---------------------------
வயல் வெளிகள்,
ஏரிகள், குளங்கள் எங்களது.
படையெடுத்தது பன்னாட்டு நிறுவனங்கள்
திறந்த வீட்டிற்குள் புகுந்ததைப் போல்
வந்தவனின் வசதிக்காக
வளைத்தார்கள் சட்டங்களை
அதற்கு சலுகைகள் எனப் பெயரும்
சூட்டினார்கள்.
விரிந்து கிடந்த நிலப் பரப்பிற்கு
போதுமானதாக இருந்தது
கையளவுத் தொகை.
கடல்போல் காட்சியளித்த ஏரிகளில்
கட்டடங்கள் எழுந்ததால்
நிரம்பி வழிகிறது சாலைகள்.
ஊரெல்லாம் இருளில்
சிறுதொழில்களுக்கும் தடங்கல்
வந்தவனுக்கோ
தடையில்லா மின்சாரம்.
கல்விக் கடன் கேட்டவர் காத்துக் கிடக்க
வரிச்சலுகைகள் வெளிநாட்டு முதலாளிகளுக்கு.
இந்த தாரளங்களைச் சாதனைகள்
என்றார்கள் தமிழகத்து ஆட்சியாளர்கள்.
மகராஷ்ட்ராவும், குஜராத்தும்
போட்டியிட்டதால்,
வாட்(VAT) ஐயும் வெட்டிக் கொண்டதாக
பெருமையும் பேசினார்கள்.
இவ்வளவிற்குப் பின்னும்
கொசுரு கேட்ட
பன்னாட்டு நிறுவனங்களுக்கு
தாரை வார்த்தார்கள் தொழிலாளர்களை.
சட்டத்தைச் சாட்சிக்கு
அழைத்த தொழிற் சங்கங்களிடம்
பிதற்றினார் பிரதமர்
இந்தியத் தொழிலாளர் சந்தை
மலிவானது என்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக