விழிப்புணர்வு மிக அவசியமாக இருக்கிறது. குடிநீர், ஆரோக்கியம், காற்று ஆகியவற்றைப் பெறுவதில், நோய் அற்ற வாழ்க்கை வாழ்வதில், விழிப்புணர்வு பெரும் பங்கு வகிக்கிறது. உணவகங்களைத் தேர்ந்தெடுப்பதில், ஆடைகள் வாங்குவதற்கான தயாரிப்புகளில் எந்த கடைக்கு செல்வது, என்பதை விளம்பரங்கள் தீர்மாணித்தாலும், அந்த கடை பற்றிய தனது ஞானமே பிரதானக் காரணம் என்ற கற்பனையில் தான், பலரின் உற்சாகம் உயிர் வாழ்கிறது. 1996ல் ஒரு சமையல் எண்ணை நிறுவனம், ”ஆரோக்கியமானது, குறைவான கொலஸ்ட்ரால் கொண்டது, எனவே இதய நோய் குறித்த உபாதையில் இருந்து பாதுகாக்க வல்லது”, என்று விளம்பரம் செயததாம். அதன் காரணமாக அந்த நிறுவனத் தயாரிப்பு இன்று வரை சந்தையில் செல்வாக்கு செலுத்துவதாக, மார்க்கட்டிங் துறையில் பணிபுரியும் நண்பர் குறிப்பிட்டார். மேற்படி விளம்பரம் நம்மை வாங்கத் தூண்டுகிறது. சந்தையில் கிடைக்கும் எண்ணை வகைகளில் ஒன்று என்று மட்டும் புரிந்து கொண்டால், நமது மக்கள் விழிப்புணர்வு பெற்றவர்கள் என முடிவுக்கு வரலாம். ஆனால் விளம்பரம் குறிப்பிடுவதைப் போல் அந்த எண்ணைப் பயன்பாட்டுக்குப் பின் தன் குடும்பத்தினர், இதய நோய் தொல்லைகளில் இருந்து விடுபட்டதாக உணர்வது, விழிப்புணர்வல்ல. அது மனநலம் சார்ந்தது. விளம்பரம் ஏதோ ஒருவகையில் அக்குடும்பத்தினரை ரிலாக்ஸ் செய்திருக்கலாம். ஆனால் தீர்க்காது, ஏனென்றால் இதய நோய் எண்ணையுடன் மட்டும் சம்மந்தப் பட்டதல்ல. மன அழுத்தம், சுற்றுச் சூழல், பணிச்சூழல், குடும்ப பாரம்பரியம் உள்ளிட்ட எத்தனையோ விதமான காரணங்களை உள்ளடக்கியது என்ற புரிதலே, விழிப்புணர்வு.
விழிப்புணர்வின் அடிப்படை கல்வியறிவுடன் இனைந்தது. இந்தியாவோ கல்வி அறிவைப் பெறுவதிலும், படித்தவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான பாடத்திட்ட முறையிலும் பின் தங்கி உள்ளது. நீண்ட போராட்டத்திற்குப் பின், 2009 ஆகஸ்டில் மத்திய அரசு 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகள் அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி என்ற சட்டத்தை இயற்றியது. இதன் மூலம் இந்தியா கல்வி பெறும் உரிமையை அடிப்படை சட்டமாக்கிய 135 நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது. அதாவது இந்தியாவுக்கு முன் 134 நாடுகள் இச்சட்டத்தை இயற்றி, நமக்கு வழிகாட்டியுள்ளது. மத்திய அரசின் இச் செய்தி, பெருமைக்கு உரியதா? என்பது, ஆட்சியாளர்களுக்கே வெளிச்சம். 2010ல் சட்டத்தை அமலாக்குவதற்கான விதிமுறைகளையும் உருவாக்கியது. மத்திய அரசு உருவாக்கிய விதிமுறைகளில் கல்வியாளர்கள் பல விமர்சனங்களை சுமத்தி வருகின்றனர். குறிப்பாக இலவசக் கட்டாயக் கல்வி என்று அறிவித்த பின் தனியார் பள்ளிகளில் 25 சத இடஒதுக்கீடு பள்ளி இருக்கும் பகுதியைச் சார்ந்த சாதாரண குடிமக்களின் குழந்தைகள் சேர்க்கப் பட வேண்டும் என, அறிவுறுத்தப் பட்டிருப்பது சரியா? என்பது சீரிய விவாதத்திற்கு ஆளாகியுள்ளது.
அனைவருக்கும் இலவச கல்வி என்ற முழக்கத்தை முன் வைத்துள்ள கல்வியாளர்களும் இதை எதிர்க்கிறார்கள். பணம் கொடுத்துப் படிக்க வைக்கத் தயாராக இருக்கும் பெற்றோர்களில் சிலரும், தனியார் பள்ளி நிர்வாகத்தினரும் எதிர்க்கின்றனர். முன்னவரின் எதிர்ப்பு புரிந்து கொள்ளக் கூடியது. பின்னவர்களில் குறிப்பாக பெற்றோர் எதிர்ப்பு புரியவில்லை. ஒரு பள்ளியில் எப்படி இரண்டு விதமான மாணவர்களைப் பராமரிப்பது. பணம் கொடுத்து பயிலும் மாணவர் மீது ஆசிரியர் கவணம் செலுத்துவது தானே சரி. 25 சத ஒதுக்கீட்டில் வரும் மாணவர், வசதியான பிற மாணவரின் நோட்டு மற்றும் புத்தகங்களைத் திருடிவிட்டால் என்ன செய்வது? என பலவாறு பெற்றோர்கள் கேட்டதாக தனியார் பள்ளி நிர்வாகி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமல்ல 2011 ஃபிப்ரவரியில், மத்திய அரசின் கல்வி உரிமைச் சட்டத்தின் மேற்படிப் பிரிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர். இதை விசாரித்த தலைமை நீதிபதி, “நாட்டின் நலன் கருதி, பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினரின் முன்னேற்றத்திற்கான, முதலீடு எனக் கருதப் படும், தனியார் பள்ளிகளில் 25 சத ஒதுக்கீடு என்ற கொள்கை குறித்து, யாரும் புகார் கொடுக்க முடியாது” என தெளிவுபடுத்தியுள்ளார்.
மகிழ்வுக்குரியத் தீர்ப்பாக இதைக் கருதலாம். உச்சநீதிமன்றம் கடந்த 1993 உண்ணிகிருஷ்ணன் என்ற மாணவர் தொடுத்த வழக்கில் தீர்ப்பளிக்கும் போதும், கல்வி பெறுவது, உயிர் வாழும் அடிப்படை உரிமையுடன் இனைந்தது எனக் குறிப்பிட்டதையும் நினைவில் கொள்ளலாம். இந்திய அரசியல் சட்டம் துவக்கத்தில் இருந்தே, பிரிவு 21 அடிப்படையில் கல்வி பெறும் உரிமை, ஒவ்வொரு தனி நபருக்கும் உண்டு, என்பதை வலியுறுத்தி உள்ளது. இங்கு அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்வி என சட்டம் இயற்றிய பின் தனியாரை நாட வேண்டிய அவசியம் என்ன?. சட்டம் மிக மிகத் தாமதமானது. தாமதமான நீதி மறுக்கப் படும் நீதிக்கு ஒப்பாகும் என சொல்லிக் கொண்டே இருக்கிறோம். ஆனாலும் ஆட்சியாளர்கள் தாமதப் படுத்துகிறார்கள். விடுதலை இந்தியாவில், சுமார் 53 ஆண்டுகள், மத்திய ஆட்சிப் பொறுப்பில் இருந்து வரும் காங்கிரஸ் கட்சியே, மேற்படித் தாமதத்திற்கு காரணம்.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சத நிதியைத் தொடர்ந்து ஒதுக்கீடு செய்து வந்தால், ஒரு சில ஆண்டுகளிலேயே, அரசே இலவச கட்டாயக் கல்வியை வழங்க முடியும், என காங்கிரஸ் அரசு அமைத்த குழுக்கள் கோத்தாரி துவங்கி, ஆச்சார்யா ராமமூர்த்தி வரை திரும்பத் திரும்ப வலியுறுத்தியுள்ளன. ஆனாலும் அதிக பட்சமாக 4 சதமானம் தான் பட்ஜெட்களின் போது ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. கியூபா 18.7%. மலேசியா 8.1%, கென்யா 7%, தென் ஆப்பிரிக்கா 5.3%, தாய்லாந்து 5.2%, எத்தியோப்பியா 4.6%, உலக நாடுகளின் சராசரி 4.9%, என கல்விக்கான நிதி ஒதுக்கீடு பற்றி அறிய முடிகிறது. ஆனால் இந்தியா 4% மட்டுமே மொத்த உற்பத்தியில் ஒதுக்கீடு செய்கிறது. இந்தியாவில் தான் தேவை அதிகம். ஆனால் செயல் எதிர் மறையாக இருக்கிறது. மேலே குறிப்பிட்ட நாடுகள் அனைத்தும் இந்தியாவை விட, பொருளாதார வலிமை கொண்ட நாடுகள் அல்ல என்பது முக்கியமானது.
2009ல் சட்டம் முன் மொழியப் பட்ட போது, 1 லட்சத்து 71 ஆயிரம் கோடி தேவைப் படுவதாகக் குறிப்பிட்டனர். சட்டத்திற்கான விதிமுறைகளை உருவாக்கும் போது, 2 லட்சத்து 31 ஆயிரம் கோடிகளாக உயர்ந்தது என்பதையும் அரசு விவரம் தெரிவிக்கிறது. இந்த ஆண்டு அமலுக்கு வரும் குறிப்பிட்ட நிலையில், எவ்வளவு தேவைப் படும், எவ்வளவு ஒதுக்கப் பட்டுள்ளது, என்பதை அரசு தெரிவிக்கவில்லை. சி.டபுள்யு.ஜி (காமன் வெல்த் கேம்ஸ்), 2ஜி (ஸ்பெக்ட்ரம்), கே.ஜி ( கோதாவரி ஆற்றுப் படுகை கேஸ்) என்ற ”ஜி” வரிசை ஊழல்களுடன் ஒப்பிடும்போது, கல்வி பெறும் உரிமையை நிலை நாட்ட, நம் நாட்டில் பணம் ஒரு பிரச்சனை அல்ல என்பதைப் புரிந்து கொள்ள முடியும். அடிப்படை உரிமைகளை நிறைவு செய்யத் தேவையான பணம், ஊழல்களில் கரைகிறது, என்பதைப் புரிந்து கொள்வதும் கூட விழிப்புணர்வு சார்ந்ததே. மேற்படி ஊழல் குறித்த விசாரணைக்கு, நமது சி.பி.ஐ மொரிஷியஸ் சென்றதாக செய்திகள் மூலம் அறிய முடிகிறது. 1994 காலத்திலேயே, மொரிஷியஸ் போன்ற நாடுகளில் இருந்து குறுகிய நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு வரி இல்லை, என்ற முடிவை அரசு மேற் கொண்டுள்ளது. இதற்காக மொரிஷியஸ் நாட்டுடன், இரட்டை வரி தவிர்ப்பு உடன்படிக்கை மேற்கொள்ளப் பட்டிருக்கிறது, என்கிறார் டாக்டர். தர்மேந்திர பண்டாரி. இக்காலத்தில் மன்மோகன் சிங் அவர்கள் நிதி அமைச்சர், அவர் வழிகாட்டுதல் இல்லாமல், மேற்படி உடன்பாட்டுக்கான நெறிமுறைகளை உருவாக்கிய செபி, ஆர்.பி.ஐ, ஆகிய நிறுவனங்கள் செயலாற்றி இருக்க முடியாது. கல்வி உரிமைக்காக தொலை நோக்குப் பார்வையுடன் செயல் பட்டார்களோ இல்லையோ, ஊழல் பணத்தை முதலீடு செய்ய, கருப்புப் பணத்தை வெள்ளையாக்க, தொலை நோக்குப் பார்வையுடன் செயல் பட்டு உள்ளனர், என்பதை அறிய முடிகிறது.
நெடுங்காலமாக அரசு சொல்லும் நிதியாதாரம் இல்லை என்ற செய்தி பொய் என்பதை, இது போன்ற தகவல்களில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இந்த நிதி ஆதரங்களையும், இதர பல முயற்சிகளினாலும் அருகமைப் பொது பள்ளிகளை அரசு ஈடுபட வேண்டும். அருகமைப் பொதுப்பள்ளி என்பது, சமூக, பொருளாதார வேறுபாடுகள் இல்லாமல் அனைத்து வீட்டுக் குழந்தைகளும் கல்வி கற்கும் பள்ளிகள் ஆகும். இந்த முறைதான் அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் பின்பற்றப் படுகிறது. டாக்டர். அணில் சடகோபால் என்ற கல்வியாளர், ”அருகமைப் பள்ளி முறை அமலுக்கு வந்தால், மிகப் பெரிய அளவில் எரிபொருள் சேமிக்கப் படும். ஏனென்றால், அருகமைப் பள்ளிகளுக்கு குழந்தைகள் சென்று வர, பேருந்துகள் தேவை இருக்காது, நாட்டின் பொருளாதாரம் பெரிய அளவில் பாதுகாக்கப் படும்” என்று கூறுகிறார். தமிழ் நாட்டில் கூட, இலவச பஸ் பாஸ் வழங்க அரசு செய்யும் செலவினமும் குறையும். பஸ் நிறுத்தங்களில் காலையிலும், மாலையிலும் நம் வீட்டுக் குழந்தைகள் அனுபவிக்கும் கொடுமைகளும் குறையும்.
சட்டத்தின் விதி குறிப்பிட்டுள்ள 25% ஒதுக்கீட்டைத் தனியார் பள்ளி நிறுவனங்கள் மற்றும் பெற்றோர்கள் எதிர்ப்பது தேவையற்றது, என்பதை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. சுகாதாரப் பராமரிப்பில் படித்த நடுத்தர வர்க்கத்தினர் கவணம் செலுத்துகின்றனர். இது பாராட்டுக்குரியதே. ஓட்டலில் அமர்ந்தவுடன் குடிநீர் பாட்டிலுக்கு ஆர்டர் செய்த பின் தான், உணவு வகைகளுக்கு ஆர்டர் செய்யும் குடும்பத்தினர், அதிகரித்து வருவதைக் காணலாம். குடிக்கும் தண்ணீர் என்ற வெளிப்படையாக தெரியும் பொருள் மீது மட்டுமே நமது பராமரிப்பு அக்கரை இருக்கிறது. சமையல் பகுதியில் உள்ள சுகாதாரப் பராமரிப்புகள் குறித்து நாம் கவலை கொள்வதில்லை. இன்னொரு கோணத்தில் பார்த்தால், உணவுக்கு விலை தருவது நியாயம், சுகாதாரமான குடி தண்ணீருக்கும் விலை தருவது எந்த வகையில் நியாயம், என கேள்வி எழுப்பும் மனநிலை ஏன் உருவாக்கப் படவில்லை. இப்படி அடிப்படை உரிமை என்ற பட்டியலுக்குள் வரும் பொருள்களை, விலை பேசி விற்பதை அங்கீகரிப்பது, விழிப்புணர்வு பெற்ற சமூகத்தில் இருக்காது. மாறாக படித்தவர்களே அறியாமையில் இருக்கிறோமோ, என எண்ணத் தோன்றுகிறது..
அதுபோல் தான், 25 சத ஒதுக்கீடு பற்றியும் மேலோட்டமாக புரிந்து கொள்ளப் படுகிறது. மனிதன் தனது குடும்ப சூழலினால் மட்டும் தன்னை சமூகவயமாதலுக்கு உட்படுத்திக் கொள்வதில்லை. சுற்றுப் புறம், பள்ளி, சக மனிதர்கள், நண்பர்கள் ஆகியவர்கள் ஏற்படுத்தும் தாக்கத்தின் காரணமாகவும் ஒரு மனிதனுக்குள் சமூகவயமாதல் கட்டமைக்கப் படுகிறது. இக்கருத்தை மானுடவியல் மற்றும் சமூகவியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். மைரான் வின்னர் என்ற அமெரிக்கவைச் சார்ந்த கல்வி மற்றும் உளவியல் வல்லுனர், தனது ஆய்வுகளின் அடிப்படையில், நாம் கொண்டிருக்கும் தவறான கருத்துக்களுக்கு விளக்கம் அளிக்கிறார். அதாவது, அனைவருக்குமான கல்வி உத்திரவாதம் உள்ள சமூக அமைப்பில் தான், சுகாதாரம் குறித்து முழுமையான விழிப்புணர்வு இருக்க முடியும். அதுவும் அவர்கள் சார்ந்த பண்பாட்டு சூழலில், கல்வி திட்டங்கள் அமையும் என்றால், விரைவான புரிதலும், விழிப்புணர்வும் செழிப்பான முறையில் ஊற்றெடுக்கும், என்று கூறுகிறார். மேற்படி அறிஞர்களின் விளக்கம், நமது அரசினால் இன்னும் முழுமையாகப் பின்பற்றப் படவில்லை. ஒரு நல்ல சமூகம் உருவாக்கப் படுவதில், அனைவருக்குமான சம வாய்ப்புள்ள கல்வி என்ற முறை மூலமே இதை சாதிக்க முடியும்.
தங்களிடம் பணம் இருக்கிறது என்பதற்காக நடுத்தர மக்கள், தனியார் பள்ளிகளை நாட வேண்டியதில்லை. அரசுப் பள்ளிகள், சிறந்தமுறையில் பராமரிக்கப் பட்டாலே, அரசு பள்ளிகள் சிறந்ததாக மாறமுடியும். நமது விழிப்புணர்வு மத்திய அரசின் கொள்கைகளை கேள்விக்குள்ளாக்கும் வலிமை கொண்டதாக மாற வேண்டியுள்ளது. உதாரணத்திற்கு, மத்திய அரசு பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா ஓரளவு நல்ல பாடத்திட்டத்துடன், சிறந்த முறையில் செயல் படும் போது, நவோதயா வித்தியாலயா என்ற கூடுதல் வசதியான பள்ளிகளை, மத்திய அரசு ஏன் உருவாக்கியது. ஜவஹர் நவோதயா பள்ளிகள் ராஜீவ்காந்தி பிரதமராக இருக்கும் போதே உருவாக்கப் பட்டது. இந்தியாவில் 593 பள்ளிகள் உள்ளன. தமிழ்நாடு தவிர, மற்ற மாநிலங்கள் அனைத்திலும் இப்பள்ளிகள் இருப்பதாக இணையதள செய்தி தெரிவிக்கிறது. இங்கு பயிலும் மாணவர் ஒருவருக்கு, 15000 ரூபாய் வரையிலும் ஆண்டு ஒன்றுக்கு செலவிடப் படுகிறது. கட்டணம் என்ற பெயரில் ரூ200 ஒரு மாதத்திற்கு பெறப் படுகிறது. எல்லா விதமான வசதிகளையும் கொண்டிருக்கும் இந்த உறைவிடப் பள்ளிகளை, குறைவான எண்ணிக்கையில் நடத்திட என்ன காரணம்? மத்திய அரசு ஒரு ஆண்டுக்கு ரூ688 மட்டுமே மாணவர் ஒருவருக்கு செலவிடுகையில், ஜவஹர் நவோதயா பள்ளி மாணவருக்கு மட்டும் ரூ15000 செலவிடுவது ஏன்? ஏன் மத்திய அரசு இரண்டு விதமான பிரிவினரை அரசு செலவில் உருவாக்குகிறது. இத்தகைய கேள்விகளை கேட்கும் ஆற்றல் இன்றைக்கு நடுத்தர மக்களுக்கும், மக்கள் இயக்கங்களுக்கும் இருப்பதாக உணர முடிகிறது. எப்போது வெளிப்படும்? இது போன்ற கேள்விகள் உரிமைகளுடன் இணைந்தது.
Courtesy Dinamanai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக