புலம் பெயர் தொழிலாளர்கள் சமூகத்தின் உருவாக்கம்...
ஆளுகிற வர்க்கம், ஆளப்படும் வர்க்கத்திற்கு, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், பாடம் கற்று தருகிறது. அழைத்து வந்தவர்கள் எட்டிப் பார்க்கவில்லை, என்ற நிலையில் விட்டு சென்ற இடத்தில் ஆள்களை காணவில்லை, என்று புலம்பும் சிறு, குறு உற்பத்தியாளர்களைப் பார்க்க முடிகிறது. ஆம் கொரானா வந்தாலும், அங்கேயே உட்கார்ந்திருக்க புலம் பெயர் தொழிலாளர்கள் என்ன சிலையா? அவர்களின் உணர்வு வேலைதளத்தில், ஒரு வேளை மரத்துப் போயிருக்கலாம், பசியும், அச்சமும் மரத்துப் போகும் மருந்தை, இந்த சமூகம் தரவில்லையே. புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கட்டமைத்த சாலை, அவர்களின் பூர்வீக கிராமங்களுக்கு, நடந்து செல்லும் பாதை காட்டும் கொடுமையாக அரங்கேறியிருக்கிறது.
தன்னார்வலர்களும் மனிதாபிமானிகளும் ஐயோ நடந்தே செல்கின்றனரே, என இரக்கம் கொள்கின்றனர். வழியில் சோறு கொடுத்து ஆறுதல் தருகின்றனர். ஆனால் நடப்பவர்களுக்கு தனது கிராமத்திற்கு செல்லும் ஈர்ப்பு விசை குறையவில்லை. குறைந்தது 1000 கி.மீ நடந்து செல்லும் குடும்பத்தினர், ஆட்சியாளர்கள் அல்லது பாஜக வினரைத் தவிர்த்து மற்ற அனைவரின் மனசாட்சியையும் உலுக்கி உள்ளனர். குழந்தைகளும், பெண்களும், வயோதிகர்களும் தங்கள் கால்களில் வெறுப்பை உரமேற்றி கொண்டு இருப்பதாகத் தெரிகிறது. அது தங்களை சுரண்டியவர்களுக்கு அல்லது கண்டு கொள்ளாத ஆட்சியாளர்களுக்கு எதிராக மட்டுமே பிரதிபலிக்க வேண்டும். அதை சமூக இயக்கங்கள் கற்று தரும் பொறுப்பு கொண்டிருக்கின்றன.
எங்கிருந்து வந்தார்கள்?
வந்தவர்கள் குறித்த விவரங்களை பல ஆய்வாளர்கள் வெளியிட்டு வருகின்றனர். விவசாயம் பலன் தரவில்லை. கூலி அடிமைகளாக நிலத்தில் உழைப்பதை விட, தொலை தூரத்தில், தன்மானத்தை தொலைத்து வாழ்வது மரியாதை என உணர்கின்றனர். சாதி ஒடுக்குமுறையும், நிலமற்ற அவமானமும், கங்கை, பிரம்மபுத்ரா, யமுனை, மகாநதி, ஹூப்ளி காவிரி, தாமிரபரணி, தென்பெண்ணை என எந்த ஆறு பாய்ந்து வளம் கொழித்தாலும், எங்களுக்கு இடமளிக்கவில்லை. இந்த பிழைப்பு எனது பெற்றோர்களுடன் போகட்டும், என புறப்பட்டவர்கள் என்கிறது சில ஆய்வு. வனம் எங்களது. இப்போது அதுவும் கார்ப்பரேட் வசம், கணிமங்களுக்காக, உயர்ந்த நீர்தேக்கங்களுக்காக, பல பத்தாண்டுகளாக விரட்டப்பட்ட பழங்குடிகள் மொழி தெரியாமல், ஆலைகளுக்கு ஆள் பிடிப்போருடன் சேர்ந்து ரயில் ஏறி வருகின்றனர். மற்றொரு பகுதியினராக சிறுபான்மை இஸ்லாம் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சார்ந்த நிலமற்றவர்கள். இவர்களின் வயது 15 முதல் 30 என்பது பெரும்பான்மை.
பீகார், உ.பி, ம.பி, பஞ்சாப் மாநிலங்களில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள், டில்லி, மும்பை காஜியாபாத், குர்காவ்ன், அகமதாபாத், சூரத் ஆகிய பகுதிகளுக்கு செல்கின்றனர். வடகிழக்கு மாநிலங்கள், அஸ்ஸாம், மே. வங்கம், ஒடிசா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள் தமிழகம், கர்நாடகம், கேரளா ஆகிய மாநிலங்களில் தஞ்சம் புகும் நிலை உள்ளது. சுமார் 30 சதம் மக்கள் இவ்வாறு இடம்பெயர்ந்து வாழ்க்கை நடத்துவதாக கூறப்படுகிறது. சூரத் இந்தியாவிலேயே அதிக அளவு, 59 சதம் புலம்பெயர் தொழிலாளர்களை கொண்ட நகரம், என்கின்றனர். தமிழகத்தில் இருந்து, கர்நாடகம், கேரளா, மகராஷ்டரா, டில்லி ஆகிய பகுதிகளுக்கு புலம் பெயர்ந்துள்ளனர். நேபாளிகளும் இந்த புலம்பெயர் வாழ்க்கைக்கு மிக அதிக பங்களிப்பு செய்கின்றனர். இது தவிர மேற்குறிப்பிட்ட மாநிலங்களில் இருந்தும், ஹரியானா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்தும் அதிகமாகவும் பிறநாடுகளுக்கு தொழில்நுட்ப அறிவுடன் புலம்பெயர்ந்துள்ளனர். இவர்களுக்கு மிகப்பெரிய வாழ்க்கை நெருக்கடி இருப்பதில்லை.
இவையன்றி ஒரு மாநிலத்திற்குள்ளேயே இடம்பெயர்ந்து வேலை தேடும் நிலை, குறிப்பிட்ட பணிக்காக மட்டும் இடம்பெயர்ந்து அந்த சீசன் வேலைகளை முடித்து திரும்புதல் உள்ளது. இவர்கள் இந்த கொரானா முடக்க காலத்தில் பெரும் பாதிப்பிற்கு ஆளாகவில்லை என்றாலும், விவாதிக்கப்பட வேண்டியவர்களே.
என்ன வேலை செய்கின்றனர்?
கல்விக் தகுதி அடிப்படையில், நல்ல வருவாயுடன் வேலையில் உள்ளோர் பிரச்சனைக்குரியவர்களோ அல்லது இந்த விவாதத்தில் இடம்பெற வேண்டியவர்களோ அல்ல. ஆனால் வெளிநாடுகளில் இருந்தாலும், இந்தியாவில் மாநிலம் விட்டு மாநிலம், மாவட்டம் விட்டு மாவட்டம் என புலம் பெயர்ந்திருந்து, இந்த கொரானா காலத்தில் துன்பங்களை அனுபவித்தவர்களே, முக்கியமாக விவாதிக்கப்பட வேண்டியவர்கள். தங்கள் ஊரில் செய்ய தயங்கிய வேலை, புலம்பெயர்ந்த இடங்களில் தயக்கம் இன்றி செய்யப்படுகிறது. ஆட்டோ ஓட்டுநர், ரிக்ஷா ஓட்டுநர், சுமை தூக்குவோர், உணவகங்களில் பரிமாறுதல், சுத்தம் செய்தல், அழகு நிலையங்களில் ஆண், பெண் இருபாலரும் பணி புரிகின்றனர் ( சாதி ரீதியான இந்த தொழில் இப்போது அனைவராலும் செய்யப்படுகிறது), கட்டுமான பணி, செங்கல் சூளைகளில், வீட்டு வேலை செய்வதில் அதிகமான பெண்கள், சாலை கட்டுமானம், கிணறு வெட்டுதல், தூய்மை பணி போன்றவை, அண்மைக்காலங்களில் பொறியியல், உற்பத்தி, பஞ்சாலை, கார்மெண்ட் ஆகியவற்றில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
முதலாளித்துவ வளர்ச்சியில் தொழில்நுட்பம் வளர்கிறபோது, சமூகம் தரம் குறைந்ததாக மேற்குறிப்பிட்ட வேலைகளை கருத்தாக்கம் செய்துள்ளது. இரண்டு குறிப்பிட்ட வேலையை, நேரம் பார்க்காமல், சந்தைக்கு அனுப்ப, இத்தகைய தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். ஓய்வின்றி, கேள்வியற்று உழைக்கும் மனிதர்களாக இவர்களை தயார் செய்கிறது. எனவே தான் நிலப்பிரபுத்துவம் வெளியில் தள்ளிய, தொழிலாளர்களை, முதலாளித்துவத்தால் ஈர்க்க முடிகிறது. இதன் காரணமாக மிகப் பெரிய உழைப்பு சுரண்டலும், மூலதனக் குவிப்பும் ஒருசேர அரங்கேறுகிறது. இன்றைக்கு இடதுசாரிகள் குற்றம் சுமத்துகிற செல்வக்குவிப்பு ஒருபுறமும், வறுமை அதிகரிப்பு மறுபுறமும் இந்த பின்னணியில் தான் நிகழ்கிறது.
என்ன செய்வது?
முதலில் தரம் குறைவான வேலை என்ற கருத்தாக்கம், முதலாளித்துவ சமூகத்தில் நீண்ட நாள் நீடிக்காது. நல்ல ஊதியம் கிடைக்கும் என்றால், சமூக பாதுகாப்புடன் அந்த வேலை இருக்கும் என்றால், அவரவர் ஊரிலேயே வேலை வாய்ப்பை உருவாக்க முடியும். கண்ணியமான வேலை என்ற முழக்கம் இந்த பின்னணியில் முக்கியத்துவம் பெறுகிறது. இரண்டாவது நிலக்குவியலும், வனமும் தனியார் வசம் அதிகரித்து வருவதை, தடுக்கும் வலுவான போராட்டம். புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சோறு தந்த மக்கள் உள்ளிட்டு, இந்த பணியில் ஈடுபடுப்பட திட்டமிட்டு செயலாற்றுவது. நிலக்குவியல் தகர்க்கப்பட்டு, ஆறுகளின் நீர்பாசன வசதியை மேம்படுத்தினால், விவசாயம் பெருகும். மூன்றாவது விவசாய பகுதிகளில் தொழில் வளர்ச்சிக்கான கோரிக்கைகளை முன்னெடுப்பது. உதாரணத்திற்கு கோவை, திருச்சி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஒரு பகுதி விவசாயமும், மற்றொரு பகுதி தொழில் வளமும் கொண்டதாக உள்ளதை ஆய்வு செய்து மாற்று அணுகுமுறையை முன் வைப்பது.
இரக்கமும், பரிவுணர்ச்சியும் கடந்த மாற்று திட்டங்களுடன் கூடிய செயல் திட்டமும், செயலாக்கமும் நிச்சயம் பயன்படும். இந்திய ஜனநாயகத்தில் முக்கிய இடம் பெற்றுள்ள உள்ளாட்சி அமைப்புகள் இயற்கை வளத்தை, நீர் ஆதாரத்தை, தனியாரிடம் அளித்து, சொத்து குவிப்பு செய்வதை தடுக்கவும், உண்மையான வளர்ச்சிக்கு வழி செய்யவும், முன்வைக்கப் படும் மாற்றுத்திட்டம் பலன் அளிக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக