வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

அரசு வருவாய் இழப்பின் மற்றொரு முகம்

நகரங்களை நோக்கிய முடிவில்லா வளர்ச்சி குறிப்பிடத் தகுந்த அளவிற்கு மக்கள் தொகை மற்றும் செல்வ வளம் ஆகியவற்றில் பெரும் பாதிப்பை, வருகிற 50 ஆண்டுகளில் ஏற்படுத்தும், என ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வு குறிப்பிடுகிறது. எட்வர்ட் லோபஸ் மோரினோ என்ற ஆய்வாளர், உலக வளர்ச்சி குறித்து பேசுகிற போது, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தின் மக்கள் தொகை வளர்ச்சி,1975-90 காலத்தில் 45 சதமாக இருந்தது என்றும், ஆனால் நகரின் சுற்று வட்டாரத்தில் இதைவிட 3 மடங்கு கூடுதலான மக்கள் தொகை வளர்ச்சி இருந்தது என்றும் தெரிவிக்கிறார்.

இதே நிலை தற்போது வளர்ந்து வரும் நாடுகளின் நகர்ப் புறங்களிலும் உருவாகி வருகிறது. பாரம்பரியமான நகர்ப்புறத்திற்கு வெளியே, உலகத்தரத்திலான வாழ்க்கை முறை, என்ற கற்பனையோடு ரியல் எஸ்டேட் தொழில் செய்வோர், பல கருத்துக்களை விதைத்து வருகின்றனர் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும், என்பதையும் லோபஸ் மோரினோ தெரிவிப்பது கவனிக்கத் தக்கது. இக்கற்பனைக் கருத்துக்கு இரையாவாது பெரும்பாலும் நகர்புறத்தில் வீடு வாங்கி செட்டில் ஆக நினைக்கும் நடுத்தர மக்களே. மற்றொரு புறம் சாதாரண உழைப்பாளர்கள், நகரின் மையப் பகுதியில் வாடகை கொடுத்து குடியிருக்க வழியில்லை, ஆகவே புறநகர் பகுதி விரைந்து விரிவாக்கம் பெறுகிறது. இது மிகமுக்கியப் பிரச்சனையாகும். இந்த நிலைக்கு உலகமயமாக்கல் பொருளாதாரக் கொள்கையின் தாக்கம் தவிர வேறில்லை.

இந்தியாவில் பல நகரங்கள் மேற்படித் தன்மையில் வளர்ச்சி பெறுவதை நாம் பார்க்க முடியும். தமிழகத்தில் சென்னை மட்டுமல்ல, பல்வேறு நகரங்களில் இந்த நிலை இருப்பது பாகுபாடற்ற உண்மை. இது குறித்த விவாதம் நெடியது என்பதால், எல்லா பரிமானங்களிலும் விவாதிக்காமல் அரசுக்கு ஏற்படும் இழப்புகள் குறித்து மட்டும் விவாதிப்பது உடனடித் தேவையாக உணருகிறோம். ரியல் எஸ்டேட் தொழில் முறையில் அரசு எதிர் கொள்ளும் இழப்பு என்பது யாரும் அறியாதது அல்ல. அரசு மட்டுமல்லாமல் நடுத்தர மக்கள் துவங்கி, எல்லாத்தரப்பு மக்களும் இதில் பாதிப்புக்கு ஆளாகின்றனர். சந்தைப் பொருளாதரக் கொள்கை அமலாக்கத்தில், எந்த ஒரு பொருளின் விலையும், சந்தையில் ஒரே விலையாகத் தான் இருக்கும். ஆனால் நில விற்பனை விவகாரத்தில் மட்டும், அரசு நிர்ணயித்த வழிகாட்டும் விலை, சந்தை விலை என, இரண்டு விதமான விலை கொண்டதாக இருக்கிறது.

அரசு பதிவாளர் அலுவலகத்தில் சொத்து பதிவு செய்யப் படுகிற போது, வழிகாட்டும் விலையில் பத்திரப் பதிவு செய்யப் படுகிறது. அரசு விலையைத் தீர்மானித்த பிறகு, சந்தை விலை என்ற தேவையை யார் நிர்ணயிக்கிறார்கள்?. நகர்மயமாதலில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளில் மிக முக்கியமான ஒன்றாக இதைக் கருத வேண்டும். ஏனென்றால், சென்னை போன்ற பெரு நகரங்களை மையப் படுத்தி, பன்னாட்டு நிறுவனங்கள் வருவதும், அவர்களுக்காக பல நூறு அல்லது பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தேவைப் படுவதும் அதிகரித்து உள்ளது. இவை தவிர கல்லூரிகள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் ஆகியவற்றின் எண்ணிக்கையும் நகரங்களைச் சுற்றி அமைவதால், நிலம் குறித்த சொத்துப் பதிவு செய்வது அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் 2010ல் 12.04 லட்சம் சொத்துக்கள் பத்திரப் பதிவு செய்யப் பட்டுள்ளது. இதில் 2.35 லட்சம் சொத்துக்கள் பெங்களூரு நகரத்திற்குள் பதிவு செய்யப் பட்டுள்ளன. மாநில அரசின் மொத்த வருமானம் 3795 கோடி ரூபாய், பெங்களூருவின் பங்களிப்பு, 2584 கோடி ரூபாய். தமிழகத்தில் நிச்சயமாக கர்நாடகத்தை விடவும் கூடுதல் எண்ணிக்கையில் பத்திரப் பதிவு நடைபெற்று வருகிறது. 2008 ம் ஆண்டில் 4800 கோடி அளவிற்கு இருந்த அரசு வருவாய், தற்போது தாக்கல் செய்யப் பட்டுள்ள பட்ஜெட்டில் 10 ஆயிரம் கோடிக்கும் அதிகமான வருமானத்தை எதிர்பார்ப்பதாக மாநில நிதித்துறை செயலாளர் கூறியிருக்கிறார். இதன் பொருள் மாநில அரசுக்கான வருமான வரவில், பத்திரப் பதிவின் மூலம் கிடைத்த 2008ம் ஆண்டு வரவை விடவும், சுமார் 60 சதம் கூடுதலாக கிடைக்க உள்ளது என்பதாகும். தமிழகத்தைப் பொருத்தளவில் வருவாய் பங்களிப்பில் மூன்றாம் இடத்தில் இருப்பது, பத்திரப் பதிவுத் துறையாகும். 135 ஆண்டுகளாக வருவாய் ஈட்டித் தருவதாகவும் சொல்லப்படுகிறது. ஆனாலும் இது வழிகாட்டும் விலைக்கானப் பத்திரப் பதிவு மட்டுமே. சந்தை விலைக்கு சம்மந்தம் இல்லை என்பது அரசு அதிகாரிகளும், ரியல் எஸ்டேட் தொழில் புரிவோரும் நன்கு அறிந்த ஒன்று..

தற்போது சென்னை பெரு நகரைச் சுற்றி ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பொறியியல் துறைகள் சார்ந்த ஏராளமான தொழிற்சாலைகள், ஐ.டி அலுவலகங்கள் ஆகியவை வருகின்றன. இதன் காரணமாக மார்க்கெட் தேவை மற்றும் குடியிருப்பு தேவைகளுக்கான, நில விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. ரியல் எஸ்டேட் தொழில் செய்வோர், வீடுகள் குறித்த சந்தைத் தேவையை 3 பிரிவுகளாகப் பிரித்து உள்ளனர். அதாவது ஆடம்பரமானது, ஓரளவு வசதியானது, பட்ஜெட்டுக்குள் வரக் கூடியது, என்பதாகும். 2010 ம் ஆண்டில் பட்ஜெட்டிற்குள் வரக்கூடிய வீடுகளின் விற்பனை சென்னையில் மட்டும் 13 ஆயிரம். இந்த ஆண்டு 18 ஆயிரமாக உயரலாம் என எதிர்பார்க்கின்றனர்.

மேற்படி வகையிலான வீடுகள் அதிகம் விற்பனையானது, அம்பத்தூர், ஆவடி ,முகப்பேர், தாம்பரம், சோழிங்கநல்லூர், கேளம்பாக்கம், ஊரப்பாக்கம் உள்ளிட்ட புறநகர் பகுதிகள் ஆகும். ஒரு சதுர அடியின் விலை சந்தை அடிப்படையில், 3500 ரூபாய் முதல் 4000 எனத் தீர்மானிக்கப் பட்டதாகத் தெரிகிறது. ஆனால் வழிகாட்டப் பட்ட விலை அடிப்படையில் 400 ரூபாய் துவங்கி 500 வரைதான் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசுக்கு வரவேண்டிய ஸ்டாம்ப் கட்டணம் குறைத்து மதிப்பிடப் படுவதால், அரசு வருவாய் பல ஆயிரம் கோடி இழப்பிற்கு தள்ளப் படுகிறது. மறுபுறம் நடுத்தர மக்கள் பல ஆயிரம் கோடி தொகை கூடுதலாக செலுத்தக் கட்டாயப் படுத்தப் படுகின்றனர். எனவே அரசு சந்தை விலை என்ற மோசடியைத் தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய காலமாக இன்றைய நிலை இருக்கிறது.

ரியல் எஸ்டேட் தொழில் மீது அரசு சில சமூகக் கட்டுப்பாடுகளை விதிக்கா விடில், சொந்தமாக வீடு உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற உணர்வில், வங்கிகளில் கடன் வாங்கும் சாதாரண மக்களிடம் நடைபெறும் மோசடி தீவிரமாகும். பெரும் நிறுவனங்கள் பெற்றுள்ள நிலங்களுக்கு வழிகாட்டி விலையை நிர்ணயித்து, அவர்களின் இழப்பை தடுக்கும் அரசு ஏன் பொது மக்கள் பயன்பாட்டிற்கான, வீடுகளுக்கான நிலங்களையும் அவ்வாறு விற்க வழிவகை செய்யவில்லை, என்ற கேள்வி தவிர்க்க இயலாதது. கடந்த ஆட்சியாளர்கள் நில அபகரிப்பு செய்த குற்றங்களை விசாரிக்க அரசு தனிப்பிரிவை உருவாக்கியதும், 2500க்கும் அதிகமான புகார்களை பொது மக்கள் கொடுத்திருப்பதும், பாராட்டுக்குரியதாக, நடுத்தர மக்களால் பார்க்கப் படுகிறது.

முன்னாள் முதல்வரின் குடும்பத்தினர் துவங்கி, அமைச்சர் பெருமக்கள், அதிகாரிகள், தி.மு.க பிரமுகர்கள் என பல்வேறு பட்ட மக்கள் புகார்களுக்கு ஆளாகி வருகின்றனர். அரசு நிலம் கோவில் நிலம், ஏழை மக்களின் நிலம், தலித் சமூகத்திற்கு ஒதுக்கப் பட்ட பஞ்சமி நிலம் என்ற பாகுபாடின்றி, கடந்த ஆட்சியின் போது கைமாறி இருக்கலாம். இது போன்ற விவரங்களை புகார்களின் சாரம்சத்தில் இருந்து அறிய முடிகிறது. வழக்கை விரைந்து முடிக்கும் வகையில், சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப் பட்டிருப்பதும், வரவேற்பிற்கு உரியதாக உணரப் படுகிறது. இருந்த போதிலும், பல ஆயிரம் கோடி வருவாய் இழப்பை அரசுக்கும், பொதுமக்களுக்கும் ஏற்படுத்துகிற ரியல் எஸ்டேட் தொழில் மீது சமூகக் கட்டுப்பாட்டை உறுதி செய்யாமல், தமிழக அரசு, முந்தைய திமுக பிரமுகர்கள் மீதான மோசடி வழக்குகளை நியாயப் படுத்த முடியாது.

சில ஆண்டுகளுக்கு முன், முத்திரைத்தாள் மோசடி என்ற பெயரில் அப்துல் கரீம் தெல்கி கைது செய்யப் பட்டார். அகில இந்திய அளவில் பல அதிகாரிகள், ஆளும் கட்சிப் பிரமுகர்கள் என வரிசையாக தெல்கியுடன் இனைத்துப் பேசப் பட்டனர். தெல்கியுடன் சேர்ந்து 13 நபர்கள் 10 ஆண்டுகாலம் கடும்காவல் தண்டனை வழங்கப் பட்டனர். மக்கள் தெல்கி மீதான குற்றச்சாட்டையும் வழக்கையும் மறந்து விட்டார்கள் என்பதே, இன்றைய நிலை. புதிய மோசடிகள், பழைய மோசடிகளை மறக்கடிக்கும் என்ற நம்பிக்கையே, பிரமுகர்கள் செய்யும் தொடர் தவறுகளுக்கு அடிப்படைக் காரணம். தவறு செய்தவர் சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்ப முடியாது, என்ற நிலை உருவாக்கப் படாமல், இது போன்ற இழப்புகளில் இருந்து மக்களைக் காக்க இயலாது.

நன்றி: தினமணி 23.08.2011

புதன், 10 ஆகஸ்ட், 2011

கம்யூனிஸ்டுகளைக் காப்பதற்கு மட்டுமல்ல!

மேற்கு வங்க கம்யூனிஸ்ட்டுகளுக்கு ஆதரவாக அனைத்து மாநில கட்சி அமைப்பு களும், மதச்சார்பற்ற சக்திகளும், இதர பகுதி ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து நிற்க வேண்டிய தருணமாக இக்காலத்தைக் கருத வேண்டியுள்ளது. பல்வேறு தளங்களில் சிறப் புற பணியாற்றிய கம்யூனிஸ்டுகள் மீது தாக்கு தல் தொடுப்பது என்பது நபர்கள் மீதான தாக்கு தலாக கருத முடியாது. மாற்றுக் கொள்கை மீதான காழ்ப்புணர்ச்சியையும், அதை அழிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தையும் கொண்டதாக இருக்கிறது. ஆட்சியில் இருந்த கம்யூனிஸ்டுகள் பின்பற்றிய சமூக, அரசியல் நடவடிக்கைகளில் இருந்து இவற்றை அறிந்து கொள்ள முடியும்.

மதச்சார்பின்மை-சமூக நீதி பாதுகாப்பதில்

இந்தியா விடுதலை பெறும் சமயத்தில், பாகிஸ்தான் பிரிவினை காரணமாக எழுந்த வகுப்புக் கலவரம், அன்றைக்கு பொறுப்பில் இருந்த மௌண்ட் பேட்டனை அச்சம் கொள் ளச் செய்தது. பஞ்சாப் எல்லைக்கு ராணுவத் தையும், வங்காளத்தின் நவகாளி பகுதிக்கு, ராணுவத்துடன் ஒற்றை மனிதப் படையான காந்தியையும் அனுப்பப் போவதாக மௌண்ட் பேட்டன் தெரிவித்தார். அந்த அளவிற்கு கொடிய கலவரம் நடந்த மேற்கு வங்கத்தில், 1977க்குப் பின்னர், எந்த ஒரு கொடிய சம்பவ மும் நடைபெறவில்லை. இந்திய அரசு ஏட் டளவில் கொண்டுள்ள மதச்சார்பின்மையை நடைமுறையில் அமலாக்கியதற்கான உதார ணம் மேற்கு வங்கமாகும். இந்தியாவில் முஸ் லிம் மக்கள் 13 சதவீதம் பேர் வசிக்கின்றனர். ஆனால் மேற்கு வங்கத்தில் 25 சதவீதம் பேர். முர்சிதாபாத் மாவட்டத்தில் 63 சதவீதம். ஜம்மு-காஷ்மீர், அசாம் மாநிலங்களுக்கு அடுத்தபடியாக மேற்கு வங்கம் இருக்கிறது. இருந்தபோதும், பெரும்பான்மை அல்லது சிறுபான்மை வகுப்புவாத சக்திகளின் வளர்ச் சிக்கு எந்த சூழ்நிலையிலும், இடது முன் னணி ஆட்சிக் காலத்தில் இடம் அளிக்கப் படவில்லை. அதுமட்டுமல்ல, சிறுபான்மை மக்களின் நலன் காப்பதில் முன்நின்று செயல்பட்ட அரசு மற்றும் அங்கிருந்த கம்யூ னிஸ்டுகள் விளங்கினார்கள்.

2008 டிசம்பரில் ரங்கநாத் மிஸ்ரா குழு வின் பரிந்துரை வெளிவந்தது. 2009 பிப்ரவரி யில், மேற்கு வங்கத்தில், 10 சதவீத இடஒதுக் கீடு இஸ்லாமிய மக்களுக்கு அமலாகும் என அறிவித்த ஒரே மாநில அரசு, இடது முன் னணி மட்டுமே. சமூக பொருளாதார அந்தஸ் தில் சிறுபான்மை மக்கள் முன்னேற்றம் காண வேண்டும் என்ற கண்ணோட்டத்தில், கம்யூனிஸ்டுகளின் செயல்பாடுகள் இருந் தன. பழங்குடியினரைப் பொறுத்தளவில், இந் திய அளவில், 7.5 சதவீதம் என்றாலும், மேற்கு வங்கத்தில் 15.5 சதமானோர் ஆவர். இவர்க ளில் பெரும்பாலோர் நிலமுடையவர்கள் ஆவர். மேற்கு வங்கத்தில் 84 சதமான நிலத் தை சிறு மற்றும் குறு விவசாயிகள் கொண்டி ருப்பதாகவும், அதே நேரத்தில் இதர மாநிலங் களில் 48 சதமான நிலங்களையே சிறு விவ சாயிகள் கொண்டிருக்கிறார்கள் என்ற விவரத் தையும் மத்திய அரசு தெரிவிக்கிறது. தலித் சமூகத்தின் பங்களிப்பு மேற்கு வங்கத்தில் 29.2 சதவீதம் எனத் தெரிவிக்கின்றனர். இவர் களில் 19.45 சதமான மக்களைத் தவிர மற்ற அனைவருக்கும் நிலவிநியோகம் செய்யப்பட் டிருக்கிறது. அதாவது 80 சதமான தலித் மக் கள் நிலமுடையவராக இருக்கின்றனர், என்ற இணைய தளத் தகவல் சாதாரணமானது அல்ல, மிகப்பெரிய சாதனை. உண்மையான சமூக நீதியின் அடையாளமாக இடது முன் னணி ஆட்சி இருந்தது என்பதை சமூக நீதி ஆய் வாளர்கள் கவனிக்க வேண்டும்.

தொழிலாளர் நலனில்

இந்தியாவில் வறுமை ஒழிப்பு குறித்து, உலக வங்கி குறிப்பிடுகிற போது, மேற்கு வங்க இடது முன்னனி அரசு மற்ற மாநிலங் களை விடவும் சிறந்து விளங்குகிறது என கருத்து தெரிவித்துள்ளது. சரியான திட்டங் கள் கொண்டு செயலாற்றாமல், வறுமை ஒழிப்பில் முன்னேற்றம் காணமுடியாது. நிலச்சீர்திருத்தம் ஒரு காரணம் என்றால், மறுபுறம் தொழிலாளர் ஆதரவு நடவடிக்கை கள் சிறந்த முறையில் இடது முன்னணியி னால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மத்திய அரசின் இறக்குமதிப் பொருளாதாரக் கொள் கையின் விளைவால், மேற்கு வங்கத்தில், மத் திய அரசு மற்றும் தனியார் ஆலைகள் சில மூடப் பட்டன. மைய அரசு கைவிட்ட தொழி லாளர்களுக்கு, மாதாந்திரம் ரூ.1500 வழங்க நடவடிக்கை எடுத்தது, இடது முன்னணி அரசு. வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் 17 லட்சம் அணிதிரட்டப்படாத தொழிலாளர் களை உறுப்பினராக்கிய பெருமை இடது முன் னணிக்கு உண்டு. வேறு எந்த மாநில அரசும் இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ள வில்லை என்பது கவனிக்கத்தக்கது.

ஜனநாயகம் காப்பதில்

மேற்கு வங்கத்தில் இடது முன்னணி ஆட்சி இருந்த போது, தேசம் முழுமைக்கு மான ஜனநாயகம் காப்பதில், சீரிய பங்களிப்பு செய்துள்ளனர். இன்றைய மாநில கட்சிகள் மிகப் பெரிய சக்தியாக, மத்திய ஆட்சியில் வளர்ந்துள்ளன. குறிப்பாக 1996க்குப் பின்னர், மாநில ஆட்சிகள் எதுவும் 356 சட்டத்தைப் பயன்படுத்திக் கலைக்கப் படவில்லை. எடுத்த ஒன்றிரண்டு முயற்சிகளும், தோல்வி யைத் தழுவியுள்ளன. நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் பங்களிப்பே, இத் தோல்விகளுக்குக் காரணம் என்றால் மிகை யல்ல. மார்க்சிஸ்ட் கட்சி மட்டுமே, 355வது பிரிவைப் பயன்படுத்தி, மாநில ஆட்சியை தேவையை யொட்டி நிர்ப்பந்திக்க முடியும். எனவே 356வது பிரிவை முற்றாக நீக்குவதே சரி, என்ற ஒரே நிலைபாட்டை, எல்லா காலங்களிலும் மேற்கொண்டுள்ளது. மாநில கட்சிகளில் சில, தாங்கள் ஆட்சியில் இல் லாத நிலையில், 356ஐப் பயன்படுத்து என நிர்ப்பந்தித்தது உண்டு. 1957ல் கேரளத்தில் கம்யூனிஸ்டுகள் ஆட்சியைக் கலைத்த பிறகு 100க்கும் மேற்பட்ட முறையில் 356வது பிரிவு பயன்படுத்தப்பட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாக்கப்பட்டுள்ளது. மேற்கு வங் கத்தில் 1967, 69 ஆகிய காலங்களில் மார்க் சிஸ்ட் கட்சி பங்கேற்ற கூட்டணி ஆட்சி கலைக்கப்பட்டுள்ளது. 1977ல் இடது முன் னணி ஆட்சி அமைந்த பின் நாடு தழுவிய முறையில் நடத்திய போராட்டங்கள் மற்றும் 1996க்குப்பின் முடிவுக்கு வந்தது தனிக்கட்சி ஆட்சி.

ஜோதிபாசு முதல்வராக இருந்தபோது, பல பத்தாண்டுகளாக கிடப்பில் கிடந்த கங்கை நதிநீர் பகிர்மானம் குறித்து, வங்க தேசத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி முடி வுக்கு வந்தது. மாநில ஆட்சியதிகாரத்தின் வரம்பிற்குள்ளாக, பழங்குடி மக்களுக்கான வளர்ச்சிக் கவுன்சில், பிரத்யேக பிரிவு மக்க ளுக்கு தன்னாட்சி அதிகாரம் ஆகியவற்றை முன்மொழிந்து செயல்படுத்தியது இடது முன் னணி. இது இந்தியாவிற்கே முன்னுதா ரணமாக இருந்தது.

மேற்குறிப்பிட்டவை தவிர, இந்திய மக்க ளைப் பொருளாதாரக் கொள்கைகள் மூலம், விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, நடுத்தர வர்க்கத்தைப் பாதிக்கும் பல்வேறு கொள்கைகள் மூலம் மத்திய அரசு தாக்குதல் தொடுத்த நேரங்களில், அவற்றை எதிர்த்த வலுவான போராட்டங்களை கிழக்கு மூலையில் கம்யூனிஸ்ட்டுகள் நடத்தியதன் காரணமாகவே, ஓரளவு கட்டுக்குள் இருந்தது. ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தை மற்ற எல்லா மாநில மக்களையும் விட முன்னணி யில் நின்றவர்கள் மேற்கு வங்க உழைப்பாளி மக்கள். இதில் கம்யூனிஸ்டுகளின் பங்கு குறைத்து மதிப்பிட முடியாதது. இப்படி எல் லாப் பகுதி மக்களின் நலனுக்காகவும் செயல் பட்ட கம்யூனிஸ்டுகள் மீது தாக்குதல் தொடுப்பதை ஜனநாயக சக்திகள் கவனத் தில் கொள்ள வேண்டும். மேலே விவரிக்கப் பட்ட அம்சங்களில் இந்திய ஆளும் வர்க்கத் திற்கு எதிரான, தொழிலாளர் வர்க்கத்திற்கான மாற்று அணுகுமுறையுடன், இடது முன்னணி அரசு பயணப்பட்டது, என்பதே பிரதானமா னது. ஆகவேதான், ஆட்சி மாற்றம் நடந்த உடன் கம்யூனிஸ்ட்டுகள் மீது வெறித்தன மான தாக்குதல் தொடுக்கப் படுகிறது.

மேற்குவங்க முதல்வராக பொறுப்பு எடுத்துக் கொண்ட மம்தாவைச் சந்தித்து, எதிர்க்கட்சித் தலைவர்கள் மகஜர் ஒன்றை அளித்துள்ளனர். அதில், 15 வது சட்டசபைத் தேர்தல் முடிந்த காலம் துவங்கி, 13 மே 2011, சட்ட சபைத் தேர்தல் முடிவுகள் வந்த நாட் கள் வரையிலும் 425 தோழர்கள் படு கோர மான தாக்குதல்களுக்கு ஆளாகி, மருத்துவ மனைகளில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். 12 தோழர்கள் கொல்லப் பட்டுள்ளனர். இவர்கள் அல்லாது பலநூறு நபர்கள் தாக்கப்பட்ட நிலையில் கொடுத்த புகார்களை, காவல் நிலையத்தில் ஏற்க மறுக்கும் அவலம் இருப் பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர். பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி வருகின்ற னர். 412 கட்சி அலுவலகங்கள் சூறையாடப் பட்டுள்ளன. பலவும் தரை மட்ட மாக்கப் பட் டுள்ளது. 445 தொழிற் சங்க, இதர வெகு மக் கள் அமைப்புகளின் அலுவலகங்கள், ஆயுத முனையில் கைப்பற்றப் பட்டுள்ளன. 157 அலுவலகங்களைப் பூட்டி சாவிகளை எடுத் துக் கொண்டுள்ளனர். 9 கல்லூரிகளில் உள்ள மாணவர் பேரவை அலுவலகங்களும், அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இதற்கு கார ணமாக மேற்படி அலுவலகங்களில் ஆயுதங் கள் வைக்கப் பட்டிருந்தது, எனவே அதைக் கைப்பற்றுவதற்காக, இந்த அலுவலகங் களைப் பூட்டுவது தவிர்க்க முடியாததாகிவிட் டது என்ற நாடகத்தை அரசு அரங்கேற்று கிறது. இக்கூற்று உண்மையானால் கம்யூ னிஸ்டுகளின் வீடுகள் பல ஆயிரக் கணக் கில் சூறையாடப் பட்டதற்கும், 30 ஆயிரத்திற் கும் அதிகமான பொது மக்கள் தங்கள் வீடு களை விட்டு விரட்டப்பட்டதற்கும் காரணம் என்ன? இடது முன்னணி பொறுப்பு வகிக்கும் பஞ்சாயத்து அலுவலகங்கள், அரசின் பொது சொத்து என்பதைக் கூட மறந்து, தாக்கப் பட் டதற்கு வன்மம் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும். எனவே இவை திட்டமிட்டு கம்யூனிஸ்டுகள் மீது சுமத்தப்படும் புகார் என்பதை தெளிவுபடுத்தியுள்ளனர். மம்தா அரசு இக்கோரிக்கைகளுக்கு செவிசாய்க் காது, என்பது நன்கு அறிந்த ஒன்று. இருந்த போதும், மேற்கு வங்க இடதுசாரி இயக்கத் தலைவர்களின் செயல், மக்கள் இயக்கத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையாகும்.

தற்போது நாடுமுழுவதும் நடத்தப் படுகிற ஆதரவு இயக்கம், கம்யூனிஸ்டுகளைக் காப்பதற்காக மட்டுமல்ல. நாட்டை ஜனநாயகப் பாதையில் தீவிரமாக கொண்டு செல்வதில் ஏற்பட்டுள்ள பின்னடைவைப் புரிந்து, மாற்றுக் கொள்கைகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதே ஆகும்.

நன்றி தீக்கதிர்
powered by இந்தியா இன்டலெக்ட் © All Rights Reserved. தீக்கதிர் 2005-2006.

பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்

உலகம் கண்டிருக்காத புது அனுப வத்துடன், ஊழல் இந்தியாவில் அதிகரித் திருக்கிறது. தோண்டத் தோண்ட வெளி வரும் ஒன்றாக அவதாரம் எடுத்திருக்கிறது. முன்னாள் அமைச்சர்கள் சிறையில் அடைக் கப்பட்ட காலம் மலையேறி, இன்றைய அமைச்சர்கள், அவர்கள் ஆட்சியிலேயே ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளாகி, அதைத் தொடர்ந்து, பதவியை ராஜினாமா செய்வதும், பின் சிறைக்கு செல்வதும், அதனைத் தொடர்ந்து அவர் கட்சி நாடாளுமன்ற உறுப் பினர்கள் சிறைபுகுவதும், இந்திய வரலாறு கண்டிராத ஒன்று. காங்கிரஸ் தலைவர் களான அசோக் சவாண், ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழலிலும், சுரேஷ் கல்மாடி, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் போது ஒதுக்கீடு செய்த பணத்தில் ஊழல் செய்த விவகாரத்திலும் சிக்கியுள்ளனர். ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அசோக் சவாண் மீதான விசாரணை தீவிரப்படவில்லை. ஆதர்ஷ் ஊழல் குறித்த விவரங்கள் தீப்பி டித்து எரிந்து நாசம் ஆனதாக வெளிவந்த தகவல், ஊழல் குறித்த செய்தியை விடவும் பேரதிர்ச்சியைத் தருகிறது. திமுக தலைவர் களான ஆ. ராசா, மு. க. கனிமொழி ஆகியோர் கைதைத் தொடர்ந்து, தயாநிதி மாறன் மீதான புகார்கள் தீவிரம் பெற்று வருகின்றன.

இந்நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு காரணமாக, தமிழ்நாட்டில் திமுக சந்தித்த சரிவு, காங் கிரஸையும் கீழே இழுத்துச் சென்றுள்ளது. புதுவைப்பிரதேசத்திலும் இதன் தாக்கத்தை உணர முடிகிறது.

காங்கிரஸ் கட்சி, பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்ற பழமொழியைப் போல், தானே கொள்ளைக்கும், காவலுக்கும் பொறுப்பாக இருந்து நாட்டை ஏமாற்றக் கற்றுக் கொண்டதோ என்ற சந்தேகம் தவிர்க்க முடியவில்லை. கடந்த காலத்தில் போபர்ஸ் ஊழல், பங்குச்சந்தை ஊழல் உள் ளிட்ட பலவற்றிலும், ஆட்சியதிகாரம் கைமா றிய நிலையில்தான், காங்கிரஸ் கட்சி தலை வர்கள் மீது சிபிஐ விசாரணை முன் வைக்கப் பட்டது. ஆனால் இன்று ஆட்சியில் இருக் கும் போதே அரங்கேறுவது, வியப்பை மட்டும் ஏற்படுத்தவில்லை, எங்கோ ஏமாற்றப்படு கிறோமோ என்ற கேள்வியும் இணைந்தே உருவாகிறது. இந்த சதியில் மாநில பிராந் தியக் கட்சிகள் பாதிக்கப் பட்டால் காங்கிரஸ் கட்சிக்கு கவலை இல்லை என்பதையும் காண முடிகிறது. உதாரணத்திற்கு, தமிழகத் தில் திமுக சிக்கிக் கொண்டு திணருகிறது. மற்றொரு புறம், உத்தரப்பிரதேசத்தில் மாயா வதி ஆட்சிக்கு எதிராக ராகுல் காந்தியே முன் நின்று போராட்டம் நடத்துகிறார். மாயாவதி கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் கேட்காமலேயே மத்திய ஆட்சிக்கு தனது ஆதரவை நிபந்தனையின்றித் தந்தது என்பதும் கவனிக்கத்தக்கது. விரைவுச் சாலை வசதிக்கான திட்டங்களையும், சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கான சட்டங்களையும் உருவாக்கியதும், தீவிரம் காட்டுவதும் காங்கிரஸ் - மன்மோகன் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு, பின்பற்றுகிற பொருளாதாரக் கொள்கை யுடன் இணைந்தது. அந்த பொருளாதாரக் கொள்கையை ஒரு மாநிலக் கட்சி அமலாக் கினால், அதற்கான எதிர்ப்பை காங்கிரஸ் கட்சி முன் நின்று நடத்துவது தன்னை நேர் மையாளர் என்று காட்டிக் கொள்வதற்கான ஏற்பாடு தவிர வேறென்ன இருக்க முடியும்.

இந்தப் பின்னணியில் இருந்தே அன்னா ஹசாரேயின் ஊழல் எதிர்ப்பு உண்ணா விரதத்தையும், பாபா ராம்தேவ் என்ற யோகா குரு நிலையில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ். காரரின் உண்ணாவிரதத்தையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. ஹசாரேயின் உண்ணா விரதம், 50 தினங்களுக்கு முன்பு நிறைவு பெற்றது. அப்போது லோக்பால் மசோதாவை விரைவில் தயாரிப்பதற்கான குழு அமைத் தல் என்ற நாடகத்தை காங்கிரஸ் நடத்தியது. அமைக்கப்பட்ட குழுவில் அமைச்சர்கள், பல புகார்களுக்கு உள்ளான வழக்கறிஞர்கள், அரசு சாரா நிறுவனத்தின் பிரதிநிதிகள் இடம் பெற்றனர். இது மக்களுக்கு நம்பிக்கை அளிக் காதது மட்டும் அல்ல, ஊழல் குறித்த எதிர்ப் பை மழுங்கச் செய்வதாகவும் இருந்தது. ஹசாரேயின் உண்ணாவிரதத்திற்கு, மின் னணு மற்றும் அச்சு ஊடகங்கள் கொடுத்த ஆதரவும், நடுத்தர மக்கள் தந்த ஆதரவும் நீர்த்துப் போவதாக அமைந்ததையும் காண முடிந்தது. காங்கிரஸை மட்டும் எதிர்த்து வந்த ஹசாரே, ஒருகுறிப்பிட்ட காலம் வரை பா.ஜ.க குறித்து எதுவும் பேசவில்லை. குஜராத் சென்ற இடத்தில், மோடியின் தலை மையிலான பாஜக அரசு, மீது சில விமர்சனங் களை முன்வைத்தார். அதுவும் சஞ்சீவ் ராஜேந்திரன் பட் என்ற காவல் துறை அதி காரி, மோடி குறித்தும், பா.ஜ.க தலைமை யிலான அனைத்து இந்துத்துவா அமைப்புக ளும், குஜராத் இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்பட்டதை அம்பலப்படுத்திய நிலை யில், ஹசாரே, ஊழலிலும் மோடி அரசு மலிந்து கிடக்கிறது என்ற விமர்சனத்தை முன்வைத்தார். ஹசாரே பா.ஜ.க வையும் தாக்கத் துவங்கிய பின்னரே, தற்போது, பாபா ராம்தேவ் அவதாரம் எடுத்து இருக்கிறார். இதில் ஏற்கனவே உருவாக்கப் பட்ட, ஊழல் எதிர்ப்பு ஆதரவு தளத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற அரசியல் நோக்கம் புதைந்து கிடக்கிறது.

கடந்த காலத்தில் பாபா ராம்தேவ் பகி ரங்கமாக விஸ்வ‘ஹிந்து பரிஷத் மேடை களில் வலம் வந்தவர் என்பது உண்மை. விமர்சிப்பவர்களை, பாபாவின் சீடர்கள் என்ற போர்வையில் தக்க வைக்கும் ஏற்பாட்டை பா.ஜ.க கடந்த காலங்களில் செய்து தந்திருக் கிறது. மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர் களில் ஒருவரான பிருந்தா காரத், பாபா ராம்தேவ் தயாரித்து வழங்கும் மருந்துகளில், மனிதனின் எலும்புகளும், விலங்குகளின் எலும்புகளும் பயன்படும் தகவலை அறிந்து, உலகிற்கு கொணர்ந்தார் என்பதற்காக தாக்கப்பட்டார். மார்க்சிஸ்ட் கட்சி மத்தியக் குழு அலுவலகம் தாக்கப்பட்டது. இச்செயல் களுக்கு ஆதரவாக, ஆர்.எஸ்.எஸ். அமைப் பினர், மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிரான போராட் டங்களில் ஈடுபட்டனர். இந்த பின்னணியில் இருந்தே, கொஞ்ச காலம் பரபரப்பை ஏற்படுத் தாது இருந்த ராம்தேவ் இப்போது, பாஜகவை பலப்படுத்தும் நோக்கத்துடன் ஊழலுக்கு எதிரான போராட்டங்களைத் துவக்கியுள்ளார். கடந்த காலத்தில் பா.ஜ.க ஆட்சியின் போது சவப்பெட்டி ஊழலின் போதோ, கர்நாடகத் தில் எடியூரப்பா தனது வாரிசுகளுக்கு இடம் ஒதுக்கி குதூகலப்பட்ட போதோ ராம்தேவ் எங்கே இருந்தார் என்பதும் கேள்விக்கு உள்ளாகிறது. தற்போது தங்கள் துறைகளின் வேலைகளை மத்திய அமைச்சர்கள், கபில் சிபல், சுபோத் காந்த் சகாய், பவன் குமார் பன் சால் ஆகியோர் தீவிர முயற்சி எடுத்தும், தடுக்கப்படாத ஒன்றாக உண்ணாவிரத ஏற்பாடுகள் சென்று கொண்டுள்ளன.

அரசு சாரா நிறுவனங்களுக்கு, நிதி வெளிநாடுகளில் இருந்தும், இந்தியப் பெரு முதலாளிகள் நடத்தும் நிறுவனங்களில் இருந்தும் வருகிறது. அதே போல் பாபா ராம் தேவ் போன்றோர் நடத்தும் டிரஸ்டுகளுக்கு, பெரு முதலாளிகள் தான் நிதியை வாரி வழங்குகின்றனர். இந்த தானத்திற்காக வரிவிலக்கும் பெற்றுக் கொள்கிறார்கள். எல்லாவிதங்களிலும் பெரு முதலாளிக ளுக்கு ஆதரவாக நடந்து கொள்ளும் பிரதி நிதிகள் எப்படி ஊழலுக்கு எதிரான போராட் டத்தைத் தொடர்ந்து நடத்திட முடியும்.

இப்போது ஊழல் அதிகரிப்பிற்கான அடிப்படைக் காரணம் பன்னாட்டு நிறுவனங் கள் மற்றும் இந்தியப் பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக அமைச்சர்கள் செயல்பட்டது ஆகும். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில், நீரா ராடியா, ரத்தன் டாடா உரையாடல்கள் மிகமுக்கிய ஆதாரம். பன்னாட்டு நிறுவனங் களை அறிமுகம் செய்யும் ஏஜெண்டுகளின் செயல்பாடுகளை, ஜான்பெர்க்கின்ஸ் என்ற அமெரிக்கர் “ஒரு பொருளாதார அடியாளின் வாக்கு மூலம்” மற்றும் “அமெரிக்கப் பேரர சின் ரகசியம்” ஆகிய இரு புத்தகங்களில் வெளிப்படுத்தியுள்ளார். கமிஷன் அல்லது அன்பளிப்பு இல்லாமல், எந்த ஒரு புரிந் துணர்வு ஒப்பந்தமும் அமலாவதில்லை என்பது உலகமறிந்த உண்மையாக உறங்கிக் கொண்டிருக்கிறது. எனவே ஊழல் எதிர்ப்பு என்பது பன்னாட்டு மற்றும் இந்நாட்டு பெரு முதலாளிக்கு எதிரான போராட்டத்துடன் இணைந்தது. அத்தகைய பெரு முதலாளி களுக்கு ஆதரவான கொள்கைகளைக் கொண்டுள்ள காங்கிரஸோ, பா.ஜ.கவோ அல் லது அவர்களுடன் இணைந்த மாநிலக் கட்சிகளோ ஊழலுக்கு எதிரான போராட்டத் தினை நடத்தி விட முடியாது. அப்படி நடத்தினால் அது நாடகமே.

courtesy theekkathir
powered by இந்தியா இன்டலெக்ட் © All Rights Reserved. தீக்கதிர் 2005-2006.

உரிமைக்கான விழிப்புணர்வு எப்போது?

விழிப்புணர்வு மிக அவசியமாக இருக்கிறது. குடிநீர், ஆரோக்கியம், காற்று ஆகியவற்றைப் பெறுவதில், நோய் அற்ற வாழ்க்கை வாழ்வதில், விழிப்புணர்வு பெரும் பங்கு வகிக்கிறது. உணவகங்களைத் தேர்ந்தெடுப்பதில், ஆடைகள் வாங்குவதற்கான தயாரிப்புகளில் எந்த கடைக்கு செல்வது, என்பதை விளம்பரங்கள் தீர்மாணித்தாலும், அந்த கடை பற்றிய தனது ஞானமே பிரதானக் காரணம் என்ற கற்பனையில் தான், பலரின் உற்சாகம் உயிர் வாழ்கிறது. 1996ல் ஒரு சமையல் எண்ணை நிறுவனம், ”ஆரோக்கியமானது, குறைவான கொலஸ்ட்ரால் கொண்டது, எனவே இதய நோய் குறித்த உபாதையில் இருந்து பாதுகாக்க வல்லது”, என்று விளம்பரம் செயததாம். அதன் காரணமாக அந்த நிறுவனத் தயாரிப்பு இன்று வரை சந்தையில் செல்வாக்கு செலுத்துவதாக, மார்க்கட்டிங் துறையில் பணிபுரியும் நண்பர் குறிப்பிட்டார். மேற்படி விளம்பரம் நம்மை வாங்கத் தூண்டுகிறது. சந்தையில் கிடைக்கும் எண்ணை வகைகளில் ஒன்று என்று மட்டும் புரிந்து கொண்டால், நமது மக்கள் விழிப்புணர்வு பெற்றவர்கள் என முடிவுக்கு வரலாம். ஆனால் விளம்பரம் குறிப்பிடுவதைப் போல் அந்த எண்ணைப் பயன்பாட்டுக்குப் பின் தன் குடும்பத்தினர், இதய நோய் தொல்லைகளில் இருந்து விடுபட்டதாக உணர்வது, விழிப்புணர்வல்ல. அது மனநலம் சார்ந்தது. விளம்பரம் ஏதோ ஒருவகையில் அக்குடும்பத்தினரை ரிலாக்ஸ் செய்திருக்கலாம். ஆனால் தீர்க்காது, ஏனென்றால் இதய நோய் எண்ணையுடன் மட்டும் சம்மந்தப் பட்டதல்ல. மன அழுத்தம், சுற்றுச் சூழல், பணிச்சூழல், குடும்ப பாரம்பரியம் உள்ளிட்ட எத்தனையோ விதமான காரணங்களை உள்ளடக்கியது என்ற புரிதலே, விழிப்புணர்வு.

விழிப்புணர்வின் அடிப்படை கல்வியறிவுடன் இனைந்தது. இந்தியாவோ கல்வி அறிவைப் பெறுவதிலும், படித்தவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான பாடத்திட்ட முறையிலும் பின் தங்கி உள்ளது. நீண்ட போராட்டத்திற்குப் பின், 2009 ஆகஸ்டில் மத்திய அரசு 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகள் அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி என்ற சட்டத்தை இயற்றியது. இதன் மூலம் இந்தியா கல்வி பெறும் உரிமையை அடிப்படை சட்டமாக்கிய 135 நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது. அதாவது இந்தியாவுக்கு முன் 134 நாடுகள் இச்சட்டத்தை இயற்றி, நமக்கு வழிகாட்டியுள்ளது. மத்திய அரசின் இச் செய்தி, பெருமைக்கு உரியதா? என்பது, ஆட்சியாளர்களுக்கே வெளிச்சம். 2010ல் சட்டத்தை அமலாக்குவதற்கான விதிமுறைகளையும் உருவாக்கியது. மத்திய அரசு உருவாக்கிய விதிமுறைகளில் கல்வியாளர்கள் பல விமர்சனங்களை சுமத்தி வருகின்றனர். குறிப்பாக இலவசக் கட்டாயக் கல்வி என்று அறிவித்த பின் தனியார் பள்ளிகளில் 25 சத இடஒதுக்கீடு பள்ளி இருக்கும் பகுதியைச் சார்ந்த சாதாரண குடிமக்களின் குழந்தைகள் சேர்க்கப் பட வேண்டும் என, அறிவுறுத்தப் பட்டிருப்பது சரியா? என்பது சீரிய விவாதத்திற்கு ஆளாகியுள்ளது.

அனைவருக்கும் இலவச கல்வி என்ற முழக்கத்தை முன் வைத்துள்ள கல்வியாளர்களும் இதை எதிர்க்கிறார்கள். பணம் கொடுத்துப் படிக்க வைக்கத் தயாராக இருக்கும் பெற்றோர்களில் சிலரும், தனியார் பள்ளி நிர்வாகத்தினரும் எதிர்க்கின்றனர். முன்னவரின் எதிர்ப்பு புரிந்து கொள்ளக் கூடியது. பின்னவர்களில் குறிப்பாக பெற்றோர் எதிர்ப்பு புரியவில்லை. ஒரு பள்ளியில் எப்படி இரண்டு விதமான மாணவர்களைப் பராமரிப்பது. பணம் கொடுத்து பயிலும் மாணவர் மீது ஆசிரியர் கவணம் செலுத்துவது தானே சரி. 25 சத ஒதுக்கீட்டில் வரும் மாணவர், வசதியான பிற மாணவரின் நோட்டு மற்றும் புத்தகங்களைத் திருடிவிட்டால் என்ன செய்வது? என பலவாறு பெற்றோர்கள் கேட்டதாக தனியார் பள்ளி நிர்வாகி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமல்ல 2011 ஃபிப்ரவரியில், மத்திய அரசின் கல்வி உரிமைச் சட்டத்தின் மேற்படிப் பிரிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர். இதை விசாரித்த தலைமை நீதிபதி, “நாட்டின் நலன் கருதி, பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினரின் முன்னேற்றத்திற்கான, முதலீடு எனக் கருதப் படும், தனியார் பள்ளிகளில் 25 சத ஒதுக்கீடு என்ற கொள்கை குறித்து, யாரும் புகார் கொடுக்க முடியாதுஎன தெளிவுபடுத்தியுள்ளார்.

மகிழ்வுக்குரியத் தீர்ப்பாக இதைக் கருதலாம். உச்சநீதிமன்றம் கடந்த 1993 உண்ணிகிருஷ்ணன் என்ற மாணவர் தொடுத்த வழக்கில் தீர்ப்பளிக்கும் போதும், கல்வி பெறுவது, உயிர் வாழும் அடிப்படை உரிமையுடன் இனைந்தது எனக் குறிப்பிட்டதையும் நினைவில் கொள்ளலாம். இந்திய அரசியல் சட்டம் துவக்கத்தில் இருந்தே, பிரிவு 21 அடிப்படையில் கல்வி பெறும் உரிமை, ஒவ்வொரு தனி நபருக்கும் உண்டு, என்பதை வலியுறுத்தி உள்ளது. இங்கு அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்வி என சட்டம் இயற்றிய பின் தனியாரை நாட வேண்டிய அவசியம் என்ன?. சட்டம் மிக மிகத் தாமதமானது. தாமதமான நீதி மறுக்கப் படும் நீதிக்கு ஒப்பாகும் என சொல்லிக் கொண்டே இருக்கிறோம். ஆனாலும் ஆட்சியாளர்கள் தாமதப் படுத்துகிறார்கள். விடுதலை இந்தியாவில், சுமார் 53 ஆண்டுகள், மத்திய ஆட்சிப் பொறுப்பில் இருந்து வரும் காங்கிரஸ் கட்சியே, மேற்படித் தாமதத்திற்கு காரணம்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சத நிதியைத் தொடர்ந்து ஒதுக்கீடு செய்து வந்தால், ஒரு சில ஆண்டுகளிலேயே, அரசே இலவச கட்டாயக் கல்வியை வழங்க முடியும், என காங்கிரஸ் அரசு அமைத்த குழுக்கள் கோத்தாரி துவங்கி, ஆச்சார்யா ராமமூர்த்தி வரை திரும்பத் திரும்ப வலியுறுத்தியுள்ளன. ஆனாலும் அதிக பட்சமாக 4 சதமானம் தான் பட்ஜெட்களின் போது ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. கியூபா 18.7%. மலேசியா 8.1%, கென்யா 7%, தென் ஆப்பிரிக்கா 5.3%, தாய்லாந்து 5.2%, எத்தியோப்பியா 4.6%, உலக நாடுகளின் சராசரி 4.9%, என கல்விக்கான நிதி ஒதுக்கீடு பற்றி அறிய முடிகிறது. ஆனால் இந்தியா 4% மட்டுமே மொத்த உற்பத்தியில் ஒதுக்கீடு செய்கிறது. இந்தியாவில் தான் தேவை அதிகம். ஆனால் செயல் எதிர் மறையாக இருக்கிறது. மேலே குறிப்பிட்ட நாடுகள் அனைத்தும் இந்தியாவை விட, பொருளாதார வலிமை கொண்ட நாடுகள் அல்ல என்பது முக்கியமானது.

2009ல் சட்டம் முன் மொழியப் பட்ட போது, 1 லட்சத்து 71 ஆயிரம் கோடி தேவைப் படுவதாகக் குறிப்பிட்டனர். சட்டத்திற்கான விதிமுறைகளை உருவாக்கும் போது, 2 லட்சத்து 31 ஆயிரம் கோடிகளாக உயர்ந்தது என்பதையும் அரசு விவரம் தெரிவிக்கிறது. இந்த ஆண்டு அமலுக்கு வரும் குறிப்பிட்ட நிலையில், எவ்வளவு தேவைப் படும், எவ்வளவு ஒதுக்கப் பட்டுள்ளது, என்பதை அரசு தெரிவிக்கவில்லை. சி.டபுள்யு.ஜி (காமன் வெல்த் கேம்ஸ்), 2ஜி (ஸ்பெக்ட்ரம்), கே.ஜி ( கோதாவரி ஆற்றுப் படுகை கேஸ்) என்ற ஜிவரிசை ஊழல்களுடன் ஒப்பிடும்போது, கல்வி பெறும் உரிமையை நிலை நாட்ட, நம் நாட்டில் பணம் ஒரு பிரச்சனை அல்ல என்பதைப் புரிந்து கொள்ள முடியும். அடிப்படை உரிமைகளை நிறைவு செய்யத் தேவையான பணம், ஊழல்களில் கரைகிறது, என்பதைப் புரிந்து கொள்வதும் கூட விழிப்புணர்வு சார்ந்ததே. மேற்படி ஊழல் குறித்த விசாரணைக்கு, நமது சி.பி. மொரிஷியஸ் சென்றதாக செய்திகள் மூலம் அறிய முடிகிறது. 1994 காலத்திலேயே, மொரிஷியஸ் போன்ற நாடுகளில் இருந்து குறுகிய நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு வரி இல்லை, என்ற முடிவை அரசு மேற் கொண்டுள்ளது. இதற்காக மொரிஷியஸ் நாட்டுடன், இரட்டை வரி தவிர்ப்பு உடன்படிக்கை மேற்கொள்ளப் பட்டிருக்கிறது, என்கிறார் டாக்டர். தர்மேந்திர பண்டாரி. இக்காலத்தில் மன்மோகன் சிங் அவர்கள் நிதி அமைச்சர், அவர் வழிகாட்டுதல் இல்லாமல், மேற்படி உடன்பாட்டுக்கான நெறிமுறைகளை உருவாக்கிய செபி, ஆர்.பி., ஆகிய நிறுவனங்கள் செயலாற்றி இருக்க முடியாது. கல்வி உரிமைக்காக தொலை நோக்குப் பார்வையுடன் செயல் பட்டார்களோ இல்லையோ, ஊழல் பணத்தை முதலீடு செய்ய, கருப்புப் பணத்தை வெள்ளையாக்க, தொலை நோக்குப் பார்வையுடன் செயல் பட்டு உள்ளனர், என்பதை அறிய முடிகிறது.

நெடுங்காலமாக அரசு சொல்லும் நிதியாதாரம் இல்லை என்ற செய்தி பொய் என்பதை, இது போன்ற தகவல்களில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இந்த நிதி ஆதரங்களையும், இதர பல முயற்சிகளினாலும் அருகமைப் பொது பள்ளிகளை அரசு ஈடுபட வேண்டும். அருகமைப் பொதுப்பள்ளி என்பது, சமூக, பொருளாதார வேறுபாடுகள் இல்லாமல் அனைத்து வீட்டுக் குழந்தைகளும் கல்வி கற்கும் பள்ளிகள் ஆகும். இந்த முறைதான் அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் பின்பற்றப் படுகிறது. டாக்டர். அணில் சடகோபால் என்ற கல்வியாளர், ”அருகமைப் பள்ளி முறை அமலுக்கு வந்தால், மிகப் பெரிய அளவில் எரிபொருள் சேமிக்கப் படும். ஏனென்றால், அருகமைப் பள்ளிகளுக்கு குழந்தைகள் சென்று வர, பேருந்துகள் தேவை இருக்காது, நாட்டின் பொருளாதாரம் பெரிய அளவில் பாதுகாக்கப் படும்என்று கூறுகிறார். தமிழ் நாட்டில் கூட, இலவச பஸ் பாஸ் வழங்க அரசு செய்யும் செலவினமும் குறையும். பஸ் நிறுத்தங்களில் காலையிலும், மாலையிலும் நம் வீட்டுக் குழந்தைகள் அனுபவிக்கும் கொடுமைகளும் குறையும்.

சட்டத்தின் விதி குறிப்பிட்டுள்ள 25% ஒதுக்கீட்டைத் தனியார் பள்ளி நிறுவனங்கள் மற்றும் பெற்றோர்கள் எதிர்ப்பது தேவையற்றது, என்பதை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. சுகாதாரப் பராமரிப்பில் படித்த நடுத்தர வர்க்கத்தினர் கவணம் செலுத்துகின்றனர். இது பாராட்டுக்குரியதே. ஓட்டலில் அமர்ந்தவுடன் குடிநீர் பாட்டிலுக்கு ஆர்டர் செய்த பின் தான், உணவு வகைகளுக்கு ஆர்டர் செய்யும் குடும்பத்தினர், அதிகரித்து வருவதைக் காணலாம். குடிக்கும் தண்ணீர் என்ற வெளிப்படையாக தெரியும் பொருள் மீது மட்டுமே நமது பராமரிப்பு அக்கரை இருக்கிறது. சமையல் பகுதியில் உள்ள சுகாதாரப் பராமரிப்புகள் குறித்து நாம் கவலை கொள்வதில்லை. இன்னொரு கோணத்தில் பார்த்தால், உணவுக்கு விலை தருவது நியாயம், சுகாதாரமான குடி தண்ணீருக்கும் விலை தருவது எந்த வகையில் நியாயம், என கேள்வி எழுப்பும் மனநிலை ஏன் உருவாக்கப் படவில்லை. இப்படி அடிப்படை உரிமை என்ற பட்டியலுக்குள் வரும் பொருள்களை, விலை பேசி விற்பதை அங்கீகரிப்பது, விழிப்புணர்வு பெற்ற சமூகத்தில் இருக்காது. மாறாக படித்தவர்களே அறியாமையில் இருக்கிறோமோ, என எண்ணத் தோன்றுகிறது..

அதுபோல் தான், 25 சத ஒதுக்கீடு பற்றியும் மேலோட்டமாக புரிந்து கொள்ளப் படுகிறது. மனிதன் தனது குடும்ப சூழலினால் மட்டும் தன்னை சமூகவயமாதலுக்கு உட்படுத்திக் கொள்வதில்லை. சுற்றுப் புறம், பள்ளி, சக மனிதர்கள், நண்பர்கள் ஆகியவர்கள் ஏற்படுத்தும் தாக்கத்தின் காரணமாகவும் ஒரு மனிதனுக்குள் சமூகவயமாதல் கட்டமைக்கப் படுகிறது. இக்கருத்தை மானுடவியல் மற்றும் சமூகவியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். மைரான் வின்னர் என்ற அமெரிக்கவைச் சார்ந்த கல்வி மற்றும் உளவியல் வல்லுனர், தனது ஆய்வுகளின் அடிப்படையில், நாம் கொண்டிருக்கும் தவறான கருத்துக்களுக்கு விளக்கம் அளிக்கிறார். அதாவது, அனைவருக்குமான கல்வி உத்திரவாதம் உள்ள சமூக அமைப்பில் தான், சுகாதாரம் குறித்து முழுமையான விழிப்புணர்வு இருக்க முடியும். அதுவும் அவர்கள் சார்ந்த பண்பாட்டு சூழலில், கல்வி திட்டங்கள் அமையும் என்றால், விரைவான புரிதலும், விழிப்புணர்வும் செழிப்பான முறையில் ஊற்றெடுக்கும், என்று கூறுகிறார். மேற்படி அறிஞர்களின் விளக்கம், நமது அரசினால் இன்னும் முழுமையாகப் பின்பற்றப் படவில்லை. ஒரு நல்ல சமூகம் உருவாக்கப் படுவதில், அனைவருக்குமான சம வாய்ப்புள்ள கல்வி என்ற முறை மூலமே இதை சாதிக்க முடியும்.

தங்களிடம் பணம் இருக்கிறது என்பதற்காக நடுத்தர மக்கள், தனியார் பள்ளிகளை நாட வேண்டியதில்லை. அரசுப் பள்ளிகள், சிறந்தமுறையில் பராமரிக்கப் பட்டாலே, அரசு பள்ளிகள் சிறந்ததாக மாறமுடியும். நமது விழிப்புணர்வு மத்திய அரசின் கொள்கைகளை கேள்விக்குள்ளாக்கும் வலிமை கொண்டதாக மாற வேண்டியுள்ளது. உதாரணத்திற்கு, மத்திய அரசு பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா ஓரளவு நல்ல பாடத்திட்டத்துடன், சிறந்த முறையில் செயல் படும் போது, நவோதயா வித்தியாலயா என்ற கூடுதல் வசதியான பள்ளிகளை, மத்திய அரசு ஏன் உருவாக்கியது. ஜவஹர் நவோதயா பள்ளிகள் ராஜீவ்காந்தி பிரதமராக இருக்கும் போதே உருவாக்கப் பட்டது. இந்தியாவில் 593 பள்ளிகள் உள்ளன. தமிழ்நாடு தவிர, மற்ற மாநிலங்கள் அனைத்திலும் இப்பள்ளிகள் இருப்பதாக இணையதள செய்தி தெரிவிக்கிறது. இங்கு பயிலும் மாணவர் ஒருவருக்கு, 15000 ரூபாய் வரையிலும் ஆண்டு ஒன்றுக்கு செலவிடப் படுகிறது. கட்டணம் என்ற பெயரில் ரூ200 ஒரு மாதத்திற்கு பெறப் படுகிறது. எல்லா விதமான வசதிகளையும் கொண்டிருக்கும் இந்த உறைவிடப் பள்ளிகளை, குறைவான எண்ணிக்கையில் நடத்திட என்ன காரணம்? மத்திய அரசு ஒரு ஆண்டுக்கு ரூ688 மட்டுமே மாணவர் ஒருவருக்கு செலவிடுகையில், ஜவஹர் நவோதயா பள்ளி மாணவருக்கு மட்டும் ரூ15000 செலவிடுவது ஏன்? ஏன் மத்திய அரசு இரண்டு விதமான பிரிவினரை அரசு செலவில் உருவாக்குகிறது. இத்தகைய கேள்விகளை கேட்கும் ஆற்றல் இன்றைக்கு நடுத்தர மக்களுக்கும், மக்கள் இயக்கங்களுக்கும் இருப்பதாக உணர முடிகிறது. எப்போது வெளிப்படும்? இது போன்ற கேள்விகள் உரிமைகளுடன் இணைந்தது.

Courtesy Dinamanai