திங்கள், 18 அக்டோபர், 2010

உலக இளைஞர் இயக்கம் குறித்து


உலக வரலாறு அனைத்தும், யுவ,யுவதிகளின் ரத்தத்தால் எழுதப் பட்டது.

-பகத்சிங்

ரோமாபுரியில் அடிமைகளைத் திரட்டி உரிமைக்கான கழகம் விளைவித்த ஸ்பார்ட்டகஸ் துவங்கி, ரத்தவாடையும், தூக்கிலிடப்பட்ட, புதைக்கப்பட்ட, எரிக்கப்பட்ட, சுட்டுக் கொல்லப்பட்ட, இளைஞர்களின் பிணங்கள் வரலாற்றுப் பாதைகளை நிரப்பியிருப்பதும், புதிய தலைமுறைக்கு கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். இன்றைய உலகம் எந்த எதிர்ப்பு அர்சியலும் இல்லாமல், பலருடைய வாழ்வை சூறையாடிய அதிகாரங்கள் ஆட்சி செலுத்தாமலும், கட்டமைக்கப் பட்டிருக்க முடியாது, என்பதற்கு, ஆதாரங்கள் கொட்டிக் கிடக்கின்றன.

ஏழு தலைமுறைகள் நாவல் சொல்லும் கதை, மனிதனை மனிதன் சுரண்டி, பிரமாண்டங்களை கட்டமைப்பதாகும். குண்டா கிண்டே, என்ற கருப்பினத்தவனின் மீது பின் மண்டையில் தாக்குதல் தொடுத்து கடத்தியதையும், அவன் அமெரிக்க வீதிகளில் அடிமையாக ஏலம் விடப்படுவதும், அடக்குமுறைக்கு ஆளாவதும், தாக்கப்படுவதும், பின்னர் அவன் வாழ்வில் உருவாகும் திருமணம், வாரிசு, பேத்தி, பேரன், என அனைவருக்கும் தான் ஆப்பிரிக்கக் காடுகளில் இருந்து கடத்தப் பட்ட வரலாற்றை போதிப்பதாகவும், நாவல் வடிவமைக்கப் பட்டு இருக்கும். ஏழாவது தலைமுறையான, சிந்த்தியா என்கிற பெண் குழந்தைக்கும் அந்த வரலாறு போதிக்கப் படும்.

இந்த வரலாறு தாழ்வு மனப்பான்மையை உருவாக்க வில்லை, மாறாக எமது முன்னோர் அடைந்த ஏமாற்றத்தை நாம் அடையாமல் எச்சரிக்கையாக இருப்பதற்கும், முன்னோர் மீதான சுரண்டலுக்கு, காரணமான சமூக அமைப்பை, மாற்றும் வலிமையை, அடுத்த தலைமுறையான நாம் பெற்றிடவும், பயன்படுகிறது. அது போன்ற வலிமையை இளைஞர் அமைப்புகள் பெறுவதற்கு, கடந்த கால இளைஞர்களின் செயல்களையும், அந்த சமூக இளைஞர் கூட்டத்தின் வரலாறையும், பெறத்தக்க வகையில், ஏ,பாக்கியம் எழுதியுள்ள, உலக இளைஞர் எழுச்சிகளும் - இயக்கங்களும் என்ற சிறு நூல் சரியான பங்களிப்பைச் செய்யும். சுமார் 300 ஆண்டு காலத்தின், இரண்டு கண்டங்களின், வரலாற்றுத் தகவல்களை, சேகரித்து இருப்பது, இன்றைய இளம் தலைமுறைக்கு உகந்ததாக அமையும்.

நமக்கு இன்று கிடைக்கும் வரலாறு அனைத்தும், ஆளும் வர்க்கத்தினரால் எழுதப் பட்டது என்பதை, மறந்து விடலாகாது. கரிபால்டி, மாஜினி ஆகிய இத்தாலி நாட்டு இளைஞர்கள் பற்றி படிக்கிற போது, கடந்த காலங்களில், திரைப்படங்களில் கதாநாயகர்கள் தோன்றுவதைப் போன்ற உணர்வு உருவாக்கப் பட்டு இருந்தது. அப்புரிதலை இந்நூல், புரட்டி புது அர்த்தம் கற்பிக்கிறது. அவை தனி நபர்களின் சாதனை அல்ல, அங்கே பின்னிப் பினைந்திருந்த கூட்டு உழைப்பை, இருட்டடிப்பு செய்துவிட முடியாது. இரண்டாவது, போராட்டங்களுக்கு காரணமாக அரசியலும், அதை பின்பற்றும் சமூகமும் அமைந்திருந்தது. இதைத் தான் காரல் மார்க்ஸ்,நாம் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை நமது எதிரிதான் தீர்மானிக்கிறார்என்று குறிப்பிட்டுள்ளார். ஆம் இத்தாலியில் மட்டும் அல்ல, ஐரோப்பா கண்டம் முழுவதும், 1700 துவங்கி, 1900ன் இறுதி வரையிலும், சுமார் 200 ஆண்டுகள் நிலபிரபுத்துவத்திற்கு எதிரான ஜனநாயகத்திற்கான போராட்டங்கள் வீறு கொண்டு நடைபெற்று உள்ளது.

முதலாளித்துவம் ஐரோப்பாக் கண்டத்தில், நிலபிரபுத்துவத்தின் அழிவில் இருந்தே வளர முடிந்தது, என்பதை இடதுசாரிகள் சொல்லக் கேட்டிருக்கிறோம். அதை இந் நூல் தெளிவாக வரையறுக்கிறது. சுமார் 200 ஆண்டுகள் மன்னராட்சி மற்றும் ஜனநாயகத் தேவைக்கான போராட்டங்களை இளைஞர்கள் தலைமை ஏற்று நடத்திட, அன்றைய சமூகம் காத்திருந்ததோ, என சந்தேக கண் கொண்டு பாராமல், நிலப்பிரபுத்துவத்தின் கொடுமை சொல்லொன்னா துயரம் நிறைந்ததாக இருந்தது என புரிந்து கொள்வதே சரியானது. எல்லையற்ற அரக்கத் தனத்தை எதிர்க்கும் துணிவு இளைஞர்களுக்கு மற்ற அனைவரையும் விட அதிகமாக இருந்ததை வரலாறு பல தகவல்கள் மூலம் உறுதி செய்திருக்கிறது.

நாங்கள் யதார்த்த வாதிகள், ஆனால் அசாத்தியங்களை கனவு கான்கிறோம், என குறிப்பிட்டார் சே. அவர் காலத்தில் நடைபெற்ற போராட்டங்களைக் கொண்டு மட்டும் குறிப்பிடவில்லை. முந்தைய நூற்றாண்டில் தடம் பதித்த போராட்ட வரலாற்றின் தொகுப்பில் இருந்தே, அதை ஆய்வு செய்த அனுபவத்தின் அடிப்படையிலேயே குறிப்பிட்டதாக கூறலாம். ஒவ்வொரு இளைஞனுக்குள்ளும், வேகம், துணிவு, சமூக அக்கறை ஆகியவை இருக்கிறது. அவற்றை வெளிக்கொண்டு வருவதில் தான் இயக்கங்கள் பங்களிப்பு செய்கிறது. அந்த பங்களிப்பை, ஐரோப்பா கண்டத்தில், நிலப்பிரபுத்துவத்திற்கும், அன்றைய நிலையில் புதிதாக துளிர்விட்ட முதலாளித்துவத்திற்கும் இடையிலான முரண்பாட்டை, அன்றிருந்த இயக்கங்கள் மிகச் சரியாக செய்திருக்கிறது.

அதைத் தொடர்ந்து இன்றைய முதலாளித்துவத்தை நாம் எப்படி புரிந்து கொண்டிருக்கிறோம் என்பது விவாதத்திற்கு உட்படுத்தப் பட வேண்டும். இன்றைய உலக முதலாளித்துவத்தை ஆதரிக்க வேண்டுமா? எதிர்க்க வேண்டுமா?, என்ற முடிவெடுக்கத் தெரியாத சமூகத்தில் நாம் இருக்கிறோம். அதற்கு காரணம் நேற்றைய நிலப்பிரபுத்துவத்தை அறிந்திருக்காதது எனச் சொல்லலாம். ஏனென்றால் நிலபிரபுத்துவத்தை எதிர்த்த போராட்டத்தில், முதலாளித்துவம் வெற்றி பெற துணை புரிந்தது, நிலபிரபுத்துவத்தின் கொடுமை. அன்று 8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர உறக்கம் என்ற தொழிலாளர் நல உரிமையை வலியுறுத்தி இளைஞர்களைத் திரட்ட முடிந்தது. இன்று அந்த உரிமை பறிபோயிருக்கிறது. முதலாளித்துவம் துளிர்விட்ட காலத்தில், கிடைத்த சில உரிமைகள் கூட, இன்று பறிக்கப்பட்டு வருகிறது. இளைய த்லைமுறைக்கு இது குறித்த உணர்த்துதலை, அதிகப் படுத்தும் போது, நவீன சுரண்டலுக்கு எதிரான, நம்பிக்கையுடன் கூடிய போராட்டம் தீவிரம் பெறும்.

ஒன்றுபட்ட ஜெர்மனி, ஒன்றுபட்ட இத்தாலி, மன்னராட்சிக்கு எதிரான ப்ரெஞ்சு மாணவர் போராட்டம், போன்றவை இளைஞர்களுக்கு இருந்த, சுரண்டும் வர்க்கத்திற்கு எதிரான அரசியல் உணர்வை வெளிப் படுத்துகிறது. இந்தியாவிலும் கூட ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியல், ஒன்றுபட்ட இந்தியாவிற்கான தேவையையும், போராட்ட அலைகளையும் உருவாக்கியது. இந்தியாவில் இருந்த மன்னர்களும், பின்னர் வளர்ந்த முதலாளிகளும், அத்தகைய போராட்டங்களுக்குத் தடையாக இல்லை. நூல் இந்தியாவில் நடைபெற்ற, இளைஞர்கள் தலைமை தாங்கிய விடுதலைப் போராட்டங்கள் குறித்து, புதிய மற்றும் எழுச்சி மிக்க தகவல்களைக் கொடுத்துள்ளது. இத் தகவல்கள் இன்றைய இளைஞர் இயக்கங்களுக்கு சரியான வரலாற்றை பின்பற்றுவதற்கு உதவி செய்யும்.

இந்தியாவில் முதலாளித்துவம், நிலபிரபுத்துவத்துடன் சமரசம் செய்து கொண்டதே அல்லாமல், அழித்து முன்னேற முயற்சிக்கவில்லை. அதன் காரணமாகவே, இன்றைய இளைஞர்களிடம் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையோ, புதிய சமூகம் குறித்த கருத்துக்களோ தீவிர ஆதிக்கம் செலுத்த வில்லை. எனவே வரலாறு கற்போம், தீவிர அரசியல், சமூக மாற்றத்திற்கு விதையிடுவோம், என்பதே இன்றைய இளைஞர் இயக்கத்திற்கான இப்போதைய முழக்கமாக இருக்க முடியும்.

இன்றைய தேவை கருதி நூல் வெளிவரக் காரணமாக இருந்த அனைவருக்கும், எப்போதும் நன்றிகள் உரித்தாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக