வியாழன், 30 ஜூன், 2022

அரசியல், சமூக பொறுப்பற்ற அதிமுக தலைமை… இளைஞர்களே உஷார்…

எஸ். கண்ணன்.


தமிழ்நாட்டின் எதிர் கட்சியான அதிமுக 66 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொன்டுள்ளது. கடந்த 2021 சட்ட மன்ற பொதுத் தேர்தலில் 33.4 சதம் வாக்குகளைப் பெற்றது. வாக்குகள் எனக்கணக்கிட்டால், அதன் எண்ணிக்கை 1,83,63,499 ( ஒருகோடியே 83 லட்சத்து 63 ஆயிரத்து 499) ஐரோப்பா கண்டத்தின் பல நாடுகளின் மக்கள் தொகைக்கு இனையானது. இதில் 95 சதமானோர் தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. இவ்வளவு மக்களின் வாக்குகளை கொண்ட அதிமுக என்ன செய்கிறது. 


ஒற்றைத் தலைமையா? இரட்டை தலைமையா? என பஞ்சாயத்து நடத்திக் கொண்டிருக்கிறது. பொதுக் குழு என்ற பெயரில், கேலிக் கூத்தினை நடத்தி, நீதிமன்றப் படிகளில் காத்துக் கிடக்கிறது.  தலைமைக்குள் போட்டி நடப்பது பிரச்சனை அல்ல. ஆனால் போட்டி என்ற பெயரில், நெடும் நாள்களாக, தன்னுடைய கட்சியின் உறுப்பினர்களாகவும், ஆதரவாளர்களாகவும் உள்ள, விவசாயி, தொழிலாளர் நலன் மற்றும் இளைஞர், மாணவர் நலனை புறக்கணித்து வருகிறது?


தமிழக வேலையின்மை அவலமும்… அதிமுக தலைமையும்:


இந்தியாவில் நகர்மயமாதலில் இரண்டாம் இடத்தில் உள்ள மாநிலம் தமிழ்நாடு. அதற்கு ஏற்ற வகையில் உயர்கல்வி, தொழில் நுட்ப கல்வி பயின்றோர் எண்ணிக்கையும் அதிகம். அதுவும் பெண்கள் அதிக எண்ணிக்கையில் உயர்கல்வி பெற்ற மாநிலமாக தமிழகம் உள்ளது. அதற்கு தமிழ்நாட்டில் உள்ள சமூகநீதி, விழிப்புணர்வு போன்றவை காரணம் என்றால் மிகை அல்ல. இந்த வேலையின்மையையும், கல்வித் திறனையும் சமதளத்தில் இணைக்க அதிமுக முயற்சி செய்ததுண்டா? நாம் மறைந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரை விமர்சித்து கொண்டிருப்பதை விட, இன்று தலைமை யார் என போட்டியிடும், நபர்கள் என்ன செய்தனர். இத்தகைய பிரச்சனைகளை தங்கள் கட்சிக்குள் விவாதித்ததுண்டா? எனக் கேட்க வேண்டிய தேவை உள்ளது.


இந்திய அளவில் 2021-22 ஆய்வு அடிப்படையில் வேலையின்மை 8 சதம் என்றால், தமிழ்நாட்டில் 7.27 ஆகும். அதுவும் குறிப்பாக 20 முதல் 25 வயதுக்குள்ளான இளைஞர்களின் வேலையின்மை அதிகமாக உள்ளது. இந்த விவரம் மிகப்பெரிய அச்சுறுத்தல், என்பதே ஆய்வாளர்கள் பலரும் வெளிப்படுத்தும் கருத்து. ஆனால் இந்த சமூக பிரச்சனையை கையாளுவதில், அரசியல் கட்சிகளும், ஊடகங்களும் வாய்ப்பு தருகின்றனவா? அப்படி தராத நிலையில் பாதிப்பிற்குள்ளாகும் இளைஞர்கள், தங்களை புறக்கணிக்கும் அமைப்புகளை புறக்கணிப்பதே சரியாக இருக்கும்.


அதிமுகவிற்கும் இந்த வேலையின்மைக்கும் தொடர்புண்டா? எனக் கேட்டால், நிச்சயம் ஒரு பகுதி தொடர்பு உள்ளது. குறிப்பாக அதிமுக 2011-2021 ஏப்ரல் வரை ஆட்சியில் பத்து ஆண்டுகள் இருந்தது. தற்போதைய அதிமுக தலைமையாக உள்ள எடப்பாடி, மற்றும் பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் 5 ஆண்டுகள் பொறுப்பில் இருந்துள்ளனர். உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தினாலும், உலக நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டாலும் வேலைவாய்ப்பு உயரவில்லை. 


அதேபோல் அரசுத்துறையில் ஏற்பட்ட லட்சக்கணக்கான காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்யவும் நடவடிக்கை எடுக்கவில்லை. அரசு ஊழியர், ஆசிரியர் பணியிடங்கள் காலியாக விடப்பட்டுள்ளன. சில பணியிடங்கள் குறைவான ஊதியத்திற்கு தற்காலிக பணியாளர்கள் நியமிக்க பட்டு, சுரண்டலுக்கும், சமூக பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப் படுகின்றனர். மற்றொருபுறம், அரசுப் போக்குவரத்து போன்ற துறைகளின் ஊழியர்கள் ஓய்வு பெறும் போது, வழங்கப்பட வேண்டிய, தொழிலாளர்களின் சேமிப்பை வழங்கவில்லை. மாறாக அரசு ஊதாரித்தனமாக செலவிட்ட விவரங்களும், அன்று அமைச்சர் பொறுப்பில் இருந்த பலரும் குவித்த செல்வ வளங்களும் வெளிப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டின் கடன் பல லட்சம் கோடி உயர்ந்தது. அதிமுக ஆட்சியின் ஊதரித்தனம் காரணம் என்றால் மிகையல்ல.


மேற்படி காரணங்களால், நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக தோற்கடிக்க பட்டதே, திமுக தானே ஆட்சியில் உள்ளது என கேள்வி கேட்டால், அது நல்ல விவாதமே. அண்மையில் திமுக ஆட்சி, மிகக் குறைவான ஊதியத்திற்கு ஆசிரியர் தற்காலிக ஆசிரியர்களாக நியமனம் உள்ளிட்ட பிரச்சனைகள் முன்னுக்கு வந்துள்ளது. இதை இடதுசாரிகள் விமர்சிக்கின்றனர். போராடவும் வேண்டியுள்ளது. ஆனால் பிரதான எதிர்கட்சியான அதிமுக இதை விமர்சித்ததா? வேறு ஏதாவது வேலைவாய்ப்பு சார்ந்த பிரச்சனைகளில் அதிமுக அறிக்கையாவது வெளியிட்டதுண்டா? மொத்தத்தில்,தனது எதிரி என சித்தரிக்கும் திமுகவின் செயல்களை விமர்சிக்கவோ, போராடவோ செய்யவில்லை. 


இளைஞர்களை ஈர்ப்பதற்காக ஜெ பேரவை இளம் பெண்கள் பாசறை, மாணவர் அணி என்றெல்லாம் பல்வேறு பெயர்களில் அமைப்புகளை உருவாக்கி செயல்பட்டு வருகிறது. ஒன்றிய பாஜக அரசு அக்னி பாத் திட்டத்தை ராணுவத்தில் புகுத்துகிறது. நிச்சயமற்ற வேலைவாய்ப்பை நோக்கி இளைஞர்கள் தள்ள படுகின்றனர். வடமாநிலங்கள் பெரும் போர்களமாக மாறியுள்ளது. ரயில்கள் நிறுத்தப் படும் அளவிற்கு நிலைமை செல்கிறது. தமிழ்நாட்டில் உள்ள அரசியல் இயக்கங்கள் மற்றும் பல்வேறு ஜனநாயக அமைப்புகள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.. இத்தகைய கொடூர பாதிப்புகளுக்கு எதிராக அதிமுக சிறு துரும்பையும் எடுத்து போடவில்லை. அதேபோல் நீட், பல்கலைக் கழக நுழைவு தேர்வு உள்ளிட்ட நடவடிக்கைகளிலும் அதிமுக பாராமுகமாகவே இருந்தது.


விவசாயி தொழிலாளர்களும் புறக்கணிப்பு.. ஆனால் கைமாறு உள்ளது:


ஓராண்டுகாலம் தலைநகர் டில்லியை முற்றுகை இட்டு விவசாயிகள் போராடிய போது, அதிமுக சிறு அளவில் கூட ஆதரவு இயக்கம் நடத்திடவில்லை. தமிழ் நாட்டில் காவிரி பிரச்சனைக்காக 2019ல் பெரும் போராட்டங்கள் நடந்த போது, தமிழ்நாட்டின் ஆளும் கட்சி ஆனால் எதுவும், செய்யவில்லை. அடுத்த பெரும் மக்கள் பிரிவினர் தொழிலாளர்கள், ஒன்றிய பாஜக அரசு அராஜகமாக நிறைவேற்றியுள்ள தொழிலாளர் சட்ட திருத்தம் குறித்து வாய் திறக்கவில்லை. தமிழ்நாட்டில் அதற்கான விதிகள் உருவாக்கப் பட்டுள்ளது. அதன் மீது கருத்து சொல்லாத அரசியல் கட்சி என்றால் அது அதிமுக. மேலும் அத்தகைய திருத்தங்களை மாநில தொழிலாளர் துறை செயலாளரிடம் சி.ஐ.டி.யு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் அளித்து வருகின்றன. ஆனால் அதிமுகவின் அண்ணா தொழிற்சங்க பேரவை அதற்கான முயற்சி எதுவும் செய்யவில்லை.


இந்தியா முழுவதும், பாஜகவை எதிர்க்கும் அரசியல் தலைவர்கள் வீட்டில் சி.பி.ஐ அல்லது வேறுபல ஒன்றிய அரசின் அமைப்புகளை ஏவி ரெய்டு நடத்துவதும், மிரட்டுவதும் நடைபெற்று வருகிறது. உண்மையில் அத்தகைய ரெய்டுக்கான அனைத்து தகுதிகளையும் கொண்டவர்களாக அதிமுக முன்னாள் அமைச்சர் பெருமக்கள் உள்ளனர். மாநில திமுக ஆட்சி வருமான வரித்துறை மூலம் சில சோதனைகளை நடத்தியதில் சிலர் அம்பலமாகியுள்ளனர். ஆனால் இங்கு கேள்வி பாஜக இந்த முன்னாள் அமைச்சர்களை ஏன் விட்டு வைத்திருக்கிறது. எப்படியும் பாஜகவின் படுகுழியில் அதிமுக தொண்டர்களை வீழ்த்துவார்கள் என்ற நம்பிக்கையில் தான். அதன் காரணமாகவே, மாநிலத்தில் பாஜக வின் மிக மோசமான விலைவாசி உயர்வு கொள்கைகளை கூட அம்பலப் படுத்தும் பணியில் அதிமுக தலைமை ஈடுபடவில்லை. 


காலம் காலமாக முதலாளித்துவ நிலபிரபுத்துவ அரசியல் கட்சிகள், தனது உறுப்பினர்களின் நலனுக்காக செயல்படாமல், மிக சிறுபான்மையாக சமூகத்தில் உள்ள முதலாளிகளுக்கு சேவை செய்து வருகின்றன, என்பதற்கு அதிமுக மிகச் சிறந்த உதாரணம். இன்று மட்டுமல்ல கடந்த இரு வாரங்களாக,  தமிழக ஊடகங்களில் அதிமுகவின் உள்கட்சி பூசல் பெரும் விவாதத்தை எழுப்பி நடந்து வருகிறது. ஊடகங்களும் மக்கள் பிரச்சனைகளுக்கு அளிக்காத முக்கியத்துவத்தை அதிமுக தலைமையில் உள்ள ஓபிஎஸ், இபிஎஸ் என்ற நபர்களுக்காக வரிந்து கட்டி வாதாடி வருகிறது. இவ்வளவு ஊடக வெளிச்சத்தைக் கொண்டிருக்கும் இந்த தலைமை, மக்கள் பிரச்சனைகளுக்கு பேசாமல், தனது சொந்தநலனுக்கு பயன்படுத்துவதை, அதிமுகவின் உறுப்பினராகவும், ஆதரவாளராகவும் உள்ள தொழிலாளர், விவசாயி, மற்றும் இளைஞர்கள் உணர வேண்டும். 


வாக்களிக்க மட்டுமல்ல கட்சி, தான் வாக்களித்த கட்சி தலைமை, வாக்காளர்களின் நலனை புறக்கணிக்கும் போது, குரல் கொடுப்பதும் அவசியம். கட்சி உறுப்பினர்களோ இன்னும் ஒருபடி மேலே போய் உரிமை குரல் எழுப்ப வேண்டும். சுவரொட்டி, சுவர் எழுத்து, கட் அவுட், பேனர் என தனது உழைப்பை செலுத்தி தலைவர்களின் வண்ண புகைப் படங்களை அலங்கரிக்கும் தொண்டர்கள், தன்னை மறக்கும் தலைமையை விமர்சிக்கவும் தயங்க கூடாது. அது தானே கட்சி அரசியலில் கடைப் பிடிக்க வேண்டிய ஜனநாயகம். அதை அதிமுக தொண்டர்கள் தனது தலைமைக்கு இடித்துரைக்கவும், அதை கேட்காத போது, தூக்கி எரியவும் முன்வர வேண்டும். அதுமட்டுமல்ல வேலையின்மை என்ற கொடிய தாக்குதலுக்கு எதிரான போராட்டத்தை வலுவாக்க, ஜனநாயக சக்திகளுடன் இணைந்து பயணிக்க முன் வர வேண்டும். திங்கள், 27 ஜூன், 2022

தொழில் வளர்ச்சி என்பது ஏகபோக வளர்ச்சி அல்ல…

எஸ். கண்ணன்


தமிழ்நாட்டில் சுமார் 8 கோடி மக்கள் தொகை உள்ளநிலையில், மாணவர், முதியோர், பணிக்கு செல்லாத பெண்கள் ஆகிய மூன்று பிரிவினரை தவிர்த்தால் சுமார் 3 கோடிப்பேர் தொழிலாளர்கள் ஆவர். அதில் ஏறக்குறைய 80 லட்சம் பேர் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்களில் பணிபுரிவோராக அல்லது சார்ந்தோராக உள்ளனர். மூன்றில் ஒரு பகுதியாக உள்ள இந்த மக்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதும், செயல்படுத்துவதும், தொழில் பாதுகாப்பு மட்டுமல்ல, வேலை வாய்ப்பு பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பு சார்ந்த தாகும்.


அதிகரிக்கும் தற்கொலைகள்:


தமிழகம் இந்தியாவில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சியில் இரண்டாம் இடத்தில் உள்ளது. 6.89 லட்சம் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மூலமாக, ரூ 32004 கோடி முதலீட்டில், 8000 வகையான பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. கணிசமான அளவிற்கு பொருளாதார கட்டமைப்பில் இந்த துறை பங்களிப்பு செய்கிறது. அரசு இதை தக்க வைப்பது மட்டுமல்ல அடுத்த கட்டத்திற்கு வளர்த்தெடுக்க வேண்டிய கவனத்தை செலுத்த வேண்டியுள்ளது. ஆனால் ஒன்றிய மற்றும் மாநில ஆட்சியாளர்கள் உரிய கவனம் செலுத்தவில்லை. மாறாக பெரும் நிறுவனங்களுக்கு அளிக்கும் சலுகை, மற்றும் இறக்குமதி கொள்கைகளில் செய்த பன்னாட்டு நிறுவன ஆதரவு நடவடிக்கை ஆகிய காரணங்களால், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. கதவடைப்பு, வேலையிழப்பு, தற்கொலை ஆகியவை அதிகரித்துள்ளது. 


பெருமளவில் விவசாயிகளைப் போல் தற்கொலை செய்து கொள்ளும் அவலத்தை சிறு, குறு நிறுவன உரிமையாளர்களிடம் பார்க்க முடிகிறது. அண்மையில் கோவையில் இந்த கொடுமை அரங்கேறியுள்ளது. இந்தியா முழுவதும் கடந்த ஆண்டுகளில் தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள விவரங்களின் படி 2017,2018 ஆண்டுகளில் 7798 மற்றும் 8000 அளவில் சிறு, குறு தொழில் உடமையாளர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தமிழகத்தில் 981 பேர் இந்த கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். லட்சாதிபதி அல்லது கோடீஸ்வரர் என்று விளிக்கப்படுவோரின் நிலை இது தான். தொ.மு.சி. ரகுநாதன் எழுதிய பஞ்சும் பசியும் நாவலில் கைலாச முதலியார் என்ற கைத்தறி நெசவாளர் படிப்படியாக கடன் வளைக்குள் சிக்கி மீள முடியாத நிலையில் தூக்கில் தொங்கும் காட்சியே தொடர்கதையாக நீடிக்கிறது.


பெருமுதலாளித்துவ ஆதரவின் தாக்கம்:


அதாவது பெரும் தொழில் நிறுவனங்களுக்கு அரசுகள் அளிக்கும் சலுகை மேலும் மேலும் அதிகரித்து, உள்ளூர் மட்டத்திலான தொழில்களை நாசமாக்கும் வேலையை பாஜக தலைமையிலான ஒன்றிய ஆட்சியாளர்கள் செய்து வருகின்றனர். கனரக தொழில்களை அழித்து சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்களை பாதுகாக்க வேண்டும் என கோரவில்லை. ஆனால் பெரும் நிறுவனங்ககளுக்கு அளிக்கு ஆதரவில் ஐம்பது சதமாவது MSME வளர்ச்சிக்கு ஒதுக்கீடு செய்வது அவசியம். வெளிப்படையாகவே நிதியமைச்சர் தனது நிதிநிலை அறிக்கையில், பன்னாட்டு, உள்நாட்டு பெருமுதலாளித்துவ ஆதரவை பதிவு செய்துள்ளார். இது கடந்த காலத்தில், உலக வர்த்தக மையம் டோகா வில் நடத்திய மாநாடுகளில் முன்மொழிந்த கொள்கையின் மறுபதிப்பாகவே உள்ளது.  சுமார் 16 ஆண்டுகளுக்கு முன் நடந்த விவாதம் மீண்டும் மேலோங்குகிறது என்றால், முன்னோக்கிய வளர்ச்சி இல்லை. மாறாக கால சக்கரத்தை பின்னோக்கி இழுக்கும் கொள்கையாகவே பிரதிபலிக்கிறது. 


சீனா, ஜப்பான், தைவான், மலேசியா, போன்ற நாடுகளில் இருந்து செய்யப்படும் இறக்குமதி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது. மேக் இன் இந்தியா கொள்கை MSME உற்பத்தியில் வெளிப்பட வேண்டும். அரசின் கொள்முதல் சிறு,குறு தொழில் நிறுவனங்களிடம் குறைந்தது 20 சதம் அளவிற்கு இருந்தால், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் பாதுகாக்கப்படும், என்ற தேவை குறித்து அரசின் கொள்கைகள் கவலை கொள்ள வேண்டும். 


சில ஆலோசனைகள்:


குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான வரையறை தற்போது உள்ள 25 லட்சம் முதலீட்டில், குறு தொழில் எனவும், 2 கோடி வரையிலான முதலீடு சிறு தொழில் எனவும், 10 கோடி வரையிலான முதலீடு  நடுத்தர தொழில் எனவும் உள்ளது. இதை கோவை கொடிசீய அமைப்பினர் விடுத்த வேண்டுகோளை கணக்கில் கொண்டு, குறு தொழில் முதலீட்டு வரம்ப்பை 75 லட்சமாகவும், சிறு தொழில் 10 கோடி வரையிலும், உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இது சந்தை வளர்ச்சியில் பணமதிப்பு குறைந்துள்ள காரணத்தால் மேற்படி உற்பத்தியாளர்களுக்கு, அரசின் சலுகை மற்றும் கட்டணங்கள் தீர்மானிக்க உதவியாக இருக்கும். 


MSME க்கான ஒப்புதலை வழங்க ஒருங்கிணைந்த ஒற்றைச் சாளர நிர்வாக அமைப்பு தேவை என்ற கோரிக்கை பரிசீலனை செய்யப் பட வேண்டும்.


மூலப்பொருள்களின் விலை GST காரணமாக 35% விலையுயர்வு ஏற்பட்டுள்ளது. உற்பத்தி பாதிப்பிற்கு இது பிரதான தடையாக உள்ளது. இது குறித்து உரிய கலந்தாலோசனை மூலம் நியாயமான விலையில் கிடைக்க நடவடிக்கை தேவை.


ஜாப் ஆர்டர்களுக்கும் 18 சத GST வரி விதிப்பை உருவாக்கியதால் ஏற்பட்டுள்ள பாதிப்பை மதிப்பீடு செய்து வரி குறைப்புக்கான உறுதியான நடவடிக்கைகள் தேவைப் படுகிறது. 


தேசிய, சர்வதேசிய அளவில் நடைபெறும் கண்காட்சிகளில் பங்கேற்பாளர் மற்றும் பார்வையாளர்களாக பங்கு கொள்ளவும், சந்தைப் படுத்தவும் (மார்க்கட்டிங்) உதவிகள் செய்யப்பட வேண்டும். 


கொரானா, GST, பணமதிப்பு நீக்கம் ஆகிய காரணங்களால் பாதிப்படைந்துள்ள தொழில்களை மேம்படுத்த உதவிடும் வகையில், சொத்துவரி, தண்ணீர் வரி, தொழில் வரி ஆகியவற்றை இரண்டு ஆண்டுகள் தள்ளுபடி செய்யும் வேண்டுகோள் MSME நிறுவனங்களிடம் அதிகரித்து உள்ளது கவனிக்கப்பட வேண்டும். 


தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் (TIIC) மற்றும் தாய்கோ அமைப்புகள் மூலம் வழங்கப்படும் கடன் வசதிகள் அதிகரிக்கப்படும். மூலப்பொருள்கள் பெற்றிடுவதற்கான Credit Guarantee நிதித்திட்டம் மூலம் மத்திய அரசின் சலுகைகளை தமிழகத்தில் பெற்றிடுவதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட வேண்டும்.


கோவை மண்டலத்தில் மோட்டார் பம்ப், நகைத் தொழில், வெட் கிரைண்டர், ஜவுளி கோழிப்பண்ணை ஆகிய சிறு, குறு தொழில்களின் வளர்ச்சிக்கும், சிட்கோ (சிறு தொழில் வளர்ச்சி கழகம்) மூலமான தொழிற்பேட்டைகள் உருவாக்கிடவும், தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்  தொழிற்பேட்டைகள் உருவாக்கப்படவும் வேண்டும். 


செங்கல், கயிறு, ஆடைகள் தயாரிப்பு, ஆகிய தொழில் கூட்டுறவு மூலமான நடவடிக்கைகள் திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, கரூர் பகுதிகளில், தலித் சமூகத்தினருக்காக அதிமுகவால் அறிவிக்கப்பட்டு கிடப்பில் உள்ளது. இது குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு செயலுக்கு கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட வேண்டும். மதுரையில் ஆட்டோமொபைல் கூட்டுறவு தொழிற்பேட்டை உருவாக்க வேண்டும். 


தென் தமிழ்நாட்டில், பனை, எண்ணெய், தீப்பெட்டி, அச்சு, பட்டாசு போன்ற தொழில்களுக்கு நவீனப்படுத்த உதவிகள் மற்றும் பயிற்சி அளித்திட வேண்டும். குறிப்பாக சீன பட்டாசு இறக்குமதி தடை செய்யப்பட வேண்டும். இதெல்லாம் சாத்தியமே. அரசுகளின் கடைக்கண் பார்வை பட்டால் நாட்டின் வளர்ச்சியில் கணிசமான பங்களிப்பு செய்யும், தொழில் வளர்ச்சிக்கு வித்திடுவதாக சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமையும்.
ஞாயிறு, 26 ஜூன், 2022

 


பாசிச பாணி… முதலாளித்துவ பாசம்…. அக்னிபாத்..

எஸ். கண்ணன்


மூடுதிரைக்குள் இருந்து நவதாராளமய கொள்கைகளை அமலாக்கி அதன் நன்மைகள் மக்களுக்கு என பகட்டாக, பாஜகவினர் பேசி வந்தது பொய் என்பது நிரூபனமாகியுள்ளது. ஏகபோகம் வளர்ந்து, இனி எல்லாவற்றையும் எதிர்கொள்ள முடியும் என்ற இறுமாப்பு நிலையில் இருந்து அக்னிபாத் போன்ற அறிவிப்புகள் வெளிவருகின்றன. முதலாளியின் மூலதன விரிவாக்கம், நிரந்தரமற்ற வேலையில் குவிந்திருக்கிறது, என்ற கம்யூனிஸ்ட்டுகளின் கூற்று, தற்போது பளிச்சென வெளிப்பட்டுள்ளது.


அமர்த்து பின் துரத்து கொள்கைக்கு புது பெயர்:


நவதாராளமய கொள்கை உலகம் முழுவதும், முதலாளித்துவ வளர்ச்சிக்காக, நிரந்தரமற்ற வேலை வாய்ப்பை உருவாக்கி வருகிறது. அமர்த்து பின் துரத்து என பெருமையாக சொல்லிக் கொள்ளவும் செய்கிறது. அதன் மறு பிரதியாக, பாஜக ஆட்சியாளர்கள் அக்னி பாத் திட்டத்தை ராணுவத்தில் அமலாக்க அறிவித்துள்ளனர். கிராஜுவிட்டி, பென்சன் உள்ளிட்ட சமூக பதுகாப்பு திட்டங்களை ஒழிக்கும் அரசாக பாஜக உள்ளதை, இதன் மூலம் முழுதாக அறிய முடியும். ஏற்கனவே ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், பென்சன் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கான போராட்டம் நடத்தியதையும், இப்பிரச்சனையுடன் இனைத்து பார்க்க வேண்டும்.


தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு, நம் நாட்டில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத வேலையின்மை, தற்போது உருவாகியுள்ளதாக கூறுகிறது. ஒன்றிய மற்றும் மாநில அரசுகளில் தற்போது 1 கோடி அளவில் காலிப் பணியிடங்கள் இருப்பதாகவும் கூறுகிறது. 35 ஆயிரம் ரயில்வே பணியிடங்களுக்கு 1.2 கோடி இளைஞர்கள் தேர்வு எழுதும் அளவிற்கு, போட்டி இருக்கிறது. போட்டி தேர்வுக்கான இளைஞர்கள் எண்ணிக்கையும், போட்டி தேர்வுக்கான பயிற்சி மையங்களின் எண்ணிக்கையும், அதிகரித்துள்ளது. பயிற்சி மையங்கள் மூலமாக கட்டன கொள்ளைக்கும், பணம் இருப்போர் அங்கு பயிற்சி பெறும் நிலையையும் பாஜக ஆட்சி உருவாக்கியுள்ளது. 


அக்னிபாத் திட்ட முன்மொழிவுகளும் தாக்குதலும்:


அக்னிபாத் திட்டத்திற்கு 17.5 -  21 வயதில் வேலைக்கு சேரலாம். அவருக்கான ஊதியமாக ரூ 4.72 துவங்கி 6.7 லட்சம் என்பதாக இருக்கும். அதில் 30 சதம் பிடித்தம் செய்யப்பட்டு, சேவை முடியும் போது வீரரின் சேமிப்பிற்கு இணையான தொகை சேர்க்கப்பட்டு 11.71 லட்சம் ரூபாயாக வழங்கப்படும். நம்மூரில் செயல்படுத்தபட்ட சுமங்கலித் திட்டம், மாங்கல்ய திட்டம் போன்ற அறிவிப்புகள் தான். வறுமையில் இருப்போருக்கு திருமணம் செய்ய உதவும் தானே என்று, மனரீதியில் ஒரு கொடிய சுரண்டல் முறையை ஏற்க செய்த அதே முதலாளித்துவ பாசம் இது. கூடவே பாசிச வழியிலான பாசமும் இணைகிறது. 


அடுத்ததாக 25 சதம் பேரை தொடர்ந்து பணியாற்ற அனுமதிப்பதாகவும், எஞ்சிய 75 சதம் பேரை வெளியேற்றுவதாகவும் கூறுகிறது. எப்படி அந்த 25 சதம் பேர் தேர்வு செய்யப் படுவர், அப்பட்டமான பாரபட்சம் தவிர வேறில்லை. வெளியேற்றப் பட்ட 75 சதம் பேருக்கு, அரசு மற்றும் தனியார் துறை வேலை வாய்ப்பில் 10 சதம் ஒதுக்கீடு வழங்கப் படும், என கூறுகின்றனர். பல கோடி எண்ணிக்கையில் அரசு பணியிடங்கள் நிதிபற்றாக்குறை, ஆட்குறைப்பு நடவடிக்கைகள் மூலம் அழிக்கப் பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஒன்றிய அரசு அறிவிக்கும் 10 சத ஒதுக்கீடு எந்த அளவு அமலாகும்? தனியார் நிறுவனங்கள் ஃபோர்டு, ஜெனரல் மோட்டார் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களும், பல உள்நாட்டு கனரக தொழிற்சாலைகளும் மூடப் படுவதே இன்றைய யதார்த்தமாக உள்ளது. 


இதுமட்டுமல்ல, ஆண்டுக்கு ரூ 7லட்சம் வரையிலும், சம்பாதித்து ஓய்வு பெறும் அக்னி வீரர், அதே ஊதியத்துடன் தனியார் நிறுவனங்களால் வேலைக்கு எடுக்கும் வாய்ப்பு இருக்குமா? அக்னி வீரராக பணியாற்ற சம்மதித்த காரணத்தால், இளைஞர் ஒருவர் தனது உயர் கல்வி வாய்ப்பையும் இழக்கிறார். பள்ளி கல்வி முடித்த ஒருவருக்கு, எந்த தனியார் நிறுவனம் நல்ல ஊதியத்தில் வேலை வழங்க தயாராக இருக்கிறது, என்பதை பாஜக ஆட்சியாளர்கள் தெளிவு படுத்த போவதில்லை. பக்கோடா விற்றால் தினம் 200 ரூபாய் கிடைக்கும் என, வேலைவாய்ப்பை கொச்சை படுத்திய பிரதமர் மோடிக்கு, 4 வருடங்களுக்கு பின் அக்னிபாத் வெளியேற்றும் இளைஞர்களின் வலி புரிய போவதில்லை. 


ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் - ஏகதிபத்திய ஆதரவும்:


பாஜக ஆட்சியாளர்கள் இரு வகையில் மக்களைத் தாக்கி வருகின்றனர். ஒன்று  நவதாராளமய கொள்கை அமலாக்கம். மற்றொன்று அதை எதிர்க்கும் மக்களை மத அடிப்படையில் பிளவு படுத்தி, மக்களுக்குள் மோதல் போக்கை வளர்ப்பது. இந்த இரு அணுகுமுறைகளும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மிக மிக சாதகமான விளைவுகளை உருவாக்கி உள்ளது. 


நாட்டின் விடுதலை போராட்டத்தில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு எந்த ஒரு பங்களிப்பும் செய்யவில்லை, என்பதை அனைவரும் அறிவர். இந்த உண்மையை ஆர்.எஸ்.எஸ் ஆதரவு எழுத்தாளர்களும் அம்பலப்படுத்தி உள்ளனர். உதாரணத்திற்கு காவியில் சகாதரத்துவம் என்ற நூலை எழுதிய, ஶ்ரீதர் டாம்லே, ஆண்டர்ஸன் ஆகியோர் விடுதலை இயக்கத்தில் ஆர்.எஸ்.எஸ் இல்லை என்பதுடன், அதற்கு பதிலாக பிரிட்டிஷாரிடம் சில சலுகைகளை பெற்றனர், எனக் கூறுகின்றனர். நானாஜி தேஷ்முக் என்பவர், இந்து ராஷ்ட் ரம் நிறுவ வேண்டும் என்ற தீவிரம், பிரிட்டிஷாரின் உண்மையான கூட்டாளியாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பை இட்டு செல்ல உதவியது என்கிறார். 


மேற்படி விவரம், ஒரு போதும் இந்தியாவை ஒரு தற்சார்பு கொண்ட நாடாக வளர்க்க ஆர்.எஸ்.எஸ் கொள்கை உதவாது என்பதை தெளிவு படுத்துகிறது. இந்தியா விடுதலை அடைந்த காலத்தில், பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கியதன் மூலம், மின்சாரம், உருக்கு, ராணுவ தளவாடம், போக்குவரத்து, வங்கி, காப்பீடு என உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் தன்நிறைவு அடைவதை நோக்கிய திட்டமிடலைக் கொண்டிருந்தது. 1990 களுக்கு பின்னான இந்திய பொருளாதார கொள்கை, நமது தன்நிறைவு அணுகுமுறையை கீழிறக்கி, பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் ஏகதிபத்திய நாடுகளின் சார்பு நடவடிக்கையை அதிகப்படுத்துவதாக அமைந்தது. 


அது ராணுவ நடவடிக்கைகளிலும் வெளிப்படுகிறது. நேரடி அந்நிய முதலீடு, ராணுவ தளவாட உற்பத்தியில் அதிகரித்தது. அதை பாஜக ஆட்சி அப்பட்டமாக அரங்கேற்றி பெருமைக்குரிய செயலாக விளம்பரப் படுத்தி வருகிறது. இந்தியாவில் டாங்க், துப்பாக்கி, வெடிமருந்து தயாரித்தல் ஆகியவற்றில் இருந்த பல முன்னேற்றங்கள், பின்னோக்கி இழுக்கப் படுகிறது.. ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்யும் 41 நிறுவனங்கள், பாஜக ஆட்சியாளர்களின் கொள்கை காரணமாக மூடப்படும் அபாயத்திற்கு தள்ளப் பட்டுள்ளது. அதாவது 49 சதத்தில் இருந்து 74 சதமாக அந்நிய நேரடி முதலீட்டிற்கான கதவுகளை நிதி அமைச்சகம் திறந்து விட்டுள்ளது. இந்திய ராணுவத்திற்கான ஒதுக்கீட்டில் 36 சதம் வெளிநாட்டு ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்ய வழிவகுக்கப் பட்டுள்ளது. 


இளையோர் படையல்ல… முடமாகும் இளமை:


அக்னிபாத் திட்டம் குறித்து இந்திய பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள குறிப்பு, பிறநாடுகளில் உள்ள நடைமுறையினை பின்பற்றுவதாக, கூறுகிறது. குறிப்பாக அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகளை சுட்டிக்காட்டி, அந்த நாடுகளின் ராணுவம் இளையோரை கொண்ட படை, என கூறுகிறது. அதற்கு அக்னிபாத் போன்ற 4 ஆண்டு சேவை அங்கு அமலில் இருப்பதாக கூறுகிறது. இது மிக ஆபத்தான ஒப்பீடு என்பதை நமது இளைஞர்கள் உணர்ந்துள்ளனர். எனவே தான் இவ்வளவு தீவிரப் போராட்டம் நடந்து வருகிறது. 


அமெரிக்காவில் வேலையின்மை 3.6 சதம், பிரிட்டனில் 4.8, ரஷ்யாவில் 3.5, சீனாவில் 5.3 என்று நிலைமை உள்ளது. இதில் சீனாவில் மட்டும் தான் மக்கள் தொகை கணக்கீட்டின் படி அதிகமான இளைஞர்கள் வேலையில்லாமல் இருப்பர். மற்ற நாடுகளின் மக்கள் தொகை குறைவு என்பதால் மிக குறைவான எண்ணிக்கையில் வேலையற்றோர் இருப்பர் என்பது யதார்த்தம். அது அந்த நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்காது. மேலும் சீனா உள்ளிட்டு மேற்படி நாடுகளில் வேலை இல்லா கால நிவாரணம் என்ற சமூக பொறுப்பு அரசுகளால் நிறைவேற்றப் பட்டு வருகிறது. எனவே அது தனிப்பட்ட இளைஞர்களின் மனநிலையை அல்லது, தனக்கு பிடித்த வேலை தேடும் பொறுமையை பாதிக்காது. 


ஆனால் இந்தியா அப்படி அல்ல. இங்கு வேலையின்மை விகிதம் 7.8 சதம் ஆகும். இது நமது மக்கள் தொகையுடன் ஒப்பிட்டால் சுமார் 10 கோடி ஆகும். வேலையில்லா கால நிவாரணம் வழங்குவதற்கான சட்டத்தை ஒன்றிய அரசு அமலாக்கவும் இல்லை. சில மாநில அரசுகள் நிவாரணம் வழங்கினாலும், பெயரளவில் மட்டுமே உள்ளது. அதுவும் போராடி பெறப் பட்டதே வரலாறு. சமூக பாதுகாப்பு சட்டங்களும், நடவடிக்கைகளும் இல்லாத நாட்டில், பாதுகாப்பு துறை வீரர்களுக்கு, 4 வருடங்கள் மட்டும் ராணுவ பணி என்பது, இளம் வீரர்களை கொண்டதாக அமையாது. மாறாக இளமையை முடக்கி போடுவதாக அமையும். 


எனவே நடைபெறும் அக்னிபாத் எதிர்ப்பு போராட்டம், மொத்தத்தில் குமுறிக் கொண்டிருக்கும் இளைஞர்களின் வெடிப்பு. இதை ஒடுக்கும் நடவடிக்கைகளை அரசு இயந்திரங்கள் மூலமாகவும், கெடுக்கும் வேலையை சங்க பரிவார் படைகளின் மூலமும் பாஜக செய்து வருகிறது. விவசாயிகள் டில்லியில் போராடியபோது, ஜனநாயக சக்திகள் ஒன்றினைந்து அளித்த ஆதரவை போல்,  இந்த அக்னி பாத் எதிர்ப்பிலும் வெளிப்படுத்துவதன் மூலம் பாஜக ஆட்சியாளர்களின் இளைஞர் விரோத கொள்கைகளை முறியடிக்க முடியும்.