வியாழன், 10 பிப்ரவரி, 2011

கல்வி – வேலை – தொழிலாளர் உரிமை, மனித உரிமையின் அடிப்படை உரிமை

தொழிலாளர் போராட்டம், அரசியல் மாற்றத்திற்கான போராட்டமாகவும் மாறவேண்டியிருக்கிறது. ”உலகத் தொழிலாளர்களே ஒன்று கூடுவோம்” என்று முழங்கிய காரல் மார்க்ஸ் இன்றைய முதலாளி வர்க்கத்தை உறுதியாக நின்று எதிர்ப்பதற்கான அமைப்பை உருவாக்காமல், தொழிலாளி வர்க்கதிற்கான போராட்டம் வெற்றி பெற வாய்ப்பு இல்லை, என்பதையும் குறிப்பிட்டு இருக்கிறார். இந்தியாவில் தொழிலாளர் போராட்டம் எப்போதெல்லாம் கொடும் அடக்குமுறையை எதிர் கொண்டதோ அப்போதெல்லாம், தொழிலாளர் ஆதரவு போராட்டங்களின் தேவையைக் கூடுதலாக உணர முடிகிறது. தொழிலாளர் போராட்டம் என்பது ஆளும் வர்க்கத்திற்கு எதிரான போராட்டம். ஆளும் வர்க்கத்தை எதிர்த்து ஆளப்படுகிற வர்க்கம் ஒன்றினைந்து போராடுகிற போதே வெற்றி பெற முடியும் என்ற பொருளில் தான் காரல் மார்க்ஸ் ம் மேற்கண்ட முழக்கத்தை முன்வைத்தார் என கருதுவதே சரியானது.

தமிழ்நாட்டில் ஆளப்படுகிற வர்க்கத்தை ஒருங்கினைப்பது எளிதான ஒன்றாக இல்லை. சாதி, மதம், இனம், பிராந்திய, மொழி உணர்வுகளைத் தூண்டும் சக்திகள் திட்டமிட்டு வளர்க்கப் படும் மாநிலங்களில், முன்னனியில் இருப்பதும், நீண்ட அனுபவம் கொண்டதுமாக தமிழ் நாடு இருக்கிறது. இந்த சவாலை எதிர் கொண்டு ஒருவருக்கு ஒருவர் ஆதரவு என்கிற சகோதரத்துவத்தை வெளிப்படுத்துவது எளிதான காரியம் அல்ல.

ஆளப்படுகிற வர்க்கமான, சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், மாணவர், வாலிபர் மற்றும் மாதர் என்ற பல்வேறு பிரிவினர் இருப்பதை அறிய முடியும். இவர்களுக்கு இடையிலான ஒருங்கினைப்பை வரலாற்றின் பல கட்டங்களில் சி.ஐ.டி.யு முன்னெடுத்து செயல் பட்டுள்ளது. தமிழ் நாட்டில் 1990ல், வேலையிண்மைக்கு எதிரான பிரச்சாரக்குழு பெரும் வரவேற்பைப் பெற்ற ஒன்று என்பதை மறக்க முடியாது. நான்கு முனைகளில் இருந்து பிரச்சாரம், தொடர்ந்து சென்னை கடற்கரையில் பிரமாண்ட மக்கள் திரளை உள்ளடக்கிய பொதுக் கூட்டம், ஆகியவை தொழிலாளி வர்க்க ஒற்றுமைக்கும், ஆளும் வர்க்கத்திற்கு விடுத்த எச்சரிக்கைக்குமான சிறந்த உதாரணமாகும்.

இன்று உலக அளவில் நடைபெறும் தொழிலாளர் போராட்டங்கள், புதிய அனுபவத்தை நமக்கு கற்றுக் கொடுக்கிறது. ஃப்ரான்ஸின் தலைநகர் பாரீஸில், ஓய்வு பெறும் வயதை உயர்த்தாதே, பென்சன் சட்டங்களைத் திருத்தாதே, போன்ற கோரிக்கைகளை முன்வைத்து, தொழிலாளர்களுடன் மாணவர்களும் களத்தில் இறங்கியுள்ளனர். கிரேக்கத்திலும், இதர ஐரோப்பா நாடுகளிலும், இத்தகைய ஒற்றுமையுணர்வுடன் போராட்டத்தை நடத்துவது, மிகச் சிறந்த சகோதரத்துவ உணர்வாக கருதப் பட வேண்டியுள்ளது. அதோடு இன்று பறிக்கப்படும் உரிமைகள், அடுத்த தலைமுறையை இன்னும் கூடுதலாக பாதிக்கும் என்ற விழிப்புணர்வையும் உள்ளடக்கியது, என்பதையும் கவனிக்க வேண்டும்.

ஒருபுறம் விழிப்புணர்வு மற்றொரு புறம் அரசியல் புரிதல் இருப்பது அவசியமாகிறது. கடந்த 20 ஆண்டுகளாக பின்பற்றப் பட்டு வரும் புதிய தாராளமய கொள்கைகள், முதலாளிகளுக்கான சலுகைகளை அதிகரித்து, தொழிலாளருக்கான உரிமைகளை பறிப்பது என்பது தெளிவாகியிருக்கிறது. இந்த நிலையில், ஓய்வு பெறும் வயதை உயர்த்தாதே என்ற தொழிலாளர் கோரிக்கையை, மாணவர்கள் மற்றும் வாலிபர்கள் உயர்த்திப் பிடிப்பது, எதிர்கால கொள்கையைத் தீர்மானிக்கும் அரசியலுடன் இனைந்தது. இந்த விழிப்புணர்வுடன் கூடிய ஐக்கிய உணர்வு அல்லது சகோதரத்துவ உணர்வு மழுங்கடிக்கப் பட்டால், அங்கே நாம் ஏற்கனவே கூறிய மனித அடையாளங்கள் முன்னிறுத்தப் படும், திசைதிருப்பும் அரசியலின் அபாயத்தை காணமுடியும்.

இதற்கும் ஐரோப்பிய நாடுகளின் உதாரணங்கள் பொருந்துவதாக உள்ளது. பால்கன் நாடுகள் என்று அழைக்கப் படும், யுக்கோஸ்லோவியா, செக்கோஸ்லோவியா, குரேஷியா, செர்பியா, ஸ்லோவேனியா, ஸ்லோவோக்கியா போன்ற நாடுகளில், மக்கள் இன அடிப்படையில் கூறுபோடப் பட்டு, நவீனதாரளமயத்தை உயர்த்திப் பிடிக்கும் சூழலை உருவாக்கியுள்ளதாக அறிய முடிகிறது. இன ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டத்தைக் குறைத்து மதிப்பிடுவதல்ல இக்கருத்தின் நோக்கம். இன ஒடுக்குமுறையை எதிர்த்த போராட்டத்தை, தொழிலாளி வர்க்கம் தனது சகோதரத்துவ அமைப்புகளுடன் இனைந்து நடத்த வில்லை என்றால், அது முதலாளித்துவத்திற்கு பெருமளவில் உதவி செயவதாக மாறிவிடும்.

மேற்படி அனுபவம் ஒடுக்கு முறைக்கு எதிரான ஒருங்கினைப்பை வலியுறுத்துகிறது. இந்த ஒருங்கினைபே வளர்ச்சி பெற்று ஆளப்படுகிற வர்க்கத்தின் ஒருங்கினைப்பிற்கு வழிவகுக்கும். தமிழகத்தில் நடந்த மற்றும் நடந்து வரும் போராட்டங்கள் இந்த அனுபவத்தை உள்வாங்கியும், வாங்காமலும் நடந்ததாகவே இருக்கிறது. கடந்த காலத்தில், நடைபெற்ற மாணவர் போராட்டங்கள் பல இருக்கிறது. உதாரணத்திற்கு, சென்னையில் மாணவர்களுக்கும், போக்குவரத்து தொழிலாளர்களுக்குமான மோதல் குறிப்பிடத்தக்கது. 1967-68 களில் அண்ணாத்துரை முதலமைச்சராக இருந்தார். அப்போது நடைபெற்ற மோதலில், இருபிரிவினரையும் மோதவிட்டு வேடிக்கை பார்த்தது அன்றைய அரசு. காவல் துறை கொண்டு இருவரையும் ஒடுக்க முயற்சித்தது. ஆனால் தொழிற்சங்க தலைமைப் பொறுப்பில் இருந்த வி.பி.சி. உள்ளிட்ட தலைவர்களின் முன் முயற்சியில், இரு பிரிவினரும் ஒற்றுமைப் படுத்தப் பட்டனர். அதன் பின் டி.வி.எஸ் லூகாஸ் தொழிலாளர் போராட்டத்தை ஆதரித்த மாணவர் போராட்டமும், எம்.சி. ராஜா மாணவர் விடுதி சீர்கேடுகளை எதிர்த்த மாணவர் போராட்டத்தினை ஆதரித்த தொழிலாளர் போராட்டமும் மிகச் சிறந்த உதாரணங்கள்.

இந்த இரண்டு சம்பவங்களும் குறிப்பிட்ட பிரிவினரின் பிரச்சனையைப், பொது மக்கள் வசிப்பிடத்திற்கு, அல்லது அவர்கள் மத்தியில் முன்வைக்கும் சூழல் உருவான நிலையில் அன்றைய அரசை நிர்பந்திக்கும் அரசியலாகப் பயன் பட்டது. எம்.ஜி.ஆர் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்றார். அசைக்க முடியாத சக்தி என்ற நிலையில், நடைபெற்ற ஆசிரியர் - அரசு ஊழியர் போராட்டம் 85ல் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது. 2 மாதங்களுக்கும் அதிகமாக நடை பெற்ற போராட்டம், பெறுமளவில் தொழிலாளர், மாணவர், வாலிபர் உள்ளிட்ட அமைப்புகளின் முன்முயற்சியில், பொது தளத்தில் அரசியலாக்கப் பட்ட பின்னரே வெற்றி பெற்றது. அது மட்டுமல்ல, 1986-ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அன்றைய ஆட்சியாளர்கள் தோல்வியுறவும் செய்தனர், என்பதும் கவணிக்கத்தக்கது.

1992-ல் நடைபெற்ற மருத்துவ மாணவர் போராட்டம், வேறு வகையில் அனுகப்பட வேண்டிய ஒன்று. அதாவது சென்னை போரூரில் அமைந்துள்ள ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி, தனியாரிடம் ஒப்படைக்கப் பட வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்த நேரத்தில், அரசு சட்டம் இயற்றி கைப்பற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து நடத்திய போராட்டம். சுமார் 2 மாத காலம் நடை பெற்றது. அனைத்து அரசியல் கட்சிகளையும் மறியல், சிறைநிரப்புவது உள்ளிட்ட போராட்டத்தினை நடத்த வைத்த ஒன்று. இறுதியில் மருத்துவ மாணவர்கள் அரசு மருத்துவ கல்லூரியில் படிப்பைத் தொடர ஏற்பாடானது. அதற்கே பெரும் ஒற்றுமை தேவைப் பட்டது. அதன் பிறகு 2003 ம் ஆண்டில் அன்றைய ஆட்சியாளர்கள், அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்து வெளியிட்ட உத்தரவு. அதை எதிர்த்த போராட்டங்கள், பின்னர் சி.ஐ.டி.யு நீதிமன்றத்தில் பெற்ற தடையாணை ஆகியவை சிறந்த பாடமாக விளங்குகிறது. இவை அனைத்தும் அரசியலாக்கப் பட்ட பின்னரே பாதிக்கப் பட்ட பிரிவினர் வெற்றியை நோக்கி நகர முடிந்திருக்கிறது, என்ற உண்மையை உரக்கச் சொல்லும் உதாரணங்களாகும்.

ஆனால் இன்று சூழல் மாறியிருப்பதாக கருதுகிறோம். நவீனதாராளமயமாக்கல் ஒருங்கினைந்த போராட்டங்களுக்குத் தடையாக இருப்பதாக கருதுகிறோம். இக்கருத்து மறுபரிசீலனைக்குரியது, என்பதற்கான உதாரணம் தான், சமீபத்தில் நடைபெற்ற நெய்வேலி ஒப்பந்தத் தொழிலாளர் போராட்டம். இவர்களுக்கு ஆதரவாக கடலூர் மாவட்டத்தில் கடையடைப்பு வரை அங்கிருந்த அரசியல் கட்சிகளைத் தூண்டியது. மாநில ஆளும்கட்சியின் தொழிற்சங்கம் ஒப்பந்தம் செய்து கொண்டாலும், கட்சித் தலைமை மத்திய அரசினை நிர்ப்பந்த்திக்கும் நிலை ஏற்பட்டது. இதற்கும் அடிப்படை பிரச்சனையின் மையம், சம்மந்தப்பட்ட பிரிவினரைத் தாண்டி, பொது தளத்தைச் சென்றடைந்தது ஆகும். இந்த அனுபவம் ஒருங்கினந்த போராட்டத்திற்கு, புதிய தாராளமய கொள்கைகள் தடை என்ற எண்ணத்தைத் தகர்ப்பதாக இருப்பதை உணர வேண்டும்.

கல்வி வியாபாரமாகிறது, வேலைக்கு ஆள் எடுப்பது நிறுத்தப் படுகிறது, தொழிலாளர் வேலையிண்மையைக் காரணம் காட்டி மிரட்டப் படுகிறார், கூடுதலாக வேலை வாங்கப் படுவது அல்லது குறைவான கூலிக்கு வேலை செய்ய நிர்பந்திப்பது, உரிமைகளற்ற வேலைக்குத் தள்ளப்படுவது இவை அனைத்தும் நவீன தாராளமயமாக்கல் என்ற கருவரையில் உருவானதே. இக்கருவை சிதைப்பது அல்லது அழிப்பது என்பது, மேற்படிப் பிரிவினரின் ஒருங்கினைப்பில் புதைந்திருக்கிறது என்பதாகும்.
நன்றி: சி.ஐ.டி.யு. வெண்மணி நினைவாலய சிறப்பு மலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக