சனி, 26 பிப்ரவரி, 2011

கொள்கையைத் தொலைத்த சுயவிளம்பரங்கள் F

தனி நபரின் கொண்டாட்டங்களைப் பார்த்து ஆத்திரப்படவில்லை. அதே நேரத்தில் தனிநபர்களின் கொண்டாட்டங்களில், அப்பாவி உழைப்பாளி மக்களை உள்ளடக்குகிறபோது, அமைதியாகவும் இருக்க முடியவில்லை. மகாத்மா காந்தி, அண்ணல் அம்பேத்கர் ஆகியோரின் பிறந்த தினங்களுக்கு விடுமுறை விடப்படுகிற காரணத்தால், ஓரளவு நினைக்கப்படும் சாத்தியம் இருக்கிறது. மகாகவி பாரதியார், தந்தை பெரியார், மாவீரன் பகத்சிங் போன்றவர்களுக்கு விடுமுறையும் இல்லை, "கட் அவுட்' வைத்து நினைவூட்டுவதற்குப் பணம் மற்றும் படைபலமும் இல்லை. மேற்குறிப்பிட்ட தியாகிகளுக்கு இல்லாத பணம் மற்றும் படைபலம், இன்றைய அரசியல் வாதிகளில் பலருக்கும் இருப்பதால், அவர்களின் பிறந்த தினத்தை நினைவில் வைக்க கட்டாயப்படுத்தப்படுகிறோம். சாலையைக் கடக்கும் ஒவ்வொரு, சராசரி குடிமகனும், பார்த்தே தீரவேண்டும் என்ற நோக்கத்தில், இந்த விளம்பரங்கள் வைக்கப்படுகின்றன. பிறமாநிலங்களை விட தமிழகம், இக்கொண்டாட்டத்தில் முன்னணியில் இருக்கிறது.
இது ஒரு நாள் கொண்டாட்டமாக இருந்தால், நாம் கவலை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. மாதக் கணக்கில் நடைபெறும், பிரசாரங்களாக மாறிவருவதால், பொதுமக்கள் அக்கறை கொள்ள வேண்டிய தேவை அதிகரித்து வருகிறது. சுவர் எழுத்துப் பிரசாரம் துவங்கி, தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை விளம்பரங்கள், திரும்பும் திசை எங்கும் "கட் அவுட்'கள் ஆகியவை ஒருபுறம். மற்றொரு புறம் வாரக்கணக்கில், கிரிக்கெட் அல்லது வேறு போட்டிகள், நகரமாக இருந்தால் குத்தாட்டம், கிராமமாக இருந்தால் கரகாட்டம் போன்ற உற்சாகமூட்டும் ஏற்பாடுகள். இவை போதாது என்று, தெருக்கள் தோறும் ஒலி மற்றும் ஒளி அமைப்புகளும், போதை வஸ்துகளும் ஏற்படுத்தும் தாக்கம்.
மதுரை, கடந்த சில ஆண்டுகளாக சிறப்புச் செய்தியாக மாறி வருவது கண்கூடு. 2008, ஜனவரி 30-ம் தேதி மதுரையில், விடுதலைப் போராட்ட வீரராக அடையாளம் காணப்பட்ட, வீரபாண்டிய கட்டபொம்மனின் சிலையை "கட் அவுட்'கள் கொண்டு வெளியில் தெரியாத அளவுக்கு மறைத்து விட்டனர், மதுரை மாநகரத்து உடன்பிறப்புகள். 2010, ஜூலை 15 காமராஜின் பிறந்தநாள், நகரமக்கள் தொகையை விஞ்சும் அளவுக்கு விளம்பரங்கள். ஆனால் அதில் காமராஜைத்தான் காணவில்லை. அன்று விருதுநகருக்கு வந்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் புரந்தேஸ்வரியின் புகைப்படத்துக்குக் கொடுத்த முக்கியத்துவம், காமராஜுக்குத் துளியும் தரப்படவில்லை. "எளிமையின் அடையாளமே' என்ற வாசகங்களை, இது போன்ற வாழ்த்துச் செய்திக்கான விளம்பரப் பலகைகளில் பார்க்கிறபோது, நடமாடும் நகைச்சுவைத் தொலைக்காட்சிகள் வந்து விட்டனவோ என சந்தேகம் கொள்ளாமல் இருக்க முடியாது. தங்கள் தலைவர்களாக போற்றப்பட வேண்டிய மறைந்த வீரர்கள், இருட்டடிப்புச் செய்யப்படுவதும், ஆடம்பரங்கள் தலைவிரித்து ஆடுவதும், பொது மக்களுக்கு, வேடிக்கைப் பொருளாக மாறுவதும், சமூக அக்கறையின்மையின் வெளிப்பாடு. எனவே, இது குறித்த கவலை பொதுமக்களிடம் உருவாக வேண்டியுள்ளது. சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு, உயர் நீதிமன்றம், சென்னை நகரில், குறிப்பாக விமான நிலையத்துக்கு அருகில் உள்ள விளம்பரப் பலகைகளுக்குச் சில கட்டுப்பாடுகளை விதித்தது. அதற்குக் காரணம் விமான ஓட்டிகளின் பார்வையைக் கூச்சமுறச் செய்கிற வகையில் வண்ண விளக்குகளைக் கொண்டதாக விளம்பரம் அமைந்ததாகும். அதுபோல் பொதுமக்களை, தேசத் தலைவர்களைக் களங்கப்படுத்தாமல், பொதுஇடங்களின் அமைதியைப் பாதிக்காத தனிநபர் விழாக்களாக அமைத்துக் கொள்ள உத்தரவிட வேண்டும்.
இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில், பொதுக் கூட்டங்களுக்கும், போராட்டம் நடத்தும் இடங்களுக்கும் கட்டுப்பாடுகளை விதிக்கும் அரசும், நீதித்துறையும், இது போன்ற தனி நபர்கள் செய்யும் இடையூறுகளைப் பொறுத்துக் கொள்வது ஏன் என்பது பொதுவான அரசியல் நோக்கர்களின் கேள்வி. அதுமட்டுமல்ல, தனிநபர்கள் முன்னிலைப்படுத்தப்படும் போக்கு, கொள்கையற்ற நிலையிலேயே மேலோங்குகிறது. கொள்கைக்கு இடமின்றித் தலைவரின் புகைப்படங்கள், விளம்பரங்கள் ஆக்கிரமிக்கின்றன. விமர்சனக் கண்ணோட்டம் இல்லாத, விவாதமற்ற, துதிபாடுகிற அரசியலுக்கு வழிவகுக்கும் இதன் மூலமான திசைதிருப்பல் ஏற்பாடுகள், ஜனநாயகத்தைக் கீழ்நோக்கித் தள்ளும் அபாயம் இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறது.
இத்தகைய விளம்பரப் பலகைகளை அமைப்பவர்கள், தங்கள் பெயரையும் சேர்த்துக் கொள்கிறார்கள். பல இடங்களில், பல்வேறு சமூகவிரோதச் செயல்களைச் செய்பவர்களும் இடம்பெறுவதைக் காண முடிகிறது. இத்தகைய நபர்களின் விளம்பர நோக்கம், தலைவரின் வீட்டு விழாவுக்கானதாக மட்டும் இருப்பதில்லை. கூடவே, தான் இந்தத் தலைவருக்கு வேண்டியவர் என்பதையும், காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகளுக்குச் சுட்டிக்காட்டும் உள்நோக்கம் கொண்டதாகவும் இருக்கிறது. இத்தகைய தனிநபர் கொண்டாட்டங்களில், சமூக விரோதிகளில் பலர் தங்களைக் காத்துக் கொள்கிறார்கள் என்பதைச் சம்பந்தப்பட்ட தலைவர்களும், அப்பாவிப் பொதுமக்களும் உணர வேண்டும். இதோடு வரி கட்டப்படாத கருப்புப் பணம், ஊழல் பணம் போன்றவை புழக்கத்துக்கு வருவதன் காரணமாக, மக்களுக்கான பணம் இப்படி வாரி இரைக்கப்படுவதைக் கவலையுடன் பார்க்க வேண்டியுள்ளது.
பிறந்தநாள்களை அல்லது தங்கள் வீட்டு விழாக்களை கொண்டாடக்கூடாது என அராஜகமான வாதத்தை முன்வைக்க விரும்பவில்லை. அது தனிமனித உரிமை. மூத்த அரசியல் தலைவர்களுக்கு, எதிர்க்கட்சித் தலைவரும்கூட வாழ்த்துச் சொல்லும் மாண்பு வளர வேண்டும். அது பத்திரிகைச் செய்தியாக உருப்பெற வேண்டும். அந்த அளவிலான நிகழ்வுகள் சமூகத்தைப் பண்படுத்தும். ஆனால் ஒரு நாட்டில், 20 ரூபாய் மட்டுமே செலவிடும் நிலையில் 83.4 சதவீத மக்கள் உள்ள நிலையில், அத்தகைய உழைப்பாளி மக்களை, தலைவரின் வீட்டு விசேஷத்துக்காக சுவரெழுத்து உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்துவது, மனிதகுலம் போதுமான நாகரிக வளர்ச்சியடையாத, பின்தங்கிய சமூகத்தின் பண்பாடு இல்லையா? எனவே சமூகம் தொடர்ந்து வளர்ச்சிபெற, இதுபோன்ற சின்னச்சின்ன நிகழ்வுகள் குறுக்கீடாக அமைகிறதோ என்ற ஐயப்பாட்டில் இருந்தே இந்த விவாதத்தை முன்வைக்க வேண்டியுள்ளது. மக்களை அவர்களின் உரிமை குறித்த சிந்தனைக்குத் தூண்டுவதில், தலைவர்களுக்குப் பங்கு இருக்கிறது என்கிற ஆதங்கத்தில் இருந்தே இந்த விவாதத்தைத் தூண்ட வேண்டியுள்ளது. இத்தகைய விவாதங்களில் உலக மற்றும் தமிழக முற்போக்கு இயக்கங்களுக்குப் பங்கு இருக்கிறது.
ஒரு சிலர் இதுபோன்ற கொண்டாட்டங்களின்போது, இலவசத் திருமணங்கள், அன்னதானம் ஆகிய நற்பணிகள் நடைபெறுவதைக் குறிப்பிடுகின்றனர். தமிழகத்தில், நிறையக் கொண்டாட்டங்கள அரங்கேறுவதால், இலவசங்களில் மக்கள் வாழ்ந்து விடலாம் என்று கருதினால், சுயமரியாதை இயக்கம் வளர்ந்த தமிழ்நாடு என வரலாறு கற்பிப்பதில் பொருளில்லை. மகாபாரதக் கதையில், பாண்டவர்களின் தலைவன் தருமனுக்கு ஏழு உலகத்தையும் சுற்றிக்காட்ட, கிருஷ்ணன் தன்னோடு அழைத்துக் கொண்டு சென்றாராம். ஓர் உலகத்தில், யாரும் யாருக்கும் தருமம் செய்யாத தன்மையும், மக்கள் எங்குமே கையேந்தாத நிலையும், இருப்பதையும் தர்மன் கண்டுள்ளார். இவ்வூரில், தருமம் செய்வோரே இல்லையே! இவ்வூரின் மன்னனும், தர்மகாரியங்களில் ஈடுபடவில்லையே என கிருஷ்ணனிடம், தருமன் கேட்டதாகவும், அதற்கு கிருஷ்ணன், இவ்வூரில் யாருக்கும் தர்மம் தேவைப்படாத நிலையை மன்னன் ஏற்படுத்தியுள்ளான் என்று விளக்கம் அளித்ததாகவும், பள்ளி ஆசிரியர் நீதிபோதனை வகுப்பில் குறிப்பிட்டதை, மறுவாசிப்பு செய்ய வேண்டியுள்ளது. ஆம் மக்களை யாசகராக வைத்திருப்பதை விடவும், யாசகர் இல்லாத ஆட்சியை உருவாக்குவது, சாலச் சிறந்தது. நற்பணிகள் என்பது சமூக அக்கறையை வெளிப்படுத்தும் விதத்தில், அனைவரும் இணைந்து செய்வது. நமது நாட்டில் ஒருவர் கொடுப்பதையும், மற்றொருவர் யாசகம் செய்வதையும், நற்பணி என சுருக்கிக் கொள்ளக் கூடாது.
தினமணியின் தலைப்புச் செய்தியில், ஒருமுறை கல்பாக்கத்தைச் சார்ந்த தம்பதி இடம் பிடித்தனர். தொடர்ந்து 25 ஆண்டுகளாக இலவச டியூஷன் கற்றுக் கொடுத்து வந்தனர் என்பதே செய்திக்கு அடிப்படை. அந்தச் செய்திக்கு முன் அந்தத் தம்பதிக்கு, வேறு எந்த வகையிலான விளம்பரங்களும் ஏற்பாடு செய்யப்பட்டதில்லை. அதுபோல் ஓசையின்றிப் பிறருக்கு உதவுவதே சிறந்த பண்பாடாகக் கொள்ள முடியும். ஒரு கை தருவதை இன்னொரு கை அறியக் கூடாது என்ற பழமொழி, இத்தகைய பொருளில் தான் சொல்லப் பட்டிருக்க வேண்டும்.
எனவே கொண்டாட்டங்கள், பிறந்த தினமாக இருந்தாலும், வேறு நிகழ்வுகளாக இருந்தாலும், அதைப் பொதுவெளிக்குக் கொணர்ந்து மக்கள் உணர்வுகளை, மழுங்கச் செய்வதைத் தவிர்க்க முன்வர வேண்டும். நம் தேசத்தில் விவாதிக்க நிறையக் கருத்துகளும், கொள்கைகளும் இருக்கின்றன. அவற்றைத் திசைதிருப்ப வேண்டாம் என்பதே வேண்டுகோள்.

நன்றி: தினமணி ஜனவ்ரி 3 2011

மலிவானவர்கள் தானா?

---------------------------
வயல் வெளிகள்,
ஏரிகள், குளங்கள் எங்களது.

படையெடுத்தது பன்னாட்டு நிறுவனங்கள்
திறந்த வீட்டிற்குள் புகுந்ததைப் போல்
வந்தவனின் வசதிக்காக
வளைத்தார்கள் சட்டங்களை
அதற்கு சலுகைகள் எனப் பெயரும்
சூட்டினார்கள்.

விரிந்து கிடந்த நிலப் பரப்பிற்கு
போதுமானதாக இருந்தது
கையளவுத் தொகை.

கடல்போல் காட்சியளித்த ஏரிகளில்
கட்டடங்கள் எழுந்ததால்
நிரம்பி வழிகிறது சாலைகள்.

ஊரெல்லாம் இருளில்
சிறுதொழில்களுக்கும் தடங்கல்
வந்தவனுக்கோ
தடையில்லா மின்சாரம்.

கல்விக் கடன் கேட்டவர் காத்துக் கிடக்க
வரிச்சலுகைகள் வெளிநாட்டு முதலாளிகளுக்கு.

இந்த தாரளங்களைச் சாதனைகள்
என்றார்கள் தமிழகத்து ஆட்சியாளர்கள்.

மகராஷ்ட்ராவும், குஜராத்தும்
போட்டியிட்டதால்,
வாட்(VAT) ஐயும் வெட்டிக் கொண்டதாக
பெருமையும் பேசினார்கள்.

இவ்வளவிற்குப் பின்னும்
கொசுரு கேட்ட
பன்னாட்டு நிறுவனங்களுக்கு
தாரை வார்த்தார்கள் தொழிலாளர்களை.

சட்டத்தைச் சாட்சிக்கு
அழைத்த தொழிற் சங்கங்களிடம்
பிதற்றினார் பிரதமர்
இந்தியத் தொழிலாளர் சந்தை
மலிவானது என்று.

வியாழன், 10 பிப்ரவரி, 2011

கல்வி – வேலை – தொழிலாளர் உரிமை, மனித உரிமையின் அடிப்படை உரிமை

தொழிலாளர் போராட்டம், அரசியல் மாற்றத்திற்கான போராட்டமாகவும் மாறவேண்டியிருக்கிறது. ”உலகத் தொழிலாளர்களே ஒன்று கூடுவோம்” என்று முழங்கிய காரல் மார்க்ஸ் இன்றைய முதலாளி வர்க்கத்தை உறுதியாக நின்று எதிர்ப்பதற்கான அமைப்பை உருவாக்காமல், தொழிலாளி வர்க்கதிற்கான போராட்டம் வெற்றி பெற வாய்ப்பு இல்லை, என்பதையும் குறிப்பிட்டு இருக்கிறார். இந்தியாவில் தொழிலாளர் போராட்டம் எப்போதெல்லாம் கொடும் அடக்குமுறையை எதிர் கொண்டதோ அப்போதெல்லாம், தொழிலாளர் ஆதரவு போராட்டங்களின் தேவையைக் கூடுதலாக உணர முடிகிறது. தொழிலாளர் போராட்டம் என்பது ஆளும் வர்க்கத்திற்கு எதிரான போராட்டம். ஆளும் வர்க்கத்தை எதிர்த்து ஆளப்படுகிற வர்க்கம் ஒன்றினைந்து போராடுகிற போதே வெற்றி பெற முடியும் என்ற பொருளில் தான் காரல் மார்க்ஸ் ம் மேற்கண்ட முழக்கத்தை முன்வைத்தார் என கருதுவதே சரியானது.

தமிழ்நாட்டில் ஆளப்படுகிற வர்க்கத்தை ஒருங்கினைப்பது எளிதான ஒன்றாக இல்லை. சாதி, மதம், இனம், பிராந்திய, மொழி உணர்வுகளைத் தூண்டும் சக்திகள் திட்டமிட்டு வளர்க்கப் படும் மாநிலங்களில், முன்னனியில் இருப்பதும், நீண்ட அனுபவம் கொண்டதுமாக தமிழ் நாடு இருக்கிறது. இந்த சவாலை எதிர் கொண்டு ஒருவருக்கு ஒருவர் ஆதரவு என்கிற சகோதரத்துவத்தை வெளிப்படுத்துவது எளிதான காரியம் அல்ல.

ஆளப்படுகிற வர்க்கமான, சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், மாணவர், வாலிபர் மற்றும் மாதர் என்ற பல்வேறு பிரிவினர் இருப்பதை அறிய முடியும். இவர்களுக்கு இடையிலான ஒருங்கினைப்பை வரலாற்றின் பல கட்டங்களில் சி.ஐ.டி.யு முன்னெடுத்து செயல் பட்டுள்ளது. தமிழ் நாட்டில் 1990ல், வேலையிண்மைக்கு எதிரான பிரச்சாரக்குழு பெரும் வரவேற்பைப் பெற்ற ஒன்று என்பதை மறக்க முடியாது. நான்கு முனைகளில் இருந்து பிரச்சாரம், தொடர்ந்து சென்னை கடற்கரையில் பிரமாண்ட மக்கள் திரளை உள்ளடக்கிய பொதுக் கூட்டம், ஆகியவை தொழிலாளி வர்க்க ஒற்றுமைக்கும், ஆளும் வர்க்கத்திற்கு விடுத்த எச்சரிக்கைக்குமான சிறந்த உதாரணமாகும்.

இன்று உலக அளவில் நடைபெறும் தொழிலாளர் போராட்டங்கள், புதிய அனுபவத்தை நமக்கு கற்றுக் கொடுக்கிறது. ஃப்ரான்ஸின் தலைநகர் பாரீஸில், ஓய்வு பெறும் வயதை உயர்த்தாதே, பென்சன் சட்டங்களைத் திருத்தாதே, போன்ற கோரிக்கைகளை முன்வைத்து, தொழிலாளர்களுடன் மாணவர்களும் களத்தில் இறங்கியுள்ளனர். கிரேக்கத்திலும், இதர ஐரோப்பா நாடுகளிலும், இத்தகைய ஒற்றுமையுணர்வுடன் போராட்டத்தை நடத்துவது, மிகச் சிறந்த சகோதரத்துவ உணர்வாக கருதப் பட வேண்டியுள்ளது. அதோடு இன்று பறிக்கப்படும் உரிமைகள், அடுத்த தலைமுறையை இன்னும் கூடுதலாக பாதிக்கும் என்ற விழிப்புணர்வையும் உள்ளடக்கியது, என்பதையும் கவனிக்க வேண்டும்.

ஒருபுறம் விழிப்புணர்வு மற்றொரு புறம் அரசியல் புரிதல் இருப்பது அவசியமாகிறது. கடந்த 20 ஆண்டுகளாக பின்பற்றப் பட்டு வரும் புதிய தாராளமய கொள்கைகள், முதலாளிகளுக்கான சலுகைகளை அதிகரித்து, தொழிலாளருக்கான உரிமைகளை பறிப்பது என்பது தெளிவாகியிருக்கிறது. இந்த நிலையில், ஓய்வு பெறும் வயதை உயர்த்தாதே என்ற தொழிலாளர் கோரிக்கையை, மாணவர்கள் மற்றும் வாலிபர்கள் உயர்த்திப் பிடிப்பது, எதிர்கால கொள்கையைத் தீர்மானிக்கும் அரசியலுடன் இனைந்தது. இந்த விழிப்புணர்வுடன் கூடிய ஐக்கிய உணர்வு அல்லது சகோதரத்துவ உணர்வு மழுங்கடிக்கப் பட்டால், அங்கே நாம் ஏற்கனவே கூறிய மனித அடையாளங்கள் முன்னிறுத்தப் படும், திசைதிருப்பும் அரசியலின் அபாயத்தை காணமுடியும்.

இதற்கும் ஐரோப்பிய நாடுகளின் உதாரணங்கள் பொருந்துவதாக உள்ளது. பால்கன் நாடுகள் என்று அழைக்கப் படும், யுக்கோஸ்லோவியா, செக்கோஸ்லோவியா, குரேஷியா, செர்பியா, ஸ்லோவேனியா, ஸ்லோவோக்கியா போன்ற நாடுகளில், மக்கள் இன அடிப்படையில் கூறுபோடப் பட்டு, நவீனதாரளமயத்தை உயர்த்திப் பிடிக்கும் சூழலை உருவாக்கியுள்ளதாக அறிய முடிகிறது. இன ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டத்தைக் குறைத்து மதிப்பிடுவதல்ல இக்கருத்தின் நோக்கம். இன ஒடுக்குமுறையை எதிர்த்த போராட்டத்தை, தொழிலாளி வர்க்கம் தனது சகோதரத்துவ அமைப்புகளுடன் இனைந்து நடத்த வில்லை என்றால், அது முதலாளித்துவத்திற்கு பெருமளவில் உதவி செயவதாக மாறிவிடும்.

மேற்படி அனுபவம் ஒடுக்கு முறைக்கு எதிரான ஒருங்கினைப்பை வலியுறுத்துகிறது. இந்த ஒருங்கினைபே வளர்ச்சி பெற்று ஆளப்படுகிற வர்க்கத்தின் ஒருங்கினைப்பிற்கு வழிவகுக்கும். தமிழகத்தில் நடந்த மற்றும் நடந்து வரும் போராட்டங்கள் இந்த அனுபவத்தை உள்வாங்கியும், வாங்காமலும் நடந்ததாகவே இருக்கிறது. கடந்த காலத்தில், நடைபெற்ற மாணவர் போராட்டங்கள் பல இருக்கிறது. உதாரணத்திற்கு, சென்னையில் மாணவர்களுக்கும், போக்குவரத்து தொழிலாளர்களுக்குமான மோதல் குறிப்பிடத்தக்கது. 1967-68 களில் அண்ணாத்துரை முதலமைச்சராக இருந்தார். அப்போது நடைபெற்ற மோதலில், இருபிரிவினரையும் மோதவிட்டு வேடிக்கை பார்த்தது அன்றைய அரசு. காவல் துறை கொண்டு இருவரையும் ஒடுக்க முயற்சித்தது. ஆனால் தொழிற்சங்க தலைமைப் பொறுப்பில் இருந்த வி.பி.சி. உள்ளிட்ட தலைவர்களின் முன் முயற்சியில், இரு பிரிவினரும் ஒற்றுமைப் படுத்தப் பட்டனர். அதன் பின் டி.வி.எஸ் லூகாஸ் தொழிலாளர் போராட்டத்தை ஆதரித்த மாணவர் போராட்டமும், எம்.சி. ராஜா மாணவர் விடுதி சீர்கேடுகளை எதிர்த்த மாணவர் போராட்டத்தினை ஆதரித்த தொழிலாளர் போராட்டமும் மிகச் சிறந்த உதாரணங்கள்.

இந்த இரண்டு சம்பவங்களும் குறிப்பிட்ட பிரிவினரின் பிரச்சனையைப், பொது மக்கள் வசிப்பிடத்திற்கு, அல்லது அவர்கள் மத்தியில் முன்வைக்கும் சூழல் உருவான நிலையில் அன்றைய அரசை நிர்பந்திக்கும் அரசியலாகப் பயன் பட்டது. எம்.ஜி.ஆர் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்றார். அசைக்க முடியாத சக்தி என்ற நிலையில், நடைபெற்ற ஆசிரியர் - அரசு ஊழியர் போராட்டம் 85ல் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது. 2 மாதங்களுக்கும் அதிகமாக நடை பெற்ற போராட்டம், பெறுமளவில் தொழிலாளர், மாணவர், வாலிபர் உள்ளிட்ட அமைப்புகளின் முன்முயற்சியில், பொது தளத்தில் அரசியலாக்கப் பட்ட பின்னரே வெற்றி பெற்றது. அது மட்டுமல்ல, 1986-ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அன்றைய ஆட்சியாளர்கள் தோல்வியுறவும் செய்தனர், என்பதும் கவணிக்கத்தக்கது.

1992-ல் நடைபெற்ற மருத்துவ மாணவர் போராட்டம், வேறு வகையில் அனுகப்பட வேண்டிய ஒன்று. அதாவது சென்னை போரூரில் அமைந்துள்ள ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி, தனியாரிடம் ஒப்படைக்கப் பட வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்த நேரத்தில், அரசு சட்டம் இயற்றி கைப்பற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து நடத்திய போராட்டம். சுமார் 2 மாத காலம் நடை பெற்றது. அனைத்து அரசியல் கட்சிகளையும் மறியல், சிறைநிரப்புவது உள்ளிட்ட போராட்டத்தினை நடத்த வைத்த ஒன்று. இறுதியில் மருத்துவ மாணவர்கள் அரசு மருத்துவ கல்லூரியில் படிப்பைத் தொடர ஏற்பாடானது. அதற்கே பெரும் ஒற்றுமை தேவைப் பட்டது. அதன் பிறகு 2003 ம் ஆண்டில் அன்றைய ஆட்சியாளர்கள், அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்து வெளியிட்ட உத்தரவு. அதை எதிர்த்த போராட்டங்கள், பின்னர் சி.ஐ.டி.யு நீதிமன்றத்தில் பெற்ற தடையாணை ஆகியவை சிறந்த பாடமாக விளங்குகிறது. இவை அனைத்தும் அரசியலாக்கப் பட்ட பின்னரே பாதிக்கப் பட்ட பிரிவினர் வெற்றியை நோக்கி நகர முடிந்திருக்கிறது, என்ற உண்மையை உரக்கச் சொல்லும் உதாரணங்களாகும்.

ஆனால் இன்று சூழல் மாறியிருப்பதாக கருதுகிறோம். நவீனதாராளமயமாக்கல் ஒருங்கினைந்த போராட்டங்களுக்குத் தடையாக இருப்பதாக கருதுகிறோம். இக்கருத்து மறுபரிசீலனைக்குரியது, என்பதற்கான உதாரணம் தான், சமீபத்தில் நடைபெற்ற நெய்வேலி ஒப்பந்தத் தொழிலாளர் போராட்டம். இவர்களுக்கு ஆதரவாக கடலூர் மாவட்டத்தில் கடையடைப்பு வரை அங்கிருந்த அரசியல் கட்சிகளைத் தூண்டியது. மாநில ஆளும்கட்சியின் தொழிற்சங்கம் ஒப்பந்தம் செய்து கொண்டாலும், கட்சித் தலைமை மத்திய அரசினை நிர்ப்பந்த்திக்கும் நிலை ஏற்பட்டது. இதற்கும் அடிப்படை பிரச்சனையின் மையம், சம்மந்தப்பட்ட பிரிவினரைத் தாண்டி, பொது தளத்தைச் சென்றடைந்தது ஆகும். இந்த அனுபவம் ஒருங்கினந்த போராட்டத்திற்கு, புதிய தாராளமய கொள்கைகள் தடை என்ற எண்ணத்தைத் தகர்ப்பதாக இருப்பதை உணர வேண்டும்.

கல்வி வியாபாரமாகிறது, வேலைக்கு ஆள் எடுப்பது நிறுத்தப் படுகிறது, தொழிலாளர் வேலையிண்மையைக் காரணம் காட்டி மிரட்டப் படுகிறார், கூடுதலாக வேலை வாங்கப் படுவது அல்லது குறைவான கூலிக்கு வேலை செய்ய நிர்பந்திப்பது, உரிமைகளற்ற வேலைக்குத் தள்ளப்படுவது இவை அனைத்தும் நவீன தாராளமயமாக்கல் என்ற கருவரையில் உருவானதே. இக்கருவை சிதைப்பது அல்லது அழிப்பது என்பது, மேற்படிப் பிரிவினரின் ஒருங்கினைப்பில் புதைந்திருக்கிறது என்பதாகும்.
நன்றி: சி.ஐ.டி.யு. வெண்மணி நினைவாலய சிறப்பு மலர்

வெளிச்சத்திற்கு வரும் அர்த்தங்கள்

வாழும் கலைக்கும்
துறவுக்குமான உறவு
புரியாத புதிர்தான்
இதுவரை.

சிறப்புச் சொற்பொழிவுகள்
இசை நிகழ்வுகள் மூலம்
அவிழ்க்கத் துவங்கியுள்ள புதிர்கள்

ஆளும் கட்சியுடன் போட்டியிடும்
ஃபிளக்ஸ் விளம்பரங்கள்
5000 இசைக் கலைஞர்களுடன் நாதவைபவம்
சிரீ ராம் கேட்வே நடத்துவதாக
சிரீ சிரீ ரவிசங்கரின் சிரித்த முகத்துடன்

மந்தையில் கட்டப் பட்ட மாடுகளுக்கு
இனவிருத்தியைத் தடைசெய்யும்
நிகழ்வுநினைவுக்கு வருகிறது.

துறவிற்கும் இனவிருத்திக்கும்
தொடர்பில்லைதான்
ஆனாலும் கேள்விகள்

அண்ணா பல்கலைக் கழகம்,
நெய்வேலி நிர்வாகம், திருப்பூர் முதலாளிகள்
சிரீ ராம் கேட்வே, பெங்களூர் நிர்வாகங்கள்
தியான நிகழ்ச்சிகளுக்கும் இசை நிகழ்ச்சிகளுக்கும்
அரங்கம் அமைக்க என்ன காரணம்.

கேட்டதைத் தராத முதலாளிகள்
கேட்காமலேயே இதைத் தருவதற்கு
நோக்கம் இல்லாமல் இருக்குமா?

ஐ.டி போன்ற தொழில் நுட்பம் கற்ற இளைஞர்களை
அமைதிப்படுத்த முயற்சிப்பது ஏன்?

பணி நேரமான 10 மணிநேரத்தை
12 ஆக உயர்த்தினாலும் பல் காட்டி
அடங்கிப்போக வேண்டும் என்பதற்காகவா?

இப்போது புரிகிறது
வாழும் கலைக்கான அர்த்தம்
நன்றி: தீக்கதிர்