புத்தக அறிமுகம்: “காங்கிரீட் காடு” கார் தொழிற்சாலைகளின் தொழிலாளர்களுக்கு தரும் வெளிச்சம்… – எஸ். கண்ணன்
உலகில் சொர்க்கபுரியாக அமெரிக்கா சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் அதன் கட்டமைப்பு அனைத்தும், வேறு நாடுகளில் இருந்து அழைத்து வரப்பட்ட. உழைப்பாளிகளால் செய்யப்பட்டது ஆகும். இன்றும் தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்டு பல்வேறு தொழில்நுட்ப பணிகளில், அமெரிக்கா ஆதிக்கம் செலுத்த முடிகிறது என்றால் அதற்கு காரணம் உலகின் பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட, வல்லுநர்களின் செயல்பாடுகளால் ஆகும். உண்ணும் உணவில் இருந்து ஆதிக்கம் செலுத்தும் தொழில்நுட்பம் வரை அமெரிக்காவிற்கு, உலக நாடுகளின் தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். அவ்வாறு தேவையாக உள்ள தொழிலாளர்களை, நாகரீகமாக நடத்துவதோ, உரிய சமூக பாதுகாப்பு மற்றும் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுப்பதோ இல்லை. மாறாக முழுமையாக அட்டை பூச்சியை போல், உறிஞ்சி எடுக்கப்படும் அனுமதியை அமெரிக்க அரசு, தங்கள் நாட்டு முதலாளிகளுக்கு வழங்கியுள்ளது. இந்த மிகக் கொடிய சுரண்டலை அம்பலப்படுத்தும் நாவல் காங்கிரீட் காடு (The Jungle). 1900 ஆண்டுகளின் துவக்கத்தில் நிகழ்ந்த உண்மைகளை தொகுத்து, காவியமாக்கியுள்ளார்.
தமிழில், செல்வராஜ் எழுதிய, தோல், கு. சின்னப்ப பாரதி எழுதிய சுரங்கம், தொ.மு.சி எழுதிய பஞ்சும் பசியும், டேனியல் எழுதிய எரியும் பனிக்காடு ( Red Tea) உள்ளிட்ட பல்வேறு நாவல்களை வாசித்திருப்போம். அது குறிப்பிட்ட தொழிலில் நடைபெறும் சுரண்டலை அம்பலப்படுத்தி இருக்கும். துன்பங்களையும் துயரங்களையும், பட்டியலிட்டு, வாழ்க்கை போராட்டங்களுடன், சமூக போராட்டங்களையும் விளக்கும் வகையில், மேற்படி நூல்கள் அமைந்திருக்கும். உலக அளவில் புகழ் பெற்ற விக்டர் ஹுயூகோ எழுதிய ஏழைபடும்பாடு வித்தியாசமான கதைக் கரு மட்டுமல்ல. ஒருவரின் துன்பத்தை வாழ்வின் எல்லா அம்சங்களின் மூலமாக விவரிப்பது சிறப்பம்சம். அப்படித்தான், காங்கிரீட் காடு. இதை அப்டன் சிங்ளர் மிகச் சிறப்பாக எழுதியுள்ளார். இதை தமிழில் வாசிக்க ச. சுப்பாராவ் மிக சிறப்பாக மொழி பெயர்த்துள்ளார்.
இன்று நாம் ஏன் வாசிக்க வேண்டும் என்பது, முதல் பத்து பக்கங்களிலேயே, புரிந்து விடுகிறது. அமெரிக்க தொழிலாளி படும் துயரம் விவரிக்கப்பட்டு இருந்தாலும், நம் ஊரில் நாம் அனுபவிக்கும் துயரத்தின் வடிவமாகவே தோற்றமளிக்கிறது. புலம்பெயர்ந்து வாழ்தல், தான் பிறந்த ஊரில் இருந்து, ஏற்கனவே வந்து வாழ்ந்து வரும் ஒருவரை சந்திக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி துவங்கி, வாழ்க்கையை துவங்கும் ஒவ்வொரு நிகழ்வும், வலி மிகுந்த அதிர்வுகளை ஏற்படுத்துகிறது.
லித்துவேனியாவில் இருந்து இடம் பெயர்ந்த ஒரு குடும்பத்தின் கதை. அமெரிக்காவின் சிக்காகோ நகருக்கு வெளியில், டுர்ஹாம் மற்றும் பேக்கிங் டவுன் பகுதியில் வேலை தேடி, பிழைப்பை உருவாக்கிக் கொள்ள முயற்சிக்கிறது அந்த குடும்பம். ஆலை வாயில்களில் மேற்பார்வையாளர்களே தங்களுக்கான புதிய வேலை ஆள்களைத் தேடிக் கொள்கின்றனர். அப்படித்தான், கதையின் நாயகன் யூர்கிஸ் தனது வேலையை தேடிக்கொள்கிறார். ஒரு பெரிய குடும்பம் கூட்டாக தங்களுக்கு தேவையான வீடு, உணவு, தட்ப வெட்பத்திற்கு ஏற்ற அடிப்படை தேவைகள் அனைத்தையும், பட்டியலிட்டுக் கொள்வதும், அதை பெறுவதற்கு நியாயமான உழைப்பை செலுத்த முயற்சிப்பதையும், நாவல் முழுக்க உடனிருந்து அனுபவிக்க முடிகிறது.
வேலைத்தளம் கொடிதிலும் கொடிதாக இருக்கிறது. கில்லிங் பெட்டில் யூர்கிஸ் க்கு வேலை. அதாவது, மாட்டிறைச்சி தொழிற்சாலையில், தோல் உரிக்கப்பட்டு வரும் மாடுகளை வெட்டி துண்டங்களாக ஆக்குவது. மிக வலுவான உடல் அமைப்பும், சோர்வுறாமல் உழைக்கும் தன்மையும் கொண்டிருப்பதே அடிப்படை தகுதி. யூர்கிஸ் உடல் தகுதி வேலையை பெற்றுத் தருகிறது. முழு மாடாக உள்நுழைந்து, டப்பாக்களில் பதப்படுத்தப்பட்ட இறைச்சியாக வெளியேற்றுவது அந்த தொழிற்சாலையில் நடைபெறும் வேலை. அந்த டப்பாக்களுக்கு வர்ணம் பூசும் வேலையில் பெண்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். அங்கு யூர்கிஸ் குடும்பத்தின் பெண்கள் அவர் மணைவி ஓனா, உள்பட வேலை செய்கின்றனர்.
அந்த தொழிற்சாலையில், மாட்டினுடைய எந்த ஒரு பாகமும் வீணாக்கப்படுவதில்லை. மாட்டின் கொம்பில் இருந்து சீப்பு, பட்டன், போலி தந்தம், பெரிய எலும்புகளில் இருந்து, பல்துலக்கும் பிரஷ் கைப்பிடி, எலும்பு எண்ணெய், பசை,தசை நார்களில் இருந்து, ஜெலட்டின், ஷூ பாலிஷ், உள்ளிட்டவை தயாரிக்கும் ஏற்பாடுகளும் இருந்தது. மாடு மட்டுமல்ல பன்றி கறியும் அந்த தொழிற்சாலைகளில் இருந்து டப்பாக்களில் அனுப்பட்டது. அதன் உதிரி பொருள்களும் வீணாவதில்லை. அனைத்தும் டாலர்களாக்கப்படுவதற்கு தொழிலாளர்களே பங்களிப்பு செய்தனர். சவுரி முடி, அல்புமின், வயலின் தந்திகள் ரோமத்திலிருந்து கதகதப்பு தரும் துணிகள், என எல்லாவற்றையும் தயாரித்து, கஜானா நிரப்பப் பட்டு வருகிறது.
தங்கள் குடும்பம் ஊரிலிருந்து எடுத்து வந்த பணத்தை பயன்படுத்தியும், கடன் மூலம் மாத தவணை செலுத்தி வீடு ஒன்றை சொந்தமாக்கிக் கொள்ளும் அற்ப ஆசையுடன் தேடி கண்டறிகின்றனர். போலிஷ், லித்துவேனியன், ஜெர்மன் ஆகிய மொழிகளில், ஏன் வாடகை வீடு, சொந்த வீடு வாங்கலாமே, ஏன் உங்களுக்கு சொந்த வீடு இருக்கக் கூடாது போன்ற கேள்விகளுடனான, துண்டு பிரசுரத்தை படித்து, உற்சாகம் பொங்க ஏஜெண்ட் ஒருவரை சந்திக்கின்றனர். அவர் இந்த வீடு தான் கடைசி, எல்லாம் விற்றுத் தீர்ந்து விட்டது. எல்லா வசதியும் இருக்கிறது. படம் அதன் விளக்கம் எல்லாம், பெரும் உற்சாகம் தர, ஒரு ஞாயிற்று கிழமை வீட்டை பார்க்க செல்கின்றனர். அந்த வீடு படத்தில் பார்த்தது போல் இல்லை என்றவுடன் ஏமாற்றம். இருந்தாலும், ஏஜெண்டின் வார்த்தைகளில் அவ்வளவு தேன் கலந்த இனிமை இருந்தது. சிக்காகோவிற்கு ஏற்கனவே வந்து விட்ட ஜெட்விலாஸ் இதன் மோசடி வித்தைகள் குறித்து சொன்ன போதும், ஏஜெண்டு வார்த்தைகளே இனித்தன. எனவே வீடும் வாங்கி, வாரம் 12 டாலர் தவணை, என மொத்தமாக கையில் இருந்த 300 டாலர் கொடுத்து பத்திரம் பதிவாகிறது. பத்திரத்தில் இருக்கும் சூட்சும வார்த்தைகள் தவணை கட்ட தவறினால், வீடு மீண்டும் நிறுவனம் எழுத்துக் கொள்ளும், பணம் எதுவும் திரும்ப தரப்படாது, என்பனவற்றை பின்னர் தெரிந்து, எதுவும் செய்ய முடியாமல் கையை பிசைவது, நம் ஊரின் இன்றைய நடைமுறையைப் போல் இருக்கிறது. வீட்டு தவணைக்காக ஓய்வில்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றனர், தொழிலாளர்கள்.
தங்கள் சொந்த நாட்டிலேயே காதல் வயப்பட்டு, யூர்கிஸ் மற்றும் ஓனா சிக்காகோவிற்கு வருகின்றனர். இரண்டு குடும்பமும் இதை ஒத்துக் கொண்டு, வந்த சில மாதங்களில் திருமணமும் செய்து வைக்கின்றனர். திருமணம், விருந்து, இசைக் கச்சேரி, இவைகளுக்கான செலவு, மொய் எதுவும் தேறாத நிலையில், அதை ஒட்டி ஒரு கடன் என நம் வீட்டுக் கல்யாணக் கதை போல் விரிந்து செல்கிறது, நாவலின் கதை. ஞாயிற்று கிழமை இரவு கல்யாணம், திங்கள் அதாவது மறுநாள் காலை, மணமகளும், மணமகனும் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற நிலை, இல்லையென்றால், வேலை போய்விடும். இல்லாது போகும் வேலையை ஆக்கிரமிக்க, கடும்போட்டி. எனவே அதிகாலையில் மணமகள் வேலைக்கு செல்ல வேண்டிய நிலை. இளம் வயது பெண்கள் திருமணம் செய்வது, வேலைவாங்கும் ஃபேர்லேடி, என்ற கண்காணிப்பாளருக்கு பிடிக்கவில்லை.
நமது ஊரில், திருமணம் செய்து கொண்டால், விடுப்பு, பிரசவ விடுப்பு போன்றவை பிரச்சனை எனவே திருமணம் கூடாது, என பெண் ஊழியர்களை எச்சரிக்கும் அதிகாரிகள் உண்டு. ஆனால் அமெரிக்காவில், அது வேறு ஒரு பொருளில் பிரதிபலிக்கிறது. ஆண்மேற்பார்வையாளர் ஆசைப் பட்டால் அனுப்ப இயலாதே, என்பது தான் அது. ஓனா இவை அனைத்திற்கும் மசிந்து கொடுக்காமல் பணியாற்றிய போது, கடும் துன்பத்தை சந்திக்கிறாள். அதை விடக் கொடுமை, ஓனா திருமணத்திற்கு பின் குழந்தை பெற்றுக் கொண்ட நிலையிலும், ஓரிரு நாள்களில் வேலைக்கு போக வேண்டிய நிலை. இல்லையென்றால் வேலை பறி போகும். சம்பளமில்லா விடுப்பிற்கும் வழியில்லை. இது நாவல் என்ற போதும், அமெரிக்க மக்களின் துயரத்தின் உண்மையை வெளிப்படுத்துவதாகவே இருந்தது.
கில்லிங் பெட்டில் மாடுகள் மயக்கமடைவதற்கு முன்பே தள்ளிவிடுவார்கள், அது எழுந்து ஓடும். அன்று உறை பனிக்காலம், மிகக் கொடிய நிலை. நீராவி ஒருபுறம் பனி சூழல் ஒரு புறம் இரண்டுக்கும் இடையில் வெளிச்ச போதாமையில், மாடு நடத்திய உயிர் பிழைக்கும் போராட்டத்தில், யூர்கிஸ் குழியில் விழுந்து காலை உடைத்துக் கொள்கிறான். மருத்துவம், சிகிச்சை, விடுப்பு எதுவும் நினைத்துப்பார்க்க முடியாத கொடுமை. மாதக்கணக்கில் படுக்கை என்றான நிலையில், வீடு கொடிய வறுமைக்கு தள்ளப்பட்டது. ஓனாவை துரத்திய மேற்பார்வையாளர், கோனரின் காமவெறிக்கு ஆளாவதும், அதுவே அவ்வப்போது கூடுதல் வருமானத்திற்காக மாறுவதும், வாழ்விற்கும் மரணத்திற்குமான போராட்டமாக, வேலைக்கு செல்லும் ஒவ்வொரு பெண்ணும் அனுபவிக்கிறாள். அண்மையில் புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த வாழ்க்கையை படிக்கிறபோது, ராய்க்காட் நகரில் கட்டுமான வேலை செய்யும் பெண்களில் ஒருபகுதியினர், வாழ்க்கைப் போராட்டத்தில், பாலியல் தொழிலுக்கு தள்ளப்படும் கொடுமையை பார்க்க முடிந்தது. நிலப்பிரபுத்துவ சிந்தனை, இந்த பிழைப்பிற்கு தூக்கில் தொங்கலாம் என்கிறது. ஆனால் நிலப்பிரபுவும், அவர் அடிவருடிகளும் தொங்குவதில்லை. முதலாளித்துவம், எல்லோரும் தவறிழைக்கிறார்கள், எனவே ஜீவ மரணப் போராட்டம் நடத்தும் ஒவ்வொருவரும், சமூகம் நிர்பந்திக்கும் கொடுமைக்கு ஆளாக கட்டாயப்படுத்துகிறது, என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
மூன்று மாத சிகிச்சைக்கு பின் வேலையின்றி தவிக்கும் யூர்கிஸ் நியாயமான பிழைப்பிற்காக, உரத்தொழிற்சாலையில் பணிபுரிகிறான். மாட்டு எழும்ப்புகளில் எலும்புகளில் இருந்து உரம் தயாரிக்கும் தொழிற்சாலை. டிராம்களில் இவன் வரும் போது எழும் துர்நாற்றம், பிறரை இருக்கைகளில் இருந்து விரட்டி விடும். எவ்வளவு சலவை செய்தாலும், குறையாத துர்நாற்றம், மற்றொரு புறம் வீட்டின் வறுமை, ஓனாவை கோனர் மற்றும் ஃபேர்லேடி படுத்தும்பாடு, காரணமாக, கோனரை அடித்து கொல்ல முயற்சிக்கிறான். இதனால் சிறை, காவல்துறை, நீதிமன்றம் அப்படியே இன்று நாம் சந்திப்பது போல் உள்ளது. முதலாளித்துவ வளர்ச்சியில் இந்த நிறுவனங்கள் அப்பட்டமாக, அநீதிக்கு ஆதரவாகி அவிழ்ந்து அம்மணமாவதை படம் பிடித்துள்ளார் ஆசிரியர்.
தந்தை அண்டனாஸ் மரணம், எலிசபெத்தின் நோயுற்ற குழந்தை மரணம், இரண்டாவது பிரசவத்தின் போது ஓனாவின் மரணம், முதல் குழந்தை அண்டனாஸின் மரணம், அனைத்தும் யூர்கிஸ் மற்றும் அவன் குடும்பத்தினரை தலைவிதி என கருதி கொண்டு, நியாயமான வேலைகளின் மூலமே வருவாய் தேட முற்படுகின்றனர். அதுவே உலகம் முழுவதும் தொழிலாளி வர்க்கத்தின் குணமாக உள்ளது. ஆனால் முதலாளித்துவ சமூகம், வாழ்க்கை போராட்டத்தில் தத்தளிக்கும் தொழிலாளர்களை, கருங்காலிகளாக, வேலை நிறுத்தத்திற்கு எதிரானவர்களாக, தேர்தலில் அடியாள்களாக, சில நேரங்களில் திருடர்களாக மாற்றுவதை, பெண்கள் பாலியல் தொழிலாளர்களாக மாற்றப்படுவதை அரசு நிறுவனங்களை விளக்குகிறபோது, மிக அருமையாக பதிவு செய்துள்ளார்.
தொழிலாளர் குடும்பத்தில் எத்தனை பேர் வேலை செய்தாலும் போதாத நிலை எப்படி உருவாக்கப்படுகிறது. குழந்தைகளும் வேலைக்கு அனுப்பபடும் அவலம் ஏன் உருவாகிறது. குழந்தைகள் நகர வளர்ச்சியில் கற்றுக் கொள்ளும் கெட்ட விஷயங்கள், குடும்பத்திற்காக பாலியல் தொழிலுக்கு தள்ளப்படும் இளம் பெண் யூர்கிஸ் உடன் நடத்தும் வாதம், குடும்பத்திற்குள் எழுப்பும் விவாதங்கள், எழுதப்பட்ட காலம் நூறாண்டுகளுக்கு முன் என்பதை நம்பமுடியவில்லை. இந்த கொடுமைக்கு, லித்துவேனியர்கள், ஸ்லோவியர்கள், ஐரிஷ்காரர்கள், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மன், ஆப்பிரிக்கர்கள் என எல்லா நாட்டு அமெரிக்க தொழிலாளர்களும் இரையாகின்றனர். அது தான் அமெரிக்கா.
பல அரசியல் கூட்டங்களை பார்த்தாலும், உறைபனி இரவில் தூங்க இடமற்ற நிலையில், ஒரு அரங்கத்திற்குள் ஒதுங்கிய போது தான் யூர்கிஸ் தனது அடிப்படை அறிவை பெறும் வாய்ப்பு பெறுகிறான். தொழிலாளர் ஒற்றுமை, சுரண்டலுக்கு எதிரான போராட்டம், சோசலிசம் போன்ற வார்த்தைகள், தேர்தலில் போட்டித்யிட்டு தோற்றாலும் பெற்ற வாக்குகள் தரும் நம்பிக்கை, மேலும் போராட்டம் என நீடிக்கிறது. காங்கிரீட் காடு.
சென்னையும் அதன் புறநகர் பகுதிகளும் இன்று காங்கீரீட் காடாகவே காட்சியளிக்கிறது.
நூல்: The Jungle (கான்கிரீட் காடு)
ஆசிரியர்: அப்டன் சிங்க்ளர் (தமிழில் ச.சுப்பாராவ்)
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: ரூ.280