மனிதகுல வரலாறு அடர்காட்டில் துவங்கிய போது, அவனின் பசிக்கு தேவையானதை எடுத்தோ, வேட்டையாடியோ உண்டு உயிர்வாழ முடிந்தது. நதிக்கரையில் குடிலிட்டு, சமைத்து உண்ணத்துவங்கிய போது, தனக்கானதை தானே உருவாக்கிக் கொள்ள முடிந்தது. மலைகளை காடுகளை அழித்து சமதளமாக்கி விவசாய பூமியாக பரந்த நிலத்தை உருவாக்கிய போது வர்க்கம் உருவாகிறது. ஆண்டை, அடிமை என இருகூறாக பிரிந்த நேரத்தில் தான் உழைப்புச் சுரண்டல் துவங்கியது. அன்றிலிருந்து இன்றுவரை சுரண்டப்படுகிறோம். எனவே தான் கார்ல் மார்க்ஸ் மனிதகுல வரலாற்றை வர்க்கப் போராட்டங்களின் வரலாறு என கூறுகிறார்.
அடிமைச் சமூகத்தில் உழைப்பு இருந்ததனால் அங்கே உழைப்புச் சுரண்டல் இருந்தது. சில ஆயிரம் சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அணைகள், கோயில்கள், கோபுரங்கள், அரண்மனைகள் அனைத்தும் அடிமைகளின் உழைப்பில் உயர்ந்த பிரம்மாண்டங்கள் அன்றைக்கு அடிமை மனிதனின் தேவை ஒட்டிய துணி தான், ஆனால் பொழுதெல்லாம் உழைத்தான். இன்றைய நவீன தாராளமய உலகின் நாகரிகத் தொழிலாளியின் தேவை அதிகம். அன்று போல் பொழுதெல்லாம் உழைக்கிறான். எனவே இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது என சிலர் குறிப்பிடுகின்றனர். இன்றைய தேவை அதிகம் எனவே அதிக உழைப்பு என்ற தர்க்கம் மிகுந்த ஆபத்தை விலைவிக்கக்கூடியது. ஏனென்றால் தேவை அதிகம் கொண்ட நவீன தொழிலாளியின் 10 ஆண்டுகால சேமிப்பு அதிபட்சம் ஒரு வீடு இருசக்கர வாகனம் சில வீட்டு உபயோக சாதனங்கள் அவ்வளவு தான். ஆனால், இந்த நவீன தொழிலாளியைக் கொண்ட இந்திய நிறுவனங்கள் பல ஆயிரம் கோடிகளை 10 ஆண்டுகளுக்குள் லாபமீட்டுகிறார்கள். உதாரணம் இன்ஃபோசிஸ். மேலும் கடந்த 7ஆண்டுகளில் இந்தியாவில் வளர்ந்துள்ள பெரும் கோடிஸ்வரர்களின் நிறுவனங்கள் இவர்கள் இல்லாது பல பன்னாட்டு நிறுவனங்கள் இத்தகைய உதாரணங்களில் சேர்க்கப்பட முடியும்.
சென்னையில் செயல்பட்டு வரும் ஹுண்டாய் நிறுவனத்தில் 16 ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றினர். இன்று பலர் ஆள்குறைப்பு செய்யப்படுகின்றனர். ஏன் என குரல்கொடுத்தவர்கள் பணி நீக்க அறிவிப்புக்கு ஆளாகிறார்கள். தொழிலாளர் உரிமை, தொழிற்சங்க உரிமை, போன்ற நூறாண்டுகளுக்கு மேலாக அனுபவித்து வருகிற உரிமைகளைப் பறிப்பதே நவீன தொழில்களில் உள்ள நாகரிக அணுகுமுறை.
மற்றொரு உதாரணம் போபால் விஷவாயு கசிவு நடந்து 26 ஆண்டுகள் கழித்து வெளிவந்துள்ள தீர்ப்பு இத்தீர்ப்பு இரண்டு செய்திகளைச் சொல்கிறது. ஒன்று இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஏகாதிபத்திய நாடுகளின் நிறுவனங்கள் தொழில் துவங்கினால், இலாபத்தை மகிழ்ச்சியாக அள்ளிச் செல்லவும், விஷவாயு கசிவு போன்ற பல்லாயிரம் மனித உயிர்களைக் கொன்றால், சொற்பத் தொகையை இழப்பீடாக தருவது. இரண்டு, ஏகாதிபத்திய நாடுகளின் அதிகார சுரண்டலையும், அதிகாரம் இழந்த நாடுகளாக இந்தியாவும் வளரும் நாடுகளும் இருக்க வேண்டும் என நிர்பந்திப்பது ஆகும்.
மேற்படி இரண்டு உதாரணங்களும் வளரும் நாடுகளில் உழைப்பாளர்களையும், அலுவலர்களையும் கொள்ளையடிக்கும் தன்மை கொண்டவை என்பதை விவரிகின்றன. மனிதகுல வரலாறு வர்க்கப் போராட்டங்களின் வரலாறு என்பதைச் சொன்ன கார்ல் மார்க்ஸ் அனைத்துலகச் சந்தையைப் பயன்படுத்திச் செயல்படுவதன் மூலம் முதலாளித்துவ வர்க்கம் ஓவ்வொரு நாட்டிலும் உற்பத்தியையும், நுகர்வையும் அனைத்துலகத் தன்மை பெறச் செய்திருக்கிறது. (கம்யூனிஸ்ட் அறிக்கை பக்கம் 48) என்று 1848இல் 160 ஆண்டுகளுக்கு முன்பாகவே கூறியிருக்கிறார். உற்பத்திக் கருவிகள் அனைத்திலும் அதிவேக அபிவிருத்தியின் மூலமும், போக்குவரத்துச் சாதனங்களின் பிரமாதமான மேம்பாட்டின் மூலமும் முதலாளித்துவ வர்க்கம் எல்லா தேசங்களையும், வளர்ச்சி பெறாத நிலையில் இருக்கும் தேசங்களையும் தனது நாகரிக வட்டத்திற்குள் இழுக்கிறது. அதாவது முதலாளித்துவமயமாகும் படி எல்லா தேசங்களையும் பலவந்தம் செய்கிறது என்றும் கம்யூனிஸ்ட் அறிக்கை கூறுகிறது. நாம் மேலே கண்ட உதாரணங்கள் கம்யூனிஸ்ட் அறிக்கையின் வரிகளுடன் ஒத்துப் போவதை புரிந்து கொள்ள முடியும்.
மேலே கண்ட கொள்கைகளை ஒரு நாட்டின் ஆளும் வர்க்கம் பின்பற்றுகிற போது, அந்த நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கிறது. கடந்த கட்டுரையில் விவாதிக்கிற போது, உலக முதலாளித்துவ நெருக்கடி குறித்தும், சீனாவின் வளர்ச்சி குறித்தும் குறிப்பிட்டது இவையோடு ஒத்துப் போவதை நாம் அறிய முடியும். இன்று சமூகத்தின் சுரண்டல் முறை ஏகாதிபத்திய நாடுகள் வளரும் நாடுகளையும் வளரும் நாடுகளில் உள்ள பெருமுதலாளிகள் சிறு தொழில்களைத் துவங்க அனுமதிப்பதும் படிப்படியாக வேலையில்லா திண்டாட்டத்தைப் பெருக்கும். இதற்கு நாம் மேலே குறிப்பிட்ட நிறுவனங்கள் ஒரு உதாரணம் என்றால் மற்றொரு உதாரணம் வால்மார்ட், பிக் பஜார், ரிலையன்ஸ், பிரெஷ் மோர் ப்ளஸ் மோர் ஆகிய வணிக வளாகங்கள் ஆகும்.
ஆம் படிப்படியாக வளர்ந்து வந்த சுரண்டல் முறை முதலாளித்துவ சமூகத்தில் தன் கோரமுகத்தை வெளிப்படுத்தத் துவங்கியுள்ளது. படித்தவர்களிடம் மட்டுமே தன் கோர முகத்தை வெளிப்படுத்த துவங்கியுள்ளது. படித்தவர்களிடம் மட்டுமே காணப்பட்ட வேலையின்மை சுயதொழில் செய்து வந்தவர்களையும் தொற்றிக் கொண்டுள்ளது. இதனால் இந்தியா போன்ற நாடுகளில் திறன் கொண்ட உழைப்பாளிகள் , திறனற்ற உழைப்பாளிகள் என பிரிக்கப்படுகின்றன. திறனற்ற உழைப்பாளிகளில் படித்தவர்களும் இடம் பெறுகின்றனர். மொத்தத்தில் கணினித்துறை, பொறியியல் துறை, மருத்துவ, போக்குவரத்து, ஹோட்டல் போன்ற துறைகள் பல கோடித் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு திறன் கொண்டதாகவும், சில லட்சம் வேலை வாய்ப்புகளைக் கொண்ட தொழில் திறனற்றவர்களும் பணியாற்றக் கூடியதாக உருமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன் விளைவு, வன்முறை அதிகரிப்பு, ரியல் எஸ்டேட் தொழில் வளர்ச்சி, அரசியலில் என்றும் இல்லாத ஊழல், கல்வித்துறையை, அடிப்படை சுகாதாரத்தை, தனியாரிடம் தாரைவார்த்தல் போன்றவை நிகழ்கிறது. இதில் பெரும்பாலும் திறனற்றவர்கள் என்று கருதப்பட்டவர்கள் தங்களை முன்னிறுத்துகின்றனர். இந்த வளர்ச்சி போக்கு உருவாகும் என்பதை 160 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கம்யூனிஸ்ட் அறிக்கை வேறு வரிகளில் குறிப்பிட்டு உள்ளது. விரிந்த அளவில் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதன் விளைவாகவும், உழைப்புப் பிரிவினையின் விளைவாகவும், பாட்டாளிகளுடைய வேலையானது, தனித்தன்மையை முற்றிலும் இழந்து விட்டது. ஆதலால் தொழிலாளிக்கு அவரது வேலை அறவே சுவையற்றதாகி விட்டது. இயந்திரத்தின் துணையிருப்பு போல் மாறி விடுகிறார். மிகவும் எளிமையான அலுப்பு தட்டும் படியான ஒரேவிதமான சுலபமாக பெறத்தக்கதுமான கைத்திறன் தான் அவருக்கு தேவைப்படுகிறது. எனவே, தொழிலாளியினது வருமானம் முற்றிலும் அவரது பராமரிப்பிற்கும் அவரது குடும்பத்திற்குமான பிழைப்புச் சாதனங்களுக்குமே பற்றாத அளவிற்கு குறுகி விடுகிறது. வேலை எவ்வளவுக்கு எவ்வளவு வெறுக்கத் தக்கதாக அமைகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு கூலியும் குறைகிறது. இயந்திரங்களின் பயன்பாடும், உழைப்புப் பிரிவினையும் அதிகரிக்க அதிகரிக்க வேலைப் பளூவும் அதிகமாகிறது. வேலை நேரத்தை அதிகமாக்குவதன் மூலமோ, குறிப்பிட்ட நேரத்தில் வாங்கப்படும் வேலையை கூடுதலாக்குவதன் மூலமோ, இயந்திரங்களின் வேகத்தை அதிகப்படுத்துவதன் மூலமோ இது நடந்தேறுகிறது என குறிப்பிடுகிறது.
இன்றைக்கு நாம் சந்திக்கும் எண்ணிலடங்காத இளைஞர்கள் 160 ஆண்டுகளுக்கு முன்பு கார்ல் மார்க்சும், ஏங்கெல்சும் சுட்டிக்காட்டிய கொடுமைகளைத் தான் அனுபவிக்கின்றனர். ஐரோப்பிய கண்டத்தில் அவர்கள் 160 ஆண்டுகளுக்கு முன்பு கண்ட நிலையை இந்தியா போன்ற வளரும் நாடுகள் இன்று அமலாக்கி வருகின்றனர். இதன்காரணமாகவே, நாம் முதல் கட்டுரையில் குறிப்பிட்ட பல்வேறு சீர்குலைவு வாத கருத்துக்கள் தலைதூக்குகின்றன. தனியார் முதலாளிகளை கட்டுப்படுத்த வேண்டிய அரசு, அதே பாதையில் பயணம் செய்ய விரும்புவதால், இந்த அரசு தன்னை முதலாளித்துவ அரசு என பகிரங்கப்படுத்தியுள்ளது. இந்தியாவின் மத்திய அரசும், தமிழக அரசும் மேற்படி பாதையில் பயணிப்பதுடன், பாதை போட்டவர்களுக்கு பாதபூஜையும் நடத்துகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக