சனி, 30 அக்டோபர், 2010
Viva Global Workers Struggle for Justice (Gurgaon - India).: The Viva Global Workers Struggle.
வியாழன், 28 அக்டோபர், 2010
அரசுக்குத் திட்டம் இருக்கிறது, திறம் இல்லை
இப்படி ஒரு விமர்சனத்துடன் தான், பட்டியலினத்தவருக்கான திட்டங்களில் ஒன்றான, சிறப்பு உட்கூறு திட்டங்கள் குறித்து விவாதிக்க முடியும் இந்தியாவில், 1980-81 காலங்களில், தலித் மற்றும் பழங்குடி மக்களின் முன்னேற்றத்திற்காக, சிறப்புக் கூறு நிதியை ஒதுக்கீடு செய்து, பட்ஜெட் அறிக்கையுடன் இணைத்து அமலாக்குவது என முடிவெடுத்தனர். இதை சிறப்புக்கூறு திட்டம் எனவும், பின்னர், துணைத்திட்டம் எனவும் குறிப்பிட்டனர். தலித் மற்றும் பழங்குடி மக்களின், மக்கள் தொகைக்கு ஏற்ப பட்ஜெட் தொகையில் நிதி உருவாக்கி, அந்த நிதியை சம்பந்தப்பட்ட மக்களின் சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்குப் பயன்படுத்துவது நோக்கம் என்றும் கற்பித்தனர். தலித் அறிவாளிகள் துவங்கி பலரும் வரவேற்ற திட்டமாக இருந்தது. மத்திய அரசும், மாநில அரசும் இத்திட்டத்தை அமலாக்குவதற்கான முன்மொழிவுகளையும், ஆலோசனைகளயும் நிறையவும், பலமுறை விவாதித்தும், உருவாக்கி விட்டனர். ஆனாலும் அமலாகவில்லை.
தமிழ் நாட்டில் ஓரளவு நிதி ஒதுக்கப்பட்டது என்பதை மறுக்க முடியாது. 2005-06 பட்ஜெட் ல், 2104.55 கோடி ரூபாயும், 2006-07 பட்ஜெட்- ல், 3117.86 கோடி ரூபாயும், 2007-08 பட்ஜெட்-ல் 3356.88 கோடி ரூபாயும், 2008-09 பட்ஜெட்- ல், 4178.31 கோடி ரூபாயும், 2009-10 பட்ஜெட்-ல், 4602.68 கோடி ரூபாயும் திட்ட இலக்காக குறிப்பிடப்பட்டுள்ளது. 2010-11 பட்ஜெட்-லும் 3828 கோடி ரூபாய் என முதல் முறையாககூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
முப்பது ஆண்டுகால அனுபவத்தில் நாம் விவாதிக்கும் சிறப்பு கூறு அல்லது துணைத்திட்ட நிதி குறித்து அறிவு ஜீவிகள் தவிர சாதாரண பொது மக்களுக்கு எதுவும் தெரியாது. மற்றொரு புறம் கடன் அல்லது தாட்கோ நிதி என்றும் தான் பெரும்பாலும் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. எப்படி பல பத்தாண்டுகளாக இட ஒதுக்கீடு உரிமையைப் பலரும் பயன்படுத்த முடியாமல் இருக்கிறார்களோ, அல்லது பயன் படுத்துவது புரிந்து கொள்ளப் படவில்லையோ, அது போலவே, பட்டியல் இனத்தவர்களுக்கான சிறப்பு துணைத்திட்ட நிதி ஒதுக்கீடும் சம்மந்தப்பட்டவர்களைச் சென்றடையவில்லை. இது அரசுக்கும், அதிகார வர்க்கத்திற்கும் வசதியாக அமைந்துவிட்டது. எனவே தான் அரசு இந்த நிதியை வேறு பல திட்டங்களுக்கு திருப்பி விட துணிகின்றனர். மிக சமீபத்தில், மத்திய அரசு காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் செலவினத்திற்காக பட்டியலினத்தவருக்கான நிதியை திருப்பி விட்டது. மாநில அரசு, தான் ஒதுக்கிய நிதியை, வண்ணத் தொலைக்காட்சி பெட்டி வழங்கப் பயன்படுத்தி உள்ளனர். சமத்துவபுர வீடுகளுக்கும் பயன்படுத்தியுள்ளனர். கேள்விகள் எழுந்த போது, பட்டையலினத்தவருக்கு தானே, தொலைக்காட்சி பெட்டி, வீடு கொடுத்தோம் என்கின்றனர். அப்படியானால் சிறப்பு ஒதுக்கீடு என்பதற்கு என்ன அர்த்தம். இதர சாதிப் பிரிவினருக்கு தனி நிதி ஒதுக்காமல், மேற்படி பொருள்களை வழங்கும் அரசு, தலித்துகள் பெயரில் நிதி ஒதுக்கீடு செய்து ஏமாற்றுவது, இதுவரை புரிந்து கொள்ளப் பட வில்லை
.
பட்டியலினத்தவர் துணைத் திட்டம் உருவாக்கப் பட்ட நோக்கமான, தொழில், கல்வி, வேலைவாய்ப்பு போன்ற நோக்கங்களில், ஆட்சியாளர்கள் முரண்பாடுகிற இடத்தை, நாம் உணரமுடியும். பட்டியல் இனத்தவர், பொருளாதார ரீதியில் முன்னேறி விடக் கூடாது என்பதற்காகவே, துணைத்திட்ட நிதியை, வேறு தேவைகளுக்கு செலவிட துணிவு காட்டுகிறார்களா? என்ற சந்தேகம் தவிர்க்க முடியவில்லை. குறிப்பாக வேலை மற்றும் தொழில் குறித்த வாய்ப்புகளை பட்டியலினத்தவருக்கும், பழங்குடியினத்தவருக்கும், ஒதுக்கப்பட்ட சிறப்பு நிதியைப் பயன்படுத்துவதன் மூலமே, திட்டத்தின் நோக்கமான சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை ஒடுக்கப் பட்ட மக்கள் அடைய முடியும். வேலை அல்லது தொழில் ஆகியவை, சுயமரியாதையை உயர்த்த்க் கூடியது என்பதை யாரும் மறுக்க முடியாது.
ஆனால் மத்திய அரசும், மாநில அரசும் இந்த துறையில் முன்னேற்றத்தை எட்ட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் செயல்பட வில்லை. உதாரணத்திற்கு தமிழ் நாட்டில், 2618.56 கோடி ரூபாய் கடந்த ஆண்டில் ஒதுக்கப்பட்டது. இதில், வேலை அல்லது தொழில் தேவைக்காக, 9 வகையான திட்டங்கள் அல்லது செயல் பாடுகள் மூலமாக, 144.92 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப் பட்டுள்ளது. இது மொத்த ஒதுக்கீட்டில், 5.53 சதமானம் ஆகும். இதன் மூலம் பலனடந்தவர்கள் 95742 நபர்கள். மொத்த பட்டியலினத்தவர் மக்கள் தொகையான சுமார் 1.25 கோடியில், அரசுத் திட்டத்தால் பலனைந்தவர்களை ஒப்பிட்டால் அது வெறும் 0.79 சதமானம் மட்டுமே. சமூக அந்தஸ்து படிநிலையில், முக்கியப் பங்கு வகிக்கிற, பொருளாதார முன்னேற்றத்திற்கு, வழி செய்யும் வேலை மற்றும் தொழில் வாய்ப்பை, அரசு புறக்கணிக்கிறது என்பதே, இதன் மூலம் நாம் அறிவது ஆகும்.
பலனடைந்த குறைந்த பகுதி மக்களிலும் கூட, 63295 நபர்கள் சுய உதவி குழுக்களைச் சார்ந்த தலித் பெண்கள். மூன்று வகையான திட்டங்கள் மூலம் சுய உதவிகுழுக்களைச் சார்ந்த பெண்களுக்கு பயிற்சி அளித்துள்ளனர் அல்லது நிதி உதவி போன்ற கடன் பெற்றுக் கொடுத்துள்ளனர். இதன் மூலம் சிறு பலன் இருக்கலாம் மறுக்கவில்லை. ஆனால் தொழில் வாய்ப்பையோ, வேலை வாய்ப்பையோ எந்த வகையில் உயர்த்துவதற்கு, மேற்படித் திட்டங்கள் உதவிடும்? மற்றொரு புறம் குடிமைப் பணி அதிகாரிகளை உருவாக்கும் பயிற்சி (சிவில் சர்வீஸஸ்) கொடுக்கப் பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 88 நபர்கள் மட்டுமே பயிற்சியளிக்கப் பட்டனர், என்ற செய்தி, பேரதிர்ச்சியாக இருக்கிறது. சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் தகுதியை உருவாக்குவதற்கு ஏன் அரசு வடிகட்டி தேர்ந்தெடுக்கிறது? பல லட்சம் நபர்கள் எழுதும் தேர்வுக்கு தமிழகத்தில் ஒரு சில ஆயிரம் பட்டியலினத்தவரை தயார் செய்வது குறித்து ஏன் ஆலோசிக்க வில்லை?. ஒரு வேளை சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறவில்லை யென்றாலும், வேறு தேர்வுகளுக்கு பலனளிக்கும் என்பதை ஏன் மதிப்பிடவில்லை?.
இதை விமர்சனக் கண்ணோட்டத்தில் பார்த்தால், ஆண்டுக்கு பல லட்சம் பணியிடங்களை அழித்தொழிக்கும், மத்திய, மாநில அரசுகளின் பொருளாதார கொள்கை, சிவில் சர்வீஸ் அதிகாரிகளுக்கான தேர்வை இடைவெளி இல்லாமல் நடத்துவது ஏன்?. என்ற கேள்வி எழுகிறது. உதாரணத்திற்கு, பொதுத்துறை மற்றும் மத்திய அரசுத் துறைகளில் மட்டும் சுமார் 20 லட்சம் பணியிடங்கள் அழிந்துள்ளதாக கூறுகின்றனர். மத்திய அரசு இட ஒதுக்கீடு கொள்கைப்படி 3 லட்சம் தலித் இளைஞர்களுக்கும், மாநில அரசு இடஒதுக்கீடு கொள்கைப்படி 3 லட்சத்து 60 ஆயிரம் தலித் இளைஞர்களுக்குமான வேலை வாய்ப்பு பறிக்கப் பட்டிருக்கிறது. இத்தகைய பணியிடங்களைப் பாதுக்காக்கிற வகையில் துணைத்திட்ட நிதியைப் பயன்படுத்தி இருந்தால் கூட துணைத்திட்ட நிதி பலனுள்ள வகையில் செலவிடப்பட்டிருக்கும்.
தொழில் துறையில் படித்த இளைஞர்கள் ஆர்வம் காட்டுவது தவிர்க்க இயலாதது. காலம் காலமாக தன் முன்னோர்கள் செய்த வேலைகளை செய்ய வேண்டும், என எதிர் பார்ப்பது அநாகரீக சமூகத்தின் அனுகுமுறை என்றே கொள்ளப்படும்.. துணைத் திட்டம் 16 வகையான பயிற்சிகளை முன்மொழிந்திருக்கிறது. அந்த பயிற்சிகளுக்கான வேலை வாய்ப்பை அரசு உருவாக்கும் பொறுப்பையும் ஏற்கும் போதுதான் இளைஞர்களுக்கு, நம்பிக்கை ஏற்படுத்த முடியும். சில விவாதங்கள் தொடர்ந்து முன்வைக்கப் படுகிறது. ஏன் விவசாயத் தொழிலாளர் குடும்பத்தில் இருந்து, படித்த இளைஞர்கள் சிலருக்கு, அறுவடை இயந்திரங்களை கடனாக கொடுக்க நடவடிக்கை எடுக்க கூடாது?. ஆனால் அரசு, கடந்த ஓராண்டு காலத்தில் 832 நபர்களுக்கு மட்டுமே சுய வேலைவாய்ப்பு அடிப்படையில் கடன் கொடுத்துள்ளது. 10.09 கோடி மட்டுமே இதற்காக செலவிடப் பட்டுள்ளது. இன்றைய தொழில் கொள்கை காரணமாக, சில்லரை வர்த்தகத்தில் கூட பெறும் பணக்காரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். எனவே துணைத்திட்ட நிதியினை, மாநில அரசு தனித்தனியாக கொடுத்து சிதைக்காமல், பலரை இணைத்து, கூட்டுறவு முறையில் தொழில் துவங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப் பட்டால் அரசே, கொள்முதல் நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டும்.
காலத்திற்கு ஏற்ற இத்தகைய அனுகுமுறையை துணைத்திட்ட நிதியைக் கையாளுவதில் பின்பற்ற வேண்டும். இல்லையென்றால், திரைபட நகைசுவை போல் வரும் ஆனால் வராது. இது மிக சீரிய விவாதத்திற்குறிய ஒன்று, கடந்த 30 ஆண்டுகளில் அரசு இந்த துணைத் திட்ட நிதியை எப்படி பயன்படுத்தியுள்ளது என்ற வெள்ளை அறிக்கை வெளியிடுவது அவசியம். ஏமாற்றப் பட்டு வரும் பட்டியலினத்தவரை, தொடர்ந்து திட்டத்தின் பெயர்கள் கொண்டு, ஏமாற்றாமல், செயலுக்கு கொண்டு வர அரசு அசைவது அவசியம்.
நன்றி தீக்கதிர் 27 அக்டோபர், 2010
திங்கள், 25 அக்டோபர், 2010
அனைவருக்கும் வேலை எப்போதும் சாத்தியமே!
எஸ்.கண்ணன்
அனைவருக்கும் வேலை என்ற கோரிக்கை இன்றைக்கும் பொருந்துமா? என பலரும் கேள்வி எழுப்புகின்றனர். கேள்வியில் நியாயம் உண்டா? என சிலர் தான் யோசிக்கின்றனர். ஆம் அரசு எத்தனை பேருக்குத் தான் வேலை தரும் என ஆட்சியாளர்கள் மீது தனது பரிதாபத்தை வெளியிடுவது, நடுத்தரத்து மக்கள் மட்டும் பரிமாரிக்கொள்ளும் கருத்தல்ல, உழைக்கும் மக்களும் இந்த அப்பாவித்தனத்திற்கு தள்ளப் பட்டு வருகின்றனர்.
உண்மை என்ன சொல்கிறது என்பதை அரசு வெளியிட்டு இருக்கும் தகவல்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் மட்டும் நடைபெற்றுள்ள குற்றங்களின் எண்ணிக்கையில் இருந்து அறிந்து கொள்ள முடியும். கொலைகள் 1644ஆகும். கொள்ளைகள் 21174 ஆகும். திருட்டு, பிட்பாக்கட் உள்ளிட்டவை தனி. இதில் கூடுதல் தகவல் இளைஞர்கள் தான் இத்தகைய கொடிய செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதாகும். மேற்படி தகவல்கள் மூலம் தமிழ் சமுகம் போதுமான வேலை வாய்ப்பை பெற்றிருக்கவில்லை என்பதையும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போய் இருப்பதையும் தெரிவிக்கிறது. நல்ல வேலை, சமூகப் பாதுகாப்புடனான வேலை, ஆகிய உத்திரவாதம் இன்றைய சமுகத்தில் இல்லை. இது இளம் தலைமுறைக்கு நம்பிக்கை அளிக்கவில்லை.
இவை போதாது என்று தமிழ் நாட்டில் அரசாணை எண் 170 பிறபிக்கப்பட்டு டி.ஒய். எஃப்.ஐ போராட்டத்திற்கு பின்னர் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசு அறிவிக்கப்படாத வேலை நியமனத் தடைச் சட்டத்தினை அமலாக்கி வருகிறது. இதுவும் படித்த இளைஞர்களிடம் அதிருப்தி ஏற்பட காரணம் ஆகும். தேர்தல் வந்து விட்டால் வாய் கூசாமல் வாக்குறுதி தருகின்றனர். நாஙகள் ஆட்சிக்கு வந்தால் ஆண்டு ஒன்றிற்கு 1 கோடி பேருக்கு வேலை தருவோம் என்றனர். வந்தபின் இருக்கும் வேலையைப் பறிக்கின்றனர். இவைகள் இளைஞர்களிடம் நம்பிக்கையின்மை வளர மிக்கிய காரணம் என்பதை அரசு உணரவில்லை.
உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு தீவிரவாதம், வலது இடது என இரண்டு திசையில் இருந்தும் தாக்குதல் தொடுக்கும் சூழ்நிலை உள்ள நாடு இந்தியா என்றால் மிகை அல்ல. வேலையிண்மையை தீர்க்க முடியாததன் விளைவே இத்தகைய தீவிரவாதம் உருவாகிறது. தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதற்கான வாய்ப்பு வளர்ச்சியற்ற பகுதிகளிலும், அடர்ந்த காடுகளிலும் தான் அதிகம் இருக்கிறது, என்று அரசும் ஒப்புக்கொள்கிறது. ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்க தயாராகவில்லை.
தமிழகத்தில் சாதிக்கலவரங்கள் நடந்தபோதும், மதகலவரங்கள் நடந்த போதும் அமைக்கப்பட்ட ஆய்வுக்குழுக்கள் வேலையிண்மையும், கள்ளச்சாராயமும் கலவரங்களுக்கு அடிப்படை காரணம் என்பதை குறிப்பிட்டு இருக்கிறது. இத்தகைய ஆய்வுகளுக்குப் பின்னர் தான் மாநில அரசுகள் வேலை நியமன தடைச்சட்டத்தையும், ஓய்வு பெற்றோருக்கு வேலை என்ற அறிவிப்பையும் வெளியிடுகின்றன. இப்போது தமிழகத்தில் சுமார் 62 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்பதாகவும், நாடு தழுவிய அளவில் சுமார் 5.5 கோடி இளைஞர்கள் காத்திருப்பதாகவும் அரசு அறிவிப்புகள் சொல்கின்றன. படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில் என்ற பழமொழியைப் போல் தான் அரசுகளின் நடவடிக்கை இந்த 63 ஆண்டுகளில் இருந்துள்ளது.
II
நமது இளைஞர்கள் இப்போது அரசு வேலையை எதிர்பார்ப்பது இல்லை மாறாக தனியார் துறை வேலைவாய்ப்பில் மிகுந்த திருப்தி கொள்கின்றனர், என்ற கருத்தை வலுவாக பரப்பிட செய்கின்றனர். வழியின்றி மேற்கோள்ளும் வாழ்க்கை தேவைக்கான் முயற்சியை அரசு பின்பற்றும் கொள்கைக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வது, கீழ்த்தர அரசியலின் விளைவு ஆகும்.
உண்மை நாம் அறிந்தது. தற்போது தமிழகத்தில் கிராம அதிகாரி பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெள்யிடப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 12 லட்சம் விண்ணப்பங்கள் விற்று தீர்ந்துள்ளது. காலிப்பணியிடங்கள் சுமார் 2 ஆயிரம் மட்டுமே. இந்த அறிவிப்பினால் உருவான வேலைவாய்ப்பு விண்ணப்பம் அச்சிடுவது மற்றும் போட்டித் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் உருவானது ஆகும். இந்த பெருமைக்குரிய வேலை வாய்ப்பை உருவாக்கியதற்கு அரசும் அதன் சார்பாளர்களும் மகிழ்ச்சி கொள்ளலாம். தமிழ்நாடு தேர்வாணையம் நடத்திய குரூப் 2 தேர்வின் போது 1125 பணியிடங்களுக்கு 4.25 லட்சம் இளைஞர்கள் தேர்வு எழுதினர். இத் தேர்விற்காக சிறப்பு பேருந்து இயக்கியதை பெருமை பொங்க ஆள்வோர் குறிப்பிடுகின்றனர். இது போன்ற சம்பவங்களில் அரசு அம்பலம் ஆகிறது என்பதைக்கூட புரிந்து கொள்ளாத மூடர்களின் ஆட்சியாகவே நமது தேசத்தின் ஆட்சி உள்ளது.
மத்திய ஆட்சியாளர்களின் லட்சணத்தின் பகுதியே மாநில ஆட்சியாளர்களின் கொள்கைக்குக் காரணம். முந்தைய பா.ஜ.க கூட்டணி அட்சி செய்த போது வங்கிகான தேர்வாணையத்தைக் களைத்தது. சம்மந்தப்பட்ட வங்கிகள் தங்களுக்குத் தேவையான பணியாளர்களை நியமித்துக்கொள்ளலாம், என்றும் வழிகாட்டியது. விளைவு பாரத ஸ்டேட் வங்கியில் மட்டும் 11 ஆயிரம் எழுத்தர் பணியிடங்கள் நிர்ப்பப் படவில்லை. அதற்கான தேவை திடீரென முன் வந்த போது, எழுத்துத் தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. 36 லட்சம் இளைஞர்கள் விண்ணப்பம் செய்தனர். மூன்று கேள்வித் தாள்களுடன் மூன்று வாரங்கள் தேர்வு நடத்தப்பட்டது. இத்தகைய விவரங்கள் அணைத்தும் அரசு வேலை மட்டுமே பாதுகாப்பானது என்பதையும், தனியார் துறை வேலை வாய்ப்பை விரும்பவில்லை என்பதையும் வெளிப்படுத்துகிறது. இதற்கு பிறகும் அரசிடம் இளைஞர்கள் அரசிடம் வேலை வாய்ப்பை எதிர்பார்க்கவில்லை என்று பிரச்சாரம் செய்வதற்கு அனுமதிக்க முடியாது.
இதன் மறுபுறம் அமைச்சர்களே தங்கள் துறையில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக ஒப்புக்கொள்கின்றனர். ரயில்வே துறையின் பட்ஜெட்டை முன்வைத்து உரையாற்றிய மம்தா பானர்ஜி ரயில்வேயில் 2 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிட்டார். இப்போது ரயில்வேத் துறையில் அதீதமான விபத்துகள் நடைபெறுகிறது. 15 ஆயிரம் லெவெல் கிராசிங்குகளில் பணியாளர்கள் இல்லாத்தன் விளைவாகவே விபத்து நடந்தது என்பதை அறிந்திருந்தும், பணிநியமனத்தில் பலகீனம் நீடிக்கிறது. இதைப்போலவே அனைத்துத் துறைகளிலும் காலிப்பணியிடங்கள் நீடித்து வருகிறது. மாநில அரசுகளிலும் உள்ள நிரப்பப் படாத பணியிடங்களையும் கணக்கில் கொண்டால், சுமார் 38 லட்சம் வேலை வாய்ப்புகள் கண் முன்னால் காலியாக இருப்பதை அறியலாம்.
இதனோடு ஒப்பிட்டு விவாதிக்க வேண்டிய மற்றொரு கருத்து, பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய வேலை வாய்ப்புகளை அரசு உருவாக்காத அனுகுமுறையாகும். உதாரணத்திற்கு, 30 ஆண்டுகளுக்கு முந்தைய தாலுகா நிர்வாகமே இன்றைக்கும் இருக்கிறது. காவல் துறை, நீதித்துறை, போக்குவரத்து உள்ளிட்ட அனைத்திலும் இதன் பிரதிபலிப்பை பார்க்க முடியும். மேற்படி துறை சார்ந்த பணியிடங்களில் நீண்ட வரிசையில் மக்கள் காத்து கிடப்பது நமது விவாததிற்கு சாட்சி. இந்த உண்மைக்கு மாறாக அரசு தற்போது உள்ள பணியிடங்களையும் அழிக்க நடவடிக்கை எடுக்கிறது.
தொழில் நுட்பத்தை மனிதன் மிக கொடுமையாக வேலை வாங்கப்படுவதைத் தடுக்க பயன் படுத்தாமல், மனிதனின் பிழைப்பை அழிக்கும் வ்கையில் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. உதாரணத்திற்கு நெய்வேலி அனல் மின் நிலையத்தில் 50 ஆண்டுகளுக்கு முன் ஒரு சுரங்கம், ஒரு மின் உற்ப்பத்தி நிலையம், சுமார் 600 மெகாவாட் மின்சாரம் என்று இருந்த போது 24 ஆயிரம் தொழிலாளர்கள் பனியாற்றினர். தற்போது 3 சுரங்கம், 3 மின் உற்ப்பத்தி நிலையம், 2000 மெகாவாட் மின்சாரம் என்ற நிலையை அடந்துள்ளது. ஆனால் தொழிலாளர்களின் எண்ணிக்கையோ 17 ஆயிரமாக குறைந்துள்ளது. இப்படி அரசும், தனியார் துறைகளும் தனது லாபத்தை பெருக்க தொழிலாளர் எண்ணிக்கையை குறைப்பதனால் வேலை வாய்ப்பு புதியதாக உருவாகவில்லை.
III
அனைவருக்கும் வேலை என்ற கொரிக்கையை முன் வைப்பவர்கள் மாற்று ஆலோசனையை முன்வைக்கப்பட வேண்டிய நிர்பந்ததில் இருப்பதை நாம் அறிவோம். நாம் மேலே குறிப்பிட்ட அனைத்து பலகீனங்களையும் அரசு போக்கிக்கொண்டால், புதிய வேலை வாய்ப்புகள் பல கோடி உருவாகும். பல கோடிப்பேரிடம் வருமாணம் அதிகரித்து வாங்கும் சக்தியும் அதிகரித்தால், ஜவுளி உற்பத்தி, உணவு உற்பத்தி, இதர அத்தியாவசிய பொருள்களின் உற்பத்தி பெருகும். இதன் காரணமாக கிராமப்புற உற்பத்தியும், வேலை வாய்ப்பும் பெருகும். இதன் மூலம் கிராம உழைப்பாளிகள் நகரத்தை நோக்கி இடம் பெயர்வதும் குறையும். அது நகர்புற படிக்காத, திறனற்ற தொழிலாளர்களின் வேலை வாய்ப்பும், பேரம் பேசும் உரிமையும் அதிகரிக்கும். இந்த வளர்ச்சி தொடர்ந்து மக்களின் வாங்கும் சக்தியையும், வருமானத்தையும் பாதுகாக்க உதவும். இவை நாம் மட்டும் கூறிக்கொண்டிருக்கும் வாக்கியங்கள் அல்ல. முதலாளித்துவ பொருளாதார அறிஞர்களும் வலியுறுதுகிற உண்மை.
இன்றைய காங்கிரஸ்-தி.மு.க கூட்டணி அரசு தேசிய கிராமப் புற வேலை உறுதிச் சட்டத்தை அமலாக்கிவருகிறது. கிராமப் புற மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்துவதன் மூலமே கிராமப்புற உழைப்பாளிகளின் உயிரைப் பாதுகாக்க முடியும், என்ற அறிஞர் பெருமக்களின் வாதத்தை ஏற்றுக் கொண்டதனால் உருவானது என்பதை மறுக்க முடியாது. இந்த் கொள்கையை அமலாக்க சோசலிசம் தேவையில்லை, இந்த முதலாளித்துவ ஆட்சியே போதும். முதலாளித்துவம் லாபத்தை நோக்கமாக கொண்டு செயல் படுவதால், இந்த குறைந்த் பட்ச நடவடிக்கையைக் கூட மேற்கொள்ளவில்லை. எனவே தான் சமூகம் மாற்றப்பட வேண்டும் என்ற முழக்கம் முன் வந்தது. நிலச்சீர்திருத்ததை அமலாக்குகிற, தொழிலாளர் நலனை பாதுகாக்கிற அரசு அமையும் போது, நாம் மேற்குறிப்பிட்ட பொருளாதாரக் கொள்கையை விட சிறந்த பொருளாதாரக் கொள்கை பின்பற்றப்படும். அப்போது அனைவருக்கும் வேலை, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படும்.
நன்றி: எஸ்.எஃப்.ஐ மாநில மாநாட்டு மலர்
வியாழன், 21 அக்டோபர், 2010
விதையென வீழ்ந்தவர்கள்
ஒரு நட்சத்திரம் மடிந்து விழலாம்
ஆயினும் அதன் பிரகாசம்,
ஒருமலர் வாடி விடலாம்
ஆயினும் அதன்மணம்
எமது புரட்சி வீரர்கள்
இம்மண்ணிலே சிந்திய
செங்குறுதி காய்ந்திருக்கலாம்
ஆயினும் அதன் நினைவு....
எமது கொடிகளிலே
எமது நினைவுகளிலே
அழுத்தம் நிறைந்த
செவ்வண்ணமாக சித்தரிக்கப் பட்டுள்ளது.
சீன கவிதை
ஜாலியன் வாலாபாக் மைதானம் அமைந்துள்ள, அமிர்தசரஸ் நகரம், 2003ம் ஆண்டு நவம்பர் மாதம், அதுவரை இல்லாத வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்தது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 7வது மாநாடு நடைபெற்ற நேரம், ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் அஞ்சலியை செலுத்தி ஊர்வலமாக, மாநாட்டு அரங்கத்தை அடைந்தவுடன், அஞ்சலித் தீர்மானத்தை முன்மொழிந்தனர். மூன்று ஆண்டுகளில், 289 வாலிபர் சங்கத் தோழர்கள், உயிரைச் சங்கத்திற்காக அர்ப்பணித்து இருந்தனர். மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா ஆகிய 3 மாநிலங்களில் மட்டும், 260 தோழர்களை இழந்திருக்கிறோம் என்ற செய்தி, சற்று அதிச்சியாக இருந்தாலும், மாற்று அரசியல், ஆதிக்க அரசியலின் வன்மங்களை, எதிர்கொள்ளாமல் சாத்தியமில்லை என்பதை புரிய வைத்தது.
1980ல் துவங்கப் பட்ட வாலிபர் சங்கம் இந்த தேச நலனுக்காக கொடுத்த விலையை, நாட்டின் எந்த ஒரு இயக்கமும் கொடுத்திருக்க முடியாது. காலிஸ்தான் கோரிக்கை வலுப்பெற்ற போது, இந்திய ராணுவதிற்கு இனையாக களப்பலி கொடுத்த இயக்கம், டி.ஒய்.எஃப்.ஐ, அரசியல் ராணுவமாக, தேச ஒற்றுமையை வெளிப்படுத்தியது. டி.ஒய்.எஃப்.ஐ. மாநிலத் தலைவராக இருந்த குர்னாம் சிங் உப்பல், மாநிலச் செயலாளராக இருந்த சோகன்சிங் தேஷி ஆகியோரைத் தீவிரவாத கும்பல் சுட்டுக் கொன்றதை, இன்றைய இளைய சமூகம் முழுதாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. அஸ்ஸாமில், பிரிவினை கோஷத்தை எதிர்த்த காரணத்திற்காக துண்டு, துண்டாக வெட்டி வீசப்பட்ட நிரஞ்சன் தாலுக்தாரின் வரலாறு, கல்லூரி மாணவிகளின் வீரமிக்க போராட்டம் போன்றவை, 1980 களில், இந்திய அரசியலில் திவீரம் செலுத்திக் கொண்டிருந்தது. தேச ஒற்றுமைக்கு விடப்பட்ட சவாலை, எதிர்கொண்டதால், அன்றைய டி.ஒய்.எஃப்.ஐ இளைஞனை, ஹீரோவிற்குறிய மிடுக்கோடு, நடைபோடச் செய்தது.
பஞ்சாப்பில், காலிஸ்தான் தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில், டி.ஒய்.எஃப்.ஐ இளைஞர்களை தற்காத்து கொள்ள வேண்டிய அளவிற்கு தாக்குதல் உச்சத்திற்கு சென்றது. எனவே சில ஆயுதங்களை வாங்கிட முடிவெடுத்து, அகில இந்திய தலைமை அறைகூவல் விட்டதும், பள்ளி மாணவனாக வசூலில் ஈடுபட்டதும், நெஞ்சை விட்டு அகலாத நினைவுகள். தியாகத்தில் புடம்போட்ட இயக்கம் என்பது மிகை அல்ல. இன்றைக்கும் மேற்கு வங்கத்தில் நூற்றுக்கணக்கான தோழர்கள தங்களை இந்த மண்ணில் விதைத்துக் கொண்டே இருக்கின்றனர். உயிரை அச்சுறுத்தி, இயக்கத்தை அழிக்கும் பகல் கணவில் எதிரிகள் நிச்சயம் வெற்றி பெறமுடியாது. உயிர்பயம் என்ற அழித்தொழிப்பு கொள்கை வெற்றி பெற்று இருந்தால், இந்தியா ஒரு நாடாக உருவெடுத்திருக்கவோ, விடுதலை பெற்றிருக்கவோ வாய்ப்பில்லை. மாறாக வன்முறை மட்டுமே அதிகாரம் செலுத்தியிருக்கும்.
தமிழகத்திலும், 30 ஆண்டு வரலாற்றில் 19 வீரர்களை இழந்திருக்கிறோம். திரும்பிப் பார்த்தால் அற்பமாக தெரியும் சில காரணங்கள், கொலைக்கு அடித்தளம் அமைத்திருப்பது, தமிழ் நாட்டின் நிலப்பிரபுத்துவ சிந்தனையாளர்களை, அடையாளம் காட்டுகிறது. உரிமைகள் அனைத்தும் உயிர்ப் பலி என்ற விலை கொடுத்து பெறப்பட்டது என்பதை, உரிமைகளை அனுபவிப்பவர்கள் நினைவில் கொள்வது அவசியம்.
உயிர் இழந்த யாரும் தனது சொந்த நலனை முன்னிருத்த வில்லை. கள்ளச் சாராயத்தால் பாதிக்கப்படும் குடும்பங்களைக் காக்க, கந்து வட்டி கொடுமையில் இருந்து மீட்க, ரவுடிகளிடம் இருந்து, நிம்மதியான வாழ்க்கையை பொது மக்களுக்கு உருவாக்கிட, காமவெறியர்களிடம் இருந்து பெண்களைக் காத்திட, மதவெறியர்களிடம் இருந்து சிறுபான்மை மக்களைக் காத்திட, அரசியலில் ஜனநாயகத்தை நிலைநாட்டிட, உள்ளாட்சி தேர்தல்களில் ஊழலற்றவர்கள் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக, மாணவர் உரிமையை நிலப்பிரபுக்களிடம் இருந்து பாதுகாத்திட, பொதுச் சொத்தை அபகரித்ததை மீட்பதற்காக, என பொது மக்களின் தேவைக்காக, அவர்களைப் பாதுகாப்பதற்காக, தங்கள் வாழ்வை அர்ப்பணம் செய்தவர்கள். தனி நபர் சாகசங்களாக இதைப் பார்க்காமல், இயக்க வளர்ச்சியைக் காக்க, தந்த விலைகள் என்று தான் டி.ஒய்.எஃப்.ஐ பார்க்கிறது. இனியும் தனது வன்முறையை, கள்ள சாராய வியாபாரத்தை, பெண்கள் மீதான ஆதிக்கத்தை தொடர முடியாது என்ற நிலையிலேயே, ஆதிக்க சக்திகளும், சமூக விரோதிகளும், வாலிபர் இயக்கத் தலைவர்கள் மீது கொலைவெறித் தாக்குதலைத் தொடுத்துள்ளனர். ஸ்பார்ட்டகஸின் மரணம் அடிமை முறைக்கு முடிவு கண்டது. அது போல், நமது தோழர்களின் தியாகம், பல இடங்களில், சமூகக் கொடுமைகளை தடுத்து முன்னேற வித்திட்டது..
இன்றைய தமிழகத்தில், மாணவர்கள் கல்விக்கட்டணம் செலுத்த இயலாத காரணத்தால், தற்கொலை அல்லது தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர். கல்வி வர்த்தகம் கணஜோராக அரங்கேறுகிறது. தனியார் பள்ளி உரிமையாளர்கள், தங்கள் தேவைக்காக, பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் விடுமுறை அறிவித்து, தாங்கள் நடத்தும் போராட்டத்திற்கு ஆள் திரட்டுகிறார்கள். கல்வி தனியார் வசம் கொடுக்கப் பட்டால், இந்த கொடுமைகள் தலைவிரித்து ஆடும் என்பதை, டி.ஒய்.எஃப்.ஐ. நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகிறது. உயிர் கொடுத்தாவது, தடுப்பது என களம் கண்டிருக்கிறது. கேரள மாநிலம், கூத்துபரம்புவில், தனியார் மருத்துவ கல்லூரி துவங்க, காங்கிரஸ் அரசு முயற்சித்த நேரத்தில், நவம்பர், 25, 1995ல், நடைபெற்ற டி. ஒய்.எஃப்.ஐ, எஸ்.எஃப்.ஐ.யின் எழுச்சிமிக்க போராட்டம் குறிப்பிடத் தக்கது. ராஜிவ், மது, ரோஷன், ஷிபுலால், பாபு ஆகிய ஐந்து தோழர்கள், காவல் துறையின், ஆட்சியாளர்களின் கொலைவெறிக்கு ஆளாகினர். அந்த போராட்டத்தில் பல ஆயிரம் கலந்து கொண்டனர். நூற்றுக் கணக்கில் தாக்குண்டனர். கன்னூர் மாவட்டம், சொக்லி பஞ்சாயத்தில், 15 ஆண்டுகளாக படுத்த படுக்கையாக, கழுத்திற்கு கீழ் சிதைக்கப் பட்ட உடலாக, இருந்தாலும், வரும் தோழர்களிடம், புன்னகை தவழும் முகத்துடன், இயக்கப் பணி எப்படி இருக்கிறது என்பதை அக்கறையுடன் விசாரிக்கும் தோழனாக, புஷ்பன் வாழ்ந்து வருகிறார். 15 ஆண்டுகளில், 5475 நாட்களில், இழந்திருக்கும் நேரத்தை, வாழ்வின் பல்வேறு இன்பத்தைத் தொலைத்து விட்டதை நினைத்து ஏங்கவில்லை. மாறாக தொடரும் போராட்டங்கள் காரணமாக வெற்றி மீதான நம்பிக்கையுடன், தோழர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துகிறார்.
இயக்கம் என்பது சம்பாதிப்பதற்கல்ல, பலரைப் பாதுக்காக்க, அந்த கவசமாக இயங்கிய குற்றத்தினால் தான், எமது தோழர்கள் கொலையுண்டார்கள். அனைவரும் 17 வயது துவங்கி, 40 ஐ, தொட்டவர்கள். அம்மா, அப்பா, மணைவி, குழந்தை ஆகிய அன்பைக் கடந்து, மக்கள் மீது நேசம் கொண்டிருந்தார்கள். அதனாலேயே மக்கள் நிம்மதிக் காற்றை சுவாசிக்க, தாங்கள் காற்றாகி போனார்கள். இவர்கள் தியாகத்தை வரலாறு நினைவில் வைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால், வளரும் புதிய தலைமுறைக்குச் சொல்லாமல் தியாகிகள் விதைக்கப் படுகிறார்கள், என்று சொல்வதில் பொருளில்லை. சொல்லும் விதத்தில், தோழர். ரமேஷ் பாபு முயற்சி எடுத்திருக்கிறார். ஓரிரு நாள் பணியில் இத்தகவல்களை சேகரிப்பது சாத்தியமற்றது. 30 ஆண்டுகளுக்கும் முந்தைய தியாகிகள் குறித்த விவரங்களை, இன்று இந்நூலுக்காக திரட்டாமல் விட்டிருந்தால், வரலாற்றின் பக்கங்களுக்குள், புதைந்து போயிருப்பார்கள். எனவே தான் இது மிகச்சிறந்த முயற்சி.
களப்பலியாகிய தோழர்களின், தோழர்கள், நன்பர்கள், குடும்பத்தினர், அப்பகுதி மக்கள் இத் தொகுப்பு குறித்து அறிந்தால், மட்டற்ற மகிழ்ச்சி கொள்வார்கள். வாலிபர் சங்கப் பணிகளுக்கிடையில், தமிழகத்தின் அனைத்து தியாகிகள் குறித்த வரலாற்றினை, சேகரித்து தொகுத்திருக்கும், டி.ஒய்.எஃப்.ஐ. மாநிலத் தலைவர். தோழர். எஸ்.ஜி.ரமேஷ்பாபு விற்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்களையும், அவர் எடுத்த முயற்சி வெற்றி பெற தகவல் தந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றிகளையும் உரித்தாக்குகிறோம்.
புதன், 20 அக்டோபர், 2010
லெனின் மற்றும் பகத் சிங்
தனது விருப்பம் குறித்து ஆர்வம் கொண்டிருந்தால், அதற்காக முழுமூச்சாக உழைத்தால், அதனால் தூக்கமின்றித் தவித்தால், பின்னர் அவ்விருப்பம் நிறைவேறும் போது, உலகில் மாபெரும் பிம்பத்தைத் தான் அடைந்ததாக உணருவான் மனிதன். சோசலிசம் நமது விருப்பமா?
லெனின்.
இளைஞர்கள் அரசியலில் ஈடுபடலாகாது. மாணவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது. பொதுமக்கள் என்ற பெயரிலான அங்கலாய்ப்புகள் இப்படித் தான் விதைக்கப் படுகிறது. கல்லூரிகளில் பயிலும் மாணவர் கூட்டமோ, பொதுவான இளைஞர்களோ, அரசியலுக்கு வர விரும்பவில்லை. காரணம் அது ஒரு சாக்கடை, விழுந்தால் எழுந்திருக்க இயலாது, என ஏற்கனவே குறிப்பிட்ட முன்முடிவை பின் தொடருவதனால் உருவானது. மழை பெய்து நீர்வரத்து அதிகரிக்கும் போது மட்டுமே சாக்கடை சுத்தமாகிறது. மழை பொய்த்துப் போனால், சாக்கடையின் துர்நாற்றமும், தேங்கிய சாக்கடையினால், நிலத்தடி நீரும் சேர்ந்து கெட்டுப்போவதும் இயற்கை. மனித உடலிலும் பழைய செல்கள் அழிந்து புது செல்கள் உருவாவதும் இயற்கையாக நடைபெற்று வருகிறது. இயற்கை ஒருவேளை நின்று போனால், நிலமும் உடலும் பாதிக்கப் படும். அரசியலும் இளைஞர்களின் பங்கேற்பு இல்லை என்றால், மிகச் சிறந்த அரசியலாக இருந்தாலும், எதிர்காலத்தை இழந்து விடும்.
உலகில் இளைஞர்களிடம் அரசியல் பேசிய தலைவர்கள் பலர். அரசியல் உரைகள் உலகப் புகழ் பெற்றது, லெனின், மா சே துங், சேகுவேரா, ஆகிய கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு மட்டுமே. இத் தலைவர்கள் தங்கள் நாடுகளில் புரட்சி வெற்றி பெற்ற பிறகே அதிகளவில் இளைஞர்களிடம் பேசினார்கள். இளைஞர்களின் பங்களிப்பு அதிகார மாற்றத்துடன் நின்று விடக்கூடாது. இளைஞர்கள் சமூக ஆக்கத்தில் முன்நிற்க முடியும் என்பதை அறிவியல் பூர்வமாக உணர்ந்து தங்கள் சம்பாசனைகளை அமைத்துக் கொண்டனர்.
அக்டோபர் 2, 1920ல் லெனின், கம்யூனிஸ்ட் இளைஞர் கழக ஊழியர்களிடம் நிகழ்த்திய உரை, வரலாற்றின் எல்லாக் காலங்களிலும், இளைஞர்களிடம் என்ன விவாதிக்க வேண்டும் என்பதற்கான, நிரந்தர சான்று. மார்க்சீயம் என்பது கடந்த காலத்தில் இருந்த அனைத்து சமூக அமைப்புகளின் சுரண்டல் முறையையும் கற்றதன் அடிப்படையில் உருவானது. எனவே புரட்சிக்கு முந்தைய முதலாளித்துவ சமூகம் உருவாக்கி வைத்த கண்டு பிடிப்புகளை, தொழில் நுட்பத்தை, நல்ல அம்சங்கள் எனப்படும் அனைத்தையும், இளைஞர்கள் கற்றுத் தேர வேண்டும் என வலியுறுத்துகிறார்.
கம்யூனிஸ்ட் கட்சி பிரசுரம், ஆய்வுக்கட்டுரைகள், மட்டும் கற்பது போதும், என்று இருந்தால் கம்யூனிஸம் என்பது வறட்டு சூத்திரம் ஆகிவிடும். அத்தகைய கம்யூனிஸ்டுகள் தற்பெருமை நிறைந்தவர்களாக மாறிவிடுவர். பழைய முதலாளித்துவ கல்வி முறையில் நாம் அமைக்க விரும்பும் சமூகத்திற்கு கெடுதல் விளைவிக்கும் அம்சங்களை விலக்கி விட்டு, கம்யூனிஸத்திற்கு பலனளிக்கும் அனைத்தையும், பழைய பள்ளியில் இருந்து கற்பது அவசியம், என்பதை இன்றைய சமூகத்திற்கும் பயன் படும் வகையில் குறிப்பிட்டு இருக்கிறார். சோசலிசம் என்பது முதலாளித்துவத்தை விடவும் சிறந்தது. ஏனென்றால் முதலாளித்துவத்தின் சிறந்தவற்றையும், அதன் கெட்ட அம்சங்களை களைந்து புதிய உருவாக்கமும் இனைந்து எல்லாமே மொத்த சமூகத்திற்கும் பொதுவானது, என்பதை நிலைநாட்டுகிறது. அப்பணியில் கம்யூனிஸ்டுகள் முழு ஆர்வம் செலுத்த வேண்டும் என்ற லெனின் விடுத்த வேண்டுகோள், அரசியல் சாக்கடை என்பவராலும் மறுக்க இயலாது.
”ஒரு நாடு வளர்ச்சி பெற இளைஞர்களிடம் முதலீடு செய்ய, அரசுகள் முன்வர வேண்டும்” என பலர் வலியுறுத்தியுள்ளனர்.. இந்தியா உலகிலேயே மிக அதிகமான இளைஞர்களைக் கொண்டிருக்கும் நாடு. இங்கிருக்கும் அரசியல் இயக்கங்களோ, முதலாளித்துவ இளைஞர் இயக்கங்களோ, இளைஞர்களைத் தொலை நோக்குப் பார்வையுடன் அனுகுவதில்லை. மாறாக இளைஞர்களின் உணர்ச்சி வேகத்தை மட்டும் பயன் படுத்துகின்றனர். காஷ்மீரத்து போராட்டங்கள், வடகிழக்கு மாநிலங்களின் போராட்டங்கள், மாவோயிஸ்டுகள் என சொல்லிக் கொள்பவர்களின் போராட்டங்கள் ஆகிய அனைத்தும், இளமையின் வேகத்தைப் பயன் படுத்திக் கொள்ளும் சிந்தனையில் கருக் கொண்டதே.
இன்றைய இந்திய சூழ்நிலையில், இளைஞர்கள் ஏன் அரசியலில் ஈடுபட வேண்டும்? என்ற பகத்சிங் எழுதிய கட்டுரை, சில விளக்கங்களை முன் வைக்கிறது. இன்றைய அரசியலில் புரட்சி புரட்சி என்று பேசுவோர்க்கும், முதலாளித்துவ ஆட்சியாளர்களுக்கும், சமூக மாற்றம் குறித்த கம்யூனிஸ்ட் கட்சி அரசியலுக்குமான வித்தியாசத்தினை தெளிவுபடுத்துகிறது.
ஊழல் குற்றச்சாட்டுகள் முன்னெப்போதும் இல்லாத அளவு அதிகரித்துள்ளது. பணத்தை விதைத்து, நாற்காலிகளுடன், நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றம் செல்வதோ எளிது, என்ற அரசியல் வியாபாரம் கண்டு, அதிருப்தி கொள்வது நியாயமே. அதிருப்தி காரணமாக அரசியல் வனவாசம் கொள்ள முடியாது. புதிய சமூகத்தை உருவாக்கும் போராட்டம் எளிதானதல்ல. இளம் அரசியல் தொண்டர்கள் கம்யூனிஸ்ட் கட்சியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும், அக்கட்சியை வலுப்படுத்துவதன் மூலமே, விவசாயி, தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்க முடியும், என்ற விவாதத்தை பகத்சிங், கம்யூனிஸ்ட் கட்சியில் சேராமலேயே முன்வைத்துள்ளார்.
இந்தியா விடுதலை பெற்றால், இர்வின் பிரபுவின் இடத்தில், சர். தேஜ் பகதூர் சாப்ரு வைக்கப்படலாம். இதனால் இந்திய விவசாயிக்கு என்ன பலன் கிடைக்கும்? என்ற கேள்வி முக்காலத்திற்க்கும் பொருந்துவதாக அமைந்துள்ளது. பிரிட்டிஷாருக்கு அன்றைய இந்திய மக்களை ஏமாற்ற, மண்டோ மார்லி சீர்திருத்தம், செம்ஸ் போர்டு சீர்திருத்தம் போன்ற வார்த்தை விளையாட்டுக்கள் போதுமானதாக இருந்தது. இன்றைய ஆட்சியாளர்களிடம் நலத்திட்டங்கள் சிக்கிக் கொண்டிருக்கிறது.
23 வயதில் கொல்லப்பட்ட பகத்சிங், 1929களில், எழுதியிருக்கிறார், ”எனது கருத்துப் படி மேலவை என்பது முதலாளித்துவ ஆட்சியின் போலித்தனம் அல்லது சூழ்ச்சி, ஒரே ஒரு அவையைக் கொண்ட அரசாங்கமே சிறந்த ஒன்றாக செயல்பட முடியும். சட்ட மன்றத்திற்கும் விடவும், உயர்ந்த அதிகாரங்களுடன் மேலிருந்து திணிக்கப்படும் ஆளுநர் ஒரு கொடுங்கோலர் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள முடியும்”. இந்த விவாதம் இன்று கம்யூனிஸ்ட் கட்சியினரால் மட்டுமே முன் வைக்கப்படுகிறது. மாநில சுயாட்சி முழக்கங்கள் அரியணைக்கான வாய்ப்பு கிடைக்கும் வரை என்பதாகி விட்டது. பகத்சிங்கின் தீர்க்க தரிசன உணர்வு தெளிவாக இருக்கிறது. பொருளாதார சுந்திரத்திற்கு சோசலிசம் மட்டுமே தீர்வு, என பகத்சிங் குறிப்பிட்ட நிலையில் தற்போது அரசியல் சுதந்திரத்தை பாதுகாக்கவும் கம்யூனிஸ்டுகளால் மட்டுமே முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
உலகமயம், நவீன தாராளமயம் என்பது வார்த்தைகளாக மட்டும் இல்லாமல், இந்திய ஆட்சியைத் தீர்மானிக்கிற சர்வ சக்தி படைத்ததாக அதிகாரம் செலுத்துகிறது. ஊழல் பெருக்கத்திற்கு பன்னாட்டு நிதி மூலதனத்தின் வருகை ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது. காமன் வெல்த் போட்டிகளுக்கான தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பல ஆயிரம் கோடி ஊழல் அம்பலப்பட்டுள்ளது. இது போன்ற திட்ட அமலாக்கத்தில், 10 சதம் கமிஷன் பேரம் பேசப்படுவது தவிர்க்க இயலாது என அதிகாரிகளில் ஒருவர் குறிப்பிடுகிறார். இப்படி லஞ்சம் மற்றும் ஊழல் நியாயப்படுத்தப் படுகிறது.
இதற்கு காரணம் இந்த முதலாளித்துவ அமைப்பு முறையும், அது பாதுகாக்கும் வர்க்கமும் ஆகும். இதற்கு மாற்று பகத்சிங் குறிப்பிட்ட கம்யூனிஸ்ட் அரசியலும், லெனின் வலியுறுத்திய இளைஞர்கள் கற்றுத் தேர வேண்டிய சமூகமும் முன் நிறுத்தப்பட வேண்டும். கம்யூனிஸ்ட் அரசியல் இதற்கு வலுப்பெறுவதும், இளைஞர்கள் அதை நோக்கி வருவதும் காலத்தின் கட்டாயம். இக்கட்டுரை தொகுப்பு வெளிவர துணை நின்ற அனைவருக்கும் நன்றிகள் பல.
செவ்வாய், 19 அக்டோபர், 2010
சேதுத்திட்டமும் ஆள்வோரின் அக்கறையின்மையும்
2010 பிப்ரவரி 6 அன்று காலை, திருச்சி மாநகர் முழுவதும் பத்திரிகை களில் பரபரப்பு செய்தி. மத்திய அமைச் சர் ஜி.கே. வாசன், போக்குவரத்து நெரிச லில் கார் சிக்கிக் கொண்டதால், இரு சக் கர வாகனத்தை, வழியில் சென்ற நபரிடம் கேட்டு வாங்கி, விமானநிலையத்திற்குச் சரியான நேரத்தில் சென்றடைந்தார். அவர் அதுபோன்று முயற்சிக்காவிட் டால், அடுத்த விமானத்தில் சென்றிருப் பார். அரசுப் பணம், அநாவசியமாக, சில ஆயிரம் ரூபாய் வீணாகி இருக்கும். அவரு டைய நிகழ்ச்சிகள் சிலவும் பாதிக்கப்பட் டிருக்கும். ஜி.கே.வாசன் பொறுப்பு வகிக்கும் கப்பல் போக்குவரத்துத் துறையும், மத்திய அமைச்சரவையும், சரியான நேரத்தில் செயல்படாமல், தாமதிப்பதால், இந்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு ரூ.2400 கோடியை பயனுள்ளதாக மாற்றியிருக்க முடியும். |
thanks to theekkathir published on 12 02 2010 |
திங்கள், 18 அக்டோபர், 2010
உலக இளைஞர் இயக்கம் குறித்து
உலக வரலாறு அனைத்தும், யுவ,யுவதிகளின் ரத்தத்தால் எழுதப் பட்டது.
-பகத்சிங்
ரோமாபுரியில் அடிமைகளைத் திரட்டி உரிமைக்கான கழகம் விளைவித்த ஸ்பார்ட்டகஸ் துவங்கி, ரத்தவாடையும், தூக்கிலிடப்பட்ட, புதைக்கப்பட்ட, எரிக்கப்பட்ட, சுட்டுக் கொல்லப்பட்ட, இளைஞர்களின் பிணங்கள் வரலாற்றுப் பாதைகளை நிரப்பியிருப்பதும், புதிய தலைமுறைக்கு கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். இன்றைய உலகம் எந்த எதிர்ப்பு அர்சியலும் இல்லாமல், பலருடைய வாழ்வை சூறையாடிய அதிகாரங்கள் ஆட்சி செலுத்தாமலும், கட்டமைக்கப் பட்டிருக்க முடியாது, என்பதற்கு, ஆதாரங்கள் கொட்டிக் கிடக்கின்றன.
ஏழு தலைமுறைகள் நாவல் சொல்லும் கதை, மனிதனை மனிதன் சுரண்டி, பிரமாண்டங்களை கட்டமைப்பதாகும். குண்டா கிண்டே, என்ற கருப்பினத்தவனின் மீது பின் மண்டையில் தாக்குதல் தொடுத்து கடத்தியதையும், அவன் அமெரிக்க வீதிகளில் அடிமையாக ஏலம் விடப்படுவதும், அடக்குமுறைக்கு ஆளாவதும், தாக்கப்படுவதும், பின்னர் அவன் வாழ்வில் உருவாகும் திருமணம், வாரிசு, பேத்தி, பேரன், என அனைவருக்கும் தான் ஆப்பிரிக்கக் காடுகளில் இருந்து கடத்தப் பட்ட வரலாற்றை போதிப்பதாகவும், நாவல் வடிவமைக்கப் பட்டு இருக்கும். ஏழாவது தலைமுறையான, சிந்த்தியா என்கிற பெண் குழந்தைக்கும் அந்த வரலாறு போதிக்கப் படும்.
இந்த வரலாறு தாழ்வு மனப்பான்மையை உருவாக்க வில்லை, மாறாக எமது முன்னோர் அடைந்த ஏமாற்றத்தை நாம் அடையாமல் எச்சரிக்கையாக இருப்பதற்கும், முன்னோர் மீதான சுரண்டலுக்கு, காரணமான சமூக அமைப்பை, மாற்றும் வலிமையை, அடுத்த தலைமுறையான நாம் பெற்றிடவும், பயன்படுகிறது. அது போன்ற வலிமையை இளைஞர் அமைப்புகள் பெறுவதற்கு, கடந்த கால இளைஞர்களின் செயல்களையும், அந்த சமூக இளைஞர் கூட்டத்தின் வரலாறையும், பெறத்தக்க வகையில், ஏ,பாக்கியம் எழுதியுள்ள, உலக இளைஞர் எழுச்சிகளும் - இயக்கங்களும் என்ற சிறு நூல் சரியான பங்களிப்பைச் செய்யும். சுமார் 300 ஆண்டு காலத்தின், இரண்டு கண்டங்களின், வரலாற்றுத் தகவல்களை, சேகரித்து இருப்பது, இன்றைய இளம் தலைமுறைக்கு உகந்ததாக அமையும்.
நமக்கு இன்று கிடைக்கும் வரலாறு அனைத்தும், ஆளும் வர்க்கத்தினரால் எழுதப் பட்டது என்பதை, மறந்து விடலாகாது. கரிபால்டி, மாஜினி ஆகிய இத்தாலி நாட்டு இளைஞர்கள் பற்றி படிக்கிற போது, கடந்த காலங்களில், திரைப்படங்களில் கதாநாயகர்கள் தோன்றுவதைப் போன்ற உணர்வு உருவாக்கப் பட்டு இருந்தது. அப்புரிதலை இந்நூல், புரட்டி புது அர்த்தம் கற்பிக்கிறது. அவை தனி நபர்களின் சாதனை அல்ல, அங்கே பின்னிப் பினைந்திருந்த கூட்டு உழைப்பை, இருட்டடிப்பு செய்துவிட முடியாது. இரண்டாவது, போராட்டங்களுக்கு காரணமாக அரசியலும், அதை பின்பற்றும் சமூகமும் அமைந்திருந்தது. இதைத் தான் காரல் மார்க்ஸ்,” நாம் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை நமது எதிரிதான் தீர்மானிக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார். ஆம் இத்தாலியில் மட்டும் அல்ல, ஐரோப்பா கண்டம் முழுவதும், 1700 துவங்கி, 1900ன் இறுதி வரையிலும், சுமார் 200 ஆண்டுகள் நிலபிரபுத்துவத்திற்கு எதிரான ஜனநாயகத்திற்கான போராட்டங்கள் வீறு கொண்டு நடைபெற்று உள்ளது.
முதலாளித்துவம் ஐரோப்பாக் கண்டத்தில், நிலபிரபுத்துவத்தின் அழிவில் இருந்தே வளர முடிந்தது, என்பதை இடதுசாரிகள் சொல்லக் கேட்டிருக்கிறோம். அதை இந் நூல் தெளிவாக வரையறுக்கிறது. சுமார் 200 ஆண்டுகள் மன்னராட்சி மற்றும் ஜனநாயகத் தேவைக்கான போராட்டங்களை இளைஞர்கள் தலைமை ஏற்று நடத்திட, அன்றைய சமூகம் காத்திருந்ததோ, என சந்தேக கண் கொண்டு பாராமல், நிலப்பிரபுத்துவத்தின் கொடுமை சொல்லொன்னா துயரம் நிறைந்ததாக இருந்தது என புரிந்து கொள்வதே சரியானது. எல்லையற்ற அரக்கத் தனத்தை எதிர்க்கும் துணிவு இளைஞர்களுக்கு மற்ற அனைவரையும் விட அதிகமாக இருந்ததை வரலாறு பல தகவல்கள் மூலம் உறுதி செய்திருக்கிறது.
”நாங்கள் யதார்த்த வாதிகள், ஆனால் அசாத்தியங்களை கனவு கான்கிறோம்,” என குறிப்பிட்டார் சே. அவர் காலத்தில் நடைபெற்ற போராட்டங்களைக் கொண்டு மட்டும் குறிப்பிடவில்லை. முந்தைய நூற்றாண்டில் தடம் பதித்த போராட்ட வரலாற்றின் தொகுப்பில் இருந்தே, அதை ஆய்வு செய்த அனுபவத்தின் அடிப்படையிலேயே குறிப்பிட்டதாக கூறலாம். ஒவ்வொரு இளைஞனுக்குள்ளும், வேகம், துணிவு, சமூக அக்கறை ஆகியவை இருக்கிறது. அவற்றை வெளிக்கொண்டு வருவதில் தான் இயக்கங்கள் பங்களிப்பு செய்கிறது. அந்த பங்களிப்பை, ஐரோப்பா கண்டத்தில், நிலப்பிரபுத்துவத்திற்கும், அன்றைய நிலையில் புதிதாக துளிர்விட்ட முதலாளித்துவத்திற்கும் இடையிலான முரண்பாட்டை, அன்றிருந்த இயக்கங்கள் மிகச் சரியாக செய்திருக்கிறது.
அதைத் தொடர்ந்து இன்றைய முதலாளித்துவத்தை நாம் எப்படி புரிந்து கொண்டிருக்கிறோம் என்பது விவாதத்திற்கு உட்படுத்தப் பட வேண்டும். இன்றைய உலக முதலாளித்துவத்தை ஆதரிக்க வேண்டுமா? எதிர்க்க வேண்டுமா?, என்ற முடிவெடுக்கத் தெரியாத சமூகத்தில் நாம் இருக்கிறோம். அதற்கு காரணம் நேற்றைய நிலப்பிரபுத்துவத்தை அறிந்திருக்காதது எனச் சொல்லலாம். ஏனென்றால் நிலபிரபுத்துவத்தை எதிர்த்த போராட்டத்தில், முதலாளித்துவம் வெற்றி பெற துணை புரிந்தது, நிலபிரபுத்துவத்தின் கொடுமை. அன்று 8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர உறக்கம் என்ற தொழிலாளர் நல உரிமையை வலியுறுத்தி இளைஞர்களைத் திரட்ட முடிந்தது. இன்று அந்த உரிமை பறிபோயிருக்கிறது. முதலாளித்துவம் துளிர்விட்ட காலத்தில், கிடைத்த சில உரிமைகள் கூட, இன்று பறிக்கப்பட்டு வருகிறது. இளைய த்லைமுறைக்கு இது குறித்த உணர்த்துதலை, அதிகப் படுத்தும் போது, நவீன சுரண்டலுக்கு எதிரான, நம்பிக்கையுடன் கூடிய போராட்டம் தீவிரம் பெறும்.
ஒன்றுபட்ட ஜெர்மனி, ஒன்றுபட்ட இத்தாலி, மன்னராட்சிக்கு எதிரான ப்ரெஞ்சு மாணவர் போராட்டம், போன்றவை இளைஞர்களுக்கு இருந்த, சுரண்டும் வர்க்கத்திற்கு எதிரான அரசியல் உணர்வை வெளிப் படுத்துகிறது. இந்தியாவிலும் கூட ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியல், ஒன்றுபட்ட இந்தியாவிற்கான தேவையையும், போராட்ட அலைகளையும் உருவாக்கியது. இந்தியாவில் இருந்த மன்னர்களும், பின்னர் வளர்ந்த முதலாளிகளும், அத்தகைய போராட்டங்களுக்குத் தடையாக இல்லை. நூல் இந்தியாவில் நடைபெற்ற, இளைஞர்கள் தலைமை தாங்கிய விடுதலைப் போராட்டங்கள் குறித்து, புதிய மற்றும் எழுச்சி மிக்க தகவல்களைக் கொடுத்துள்ளது. இத் தகவல்கள் இன்றைய இளைஞர் இயக்கங்களுக்கு சரியான வரலாற்றை பின்பற்றுவதற்கு உதவி செய்யும்.
இந்தியாவில் முதலாளித்துவம், நிலபிரபுத்துவத்துடன் சமரசம் செய்து கொண்டதே அல்லாமல், அழித்து முன்னேற முயற்சிக்கவில்லை. அதன் காரணமாகவே, இன்றைய இளைஞர்களிடம் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையோ, புதிய சமூகம் குறித்த கருத்துக்களோ தீவிர ஆதிக்கம் செலுத்த வில்லை. எனவே வரலாறு கற்போம், தீவிர அரசியல், சமூக மாற்றத்திற்கு விதையிடுவோம், என்பதே இன்றைய இளைஞர் இயக்கத்திற்கான இப்போதைய முழக்கமாக இருக்க முடியும்.
இன்றைய தேவை கருதி நூல் வெளிவரக் காரணமாக இருந்த அனைவருக்கும், எப்போதும் நன்றிகள் உரித்தாகும்.