பாசிச பாணி… முதலாளித்துவ பாசம்…. அக்னிபாத்..
எஸ். கண்ணன்
மூடுதிரைக்குள் இருந்து நவதாராளமய கொள்கைகளை அமலாக்கி அதன் நன்மைகள் மக்களுக்கு என பகட்டாக, பாஜகவினர் பேசி வந்தது பொய் என்பது நிரூபனமாகியுள்ளது. ஏகபோகம் வளர்ந்து, இனி எல்லாவற்றையும் எதிர்கொள்ள முடியும் என்ற இறுமாப்பு நிலையில் இருந்து அக்னிபாத் போன்ற அறிவிப்புகள் வெளிவருகின்றன. முதலாளியின் மூலதன விரிவாக்கம், நிரந்தரமற்ற வேலையில் குவிந்திருக்கிறது, என்ற கம்யூனிஸ்ட்டுகளின் கூற்று, தற்போது பளிச்சென வெளிப்பட்டுள்ளது.
அமர்த்து பின் துரத்து கொள்கைக்கு புது பெயர்:
நவதாராளமய கொள்கை உலகம் முழுவதும், முதலாளித்துவ வளர்ச்சிக்காக, நிரந்தரமற்ற வேலை வாய்ப்பை உருவாக்கி வருகிறது. அமர்த்து பின் துரத்து என பெருமையாக சொல்லிக் கொள்ளவும் செய்கிறது. அதன் மறு பிரதியாக, பாஜக ஆட்சியாளர்கள் அக்னி பாத் திட்டத்தை ராணுவத்தில் அமலாக்க அறிவித்துள்ளனர். கிராஜுவிட்டி, பென்சன் உள்ளிட்ட சமூக பதுகாப்பு திட்டங்களை ஒழிக்கும் அரசாக பாஜக உள்ளதை, இதன் மூலம் முழுதாக அறிய முடியும். ஏற்கனவே ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், பென்சன் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கான போராட்டம் நடத்தியதையும், இப்பிரச்சனையுடன் இனைத்து பார்க்க வேண்டும்.
தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு, நம் நாட்டில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத வேலையின்மை, தற்போது உருவாகியுள்ளதாக கூறுகிறது. ஒன்றிய மற்றும் மாநில அரசுகளில் தற்போது 1 கோடி அளவில் காலிப் பணியிடங்கள் இருப்பதாகவும் கூறுகிறது. 35 ஆயிரம் ரயில்வே பணியிடங்களுக்கு 1.2 கோடி இளைஞர்கள் தேர்வு எழுதும் அளவிற்கு, போட்டி இருக்கிறது. போட்டி தேர்வுக்கான இளைஞர்கள் எண்ணிக்கையும், போட்டி தேர்வுக்கான பயிற்சி மையங்களின் எண்ணிக்கையும், அதிகரித்துள்ளது. பயிற்சி மையங்கள் மூலமாக கட்டன கொள்ளைக்கும், பணம் இருப்போர் அங்கு பயிற்சி பெறும் நிலையையும் பாஜக ஆட்சி உருவாக்கியுள்ளது.
அக்னிபாத் திட்ட முன்மொழிவுகளும் தாக்குதலும்:
அக்னிபாத் திட்டத்திற்கு 17.5 - 21 வயதில் வேலைக்கு சேரலாம். அவருக்கான ஊதியமாக ரூ 4.72 துவங்கி 6.7 லட்சம் என்பதாக இருக்கும். அதில் 30 சதம் பிடித்தம் செய்யப்பட்டு, சேவை முடியும் போது வீரரின் சேமிப்பிற்கு இணையான தொகை சேர்க்கப்பட்டு 11.71 லட்சம் ரூபாயாக வழங்கப்படும். நம்மூரில் செயல்படுத்தபட்ட சுமங்கலித் திட்டம், மாங்கல்ய திட்டம் போன்ற அறிவிப்புகள் தான். வறுமையில் இருப்போருக்கு திருமணம் செய்ய உதவும் தானே என்று, மனரீதியில் ஒரு கொடிய சுரண்டல் முறையை ஏற்க செய்த அதே முதலாளித்துவ பாசம் இது. கூடவே பாசிச வழியிலான பாசமும் இணைகிறது.
அடுத்ததாக 25 சதம் பேரை தொடர்ந்து பணியாற்ற அனுமதிப்பதாகவும், எஞ்சிய 75 சதம் பேரை வெளியேற்றுவதாகவும் கூறுகிறது. எப்படி அந்த 25 சதம் பேர் தேர்வு செய்யப் படுவர், அப்பட்டமான பாரபட்சம் தவிர வேறில்லை. வெளியேற்றப் பட்ட 75 சதம் பேருக்கு, அரசு மற்றும் தனியார் துறை வேலை வாய்ப்பில் 10 சதம் ஒதுக்கீடு வழங்கப் படும், என கூறுகின்றனர். பல கோடி எண்ணிக்கையில் அரசு பணியிடங்கள் நிதிபற்றாக்குறை, ஆட்குறைப்பு நடவடிக்கைகள் மூலம் அழிக்கப் பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஒன்றிய அரசு அறிவிக்கும் 10 சத ஒதுக்கீடு எந்த அளவு அமலாகும்? தனியார் நிறுவனங்கள் ஃபோர்டு, ஜெனரல் மோட்டார் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களும், பல உள்நாட்டு கனரக தொழிற்சாலைகளும் மூடப் படுவதே இன்றைய யதார்த்தமாக உள்ளது.
இதுமட்டுமல்ல, ஆண்டுக்கு ரூ 7லட்சம் வரையிலும், சம்பாதித்து ஓய்வு பெறும் அக்னி வீரர், அதே ஊதியத்துடன் தனியார் நிறுவனங்களால் வேலைக்கு எடுக்கும் வாய்ப்பு இருக்குமா? அக்னி வீரராக பணியாற்ற சம்மதித்த காரணத்தால், இளைஞர் ஒருவர் தனது உயர் கல்வி வாய்ப்பையும் இழக்கிறார். பள்ளி கல்வி முடித்த ஒருவருக்கு, எந்த தனியார் நிறுவனம் நல்ல ஊதியத்தில் வேலை வழங்க தயாராக இருக்கிறது, என்பதை பாஜக ஆட்சியாளர்கள் தெளிவு படுத்த போவதில்லை. பக்கோடா விற்றால் தினம் 200 ரூபாய் கிடைக்கும் என, வேலைவாய்ப்பை கொச்சை படுத்திய பிரதமர் மோடிக்கு, 4 வருடங்களுக்கு பின் அக்னிபாத் வெளியேற்றும் இளைஞர்களின் வலி புரிய போவதில்லை.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் - ஏகதிபத்திய ஆதரவும்:
பாஜக ஆட்சியாளர்கள் இரு வகையில் மக்களைத் தாக்கி வருகின்றனர். ஒன்று நவதாராளமய கொள்கை அமலாக்கம். மற்றொன்று அதை எதிர்க்கும் மக்களை மத அடிப்படையில் பிளவு படுத்தி, மக்களுக்குள் மோதல் போக்கை வளர்ப்பது. இந்த இரு அணுகுமுறைகளும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மிக மிக சாதகமான விளைவுகளை உருவாக்கி உள்ளது.
நாட்டின் விடுதலை போராட்டத்தில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு எந்த ஒரு பங்களிப்பும் செய்யவில்லை, என்பதை அனைவரும் அறிவர். இந்த உண்மையை ஆர்.எஸ்.எஸ் ஆதரவு எழுத்தாளர்களும் அம்பலப்படுத்தி உள்ளனர். உதாரணத்திற்கு காவியில் சகாதரத்துவம் என்ற நூலை எழுதிய, ஶ்ரீதர் டாம்லே, ஆண்டர்ஸன் ஆகியோர் விடுதலை இயக்கத்தில் ஆர்.எஸ்.எஸ் இல்லை என்பதுடன், அதற்கு பதிலாக பிரிட்டிஷாரிடம் சில சலுகைகளை பெற்றனர், எனக் கூறுகின்றனர். நானாஜி தேஷ்முக் என்பவர், இந்து ராஷ்ட் ரம் நிறுவ வேண்டும் என்ற தீவிரம், பிரிட்டிஷாரின் உண்மையான கூட்டாளியாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பை இட்டு செல்ல உதவியது என்கிறார்.
மேற்படி விவரம், ஒரு போதும் இந்தியாவை ஒரு தற்சார்பு கொண்ட நாடாக வளர்க்க ஆர்.எஸ்.எஸ் கொள்கை உதவாது என்பதை தெளிவு படுத்துகிறது. இந்தியா விடுதலை அடைந்த காலத்தில், பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கியதன் மூலம், மின்சாரம், உருக்கு, ராணுவ தளவாடம், போக்குவரத்து, வங்கி, காப்பீடு என உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் தன்நிறைவு அடைவதை நோக்கிய திட்டமிடலைக் கொண்டிருந்தது. 1990 களுக்கு பின்னான இந்திய பொருளாதார கொள்கை, நமது தன்நிறைவு அணுகுமுறையை கீழிறக்கி, பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் ஏகதிபத்திய நாடுகளின் சார்பு நடவடிக்கையை அதிகப்படுத்துவதாக அமைந்தது.
அது ராணுவ நடவடிக்கைகளிலும் வெளிப்படுகிறது. நேரடி அந்நிய முதலீடு, ராணுவ தளவாட உற்பத்தியில் அதிகரித்தது. அதை பாஜக ஆட்சி அப்பட்டமாக அரங்கேற்றி பெருமைக்குரிய செயலாக விளம்பரப் படுத்தி வருகிறது. இந்தியாவில் டாங்க், துப்பாக்கி, வெடிமருந்து தயாரித்தல் ஆகியவற்றில் இருந்த பல முன்னேற்றங்கள், பின்னோக்கி இழுக்கப் படுகிறது.. ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்யும் 41 நிறுவனங்கள், பாஜக ஆட்சியாளர்களின் கொள்கை காரணமாக மூடப்படும் அபாயத்திற்கு தள்ளப் பட்டுள்ளது. அதாவது 49 சதத்தில் இருந்து 74 சதமாக அந்நிய நேரடி முதலீட்டிற்கான கதவுகளை நிதி அமைச்சகம் திறந்து விட்டுள்ளது. இந்திய ராணுவத்திற்கான ஒதுக்கீட்டில் 36 சதம் வெளிநாட்டு ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்ய வழிவகுக்கப் பட்டுள்ளது.
இளையோர் படையல்ல… முடமாகும் இளமை:
அக்னிபாத் திட்டம் குறித்து இந்திய பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள குறிப்பு, பிறநாடுகளில் உள்ள நடைமுறையினை பின்பற்றுவதாக, கூறுகிறது. குறிப்பாக அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகளை சுட்டிக்காட்டி, அந்த நாடுகளின் ராணுவம் இளையோரை கொண்ட படை, என கூறுகிறது. அதற்கு அக்னிபாத் போன்ற 4 ஆண்டு சேவை அங்கு அமலில் இருப்பதாக கூறுகிறது. இது மிக ஆபத்தான ஒப்பீடு என்பதை நமது இளைஞர்கள் உணர்ந்துள்ளனர். எனவே தான் இவ்வளவு தீவிரப் போராட்டம் நடந்து வருகிறது.
அமெரிக்காவில் வேலையின்மை 3.6 சதம், பிரிட்டனில் 4.8, ரஷ்யாவில் 3.5, சீனாவில் 5.3 என்று நிலைமை உள்ளது. இதில் சீனாவில் மட்டும் தான் மக்கள் தொகை கணக்கீட்டின் படி அதிகமான இளைஞர்கள் வேலையில்லாமல் இருப்பர். மற்ற நாடுகளின் மக்கள் தொகை குறைவு என்பதால் மிக குறைவான எண்ணிக்கையில் வேலையற்றோர் இருப்பர் என்பது யதார்த்தம். அது அந்த நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்காது. மேலும் சீனா உள்ளிட்டு மேற்படி நாடுகளில் வேலை இல்லா கால நிவாரணம் என்ற சமூக பொறுப்பு அரசுகளால் நிறைவேற்றப் பட்டு வருகிறது. எனவே அது தனிப்பட்ட இளைஞர்களின் மனநிலையை அல்லது, தனக்கு பிடித்த வேலை தேடும் பொறுமையை பாதிக்காது.
ஆனால் இந்தியா அப்படி அல்ல. இங்கு வேலையின்மை விகிதம் 7.8 சதம் ஆகும். இது நமது மக்கள் தொகையுடன் ஒப்பிட்டால் சுமார் 10 கோடி ஆகும். வேலையில்லா கால நிவாரணம் வழங்குவதற்கான சட்டத்தை ஒன்றிய அரசு அமலாக்கவும் இல்லை. சில மாநில அரசுகள் நிவாரணம் வழங்கினாலும், பெயரளவில் மட்டுமே உள்ளது. அதுவும் போராடி பெறப் பட்டதே வரலாறு. சமூக பாதுகாப்பு சட்டங்களும், நடவடிக்கைகளும் இல்லாத நாட்டில், பாதுகாப்பு துறை வீரர்களுக்கு, 4 வருடங்கள் மட்டும் ராணுவ பணி என்பது, இளம் வீரர்களை கொண்டதாக அமையாது. மாறாக இளமையை முடக்கி போடுவதாக அமையும்.
எனவே நடைபெறும் அக்னிபாத் எதிர்ப்பு போராட்டம், மொத்தத்தில் குமுறிக் கொண்டிருக்கும் இளைஞர்களின் வெடிப்பு. இதை ஒடுக்கும் நடவடிக்கைகளை அரசு இயந்திரங்கள் மூலமாகவும், கெடுக்கும் வேலையை சங்க பரிவார் படைகளின் மூலமும் பாஜக செய்து வருகிறது. விவசாயிகள் டில்லியில் போராடியபோது, ஜனநாயக சக்திகள் ஒன்றினைந்து அளித்த ஆதரவை போல், இந்த அக்னி பாத் எதிர்ப்பிலும் வெளிப்படுத்துவதன் மூலம் பாஜக ஆட்சியாளர்களின் இளைஞர் விரோத கொள்கைகளை முறியடிக்க முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக