது.
தொடரும்...
திங்கள், 18 அக்டோபர், 2010
அரசு வேலை வாக்குறுதி 6
அரசு வேலை வாக்குறுதி 5
அரசு வேலை வாக்குறுதி 4
வெள்ளி, 30 ஜூலை, 2010
அரசு வேலை உரிமை

மனிதகுல வரலாறு அடர்காட்டில் துவங்கிய போது, அவனின் பசிக்கு தேவையானதை எடுத்தோ, வேட்டையாடியோ உண்டு உயிர்வாழ முடிந்தது. நதிக்கரையில் குடிலிட்டு, சமைத்து உண்ணத்துவங்கிய போது, தனக்கானதை தானே உருவாக்கிக் கொள்ள முடிந்தது. மலைகளை காடுகளை அழித்து சமதளமாக்கி விவசாய பூமியாக பரந்த நிலத்தை உருவாக்கிய போது வர்க்கம் உருவாகிறது. ஆண்டை, அடிமை என இருகூறாக பிரிந்த நேரத்தில் தான் உழைப்புச் சுரண்டல் துவங்கியது. அன்றிலிருந்து இன்றுவரை சுரண்டப்படுகிறோம். எனவே தான் கார்ல் மார்க்ஸ் மனிதகுல வரலாற்றை வர்க்கப் போராட்டங்களின் வரலாறு என கூறுகிறார்.
அடிமைச் சமூகத்தில் உழைப்பு இருந்ததனால் அங்கே உழைப்புச் சுரண்டல் இருந்தது. சில ஆயிரம் சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அணைகள், கோயில்கள், கோபுரங்கள், அரண்மனைகள் அனைத்தும் அடிமைகளின் உழைப்பில் உயர்ந்த பிரம்மாண்டங்கள் அன்றைக்கு அடிமை மனிதனின் தேவை ஒட்டிய துணி தான், ஆனால் பொழுதெல்லாம் உழைத்தான். இன்றைய நவீன தாராளமய உலகின் நாகரிகத் தொழிலாளியின் தேவை அதிகம். அன்று போல் பொழுதெல்லாம் உழைக்கிறான். எனவே இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது என சிலர் குறிப்பிடுகின்றனர். இன்றைய தேவை அதிகம் எனவே அதிக உழைப்பு என்ற தர்க்கம் மிகுந்த ஆபத்தை விலைவிக்கக்கூடியது. ஏனென்றால் தேவை அதிகம் கொண்ட நவீன தொழிலாளியின் 10 ஆண்டுகால சேமிப்பு அதிபட்சம் ஒரு வீடு இருசக்கர வாகனம் சில வீட்டு உபயோக சாதனங்கள் அவ்வளவு தான். ஆனால், இந்த நவீன தொழிலாளியைக் கொண்ட இந்திய நிறுவனங்கள் பல ஆயிரம் கோடிகளை 10 ஆண்டுகளுக்குள் லாபமீட்டுகிறார்கள். உதாரணம் இன்ஃபோசிஸ். மேலும் கடந்த 7ஆண்டுகளில் இந்தியாவில் வளர்ந்துள்ள பெரும் கோடிஸ்வரர்களின் நிறுவனங்கள் இவர்கள் இல்லாது பல பன்னாட்டு நிறுவனங்கள் இத்தகைய உதாரணங்களில் சேர்க்கப்பட முடியும்.
சென்னையில் செயல்பட்டு வரும் ஹுண்டாய் நிறுவனத்தில் 16 ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றினர். இன்று பலர் ஆள்குறைப்பு செய்யப்படுகின்றனர். ஏன் என குரல்கொடுத்தவர்கள் பணி நீக்க அறிவிப்புக்கு ஆளாகிறார்கள். தொழிலாளர் உரிமை, தொழிற்சங்க உரிமை, போன்ற நூறாண்டுகளுக்கு மேலாக அனுபவித்து வருகிற உரிமைகளைப் பறிப்பதே நவீன தொழில்களில் உள்ள நாகரிக அணுகுமுறை.
மற்றொரு உதாரணம் போபால் விஷவாயு கசிவு நடந்து 26 ஆண்டுகள் கழித்து வெளிவந்துள்ள தீர்ப்பு இத்தீர்ப்பு இரண்டு செய்திகளைச் சொல்கிறது. ஒன்று இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஏகாதிபத்திய நாடுகளின் நிறுவனங்கள் தொழில் துவங்கினால், இலாபத்தை மகிழ்ச்சியாக அள்ளிச் செல்லவும், விஷவாயு கசிவு போன்ற பல்லாயிரம் மனித உயிர்களைக் கொன்றால், சொற்பத் தொகையை இழப்பீடாக தருவது. இரண்டு, ஏகாதிபத்திய நாடுகளின் அதிகார சுரண்டலையும், அதிகாரம் இழந்த நாடுகளாக இந்தியாவும் வளரும் நாடுகளும் இருக்க வேண்டும் என நிர்பந்திப்பது ஆகும்.
மேற்படி இரண்டு உதாரணங்களும் வளரும் நாடுகளில் உழைப்பாளர்களையும், அலுவலர்களையும் கொள்ளையடிக்கும் தன்மை கொண்டவை என்பதை விவரிகின்றன. மனிதகுல வரலாறு வர்க்கப் போராட்டங்களின் வரலாறு என்பதைச் சொன்ன கார்ல் மார்க்ஸ் அனைத்துலகச் சந்தையைப் பயன்படுத்திச் செயல்படுவதன் மூலம் முதலாளித்துவ வர்க்கம் ஓவ்வொரு நாட்டிலும் உற்பத்தியையும், நுகர்வையும் அனைத்துலகத் தன்மை பெறச் செய்திருக்கிறது. (கம்யூனிஸ்ட் அறிக்கை பக்கம் 48) என்று 1848இல் 160 ஆண்டுகளுக்கு முன்பாகவே கூறியிருக்கிறார். உற்பத்திக் கருவிகள் அனைத்திலும் அதிவேக அபிவிருத்தியின் மூலமும், போக்குவரத்துச் சாதனங்களின் பிரமாதமான மேம்பாட்டின் மூலமும் முதலாளித்துவ வர்க்கம் எல்லா தேசங்களையும், வளர்ச்சி பெறாத நிலையில் இருக்கும் தேசங்களையும் தனது நாகரிக வட்டத்திற்குள் இழுக்கிறது. அதாவது முதலாளித்துவமயமாகும் படி எல்லா தேசங்களையும் பலவந்தம் செய்கிறது என்றும் கம்யூனிஸ்ட் அறிக்கை கூறுகிறது. நாம் மேலே கண்ட உதாரணங்கள் கம்யூனிஸ்ட் அறிக்கையின் வரிகளுடன் ஒத்துப் போவதை புரிந்து கொள்ள முடியும்.
மேலே கண்ட கொள்கைகளை ஒரு நாட்டின் ஆளும் வர்க்கம் பின்பற்றுகிற போது, அந்த நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கிறது. கடந்த கட்டுரையில் விவாதிக்கிற போது, உலக முதலாளித்துவ நெருக்கடி குறித்தும், சீனாவின் வளர்ச்சி குறித்தும் குறிப்பிட்டது இவையோடு ஒத்துப் போவதை நாம் அறிய முடியும். இன்று சமூகத்தின் சுரண்டல் முறை ஏகாதிபத்திய நாடுகள் வளரும் நாடுகளையும் வளரும் நாடுகளில் உள்ள பெருமுதலாளிகள் சிறு தொழில்களைத் துவங்க அனுமதிப்பதும் படிப்படியாக வேலையில்லா திண்டாட்டத்தைப் பெருக்கும். இதற்கு நாம் மேலே குறிப்பிட்ட நிறுவனங்கள் ஒரு உதாரணம் என்றால் மற்றொரு உதாரணம் வால்மார்ட், பிக் பஜார், ரிலையன்ஸ், பிரெஷ் மோர் ப்ளஸ் மோர் ஆகிய வணிக வளாகங்கள் ஆகும்.
ஆம் படிப்படியாக வளர்ந்து வந்த சுரண்டல் முறை முதலாளித்துவ சமூகத்தில் தன் கோரமுகத்தை வெளிப்படுத்தத் துவங்கியுள்ளது. படித்தவர்களிடம் மட்டுமே தன் கோர முகத்தை வெளிப்படுத்த துவங்கியுள்ளது. படித்தவர்களிடம் மட்டுமே காணப்பட்ட வேலையின்மை சுயதொழில் செய்து வந்தவர்களையும் தொற்றிக் கொண்டுள்ளது. இதனால் இந்தியா போன்ற நாடுகளில் திறன் கொண்ட உழைப்பாளிகள் , திறனற்ற உழைப்பாளிகள் என பிரிக்கப்படுகின்றன. திறனற்ற உழைப்பாளிகளில் படித்தவர்களும் இடம் பெறுகின்றனர். மொத்தத்தில் கணினித்துறை, பொறியியல் துறை, மருத்துவ, போக்குவரத்து, ஹோட்டல் போன்ற துறைகள் பல கோடித் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு திறன் கொண்டதாகவும், சில லட்சம் வேலை வாய்ப்புகளைக் கொண்ட தொழில் திறனற்றவர்களும் பணியாற்றக் கூடியதாக உருமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன் விளைவு, வன்முறை அதிகரிப்பு, ரியல் எஸ்டேட் தொழில் வளர்ச்சி, அரசியலில் என்றும் இல்லாத ஊழல், கல்வித்துறையை, அடிப்படை சுகாதாரத்தை, தனியாரிடம் தாரைவார்த்தல் போன்றவை நிகழ்கிறது. இதில் பெரும்பாலும் திறனற்றவர்கள் என்று கருதப்பட்டவர்கள் தங்களை முன்னிறுத்துகின்றனர். இந்த வளர்ச்சி போக்கு உருவாகும் என்பதை 160 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கம்யூனிஸ்ட் அறிக்கை வேறு வரிகளில் குறிப்பிட்டு உள்ளது. விரிந்த அளவில் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதன் விளைவாகவும், உழைப்புப் பிரிவினையின் விளைவாகவும், பாட்டாளிகளுடைய வேலையானது, தனித்தன்மையை முற்றிலும் இழந்து விட்டது. ஆதலால் தொழிலாளிக்கு அவரது வேலை அறவே சுவையற்றதாகி விட்டது. இயந்திரத்தின் துணையிருப்பு போல் மாறி விடுகிறார். மிகவும் எளிமையான அலுப்பு தட்டும் படியான ஒரேவிதமான சுலபமாக பெறத்தக்கதுமான கைத்திறன் தான் அவருக்கு தேவைப்படுகிறது. எனவே, தொழிலாளியினது வருமானம் முற்றிலும் அவரது பராமரிப்பிற்கும் அவரது குடும்பத்திற்குமான பிழைப்புச் சாதனங்களுக்குமே பற்றாத அளவிற்கு குறுகி விடுகிறது. வேலை எவ்வளவுக்கு எவ்வளவு வெறுக்கத் தக்கதாக அமைகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு கூலியும் குறைகிறது. இயந்திரங்களின் பயன்பாடும், உழைப்புப் பிரிவினையும் அதிகரிக்க அதிகரிக்க வேலைப் பளூவும் அதிகமாகிறது. வேலை நேரத்தை அதிகமாக்குவதன் மூலமோ, குறிப்பிட்ட நேரத்தில் வாங்கப்படும் வேலையை கூடுதலாக்குவதன் மூலமோ, இயந்திரங்களின் வேகத்தை அதிகப்படுத்துவதன் மூலமோ இது நடந்தேறுகிறது என குறிப்பிடுகிறது.
இன்றைக்கு நாம் சந்திக்கும் எண்ணிலடங்காத இளைஞர்கள் 160 ஆண்டுகளுக்கு முன்பு கார்ல் மார்க்சும், ஏங்கெல்சும் சுட்டிக்காட்டிய கொடுமைகளைத் தான் அனுபவிக்கின்றனர். ஐரோப்பிய கண்டத்தில் அவர்கள் 160 ஆண்டுகளுக்கு முன்பு கண்ட நிலையை இந்தியா போன்ற வளரும் நாடுகள் இன்று அமலாக்கி வருகின்றனர். இதன்காரணமாகவே, நாம் முதல் கட்டுரையில் குறிப்பிட்ட பல்வேறு சீர்குலைவு வாத கருத்துக்கள் தலைதூக்குகின்றன. தனியார் முதலாளிகளை கட்டுப்படுத்த வேண்டிய அரசு, அதே பாதையில் பயணம் செய்ய விரும்புவதால், இந்த அரசு தன்னை முதலாளித்துவ அரசு என பகிரங்கப்படுத்தியுள்ளது. இந்தியாவின் மத்திய அரசும், தமிழக அரசும் மேற்படி பாதையில் பயணிப்பதுடன், பாதை போட்டவர்களுக்கு பாதபூஜையும் நடத்துகின்றனர்.
வெள்ளி, 11 ஜூன், 2010
அரசு - வேலை - உரிமை 2
அரசு - வேலை - உரிமை 2
கார்ல் மார்க்ஸ் இங்கிலாந்தின் பொருளாதார கொள்கை குறித்து குறிப்பிட்ட உண்மையை, இந்திய மண்ணிலும் காண முடியும். இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி நீண்ட காலம் அதிகாரம் செலுத்தியதால் ஏற்பட்ட தாக்கங்களில் ஒன்றாக பொருளாதார ஏற்றத் தாழ்வும் இருக்கிறது. உதாரணத்திற்கு கடந்த 2007ஆம் ஆண்டு இறுதியில், நாடாளுமன்றத்தில் டாக்டர். அர்ஜூன் சென் குப்தா தலைமையிலான குழுவின் ஆய்வறிக்கை முன்வைக்கப்பட்டது. இதில் 77.3 சதமான இந்திய மக்கள், நாளன்றுக்கு ரூ.20/ மட்டுமே செலவிடுவோராக உள்ள பரிதாப நிலையை சுட்டிக்காட்டி உள்ளார்.
நாளன்றுக்கு ரூ. 20/_ செலவிடும் மக்களால், இந்திய முதலாளித்துவமும், உலக முதலாளித்துவமும் குறி வைத்து செயல்படுகிற சந்தையில் இருந்து பொருள்களை விலைக்கு வாங்க இயலுமா? இயலாது என்ற நிலையில்தான் பொருள்கள் தேங்கி நிற்கிறது. சந்தைகளிலும் பெருமளவில் பொருட்கள் விற்பனையாவதில்லை. இந்திய முதலாளித்துவ ஆட்சியாளர்கள் குறிப்பிடுகிற 8சத வளர்ச்சி சந்தை தேக்கத்தை உடைக்க உதவிடவில்லை. தனிநபரின் வருமானமும், செலவிடும் தொகையும், மக்களின் வாங்கும் சக்தியும் அதிகரிக்காமல், சந்தை தேக்கம் தகர்ந்து புதிய உற்பத்தி பெருகாது. புதிய உற்பத்தி பெருகாமல் வேலை வாய்ப்பு அதிகரிக்காது.
இந்த பொருளாதார சுழற்சி முறையை, முதலாளித்துவம் தனது அடித்தளமாக கொண்டுள்ளது. அதே நேரத்தில் லாபவெறி தலைக்கு ஏறுகிற போது, முதலாளித்துவம் தனக்கு எதிராக தன்னையே முன்னிறுத்துகிறது. இந்த முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கை தேவைக்கு ஏற்ப விநியோகம் என்ற முறையை பின்பற்றாமல், விநியோகத்திற்கு ஏற்ப தேவையை உருவாக்க முயற்சிக்கிறது. இதன் காரணமாக ஊக வணிகம், பங்கு சந்தையின் ஆதிக்கம், பணம், பொருள், பணம் என்ற பரிவர்த்தனை காலாவதியாகி, பணம் - பணம் - பணம் என்ற பரிவர்த்தனையை அடைகிறது. இது உற்பத்திக்கு மூடு விழா கொண்டாடுவதால், வேலை பறிப்புக் கொள்கை புதிதாக பிறந்திருக்கிறது.
இதற்கு மிக சிறந்த உதாரணம் அமெரிக்கப் பங்கு சந்தையின் வீழ்ச்சியும் அதைத் தொடர்ந்து உலகளவிலான தாக்கமும் ஆகும். அமெரிக்காவில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் பல கோடி இளைஞர்கள் வேலை இழந்துள்ளனர். வங்கிகள் திவால் கணக்கு காட்டி உள்ளன. வாரத்திற்கு 14 வங்கிகள் அமெரிக்காவில் திவாலாகிக் கொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது இன்றளவும் நீடிக்கிறது. அதன் காரணமாக பன்னாட்டு முதலாளிகளின் பணம் முடமாகி அவர்களின் தொழிலும் முடமாகியுள்ளது. அது வேலை இழைப்பையும், உலக ஏற்றுமதி _ இறக்குமதி கொள்கை மீதான பாதிப்பையும் உருவாக்குகிறது. துபாயில் கட்டடங்களை விட்டு விட்டு பொருள்களை அள்ளிக்கொண்டு ஓடியது மறக்க முடியாத தொலைக்காட்சி செய்தி. இதன் தொடர்ச்சியாக ஐரோப்பிய யூனியன் முழுவதும் பாதிப்பு அடைந்து இருப்பதாக சொல்லப்படுகிறது. கிரீஸ், பின்லாந்து போன்ற நாடுகள் பெரும் சரிவை சந்தித்ததன் காரணமாக அங்கே பெரிய அளவிலான கிளர்ச்சிகள் வெடித்துள்ளன.
இந்தியாவிலும் கூட குஜராத் மாநிலத்தில், நகைத் தொழில் பாதிப்பை சந்தித்து, 10 லட்சம் தொழிலாளர்களின் வேலை வாய்ப்பை பாதித்துள்ளது. திருப்பூர் பின்னலாடைத் தொழிலின் உற்பத்தி தேக்கம் சுமார் 45 ஆயிரம் தொழிலாளர்களின் வேலையைப் பறித்துள்ளது. கட்டிடத் தொழில், ரியல் எஸ்டேட் தொழில் போன்றவை, புதிய நடுத்தர வர்க்கத்தினரின் முதலீடு குறைந்ததால் தேங்கி நிற்கிறது. ஆட்டோ மொபைல் தொழில் சரிவை நோக்கி சென்று இப்போது தன்னை சமாளித்துக் கொள்ளும் நிலையை அடைந்திருக்கிறது. புதிய நடுத்தர வர்க்கமான, தகவல் தொழில் நுட்பத் திறனாளிகள், வேலையை இழப்பதற்கு பதிலாக சம்பளத்தைக் குறைத்துக் கொள்வது மேல் என முடிவு செய்து செயல்படுகின்றனர். இவை அனைத்தும் கடந்த 2009 துவக்கத்தில் இருந்து இறுதி வரை வெளிவந்த செய்திகள். இந்திய தொழிலாளர் துறை அமைச்சர் மேற்படி கொள்கை காரணமாக 10 லட்சம் பேர் வேலை இழந்ததாக குறிப்பிட்டார். இவை நம் சம காலத்து முதலாளித்துவத்தில் நெருக்கடிகள் ஆகும்.
இதே சமகாலத்தில், முதலாளித்துவம் தனது நலனையோ, வருமானத்தையோ குறைத்துக் கொள்ளவில்லை. உலகக் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அவர்களின் போட்டியாளர்களாக இந்திய முதலாளிகளும் உயர்ந்துள்ளனர். 2004இல் 5000 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து மதிப்பு கொண்டவர்களின் எண்ணிக்கை 15க்குள் இருந்தது. தற்போது 52பேரின் சொத்து மதிப்பு 5000 கோடி ரூபாய்க்கும் மேலாக உள்ளது. தமிழகத்திலும் கூட அத்தகைய பெரும் பணக்காரர்கள் உயர்ந்து வருகின்றனர். கடந்த 2009இல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற நேரத்தில், இந்திய முதலாளிகள், வெளியுலகிற்கு தெரியப் படுத்தாமல் பதுக்கிய கறுப்புப் பணம், சுமார் 75 லட்சம் கோடி ரூபாய் சுவிட்சர்லாந்து நாட்டு வங்கியில் இருப்பதாக எதிர்கட்சிகள் தெரிவித்தன. எனவே, முதலாளித்துவத்தின் நெருக்கடி ஆலை மூடலை, ஆட்குறைப்பை உருவாக்குகிற அதே நேரத்தில், முதலாளிகளை பாதிக்கவில்லை என்பதை புரிந்து கொள்ள முடியும். அமெரிக்காவில் வங்கிகள் திவாலானபோது, அமெரிக்க அரசு 70 ஆயிரம் கோடி ரூபாய் வாரி வழங்கியது. வேலை இழந்த தொழிலாளர்களுக்கு அது போன்ற கருணை அளிக்கப்பட்டதாக அறிய முடியவில்லை.
இன்னொரு புறம் முதலாளித்துவத்தின் நெருக்கடி எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத நாடாக சீனா இருந்தது குறிப்பிடத்தது. சீனாவிடம், அமெரிக்கா கடன் பெற எந்தவித தயக்கமும் காட்டவில்லை. அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், சீனாவிற்கு நேரடியாகச் சென்று அமெரிக்காவிற்காக யாசகம் கேட்டார் என்றால் அது மிகையல்ல. சீனாவின் கொள்கை முதலாளித்துவ கொள்கையில் இருந்து மாறுபட்டதாக இருந்ததே இதற்கு காரணம்.
சீன அரசு தங்கள் கொள்கை சோசலிசத்தை நோக்கிச் செல்லும் தன்மையுடையது. அதற்கான முயற்சியில் ஈடுபட்டு இருப்பதாக சொல்கிறார்கள். முழுமையாக சோசலிசக் கொள்கையை அமலாக்காத நிலையிலேயே சீன அரசு உலகின் வளர்ந்த நாடுகள் சந்தித்த சரிவை எதிர் கொள்ளாமல் முன்னேற முடிந்திருக்கிறது. சோசலிசக் கொள்கையை சென்றடையும் நிலைக்கு சீன அரசு சென்று விட்டால், அதன் பொருளாதார வலிமை, உலகில் யாரும் எட்ட முடியாத ஒன்றாக இருக்கும். இன்றைக்கு சீன அரசின் கொள்கை வேலைப் பறிப்பை உருவாக்கவில்லை. உலகில் சிறு தொழில்களை அழிப்பதையே உலகமயமாக்கல் கொள்கை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. ஆனால் சீனாவின் கொள்கை சிறு தொழில்களையும், சிறு உற்பத்தியாளர்களையும் பாதுகாக்கும் தன்மை கொண்டதாக இருப்பதன் விளைவே, அமெரிக்காவிற்கு கடன் கொடுக்கும் அளவிற்கு முன்னேற வழிவகை செய்துள்ளது.
மேற்படி நிகழ்வுகளில் இருந்து வேலையின்மை அல்லது வேலைப் பறிப்பதற்கு காரணம் முதலாளித்துவ லாபவெறி என முடிவுக்கு வரலாம். இதைக் குறிப்பிடுகிற போது முதளாளித்துவ சமூகத்திற்கு முந்தைய சமூதாய அமைப்புகளில் வேலையின்மை இல்லையா என கேட்கலாம். நிலப்பிரபுத்துவ காலத்திலேயோ அதற்கு முந்தைய அடிமைச் சமூதாய காலத்திலேயோ சுரண்டல் கொடூரமாக இருந்திருக்கிறது. வேலை பெரும் பிரச்சனையாக உருவெடுத்திருக்க நியாயம் இல்லை. ஆனால், மனிதர்களை கூட்டம் கூட்டமாக குடும்பம் குடும்பமாக அடிமைகளாக்கி உழைக்கச் செய்து, சோற்றை மட்டும் கூலியாக கொடுத்தார்கள். மானத்தை மறைக்க கொஞ்சம் துணியும் கொடுத்தார்கள். வேலையில்லை என்ற பிரச்சனை எழுந்திருக்க வாய்ப்பில்லை. மாறாக, வேலை செய்ய முடியாமல் அடிமையாக இருக்க முடியாது, என்ற எதிர்ப்புகள் இருந்திருக்கிறது. ஒவ்வொரு கால எதிர்ப்புகளும் போராட்டங்களும் இருந்திருக்க கொடூரமான கொலைகளும், கொடுமைகளையும் ஆளும் வர்க்கங்கள் அரங்கேற்றி இருக்கின்றன.
எனவே தான் கார்ல் மார்க்ஸ “மனித குல வரலாற்றை வர்க்கப் போராட்டங்களின் வரலாறு’’ என கூறியுள்ளார்.
வியாழன், 27 மே, 2010
அரசு - வேலை - உரிமை 1
அரசு - வேலை - உரிமை 1
எஸ்.கண்ணன் வியாழன், 20 மே 2010 17:42
ஒரு சமூகத்தின் வளர்ச்சியை அளவீடு செய்ய வேலை வாய்ப்பும், வேலையின்மையும் பிரதான அளவு கோலாகும். ப.சிதம்பரம் போன்ற முதலாளித்துவ அரசியல் வாதிகளும், முதலாளித்துவ சமூகமும், பொருளாதார வளர்ச்சியை, சமூக வளர்ச்சி, என குறிப்பிடுகின்றனர். அதனால் தான், இந்திய சமூகத்தின் வேலையின்மை, கல்வியின்மை, பட்டினிச்சாவு, தற்கொலைகளின் அளவு, காசநோய், குழந்தைகளின் இறப்பு விகிதம், எடைகுறைந்த குழந்தைகளின் இறப்பு விகிதம், எடைகுறைந்த குழந்தைகள் போன்ற சமூகப் பிரச்சனைகள் முதலாளித்துவ சிந்தனையாளர்களின் கண்களுக்கு தெரியவில்லை. “செலக்டிவ் அம்னீசியா” எனும் நோயைப் போல் (தெரிந்தெடுந்த விஷயங்களை மறந்து விடுவது) இந்த அரசியல் வாதிகளின் கண்கள் “செலக்டிவ் பிளைண்ட்னெஸ்” எனும் நோய்க்கு ஆளாகியுள்ளது.
சமீபத்தில் ஒரு விவரம் செய்தித்தாள்களில் உலா வந்தது. “இந்தியாவில் கழிவறை உள்ள வீடுகளை விட,செல்போன் வைத்திருப்போர் அதிகம்’’ என்பதே செய்தியின் சாரம். இந்த செய்தி, மக்களின் அறிவியல் சிந்தனையை வளர்த்திருக்கிறது, என்ற முடிவுக்கு வர முடியுமா? வரமுயும் என்றால் செல்போனைப் பயன் படுத்துவது அறிவியல் வளர்ச்சியா? கழிவறையைப் பயன்படுத்தாமல், திறந்த வெளியில் மலம் கழிப்பது அறிவியல் வளர்ச்சியா? ஒன்றுக்கு எதிராக ஒன்றை நிறுத்துவது நமது நோக்கமல்ல. அடிப்படையில் கல்வியும், அதைத் தொடர்ந்து நல்ல, சமூகப் பாதுகாப்புடனான «வைலயும் ஒரு சமூகத்தில் இருந்தால் மட்டுமே, ஆரோக்கியம்,சுகாதாரம் நோய்த்தடுப்பு போன்றவை வளரும். இன்று நமது மக்கள் கல்வி, வேலை தங்கள் தலைமுறைக்கும் வாரிசுகளுக்கும் கிடைக்காததற்கு காரணம், தலை விதி என்று எண்ணிக் கொண்டுள்ளனர்.
ஒரு சமூகத்தில் வேலையின்மை அதிகரிக்கும் போது, அரசு மீதும் ஆள்வோர்மீதும், அரசியல், ஜனநாயக இயக்கங்களின் மீதும் நம்பிக்கை குறையும். குறிப்பாக இளம் தலைமுறை இது போன்ற நம்பிக்கையின்மைக்கு விரைவில் சென்றடைவர். அத்தகைய இளைஞர்களை அதிதீவிரவாத இயக்கங்களும், மதவெறி அடிப்படை வாதிகளும், சாதிய சக்திகளும் ஈர்த்திடும் வாய்ப்பும் உருவாகும். மதம்,சாதி, இனம், மொழி, பிராந்தியம் என்ற தன்மையிலான உணர்வுகள் தலைதூக்கி, நாட்டின் ஜனநாயகத்திற்கும் மக்களின் நல்லிணக்கத்திற்கும் சவால் விடும்.
இன்று இந்தியாவில் லஷ்கர்இதொய்பா தொடங்கி அனைத்துவித அடிப்படை வாதிகளின் வளர்ச்சிக்கும், அஸ்ஸாமின் தீவிரவாத, நாகாலாந்து, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் செயல்படும் பிரிவினைவாத இயக்கங்களின வளர்ச்சிக்கும், மாவோயிஸ்டுகள் என்ற பெயரில் இயங்கி வரும் அதிதீவிர இடதுசாரிகளின் செயல்களுக்கும் இந்தியாவில் உள்ள வேலையின்மை, கல்வியின்மை, சமமற்ற வளர்ச்சி ஆகியவை தான் காரணம் என்றால் நம்ப முடிகிறதா? தெலங்கானாப் போராட்டத்தின் தீவிரமும் அதைத் தான் சுட்டிக் காட்டுகிறது.
தமிழகத்தில் 1995_96 களில் தொடர்ந்து நடைபெற்று வந்த சாதி கலவரத்தின பின்னனியை, தென் மாவட்டங்களில் ஆய்வு செய்வதற்கு தமிழ்நாடு அரசு ஒய்வு பெற்ற நீதிபதி மோகன் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. தென் மாவட்டங்கள் முழுவதும் பயணம் சென்று விவரம் சேகரித்த நீதிபதி வேலையின்மை, வளர்ச்சியின்மை பிரதானக் காரணம் என்பதைக் கண்டறிந்து அரசிடம் சமர்ப்பித்தார் இந்த பரிந்துரைக்கு முன்னதாக நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் அவர்களும் இதே கருத்தை வலியுறுத்தி இருந்தார்.
இந்திய விடுதலைப் போராட்டத்தின ஒரு பகுதியாக, பட்டினிக்கு எதிரான வீரமிக்க போராட்டங்களை இந்தியாவின் எழுத்தாளர்கள் பதிவு செய்து உள்ளனர். ஆனந்த மடம் நாவலின் ஆசிரியர் பங்கிம் சட்டர்ஜி, நிலம் மாடு,வண்டி, வீடு என அனைத்தையும் விற்றாகி விட்டது இனி மனிதர்கள் மட்டும் தான் உயிரோடு இருக்கிறார்கள் என குறிப்பிடுகிறார் இத்தகைய கொடிய நிலையைத் தொடர்ந்தே கொலைகளும் கொள்ளைகளும் நடைபெற்றதாக எழுதுகிறார்.
மதுரையின் வரலாற்றை ஆய்வு செய்த மானுடவியல் அறிஞர்கள் பலரும் சமீபத்தில் வெளிவந்த சு. வெங்கடேசனின் காவல் கோட்டம் நாவலும் சமூகப் பிரச்சனைகளை முன் வைக்கிறது குறிப்பாக திருமலை மன்னன், “மதுரையைச் சுற்றியிருந்த கள்ளர்கள் களவு செய்வதை தொழிலாகக் கொண்டுள்ளனர். அவர்களையே காவல்காரர்களாக மாற்றிவிட்டால் களவு நின்றுவிடும் என திட்டமிட்டு மதுரையை காவல் காக்கும் பணியை அவர்களிடம் ஒப்படைக்கிறான் மன்னன் நிலப்பிரபுத்துவ சமூகத்தின பிரதிநிதி என்பதால் தன் கருவூலத்தில் இருந்து நிதி வெளியேறாமல் மக்களிடம் காவல் பணத்தை பெற்றுக் கொள்ளவும் வழி செய்கிறான். இன்றைய நவீன சமூகத்து இளைஞர்களோ வேலை கொடுப்பது அரசின் கடமை என்பதை வலியுறுத்தத் தயங்குகிற போது 400 ஆண்டுகளுக்கு முந்தைய மக்களுக்கு அரசு ஏன் வேலை தரவில்லை? என்று கேட்கிற விழிப்புணர்வு இருந்திருக்க நியாயம் இல்லை தான்.
இன்று முல்லைப் பெரியாறு அணை கேரளா, தமிழ்நாடு அரசு மற்றும் மக்களின் சர்ச்சைக்கு உரிய செயலாக மாறி இருக்கிறது. ஆனால் முல்லைப் பெரியாறின் வரலாறு மானுடவியல் அணுகு முறை சார்ந்தது மதுரை, தேனி, திண்டுக்கல்லின் ஒரு பகுதி சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் வாழ்ந்து வந்த மக்களின் வாழ்வாதராரம் சமூகப் பிரச்சனைகளை ஆய்வு செய்த ஆங்கிலேயே அரசு, முல்லைப் பெரியாறு அணை திட்டத்திற்கு வழிவகை செய்தது குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்த ஜனநாயகப் போராட்டம், அணை கட்டி தண்ணீர் பாய்ந்த நிலம், விளைச்சல் காட்டத் துவங்கிய பின்பே எழுந்தது.
குற்றங்கள் குறையவும், ஜனநாயகச் சிந்தனை, வளர்ச்சி ஆகியவை உருவாகவும்,வேலை என்பது அடிப்படை அவசியமாகும். இந்தியாவில் பிரிட்டிஷார் ஆட்சி செய்த நேரத்தில் லண்டன் நகரில் இருந்த வேலையின்மையை வறுமையை கார்ல் மார்க்ஸ் சுட்டிக் காட்டுகிறார். ஒரு தாய்க்கும், குழந்தைக்குமான உரையாடலாக இதை படம் பிடிக்கிறார் மார்க்ஸ் குளிர் தாங்க வில்லை அம்மா, கொஞ்சம் பொறுத்துக்கொள், அப்பா வேலைக்கு சென்றவுடன் நம்முடைய வீட்டிட்ல் கரி அடுப்பை எரித்து வெப்பம் உருவாக்கிக் கொள்ளலாம் அப்பா ஏன் வேலைக்கு செல்ல வில்லை? அப்பா வேலை செய்த நிறுவனத்தை மூடி விட்டனர். ஏன் மூடி விட்டனர்? அந்த நிறுவனத்தில் ஏற்கனவே தோண்டி எடுக்கப்பட்ட கரி விற்பனை ஆகவில்லை? மக்களிடம் கரி வாங்கப் பணம் இல்லை. ஏன் பணம் இல்லை? ஏனென்றால் வேலையில்லை. இந்த உரையாடல் நிலக்கரிச் சுரங்கம் மூடப்பட்டதால் சமூக விளைவை வெளிப்படுத்துகிறது.
கரியும், இரும்பும் இருக்கிறது. கரி தேவைப்படும் குடும்பங்களும் இருக்கிறது. ஆனால் வேலை இல்லாததால் குடோனும் காலியாக வில்லை. அடுப்பும் எரியவில்லை. இப்படி நாய் காத்த வைக்கோல் போராக நமது செல்வம் சிலரிடம் குவிந்தும் பெரும்பான்மையோரிடம் எதுவும் இல்லாமலும் இருக்கிறது. இது வளர்ச்சி அல்ல. யானைக்கால்