இப்பூவுலகில் 130 கோடி இஸ்லாமியர்கள்
வசிக்கின்றனர். உலக மக்கள் தொகையில் 6ல் ஒரு பங்கு எனக் கொள்ளலாம். இவர்களில் மூன்றில்
ஒரு பகுதியினர், தெற்கு ஆசியாவிலும், மேற்கு
ஐரோப்பாவில் 60 லட்சம் இஸ்லாமியர்களும் இருப்பதாக அறியமுடிகிறது. அமெரிக்காவில் உள்ள
30 லட்சம் இஸ்லாமியர்களில், 10 ஆயிரம் பேர் அந்நாட்டு ராணுவத்தில் பணிபுரிகின்றனர்.
இந்தியாவில், 13 சதம் மக்கள் இஸ்லாமியர்கள். இத் தகவல்களுக்கான பொருள், தெற்காசியா,
மேற்கு ஐரோப்பா, அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளில் மற்ற சமூக மக்களுடன் கலந்து, உறவாடித்
தான், இஸ்லாமிய மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
அதே போல் இஸ்லாம் சட்டங்கள் அமலில் இருக்கும், மேற்கு ஆசியாப் பகுதியில், இஸ்லாமியர்
அல்லாத இதர பகுதி மக்களுடன், உரிமைகளை பகிர்ந்து தான் வாழ்ந்து வருகின்றனர். ஆனாலும்,
ஒரு இஸ்லாமிய அடையாளம் கொண்ட இளைஞனைப் பார்க்கிற மனிதன், ஊடகங்கள் சித்தரித்த மன உணர்வுடன்,
ஒரு தீவிரவாதியாகவே பார்க்கிறோம். நியாயமா?
தி ரேஜ் ஆஃப் இஸ்லாம், தி குளோபல்
இண்டிஃபடா, தி ரூட்ஸ் ஆஃப் முஸ்லீம் ரேஜ், தி டேகர் ஆஃப் இஸ்லாம், தி ஹோலி கில்லர்ஸ்
ஆஃப் இஸ்லாம், ஆகிய நூல்களும், தி ஸ்வோர்ட் ஆஃப் இஸ்லாம் என்ற தொலைக் காட்சிப் படமும்,
இஸ்லாத்திற்கு எதிரான மேலோட்டமான, ஆய்ந்தறியப் படாத, கருத்துக்களைக் கொண்டுள்ளன. மேற்கு
உலகம் அமெரிக்கா தலைமையில் மேற்கொண்டுள்ள இந்தப் பிரச்சாரம், இந்திய மண்ணிலும், பரவலாகக்
காணப் படுகிறது. மற்றவர்களை விடவும், இந்தியாவில் கூடுதலாக இந்து வகுப்பு வாதம் வளர்ந்திருப்பதும்,
மேற்படி உணர்வை பாலூட்டி வளர்க்க உதவி வருகிறது, என்பதை ஏ.ஜி. நூரணி தெரிவிக்கிறார்.
2011ல், நடந்த உலக வர்த்தக மையத்தின்
மீதான தாக்குதலை விளக்க ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தலைவர் கே.எஸ். சுதர்சன், ஆர்கனைசர்
இதழில் எழுதுகிற போது, இதுகாறும் வரலாறு நமக்கு உணர்த்துவது, என்னவெனில், இஸ்லாமியர்கள்
சகிப்புத் தன்மைக்கு இடமற்ற சண்டைப் பாதையிலேயே, பயணித்ததால்தான், ரத்த ஆறுகளில் மூழ்கிக்
கிடக்கிறார்கள், என்று குறிப்பிடுகிறார். இந்த விளக்கங்கள் தான் இன்று இந்தியாவில்
உள்ள சாதாரண, நடுத்தர மக்களின் பொது புத்தியில் உறைந்திருக்கிறது. இதன் விளைவே, நாம்
தீவிரவாதி கண்ணாடி அணிந்து இஸ்லாமியரை நோக்கிடக் காரணமாக அமைந்து விட்டது.
கடந்த காலங்களில் இந்துத்துவா
அமைப்புகள், இஸ்லாமியர் குடும்பக் கட்டுபாடு செய்து கொள்வதில்லை, எனவே 10 ஆண்டுகளில்
இஸ்லாமியர் எண்ணிக்கை தீவிரமாக உயர்ந்து, இந்துக்கள் பின்தங்குவர் என்றனர்.
இஸ்லாமியருக்கு,
வேலை, கல்வி போன்றவற்றில் கொடுக்கிற முன்னுரிமை, ஆபத்தானதாக முடியும். வெளி நாடுகளில்
இருந்து வரும் பண உதவிகளால், இஸ்லாமியர் வேகமான வளர்ச்சி பெற்று வருகின்றனர். என்றெல்லாம்
பிரச்சாரம் மேற்கொண்டனர். 2006ம் ஆண்டு நவம்பர் 17 அன்று, நீதிபதி. ராஜேந்தர் சிங்
சச்சார் தலைமையிலான 7 பேரைக் கொண்ட குழு, ஒன்னரை ஆண்டு காலம் ஆய்வு மேற்கொண்டு முன்வைத்த
அறிக்கை மூலம் தான் மேற்படிப் பிரச்சாரம் தவறு என்று புரிந்து கொண்டோம்.
ஏற்கனவே இந்தியாவில் முஸ்லீம்
மக்களின் மேம்பாடு குறித்து வழிகாட்ட பல குழுக்கள் அமைக்கப் பட்டன. 1870ம் ஆண்டில்
வைசிராய் ஆக இருந்த, லார்ட் மியோ சர் வில்லியம் ஹண்டர் என்பவர் தலைமையில் குழு அமைத்து,
பலபரிந்துரைகளை கண்டடைந்தனர். 1935ம் ஆண்டில், மான்ஸ் ஸ்டூவர்ட் எல்பின்ஸ்டோன் என்பவர்,
தலைமையில் அமைக்கப் பட்ட குழு, தாழ்த்தப் பட்ட ஏழை இந்துக்களுக்கு உள்ள சலுகை போல்,
இஸ்லாமியர்களில் பின்தங்கியவர்களுக்கும், இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அதற்கென சட்டம்
வேண்டும் என குறிப்பிட்டார். பின்னர் இந்திரா காந்தியின் ஆட்சியின் போதும், நீதிபதி
கோபால் சிங் என்பவர் தலைமையில் குழு அமைக்கப் பட்டு, சில பரிந்துரைகள் இஸ்லாமியர்களின்
முன்னேற்றத்திற்காக வழங்கப் பட்டது. அதன் பிறகே சச்சார் குழு 2005 ல் அமைக்கப் பட்டது.
மேற்படிக் குழுக்கள் அனைத்தும்
இந்தியாவில் உள்ள முஸ்லீம் மக்கள் மிகவும் சமூக, பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கி உள்ளனர், என்பதை ஆணித் தரமாக தெரிவித்துள்ளது.
சச்சார் குழு, இந்திய இஸ்லாமிய மக்களின் வாழ்க்கை நிலைபாடுகளை ஆய்வு செய்து மூன்று
தளங்களாகப் பிரித்துள்ளது. 1. முஸ்லீம் மக்களின் அடையாளம் சம்மந்தப் பட்டது. 2. இஸ்லாமிய
மக்களின் பாதுகாப்பு சம்மந்தப் பட்டது. 3. சமவாய்ப்பு பற்றியது
.
அடையாளத்தைப் பொருத்தளவில், இஸ்லாமியர்கள்
ஒட்டு மொத்தமாகவே, தேச விரோதிகள் என்ற முத்திரை குத்தப் படுகின்றனர். சினிமா, தொலைக்காட்சி,
பத்திரிக்கை, வானொலி, உள்ளிட்டவை ஒருதலைப் பட்சமாக செய்தி வெளியிடுகின்றன. மறுபுறம்
இஸ்லாமிய வாக்கு வங்கிக்காக, பல சலுகைகளையும், வாய்ப்புகளையும் வாரி, வாரி வழங்கி வருகிறது
என்ற குற்றச்சாட்டும் சுமத்தப் படுகிறது.
இஸ்லாமியர்களின் பாதுகாப்பு குறித்த
வகையில், அவர்களின் குடியிருப்புப் பகுதியில், காவல் துறை அத்துமீறி நடந்து கொள்கிறது.
தாங்கள் ஐ.எஸ்.ஐ முத்திரை குத்தப் பட்டு, அவமானப் படுத்தப் படுவோமோ, என்ற அச்சத்திலும்,
தாழ்வு மனப்பான்மையிலும் தான் இந்திய இஸ்லாமியர்கள் வாழ்கின்றனர், என சச்சார் கமிட்டி
தெரிவிக்கிறது. இதை இந்திய சிறைச்சாலைகளில் அடைக்கப் பட்டுள்ள இஸ்லாமியர்களின் எண்ணிக்கையைக்
கணக்கில் கொண்டால் புரிந்து கொள்ளலாம். மகராஷ்ட்ராவில் முஸ்லீம்களின் மக்கள் தொகை
10.6% ஆனால், சிறையில் இருக்கும் முஸ்லீம்கள் 40.6%. குஜராத்தில் 9.6% முஸ்லீம்கள்
வாழ்கின்றனர். ஆனால் சிறையில் 25% உள்ளனர். தமிழ் நாட்டிலோ 5.6% தான் வசிக்கின்றனர்.
ஆனால் சிறையிலோ 9.6% பேர் உள்ளனர். இவர்களில் பலர் எந்த விசாரணையும் செய்யப் படாமல்
நீண்ட நாட்களாக உள்ளனர், என்பதையும் சச்சார் குழு தெரிவிக்கிறது.
அதே நேரத்தில் காவல் துறையில்
பணி புரிவோர் குறித்த விவரம் சேகரித்ததில் இருந்து, அநேகமாக அனைத்து மாநிலங்களிலும்
இஸ்லாமியருக்கான வாய்ப்பு மிகக் குறைவாக இருக்கிறது. தமிழ் நாட்டு முஸ்லீம்களில் இருந்து,
0.11% நபர்கள் மட்டுமே காவலர்களாக உள்ளனர். 50 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகக் காவல்துறையில்
20% முஸ்லீம்கள் இருந்துள்ளனர், என்பதையும் தெரிவிக்கின்றனர். அரசுத் துறைகளில் இஸ்லாமியர்களின்
பங்கேற்பு குறித்து தீவிரமாக விவாதிக்க வேண்டியுள்ளது .ஐ.ஏ.எஸ் 3%, ஐ.எஃப்.எஸ்
1.8%, ஐ.பிஎஸ் 4%, நீதிதுறை 7.8, சுகாதாரத் துறை 4.4%, போக்குவரத்துத் துறை 6.5%, உள்துறை
7.3%, கல்வித்துறை 6.5%, பொதுத்துறை 7.2%. இது இஸ்லாமிய மக்களின் பங்கேற்பு, மக்கள்
தொகை சதவீதத்தை விடவும் குறைவாக உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். தேசிய அளவில்
கல்வி அறிவு பெற்றோர் 74.5% என்றால், இஸ்லாமியர் எண்ணிக்கை 59.1%தான். ஐ.ஐ.எம், ஐ.ஐ.டி
ஆகிய உயர்கல்வி பெறுவோர், மிகக் குறைவு.
மேற்படி விவரங்களை மத்திய அரசு
நியமித்த சச்சார் குழு கண்டறிந்து தெளிவு படுத்தியுள்ளது. மேலும் அக் குழு தெரிவித்த
சிபாரிசுகளை அமலாக்குவது குறித்து மத்திய அரசு தீவிர செயல் பாடுகளைத் துவக்க வேண்டும்.
அரசின் மீது நீதி மன்றத்தில் வழக்குத்
தொடர அனுமதி, ஆந்திரா போல் உள்ளாட்சி மன்றங்களில் வாய்ப்பு, தனித் தொகுதி ஏற்பாடுகள்,
கல்வி வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு, மதரசா பட்டங்களை அங்கீகரித்து சிவில் தேர்வுகளுக்கான
அனுமதி, உள்ளிட்ட பரிந்துறைகள் உடனடியாக அமலாக்கப் படவேண்டும்.
இது குறித்த விவாதம் நடைபெறுகிற
போது கம்யூனிஸ்டுகள் ஆட்சியில் இருந்த மேற்கு வங்கத்தில் 25.25% மக்கள் இஸ்லாமியர்களாக
இருந்த போதிலும், கல்வி, வேலை வாய்ப்பில் போதுமான நடவடிக்கை எடுக்க வில்லை, என குற்றம்
சுமத்துகின்றனர். இதில் ஒரு பகுதி உண்மை என கம்யூனிஸ்டுகளே ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால்,
நில விநியோகத்தில் 25.6% இஸ்லாமியர்கள் பலனடைந்துள்ளனர், என்பதைக் காணத் தவறுகின்றனர்.
2009 டிசம்பரில், நீதிபதி ரங்கநாத்மிஸ்ரா கமிஷன் இஸ்லாமியருக்கான இட ஒதுக்கீடு குறித்து
அறிக்கை தாக்கல் செய்த பின்னர், 2010 ஜனவரியில் கல்வி, வேலை வாய்ப்பில் 10 சதம் இஸ்லாமியருக்கான
இட ஒதுக்கீடு என அறிவித்த மாநிலம் அன்றைய கம்யூனிஸ்டுகள் தலைமையிலான இடது முன்னனி ஆட்சியே.
எனவே சச்சார் குழு பரிந்துரைகளைப்
படிப்பதும், இஸ்லாமிய மக்களின் வாழ்க்கை குறித்து அறிவதும், இந்தியராய்ப் பிறந்த குடி
மக்களின் கடமை. அப்போது தான் இந்து வகுப்பு வாதிகளின் பிரச்சாரத்தில் உள்ள விஷத்தன்மையைப்
புரிந்து கொள்ளமுடியும்.