தொழில் வளர்ச்சி என்பது ஏகபோக வளர்ச்சி அல்ல…
எஸ். கண்ணன்
தமிழ்நாட்டில் சுமார் 8 கோடி மக்கள் தொகை உள்ளநிலையில், மாணவர், முதியோர், பணிக்கு செல்லாத பெண்கள் ஆகிய மூன்று பிரிவினரை தவிர்த்தால் சுமார் 3 கோடிப்பேர் தொழிலாளர்கள் ஆவர். அதில் ஏறக்குறைய 80 லட்சம் பேர் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்களில் பணிபுரிவோராக அல்லது சார்ந்தோராக உள்ளனர். மூன்றில் ஒரு பகுதியாக உள்ள இந்த மக்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதும், செயல்படுத்துவதும், தொழில் பாதுகாப்பு மட்டுமல்ல, வேலை வாய்ப்பு பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பு சார்ந்த தாகும்.
அதிகரிக்கும் தற்கொலைகள்:
தமிழகம் இந்தியாவில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சியில் இரண்டாம் இடத்தில் உள்ளது. 6.89 லட்சம் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மூலமாக, ரூ 32004 கோடி முதலீட்டில், 8000 வகையான பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. கணிசமான அளவிற்கு பொருளாதார கட்டமைப்பில் இந்த துறை பங்களிப்பு செய்கிறது. அரசு இதை தக்க வைப்பது மட்டுமல்ல அடுத்த கட்டத்திற்கு வளர்த்தெடுக்க வேண்டிய கவனத்தை செலுத்த வேண்டியுள்ளது. ஆனால் ஒன்றிய மற்றும் மாநில ஆட்சியாளர்கள் உரிய கவனம் செலுத்தவில்லை. மாறாக பெரும் நிறுவனங்களுக்கு அளிக்கும் சலுகை, மற்றும் இறக்குமதி கொள்கைகளில் செய்த பன்னாட்டு நிறுவன ஆதரவு நடவடிக்கை ஆகிய காரணங்களால், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. கதவடைப்பு, வேலையிழப்பு, தற்கொலை ஆகியவை அதிகரித்துள்ளது.
பெருமளவில் விவசாயிகளைப் போல் தற்கொலை செய்து கொள்ளும் அவலத்தை சிறு, குறு நிறுவன உரிமையாளர்களிடம் பார்க்க முடிகிறது. அண்மையில் கோவையில் இந்த கொடுமை அரங்கேறியுள்ளது. இந்தியா முழுவதும் கடந்த ஆண்டுகளில் தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள விவரங்களின் படி 2017,2018 ஆண்டுகளில் 7798 மற்றும் 8000 அளவில் சிறு, குறு தொழில் உடமையாளர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தமிழகத்தில் 981 பேர் இந்த கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். லட்சாதிபதி அல்லது கோடீஸ்வரர் என்று விளிக்கப்படுவோரின் நிலை இது தான். தொ.மு.சி. ரகுநாதன் எழுதிய பஞ்சும் பசியும் நாவலில் கைலாச முதலியார் என்ற கைத்தறி நெசவாளர் படிப்படியாக கடன் வளைக்குள் சிக்கி மீள முடியாத நிலையில் தூக்கில் தொங்கும் காட்சியே தொடர்கதையாக நீடிக்கிறது.
பெருமுதலாளித்துவ ஆதரவின் தாக்கம்:
அதாவது பெரும் தொழில் நிறுவனங்களுக்கு அரசுகள் அளிக்கும் சலுகை மேலும் மேலும் அதிகரித்து, உள்ளூர் மட்டத்திலான தொழில்களை நாசமாக்கும் வேலையை பாஜக தலைமையிலான ஒன்றிய ஆட்சியாளர்கள் செய்து வருகின்றனர். கனரக தொழில்களை அழித்து சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்களை பாதுகாக்க வேண்டும் என கோரவில்லை. ஆனால் பெரும் நிறுவனங்ககளுக்கு அளிக்கு ஆதரவில் ஐம்பது சதமாவது MSME வளர்ச்சிக்கு ஒதுக்கீடு செய்வது அவசியம். வெளிப்படையாகவே நிதியமைச்சர் தனது நிதிநிலை அறிக்கையில், பன்னாட்டு, உள்நாட்டு பெருமுதலாளித்துவ ஆதரவை பதிவு செய்துள்ளார். இது கடந்த காலத்தில், உலக வர்த்தக மையம் டோகா வில் நடத்திய மாநாடுகளில் முன்மொழிந்த கொள்கையின் மறுபதிப்பாகவே உள்ளது. சுமார் 16 ஆண்டுகளுக்கு முன் நடந்த விவாதம் மீண்டும் மேலோங்குகிறது என்றால், முன்னோக்கிய வளர்ச்சி இல்லை. மாறாக கால சக்கரத்தை பின்னோக்கி இழுக்கும் கொள்கையாகவே பிரதிபலிக்கிறது.
சீனா, ஜப்பான், தைவான், மலேசியா, போன்ற நாடுகளில் இருந்து செய்யப்படும் இறக்குமதி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது. மேக் இன் இந்தியா கொள்கை MSME உற்பத்தியில் வெளிப்பட வேண்டும். அரசின் கொள்முதல் சிறு,குறு தொழில் நிறுவனங்களிடம் குறைந்தது 20 சதம் அளவிற்கு இருந்தால், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் பாதுகாக்கப்படும், என்ற தேவை குறித்து அரசின் கொள்கைகள் கவலை கொள்ள வேண்டும்.
சில ஆலோசனைகள்:
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான வரையறை தற்போது உள்ள 25 லட்சம் முதலீட்டில், குறு தொழில் எனவும், 2 கோடி வரையிலான முதலீடு சிறு தொழில் எனவும், 10 கோடி வரையிலான முதலீடு நடுத்தர தொழில் எனவும் உள்ளது. இதை கோவை கொடிசீய அமைப்பினர் விடுத்த வேண்டுகோளை கணக்கில் கொண்டு, குறு தொழில் முதலீட்டு வரம்ப்பை 75 லட்சமாகவும், சிறு தொழில் 10 கோடி வரையிலும், உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இது சந்தை வளர்ச்சியில் பணமதிப்பு குறைந்துள்ள காரணத்தால் மேற்படி உற்பத்தியாளர்களுக்கு, அரசின் சலுகை மற்றும் கட்டணங்கள் தீர்மானிக்க உதவியாக இருக்கும்.
MSME க்கான ஒப்புதலை வழங்க ஒருங்கிணைந்த ஒற்றைச் சாளர நிர்வாக அமைப்பு தேவை என்ற கோரிக்கை பரிசீலனை செய்யப் பட வேண்டும்.
மூலப்பொருள்களின் விலை GST காரணமாக 35% விலையுயர்வு ஏற்பட்டுள்ளது. உற்பத்தி பாதிப்பிற்கு இது பிரதான தடையாக உள்ளது. இது குறித்து உரிய கலந்தாலோசனை மூலம் நியாயமான விலையில் கிடைக்க நடவடிக்கை தேவை.
ஜாப் ஆர்டர்களுக்கும் 18 சத GST வரி விதிப்பை உருவாக்கியதால் ஏற்பட்டுள்ள பாதிப்பை மதிப்பீடு செய்து வரி குறைப்புக்கான உறுதியான நடவடிக்கைகள் தேவைப் படுகிறது.
தேசிய, சர்வதேசிய அளவில் நடைபெறும் கண்காட்சிகளில் பங்கேற்பாளர் மற்றும் பார்வையாளர்களாக பங்கு கொள்ளவும், சந்தைப் படுத்தவும் (மார்க்கட்டிங்) உதவிகள் செய்யப்பட வேண்டும்.
கொரானா, GST, பணமதிப்பு நீக்கம் ஆகிய காரணங்களால் பாதிப்படைந்துள்ள தொழில்களை மேம்படுத்த உதவிடும் வகையில், சொத்துவரி, தண்ணீர் வரி, தொழில் வரி ஆகியவற்றை இரண்டு ஆண்டுகள் தள்ளுபடி செய்யும் வேண்டுகோள் MSME நிறுவனங்களிடம் அதிகரித்து உள்ளது கவனிக்கப்பட வேண்டும்.
தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் (TIIC) மற்றும் தாய்கோ அமைப்புகள் மூலம் வழங்கப்படும் கடன் வசதிகள் அதிகரிக்கப்படும். மூலப்பொருள்கள் பெற்றிடுவதற்கான Credit Guarantee நிதித்திட்டம் மூலம் மத்திய அரசின் சலுகைகளை தமிழகத்தில் பெற்றிடுவதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட வேண்டும்.
கோவை மண்டலத்தில் மோட்டார் பம்ப், நகைத் தொழில், வெட் கிரைண்டர், ஜவுளி கோழிப்பண்ணை ஆகிய சிறு, குறு தொழில்களின் வளர்ச்சிக்கும், சிட்கோ (சிறு தொழில் வளர்ச்சி கழகம்) மூலமான தொழிற்பேட்டைகள் உருவாக்கிடவும், தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தொழிற்பேட்டைகள் உருவாக்கப்படவும் வேண்டும்.
செங்கல், கயிறு, ஆடைகள் தயாரிப்பு, ஆகிய தொழில் கூட்டுறவு மூலமான நடவடிக்கைகள் திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, கரூர் பகுதிகளில், தலித் சமூகத்தினருக்காக அதிமுகவால் அறிவிக்கப்பட்டு கிடப்பில் உள்ளது. இது குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு செயலுக்கு கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட வேண்டும். மதுரையில் ஆட்டோமொபைல் கூட்டுறவு தொழிற்பேட்டை உருவாக்க வேண்டும்.
தென் தமிழ்நாட்டில், பனை, எண்ணெய், தீப்பெட்டி, அச்சு, பட்டாசு போன்ற தொழில்களுக்கு நவீனப்படுத்த உதவிகள் மற்றும் பயிற்சி அளித்திட வேண்டும். குறிப்பாக சீன பட்டாசு இறக்குமதி தடை செய்யப்பட வேண்டும். இதெல்லாம் சாத்தியமே. அரசுகளின் கடைக்கண் பார்வை பட்டால் நாட்டின் வளர்ச்சியில் கணிசமான பங்களிப்பு செய்யும், தொழில் வளர்ச்சிக்கு வித்திடுவதாக சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக