செவ்வாய், 2 மே, 2023

 இரக்கம் அற்ற கொடிய மிருகங்களின் நரவேட்டைக்கு, பலியான மக்கள் நூற்றாண்டைக் கடந்து, நினைக்கப்படுகிறார்கள். அவர்கள் சிந்திய ரத்தத்தின் 28 ஆண்டுகள் கடந்து, இந்தியாவிற்கு பிரிட்டிஷாரிடம் இருந்து, விடுதலை கிடைத்தது. ஆம் ஜாலியன் வாலாபாக் மைதானத்தில், பொது மக்கள் 400 பேர் வரையிலும்  படுகொலையான நாள், 1100 க்கும் மேலானோரை, குற்றுயிரும், கொலை உயிருமாக துப்பாக்கி குண்டுகள் துளைத்த நாள். ஏப் 13, 1919. மைதானத்தின் உள்ளே இருந்த கிணற்றில் இருந்து மட்டும் 200 க்கும் அதிகமானோர் சடலமாக எடுக்கப்பட்டனர்.

விடுதலைக்கு முந்தைய இந்தியாவில், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் நிகழ்த்திய பல நரவேட்டைகளில் ஒன்று ஜாலியன் வாலா பாக் படுகொலை. ஒன்று பட்ட பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநர் மைக்கேல் டயர் பிறப்பித்த ரௌலட் சட்டம், இந்த படுகொலைக்கு காரணமாக அமைந்தது. காவல் அதிகாரி, டையர் சுட்டேன் சுட்டேன் துப்பாக்கி குண்டுகள் தீரும் வரை சுட்டேன் என கொக்கரித்தான். இன்றும் நினைவு சின்னமாக, பெரும் தாக்கத்தை இந்தியா முழுவதும் ஏற்படுத்தி வருகிறது. அமிர்தசரஸ் நகரில், சீக்கியர்களின் பொற்கோவில் அருகில் உள்ள ஜாலியன்வாலா பாக். இந்தியாவின் பொன்விழா சுதந்திரம் கொண்டாட பட்ட போது, ஜாலியன் வாலா பாக்கிற்கு வருகை தந்த, பிரிட்டிஷ் அரசி எலிசபத், இந்திய மக்களிடம் ஜாலியன் வாலாபக் நிகழ்வுக்காக, மண்ணிப்பு கோரினார்.

 

ஏன் மேற்படி கொலைவெறி:

 

இன்றைய பாகிஸ்தானில் இருக்கும், பஞ்சாப் உள்ளிட்டது, ஒன்றுபட்ட பஞ்சாப். இந்த பஞ்சாப் கதர் இயக்கத்தை சார்ந்தோரால், பெருமளவில் ஈர்க்கப்பட்டு இருந்தது. முதலாம் உலகப்போர் முடிவுற்ற நிலையில் இந்தியாவின் சார்பில் ஏராளமான ராணுவ வீர்ர்கள் பிரிட்டிஷாருக்கு ஆதரவாக, உலகின் பல்வேறு பகுதிகளில் போரிட்டனர். குறிப்பாக ஐரோப்பாவின் பல பகுதிகளில் போரிட்டதன் விளைவாக, அவர்கள் தங்கள் சொந்த மண்ணின் விடுதலைக்காக போர் செய்யும் உணர்வை பெற்றனர். எனவே முதலாம் உலக போர் நிறைவு பெற்ற நிலையில், இந்தியாவிற்கு திரும்பிய போது, தீவிரப் போராட்டங்களில் பங்கெடுத்தது, பிரிட்டிஷாருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது.

மேலும் அதே காலகட்டத்தில் தான் ரஷ்யாவில் கம்யூனிஸ்ட்டுகள் தலைமையிலான புரட்சி வெற்றி பெற்று, சமூக மாற்றத்தைக் கண்டு இருந்த து. இதுவும் இந்தியவில் விடுதலைக்கான போராட்டத்தை நடத்தி வந்த இளைஞர்களிடம் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த பின்னணியில் கதர் இயக்கத்தினர் மேற்கொண்ட ஆயுதப் போராட்டத்தை மிக் கொடிய முறையில் பிரிட்டிஷ் ராணுவம் ஒடுக்கியது. பலநூறு பேர் தூக்கிலிடப்பட்டனர்.

 

இந்த கொடிய அடக்குமுறையும், ரஷ்யப்புரட்சியின் தாக்கமும், சத்யபால்சிங் மற்றும் சைபுதீன் கிட்ஜூ ஆகிய தேசிய தலைவர்களை கைது செய்த அடக்குமுறையும் மக்களிடையே கடும்கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. ஏதாவது சிறு துரும்பு கிடைத்தாலும் பெரும் போராட்டம் வெடிக்கும் என பிரிட்டிஷார் எதிர் பார்த்திருந்தனர். எனவே தான் பஞ்சாப் மாகாணத்தின் ஆளுநர் ரௌலட் சட்டத்தை அமலாக்கியிருந்தார். கூட்டம் நடத்த தடை, மக்கள் கூடும் விழாக்களுக்கும் தடை இருந்தது.

 

பைசாகி என்பது சீக்கியர்கள் 1669 ல் இருந்து குருகோவிந்த் சிங் கொண்டாட துவங்கிய அறுவடை திருவிழா. இந்த விழா ஏப் 13 அன்று கொண்டாட பட இருந்தது. ரௌலட் சட்டம் காரணமாக, இந்த விழாவிற்கும், அதைத் தொடர்ந்து மக்கள் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இது மக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. மற்றொருபுறம் விடுதலைப் போராட்டக்காரர்கள் தீவிரமான திரட்டுதலுடன் ரௌலட் சட்டத்திற்கு எதிரான மக்கள் கூட்டத்தை நடத்த திட்டமிட்டனர். அதன் விளைவாக ஆயிரக்கணக்கில் மக்கள் கூடினர்.

 

ஆனால் அச்சத்தில் இருந்த ஆட்சியாளர்கள், ஜெனரல் டயர் தலைமையிலான காவலர்களை அனுப்பி, ஒரு வழி மட்டுமே இருந்த மைதானத்தின் வாயிலில் நின்று கொண்டு களைந்து செல்ல அறிவிப்பு வெளியிடாமல், மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது. 1650 ரவுண்டுகள் சுட்டதாக டயர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளான்.

 

ஹன்டர் விசாரணைக்குழுவும், முடிவும்:

 

பலநூறு பேர் மிக கொடியமுறையில் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் தீவிரமானது. ஏப்ரல் 13.1919 ல் நடந்த இந்த படுகொலையைத் தொடர்ந்து, இந்தியா முழுவதும் வீசிய போராட்ட அலை, 1921 ல் ஒத்துழையாமை இயக்கமாக உருவெடுத்தது.

ஆங்கிலேய அரசு ஹன்டர் என்ற பிரிட்டிஷ் அதிகாரி தலைமையில் ஒரு குழுவை நியமித்து விசாரிக்க சொன்னது. மேற்படி குழுவில், 6 பேர் ஆங்கிலேயர், 3 பேர் இந்தியர். இவர்கள் பலதுறையின் அறிவாளிகள் என்ற போதும், ஜனநாயக குரலை ஒடுக்குவதில் ஒன்றுபட்டு இருந்தனர் என்பதை மறுக்க முடியாது. விசாரணை முடிவில், மக்களை களைந்து செல்ல சொல்லியிருக்க வேண்டும், முன் அனுமதி இன்றி மக்கள் கூடினர், அனுமதி மறுக்க பட்ட விவரத்தை மக்களுக்கு கொண்டு சேர்திருக்க வேண்டும், நீண்ட நேரம் துப்பாக்கி சூடு நடத்தியிருக்க கூடாது போன்ற வார்த்தைகளுடன் விசாரணைக் குழு தனது அறிக்கையை சமர்பித்தது.

 

துப்பாக்கி சூடு நடத்திய டயர், 1927 ம் ஆண்டில் இயற்கை மரணம் அடைந்தான். ஆனால் இதற்கு மூலகாரணமான மைக்கேல் டையர், பஞ்சாப் மாகாண கவர்னர், ஓய்வு பெற்று லண்டனுக்கு சென்ற பிறகு, 1940 ஆண்டில், மார்ச் 13 அன்று, உத்தம்சிங்கினால் சுட்டுக் கொல்லப்பட்டான்.

 

இன்றைக்கும் அரசுகளின் துப்பாக்கி சூடுகளும் விசாரணைக் குழுக்களும் எப்படி உள்ளது, என்பதற்கு ஜாலியன் வாலாபாக் ஒரு உதாரணம். ஷாஹின் பாக் போராட்டங்கள் அடக்கப்படுவதும் உதாரணம். நூறு ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், தியாகிகளை போற்றுவதும், சுரண்டலுக்கும், ஒடுக்குமுறைக்கும் எதிரான போராட்டங்களை வலுப்படுத்துவதும், ஜனநாயக குரலை பாதுகாப்பதும், தியாகிகளுக்கு செலுத்தும் அஞ்சலியாகும்.

 மத்திய, மாநில அரசுகள் சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளி அதிகம் கொண்டவை என்பது போலவே, கொரானாவிற்கும் அதன் அறிகுறிகளுக்குமான இடைவெளி அதிகரித்து வருகிறது. கோவிட் 2 வைரஸ் இந்திய ஆட்சியாளர்களையும், அறிவியலாளர்களையும் தினறச்செய்கிறது. குறிப்பாக உலகின் பல நாடுகள் தங்கள் நாடுகளில், குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று கண்டறியப்படவில்லை என்றது. அடுத்து சளி, இருமல், காய்ச்சல் ஆகிய அறிகுறிகள் கொரானவை கண்டறிய உதவும் என்றனர். ஆனால் இந்தியாவில் மேற்கண்ட இரண்டுமே பொய்த்துப் போய் உள்ளது. குழந்தைகள் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 104 குழந்தைகள் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அடுத்து கண்டறியப்பட்ட நோயாளிகளில் 80 சதமானோர் எந்தவித அறிகுறியும் காணாதவர்கள் ஆவர். 


அதாவது சத்தான உணவு இல்லாமை, பிற நாடுகளின் வயோதிகர்களும், நம் ஊரின் குழந்தைகளும் ஒரே விதமான பாதிப்பிற்கு ஆளானதை, வெளிப்படுத்துகிறது. இரண்டாவது பெரும்பான்மையான மக்கள் நெடுங்காலமாக பல நோய்த் தொற்றுகளுடன் அல்லது, நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இதன் காரணமாகவே, பிறநாடுகளில் இருந்த அறிகுறிகள், இங்கு வெளிப்படவில்லை. இவை. இரணடையும் எதிர்கொள்ள சத்தான உணவு உட்கொள்ளும் பழக்கத்தை மேம்படுத்த வேண்டியுள்ளது. மற்றொருபுறம், வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும். ஆனால் இவை இரண்டையும் செய்யக் கூடிய கொள்கைகளைக் கொண்டதாக மத்திய மாநில ஆட்சியாளர்கள் இல்லை. இன்றைய தொற்று நோய் பரவல் காலத்திலும் அதற்கான நடவடிக்கையை, மேற்கொள்ள தயாராகவும் இல்லை. 


காய்ந்த வயிறில் கட்டிக்கொள்ள வழங்கப்பட்ட ஈரத்துணி:


டெங்கு ஜுரத்தில் இருந்து தப்பிக்க, ஆறுமாதம் நிலவேம்பு கசாயம், தற்போது, கபசுர குடிநீர், அடுத்து என்ன? என்பது தான் தொழிலாளர்களின் வாழ்நிலை. பிரதமர் ஒருமுறை தனது உரையில் கசப்பு மருந்து நல்லது என்று பேசினார். ஆறு ஆண்டுகளாக பெரும்பான்மையோர் என்ற தொழிலாளர்களுக்கு கசப்பு மருந்து மட்டுமே வழங்கி வருகிறார். டெங்கு ஜூரத்தைக் கடந்து வாழ்க்கையை தனது உழைப்பின் மூலம் நடத்த முயற்சித்த தொழிலாளர்கள், கொரானா பொது முடக்கத்தில், எழுத்திருக்க முடியாத நிலையில் உள்ளனர். மாநில அரசின் அறிவிப்பான ஆயிரம் ரூபாய் என்பதை, தொலைக்காட்சியில் பார்க்க முடிகிறது, கையில் கிடைக்காதோர் பலலட்சம் உள்ளனர். பட்டியலில் இல்லாதோரும் பல லட்சம் பேர் உள்ளனர். சர்க்கரை என வெள்ளைத்தாளில் எழுதி நக்கினால், இனிக்குமா? என்பது போல் தான், இந்த நிவாரணம். அடுத்ததாக தொழிற்சங்கங்கள், எதிர் கட்சிகள் வலியுறுத்திய, குறைந்த பட்ச நிவாரணம் 7500 ரூபாய் என்ற கோரிக்கை குறித்து பரிசீலிக்க, மத்திய, மாநில அரசுகள் தயாரில்லை. 


உலகின் பல நாடுகள் குறிப்பாக தென் கொரியா தன் நாட்டில், 57400 ரூ(820 டாலர்) அளவிற்கான நிவாரணத்தொகையை அறிவித்தது. சீனா குறைந்த பட்ச கூலி என்ன தீர்மானிக்க பட்டதோ அது மாதா மாதம், அமைப்புசாரத் தொழிலாளர்களுக்கு வழங்கப் படும் என்றும், ஜப்பான் 928 அமெரிக்க டாலர் ( 64960 ரூ) நிவாரணத்தொகையாக அறிவித்தது. பிரேசில் 8400 ரூ ஒவ்வொரு மாதமும் என அறிவித்தது. இவையெல்லாம் இந்தியா போல் வளரும் நாடுகள் பட்டியலிலுள்ள நாடுகள் ஆகும். இவை அனைத்திற்கும் பிரதமர் மோடி, ஒருமுறையோ அல்லது அதற்கும் மேலோ பயணம் செய்து பல ஒப்பந்தங்களைக் கண்டவர். ஆனால் இந்தியா நாடு முழுவதும் அவ்வாறு ஒரு வழிகாட்டுதலைத் தரவில்லை. மூன்று முறை முதல்வர்களுடனும், கம்யூனிஸ்ட் கட்சிகளை தவிர்த்த இதர கட்சி தலைவர்களுடன் ஒரு முறையும், மூன்று முறை தொலைக் காட்சி மூலமும் பிரதமர் உரை நிகழ்த்தி இருக்கிறார். ஆனால் மேலே குறிப்பிட்ட நாடுகள் கூறியது போல், எந்த ஒரு அறிவிப்பையும், வெளியிடவில்லை. மாறாக கைதட்டு, விளக்கேற்று, ஆரோக்கிய சேது ஆப்பை பதிவிறக்கம் செய், தனித்திரு, விலகி இரு, வீட்டில் இரு என இலவச அறிவுரைகளை மத்திய, மாநில அரசுகள் வழங்கி வருகின்றன. 


எல்லாவற்றிற்கும் மேலாக, மாநிலம் விட்டு மாநிலம், மாநிலத்திற்குள்ளேயே என இரு ரக இடம்பெயர் தொழிலாளர்களும், மிகக் கடுமையான பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். அழைத்து வந்த ஒப்பந்த தாரர்களும், முதன்மை பணி வழங்குவோரும், சில இடங்களில் உதவினால் பெரும்பாலான இடங்களில் அரசின் நிவாரணங்களை எதிர் பார்த்து, ஏமாந்து நிற்போராக துயரத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். வேறு எந்த நாட்டிலும் இந்த அளவிற்கு இடம்பெயர் தொழிலாளர்கள் எண்ணிக்கை இருந்திருக்குமா? அல்லது இப்படி கண்டு கொள்ளாமல் விட்டிருப்பார்களா தெரியவில்லை. ஆனால் நியாயமற்ற செயலாக, 40 நாள்களும் நீடிக்கிறது. டில்லியில் இருந்து புறப்பட்ட தொழிலாளர், சூரத் நகரில், மும்பை பந்ரா ரயில் நிலையத்தில் என பெருத்த ஏமாற்றத்துடன் கூடியவர்களை, மௌனமாக வேடிக்கை பார்க்கும் அரசாக, பாஜக ஆட்சி உள்ளது. 


இந்த ஆட்சியாளர்களுக்கு துதிபாடும் பணியை நீதிமன்றங்கள் செய்கின்றன, என்ற குற்றச்சாட்டை, நீதிமன்றத்தில் பகிரங்கமாக வைக்க வேண்டிய அவலம் உருவாகியுள்ளது. இடிப்பாரை இல்லா ஏமறா மன்னன், என்பது போல், பல தன்னாட்சி அமைப்புகள் இக்காலத்தில், பாஜக ஆட்சியின் கீழான மற்றொரு, அமைச்சரவையாக மாறிவருகிறது. கொரானா பாதிப்பு பொது முடக்க காலத்தில், இது மக்களின் பிரச்சனைக்களுக்காக குரல் கொடுக்கும், இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. 


மேற்படி இலவச ஆலோசனைக்கான மூலக்கரு, நிவாரணத்திற்காக கையேந்தி நிற்கும் தொழிலாளர்கள், உழைப்பு என்ற அவர்களின் சரக்கை விற்பனை செய்ய வழியில்லை எனவே வேலையில்லா நாள்களுக்கு, உரிமையுடன் கூலி கேட்பதற்கான தகுதியை இழந்து விடுகின்றனர், என்பதாக உள்ளது. அமைப்பு சார்ந்த அல்லது அமைப்பு சாராத் தொழிலாளி என எப்படி இருந்தாலும், அவர் பெறும் கூலி, முழு உழைப்பு நேரத்தில் பாதி அளவாக மட்டுமே உள்ளது. இதன் காரணமாக தான், ஒரு நிறுவனம் பலவாக பெருகுகிறது. புதிய அசையா சொத்துக்கள் அதிகரிப்பு, தொழிலாளியின் உழைப்பில் இருந்தே உருவாகிறது, என்ற முதலாளித்துவப் பொருளாதாரம் குறித்து காரல்மார்க்ஸ் கூறியதை, வலுவாக வாதிடுவதன் மூலமே, உரிமையுடன் நிவாரணத் தொகையைப் பெற வழிவகுக்கும்.



முதுகில் குத்தும் குத்தீட்டி 2:


ஏற்கனவே, தொழிலாளர்களை வதைக்கும் சட்டத் திருத்தங்களை மத்திய பாஜக ஆட்சி செய்து வருகிறது. இந்த பொது முடக்க காலத்தை கூடுதலாக பயன்படுத்தி,  முதலாளித்துவ விசுவாசத்தை பாஜக ஆட்சி அதிகப்படுத்தி வருகிறது. முதலில், வேலை நேரத்தை, 8 மணியில் இருந்து 12 மணிநேரமாக உயர்த்தும், திருத்தத்தை மேற்கொண்டது. தற்போது தொழிலுறவு சட்ட திருத்தங்களை 8 நாள் என்கிற குறுகிய அவகாசத்தில், நாடாளுமன்ற நிலைக்குழு மக்களவை தலைவர் ஓம்பிர்லாவிடம் தாக்கல் செய்திருக்கிறது. ஏப்ரல் 14 அன்று தொலைக்காட்சியில், மோடி உரைநிகழ்த்தினார். ஏப்ரல் 15 அன்று நிலைக்குழு தலைவர், பிஜு ஜனதா தள தலைவர், பர்த்துரு ஹரி மகத்தா, தனது குழு உறுப்பினர்களுக்கு மெயில் மூலம் ஆவணங்களை அனுப்பி, 8 நாள்களுக்குள் கருத்துக்களைக் கேட்டுள்ளார். 21 பேர் கொண்ட குழுவில் மார்க்சிஸ்ட் கட்சியைச் சார்ந்த, எளமரம் கரீம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த, க.சுப்பராயன், தி.மு.க வைசார்ந்த மு. சண்முகம் ஆகியோர் மட்டுமே மாற்று கருத்துக்களை முன் வைத்துள்ளனர். நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரையிலும், அமைக்கப்பட்ட நிலைக்குழு, இவ்வளவு விரைவாக அறிக்கை தாக்கல் செய்தது, இதுவே முதல் முறையாக இருக்கக் கூடும். 


பிரதமர் மோடியின், உரைக்கும், நிலைக்குழு அறிக்கை தாக்கல் செய்ததற்கும், என்ன தொடர்பு என்பதே மிக முக்கியமானது. மோடி தனது உரையில், நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்வதோ, குறைப்பதோ கூடாது, ஏப்ரல் மாதத்திற்கான ஊதியத்தை வழங்க வேண்டும், என்பதை வலியுறுத்தினார். மறுநாளே மெயில் மூலம் கருத்து கேட்பு நடத்திய, நிலைக்குழு மூன்று உறுப்பினர்களின் எதிர்ப்புடன், இக்காலத்திற்கான ஊதியத்தை வழங்க, தனியார் நிறுவனங்களிடம் கட்டாயப் படுத்த முடியாது எனக் கூறியுள்ளனர். ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசமாக நிலைக்குழு செயல்பட்டுள்ளது. 


மற்றொரு புறம், மத்திய அரசை, முதலாளிகள் சங்கத்தினர் நிர்பந்திக்கும் வகையில், கருத்து தெரிவித்து வருகின்றனர். நோய் தொற்று பரவல் தடுப்பு சட்டம், எந்தவிதமான வரையறையும், ஊதியம் கூத்து கூறவில்லை. நோய் தொற்று கொண்ட நபர் வேலை செய்ய அனுமதிக்கப்பட்டால், நிர்வாக பிரிவு அதிகாரிகள் கடுமையாக தண்டிக்கப்படுவர் எனக் கூறுகிறது. இது போன்ற சட்டங்களால் பயனில்லை, உற்பத்தி துறைக்கு சாதகமாக இல்லை எனவும், கோபத்தில் உள்ளனர்.  இந்த கோபத்திற்கு வடிகால் அமைப்பதைப் போல், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒன்னரை ஆண்டுகளுக்கு அகவிலை படி உயர்வு இல்லை, என அறிவித்துள்ளது. மாநிலத்தில் உள்ள அதிமுக அரசும் அதை பின்பற்றியிருக்கிறது. தனியார் நிறுவனங்கள் அரசுகளின் வழிகாட்டுதலை பல மடங்கு வேகமாக அடுத்த கட்ட ஊதிய உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளில் கையாளும், என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.


ஆக மொத்தத்தில் எல்லா திசையிலும் தொழிலாளிகள் மீதான தாக்குதலை மத்திய, மாநில அரசுகள் அதிகரிக்கும் வேலையில், தொழிலாளர்கள் அடங்கி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதே, வரலாறு. கொதிநிலையில் இருக்கும் தொழிலாளர்கள் வழக்கத்தை விட அதிகமாக போராடுவது தவிர்க்க இயலாது. அந்தப் போராட்டங்களை, தொழிலாளி வர்க்க உணர்வு மட்டுமே, தீவிரமாக வழி நடத்த முடியும்.